Print Page Options Listen to Reading
Previous Prev Day Next DayNext

The Daily Audio Bible

This reading plan is provided by Brian Hardin from Daily Audio Bible.
Duration: 731 days

Today's audio is from the CSB. Switch to the CSB to read along with the audio.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
1 இராஜாக்கள் 5-6

சாலொமோன் ஆலயத்தைக் கட்டுகிறான்

ஈராம் தீரு நாட்டு அரசன். அவன் எப்போதும் தாவீதின் நண்பனாக இருந்தான். தாவீதிற்குப் பிறகு அவனது மகன் சாலொமோன் புதிய அரசனானதை அறிந்து தனது வேலைக்காரர்களை அனுப்பி வைத்தான். சாலொமோன் ஈராம் அரசனுக்கு,

“என் தந்தை தாவீது எப்போதும் தன்னைச் சுற்றி உள்ளவர்களோடு போரிட்டுக் கொண்டிருந்தார். அதனால் தன் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தைக் கட்ட நேரம் இல்லாமல் இருந்தது. கர்த்தர் தனது பகைவர்களை எல்லாம் வெல்லும்வரை தாவீது காத்திருந்தார். ஆனால் தேவனாகிய கர்த்தர் எனது நாட்டின் அனைத்து பக்கங்களிலும் அமைதியையும் சமாதானத்தையும் தந்திருக்கிறார். இப்போது எனக்குப் பகைவர்கள் யாரும் இல்லை. என் ஜனங்களுக்கும் ஆபத்தில்லை.

“என் தந்தையான தாவீதிற்கு கர்த்தர் ஒரு வாக்குறுதியை அளித்திருக்கிறார். கர்த்தர், ‘உனக்குப் பிறகு உன் மகனை அரசனாக்குவேன். அவன் எனக்குப் பெருமை தரும்படி ஒரு ஆலயத்தைக் கட்டுவான்’ என்றார். இப்போது நான் என் தேவனாகிய கர்த்தரைப் பெருமைப்படுத்த ஆலயம் கட்ட திட்டமிடுகிறேன். எனவே எனக்கு உதவும்படி உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். லீபனோனுக்கு உங்கள் ஆட்களை அனுப்புங்கள். அவர்கள் அங்கே எனக்காக கேதுரு மரங்களை வெட்டவேண்டும். எனது வேலையாட்களும் அவர்களோடு வேலை செய்வார்கள். உங்கள் ஆட்களுக்கு எவ்வளவு கூலிக் கொடுக்க வேண்டுமோ அவ்வளவு கூலியை நான் கொடுப்பேன். ஆனால் உங்கள் உதவி எனக்குத் தேவைப்படுகிறது. சீதோனில் உள்ள தச்சர்களைப்போன்று அவ்வளவு சிறந்தவர்களாக இங்குள்ள தச்சர்கள் இல்லை” என்ற செய்தியைச் சொல்லி அனுப்பினான்.

சாலொமோனின் வேண்டுகோளை அறிந்து ஈராம் மிகவும் மகிழ்ந்தான். அவனும், “இப்படி ஒரு அறிவு மிக்க மகனை தாவீதிற்குத் தந்து இவ்வளவு அதிகமான ஜனங்களை ஆளவிட்டதற்குக் கர்த்தர் ஸ்தோத்தரிக்கப்படட்டும்!” என்றான். பிறகு ஈராம் சாலொமோனுக்கும் செய்தி அனுப்பினான்.

அதில், “நீங்கள் கேட்டிருந்தவற்றை அறிந்தேன். நான் இங்குள்ள அனைத்து கேதுரு மரங்களையும், தேவதாரு மரங்களையும் வெட்டி உங்களுக்குத் தருவேன். எனது ஆட்கள் அவற்றை லீபனோனில் இருந்து கடலுக்குக் கொண்டுவருவார்கள். பிறகு அவற்றைக் கட்டி நீங்கள் விரும்புகின்ற இடத்துக்கு மிதந்து வரும்படி செய்வேன். அங்கே அவற்றைப் பிரித்துத் தருவேன். நீங்கள் எடுத்துச்செல்லலாம்” என்று குறிப்பிட்டிருந்தான்.

10-11 சாலொமோன் ஈராமின் குடும்பத்திற்காக 20,000 கலம் கோதுமையையும் 20 கலம் ஒலிவ மர எண்ணெயையும் கொடுத்தான். இதுவே சாலொமோன் ஈராமிற்கு ஆண்டுதோறும் கொடுப்பது.

12 கர்த்தர் வாக்குறுதி அளித்தபடி சாலொமோனுக்கு ஞானத்தைக் கொடுத்தார். ஈராமும் சாலொமோனும் சமாதானமாக இருந்தனர். இருவரும் தங்களுக்குள் ஒப்பந்தம் செய்துக்கொண்டனர்.

13 சாலொமோன் அரசன் கோவில் வேலைக்காக 30,000 இஸ்ரவேல் ஆண்களைப் பயன்படுத்தினான். 14 சாலொமோன், இவர்களுக்கு மேற்பார்வையாளராக அதோனிராமை நியமித்தான். அரசன் தம் ஆட்களை மூன்று பிரிவாக்கி ஒவ்வொன்றிலும் 10,000 பேரை வகுத்தான். ஒவ்வொரு குழுவும் ஒரு மாதம் லீபனோனிலும், இரு மாதம் தம் வீட்டிலும் இருந்தனர். 15 சாலொமோன் மலைநாட்டில் வேலை செய்ய 80,000 ஆட்களை அனுப்பினான். இவர்கள் கற்பாறைகளை உடைத்தனர். 70,000 ஆட்கள் அவற்றைச் சுமந்து வந்தனர். 16 3,300 பேர் இந்த வேலையை மேற்பார்வை செய்துவந்தனர். 17 ஆலயத்திற்கு அடித்தளக் கல்லாக பெரிய கல்லை வெட்டும்படி ஆணையிட்டான். கற்கள் கவனமாக வெட்டப்பட்டன. 18 சாலொமோன் மற்றும் ஈராமின் கல்தச்சர்கள் கல்லைச் செதுக்கினார்கள். ஆலயத்தைக் கட்டுவதற்குரிய கற்களையும் மரத்தடிகளையும் தயார் செய்துமுடித்தனர்.

சாலொமோன் ஆலயத்தைக் கட்டுதல்

சாலொமோன் அவ்வாறே ஆலயத்தைக் கட்ட ஆரம்பித்தான். இஸ்ரவேலர்கள் எகிப்தை விட்டு வெளியே வந்து 480 ஆண்டுகள் ஆகியிருந்தன. இப்போது சாலொமோன் அரசனாகி நான்கு ஆண்டுகள் ஆகியிருந்தன. இது ஆண்டின் இரண்டாவது மாதமாகவும் இருந்தது. ஆலயம் 90 அடி நீளமும், 30 அடி அகலமும், 45 அடி உயரமுமாய் இருந்தது. ஆலயத்தின் முகப்பானது 30 அடி அகலமும், 15 அடி நீளமும் கொண்டது. இது ஆலயத்தின் முக்கிய பகுதியோடு இணைந்திருந்தது. இதன் நீளமானது ஆலயத்தின் அகலத்திற்கு சமமாக இருந்தது. ஆலயத்தில் குறுகிய ஜன்னல்களும் இருந்தன. இவை வெளியே குறுகலாகவும் உட்பகுதியில் பெரிதாகவும் தோற்றமளித்தன. ஆலயத்தின் முக்கியமான பகுதியைச் சுற்றி சாலொமோன் வரிசையாக பல அறைகளைக் கட்டினான். இந்த அறைகள் ஒன்றின் மேல் ஒன்றாக இருந்தன. இவ்வரிசை அறைகளின் உயரமானது மூன்று அடுக்குகளையுடையதாக இருந்தன. இவ்வறைகள் ஆலயத்தின் சுவரைத் தொட்டுக் கொண்டிருந்தன. ஆனால் அந்தச் சுவர்களுக்குள் உத்திரங்கள் கட்டப்படவில்லை. ஆலயச் சுவரானது உச்சியில் மெல்லியதாக இருந்தது. எனவே அறைகளின் ஒரு பக்க சுவர் மற்ற பக்கங்களைவிட மெல்லியதாக இருந்தது. அறைகளின் அடித்தளமானது 7 1/2 அடி அகலமும், நடுத்தள அறையானது 9 அடி அகலமும் அதற்கு மேலுள்ள அறையானது 10 1/2 அடி அகலமும் கொண்டவை. வேலைக்காரர்கள் சுவர்களைக் கட்டுவதற்குப் பெரிய கற்களைப் பயன்படுத்தினார்கள். பூமியில் வெட்டி எடுக்கப்படும் இடத்திலேயே அவர்கள் கற்களை வெட்டி சரிசெய்துவிட்டனர். அதனால் ஆலயம் கட்டும் இடத்தில் சுத்திகள், வாச்சிகள், முதலான எந்த இரும்புக் கருவிகளின் சத்தமும் கேட்கவில்லை.

அடியிலுள்ள அறையின் நுழை வாசலானது ஆலயத்தின் தென்புறத்தில் இருந்தது. உள்ளே படிக்கட்டுகள் அங்கிருந்து இரண்டாவது மாடிக்கும் மூன்றாவது மாடிக்கும் போயின.

இவ்வாறு, சாலொமோன் ஆலயம் கட்டும் வேலையை முடித்தான். ஆலயத்தின் ஒவ்வொரு பகுதியும் கேதுருமரங்களால் மூடப்பட்டிருந்தது. 10 ஆலயத்தைச் சுற்றியுள்ள அறைகளின் வேலைகளையும் முடித்தான். ஒவ்வொரு அறையும் 7 1/2 அடி உயரமுள்ளவை. அந்த அறைகளில் உள்ள கேதுரு மரத்தூண்கள் ஆலயத்தைத் தொட்டுக் கொண்டிருந்தன.

11 கர்த்தர் சாலொமோனிடம், 12 “நீ எனது அனைத்து சட்டங்களுக்கும் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்தால் உன் தந்தை தாவீதிற்கு வாக்களித்தபடி நான் உனக்குச் செய்வேன். 13 நீ கட்டிய இவ்வாலயத்தில் இஸ்ரவேலின் ஜனங்களோடு நான் வாழ்வேன். நான் இஸ்ரவேல் ஜனங்களை விட்டு போகமாட்டேன்” என்றார்.

ஆலயத்தைப் பற்றிய விவரங்கள்

14 இவ்வாறு சாலொமோன் ஆலயத்தைக் கட்டும் வேலையை முடித்தான். 15 ஆலயத்தின் உட்புறத்தில் உள்ள கற்சுவர்கள் கேதுரு மரப்பலகைகளால் மூடப்பட்டிருந்தன. அவை தரையிலிருந்து கூரைவரை இருந்தன. கல் தரையானது தேவதாரு மரப்பலகைகளால் மூடப்பட்டன. 16 ஆலயத்தின் பின் பகுதியில் 30 அடி நீளத்தில் ஒரு அறையைக் கட்டினார்கள். அதன் சுவர்களைக் கேதுருமரப் பலகைகளால் தரையிலிருந்து கூரைவரை மூடினர். இந்த அறையானது மகா பரிசுத்த இடம் என்று அழைக்கப்பட்டது. 17 மகா பரிசுத்த இடத்தின் முன்புறத்தில்தான் ஆலயத்தின் முக்கிய இடம் இருந்தது. இந்த அறை 60 அடி நீளம் இருந்தது. 18 அவர்கள் சுவரில் உள்ள கற்கள் தெரியாத வண்ணம் கேதுருமரப் பலகைளால் மூடினார்கள். அவர்கள் பூ மொட்டுகள் மற்றும் மலர்களின் வடிவங்களை அம்மரத்தில் செதுக்கினார்கள்.

19 சாலொமோன் ஒரு அறையை ஆலயத்தின் பின்பகுதியில் உள்ளே கட்டினான். இந்த அறையில் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை வைத்தனர். 20 இது 30 அடி நீளமும், 30 அடி அகலமும், 30 அடி உயரமும் உடையதாக இருந்தது. 21 சாலொமோன் இந்த அறையைச் சுத்தமான தங்கத்தால் மூடினான். அவன் நறுமணப்பொருட்களை எரிக்கும் பலிபீடத்தை கட்டினான். அவன் பலிபீடத்தையும் தங்கத் தகடுகளால் மூடி பொன் சங்கிலிகளைக் குறுக்காகத் தொங்கவிட்டான். அந்த அறையில் இரண்டு கேருபீன்களின் உருவங்கள் இருந்தன. அவை தங்கத்தால் மூடப்பட்டவை. 22 ஆலயத்தின் அனைத்து பகுதிகளும் தங்கத்தால் மூடப்பட்டன. மகா பரிசுத்த இடத்திற்கு வெளியே உள்ள பலிபீடத்தையும் தங்கத்தால் மூடினார்கள்.

23 வேலைக்காரர்கள் ஒலிவ மரத்தைக் கொண்டு இரண்டு கேருபீன்களின் உருவங்களை செய்தனர். இவற்றை மகாபரிசுத்த இடத்தில் வைத்தனர். இவற்றின் உயரம் 15 அடி. 24-26 இரு கேருபீன்களும் ஒரே மாதிரி ஒரே முறையில் செய்யப்பட்டவை. ஒவ்வொரு கேருபீனுக்கும் இரு சிறகுகள் இருந்தன. ஒவ்வொரு சிறகும் 7 1/2 அடி நீளமுடையவை. ஒரு சிறகின் நுனியிலிருந்து இன்னொரு சிறகின் நுனிவரை 15 அடி இருந்தன. ஒவ்வொரு கேருபீனும் 15 அடி உயரம் இருந்தன. 27 அவை மகாபரிசுத்த இடத்தில் இரு பக்கங்களிலும் இருந்தன. இரண்டின் சிறகுகளும் அறையின் மத்தியில் தொட்டுக்கொண்டிருந்தன. வெளிநுனிகள் சுவரைத் தொட்டுக்கொண்டிருந்தன. 28 இரு கேருபீன்களும் தங்கத்தால் மூடப்பட்டிருந்தன.

29 முக்கிய அறையைச் சுற்றியுள்ள சுவர்களிலும் உட்சுவர்களிலும் கேருபீன்களின் உருவங்கள், பேரீச்ச மரங்கள், பூக்கள் என பொறிக்கப்பட்டன. 30 இரு அறைகளின் தரைகளும் தங்கத்தகடுகளால் மூடப்பட்டன.

31 மகா பரிசுத்த இடத்தின் நுழைவாயிலில் ஒலிவ மரத்தால் ஆன இரு கதவுகளைச் செய்து பொருத்தினர். இதன் சட்டமானது ஐந்து பக்கங்களுடையதாக அமைக்கப்பட்டது. 32 இக்கதவுகளின் மேல் கேருபீன்களும், பேரீச்ச மரம், பூக்கள் எனப் பல வடிவங்கள் செதுக்கப்பட்டன. பின்னர் தங்கத்தால் இவற்றை மூடினார்கள்.

33 அவர்கள் முக்கியமான அறையின் நுழைவிற்குக் கதவுகள் செய்தனர். அவர்கள் ஒலிவ மரத்தை பயன்படுத்தி சதுர கதவு சட்டத்தைச் செய்தனர். 34 பிறகு அவர்கள் கதவுகளைச் செய்ய ஊசியிலை மரத்தைப் பயன்படுத்தினார்கள். 35 ஒவ்வொரு கதவும் இரண்டு பகுதிகளாக இருந்தன. இரண்டு மடிப்புகள் இருந்தன, அக்கதவுகளில் கேருபீன்கள், பேரீச்ச மரங்களும் பூக்களும் வரையப்பட்டன. தங்கத்தால் அவைகள் மூடப்பட்டிருந்தன.

36 பிறகு அவர்கள் உட்பிரகாரத்தைக் கட்டினார்கள். அதைச் சுற்றி சுவர்களைக் கட்டினர். ஒவ்வொரு சுவரும் மூன்று வரிசை வெட்டப்பட்ட கற்களாலும், ஒரு வரிசை கேதுருமரங்களாலும் செய்யப்பட்டன.

37 ஆண்டின் இரண்டாவது மாதமான சீப் மாதத்தில், ஆலயத்தின் வேலைகளைச் செய்ய ஆரம்பித்தார்கள். இது சாலொமோன் இஸ்ரவேலின் அரசனாகி நான்காவது ஆண்டாக இருந்தது. 38 ஆலயத்தின் வேலையானது ஆண்டின் எட்டாவது மாதமான பூல் மாதத்தில் முடிந்தது. இது சாலொமோன் ஆட்சிக்கு வந்த பதினொன்றாவது ஆண்டாயிற்று. ஆலய வேலை முடிய ஏழு ஆண்டுகள் ஆனது. திட்டமிட்ட விதத்திலேயே ஆலயமானது மிகச்சரியாகக் கட்டப்பட்டது.

அப்போஸ்தலர் 7:1-29

ஸ்தேவானின் பேச்சு

தலைமை ஆசாரியன் ஸ்தேவானை நோக்கி, “இந்தக் காரியங்கள் எல்லாம் உண்மைதானா?” என்று கேட்டான். ஸ்தேவான் பதிலாக, “எனது யூத தந்தையரே, சகோதரரே, நான் கூறுவதைக் கேளுங்கள். மகிமைபொருந்திய நமது தேவன் நமது தந்தையாகிய ஆபிரகாமுக்குக் காட்சி கொடுத்தார். ஆபிரகாம் மெசொபொதாமியாவில் இருந்தார். அவர் ஆரானில் வாழ்வதற்கு முன்பு நடந்த நிகழ்ச்சி இது. தேவன் ஆபிரகாமை நோக்கி, ‘உன் நாட்டையும் உன் உறவினர்களையும் விட்டுவிட்டு, நான் காண்பிக்கும் நாட்டிற்குப் போ’ [a] என்றார்.

“எனவே ஆபிரகாம் கல்தேயா நாட்டை விட்டுச் சென்றார். ஆரானில் வசிப்பதற்காகச் சென்றார். ஆபிரகாமின் தந்தை இறந்த பிறகு, நீங்கள் இப்போது வசிக்கிற இந்த இடத்திற்கு தேவன் அவரை அனுப்பினார். ஆனால் தேவன் ஆபிரகாமுக்கு இந்த நாட்டில் எதையும் கொடுக்கவில்லை. ஒரு அடி நிலம் கூடக் கொடுக்கவில்லை. ஆனால் ஆபிரகாமுக்கும் அவர் குழந்தைகளுக்கும் எதிர்காலத்தில் இந்நாட்டைக் கொடுப்பதாக தேவன் வாக்களித்தார். (ஆபிரகாமுக்குக் குழந்தை இல்லாதிருந்தபோது இது நடந்தது)

“தேவன் அவருக்குக் கூறியது இதுவாகும். ‘உன் சந்ததியர் மற்றொரு நாட்டில் வாழ்வர். அவர்கள் அந்நியர்களாயிருப்பர். அந்நாட்டின் மக்கள் அவர்களை அடிமைப்படுத்துவர். [b] 400 வருடங்களுக்கு அவர்களை மோசமாக நடத்துவர். ஆனால் அவர்களை அடிமையாக்கிய நாட்டினரை நான் தண்டிப்பேன்.’ தேவன் மேலும், ‘இந்தக் காரியங்கள் நடந்தபின் உன் மக்கள் அந்நாட்டிலிருந்து வெளியேறுவர். பின் உன் மக்கள் இங்கு இந்த இடத்தில் என்னை வழிபடுவர்’ [c] என்றார்.

“தேவன் ஆபிரகாமோடு ஓர் உடன்படிக்கை பண்ணினார். இந்த உடன்படிக்கையின் அடையாளமே விருத்த சேதனமாகும். எனவே ஆபிரகாமுக்கு ஒரு மகன் பிறந்ததும், அவன் பிறந்து எட்டு நாட்களான பின் ஆபிரகாம் தன் மகனுக்கு விருத்தசேதனம் செய்வித்தார். அவரது மகனின் பெயர் ஈசாக்கு. ஈசாக்கும் தனது மகன் யாக்கோபுக்கு விருத்தசேதனம் செய்வித்தார். யாக்கோபும் தனது மக்களுக்கு அதைச் செய்தார். அந்த மகன்களே பின்னர் பன்னிரண்டு தந்தையராக மாறினர்.

“இந்தத் தந்தையர் யோசேப்பைக் (அவர்களது இளைய சகோதரன்) கண்டு பொறாமை கொண்டனர். எகிப்தில் ஒரு அடிமையாக யோசேப்பை அவர்கள் விற்றனர். ஆனால் தேவன் யோசேப்போடு இருந்தார். 10 யோசேப்புக்கு அங்கு பல தொல்லைகள் நேர்ந்தாலும், தேவன் அத்தொல்லைகள் எல்லாவற்றிலிருந்தும் அவரைக் காப்பாற்றினார். பார்வோன் எகிப்தின் அரசனாக இருந்தான். அவன் யோசேப்புக்கு தேவன் கொடுத்த ஞானத்தைக் கண்டு அவரை விரும்பவும் நேசிக்கவும் செய்தான். எகிப்தின் ஆளுநர் வேலையைப் பார்வோன் யோசேப்புக்குக் கொடுத்தான். பார்வோனின் வீட்டிலுள்ள எல்லா மக்களையும் ஆளுவதற்கும் யோசேப்பை பார்வோன் அனுமதித்தான். 11 ஆனால் எகிப்திலும், கானானிலுமிருந்த எல்லா நிலங்களும் வறண்டு போயின. அங்கு உணவு தானியங்கள் வளர முடியாதபடிக்கு நாடு வறட்சியுற்றது. இது மக்களுக்குப் பெரும் துன்பத்தை விளைவித்தது. நமது தந்தையருக்கு உண்பதற்கு எதுவும் அகப்படவில்லை.

12 “ஆனால் எகிப்தில் உணவு சேமித்து வைக்கப்பட்டிருப்பதை யாக்கோபு கேள்விப்பட்டார். எனவே அவர் நமது தந்தையரை அங்கு அனுப்பினார். (இது எகிப்துக்கு அவர்களின் முதற்பயணமாயிருந்தது.) 13 பின்னர், அவர்கள் இரண்டாம் முறையாகவும் அங்கு சென்றார்கள். இந்தத் தடவை யோசேப்பு தன் சகோதரர்களிடம் தான் யாரென்பதைக் கூறினான். பார்வோனுக்கும் யோசேப்பின் குடும்பத்தைக் குறித்துத் தெரிய வந்தது. 14 பின் யோசேப்பு தன் தந்தையாகிய யாக்கோபை எகிப்துக்கு அழைத்து வருவதற்கென்று சில மனிதர்களை அனுப்பினார். தன் எல்லா உறவினர்களையும் கூட (அங்கு மொத்தம் 75 பேர்) அழைத்தார். 15 எனவே யாக்கோபு எகிப்திற்குப் போனார். யாக்கோபும் நமது தந்தையரும் அவர்களின் மரணம் மட்டும் அங்கு வாழ்ந்தனர். 16 பின்னர் அவர்கள் சரீரங்கள் சீகேமுக்கு அனுப்பப்பட்டன. அவர்கள் அங்கு ஒரு கல்லறையில் வைக்கப்பட்டனர். (வெள்ளியைக் கொடுத்து ஏமோரின் மகன்களிடமிருந்து சீகேமில் ஆபிரகாம் வாங்கிய கல்லறை அது.)

17 “எகிப்தில் யூத மக்களின் தொகை பெருகியது. நமது மக்கள் அங்கு மென்மேலும் பெருகினர். (தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதியைச் செயல்படுத்த வேண்டிய காலம் நெருங்கிக்கொண்டிருந்தது) 18 பின் இன்னொரு மன்னன் எகிப்தை ஆளத் தொடங்கினான். அவனுக்கு யோசேப்பைப்பற்றி எதுவும் தெரியாது. 19 இந்த மன்னன் நமது மக்களை ஏமாற்றினான். நம் முன்னோருக்கு அவன் தீமை செய்தான். அம்மன்னன் அவர்களது குழந்தைகளை இறக்கும்படியாக வெளியே போடும்படிச் செய்தான்.

20 “இக்காலத்தில் தான் மோசே பிறந்தார். அவர் அழகான குழந்தையாகவும் தேவனுக்கு இனிமையானவராகவும் இருந்தார். தன் தந்தையின் வீட்டில் மூன்று மாத காலத்துக்கு மோசேயை வைத்துப் பராமரித்தார்கள். 21 மோசேயை வெளியில் விட்டபொழுது பார்வோனின் மகள் அவனை எடுத்துத் தன் சொந்தக் குழந்தையைப் போன்றே வளர்த்தாள். 22 தங்களிடமிருந்த எல்லா ஞானத்தையும் எகிப்தியர்கள் மோசேக்குக் கற்பித்தனர். அவர் கூறியவற்றிலும் செய்தவற்றிலும் வல்லமைமிக்கவராக இருந்தார்.

23 “மோசே நாற்பது வயதாக இருந்தபோது தன் சகோதரர்களான யூத மக்களைச் சந்திப்பது நல்லது என்று நினைத்தார். 24 எகிப்தியன் ஒருவன் யூதன் ஒருவனுக்கு எதிராகத் தவறு செய்வதை அவர் கண்டார். எனவே அவர் யூதனுக்கு சார்பாகச் சென்றார். யூதனைப் புண்படுத்தியதற்காக மோசே எகிப்தியனைத் தண்டித்தார். மோசே அவனைப் பலமாகத் தாக்கியதால் அவன் இறந்தான். 25 தேவன் அவர்களை மீட்பதற்காக அவரைப் பயன்படுத்துவதை யூத சகோதர்கள் புரிந்துகொள்வார்கள் என்று மோசே எண்ணினார். ஆனால் அவர்கள் புரிந்துகொள்ளவில்லை.

26 “மறுநாள் இரண்டு யூதர்கள் சண்டையிடுவதை மோசே பார்த்தார். அவர்களுக்குள் அமைதியை நிலை நாட்ட அவர் முயன்றார். அவர், ‘மனிதரே, நீங்கள் இருவரும் சகோதரர்கள். நீங்கள் ஏன் ஒருவரையொருவர் மோசமாக நடத்துகிறீர்கள்?’ என்றார். 27 ஒருவனுக்கு எதிராகத் தவறிழைத்த மற்றொருவன் மோசேயைத் தள்ளிவிட்டான். அவன் மோசேயை நோக்கி, ‘நீ எங்கள் அதிகாரியாகவும் நீதிபதியாகவும் இருக்கும்படி யாராவது கூறினார்களா? இல்லை. 28 நேற்று எகிப்தியனைக் கொன்றது போல் என்னைக் கொல்லுவாயோ?’ [d] என்றான். 29 அவன் இவ்வாறு கூறுவதைக் கேட்ட மோசே எகிப்தை விட்டுச் சென்றார். மீதியானில் வாழும்படியாகச் சென்றார். அவர் அங்கு அந்நியனாக இருந்தார். மீதியானில் இருந்தபோது, மோசேக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர்.

சங்கீதம் 127

ஆலயத்திற்குப் போகும்போது பாடுவதற்கான சாலொமோனின் பாடல்

127 கர்த்தர் ஒரு வீட்டைக் கட்டாவிட்டால் அதைக் கட்டுகிறவன் காலத்தை வீணாக்குகிறான்.
    கர்த்தர் ஒரு நகரத்தைக் கண்காணிக்காவிட்டால் அதைக் காப்போர் காலத்தை வீணாக்குகிறார்கள்.

வாழ்க்கை வாழ்வதற்காக காலையில் எழுவதும் இரவில் வெகுநேரம் விழித்திருப்பதும் பொழுதை வீணாக்குவதாகும்.
    தேவன் தாம் நேசிக்கிற ஜனங்களை அவர்கள் உறங்கும்போது கவனித்துக் காக்கிறார்.

பிள்ளைகள் கர்த்தரால் வரும் பரிசாகும்.
    குழந்தைகள் ஒரு தாயின் சரீரத்திலிருந்து வரும் வெகுமதியாகும்.
ஒரு இளைஞனின் மகன்கள்
    ஒரு வீரன் அம்புகளை வைத்திருக்கும் பையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாவார்கள்.
தன் அம்புகள் வைக்கும் பையை மகன்களால் நிரப்பும் மனிதன் மிகவும் மகிழ்ச்சியடைவான்.
    அம்மனிதன் ஒரு நாளும் தோற்கடிக்கப்படமாட்டான்.
    அவனது பகைவர்களுக்கு எதிராகப் பொது இடங்களில் போராடி அவனது மகன்கள் அவனைக் காப்பார்கள்.

நீதிமொழிகள் 16:28-30

28 தொல்லையை உருவாக்குகிறவன் எப்பொழுதும் பிரச்சனைகளை உண்டுபண்ணுகிறான். பொய்ச் செய்திகளைப் பரப்புகிறவன் நெருங்கிய நண்பர்களுக்குள் துன்பத்தை ஏற்படுத்துவான்.

29 தொல்லையை உருவாக்குகிறவன் பல தொல்லைகளுக்குக் காரணமாகிறான். தனது நண்பர்களுக்கு நன்மை தராத வழிகளில் அவர்களை அழைத்துச் செல்கிறான். 30 அவன் தன் கண்களால் ஜாடை செய்து சிலவற்றை அழிக்கத் திட்டமிடுகிறான். தனது பக்கத்து வீட்டுக்காரனைத் துன்புறுத்த சிரித்துக்கொண்டே திட்டமிடுகிறான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center