Print Page Options Listen to Reading
Previous Prev Day Next DayNext

The Daily Audio Bible

This reading plan is provided by Brian Hardin from Daily Audio Bible.
Duration: 731 days

Today's audio is from the NIV. Switch to the NIV to read along with the audio.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
1 இராஜாக்கள் 1

அதோனியா இராஜாவாக விரும்புகிறான்

தாவீது அரசன் வயதானபோது, அவன் உடல் சூடு குறைந்து கொண்டே வந்தது. அவனது வேலைக்காரர்கள் அவனைப் போர்வையால் மூடினார்கள், எனினும் அவனுக்குக் குளிராய் இருந்தது. எனவே அவனது வேலைக்காரர்கள் அவனிடம், “உங்களை கவனித்துக்கொள்ள ஒரு சிறு பெண்ணைத் தேடுவோம். அவள் உங்கள் அருகே நெருக்கமாகப் படுத்து உங்களுக்கு சூட்டினை உண்டாக்குவாள்” என்றனர். எனவே அரசனின் உடலில் சூடேற்றும் பொருட்டு அரசனின் வேலைக்காரர்கள் ஒரு அழகான சிறு பெண்ணை இஸ்ரவேல் நாடு முழுவதும் தேடினார்கள். அவர்கள் அபிஷாக் என்ற பெண்ணைக் கண்டுபிடித்தனர். அவள் சூனேம் நகரத்தவள். அவளை அவர்கள் அரசனிடம் அழைத்து வந்தனர். அந்தப் பெண் மிகவும் அழகானவள். அவள் அரசனை மிகவும் கவனித்து சேவை செய்தாள். ஆனால் அரசனான தாவீது அவளோடு பாலின உறவு வைத்துக்கொள்ளவில்லை.

தாவீதிற்கும் அவனது மனைவி ஆகீத்திற்கும் அதோனியா எனும் மகன் இருந்தான். அவன் பெருமிதம் கொண்டவனாகி அவனே புதிய அரசனாக ஆவான் என்று முடிவு செய்தான். அவனுக்கு அரசனாவதில் மிகுந்த விருப்பமும் இருந்தது. எனவே அவன் ஒரு இரதத்தையும், குதிரைகளையும், முன்னால் ஓட்டிப்போக 50 ஆட்களையும் ஏற்பாடு செய்துக் கொண்டான். அவன் அழகான தோற்றம் உடையவன். அப்சலோமுக்குப்பிறகு பிறந்தவன். ஆனால் தாவீதோ அவனைத் திருத்தவில்லை, “ஏன் இவ்வாறு செய்கிறாய்?” என்றும் கேட்கவில்லை.

செருயாவின் மகனான யோவாபோடும் ஆசாரியனாகிய அபியத்தாரோடும் அதோனியா பேசினான். அவன் புதிய அரசனாக அவர்கள் உதவ முடிவு செய்தனர். ஆனால் பலர் அதோனியாவின் செயலுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. அவர்கள் தொடர்ந்து தாவீதிற்கு உண்மையானவர்களாக இருந்தனர். ஆசாரியனான சாதோக்கு, யோய்தாவின் மகனான பெனாயா, தீர்க்கதரிசியாகிய நாத்தான், சீமேயி, ரேயி, தாவீதோடு இருந்த பலசாலிகள் போன்றோர் அதோனியாவுக்குச் சாதகமாக இல்லை.

ஒரு நாள், அதோனியா இன்ரோகேலுக்கு அருகிலுள்ள சோகெலெத் என்னும் மலையில் சில ஆடுகளையும், பசுக்களையும், கொழுத்த மிருகங்களையும் கொன்று சமாதானப் பலியாகக் கொடுத்தான். அவன் தன் தந்தையின் மற்ற மகன்களான சகோதரர்களையும், யூதாவிலுள்ள அதிகாரிகளையும் அழைத்திருந்தான். 10 ஆனால் அவன் தந்தையின் சிறப்பான மெய்க்காவலாளியையும், தன் சகோதரனான சாலொமோனையும், தீர்க்கதரிசிகளாகிய நாத்தான், பெனாயா ஆகியோரையும் அழைக்கவில்லை.

நாத்தானும் பத்சேபாளும் சாலொமோனுக்காக பேசுதல்

11 ஆனால் நாத்தான், இதைப்பற்றி அறிந்து சாலொமோனின் தாயான பத்சேபாளிடம் சென்றான். அவளிடம் அவன், “ஆகீத்தின் மகனான அதோனியா என்ன செய்துகொண்டிருக்கிறான் என்பதை அறிவீர்களா? அவன் தன்னையே அரசனாக்கிக்கொண்டான். நமது ஆண்டவனும் அரசனுமான தாவீது இதைப்பற்றி எதுவும் சொல்லாமல் இருக்கிறார். 12 உங்கள் வாழ்வும், உங்கள் மகன் சாலொமோனின் வாழ்வும் ஆபத்தில் உள்ளது. நான் உங்களைக் காப்பாற்றிக்கொள்ளும் வழியைப்பற்றிக் கூறுகிறேன். 13 அரசனிடம் செல்லுங்கள். அவனிடம், ‘என் அரசனும் ஆண்டவனுமானவரே! என் மகன் சாலொமோனே அடுத்த அரசனாக வருவான் என்று என்னிடம் சத்தியம் செய்திருக்கிறீர்கள். அப்படி இருக்கும்போது அதோனியா எவ்வாறு அரசனாக வரமுடியும்?’ என்று சொல்லுங்கள். 14 நீங்கள் அவரோடு பேசிக் கொண்டிருக்கும்போது, நான் அங்கே வருவேன். நீங்கள் போனபிறகு நானும் அரசனிடம் நடப்பவற்றைக் கூறுவேன். அதனால் நீங்கள் கூறியதும் உண்மையாக அவருக்குத் தோன்றும்” என்றான்.

15 எனவே பத்சேபாள் அரசனை அவனது படுக்கை அறையில் போய் பார்த்தாள். அரசன் முதியவனாயிருந்தான். சூனேமிலுள்ள பெண்ணான அபிஷாக் அவனைக் கவனித்துக்கொண்டிருந்தாள். 16 அவள் அரசனின் முன்பு குனிந்து வணங்கினாள். “நான் உனக்கு என்ன செய்யவேண்டும்?” என்று அரசன் கேட்டான்.

17 பத்சேபாள் அவனிடம், “ஐயா உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைப் பயன்படுத்தி எனக்கு வாக்குறுதி கொடுத்துள்ளீர்கள்: ‘எனக்குப் பிறகு உன் மகனான சாலொமோனே அடுத்த அரசன். சாலொமோன் என் சிங்காசனத்தில் அமர்வான்’ என்று கூறியுள்ளீர்கள். 18 இப்போது, இதை அறியாமல் அதோனியா தன்னையே அரசனாக்கிக்கொண்டிருக்கிறான். 19 அவன் சமாதான விருந்தைக் கொடுக்கிறான். அவன் சமாதான பலிக்காக பல பசுக்களையும் சிறந்த ஆடுகளையும் கொன்றிருக்கிறான். அதற்கு அவன் உங்கள் அனைத்து மகன்களையும், ஆசாரியனான அபியத்தாரையும், தளபதியான யோவாபையும் அழைத்துள்ளான். ஆனால் உங்களுக்கு உண்மையுள்ள மகனான சாலொமோனை அழைக்கவில்லை. 20 எனது அரசனும் ஆண்டவனுமானவரே, இப்போது உங்களை இஸ்ரவேல் ஜனங்கள் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். உமக்குப் பிறகு அடுத்த அரசன் யார் என்பதை முடிவு செய்ய அவர்கள் உமக்காக காத்திருக்கிறார்கள். 21 நீங்கள் மரிப்பதற்கு முன் ஏதாவது செய்யவேண்டும். இல்லாவிட்டால், உங்களை அடக்கம் செய்த பிறகு, அவர்களால் நானும் என் மகன் சாலொமோனும் குற்றவாளிகளாக நடத்தப்படுவோம்” என்றாள்.

22 இவ்வாறு அவள் அரசனோடு பேசிக் கொண்டிருக்கும்போதே, தீர்க்கதரிசியான நாத்தான் வந்தான். 23 வேலைக்காரர்கள் அரசனிடம் போய், “தீர்க்கதரிசியான நாத்தான் வந்துள்ளார்” என்றனர். எனவே நாத்தான் அரசனிடம் சென்று தரையில் குனிந்து வணங்கினான். 24 பிறகு அவன், “எனது ஆண்டவனும் அரசனுமானவரே, உங்களுக்குப் பிறகு அதோனியாதான் அடுத்த அரசன் என்று நீங்கள் அறிவித்துள்ளீர்களா? இனி அதோனியாதான் ஜனங்களை ஆள்வான் என்று முடிவு செய்துவிட்டீர்களா? 25 ஏனென்றால் அவன் இன்று பள்ளத்தாக்குக்குப் போய், பல பசுக்களையும், ஆடுகளையும் சமாதானப் பலியாகக் கொடுத்துள்ளான். அதற்கு சாலொமோனைத் தவிர அனைத்து மகன்களையும் அழைத்துள்ளான். படைத் தலைவர்களும் ஆசாரியனான அபியத்தாரும் அழைக்கப்பட்டுள்ளனர். அவனோடு அவர்கள், உண்டும் குடித்தும் மகிழ்கின்றனர். அவர்கள், ‘அதோனியா அரசன் நீண்டகாலம் வாழட்டும்!’ என்று வாழ்த்துகின்றனர். 26 ஆனால் அவன் என்னையும், ஆசாரியனான சாதோக்கையும், யோய்தாவின் மகனான பெனாயாவையும், உங்கள் மகனான சாலொமோனையும் அழைக்கவில்லை. 27 எனது அரசனும் ஆண்டவனுமானவரே, நீங்கள் எங்களுக்குத் தெரியாமல் இதனைச் செய்தீர்களா? தயவு செய்து உங்களுக்குப் பிறகு யார் அரசனாவார்கள் என்பதை தெரிவியுங்கள்” என்றான்.

28 பிறகு அரசனாகிய தாவீது, “பத்சேபாளை உள்ளே வரச்சொல்!” என்றான். எனவே பத்சேபாளும் உள்ளே வந்தாள்.

29 பின்னர் அரசன், ஒரு வாக்குக்கொடுத்தான்: “தேவனாகிய கர்த்தர்தாமே என்னை அனைத்து ஆபத்துகளிலிருந்தும் காப்பாற்றி இருக்கிறார். கர்த்தர் உயிருடன் இருப்பதைப் போலவே, இவ்வாக்குறுதியும் உறுதியானது. 30 நான் முன்பு உனக்கு ஆணையிட்டபடியே இன்று செயலாற்றுவேன், இதனை இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய வல்லமையால் வாக்குறுதியளிக்கிறேன். எனக்குப் பின் உன் மகனான சாலொமோனே அரசனாவான். எனது இடத்தையும் அவன் பிடித்துக்கொள்வான். நான் எனது வாக்குறுதியை நிறைவேற்றுவேன்!” என்றான்.

31 பிறகு பத்சேபாள் தரையில் குனிந்து அரசனை வணங்கினாள். அவள், “தாவீது அரசன் நீண்டகாலம் வாழ்வாராக!” என்று வாழ்த்தினாள்.

சாலொமோன் புதிய அரசனாக தேர்ந்தெடுக்கப்படுதல்

32 பிறகு தாவீது அரசன், “ஆசாரியனான சாதோக், தீர்க்கதரிசியான நாத்தான், யோய்தாவின் மகனான பெனாயா ஆகியோரை உள்ளே வரச்சொல்” என்றான். எனவே மூன்று பேரும் உள்ளே வந்து அரசன் முன்பு நின்றனர். 33 அவன் அவர்களிடம், “எனது அதிகாரிகளை உங்களோடு அழைத்துக்கொள்ளுங்கள். என் மகனாகிய சாலொமோனை என் கோவேறு கழுதையின்மேல் ஏற்றுங்கள். அவனைக் கீகோனுக்கு அழைத்துக்கொண்டுப் போங்கள். 34 அங்கே, ஆசாரியனாகிய சாதோக்கும் தீர்க்கதரிசியாகிய நாத்தானும் அவனை இஸ்ரவேலின் அரசனாக அபிஷேகம் செய்யட்டும். பின் எக்காளத்தை ஊதி, ‘புதிய அரசனாகிய சாலொமோன் வாழ்க!’ என்று வாழ்த்துங்கள். 35 பிறகு அவனை நகர்வலம் செய்து என் சிங்காசனத்தில் வீற்றிருக்கக் கூட்டிக்கொண்டு வாருங்கள். அவனே எனது இடத்தில் அரசனாக இருப்பான். இஸ்ரவேலின் மேலும் யூதாவின் மேலும் தலைவனாக இருக்கும்படி அவனைத் தேர்ந்தெடுத்தேன்” என்றான்.

36 யோய்தாவின் மகனான பெனாயா, “எனது அரசனும் ஆண்டவனுமானவரே, தேவனாகிய கர்த்தரும் இவ்வாறே சொன்னார். 37 என் அரசனும் ஆண்டவனுமானவரே! கர்த்தர் உங்களோடு இருக்கிறார். இனி சாலொமோனோடும் கர்த்தர் இருப்பார் என்று நம்புவோமாக! அவனது அரசாங்கம் வளர்ந்து உங்களுடையதைவிட அதிக வலிமையுள்ளதாகும் என்று நம்புகிறேன்” என்றான்.

38 எனவே ஆசாரியனான சாதோக், தீர்க்கதரிசியான நாத்தான், யோய்தாவின் மகனான பெனாயா, மற்றும் அரசு அதிகாரிகள் தாவீது அரசனுக்குக் கீழ்ப்படிந்தனர். சாலொமோனை அரசனுடைய கழுதையின் மேல் ஏற்றி கீகோனுக்கு அழைத்துச் சென்றனர். 39 ஆசாரியனான சாதோக் பரிசுத்த கூடாரத்தில் இருந்து எண்ணெயை எடுத்துச் சென்றான். அவனது தலையில் அதனை ஊற்றி அரசனாக அபிஷேகம் செய்தான். எக்காளம் ஊத மற்ற ஜனங்கள், “அரசன் சாலொமோன் நீண்ட காலம் வாழட்டும்!” என்று வாழ்த்தினார்கள். 40 பிறகு அனைவரும் சாலொமோனைப் பின்தொடர்ந்து நகருக்கு வந்தனர். நாதசுரங்களை ஊதினர். அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். பூமி அதிரும்படி அவர்கள் சத்தத்தை எழுப்பினர்.

41 இதற்கிடையில், அதோனியாவும் அவனது விருந்தினரும் விருந்தை முடித்தனர். அவர்கள் எக்காள சத்தத்தைக் கேட்டனர். “இது என்ன சத்தம், நகரத்தில் என்ன நடக்கிறது?” என யோவாப் கேட்டான்.

42 அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது ஆசாரியனான அபியத்தாரின் மகனான, யோனத்தான் வந்தான்.

அதோனியா அவனிடம், “இங்கே வா! நீ நல்லவன். நல்ல செய்தியைக் கொண்டு வந்திருப்பாய்” என்றான்.

43 ஆனால் அவனோ, “இல்லை. இது உனக்கு நல்ல செய்தியில்லை! தாவீது அரசன் சாலொமோனைப் புதிய அரசனாக நியமித்துவிட்டான். 44 அவனோடு ஆசாரியனாகிய சாதோக்கையும், தீர்க்கதரிசியாகிய நாத்தானையும், யோய்தாவின் மகனான பெனாயாவையும், மற்ற அரச அதிகாரிகளையும் அனுப்பினான். அவர்கள் அரசனின் கழுதை மேல் அவனை ஏற்றினார்கள். 45 பின் ஆசாரியனான சாதோக்கும், தீர்க்கதரிசியான நாத்தானும் கீகோனில் அவனை அரசனாக அபிஷேகம் செய்தனர். பின் நகரத்திற்குள் வந்தனர். ஜனங்கள் அவனைப் பின்தொடர்ந்து மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இதுதான் நீங்கள் கேட்கும் சத்தம், 46 சாலொமோன் இப்போது அரச சிங்காசனத்தில் இருக்கிறான். 47 அனைத்து அதிகாரிகளும் அரசர் தாவீதுக்கு வாழ்த்து சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள், ‘தாவீது அரசனே, நீ மிகப் பெரிய அரசன்! சாலொமோனையும் மிகப் பெரிய அரசனாக்கும்படி உங்கள் தேவனிடம் இப்போது நாங்கள் ஜெபம் செய்கிறோம். உங்கள் தேவன் உங்களைவிடவும் சாலொமோனைப் புகழுள்ளவனாக்குவார் என்று நம்புகிறோம். மேலும் உங்கள் அரசாங்கத்தைவிட சாலொமோனின் அரசாங்கம் பெரியதாக இருக்கும் என்றும் நம்புகிறோம்!’” என்று வாழ்த்தினர்.

அங்கே தாவீது அரசனும் இருந்தான். படுக்கையிலேயே அவன் குனிந்து வணங்கினான். 48 அரசன் தாவீது, “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை துதியுங்கள். என் சிங்காசனத்தில் என் மகனையே கர்த்தர் உட்காரவைத்துள்ளார். இதைத் தொடர்ந்து காண எனக்கு ஜீவனைக் கொடுத்தார்” என்று சொன்னான்.

49 அதோனியாவின் விருந்தினர் பயந்து வேகமாக வெளியேறினார்கள். 50 அதோனியாவும் சாலொமோனுக்குப் பயந்தான். அவன் பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டான். [a] 51 சிலர் சாலொமோனிடம் போய், “அதோனியா உங்களைக் கண்டு அஞ்சுகிறான். அவன் பரிசுத்த கூடாரத்தில் பலி பீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டு நிற்கிறான். அவன், ‘என்னை கொல்லமாட்டேன் என சாலொமோனை வாக்குறுதி தரச்சொல்லுங்கள்’ என்கிறான்” என்றார்கள்.

52 எனவே சாலொமோன், “அதோனியா தன்னை நல்லவன் என்று காட்டினால், நான் அவனது தலையிலுள்ள ஒரு மயிருக்குக்கூட தீங்குச் செய்யமாட்டேன். அவனிடம் கேடு இருந்தால், அவன் மரிக்க வேண்டும்” என்று பதில் சொன்னான். 53 பிறகு சிலரை அனுப்பி அதோனியாவை அழைத்தான். அவர்கள் அவனை அழைத்துவந்தனர். அதோனியா வந்து சாலொமோனை பணிந்து வணங்கினான். அதற்கு சாலொமோன், “வீட்டிற்குப் போ” என்று சொன்னான்.

அப்போஸ்தலர் 4

யூத ஆலோசனைச் சங்கத்தின் முன்

பேதுருவும், யோவானும் மக்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போது சில மனிதர்கள் அவர்களிடம் வந்தார்கள். யூத ஆசாரியர்களும், ஆலயத்தைப் பாதுகாக்கும் வீரர்களுக்குத் தலைவனும், சில சதுசேயரும் அவர்களோடு வந்திருந்தனர். பேதுருவும், யோவானும் மக்களிடம் போதித்தவற்றைக் குறித்து அவர்கள் அதிருப்தி அடைந்திருந்தனர். அப்போஸ்தலர்கள் இயேசுவைக் குறித்து மக்களுக்குக் கூறும்போது, மக்கள் மரணத்திலிருந்து இயேசுவின் வல்லமையால் உயிர்த்தெழுவார் என்பதையும் போதித்தார்கள். யூதத் தலைவர்கள் பேதுருவையும் யோவானையும் பிடித்துச் சிறையில் அடைத்தனர். அது ஏற்கெனவே இரவு நேரமாயிருந்தது. எனவே அடுத்த நாள்வரைக்கும் பேதுருவையும் யோவானையும் சிறையில் வைத்திருந்தார்கள். ஆனால் பேதுருவும் யோவானும் செய்த போதனைகளைக் கேட்ட மக்களில் பலரும் அவர்கள் கூறியவற்றை விசுவாசித்தனர். அவர்களின் எண்ணிக்கை சுமார் ஐயாயிரம் பேராக இருந்தது.

மறுநாள் யூதத் தலைவர்களும், அதிகாரிகளும், வேதபாரகரும் எருசலேமில் சந்தித்தனர். அன்னா, காய்பா, யோவான், அலெக்சாந்தர் ஆகியோரும் அங்கிருந்தனர். தலைமை ஆசாரியனின் குடும்பத்தினர் அனைவரும் அங்கிருந்தனர். எல்லா ஜனங்களுக்கும் முன்பாகப் பேதுருவையும் யோவானையும் அவர்கள் நிறுத்தினர். யூத அதிகாரிகள் பல முறை அவர்களிடம், “ஊனமுற்ற இந்த மனிதனை எவ்வாறு குணப்படுத்தினீர்கள்? எந்த வல்லமையைப் பயன்படுத்தினீர்கள்? யாருடைய அதிகாரத்தினால் நீங்கள் இதைச் செய்தீர்கள்?” என்று கேட்டார்கள்.

அப்போது பேதுரு பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டான். அவன் அவர்களை நோக்கி, “மக்களின் அதிகாரிகளே, முதிய தலைவர்களே, ஊனமுற்ற மனிதனுக்கு ஏற்பட்ட நல்ல காரியத்தைக் குறித்து எங்களை வினவுகிறீர்களா? அவனைக் குணப்படுத்தியது யார் என்று எங்களை வினவுகிறீர்களா? 10 நீங்கள் யாவரும், யூத மக்கள் அனைவரும், இம்மனிதன் நாசரேத்தைச் சேர்ந்த இயேசு கிறிஸ்துவின் வல்லமையால் குணம் ஆக்கப்பட்டான் என்பதை அறிந்துகொள்ள வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். நீங்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தீர்கள். தேவன் அவரை மரணத்திலிருந்து எழுப்பினார். இந்த மனிதன் ஊனமுற்றவனாயிருந்தான். ஆனால் இப்போது இயேசுவின் வல்லமையால் குணம் பெற்று உங்களுக்கு முன்பாக எழுந்து நிற்கிறான்.

11 “‘கட்டிடம் கட்டுபவர்களாகிய நீங்கள் இயேசுவை முக்கியமற்ற கல்லைப் போன்று கருதினீர்கள்.
    ஆனால் இந்தக் கல்லோ மூலைக்கல்லாயிற்று.’ (A)

12 மக்களை இரட்சிக்கக் கூடியவர் இயேசு ஒருவரே. உலகத்தில் மக்களை இரட்சிக்கும் வல்லமையுடன் தரப்பட்ட நாமம் இயேசுவினுடையது மட்டுமே. இயேசுவின் மூலமாகவே நாம் இரட்சிக்கப்படவேண்டும்!” என்றான்.

13 பேதுருவும் யோவானும் வேறு சிறப்பான பயிற்சியோ கல்வியோ பெறவில்லை என்பதை யூதத் தலைவர்கள் புரிந்துகொண்டனர். பேதுருவும் யோவானும் பேசுவதற்கு அஞ்சவில்லை என்பதையும் அவர்கள் கண்டனர். அதனால் அதிகாரிகள் வியப்புற்றனர். பேதுருவும் யோவானும் இயேசுவுடன் இருந்தவர்கள் என்பதை உணர்ந்தனர். 14 இரண்டு அப்போஸ்தலர்களுடன் ஊனமாயிருந்த அந்த மனிதன் நின்று கொண்டிருப்பதை அவர்கள் கண்டனர். அம்மனிதன் குணமடைந்திருப்பதை அவர்கள் கண்டனர். எனவே அப்போஸ்தலருக்கு எதிராக அவர்களால் எதையும் சொல்ல முடியவில்லை.

15 அக்கூட்டத்திலிருந்து போகுமாறு யூதத் தலைவர்கள் அவர்களுக்குக் கூறினர். அதன் பின்பு தாங்கள் செய்ய வேண்டியது என்னவென்று யூதத் தலைவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். 16 அவர்கள், “இம்மனிதர்களை நாம் என்ன செய்வோம்? அவர்கள் பேரதிசயம் ஒன்றைச் செய்துள்ளார்கள் என்பதை எருசலேமின் ஒவ்வொரு மனிதனும் அறிவான். இது தெளிவு. இது உண்மையல்லவென்று நம்மால் சொல்ல முடியாது. 17 ஆனால் இம்மனிதனைக் குறித்து இவர்கள் மக்களுக்குச் சொல்வதற்கு அஞ்சும்படி செய்யவேண்டும். அப்போது மக்களிடம் இச்செய்தி மேலும் பரவாது” என்றனர்.

18 எனவே யூதத் தலைவர்கள் பேதுருவையும் யோவானையும் மீண்டும் உள்ளே அழைத்தனர். இயேசுவின் பெயரில் எதையும் கூறாதபடியும் போதிக்காதபடியும் அவர்கள் அப்போஸ்தலர்களுக்குக் கூறினர். 19 ஆனால் பேதுருவும் யோவானும் அவர்களுக்குப் பதிலாக, “நீங்கள் எதைச் சரியென்று நினைக்கிறீர்கள்? தேவன் எதை விரும்புவார்? நாங்கள் கீழ்ப்படியவேண்டுவது உங்களுக்கா அல்லது தேவனுக்கா? 20 நாங்கள் அமைதியாக இருக்க முடியாது. நாங்கள் பார்த்தவற்றையும் கேட்டவற்றையும் மக்களுக்குக் கண்டிப்பாகக் கூற வேண்டும்” என்றார்கள்.

21-22 நடந்ததற்காக எல்லா மக்களும் தேவனை வாழ்த்திக்கொண்டிருந்தபடியால் யூதத் தலைவர்கள் அப்போஸ்தலரைத் தண்டிப்பதற்கு ஒரு வழியும் காண முடியவில்லை. (இந்த அதிசயம் தேவனிடமிருந்து வந்த ஒரு சான்று. குணமாக்கப்பட்ட மனிதன் நாற்பது வயதிற்கும் மேற்பட்டவனாயிருந்தான்!) எனவே யூத அதிகாரிகள் மீண்டும் அப்போஸ்தலரை எச்சரித்து விடுவித்தனர்.

விசுவாசிகளின் பிரார்த்தனை

23 பேதுருவும் யோவானும் யூதத் தலைவர்களின் கூட்டத்தை விட்டு நீங்கி, அவர்களது குழுவிற்குச் சென்றனர். முக்கிய ஆசாரியரும், முதிய யூத அதிகாரிகளும் அவர்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் அவர்கள் தங்கள், குழுவினருக்குக் கூறினர். 24 விசுவாசிகள் இதனைக் கேட்டபோது, அவர்கள் ஒரே மனதுடன் தேவனிடம் பிரார்த்தனை செய்தனர். அவர்கள் எல்லோரும் ஒரே விதமாக உணர்ந்தனர். 25 அவர்கள், “கர்த்தாவே, வானத்தையும், பூமியையும், கடலையும், உலகத்திலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கியவர் நீர் ஒருவரே. எங்களது தந்தையாகிய தாவீது உம் ஊழியனாக இருந்தான். பரிசுத்த ஆவியின் உதவியால் அவன் கீழ்வரும் வார்த்தைகளை எழுதினான்.

“‘தேசங்கள் ஏன் கூக்குரல் எழுப்புகின்றன? ஏன் உலக மக்கள் தேவனுக்கெதிராகத் திட்டமிடுகின்றனர்?
    அவர்கள் செய்வது வீணானது.

26 “‘பூமியின் அரசர்கள் போருக்குத் தயாராகின்றனர்.
    தலைவர்கள் அனைவரும் தேவனுக்கும் அவருடைய கிறிஸ்துவிற்கும் எதிராக ஒருமித்துக் கூடுகின்றனர்.’ (B)

27 ஏரோதும் பொந்தியு பிலாத்துவும் தேசங்களும், எல்லா யூத ஜனங்களும் சேர்ந்து எருசலேமில் இயேசுவுக்கு எதிராகக் கூடினபோது இவை அனைத்தும் உண்மையாகவே நிகழ்ந்தன. இயேசு உமது தூய ஊழியர். அவரே கிறிஸ்துவாகும்படி நீர் உண்டாக்கியவர். 28 கூடி வந்த இந்த மக்கள் உம் திட்டம் நிறைவேறும்படி இயேசுவுக்கு எதிராகச் செயல்பட்டனர். உம் வல்லமையின்படியும், சித்தத்தின்படியும் அது நிகழ்ந்தது. 29 கர்த்தாவே, இப்போதும் அவர்கள் கூறுவதைக் கவனியும். அவர்கள் எங்களை அச்சமடையும்படியாகச் செய்ய முயன்றுகொண்டிருக்கிறார்கள். கர்த்தாவே, நாங்கள் உமக்கு ஊழியம் செய்பவர்கள். 30 நீர் விரும்புகிறவற்றை நாங்கள் தைரியமாகக் கூறுவதற்கு எங்களுக்கு உதவும். நோயுற்றோரைக் குணப்படுத்தும். சான்றுகள் கொடும். உம் தூய பணியாளராகிய இயேசுவின் வல்லமையால் அதிசயங்கள் நடக்கும்படிச் செய்யும்” என்று பிரார்த்தனை செய்தனர்.

31 விசுவாசிகள் பிரார்த்தனை செய்த பிறகு அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்கள் எல்லோரும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டனர். அச்சமின்றி தேவனுடைய செய்தியைத் தொடர்ந்து கூறினர்.

விசுவாசிகளின் ஒருமித்த வாழ்வு

32 விசுவாசிகள் அனைவரும் இருதயத்தில் ஒருமனமுள்ளவர்களாக ஒரே ஊக்கமுடையோராக இருந்தனர். அவர்களில் ஒருவரும் தன்னிடமிருந்த பொருட்கள் தனக்கு மட்டுமே சொந்தமானவை எனக் கூறவில்லை. மாறாக அவர்கள் எல்லாவற்றையும் பகிர்ந்துகொண்டனர். 33 மிகுந்த வல்லமையோடு, அப்போஸ்தலர்கள் கர்த்தராகிய இயேசு மரணத்தினின்று உண்மையாகவே எழுப்பப்பட்டார் என்பதை மக்களுக்குக் கூறினர். 34 விசுவாசிகளை தேவன் அதிகமாக ஆசீர்வதித்தார். அவர்கள் அனைவரும் தேவையான பொருட்களைப் பெற்றனர். வயல்களையோ, வீடுகளையோ உடைய ஒவ்வொருவரும் அவற்றை விற்றனர். அப்பணத்தைக் கொண்டு வந்து 35 அதனை அப்போஸ்தலர்களுக்குக் கொடுத்தனர். பின்பு ஒவ்வொருவருக்கும் தேவைக்கேற்ப பொருட்கள் கொடுக்கப்பட்டன.

36 விசுவாசிகளில் ஒருவன் யோசேப்பு என அழைக்கப்பட்டான். அப்போஸ்தலர்கள் அவனை பர்னபாஸ் என்று அழைத்தனர். (இந்தப் பெயர், “பிறருக்கு உதவுகின்ற மனிதன்” எனப் பொருள்படும்) அவன் சீப்புருவில் பிறந்த லேவியன். 37 அவனுக்குச் சிறிது நிலம் இருந்தது. அவன் அந்த நிலத்தை விற்று பணத்தைக் கொண்டுவந்து, அதை அப்போஸ்தலர்களிடம் கொடுத்தான்.

சங்கீதம் 124

ஆலயத்திற்குப் போகும்போது பாடுவதற்கென்று தாவீது அளித்த பாடல்

124 கர்த்தர் நமது சார்பில் இருந்திராவிட்டால், நமக்கு என்ன நேர்ந்திருக்கும்?
    இஸ்ரவேலே, எனக்குப் பதில் கூறு.
ஜனங்கள் நம்மைத் தாக்கியபோது, கர்த்தர் நமது சார்பில்
    இருந்திராவிட்டால் நமக்கு என்ன நேர்ந்திருக்கும்?
கோபம் வந்தபோதெல்லாம் நம் பகைவர்கள் நம்மை
    உயிரோடு விழுங்கியிருப்பார்கள்.
நம்மை அடித்துச்செல்லும் பெருவெள்ளத்தைப் போன்றும்,
    நம்மை அமிழ்த்துவிடும் நதியைப் போன்றும்
    நம் பகைவர்களின் சேனைகள் நம்மிடம் நடந்துகொண்டிருக்கும்.
நம் வாய்மட்டும் எழுந்து நம்மை அமிழ்த்திவிடும்
    தண்ணீரைப்போன்று அப்பெருமைக்காரர்கள் நடந்துக்கொண்டிருப்பார்கள்.

கர்த்தரைத் துதியுங்கள்!
    நம் பகைவர்கள் நம்மைப் பிடித்துக்கொல்வதற்கு கர்த்தர் அனுமதிக்கவில்லை.

வலையில் அகப்பட்டுப் பின்னர் தப்பிச்சென்ற பறவையைப் போல நாம் இருக்கிறோம்.
    வலை அறுந்தது, நாம் தப்பினோம்.
நமக்கு உதவி கர்த்தரிடமிருந்து வந்தது.
    கர்த்தரே பரலோகத்தையும் பூமியையும் உண்டாக்கினார்.

நீதிமொழிகள் 16:24

24 கருணைமிக்க வார்த்தைகள் தேனைப் போன்றவை. அவை ஏற்றுக்கொள்ள எளிமையானவை, உடல் நலத்திற்கும் நல்லது.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center