Print Page Options Listen to Reading
Previous Prev Day Next DayNext

The Daily Audio Bible

This reading plan is provided by Brian Hardin from Daily Audio Bible.
Duration: 731 days

Today's audio is from the NLT. Switch to the NLT to read along with the audio.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
2 சாமுவேல் 22:1-23:23

கர்த்தருடைய துதிகளைப் பாடும் தாவீதின் பாட்டு

22 கர்த்தர் தாவீதை சவுல் மற்றும்

பகைவர்களிடமிருந்து பாதுகாத்த போது, தாவீது கர்த்தரைப் புகழ்ந்து பாடிய பாட்டு.

கர்த்தர் என் கன்மலை என் கோட்டை என் பாதுகாப்பிடம்.
    அவர் எனது தேவன்.
    நான் பாதுகாப்பைத் தேடி ஓடும் கன்மலை.
தேவன் எனது கேடயம்.
அவரது ஆற்றல் என்னைக் காக்கிறது.
    மலைகளின் உச்சியில் நான் மறைந்துக் கொள்ள ஏதுவான என் பாதுகாப்பிடம் கர்த்தர் ஆவார்.
கொடிய பகைவரிடமிருந்து
    அவர் என்னைக் காக்கிறார்.
அவர்கள் என்னைக் கேலிச் செய்தனர்.
    ஆனால் நான் கர்த்தரை உதவிக்கு அழைத்தேன்.
என் பகைவரிடமிருந்து நான் பாதுகாக்கப்பட்டேன்!

என் பகைவர்கள் என்னைக் கொல்ல முயற்சித்துக்கொண்டிருந்தனர்!
மரணத்தின் அலைகள் என்னைச் சூழ்ந்தன.
    மரணத்தை நோக்கி இழுத்துச் செல்லும் வெள்ளத்தில் நான் அகப்பட்டேன்.
மயானக் கயிறுகள் என்னைச் சுற்றிக் கட்டின.
    மரணத்தின் கண்ணி எனக்கு முன் இருந்தது.
மாட்டிக்கொண்ட நான் கர்த்தரிடம் உதவிக் கேட்டேன்.
    ஆம், எனது தேவனை அழைத்தேன்.
தேவன் தமது ஆலயத்தில் இருந்து என் குரலைக் கேட்டார்.
    அவர் என் அழுகையைக் கேட்டார்.
பின்பு பூமி அசைந்து நடுங்கியது, பரலோகத்தின் அடித்தளம் ஆடியது.
    ஏனெனில் கர்த்தர் கோபமாயிருந்தார்.
தேவனுடைய நாசியிலிருந்து புகையெழுந்தது.
    எரியும் தழல் அவரின் வாயிலிருந்து வந்தது.
    எரியும் பொறிகள் அவரிடமிருந்து பறந்தன.
10 கர்த்தர் ஆகாயத்தைக் கீறி கீழிறங்கி வந்தார்!
    அவர் கட்டியான கறுப்பு மேகத்தில் நின்றார்!
11 அவர் பறந்துக்கொண்டிருந்தார், கேருபீன்கள் மீது பறந்து வந்தார்.
    காற்றின் மீது பயணம் வந்தார்.
12 கர்த்தர் கருமேகத்தைத் தன்னைச் சுற்றி ஒரு கூடாரம்போல் அணிந்தார்.
    அவர் கட்டியான இடி மேகங்களில் தண்ணீரைச் சேகரித்தார்.
13 அவரது ஒளி நிலக்கரியைக் கூட எரிய வைக்கும் பிரகாசத்தைக் கொண்டது!
14 வானிலிருந்து இடியைப்போல கர்த்தர் முழங்கினார்!
    உன்னதமான தேவன் தனது குரலை எல்லோரும் கேட்கும்படி செய்தார்.
15 கர்த்தர் தனது அம்புகளை எய்து
    பகைவர்களைப் பயந்தோடச் செய்தார்.
கர்த்தர் மின்னலை அனுப்பினார்
    ஜனங்கள் குழம்பிச் சிதறியோடினார்கள்.

16 கர்த்தாவே நீர் பலமாகப் பேசினீர்.
    பலமுள்ள காற்று உங்கள் வாயிலிருந்து அடித்தது.
தண்ணீர் விலகிற்று.
    எங்களால் கடலின் அடிப்பாகத்தைப் பார்க்கமுடிந்தது.
    பூமியின் அடித்தளத்தையும் எங்களால் பார்க்க முடிந்தது.

17 கர்த்தர் எனக்கும் உதவினார்!
    கர்த்தர் மேலிருந்து கீழே வந்தார். கர்த்தர் என்னை துன்பத்திலிருந்துக் காப்பாற்றினார்.
18 என் பகைவர்கள் என்னைவிட பலமானவர்கள்.
    அவர்கள் என்னை வெறுத்தார்கள்.
என் பகைவர்கள் என்னை வெல்லக் கூடியவர்கள்!
    எனவே தேவன் தாமே என்னை பாதுகாத்தார்.
19 நான் தொல்லையில் இருந்தேன்.
    என் பகைவர்கள் என்னை தாக்கினார்கள். ஆனால் எனக்கு உதவிச்செய்ய கர்த்தர் இருந்தார்!
20 கர்த்தர் என்மேல் பிரியமாயிருக்கிறார்.
எனவே என்னைக் காத்தார்.
    பாதுகாப்பான இடத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்.
21 கர்த்தர் எனக்கான வெகுமதியை எனக்குத் தருவார்.
    ஏனெனில் நான் சரியானவற்றையே செய்தேன்.
நான் தவறிழைக்கவில்லை.
    எனவே அவர் எனக்கு நல்லதைச் செய்வார்.
22 ஏனென்றால் நான் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தேன்!
    எனது தேவனுக்கு எதிரான பாவத்தைச் செய்யவில்லை.
23 நான் கர்த்தருடைய தீர்மானங்களை நினைவில் வைத்திருந்தேன்,
    அவரது சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்தேன்!
24 நான் பரிசுத்தமானவனாகவும் களங்கமற்றவனாகவும் அவர் முன்னிலையில் இருந்தேன்.
25 எனவே கர்த்தர் எனக்கு வெகுமதியைத் தருவார்!
    ஏனெனில் சரியானதையே நான் செய்தேன்!
அவர் எதிர்பார்ப்பதையே நான் செய்கிறேன்.
    நான் தவறு செய்யவில்லை.
எனவே அவர் எனக்கு நலமானதைச் செய்வார்.

26 ஒருவன் உண்மையிலேயே உம்மை விரும்பினால் அவனுக்கு உண்மையான அன்பை நீர் காட்டுவீர்.
    ஒருவன் உம்மிடம் உண்மையாக இருந்தால் நீர் அவனிடம் உண்மையாக இருப்பீர்.
27 கர்த்தாவே, யார் நல்லவராகவும் பரிசுத்தமானவராகவும் இருக்கிறார்களோ, அவர்களுக்கு நீர் நல்லவராகவும், பரிசுத்தமானவராகவும் இருக்கிறீர்.
    உம்மிடம் மாறுபாடு உள்ளவர்களுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் நடந்துகொள்வீர்.
28 கர்த்தாவே, சிறுமைப்பட்ட ஜனங்களுக்கு உதவுகிறீர்.
    மேட்டிமையானவர்களை நாணமுற வைக்கிறீர்.
29 கர்த்தாவே, நீர் என்னுடைய விளக்கு.
    கர்த்தர் என்னைச் சுற்றியுள்ள இருளைப் போக்கி ஒளி தருகிறார்!
30 கர்த்தாவே, உம்முடைய உதவியால் நான் வீரர்களுடன் பாயமுடியும்.
    தேவனுடைய உதவியால் பகைவர்களின் சுவர்களில் என்னால் ஏறமுடியும்.

31 தேவனுடைய ஆற்றல் முழுமையானது.
    கர்த்தருடைய சொல் சோதித்துப்பார்க்கப்பட்டது.
    அவரை நம்புகிறவர்களை அவர் பாதுகாக்கிறார்.
32 கர்த்தரைத் தவிர வேறு தேவன் கிடையாது.
    நமது தேவனைத் தவிர வேறு கன்மலை இல்லை.
33 தேவன் என் அரண்.
    அவர் தூயவர்களைச் சரியாக வாழவைக்கிறார்.
34 தேவன் நான் ஒரு மானைப்போல வேகமாக ஓடும்படி செய்கிறார்!
    உயரமான இடங்களில் நான் நிலையாக நிற்கும்படி செய்கிறார்.
35 தேவன் என்னைப் போருக்குப் பயிற்சி தருகிறார்.
    அதனால் என் கைகள் சக்தி வாய்ந்த அம்புகளைச் செலுத்த முடியும்.

36 தேவனே, நீர் என்னைப் பாதுகாத்தீர்.
    எனக்கு வெற்றி அளித்தீர்.
என் பகைவரை நான் வெல்ல உதவினீர்.
37 என் கால்களையும் மூட்டுகளையும் பலப்படுத்தினீர்.
    எனவே நான் தடுமாறாமல் வேகமாக நடக்க முடியும்.
38 நான் பகைவர்களை விரட்ட வேண்டும்.
    அவர்களை இறுதியில் அழிக்கும்வரை!
அவர்களை முற்றிலும் அழிக்கும்வரை நான் திரும்பி வரமாட்டேன்.
39 என் பகைவர்களைத் தோற்கடித்தேன்.
    அவர்களை வென்றேன்!
அவர்கள் மீண்டும் எழமாட்டார்கள்.
    ஆம், என் பகைவர்கள் என் பாதத்தில் விழுந்தார்கள்.

40 தேவனே நீர் என்னை போரில் வலிமையுடையவன் ஆக்கினீர்.
    என் பகைவர்கள் என் முன்னே வந்து விழும்படி செய்தீர்.
41 என் பகைவர்களைத் தலைக்குனிய வைப்பதில் நீர் உதவினீர்,
    என் பகைவர்களின் கழுத்தை வெட்டும்படியாக அவர்கள் கழுத்தை என் முன் ஒப்புவித்தீர்!
42 என் பகைவர்கள் உதவிக்கு ஆள் தேடினார்கள்.
    ஆனால் யாரும் அவர்கள் உதவிக்கு வரவில்லை.
அவர்கள் கர்த்தரிடம் கூட கேட்டார்கள்.
    ஆனால் அவர் அவர்களுக்குப் பதில் அளிக்கவில்லை.
43 என் பகைவர்களைத் துண்டு துண்டாக்கினேன்.
    அவர்கள் நிலத்தின் மீது புழுதியானார்கள்.
என் பகைவர்களை நான் சிதறடித்தேன்.
    அவர்கள் மீது தெருப்புழுதியென நினைத்து நடந்தேன்.

44 நீர் எனக்கு எதிராக போரிட்டவரிடமிருந்து என்னைக் காத்தீர்.
    நீர் அந்தத் தேசங்களை ஆள்பவனாக என்னை ஆக்கினீர்.
    எனக்குத் தெரியாதவர்கள் இப்போது எனக்குப் பணி செய்கிறார்கள்!
45 பிற தேசத்தவர் எனக்கு கீழ்ப்படிகின்றார்கள்!
    என்னுடைய கட்டளையைக் கேட்கும்போது விரைந்து பணிவிடை செய்கிறார்கள், அயல் நாட்டவர்கள் எனக்குப் பயப்படுகிறார்கள்!
46 அந்த அயல்நாட்டினர் பயத்தால் நடுங்குகிறார்கள்.
    பயந்துகொண்டே அவர்களின் மறைவிடங்களிலிருந்து வெளியில் வருகிறார்கள்.

47 கர்த்தர் உயிரோடிருக்கிறார்.
    எனது கன்மலையான அவரைத் துதிப்பேன்!
தேவன் உயர்ந்தவர்!
    என்னைப் பாதுகாக்கும் ஒரு கன்மலை அவர்.
48 என் பகைவர்களை எனக்காகத் தண்டிக்கும் தேவன் அவர்.
    ஜனங்களை என் ஆட்சியின் கீழ் அவர் வைக்கிறார்.
49 தேவனே, என் பகைவரிடமிருந்து என்னைக் காத்தீர்!

என்னை எதிர்த்தவர்களைத் தோற்றோடச் செய்தீர்.
    கொடியவர்களிடமிருந்து என்னைப் பாதுகாத்தீர்!
50 கர்த்தாவே, ஆகையால் எல்லா தேசங்களும் அறியும்படி நாம் உம்மைத் துதிப்பேன்.
    எனவே உமது பேரில் நான் பாடல்கள் பாடுகிறேன்.

51 கர்த்தர், தன் அரசன் போரில் வெல்லும்படி செய்கிறார்!
    கர்த்தர் தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசனுக்கு உண்மையான அன்பைக் காட்டுகிறார்.
    அவர் தாவீதுக்கும் அவன் சந்ததிகளுக்கும் எப்போதும் உண்மையாக இருப்பார்!

தாவீதின் கடைசி வார்த்தைகள்

23 இவையே தாவீதின் கடைசி வார்த்தைகள்:

“இச்செய்தி ஈசாயின் மகன் தாவீதினுடையது.
    தேவனால் உயர்த்தப்பட்ட மனிதனுடையது.
யாக்கோபின் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசன்,
    இஸ்ரவேலின் இனியப் பாடகன்.
கர்த்தருடைய ஆவி என் மூலமாகப் பேசினார்.
    என் நாவில் அவரது வார்த்தைகள் இருந்தன.
இஸ்ரவேலின் தேவன் பேசினார்.
    இஸ்ரவேலின் கன்மலையானவர் என்னிடம்,
‘நேர்மையாய் ஆளும் மனிதன்,
    தேவனை மதித்து ஆளும் மனிதன்,
உதயகால ஒளியைப் போன்றிருப்பான்:
    மேகங்கள் அற்ற அதிகாலையைப்போல இருப்பான்.
மழையைத் தொடர்ந்து தோன்றும் வெளிச்சத்தைப் போன்றிருப்பான்.
    அம்மழை நிலத்திலிருந்து பசும்புல்லை எழச்செய்யும்’ என்று சொன்னார்.

“கர்த்தர் என் குடும்பத்தை பலமுள்ளதாகவும் பாதுகாப்புள்ளதாகவும் மாற்றினார்.
    தேவன் என்னோடு ஒரு நித்திய உடன்படிக்கையைச் செய்தார்!
எல்லா வழிகளிலும் இந்த உடன்படிக்கை
    நல்லதே என்று தேவன் உறுதி செய்தார்.
உறுதியாக அவர் எனக்கு எல்லா வெற்றியையும் தருவார்.
    எனக்கு வேண்டிய எல்லாவற்றையும் அவர் தருவார்.

“ஆனால் தீயோர் முட்களைப் போன்றவர்கள்.
    ஜனங்கள் முட்களை வைத்திருப்பதில்லை.
    அவர்கள் அவற்றை வீசிவிடுவார்கள்.
ஒருவன் அவற்றைத் தொட்டால்
    அவை மரத்தாலும் வெண்கலத்தாலுமான ஈட்டியால் குத்துவது போலிருக்கும்.
ஆம், அம்மக்கள் முட்களைப் போன்றவர்கள்.
    அவர்கள் தீயில் வீசப்படுவார்கள்.
    அவர்கள் முற்றிலும் எரிக்கப்படுவார்கள்!”

மூன்று புகழ்வாய்ந்த வீரர்கள்

இவை தாவீதின் பலம்பொருந்திய வீரர்களின் பெயர்கள்:

தேர்ப்படை அதிகாரிகளின் தலைவன் தக்கெமோனியின் மகனாகிய யோசேப்பாசெபெத். அவன் அதீனோஏஸ்னி எனவும் அழைக்கப்பட்டான். யோசேப்பாசெபெத் 800 பேரை ஒரே நேரத்தில் கொன்றவன்.

இவனுக்குப் பின் அகோயின் மகனாகிய தோதோவின் மகன் எலெயாசார் குறிப்பிடத்தக்கவன். பெலிஸ்தரை எதிர்த்தபோது தாவீதோடிருந்த மூன்று பெரும் வீரர்களில் எலெயாசாரும் ஒருவன். அவர்கள் போருக்கு ஓரிடத்தில் குழுமியிருந்தனர். ஆனால் இஸ்ரவேல் வீரர்கள் ஓடிப்போய்விட்டனர். 10 மிகவும் சோர்ந்துபோகும்வரைக்கும் எலெயாசார் பெலிஸ்தரோடு போரிட்டான். ஆனால் அவன் வாளை இறுகப் பிடித்துக்கொண்டு போர் செய்வதைத் தொடர்ந்தான். கர்த்தர் அன்று இஸ்ரவேலருக்குப் பெரும் வெற்றியைக் கொடுத்தார். எலெயாசார் போரில் வென்ற பிறகு பிற வீரர்கள் திரும்பி வந்தனர். மரித்த பகைவரிடமிருந்து பொருட்களைக் கொள்ளையிட அவர்கள் வந்தனர்.

11 இவனுக்குப் பிறகு சொல்லத்தக்கவன் ஆராரிலுள்ள ஆகேயின் மகன் சம்மா. பெலிஸ்தர் போரிட ஒன்றாகத் திரண்டு வந்தனர். சிறு பயிறு நிரம்பிய களத்தில் அவர்கள் போர் செய்தனர். பெலிஸ்தரிடமிருந்து வீரர்கள் ஓடிப்போய்விட்டனர். 12 ஆனால் சம்மா போர்களத்தின் நடுவில் நின்று தாங்கிக்கொண்டான். அவன் பெலிஸ்தரை வென்றான். அன்று கர்த்தர் இஸ்ரவேலுக்குப் பெரும் வெற்றியைக் கொடுத்தார்.

மூன்று பெரும் வீரர்கள்

13 ஒரு முறை, தாவீது அதுல்லாம் குகையில் இருந்தான். பெலிஸ்தரின் படை ரெப்பாயீம் பள்ளத்தாக்கில் இருந்தது. முப்பது பெரும் வீரர்களில் [a] மூன்று பேர் நிலத்தில் தவழ்ந்தவாறே சென்று தாவீது இருக்குமிடத்தை அடைந்தனர்.

14 மற்றொரு முறை தாவீது அரணுக்குள் பாதுகாப்பான இடத்தில் இருந்தான். பெலிஸ்திய வீரர்களின் ஒரு கூட்டத்தினர் பெத்லேகேமில் இருந்தனர். 15 தாவீது தனது சொந்த ஊரின் தண்ணீரைப் பருகும் தாகங்கொண்டிருந்தான். தாவீது, “பெத்லகேமின் நகர வாயிலுக்கு அருகேயுள்ள கிணற்றிலிருந்து யாரேனும் எனக்குக் கொஞ்சம் தண்ணீர் தருவார்களா என்று விரும்புகிறேன்!” என்றான். தாவீதுக்கு உண்மையில் அது தேவைப்படவில்லை. வெறுமனே அவன் சொல்லிக்கொண்டிருந்தான்.

16 ஆனால் அந்த மூன்று பெரும் வீரர்களும் பெலிஸ்தரின் படைக்குள் புகுந்து சென்றனர். பெத்லகேமின் நகரவாயிலுக்கு அருகேயுள்ள கிணற்றிலிருந்து கொஞ்சம் தண்ணீர் எடுத்து வந்தனர். அம்முப்பெரும் வீரர்களும் அந்த தண்ணீரை தாவீதிடம் கொண்டு வந்தனர். ஆனால் தாவீது அதைக் குடிக்க மறுத்தான். கர்த்தருக்குக் காணிக்கையாக அதை நிலத்தில் ஊற்றிவிட்டான். 17 தாவீது, “கர்த்தாவே, நான் இந்த தண்ணீரைப் பருகமுடியாது. எனக்காக தங்கள் உயிரைப் பணயம் வைத்துச் சென்ற மனிதரின் இரத்தத்தைக் குடிப்பதற்கு அது சமமாகும்” என்றான். இதனாலேயே தாவீது தண்ணீரைப் பருகவில்லை. இதைப்போன்ற பல துணிவான காரியங்களை முப்பெரும் வீரர்களும் செய்தார்கள்.

மற்ற தைரியமான வீரர்கள்

18 அபிசாயி யோவாபின் சகோதரனும் செருயாவின் மகனும் ஆவான். முப்பெரும் வீரர்களின் தலைவன், 300 வீரர்களைத் தனது ஈட்டியால் கொன்றவன் இந்த அபிசாயி. 19 இவன் முப்பெரும் வீரர்களைப் போன்ற புகழ் பெற்றவன். அவன் அவர்களில் ஒருவனாக இல்லாதிருந்தும், அவர்களுக்குத் தலைவனாக இருந்தான்.

20 பின்பு யோய்தாவின் மகன் பெனாயா இருந்தான். இவன் வலிமைக்கொண்ட ஒருவனின் மகன். அவன் கப்செயேல் ஊரான். பெனாயா பல வீரச் செயல்கள் புரிந்தவன். மோவாபிலுள்ள ஏரியேலின் இரண்டு மகன்களை பெனாயா கொன்றான். ஒரு நாள் பனிபெய்துக்கொண்டிருக்கையில் பெனாயா நிலத்திலிருந்த ஒரு குழியில் இறங்கிச் சென்று ஒரு சிங்கத்தைக் கொன்றான். 21 பெனாயா ஒரு மிகப் பெரிய எகிப்திய வீரனையும் கொன்றான். எகிப்தியனின் கையில் ஒரு ஈட்டி இருந்தது. பெனாயா கையில் ஒரு தடி மட்டுமே இருந்தது. ஆனால் பெனாயா எகிப்தியன் கையிலிருந்த ஈட்டியைப் பறித்து எடுத்தான். எகிப்தியனின் ஈட்டியாலேயே பெனாயா அவனைக் கொன்றான். 22 யோய்தாவின் மகன் பெனாயா அத்தகைய பல துணிவான செயல்களைச் செய்தான். முப்பெரும் வீரர்களைப் போன்று பெனாயா புகழ் பெற்றவன். 23 பெனாயா முப்பெரும் வீரர்களைக் காட்டிலும் மிகவும் புகழ் பெற்றவன். ஆனால் அவன் முப்பெரும் வீரர்களின் குழுவைச் சார்ந்தவன் அல்லன். தாவீது தனது மெய்க்காப்பாளர்களின் தலைவனாக பெனாயாவை நியமித்தான்.

அப்போஸ்தலர் 2

பரிசுத்த ஆவியானவரின் வருகை

பெந்தெகோஸ்தே நாளில் அப்போஸ்தலர் அனைவரும் ஓரிடத்தில் கூடியிருந்தனர். திடீரென வானிலிருந்து ஓசை ஒன்று எழுந்தது. பெருங்காற்று அடித்தாற்போல அது ஒலித்தது. அவர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதையும் அவ்வொலி நிரப்பிற்று. நெருப்புக் கொழுந்து போன்றவற்றை அவர்கள் கண்டனர். அக்கொழுந்துகள் பிரிந்து சென்று அங்கிருந்த ஒவ்வொருவர் மேலும் நின்றன. அவர்கள் எல்லோரும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டார்கள். பல்வேறு மொழிகளில் அவர்கள் பேச ஆரம்பித்தார்கள். இப்படிப்பட்ட வல்லமையை பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குக் கொடுத்துக்கொண்டிருந்தார்.

அக்காலத்தில் எருசலேமில் மிக பக்திமான்களாகிய யூதர்கள் சிலர் தங்கியிருந்தனர். உலகத்தின் எல்லா தேசத்தையும் சார்ந்தவர்களாக இந்த மனிதர்கள் இருந்தனர். ஒலியைக் கேட்டு இம்மனிதர்கள் பெருங்கூட்டமாக அங்கு வந்தனர். அப்போஸ்தலர்கள் பேசிக்கொண்டிருக்கையில் ஒவ்வொரு மனிதனும் தனது சொந்த மொழியில் கேட்டதால் அம்மனிதர்கள் வியப்புற்றனர்.

யூதர்கள் இதனால் ஆச்சரியமடைந்தனர். அப்போஸ்தலர்கள் எவ்வாறு இதைச் செய்ய முடிந்தது என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்கள், “பாருங்கள்! பேசிக்கொண்டிருக்கும் இந்த மனிதர்கள் எல்லோரும் கலிலேயாவைச் சேர்ந்தவர்கள்! ஆனால் நமது மொழிகளில் அவர்கள் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்கிறோம். எப்படி இது இயலும்? நாம் பார்த்தியா, மேதியா, ஏலாம், மெசொபொதாமியா, யூதேயா, கப்பதோகியா, பொந்து, ஆசியா, 10 பிரிகியா, பம்பிலியா, எகிப்து, சிரேனே நகரங்களிற்கு அருகேயுள்ள லிபியா நாட்டுப் பகுதிகள், 11 கிரேத்தா, ரோமிலிருந்து வந்த மக்கள் மற்றும் அரேபியா ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள். நம்மில் சிலர் யூதர்களாகப் பிறந்தவர்கள் மற்றவர்கள் யூதர்களாக மதம் மாறியவர்கள். நாம் வெவ்வேறு நாட்டினர். ஆனால் இவர்கள் நம் மொழிகளில் பேசுவதைக் கேட்கிறோமே! அவர்கள் தேவனைக் குறித்துக் கூறும் மேன்மையான காரியங்களை நம்மெல்லோராலும் புரிந்துகொள்ள முடிகிறதே” என்றார்கள்.

12 மக்கள் அனைவரும் வியப்புற்றவர்களாகவும் குழப்பமடைந்தவர்களாகவும் காணப்பட்டனர். அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி, “என்ன நடந்துகொண்டிருக்கிறது?” என்று வினவினர். 13 பிற மக்கள் அப்போஸ்தலர்களைப் பார்த்துச் சிரித்தனர். அம்மக்கள் அப்போஸ்தலர் மிகுதியான மதுவைப் பருகியிருந்தனர் என நினைத்தனர்.

பேதுரு மக்களிடம் பேசுதல்

14 அப்பொழுது பேதுரு மற்ற அப்போஸ்தலர் பதினொருவரோடும் எழுந்து நின்றான். எல்லா மக்களும் கேட்கும்படியாக உரக்கப் பேசினான். அவன், “எனது யூத சகோதரர்களே, எருசலேமில் வசிக்கும் மக்களே, நான் கூறுவதைக் கவனியுங்கள். நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில கருத்துக்களை உங்களுக்குக் கூறுவேன். கவனமாகக் கேளுங்கள். 15 நீங்கள் நினைக்கிறது போல் இம்மனிதர்கள் மது பருகியிருக்கவில்லை. இப்போது காலை ஒன்பது மணிதான். 16 இங்கு இன்றைக்கு நிகழ்ந்துகொண்டிருப்பதைக் குறித்து யோவேல் என்னும் தீர்க்கதரிசி எழுதியிருக்கிறார். யோவேல் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்:

17 “‘தேவன் கூறுகிறார், கடைசி நாட்களில் நான் எனது ஆவியை எல்லா மக்களுக்கும் அள்ளி வழங்குவேன்.
    ஆண் மக்களும், பெண்மக்களும் தீர்க்கதரிசனம் உரைப்பர்.
உங்கள் இளைஞர் தரிசனம் காண்பார்கள்.
    உங்கள் முதியோர் விசேஷக் கனவுகள் காண்பர்.
18 அந்நேரத்தில் எனது ஆவியை எனது ஊழியர்களாகிய ஆண்களுக்கும் பெண்களுக்கும் கொடுப்பேன்.
    அவர்கள் தீர்க்கதரிசனம் உரைப்பர்.
19 மேலே வானில் வியப்புறும் காட்சிகளைக் காண்பிப்பேன்.
    கீழே பூமியிலும் சான்றுகள் தருவேன்.
    அங்கு இரத்தம், நெருப்பும், புகை மண்டலமும் இருக்கும்.
20 சூரியன் இருளாக மாறும்.
    நிலா இரத்தம் போல் சிவப்பாகும்.
அப்போது கர்த்தருடைய மகத்தான மகிமை மிக்க நாள் வரும்.
21 கர்த்தர் மேல் நம்பிக்கை வைக்கும் ஒவ்வொரு மனிதனும் இரட்சிக்கப்படுவான்.’ (A)

22 “எனது யூத சகோதரர்களே, இந்த வார்த்தைகளைக் கவனியுங்கள். நாசரேத்தின் இயேசு மிகச் சிறப்பான மனிதர். தேவன் இதைத் தெளிவாக உங்களுக்குக் காட்டினார். இயேசுவின் மூலமாக அவர் செய்த வல்லமை மிக்க வியப்பான காரியங்களால் தேவன் இதை நிரூபித்தார். நீங்கள் எல்லோரும் இந்தக் காரியங்களைப் பார்த்தீர்கள். எனவே இது உண்மையென்பது உங்களுக்குத் தெரியும். 23 இயேசு உங்களுக்குக் கொடுக்கப்பட்டார். நீங்கள் அவரைக் கொன்றீர்கள். தீயவர்களின் உதவியோடு இயேசுவைச் சிலுவையில் அறைந்தீர்கள். ஆனால் இவையெல்லாம் நடக்குமென்பதை தேவன் அறிந்திருந்தார். இது தேவனுடைய திட்டமாக இருந்தது. வெகுகாலத்திற்கு முன்னரே தேவன் இந்தத் திட்டத்தை வகுத்திருந்தார். 24 மரணத்தின் வேதனையை இயேசு அனுபவித்தார். ஆனால் தேவன் அவரை விடுவித்தார். தேவன் இயேசுவை மரணத்திலிருந்து எழுப்பினார். மரணம் இயேசுவைத் தொடர்ந்து தன் பிடிக்குள் வைத்திருக்க முடியவில்லை. 25 தாவீது இயேசுவைக் குறித்து இவ்வாறு கூறினான்:

“‘நான் ஆண்டவரை எப்போதும் என்முன் காண்கிறேன்.
    என்னைப் பாதுகாப்பதற்கு எனது வலப்புறத்தே உள்ளார்.
26 எனவே என் உள்ளம் மகிழுகிறது,
    என் வாய் களிப்போடு பேசுகிறது.
ஆம், எனது சரீரமும் கூட நம்பிக்கையால் வாழும்.
27     ஏனெனில் மரணத்தின் இடத்தில் [a] எனது ஆத்துமாவை நீர் விட்டு விடுவதில்லை.
    உமது பரிசுத்தமானவரின் சரீரத்தைக் கல்லறைக்குள் அழுகிவிட நீர் அனுமதிப்பதில்லை.
28 வாழும் வகையை எனக்குப் போதித்தீர்.
    என்னருகே நீர் வந்து அளவற்ற ஆனந்தம் தருவீர்.’ (B)

29 “எனது சகோதரர்களே, நமது முன்னோராகிய தாவீதைக் குறித்து உண்மையாகவே உங்களுக்கு என்னால் சொல்லமுடியும். அவன் இறந்து புதைக்கப்பட்டான். அவன் புதைக்கப்பட்ட இடம் இங்கேயே நம்மிடையே இன்றும் உள்ளது. 30 தாவீது ஒரு தீர்க்கதரிசி. தேவன் கூறிய சில செய்திகளை அவன் அறிந்திருந்தான். தாவீதின் குடும்பத்திலுள்ள ஒருவரை தாவீதைப்போன்று மன்னனாக்குவேன் என்று தேவன் தாவீதுக்கு வாக்குறுதி அளித்திருந்தார். 31 அது நடக்கும் முன்பே தாவீது அதனை அறிந்திருந்தான். எனவேதான் அவரைக் குறித்து தாவீது இவ்வாறு கூறினான்.

“‘அவர் மரணத்தின் இடத்தில் விடப்படவில்லை.
அவர் சரீரம் கல்லறையில் அழுகவில்லை.’ (C)

தாவீது மரணத்தின்று எழும்பும் கிறிஸ்துவைக் குறித்துப் பேசினான். 32 எனவே தாவீதை அல்ல, இயேசுவையே தேவன் மரணத்தினின்று எழுப்பினார். நாங்கள் எல்லோரும் இதற்கு சாட்சிகள். நாங்கள் அவரைக் கண்டோம். 33 இயேசு பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். இப்போது இயேசு தேவனோடு, தேவனுடைய வலது பக்கத்தில் இருக்கிறார். பிதா பரிசுத்தாவியை இயேசுவுக்குக் கொடுத்துள்ளார். பிதா கொடுப்பதாக வாக்குறுதி அளித்தது பரிசுத்த ஆவியேயாகும். எனவே இயேசு அந்த ஆவியை இப்பொழுதுகொடுத்துக்கொண்டிருக்கிறார். இதையே நீங்கள் பார்க்கவும், கேட்கவும் செய்கிறீர்கள். 34-35 தாவீது பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டவரல்ல. பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டவர் இயேசுவே. தாவீது கூறினான்,

“‘தேவன் என் கர்த்தரிடம் சொன்னார்,
உம் எதிரிகள் அனைவரையும் உம்
    அதிகாரத்தின் கீழ் கொண்டு வரும்வரை என் வலதுபுறத்தில் உட்கார்ந்துகொள்ளும்.’ (D)

36 “எனவே எல்லா யூத மனிதர்களும் இதை உண்மையாகத் தெரிந்திருக்க வேண்டும். ஆண்டவராகவும் கிறிஸ்துவாகவும் இருக்கும்படியாக இயேசுவை தேவன் உண்டாக்கினார். அவரே நீங்கள் சிலுவையில் அறைந்த மனிதர்” என்றான்.

37 மக்கள் இதைக் கேட்டபோது அவர்கள் தங்கள் இதயத்தில் மிகவும் வருத்தம் அடைந்தார்கள். அவர்கள் பேதுருவையும் பிற அப்போஸ்தலரையும் நோக்கி, “நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள்.

38 பேதுரு அவர்களை நோக்கி, “நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் இருதயத்தையும் வாழ்க்கையையும் மாற்றி, இயேசு கிறிஸ்துவின் பெயரில் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள். அப்போது தேவன் உங்கள் பாவங்களை மன்னிப்பார். நீங்களும் பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். 39 இந்த வாக்குறுதி உங்களுக்குரியது. அது உங்கள் பிள்ளைகளுக்கும் தொலைவில் வாழ்கின்ற எல்லா மக்களுக்கும் கூட உரியது. ஆண்டவராகிய நமது தேவன் தன்னிடம் அழைக்கிற ஒவ்வொரு மனிதனுக்கும் அது உரியது” என்று கூறினான்.

40 வேறு பல வார்த்தைகளையும் கூறி பேதுரு அவர்களை எச்சரித்தான். அவன் அவர்களை, “இன்று வாழ்கின்ற மக்களின் தீமைகளிலிருந்து உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்” என்று வேண்டினான். 41 பேதுரு கூறியவற்றை ஏற்றுக்கொண்ட அந்த மக்கள் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டனர். அந்த நாளில் விசுவாசிகளின் கூட்டத்தில் சுமார் 3,000 மக்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.

விசுவாசிகளின் ஒருமனம்

42 விசுவாசிகள் தொடர்ந்து ஒன்றாக சந்தித்தனர். அப்போஸ்தலரின் போதனையைக் கற்பதற்குத் தங்கள் நேரத்தைச் செலவிட்டனர். விசுவாசிகள் ஒருவரோடொருவர் பகிர்ந்துகொண்டனர். அவர்கள் ஒருமித்து உண்டு, ஒருமித்து பிரார்த்தனை செய்தார்கள். 43 பல வல்லமை மிக்க, வியப்பான காரியங்களை அப்போஸ்தலர்கள் செய்துகொண்டிருந்தனர். ஒவ்வொருவரும் தேவனை மிகவும் மரியாதையாக உணர்ந்தனர். 44 எல்லா விசுவாசிகளும் ஒருமித்து வசித்தனர். அவர்கள் எல்லாவற்றையும் பகிர்ந்துகொண்டனர். 45 விசுவாசிகள் அவர்களது நிலங்களையும் அவர்களுக்குச் சொந்தமான பொருட்களையும் விற்றனர். பின்னர் பணத்தைப் பங்கிட்டு, தேவைப்பட்ட ஒவ்வொருவருக்கும் அவர்களது தேவைக்கேற்பக் கொடுத்தனர். 46 ஒவ்வொரு நாளும் விசுவாசிகள் தேவாலயத்தில் சந்தித்தனர். அவர்களது குறிக்கோள் ஒன்றாகவே இருந்தது. அவர்களுடைய வீடுகளில் ஒருமித்து உண்டனர். அவர்கள் உணவைப் பங்கிட்டுக்கொள்வதிலும் களிப்புமிக்க உள்ளங்களோடு உண்பதிலும் மகிழ்ச்சியடைந்தனர். 47 விசுவாசிகள் தேவனை வாழ்த்தினர். எல்லா மக்களும் அவர்களை விரும்பினர். ஒவ்வொரு நாளும் அதிகமதிகமான மக்கள் இரட்சிக்கப்பட்டனர். விசுவாசிகளின் கூட்டத்தில் கர்த்தர் அம்மக்களைச் சேர்த்துக்கொண்டிருந்தார்.

சங்கீதம் 122

ஆலயத்திற்குப் போகும்போது பாடும்படி தாவீது அளித்த பாடல்

122 ஜனங்கள், “கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம்” என்று கூறியபோது
    நான் மிகவும் மகிழ்ந்தேன்.
இதோ, நாங்கள் எருசலேமின் வாசல்கள் அருகே நின்றுகொண்டிருக்கிறோம்.
இது புதிய எருசலேம்.
    ஒரே நகரமாக இது மீண்டும் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது.
இங்கே இஸ்ரவேலின் கோத்திரங்கள் போவதுண்டு.
    கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பதற்கு இஸ்ரவேல் ஜனங்கள் அங்கே செல்வார்கள்.
    அவை கர்த்தருக்குரிய கோத்திரங்கள் ஆகும்.
அங்கு அரசர்கள் ஜனங்களை நியாயந்தீர்ப்பதற்குத் தங்கள் சிங்காசனங்களை நிறுவினார்கள்.
    தாவீதின் குடும்பத்து அரசர்கள் அங்குத் தங்கள் சிங்காசனங்களை அமைத்தார்கள்.

எருசலேமின் சமானத்திற்காக ஜெபம் செய்யுங்கள்.
    “உம்மை நேசிக்கும் ஜனங்கள் அங்கு சமாதானத்தைக் காண்பார்கள் என நான் நம்புகிறேன்.
உங்கள் வீடுகளின் உள்ளே சமாதானம் நிலவும் என நான் நம்புகிறேன்.
    உங்கள் பெரிய கட்டிடங்களில் பாதுகாப்பு இருக்கும் என நான் நம்புகிறேன்.”

என் சகோதரர்கள், சுற்றத்தினர் ஆகியோரின் நன்மைக்காக,
    இங்கு சமாதானம் நிலவவேண்டுமென நான் ஜெபிக்கிறேன்.
நமது தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தின் நன்மைக்காக,
    இந்நகரில் நன்மைகள் நிகழ வேண்டுமென நான் ஜெபம் செய்கிறேன்.

நீதிமொழிகள் 16:19-20

19 மற்றவர்களைவிடத் தம்மைச் சிறந்தவர்களாக நினைப்பவர்களோடு செல்வத்தைப் பங்கிட்டு வாழ்வதைவிட பணிவாகவும், ஏழை ஜனங்களோடும் சேர்ந்து வாழ்வது சிறந்ததாகும்.

20 ஜனங்களின் போதனைகளைக் கவனமாகக் கேட்பவன் பயன் அடைவான். கர்த்தர் மேல் நம்பிக்கை வைப்பவன் ஆசீர்வதிக்கப்படுகிறான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center