Print Page Options Listen to Reading
Previous Prev Day Next DayNext

The Daily Audio Bible

This reading plan is provided by Brian Hardin from Daily Audio Bible.
Duration: 731 days

Today's audio is from the NLT. Switch to the NLT to read along with the audio.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
2 சாமுவேல் 20:14-21:22

ஆபேல் பெத்மாக்காவிற்கு சேபா தப்பிக்கிறான்

14 ஆபேல் பெத்மாக்காவை அடையும்வரை வழியில் எல்லா இஸ்ரவேல் கோத்திரங்களையும் பிக்கிரியின் மகனாகிய சேபா கடந்து சென்றான். பேரீமின் ஜனங்களும் சேபாவைப் பின்தொடர்ந்து சென்றனர்.

15 யோவாபும் அவனது ஆட்களும் ஆபேல் பெத்மாக்காவிற்கு வந்தனர். யோவாபின் படை நகரத்தைச் சூழ்ந்தது. நகரத்து மதிலின் மேல் அவர்கள் புழுதி வீசினார்கள். அவர்கள் மதிலில் ஏறுவதற்கு வசதியாக இதைச் செய்தார்கள். யோவாபின் மனிதர் மதில் கீழே விழும்படியாக மதிலின் கற்களை உடைக்க ஆரம்பித்தார்கள்.

16 ஆனால் அந்நகரத்தில் ஒரு புத்திசாலியானப் பெண் இருந்தாள். அவள், “நான் சொல்வதைக் கேளுங்கள்! யோவாபை இங்கு வரும்படி கூறுங்கள். நான் அவனோடு பேசவேண்டும்” என்றாள்.

17 யோவாப் அப்பெண்ணை சந்தித்துப் பேசுவதற்குச் சென்றான். அப்பெண் அவனிடம், “நீர் யோவாபா?” என்று கேட்டாள்.

யோவாப், “ஆம் நானே” என்று பதில் கூறினான்.

அப்போது அப்பெண்மணி, “நான் கூறுவதைக் கேள்” என்றாள்.

யோவாப், “நான் கேட்கிறேன்” என்றான்.

18 அப்போது அப்பெண்மணி, “முன்பு ஜனங்கள் ‘ஆபேலில் யாரேனும் உதவி வேண்டினால் தேவையானது கிடைக்கும்’ என்று சொல்லிக்கொள்வார்கள். 19 நான் இவ்வூரின் சமாதானமான, உண்மையான ஜனங்களுள் ஒருத்தி. இஸ்ரவேலின் ஒரு முக்கிய நகரத்தை நீ அழிக்கப்போகிறாய். கர்த்தருக்குச் சொந்தமான ஒன்றை நீ ஏன் அழிக்க விரும்புகிறாய்?” என்று கேட்டாள்.

20 யோவாப் பதிலாக, “நான் எதையும் அழிக்க விரும்பவில்லை! உங்கள் ஊரை அழிக்க, நான் விரும்பமாட்டேன். 21 ஆனால் மலைநாடாகிய எப்பிராயீமைச் சார்ந்த ஒரு மனிதன் உங்கள் நகரில் இருக்கிறான். அவன் பிக்கிரியின் மகன் சேபா. அவன் தாவீது அரசனை எதிர்க்கிறான். அவனை என்னிடம் கொண்டு வாருங்கள். நான் நகரை ஒன்றும் செய்யமாட்டேன்” என்றான்.

அப்பெண் யோவாபிடம், “சரி அவனது தலை மதிலின் மேலாக உங்களிடம் வீசப்படும்” என்றாள்.

22 அந்நகரின் ஜனங்களிடம் அப்பெண் மிகவும் புத்திசாதுரியத்தோடு பேசினாள். பிக்கிரியின் மகனாகிய சேபாவின் தலையை ஜனங்கள் வெட்டினார்கள். சேபாவின் தலையை மதிலுக்கு மேலாக யோவாபுக்கு அந்த ஜனங்கள் வீசினார்கள்.

ஆகையால் யோவாப் எக்காளம் ஊதினான். படை நகரைவிட்டு நீங்கிச் சென்றது. ஒவ்வொருவரும் தத்தம் கூடாரத்திற்குச் சென்றார்கள். யோவாப் எருசலேமில் அரசனிடம் சென்றான்.

தாவீதின் ஆளுகையின் கீழ் மக்கள்

23 இஸ்ரவேல் படைக்கு யோவாப் தலைவனாக இருந்தான். கிரேத்தியரையும் பிலேத்தியரையும் யோய்தாவின் மகன் பெனாயா வழி நடத்தினான். 24 அதோனிராம் கடும் உழைப்பாளிகளுக்குத் தலைவனானான். அகிலூதின் மகன் யோசபாத் வரலாற்றாசிரியனாக இருந்தான். 25 சேவா செயலாளரானான். சாதோக்கும் அபியத்தாரும் ஆசாரியர்களாக இருந்தார்கள். 26 யயீரியனாகிய ஈரா தாவீதுக்குப் பிரதானியாக [a] இருந்தான்.

சவுலின் குடும்பம் தண்டிக்கப்படுகிறது

21 தாவீது அரசனாக இருந்தபோது ஒரு பஞ்சம் வந்தது. இம்முறை பஞ்சம் மூன்று ஆண்டுகள் நீடித்தது. தாவீது கர்த்தரிடம் ஜெபம் செய்தான். கர்த்தரும் அவனுக்குப் பதில் தந்தார். கர்த்தர், “சவுலும் கொலைக்காரரான அவனது குடும்பத்தாரும் இப்பஞ்சத்திற்குக் காரணமானார்கள். இப்பஞ்சம் சவுல் கிபியோனியரைக் கொன்றதால் வந்ததாகும்” என்றார். (கிபியோனியர் இஸ்ரவேலர் அல்ல. அவர்கள் எமோரியர் குழுவினராகும். இஸ்ரவேலர் கிபியோனியரைத் துன்புறுத்துவதில்லை என்று வாக்களித்திருந்தனர். ஆனால் சவுல் கிபியோனியரைக் கொல்ல முயன்றான். அவன் இஸ்ரவேலர் மீதும் யூதா ஜனங்கள் மீதும் அளவு கடந்த பாசம் வைத்திருந்ததால் இப்படிச் செய்தான்.)

அரசனாகிய தாவீது கிபியோனியரை அழைத்து அவர்கள் எல்லோரிடமும் பேசினான். தாவீது கிபியோனியரிடம், “நான் உங்களுக்கு என்ன செய்யக்கூடும்? இஸ்ரவேலின் பாவத்தைப் போக்குவதற்கு நான் என்ன செய்ய முடியும்? எனவே நீர் கர்த்தருடைய ஜனங்களை ஆசிர்வதிக்கலாம்” என்றான்.

கிபியோனியர் தாவீதிடம், “தாம் செய்த காரியத்திற்கு ஈடாக கொடுப்பதற்கு சவுலின் குடும்பத்தினரிடம் போதிய அளவு வெள்ளியோ, தங்கமோ இல்லை. ஆனால் இஸ்ரவேலரைக் கொல்வதற்கு எங்களுக்கு உரிமை கிடையாது” என்றனர்.

தாவீது, “அப்படியெனில், நான் உங்களுக்காக என்ன செய்யமுடியும்?” என்று கேட்டான்.

அதற்கு கிபியோனியர் அரசன் தாவீதிடம், “எங்களுக்கெதிராக சவுல் திட்டங்கள் தீட்டினான். இஸ்ரவேலில் வாழும் எங்கள் அத்தனைபேரையும் அழிப்பதற்கு அவன் முயன்றான். சவுலின் ஏழு மகன்களையும் எங்களிடம் ஒப்படையுங்கள். சவுல் கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசன். ஆகையால் நாங்கள் கிபியா மலையில் கர்த்தரின் முன்னால் சவுலின் மகன்களைத் தூக்கில் இடுவோம்” என்றார்கள்.

அரசனாகிய தாவீது, “நல்லது, அவர்களை நான் உங்களிடம் ஒப்படைப்பேன்” என்றான். ஆனால் அரசன் யோனத்தானின் மகனாகிய மேவிபோசேத்தைப் பாதுகாத்தான். யோனத்தான் சவுலின் மகன். ஆனால் கர்த்தருடைய பெயரில் யோனத்தானுக்கு தாவீது ஒரு வாக்குறுதி அளித்திருந்தான். [b] ஆகையால் அரசன் மேவிபோசேத்தை அவர்கள் துன்புறுத்தாதபடி பார்த்துக்கொண்டான். சவுலுக்கும் அவன் மனைவி ரிஸ்பாவுக்கும் பிறந்தவர்கள் அர்மோனியும் மேவிபோசேத்தும் [c] ஆவார்கள். சவுலுக்கு மீகாள் என்னும் மகள் இருந்தாள். அவளை மேகோலாவிலுள்ள பர்சிலாவின் மகன் ஆதரியேலுக்கு மணம் புரிந்து வைத்தனர். ஆதரியேலுக்கும் மீகாளுக்கும் பிறந்த ஐந்து மகன்களைத் தாவீது அழைத்தான். இவ்வாறு தாவீது ஏழுபேரைக் கிபியோனியருக்குக் கொடுத்தான். கிபியோனியர் கர்த்தருக்கு முன்பாக அவர்களை கிபியா மலையில் தூக்கிலிட்டனர். ஏழு பேரும் ஒரே சமயத்தில் மடிந்தனர். அறுவடையின் ஆரம்ப நாட்களில் அவ்வாறு அவர்கள் கொல்லப்பட்டனர். இது வசந்தக் காலத்தில் பார்லி அறுப்புக்கு முன் நடந்தது.

தாவீதும் ரிஸ்பாவும்

10 ஆயாவின் மகளான ரிஸ்பாள் துக்கத்திற்கு அறிகுறியான துணியை எடுத்து பாறை மீது வைத்தாள். அந்த ஆடை அறுவடை தொடங்கியக் காலத்திலிருந்து மழை வரும்வரை பாறை மீதே இருந்தது. ரிஸ்பாள் மரித்தவர்களின் உடலை இரவும் பகலும் காத்தாள். காட்டுப் பறவைகள் பகலிலும், காட்டு விலங்குகள் இரவிலும் உடலை நெருங்கி விடாத வண்ணம் கண்காணித்தாள்.

11 ஜனங்கள் தாவீதிடம் சென்று சவுலின் வேலைக் காரியான ரிஸ்பாவின் செயலைப் பற்றிக் கூறினார்கள். 12 பின்பு தாவீது யாபேஸ் கீலேயாத்திலுள்ள ஜனங்களிலிருந்து சவுல் மற்றும் யோனத்தானின் எலும்புகளை எடுத்தனர். (கிலேயாத்திலுள்ள யாபேசின் ஆட்கள் கில்போவாவில் சவுலும் யோனத்தானும் கொல்லப்பட்ட பிறகு இந்த எலும்புகளை எடுத்தார்கள். பெலிஸ்தர்கள் சவுல், மற்றும் யோனத்தானின் உடல்களை பெத்சானிலுள்ள ஒரு சுவரில் தொங்கவிட்டனர். ஆனால் யாபேஸ் கீலேயாத்தின் ஆட்கள் அங்குச்சென்று பொது இடத்திலிருந்து உடல்களைத் திருடினார்கள்.)

13 தாவீது கீலேயாத்திலுள்ள யாபேசிலிருந்து சவுல் மற்றும் யோனத்தானின் எலும்புகளைக் கொண்டு வந்தான். அவர்கள் தூக்கிலிடப்பட்ட ஏழு பேரின் உடல்களையும் கொண்டுவந்தனர். 14 அவர்கள் பென்யமீன் பகுதியில் சவுல் மற்றும் யோனத்தானின் எலும்பைப் புதைத்தனர். அவர்கள் சவுலின் தந்தையாகிய கீசின் கல்லறையில் அவர்களைப் புதைத்தனர். அரசன் சொன்னபடி ஜனங்கள் செய்தனர். ஆகையால் தேவன் அந்த ஜனங்களின் வேண்டுதல்களை ஏற்றுக்கொண்டார்.

பெலிஸ்தரோடு போர்

15 பெலிஸ்தர் இஸ்ரவேலருடன் இன்னொரு போரை ஆரம்பித்தனர். தாவீதும் அவனது ஆட்களும் பெலிஸ்தரோடு போரிடச் சென்றனர். தாவீது சோர்வாகவும் பலவீனமாகவும் இருந்தான். 16 இஸ்பிபெனோப் இராட்சதர்களில் ஒருவன். இஸ்பிபெனோபின் ஈட்டி 71/2 பவுண்டு எடையுள்ளதாக இருந்தது. அவனிடம் புதிய வாள் ஒன்றும் இருந்தது. அவன் தாவீதைக் கொல்ல முயன்றான். 17 ஆனால் செருயாவின் மகனாகிய அபிசாய் பெலிஸ்தனைக் கொன்று தாவீதைக் காப்பாற்றினான்.

பின்பு தாவீதின் ஆட்கள் தாவீதிற்கு சிறப்பான ஒரு வாக்குறுதி அளித்தனர். அவர்கள் தாவீதிடம், “இனி நீங்கள் எங்களோடு சேர்ந்து போருக்கு வர வேண்டாம். அவ்வாறு வந்தால் இஸ்ரவேல் தனது சிறந்த தலைவரை இழக்கக்கூடும்” என்றனர்.

18 பின்பு கோப் என்னுமிடத்தில் பெலிஸ்தரோடு மற்றொரு போர் நடந்தது. ஊசாத்தியனாகிய சீபேக்காய் இன்னொரு இராட்சதனான (ரஃபா குடும்பத்தவனான) சாப் என்பவனைக் கொன்றான்.

19 மீண்டும் பெலிஸ்தருக்கு எதிராக கோப் என்னுமிடத்தில் போர் நடந்தது. யாரெயொர்கிமின் மகனான எல்க்கானான் பென்யமீன் குடும்பத்திலிருந்து வந்தவன். அவன் காத்தியனாகிய (காத் ஊரானாகிய) கோலியாத்தைக் கொன்றான். அவனது ஈட்டி நெய்கிறவர்களின் படைமரம் போன்று பெரியதாக இருந்தது.

20 மற்றொரு போர் காத் என்னுமிடத்தில் நடந்தது. அங்கு மிகப்பெரிய மனிதன் ஒருவன் இருந்தான். அவனுக்கு ஒவ்வொரு கையிலும் ஆறு விரல்களும், ஒவ்வொரு பாதத்திலும் ஆறு விரல்களும் காணப்பட்டன. இவ்வாறு அவனுக்கு மொத்தம் 24 விரல்கள் இருந்தன. இவனும் ரஃபா (இராட்சதக்) குடும்பத்தைச் சார்ந்தவன். 21 அவன் இஸ்ரவேலை சவாலுக்கு அழைத்தான். இஸ்ரவேலரை பார்த்து நகைத்தான். ஆனால் யோனத்தான் அவனைக் கொன்றான். (யோனத்தான் தாவீதின் சகோதரனான சீமேயின் மகன்.)

22 இவ்வாறு மரித்த நான்கு பேரும் காத் ஊரைச் சார்ந்த ரஃபாவின் ஜனங்களாவார்கள். அவர்கள் தாவீதினாலும் அவனது ஆட்களாலும் கொல்லப்பட்டார்கள்.

அப்போஸ்தலர் 1

லூக்காவின் இரண்டாவது புத்தகம்

அன்பான தேயோப்பிலுவே, நான் எழுதிய முதல் புத்தகத்தில் இயேசு செய்தவைகளையும், கற்பித்தவைகளையும் எல்லாம் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். நான் இயேசுவின் வாழ்க்கை முழுவதையும் தொடக்கத்திலிருந்து இறுதியில் அவர் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது வரைக்கும் எழுதியிருந்தேன். இது நடக்கும் முன் இயேசு தான் தேர்ந்தெடுத்த அப்போஸ்தலர்களிடம் பேசினார். பரிசுத்த ஆவியின் வல்லமையால் அப்போஸ்தலர்கள் செய்யவேண்டியவற்றை இயேசு அவர்களுக்குக் கூறினார். இது இயேசுவின் மரணத்திற்குப் பின்னர் நிகழ்ந்தது. ஆனால் அவர் அப்போஸ்தலருக்குத் தான் உயிரோடிருப்பதைக் காட்டினார். வல்லமைமிக்க செயல்கள் பலவற்றைச் செய்து இயேசு இதை நிரூபித்தார். இயேசு மரணத்தினின்று எழுந்த பின்பு 40 நாட்களில் அப்போஸ்தலர்கள் பலமுறை இயேசுவைப் பார்த்தனர். தேவனுடைய இராஜ்யத்தைப்பற்றி இயேசு அப்போஸ்தலர்களிடம் பேசினார். ஒருமுறை இயேசு அவர்களோடு உணவு உட்கொண்டு இருக்கும்போது எருசலேமை விட்டுப் போக வேண்டாமென அவர்களுக்குக் கூறினார். இயேசு, “பிதா உங்களுக்குச் சிலவற்றைக் குறித்து வாக்குறுதி அளித்துள்ளார். இதைக் குறித்து முன்னரே நான் உங்களுக்குக் கூறினேன். இங்கேயே எருசலேமில் இந்த வாக்குறுதியைப் பெறுவதற்காகக் காத்திருங்கள். யோவான் மக்களுக்கு, தண்ணீரால் ஞானஸ்நானம் வழங்கினான். ஆனால் ஒரு சில நாட்களில் நீங்கள் பரிசுத்த ஆவியால் ஞானஸ்நானம் பெறுவீர்கள்” என்று சொன்னார்.

இயேசுவின் பரமேறுதல்

அப்போஸ்தலர்கள் எல்லோரும் ஒருமித்துக் கூடியிருந்தார்கள். அவர்கள் இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நீங்கள் யூதர்களுக்கு அவர்களது இராஜ்யத்தை மீண்டும் கொடுக்கும் காலம் இதுவா?” என்று வினவினார்கள்.

இயேசு அவர்களை நோக்கி “நாட்களையும் நேரத்தையும் பற்றிய முடிவெடுக்கும் அதிகாரம் உடையவர் பிதா ஒருவரே. உங்களால் இந்தக் காரியங்களை அறிந்துகொள்ள முடியாது. ஆனால் பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் வருவார். வரும்போது நீங்கள் வல்லமையைப் பெறுவீர்கள். நீங்கள் எனது சாட்சிகளாக இருப்பீர்கள். மக்களுக்கு என்னைப்பற்றிக் கூறுவீர்கள். முதலில் எருசலேமின் மக்களுக்குக் கூறுவீர்கள். பின் யூதேயா முழுவதும். சமாரியாவிலும், உலகத்தின் எல்லாப் பகுதியிலும் நீங்கள் மக்களுக்குக் கூறுவீர்கள்” என்றார்.

இயேசு அப்போஸ்தலர்களுக்கு இந்தக் காரியங்களைக் குறித்துக் கூறிய பிறகு வானிற்குள்ளாக அவர் மேலே எடுத்துச் செல்லப்பட்டார். அப்போஸ்தலர்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, அவர் மேகத்திற்குள்ளாகச் சென்றார். பின்னர் அவர்களால் அவரைப் பார்க்க முடியவில்லை. 10 இயேசு மேலே போய்க்கொண்டிருந்தார். அப்போஸ்தலர்கள் வானையே நோக்கிக்கொண்டிருந்தனர். திடீரென வெண்ணிற ஆடை அணிந்த இருவர் அவர்களுக்கு அருகே நின்றனர். 11 அவ்விருவரும் அப்போஸ்தலர்களை நோக்கி, “கலிலேயாவிலிருந்து வந்துள்ள மனிதர்களே, ஏன் நீங்கள் வானத்தைப் பார்த்தவாறே நின்றுகொண்டிருக்கிறீர்கள்? இயேசு உங்களிடமிருந்து பரலோகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதை நீங்கள் கண்டீர்கள். நீங்கள் பார்த்தபோது சென்றதைப் போலவே அவர் திரும்பவும் வருவார்” என்று கூறினர்.

புதிய அப்போஸ்தலர்

12 பின்பு ஒலிவ மலையிலிருந்து அப்போஸ்தலர்கள் எருசலேமுக்குத் திரும்பிச் சென்றனர். (இம்மலை எருசலேமிலிருந்து சுமார் ஒன்றரை மைல் தூரத்தில் உள்ளது) 13 அப்போஸ்தலர்கள் நகரத்திற்குள் சென்றனர். அவர்கள் தாங்கள் தங்கியிருந்த இடத்திற்குச் சென்றார்கள். அந்த அறை மாடியிலிருந்தது. பேதுரு, யாக்கோபு, யோவான், அந்திரேயா, பிலிப்பு, தோமா, பர்த்தலொமேயு, மத்தேயு, அல்பேயுவின் மகனாகிய யாக்கோபு, செலோத்தே எனப்படும் சீமோன் மற்றும் யாக்கோபின் மகனாகிய யூதாஸ் ஆகிய அப்போஸ்தலர்கள் அங்கிருந்தனர்.

14 அப்போஸ்தலர்கள் அனைவரும் சேர்ந்திருந்தனர். ஒரே குறிக்கோள் உடையோராக விடாது பிரார்த்தனை செய்துகொண்டேயிருந்தனர். இயேசுவின் தாயாகிய மரியாளும் அவரது சகோதரர்களும் சில பெண்களும் அப்போஸ்தலரோடு கூட இருந்தனர்.

15 சில நாட்களுக்குப் பிறகு விசுவாசிகளாக அவர்கள் ஒன்று கூடினர். (சுமார் 120 பேர் அக்கூட்டத்தில் இருந்தனர்.) பேதுரு எழுந்து நின்று, 16-17 “சகோதரர்களே! வேதவாக்கியங்களில் பரிசுத்த ஆவியானவர் சில காரியங்கள் நடக்கும் என்று தாவீதின் மூலமாகக் கூறினார். நமது கூட்டத்தில் ஒருவனாகிய யூதாஸைக்குறித்து அவன் கூறியுள்ளான். யூதாஸ் நம்மோடு கூட சேவையில் ஈடுபட்டிருந்தான். இயேசுவைச் சிறைபிடிக்க யூதாஸ் மனிதர்களுக்கு வழிகாட்டுவான் என்பதை ஆவியானவர் கூறியிருந்தார்,” என்றான்.

18 (இதைச் செய்வதற்கு யூதாஸிற்குப் பணம் தரப்பட்டது. ஒரு நிலத்தை வாங்குவதற்கு அப்பணம் பயன்படுத்தப்பட்டது. ஆனால் யூதாஸ் தலைகுப்புற வீழ்ந்து அவன் சரீரம் பிளவுண்டது. அவனது குடல் வெளியே சரிந்தது. 19 எருசலேமின் மக்கள் அனைவரும் இதை அறிந்தனர். எனவேதான் அந்நிலத்திற்கு “அக்கெல்தமா” என்று பெயரிட்டனர். அவர்கள் மொழியில் அக்கெல்தமா என்பது “இரத்த நிலம்” எனப் பொருள்படும்.)

20 “சங்கீதத்தின் புத்தகத்தில் யூதாஸைக்குறித்து இவ்வாறு எழுதப்பட்டுள்ளது:

“‘மக்கள் அவனது நிலத்தருகே செல்லலாகாது,
    யாரும் அங்கு வாழலாகாது.’ (A)

மேலும் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது:

‘இன்னொருவன் அவன் பணியைப் பெறட்டும்.’ (B)

21-22 “எனவே இன்னொருவன் நம்மோடு சேர்ந்துகொண்டு இயேசு உயிரோடு எழுந்ததற்கு சாட்சியாக இருக்கட்டும். ஆண்டவராகிய இயேசு நம்மோடு இருந்தபோது எப்போதும் நம்மோடு கூட இருந்த மனிதர்களில் ஒருவனாக அவன் இருத்தல் வேண்டும். யோவான் ஞானஸ்நானம் கொடுக்கத் தொடங்கியதிலிருந்து இயேசு பரலோகத்திற்கு அழைத்துக்கொள்ளப்பட்டது வரைக்கும் நம்மோடு இருந்தவனாக அவன் இருக்க வேண்டும்” என்றான்.

23 அப்போஸ்தலர்கள் கூட்டத்திற்கு முன் இருவரை நிறுத்தினர். ஒருவன் யோசேப்பு பர்சபா என்பவன். அவன் யுஸ்து என அழைக்கப்பட்டான். மற்றவன் மத்தியா என்பவன். 24-25 அப்போஸ்தலர்கள், “ஆண்டவரே, நீர் எல்லா மனிதர்களின் உள்ளங்களையும் அறிந்தவர். இந்த இருவரில் உம் சேவைக்கு நீர் யாரைத் தேர்ந்தெடுக்கிறீர் என்பதை எங்களுக்குக் காட்டும். யூதாஸ் இதனைவிட்டு நீங்கித் தனக்குரிய இடத்திற்குச் சென்றுவிட்டான். ஆண்டவரே, எந்த மனிதன் அப்போஸ்தலனாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதைக் காட்டும்!” என்று பிரார்த்தனை செய்தார்கள். 26 பின்னர் அப்போஸ்தலர்கள் அந்த இருவரில் ஒருவனைத் தேர்ந்தெடுக்க சீட்டுகள் எழுதிப் போட்டனர். அதன்படி ஆண்டவர் விரும்பியவராக மத்தியாவை சீட்டுகள் காட்டின. எனவே அவன் மற்ற பதினொருவரோடும் கூட ஓர் அப்போஸ்தலன் ஆனான்.

சங்கீதம் 121

ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்

121 நான் மலைகளுக்கு நேராகப் பார்க்கிறேன்.
    ஆனால் எனக்கு உதவி உண்மையாகவே எங்கிருந்து வரப்போகிறது?
எனக்கு உதவி பரலோகத்தையும் பூமியையும்
    படைத்த கர்த்தரிடமிருந்து வரும்.
தேவன் உன்னை விழவிடமாட்டார்.
    உன்னைப் பாதுகாப்பவர் தூங்கமாட்டார்.
இஸ்ரவேலின் பாதுகாவலர் தூங்குவதில்லை.
    தேவன் ஒருபோதும் உறங்கார்.
கர்த்தர் உன் பாதுகாவலர்.
    அவரது மிகுந்த வல்லமையால் உன்னைப் பாதுகாக்கிறார்.
பகல் வேளையில் சூரியன் உன்னைத் துன்புறுத்தாது.
    இரவில் சந்திரன் உன்னைத் துன்புறுத்தாது.
எல்லா ஆபத்துக்களிலிருந்தும் கர்த்தர் உன்னைக் காப்பாற்றுவார்.
    கர்த்தர் உன் ஆத்துமாவைக் காப்பாற்றுவார்.
நீ வரும்போதும் போகும்போதும் கர்த்தர் உனக்கு உதவுவார்.
    இப்போதும் என்றென்றும் கர்த்தர் உனக்கு உதவுவார்.

நீதிமொழிகள் 16:18

18 ஒருவன் கர்வம் கொண்டவனாக இருந்தால் அவன் அழிவின் ஆபத்தில் இருக்கிறான். மற்றவர்களைவிடத் தான் சிறந்தவன் என்று நினைப்பவன் தோல்வியின் ஆபத்தில் இருக்கிறான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center