Print Page Options Listen to Reading
Previous Prev Day Next DayNext

The Daily Audio Bible

This reading plan is provided by Brian Hardin from Daily Audio Bible.
Duration: 731 days

Today's audio is from the NIV. Switch to the NIV to read along with the audio.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
2 சாமுவேல் 19:11-20:13

11 தாவீது அரசன் ஆசாரியர்களாகிய சாதோக்குக்கும் அபியத்தாருக்கும் செய்தியனுப்பினர். தாவீது, “யூதாவின் தலைவர்களிடம் பேசுங்கள். அவர்களிடம் கூறுங்கள், ‘தாவீதை தன் வீட்டிற்கு அழைத்து வரும் கடைசி கோத்திரமாக நீங்கள் இருப்பதேன்? பாருங்கள், இஸ்ரவேலர் எல்லோரும் அரசனை மீண்டும் அரண்மனைக்கு அழைத்து வருவதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். 12 நீங்கள் எனது சகோதரர்கள், நீங்கள் என் குடும்பம். அவ்வாறிருக்கையில் அரசனை வீட்டிற்குத் திரும்ப அழைப்பதற்கு நீங்கள் கடைசி கோத்திரமாக இருப்பதேன்?’ என்று சொல்லுங்கள். 13 அமாசாவிடம், ‘நீங்கள் எனது குடும்பத்தின் ஒரு பகுதியினர். யோவாபின் இடத்தில் உங்களைப் படை தலைவன் ஆக்காவிட்டால் தேவன் என்னைத் தண்டிக்கட்டும்’ என்று சொல்லுங்கள்” என்றான்.

14 தாவீது யூதாவின் ஜனங்களின் இருதயங்களைத் தொட்டான், அவர்கள் ஒரே மனிதனைப்போன்று அவன் கூறியதற்குச் சம்மதித்தனர். யூதா ஜனங்கள் அரசனுக்குச் செய்தியனுப்பினார்கள். அவர்கள், “நீங்களும் உங்கள் அதிகாரிகளும் திரும்பி வாருங்கள்” என்றனர்.

15 பின்பு தாவீது அரசன் யோர்தான் நதிக்கு வந்தான். யூதா ஜனங்கள் அரசனைக் காண கில்காலுக்கு வந்தனர். அரசனை யோர்தான் நதியைத் தாண்டி அழைத்துச் செல்வதற்காக அவர்கள் அங்கு வந்தனர்.

சீமேயி தாவீதிடம் தன்னை மன்னிக்கும்படி வேண்டுகிறான்

16 கேராவின் மகனாகிய சீமேயி பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவன். அவன் பகூரிமில் வாழ்ந்தான். தாவீது அரசனைச் சந்திப்பதற்குச் சீமேயி விரைந்தான். யூதாவின் ஜனங்களோடு சீமேயி வந்தான். 17 பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த 1,000 ஆட்களும் சீமேயியோடு வந்தனர். சவுலின் குடும்பத்தைச் சேர்ந்த சீபா என்னும் பணியாளும் வந்தான். சீபா தன் 15 மகன்களையும் 20 பணியாட்களையும் தன்னோடு அழைத்து வந்தான். தாவீது அரசனைச் சந்திப்பதற்கு இவர்கள் எல்லோரும் யோர்தான் நதிக்கு விரைந்தனர்.

18 அரசனின் குடும்பத்தை மீண்டும் யூதாவுக்கு அழைத்து வருவதில் உதவுவதற்காக ஜனங்கள் யோர்தான் நதியைக் கடந்தனர். அரசன் விரும்பியவாறே ஜனங்கள் செயல்பட்டனர். அரசன் நதியைக் கடந்துகொண்டிருக்கும்போது, கேராவின் மகனாகிய சீமேயி அவனைச் சந்திப்பதற்கு வந்தான். அரசனுக்கு முன் சீமேயி தரையில் விழுந்து வணங்கினான். 19 சீமேயி அரசனிடம், “என் ஆண்டவனே, நான் செய்த தவறுகளை மனதில் வைத்துக்கொள்ளாதீர்கள். எனது அரசனாகிய ஆண்டவனே, நீர் எருசலேமை விட்டுப் போனபோது நான் செய்த தீய காரியங்களை நினைவில் வைத்துக்கொள்ளாதீர்கள். 20 நான் பாவம் செய்தேன் என்பதை நீர் அறிவீர். யோசேப்பின் குடும்பத்திலிருந்து வந்து உங்களைச் சந்திக்கிற முதல் மனிதன் நான், எனது ஆண்டவனாகிய அரசனே” என்றான்.

21 ஆனால் செருயாவின் மகனாகிய அபிசாய், “கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசனுக்குத் தீமை நிகழவேண்டுமென்று வேண்டிக்கொண்டதால் நாம் சீமேயியைக் கொல்லவேண்டும்” என்றான்.

22 தாவீது, “செருயாவின் மகன்களே, நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும்? இன்று நீங்கள் என் எதிராளி. ஆனால் இஸ்ரவேலில் ஒருவனும் இன்று கொல்லப்படமாட்டான். இஸ்ரவேலுக்கு நான் அரசன் என்பது இன்று எனக்குத் தெரியும்” என்றான். 23 பிறகு அரசன் சீமேயியை நோக்கி, “நீ மரிக்கமாட்டாய்” என்றான். அரசன் சீமேயியைக் கொல்லப் போவதில்லை என்று சீமேயிக்கு வாக்களித்தான். [a]

மேவிபோசேத் தாவீதைப் பார்க்கப் போகிறான்

24 தாவீது அரசனைக் காண சவுலின் பேரனாகிய மேவிபோசேத் வந்தான். மேவிபோசேத் அரசன் எருசலேமிலிருந்து போனதிலிருந்து அமைதியோடு திரும்பி வரும் வரைக்கும் அவனது கால்களைச் சுத்தம் பண்ணவில்லை. தாடியை சவரம் செய்து கொள்ளவில்லை. அவனது ஆடைகளை வெளுக்கவுமில்லை. 25 மேவிபோசேத் எருசலேமிலிருந்து அரசனைச் சந்திக்க வந்தான். அரசன் மேவிபோசேத்தை நோக்கி, “மேவிபோசேத், நான் எருசலேமிலிருந்து ஓடிப் போனபோது நீ ஏன் என்னோடு வரவில்லை?” என்று கேட்டான்.

26 மேவிபோசேத் பதிலாக, “எனது அரசனாகிய ஆண்டவனே, எனது வேலையாள் (சீபா) என்னை ஏமாற்றிவிட்டான். நான் சீபாவிடம், ‘நான் முடவன் எனவே கழுதையில் ஏற்றி வை. நான் கழுதையின் மேலேறி அரசனோடு போவேன்’ என்றேன். 27 ஆனால் எனது வேலையாள் என்னை ஏமாற்றிவிட்டான். என்னைக் குறித்து தீய செய்திகளை உங்களிடம் சொல்லி இருக்கிறான். தேவதூதனைப் போன்றவன் எனது அரசனாகிய ஆண்டவன் என்பது என் எண்ணம், உங்களுக்கு நல்லதென்று தோன்றுவதைச் செய்யுங்கள். 28 எனது பாட்டனாரின் குடும்பத்தார் எல்லோரையும் நீங்கள் கொன்றிருக்க முடியும். ஆனால் நீங்கள் அதைச் செய்யவில்லை. உங்கள் மேசையில் உண்கிறவர்களோடு என்னையும் வைத்தீர்கள். எனவே எதைக் குறித்தும் அரசனோடு முறையிட எனக்கு உரிமையில்லை” என்றான்.

29 அரசன் மேவிபோசேத்தை நோக்கி, “உனது கஷ்டங்களைக் குறித்து அதிகமாக எதுவும் சொல்லாதே. இதுவே நான் செய்த முடிவு: நீயும் சீபாவும் தேசத்தைப் பிரித்துக் கொள்ளுங்கள்” என்றான்.

30 மேவிபோசேத் அரசனிடம், “நிலம் முழுவதையும் சீபாவே எடுத்துக்கொள்ளட்டும், ஏனெனில் எனது அரசனாகிய ஆண்டவன் சமாதானத்தோடு சொந்த வீட்டிற்கே மீண்டும் வந்து சேர்ந்திருக்கிறீர்கள்! இதுவே எனக்குப் போதும்” என்றான்.

பர்சிலாவைத் தன்னோடு வரும்படியாக தாவீது கேட்கிறான்

31 கீலேயாத்தின் பர்சிலா ரோகிலிமிலிருந்து வந்தான். தாவீது அரசனோடு அவன் யோர்தான் நதிக்கு வந்தான். நதியைக் கடந்து அரசனை அழைத்துச் செல்வதற்காக அவன் அரசனோடு போனான். 32 பர்சிலா மிகவும் வயது முதிர்ந்தவன். அவனுக்கு 80 வயது. மக்னாயீமில் தாவீது தங்கியிருந்தபோது அவனுக்கு உணவும் பிற பொருட்களும் கொடுத்தான். அவன் செல்வந்தனாக இருந்தபடியால் அவனால் இதைச் செய்யமுடிந்தது. 33 தாவீது பர்சிலாவிடம், “என்னோடு நதியைக் கடந்துவா. என்னோடு எருசலேமில் நீ வாழ்ந்தால் நான் உன்னைப் பராமரிப்பேன்” என்றான்.

34 ஆனால் பர்சிலா அரசனிடம், “நான் எவ்வளவு வயது முதிர்ந்தவன் என்பது உனக்குத் தெரியுமா? நான் உன்னோடு எருசலேமுக்குப் போகமுடியும் என நீ நினைக்கிறாயா? 35 எனக்கு 80 வயது! எது நல்லது, எது கெட்டது என்று கூறுவதற்கும் இயலாத முதிர்ந்த வயது. நான் உண்ணும், பருகும் உணவுகளின் சுவையறிய இயலாதவன். பாடுகிற ஆண்களின், பெண்களின் சத்தத்தைக் கேட்கவும் இயலாத அளவிற்கு வயதில் முதிர்ந்தவன். நீ ஏன் என்னைப்பற்றிக் கவலைப்படுகிறாய்? 36 உன்னிடமிருந்து எனக்கு எந்த பரிசும் வேண்டாம். நான் உன்னோடு யோர்தான் நதியைத் தாண்டுவேன். 37 ஆனால் நான் திருப்பிப் போக அனுமதியுங்கள். அப்போது நான் எனது நகரத்தில் மரித்து எனது தந்தை, தாய் ஆகியோரின் கல்லறையில் அடக்கம் செய்யப்படுவேன். கிம்காம் உங்களுக்குப் பணியாளாயிருப்பான். எனது அரசனாகிய ஆண்டவனே, அவன் உங்களோடு வரட்டும். உங்கள் விருப்பப்படியே அவனை நடத்தும்” என்றான்.

38 அரசன் பதிலாக, “கிம்காம் என்னோடு வருவான். உனக்காக நான் அவனிடம் இரக்கம் காட்டுவேன். நான் உனக்காக எதையும் செய்வேன்” என்றான்.

தாவீது வீட்டிற்குப் போகிறான்

39 அரசன் பர்சிலாவை முத்தமிட்டு வாழ்த்தினான். பர்சிலா வீட்டிற்குத் திரும்பிப் போனான். அரசனும் அவனது ஜனங்கள் எல்லோரும் நதியைக் கடந்தனர்.

40 அரசன் யோர்தான் நதியைத் தாண்டி, கில்காலுக்குப் போனான். கிம்காம் அவனோடு சென்றான். யூதா ஜனங்கள் எல்லோரும் இஸ்ரவேலில் பாதிப் பகுதியினரும் தாவீதை நதியைத் தாண்டி அழைத்துச் சென்றனர்.

யூதா மக்களோடு இஸ்ரவேலர் வாதாடுகின்றனர்

41 இஸ்ரவேலர் எல்லோரும் அரசனிடம் வந்தனர். அவர்கள் அரசனைப் பார்த்து, “ஏன் எங்கள் சகோதரராகிய யூதா ஜனங்கள் உங்களைத் திருடிச் சென்று, இப்போது உங்களையும் உங்கள் குடும்பத்தையும், உங்கள் ஆட்களோடு யோர்தான் ஆற்றைத் தாண்டி அழைத்து வந்திருக்கின்றனர்!” என்றார்கள்.

42 யூதாவின் ஜனங்கள் எல்லோரும் இஸ்ரவேலருக்குப் பதிலாக, “ஏனெனில் அரசன் எங்களுக்கு நெருங்கிய உறவினர் என்பதே அதன் காரணம். இந்த விஷயம் குறித்து நீங்கள் ஏன் கோபப்படுகிறீர்கள்? நாங்கள் ஒன்றும் அரசனின் செலவில் சாப்பிடவில்லை. அரசன் எங்களுக்கு எந்தப் பரிசும் தரவில்லை” என்றார்கள்.

43 இஸ்ரவேலர் பதிலாக, “தாவீதிடம் எங்களுக்குப் பத்துப் பங்குகள் உள்ளன. எனவே உங்களைக் காட்டிலும் தாவீதிடம் எங்களுக்கு அதிக உரிமை உண்டு. ஆனால் நீங்கள் எங்களை மதிக்கவில்லை. நாங்கள் தாம் அரசரை அழைத்து வருவதைக்குறித்து முதலில் எடுத்துரைத்தோம்” என்றார்கள்.

ஆனால் யூதா ஜனங்கள் இஸ்ரவேலரிடம் கடுமையாக நடந்துக்கொண்டனர். யூத ஜனங்களுடைய வார்த்தைள் இஸ்ரவேல் ஜனங்களுடைய வார்த்தைகளைக்காட்டிலும் மிகவும் கடுமையாக இருந்தது.

தாவீதுக்கு எதிராக இஸ்ரவேலரை சேபா வழிநடத்துகிறான்

20 பிக்கிரியின் மகனாகிய சேபா என்னும் மனிதன் அந்த இடத்தில் இருந்தான். சேபா எல்லோருக்கும் தொல்லை விளைவிக்கும் பயனற்ற மனிதன். சேபா பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவன். ஜனங்களைக் கூட்டுவதற்காக அவன் ஒரு எக்காளம் ஊதினான். பின்பு அவன்,

“நமக்கு தாவீதிடம் பங்கெதுவும் இல்லை.
    ஈசாயின் மகனிடத்தில் நமக்கு எந்தப் பாகமும் இல்லை.
இஸ்ரவேலே, நாம் நமது கூடாரங்களுக்குத் திரும்புவோம்” என்றான்.

எனவே இஸ்ரவேலர் எல்லோரும் தாவீதை விட்டு பிக்கிரியின் மகனாகிய சேபாவைப் பின்பற்றினார்கள். ஆனால் யூதா ஜனங்கள் யோர்தான் ஆற்றிலிருந்து எருசலேம்வரைக்கும் வருகிற வழியில் எல்லாம் அவர்களுடைய அரசனோடு தங்கியிருந்தனர்.

தாவீது எருசலேமிலுள்ள தன் வீட்டிற்குச் சென்றான். தாவீது தன் 10 மனைவியரை வீட்டைக் கவனித்துக்கொள்வதற்காக விட்டுச் சென்றிருந்தான். தாவீது அவர்களை ஒரு தனித்த வீட்டில் வைத்தான்.

அந்த வீட்டைச் சுற்றிலும் காவலாளரை நியமித்தான். அவர்கள் மரிக்கும்வரைக்கும் அந்த வீட்டில் தங்கியிருந்தார்கள். தாவீது அப்பெண்களைப் பராமரித்து அவர்களுக்கு உணவளித்தான். ஆனால் அவர்களோடு பாலின உறவுக்கொள்ளவில்லை. அவர்கள் மரிக்கும்வரைக்கும் விதவைகளைப்போல் வாழ்ந்தார்கள்.

அரசன் அமாசாவை நோக்கி, “இன்னும் மூன்று நாட்களுக்குள் யூதா ஜனங்கள் என்னை வந்து சந்திக்க வேண்டுமென அவர்களுக்குக் கூறு, நீயும் இங்கிருக்க வேண்டும்” என்றான்.

உடனே யூதா ஜனங்களை அழைத்து வருவதற்காக அமாசா சென்றான். ஆனால் அரசன் கொடுத்த கால அவகாசத்தைக் காட்டிலும் அதிகமாக எடுத்துக் கொண்டான்.

சேபாவைக் கொல்லும்படி அபிசாயிடம் தாவீது கூறுகிறான்

தாவீது அபிசாயிடம், “பிக்கிரியின் மகனாகிய சேபா அப்சலோமைக் காட்டிலும் அதிகம் ஆபத்தானவன். எனவே என் அதிகாரிகளை அழைத்துச் சென்று சேபாவைத் துரத்து, மதிலுள்ள நகரங்களுக்குள் அவன் நுழையும்முன் விரைந்து செல். பாதுகாப்பான நகரங்களுக்குள் சேபா சென்றுவிட்டால் பிறகு அவனைப் பிடிக்க முடியாது” என்றான்.

எனவே யோவாப் பிக்கிரியின் மகனாகிய சேபாவைத் துரத்துவதற்காக எருசலேமை விட்டுச் சென்றான். கிரேத்தியர் பிலேத்தியர் மற்ற வீரர்கள் ஆகியோரோடுகூட யோவாப் தன் ஆட்களையும் அழைத்துக் கொண்டான்.

யோவாப் அமாசாவைக் கொல்கிறான்

கிபியோனிலுள்ள பெரும்பாறை அருகே யோவாபும் அவனது படையும் வந்தபோது, அவர்களை சந்திப்பதற்கு அமாசா அங்கு வந்தான். யோவாப் சீருடை அணிந்திருந்தான். யோவாப் கட்டியிருந்த கச்சைக்குள் உறையில் தன் வாளை வைத்திருந்தான். யோவாப் அமாசாவை சந்திக்க நடந்து சென்றபோது யோவாபின் வாள் உறையிலிருந்து வெளியே விழுந்தது. யோவாப் வாளை எடுத்துக் கையில் ஏந்தியிருந்தான். யோவாப் அமாசாவை நோக்கி, “சகோதரனே, எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டான்.

பின்பு யோவாப் தனது வலது கையை நீட்டி அமாசாவின் தாடியைப் பிடித்து முத்தமிடுவதுபோல் இழுத்தான். 10 யோவாபின் இடது கையிலிருந்த வாளை அமாசா கவனிக்கவில்லை. ஆனால் உடனே யோவாப் தன் வாளால் அமாசாவை வயிற்றில் குத்தினான். அமாசாவின் குடல் நிலத்தில் சரிந்தது. யோவாப் மீண்டும் அமாசாவைக் குத்த வேண்டியிருக்கவில்லை. அவன் மரித்துப் போயிருந்தான்.

தாவீதின் ஆட்கள் சேபாவைத் தேடிக் கொண்டிருக்கின்றனர்

பின்பு யோவாபும், அவனது சசோதரன் அபிசாயியும் பிக்கிரியின் மகனாகிய சேபாவைத் துரத்தத் தொடங்கினர். 11 யோவாபின் இளம் வீரர்களில் ஒருவன் அமாசாவின் உடல் அருகே நின்றான். இந்த இளம் வீரன், “யோவாபையும் தாவீதையும் ஆதரிக்கின்ற வீரர்களே, நாம் யோவாபைப் பின் தொடர்வோம்” என்றான். 12 பாதையின் நடுவே அமாசாவின் உடல் அவனது குருதியினூடே கிடந்தது. எல்லா ஜனங்களும் அதைப் பார்ப்பதற்கு நின்றதை அந்த இளம் வீரன் கவனித்தான். எனவே அவன் அந்த உடலைப் பாதையிலிருந்து வயலுக்குள் புரட்டித் தள்ளினான். பின் உடலை ஒரு துணியால் மூடினான். 13 அமாசாவின் உடல் பாதையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட பிறகு, ஜனங்கள் அதைத் தாண்டிச்சென்று யோவாபைப் பின்தொடர்ந்தனர். அவர்கள் யோவாபோடு சேர்ந்து பிக்கிரியின் மகனாகிய சேபாவைத் துரத்தினார்கள்.

யோவான் 21

ஏழு சீஷர்களுக்கு இயேசு காட்சி அளித்தல்

21 இதற்குப் பின்பு இயேசு மறுபடியும் தன்னை சீஷர்களுக்குக் காண்பித்தார். அது திபேரியா (கலிலேயா) கடற்கரையில் நிகழ்ந்தது. அதைப்பற்றிய விபரமாவது: அங்கே சில சீஷர்கள் கூடியிருந்தனர். அவர்களில் சீமோன் பேதுரு, தோமா, செபெதேயுவின் இரு குமாரர்கள், கலிலேயா நாட்டின் கானா ஊரானாகிய நாத்தான்வேல், மேலும் இரண்டு சீஷர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். சீமோன் பேதுரு மற்றவர்களிடம், “நான் மீன் பிடிக்கப் போகிறேன்” என்று சொன்னார்.

அதற்கு மற்ற சீஷர்களும், “நாங்களும் உம்மோடு வருகிறோம்” என்றனர். எனவே அனைவரும் படகில் ஏறிச்சென்றனர். அன்று இரவு அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை.

மறுநாள் அதிகாலையில் இயேசு கரையில் நின்றிருந்தார். ஆனால் சீஷர்கள் அவரை இயேசு என்று அறிந்துகொள்ளவில்லை. பிறகு இயேசு தன் சீஷர்களிடம், “நண்பர்களே! நீங்கள் ஏதாவது மீன் பிடித்தீர்களா?” என்று கேட்டார்.

அதற்கு “இல்லை” என்று சீஷர்கள் சொன்னார்கள்.

இயேசு அவர்களிடம், “நீங்கள் உங்கள் வலைகளைப் படகுக்கு வலது புறமாகப் போடுங்கள். அப்பொழுது நீங்கள் மீன்களைப் பிடிப்பீர்கள்” என்றார். அதன்படி சீஷர்களும் செய்தனர். அவர்கள் வலையைப் படகுக்குள் இழுக்க முடியாத அளவுக்கு ஏராளமான மீன்களைப் பிடித்தனர்.

எனவே இயேசுவிடம் அன்பாயிருந்த சீஷன் பேதுருவிடம் “இவர் ஆண்டவர்” என்றார். “அவர் இயேசு” என்று சொல்லக் கேட்டவுடன் பேதுரு, இதுவரை மூடப்படாத தன் சரீரத்தை ஆடையால் மூடினான். பிறகு அவன் கடலுக்குள் குதித்துவிட்டான். மற்ற சீஷர்கள் படகின் மூலம் கரைக்குச் சென்றனர். அவர்கள் மீன் நிறைந்த வலையை இழுத்தனர். அவர்கள் கரையிலிருந்து வெகு தூரத்தில் கடலுக்குள் இருக்கவில்லை. ஏறக்குறைய 200 முழம் தூரத்துக்குள்ளேயே இருந்தனர். அவர்கள் படகிலிருந்து இறங்கிக் கரைக்கு வந்தனர். அங்கே கரி அடுப்பு பற்றவைக்கப்பட்டிருப்பதைக் கண்டனர். அதில் மீன்களும் அப்பமும் சுடப்பட்டிருந்தன. 10 இயேசு அவர்களிடம், “நீங்கள் இப்பொழுது பிடித்த மீன்களில் சிலவற்றைக் கொண்டு வாருங்கள்” என்றார்.

11 சீமோன் பேதுரு படகில் ஏறி வலையைக் கரைக்கு இழுத்தான். அது பெரிய மீன்களால் நிறைந்திருந்தது. அதில் 153 மீன்கள் இருந்தன. மீன்கள் மிகவும் கனமுடையனவாய் இருந்தன. எனினும் வலை கிழியாமல் இருந்தது. 12 இயேசு அவர்களிடம் “வாருங்கள், சாப்பிடுங்கள்” என்றார். அவர்களில் எவரும் “நீங்கள் யார்?” என்று தைரியமாகக் கேட்கவில்லை. அவர்தான் இயேசு கிறிஸ்து என்று அவர்கள் தெரிந்திருந்தனர். 13 இயேசு உணவின் அருகில் சென்றார். அவர் அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார். அத்துடன் மீனையும் எடுத்து அவர்களுக்குக் கொடுத்தார்.

14 அவர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்த பிறகு, இவ்வாறு மூன்றாவது முறையாகத் தம் சீஷர்களுக்குக் காட்சி தந்தார்.

பேதுருவிடம் இயேசு பேசுதல்

15 உண்டு முடித்ததும் இயேசு பேதுருவிடம், “யோவானின் மகனான சீமோனே! மற்றவர்கள் நேசிப்பதைவிட என்னை நீ மிகுதியாக நேசிக்கிறாயா?” என்று கேட்டார்.

அதற்குப் பேதுரு, “ஆம் ஆண்டவரே, நான் நேசிக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும்” என்றான்.

பிறகு இயேசு அவனிடம், “எனது ஆட்டுக் குட்டிகளைக் [a] கவனித்துக்கொள்” என்றார்.

16 மீண்டும் பேதுருவிடம் இயேசு “யோவானின் மகனான சீமோனே, என்னை நீ நேசிக்கிறாயா?” என்று கேட்டார்.

“ஆம் ஆண்டவரே. நான் உம்மை நேசிப்பது உமக்குத் தெரியும்” என்று பேதுரு சொன்னான்.

பிறகு பேதுருவிடம் இயேசு, “எனது மந்தையைக் கவனித்துக்கொள்” என்று சொன்னார்.

17 மூன்றாவது முறையாக இயேசு “யோவானின் மகனான சீமோனே என்னை நீ நேசிக்கிறாயா?” என்று கேட்டார்.

இயேசு மூன்றுமுறை இவ்வாறு கேட்டதால் பேதுருவுக்கு வருத்தமாக இருந்தது. பேதுரு அவரிடம், “ஆண்டவரே, உமக்கு எல்லாம் தெரியும். நான் உம்மை நேசிப்பதும் உமக்குத் தெரியும்” என்றான். பேதுருவிடம் இயேசு “எனது மந்தையைக் கவனித்துக்கொள். 18 நான் உனக்கு உண்மையைச் சொல்லுகிறேன், நீ இளைஞனாக இருந்தபோது, உனது இடுப்புவாரை நீயே கட்டிக்கொண்டு விரும்பும் இடங்களுக்கு சென்றாய். ஆனால் நீ முதியவன் ஆகும்போது உன் கைகளை நீட்டுவாய். வேறு ஒருவன் உன் இடுப்புவாரைக் கட்டிவிடுவான். அதோடு உனக்கு விருப்பம் இல்லாத இடத்துக்கும் உன்னை இழுத்துக்கொண்டு போவான்” என்றார். 19 (எவ்வாறு பேதுரு மரணம் அடைந்து தேவனுக்கு மகிமைசேர்க்கப் போகிறான் என்பதைக் குறிப்பிட்டே இயேசு இவ்வாறு கூறினார்.) பிறகு இயேசு பேதுருவிடம் “என்னைப் பின்தொடர்ந்து வா” என்று கூறினார்.

20 பேதுரு திரும்பிப் பார்த்தபோது தன்னோடு, இயேசுவிடம் அன்பாயிருந்த சீஷன் வருவதைப் பார்த்தான். (இந்த சீஷன்தான் முன்பு இரவு விருந்தின்போது இயேசுவிடம் “உம்மைக் காட்டிக் கொடுக்கிறவன் யார்?” என்று அவர்மீது சாய்ந்து இருந்து கேட்டவன்) 21 பேதுரு, அவன் பின்தொடர்ந்து வருவதைப் பார்த்து, “ஆண்டவரே, இவனைப் பற்றி என்ன கூறுகிறீர்?” என்று கேட்டான்.

22 அதற்கு இயேசு, “நான் வருமளவும் இவன் இருக்க எனக்கு விருப்பம் உண்டு. அது உனக்கு அவ்வளவு முக்கியமில்லை. நீ என்னைப் பின்தொடர்ந்து வா” என்றார்.

23 ஆகையால் சீஷர்களிடம் ஒரு கதை பரவிற்று. அதாவது இயேசு அன்பாயிருக்கும் அந்த சீஷன் மரணம் அடைவது இல்லை என்று சீஷர்கள் பேசிக்கொண்டனர். ஆனால் அவன் மரணம் அடைவதில்லை என்று இயேசு கூறவில்லை. அவர் “நான் வரும்வரைக்கும் இவன் இருக்க எனக்கு விருப்பம். அதைப்பற்றி நீ கவலைப்பட வேண்டாம்” என்றே கூறினார்.

24 அந்த சீஷனே இவற்றையெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறான். அவன்தான் இவற்றையெல்லாம் இப்பொழுது எழுதியுள்ளான். அவன் சொன்னது எல்லாம் உண்மை என்று நமக்குத் தெரியும்.

25 இயேசு செய்த வேறு பல செயல்களும் உள்ளன. இவை அனைத்தும் எழுதி வைக்கப்பட்டிருந்தால் அந்தப் புத்தகங்களையெல்லாம் வைக்கிற அளவிற்கு இந்த உலகம் அவ்வளவு பெரியதாக இல்லை என்று எண்ணுகிறேன்.

சங்கீதம் 120

ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்

120 நான் தொல்லைகளில் சிக்குண்டிருந்தபோது,
    உதவிக்காக கர்த்தரைக் கூப்பிட்டேன், அவர் என்னைக் காப்பாற்றினார்!
கர்த்தாவே, என்னைப்பற்றிப் பொய் கூறியவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
    உண்மையில்லாதவற்றை அந்த ஜனங்கள் கூறினார்கள்.

பொய்யரே, நீங்கள் பெறப்போவதை அறிவீர்களா?
    நீங்கள் அடையப்போவதை அறிவீர்களா?
வீரனின் கூரிய அம்புகளும்,
    சுடும் தழலும் உன்னைத் தண்டிக்கும்.

பொய்யர்களின் அருகே வாழ்வது மேசேக்கில் வாழ்வதைப் போன்றதும்
    கேதாரின் கூடாரங்களண்டையில் வாழ்வதைப் போன்றதுமாகும்.
சமாதானத்தை வெறுக்கிற ஜனங்களோடு
    நான் நீண்டகாலம் வாழ்ந்திருக்கிறேன்.
நான் சமாதானம் வேண்டும் என்றேன்.
    ஆனால் அவர்கள் போரை விரும்புகிறார்கள்.

நீதிமொழிகள் 16:16-17

16 தங்கத்தைவிட அறிவு மதிப்புமிக்கது. புரிந்துகொள்ளுதல் வெள்ளியைவிட மதிப்புடையது.

17 நல்லவர்கள் தம் வாழ்வைத் தீமையில் இருந்து விலக்கி வைப்பார்கள். தன் வாழ்வில் கவனமாக இருக்கிற ஒருவன், தன் ஆத்துமாவைக் காப்பாற்றிக்கொள்கிறான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center