Print Page Options
Previous Prev Day Next DayNext

The Daily Audio Bible

This reading plan is provided by Brian Hardin from Daily Audio Bible.
Duration: 731 days

Today's audio is from the NLT. Switch to the NLT to read along with the audio.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
2 சாமுவேல் 18:1-19:10

தாவீது போருக்குத் தயாராகிறான்

18 தாவீது தன் ஆட்களை எண்ணிப் பார்த்தான். 1,000 பேருக்கு ஒரு படைத்தலைவனாகவும் 100 பேருக்கு ஒரு படைத்தலைவனாகவும் ஜனங்களை வழி நடத்துவோரை நியமித்தான். ஜனங்களை மூன்று பிரிவினராகப் பிரித்தான். பின்பு ஜனங்களை வெளியே அனுப்பினான். மூன்றில் ஒரு பகுதி ஜனங்களை யோவாப் வழி நடத்தினான். மற்றொரு மூன்றில் ஒரு பகுதியினரை செருயாவின் மகனும் யோவாபின் சகோதரனுமாகிய அபிசாய் வழி நடத்தினான். காத்திலிருந்து வந்த ஈத்தாயி மூன்றாவது பிரிவு ஜனங்களை வழி நடத்தினான்.

தாவீது அரசன் ஜனங்களிடம், “நானும் உங்களோடு வருவேன்” என்று கூறினான்.

ஆனால் ஜனங்கள், “இல்லை, நீங்கள் எங்களோடு வரக்கூடாது. ஏனெனில் நாங்கள் (யுத்தத்தில்) ஓடிவிட்டால் அப்சலோமின் ஆட்கள் பொருட்படுத்தமாட்டார்கள். நம்மில் பாதி பேர் கொல்லப்பட்டாலும் அப்சலோமின் ஆட்கள் கவலைப்படமாட்டார்கள். ஆனால் நீங்கள் எங்களில் 10,000 பேருக்கு ஒப்பானவர்கள்! நீங்கள் நகரத்தில் தங்கியருப்பதே நல்லது. பின்பு எங்களுக்கு உதவி தேவையானால், நீங்கள் எங்களுக்கு உதவ முடியும்” என்றார்கள்.

அரசன் ஜனங்களை நோக்கி, “நீங்கள் சிறந்ததென முடிவெடுக்கும் காரியத்தையே நான் செய்வேன்” என்றான்.

பின்பு அரசன் வாயிலருகே வந்து நின்றான். படை வெளியே சென்றது. அவர்கள் 100 பேராக மற்றும் 1,000 பேராக அணிவகுத்துச் சென்றனர்.

“அப்சலோமிடம் மென்மையாய் நடந்துக்கொள்ளுங்கள்!”

யோவாப், அபிசாயி, ஈத்தாய் ஆகியோருக்கு அரசன் ஒரு கட்டளையிட்டான். அவன், “இதை எனக்காகச் செய்யுங்கள் அப்சலோமிடம் மென்மையாய் நடந்துக்கொள்ளுங்கள்” என்றான்.

ஜனங்கள் எல்லாரும் அப்சலோமைக் குறித்து படைத் தலைவர்களுக்கு அரசன் இட்ட கட்டளையைக் கேட்டார்கள்.

தாவீதின் படை அப்சலோமின் படையைத் தோற்கடிக்கிறது

அப்சலோமின் இஸ்ரவேலருடைய படையைத் தாவீதின் படை களத்தில் சந்தித்தது. அவர்கள் எப்பிராயீமின் காட்டில் சண்டையிட்டனர். தாவீதின் படை இஸ்ரவேலரைத் தோற்கடித்தது. அன்றைக்கு 20,000 ஆட்கள் கொல்லப்பட்டனர். அப்போர் தேசமெங்கும் பரவியது. அன்றைக்கு வாளால் மரித்தோரைக்காட்டிலும் காட்டில் மரித்தவர்களே அதிக எண்ணிகையில் இருந்தனர்.

அப்சலோம் தாவீதின் அதிகாரிகளைச் சந்திக்க நேர்ந்தது. அப்சலோம் தனது கோவேறு கழுதையின் மேலேறிக்கொண்டு, தப்பித்துச்செல்ல முயன்றான். ஒரு பெரிய கர்வாலி மரத்தின் கீழே அந்தக் கோவேறு கழுதைச் சென்றது. அதன் கிளைகள் அடர்த்தியாக இருந்தன. அப்சலோமின் தலை மரத்தில் அகப்பட்டுக்கொண்டது, அவன் ஏறி வந்த கோவேறு கழுதை ஓடிவிட்டதால், அப்சலோம் நிலத்திற்கு மேலாகத் [a] தொங்கிக்கொண்டிருந்தான்.

10 ஒரு மனிதன் நிகழ்ந்தது அனைத்தையும் பார்த்தான். அவன் யோவாபிடம், “ஓர் கர்வாலி மரத்தில் அப்சலோம் தொங்கிக்கொண்டிருப்பதை நான் கண்டேன்” என்றான்.

11 யோவாப் அம்மனிதனை நோக்கி, “ஏன் அவனைக் கொன்று நிலத்தில் விழும்படியாகச் செய்யவில்லை? நான் உனக்கு ஒரு கச்சையையும் 10 வெள்ளிக் காசையும் கொடுத்திருப்பேன்!” என்றான்.

12 அம்மனிதன் யோவாபை நோக்கி, “நீங்கள் எனக்கு 1,000 வெள்ளிக்காசைக் கொடுத்தாலும் நான் அரசனின் மகனைக் காயப்படுத்த முயலமாட்டேன். ஏனெனில் உங்களுக்கும், அபிசாயிக்கும், ஈத்தாயிக்கும் அரசன் இட்ட கட்டளையை நாங்கள் கேட்டோம். அரசன், ‘இளைய அப்சலோமைக் காயப்படுத்தாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்’ என்றான். 13 நான் அப்சலோமைக் கொன்றால் அரசன் கண்டு பிடித்துவிடுவான். அப்போது நீங்களே என்னைத் தண்டிப்பீர்கள்” என்றான்.

14 யோவாப், “நான் உன்னோடு இங்குப் பொழுதை வீணாக்கமாட்டேன்!” என்றான்.

அப்சலோம் உயிரோடு இன்னும் ஓக் மரத்தில் தொங்கிக்கொண்டிருந்தான். யோவாப் மூன்று ஈட்டிகளை எடுத்தான். அவற்றை அப்சலோமை நோக்கி எறிந்தான். அவை அப்சலோமின் இருதயத்தை துளைத்தன. 15 யோவாபுக்கு யுத்தத்தில் உதவிய பத்து இளம் வீரர்கள் இருந்தனர். அந்த பத்து பேரும் அப்சலோமைச் சூழ்ந்து நின்று அவனைக் கொன்றனர்.

16 யோவாப் எக்காளம் ஊதி அப்சலோமின் இஸ்ரவேலரைத் துரத்துவதை நிறுத்துமாறு அறிவித்தான். 17 பின்பு அப்சலோமின் உடலை யோவாபின் ஆட்கள் எடுத்துக் காட்டிலிருந்த ஒரு பெரிய குழியில் இட்டனர். அக்குழியைப் பெரிய கற்களால் மூடினார்கள்.

அப்சலோமைப் பின்பற்றிய இஸ்ரவேலர் ஓடிப்போய், தங்கள் வீடுகளை அடைந்தனர்.

18 அப்சலோம் உயிரோடிருந்தபோது அரசனின் பள்ளதாக்கில் ஒரு தூணை நிறுவினான். அப்சலோம், “எனது பெயரை நிலைநிறுத்துவதற்கு எனக்கு மகன் இல்லை” என்றான். எனவே அத்தூணுக்கு தனது பெயரிட்டான். அத்தூண் இன்றைக்கும் “அப்சலோமின் ஞாபகச் சின்னம்” என்று அழைக்கப்படுகிறது.

யோவாப் தாவீதுக்கு செய்தியனுப்புகிறான்

19 சாதோக்கின் மகனாகிய அகிமாஸ் யோவாபை நோக்கி, “நான் ஓடிப்போய் தாவீது அரசனுக்குச் செய்தியைத் தெரிவிப்பேன். அவருக்காக பகைவனை கர்த்தர் தாமே அழித்தார் என்று சொல்வேன்” என்றான்.

20 யோவாப் அகிமாசிடம், “வேண்டாம், நீ இன்று தாவீதுக்குச் செய்தியைச் சொல்ல வேண்டாம். இன்றல்ல, இன்னொரு நாள் செய்தியைக் கொண்டு போகலாம். ஏனெனில், அரசனின் மகன் மரித்துவிட்டான்” என்றான்.

21 பின்பு யோவாப் கூஷியை நோக்கி, “நீ பார்த்த காரியங்களை அரசனிடம் போய்ச் சொல்” என்றான்.

கூஷியன் யோவாபை வணங்கினான். பின்பு அவன் தாவீதுக்குச் சொல்ல ஓடினான்.

22 ஆனால் சாதோக்கின் மகனாகிய அகிமாஸ் யோவாபை மீண்டும் வேண்டியவனாய், “எது நடந்தாலும் பரவாயில்லை. கூஷியன் பின்னால் ஓட என்னை அனுமதியுங்கள்!” என்றான்.

யோவாப், “மகனே, ஏன் நீ செய்தியைக் கொண்டுபோக வேண்டும் என நினைக்கிறாய்? நீ கூறப்போகும் செய்திக்கு எந்தப் பரிசையும் பெறமாட்டாய்” என்றான்.

23 அகிமாஸ் பதிலாக, “எது நடந்தாலும் பரவாயில்லை, நான் ஓடுவேன்” என்றான்.

யோவாப் அகிமாசிடம், “ஓடு!” என்றான்.

அப்போது அகிமாஸ் யோர்தான் பள்ளதாக்கு வழியாக ஓடினான். அவன் கூஷியனை முந்திவிட்டான்.

தாவீது செய்தியை அறிகிறான்

24 நகர வாயில்கள் இரண்டிற்கும் நடுவே தாவீது உட்கார்ந்திருந்தான். வாயில் மதிலின் கூரையில் காவலன் போய் நின்றான். ஒரு மனிதன் தனித்து ஓடிவருகிறதைக் காவலன் கண்டான். 25 காவலன் தாவீது அரசனிடம் உரக்கச் சொன்னான்.

தாவீது அரசன், “அம்மனிதன் தனித்து வந்தால் அவன் செய்திக் கொண்டு வருகிறான்” என்றான்.

அம்மனிதன் அருகே வந்துக்கொண்டிருந்தான். 26 காவலன் மற்றொரு மனிதனும் ஓடி வருவதைக் கண்டான். காவலன் வாயிற் காப்போனிடம், “பார்! மற்றொருவனும் தனியாக ஓடிவருகிறான்!” என்றான்.

அரசன், “அவனும் செய்திக் கொண்டு வருகிறான்” என்றான்.

27 காவலன், “சாதோக்கின் மகன் அகிமாசைப் போல் முதல் மனிதன் ஓடிவருகிறான்” என்றான்.

அரசன், “அகிமாஸ் நல்ல மனிதன். அவன் நற்செய்தியைக் கொண்டு வரக்கூடும்” என்றான்.

28 அகிமாஸ் அரசனிடம், “எல்லாம் நல்லபடி நடந்தது!” என்றான். அகிமாஸ் அரசனை வணங்கினான். அவனது முகம் நிலத்திற்கு அருகில் வந்தது. அகிமாஸ், “உங்கள் தேவனாகிய கர்த்தரை துதியுங்கள்! எனது அரசனாகிய ஆண்டவனே, உங்களுக்கு எதிரான ஆட்களை கர்த்தர் தோற்கடித்தார்” என்றான்.

29 அரசன், “இளம் அப்சலோம் நலமா?” என்று கேட்டான்.

அகிமாஸ் பதிலாக, “யோவாப் என்னை அனுப்பியபோது பெரிய சந்தடியிருந்தது. அது என்னதென்று எனக்குத் தெரியாது” என்றான்.

30 அப்போது அரசன், “இங்கே வந்து நின்று காத்திரு” என்றான். அகிமாசும் தள்ளிப்போய் நின்றான்.

31 கூஷியன் வந்தான். அவன், “எனது ஆண்டவனாகிய அரசனுக்குச் செய்தி இது. உங்களுக்கு எதிரான ஜனங்களை கர்த்தர் இன்று தண்டித்தார்!” என்றான்.

32 அரசன் கூஷியனை நோக்கி, “இளம் அப்சலோம் நலமா?” என்றான்.

கூஷியன் பதிலாக, “உங்களுக்கு எதிராக வரும் பகைவர்களும் ஜனங்களும் இந்த இளம் மனிதனைப் (அப்சலோமைப்) போல தண்டிக்கப்படுவார்கள் என நம்புகிறேன்” என்றான்.

33 அப்போது அப்சலோம் மரித்துவிட்டான் என்பதை அரசன் அறிந்தான். அரசன் நிலை குலைந்தான். நகரவாயிலின் மேலிருந்த அறைக்கு அவன் சென்றான். அங்கே அவன் அழுதான். போகும்போது, “எனது மகன் அப்சலோமே, என் மகன் அப்சலோமே! நான் உனக்காக மரித்திருக்கலாம் என விரும்புகிறேன். என் மகனே, என் மகனே!” என்றான்.

யோவாப் தாவீதைக் கடிந்துக் கொள்கின்றான்

19 ஜனங்கள் யோவாபுக்குச் செய்தியைத் தெரிவித்தனர். அவர்கள் யோவாபை நோக்கி, “பாருங்கள் அரசர் அப்சலோமுக்காக மிகவும் அழுது துக்கமாய் இருக்கிறார்” என்றார்கள். அன்றைய போரில் தாவீதின் படை வெற்றி பெற்றது, ஆனால் அந்த நாள் எல்லோருக்கும் துக்க நாளாக அமைந்தது. “அரசன் தனது மகனுக்காக அதிக துக்கமடைந்துள்ளான்” என்பதை ஜனங்கள் கேள்விப்பட்டதால் அது மிகுந்த துக்க நாள் ஆயிற்று.

ஜனங்கள் அமைதியாக நகரத்திற்குள் வந்தனர். போரில் தோற்கடிக்கப்பட்டு, ஓடிப்போன ஜனங்களைப்போல் அவர்கள் இருந்தார்கள். அரசன் முகத்தை மூடிக் கொண்டிருந்தான். “எனது மகன் அப்சலோமே, ஓ அப்சலோமே, என் மகனே, என் மகனே!” என்று அவன் சத்தமிட்டு அழுதுக் கொண்டிருந்தான்.

அரசனின் அரண்மனைக்குள் யோவாப் வந்தான். யோவாப் அரசனைப் பார்த்து, “உங்கள் ஒவ்வொரு அதிகாரிகளையும் நீங்கள் புண்படுத்துகிறீர்கள். பாருங்கள் அந்த அதிகாரிகள் இன்று உங்கள் உயிரைக் காப்பாற்றினார்கள். அவர்கள் உங்கள் மகன்கள், மகள்கள், மனைவிகள், வேலைக்காரிகள் ஆகியோரின் உயிர்களையும் காப்பாற்றினார்கள். உங்களைப் பகைக்கிறவர்களை நீர் நேசிக்கிறீர். உங்களை நேசிக்கிறவர்களை நீர் வெறுக்கிறீர். உங்கள் அதிகாரிகளும் உங்கள் வீரர்களும் உங்களுக்கு ஒரு பொருட்டல்ல என்பதை இன்று வெளிப்படுத்திவிட்டீர்கள். அப்சலோம் உயிரோடிருந்து, நாங்கள் அனைவரும் கொல்லப்பட்டிருந்தால் நீர் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பீர் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது! இப்போது எழுந்து போய் உங்கள் அதிகாரிகளிடம் பேசுங்கள். அவர்களை உற்சாகப்படுத்துங்கள்! இப்போதே எழுந்து நீங்கள் அவ்வாறு செய்யாவிட்டால், இன்றிரவு உம்மோடு ஒருவன்கூட இருக்கமாட்டான் என்று கர்த்தர் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். நீங்கள் குழந்தையாயிருந்ததிலிருந்து அனுபவித்த எல்லா துன்பங்களையும்விட அது தீமையானதாக இருக்கும்” என்றான்.

அப்போது அரசன் நகரவாயிலுக்குச் சென்றான். அரசன் வாயிலருகே வந்துள்ளான் என்ற செய்தி பரவியது. எனவே எல்லோரும் அரசனைக் காண வந்தனர். அப்சலோமைப் பின்பற்றிய இஸ்ரவேலர் வீடுகளுக்கு ஓடிப்போய் விட்டனர்.

தாவீது மீண்டும் அரசனாகுதல்

எல்லா இஸ்ரவேல் கோத்திரங்களைச் சேர்ந்த ஜனங்களும் விவாதிக்கக் தொடங்கினார்கள். அவர்கள், “பெலிஸ்தியரிடமிருந்தும் பிற பகைவரிடமிருந்தும் தாவீது அரசர் நம்மைக் காப்பாற்றினார். தாவீது, அப்சலோமிடமிருந்து ஓடிப்போனார். 10 நம்மை ஆள்வதற்கு அப்சலோமைத் தேர்ந்தெடுத்தோம், ஆனால் அவன் போரில் மரித்துப் போனான். நாம் தாவீதை மீண்டும் அரசனாக்க வேண்டும்” என்றார்கள்.

யோவான் 20

இயேசுவின் உயிர்ப்பு(A)

20 வாரத்தின் முதல்நாள் அதிகாலையில் மகதலேனா மரியாள், இயேசுவின் சரீரம் இருந்த கல்லறைக்குச் சென்றாள். அது அப்பொழுதும் இருளாக இருந்தது. கல்லறை வாசலை மூடியிருந்த பெரிய கல் விலக்கி வைக்கப்பட்டிருப்பதை அவள் கண்டாள். எனவே மரியாள் சீமோன் பேதுருவிடமும் இன்னொரு சீஷனிடமும் (இயேசு நேசித்தவன்) ஓடிச் சென்று “அவர்கள் கர்த்தரது சரீரத்தைக் கல்லறையைவிட்டு அப்புறப்படுத்திவிட்டனர். அவரை எங்கே வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை” என்றாள்.

உடனே பேதுருவும் இன்னொரு சீஷனும் கல்லறையை நோக்கிப் போனார்கள். இருவரும் ஓடினாலும், பேதுருவைவிட அடுத்தவன் வேகமாக ஓடிப் போனான். எனவே அந்த சீஷன் முதலில் கல்லறையை அடைந்தான். அவன் குனிந்து கல்லறைக்குள்ளே பார்த்தான். துண்டுத்துணிகள் அங்கே கிடப்பதைக் கண்டான். ஆனால் உள்ளே அவன் போகவில்லை.

பிறகு சீமோன் பேதுரு அவனுக்குப் பின்னால் வந்தான். பேதுரு கல்லறைக்குள்ளே போனான். அங்கே துணிகள் கிடப்பதைப் பார்த்தான். தலையில் சுற்றப்பட்ட துணி தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. பிறகு அடுத்த சீஷனும் உள்ளே போனான். இந்த சீஷன்தான் கல்லறையை முதலாவது ஓடிவந்து சேர்ந்தவன். அவன் நிகழ்ந்ததை எல்லாம் பார்த்து நம்பிக்கைகொண்டான். (இந்த சீஷர்கள், வேதவாக்கியங்களின்படி இயேசு மரணத்தில் இருந்து உயிர்த்தெழவேண்டும் என்று இன்னும் புரிந்துகொள்ளாமல் இருந்தனர்)

மகதலேனா மரியாளுக்குக் காட்சி(B)

10 பிறகு அவரது சீஷர்கள் வீட்டிற்குத் திரும்பிப்போனார்கள். 11 ஆனால் மரியாள் கல்லறைக்கு வெளியே நின்று அழுதுகொண்டிருந்தாள். அவ்வாறு அழும்போதே, அவள் குனிந்து கல்லறைக்குள்ளே பார்த்தாள். 12 வெள்ளை உடைகள் அணிந்த இரு தேவ தூதர்களைப் பார்த்தாள். இயேசுவின் சரீரம் இருந்த இடத்தில் அவர்கள் இருந்தனர். இயேசுவின் தலை இருந்த இடத்தில் ஒரு தேவதூதனும் அவரது பாதங்கள் இருந்த இடத்தில் இன்னொரு தேவதூதனும் இருப்பதைக் கண்டாள்.

13 அந்த தேவதூதர்கள் மரியாளிடம், “பெண்ணே! ஏன் அழுதுகொண்டிருக்கிறாய்?” என்று கேட்டனர்.

“சிலர் என் ஆண்டவரின் சரீரத்தை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள். அவரை எங்கே வைத்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை” என்றாள் மரியாள். 14 அவள் இவ்வாறு சொல்லிவிட்டு திரும்பியபோது இயேசு நின்றுகொண்டிருப்பதைக் கண்டாள். ஆனால் அவர்தான் இயேசு என்பதை அவள் அறிந்துகொள்ளவில்லை.

15 இயேசு அவளிடம், “பெண்ணே! ஏன் அழுகிறாய்? நீ யாரைத் தேடுகிறாய்?” என்று கேட்டார்.

மரியாள் அவரை, அந்தத் தோட்டத்தின் காவல்காரனாக இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். எனவே அவள் அவரிடம், “ஐயா, நீங்களா இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டு போனீர்கள்? அவரை எங்கே வைத்திருக்கிறீர்கள் என்று சொல்லுங்கள். நான் போய் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றாள்.

16 இயேசு “மரியாளே” என்று அழைத்தார்.

மரியாள் திரும்பி இயேசுவைப் பார்த்து, “ரபூனீ” என்று யூத மொழியில் கூப்பிட்டாள். (இதற்கு போதகரே என்று பொருள்)

17 இயேசு அவளிடம், “என்னைத் தொடாதே. நான் இன்னும் என் பிதாவிடம் திரும்பிச் செல்லவில்லை. ஆனால் போய் என் சகோதரர்களிடம், ‘நான் என் பிதாவிடமும் உங்களின் பிதாவிடமும் செல்கிறேன். நான் என் தேவனிடமும் உங்களின் தேவனிடமும் திரும்பிப் போகிறேன்’ என்று சொல்” என்றார்.

18 மகதலேனா மரியாள் சீஷர்களிடம் சென்று, “நான் ஆண்டவரைப் பார்த்தேன்” என்று சொன்னாள். அதோடு அவர் சொன்னவற்றையும் சொன்னாள்.

சீஷர்களுக்கு இயேசுவின் காட்சி(C)

19 அன்று வாரத்தின் முதல்நாள். அன்று மாலையில் சீஷர்கள் கூடினர். கதவுகள் அடைக்கப்பட்டன. ஏனென்றால் அவர்கள் யூதர்களுக்குப் பயந்தனர். அப்பொழுது இயேசு வந்து அவர்களின் நடுவில் நின்றார். “சமாதானம் உங்களோடு இருக்கட்டும்” என்றார். 20 அவர் இதனைச் சொன்ன பிறகு, தனது சீஷர்களிடம் தனது கைகளையும் விலாவையும் காட்டினார். அவர்கள் கர்த்தரைப் பார்த்ததும் பெரிதும் மகிழ்ந்தனர்.

21 பிறகு மீண்டும் அவர்களிடம் இயேசு, “சமாதானம் உங்களோடு இருக்கட்டும். பிதா என்னை அனுப்பினார். அதே விதமாக நான் இப்பொழுது உங்களை அனுப்புகிறேன்” என்றார். 22 இயேசு அதைச் சொன்ன பிறகு, அவர் சீஷர்கள்மேல் ஊதினார். “பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். 23 நீங்கள் மக்களது பாவங்களை மன்னித்தால் அவை மன்னிக்கப்படும். நீங்கள் மக்களது பாவங்களை மன்னிக்காவிட்டால் அவை மன்னிக்கப்படாது” என்று கூறினார்.

தோமாவுக்கு காட்சி

24 இயேசு அங்கு தோன்றியபோது தோமா சீஷர்களுடன் இல்லை. அவரது பன்னிரண்டு சீஷர்களுள் தோமாவும் ஒருவன். 25 ஏனைய சீஷர்கள் “நாங்கள் ஆண்டவரைப் பார்த்தோம்” என்று தோமாவிடம் சொன்னார்கள். அதற்கு தோமா “நான் அவரது கைகளில் ஆணிகளின் துவாரங்களைக் காணும்வரை நீங்கள் சொல்வதை நம்பமாட்டேன். அப்படிப் பார்த்தாலும் அந்த ஆணித் துவாரங்களில் எனது விரல்களையும், விலாகாயத்தில் எனது கைகளையும் வைத்துப் பார்ப்பேன். இல்லாவிட்டால் நான் நம்பமாட்டேன்” என்றான்.

26 ஒரு வாரத்திற்குப் பின் சீஷர்கள் முன்புபோல் அந்த வீட்டில் மீண்டும் கூடினர். தோமா அவர்களோடு இருந்தான். கதவுகள் மூடப்பட்டிருந்தன. ஆனால் இயேசு வந்து அவர்களின் நடுவில் நின்றார். “சமாதானம் உங்களோடு இருக்கட்டும்” என்றார். 27 பிறகு இயேசு தோமாவிடம் “உனது விரல்களை இங்கே வை. எனது கைகளைப் பார். எனது விலாவிலே உன் கையை வைத்துப் பார். சந்தேகத்தை விட்டுவிடு. விசுவாசி” என்றார்.

28 அதற்குத் தோமா இயேசுவிடம், “என் ஆண்டவரே! என் தேவனே!” என்று பதில் சொன்னான்.

29 இயேசு அவனிடம், “நீ என்னைப் பார்த்ததால் விசுவாசிக்கிறாய். என்னைப் பாராமலேயே எவர் விசுவாசிக்கிறார்களோ அவர்கள் பாக்கியவான்கள்” என்றார்.

இப்புத்தகத்தை எழுதினதின் நோக்கம்

30 இயேசு அவரது சீஷர்களுக்கு முன்பு அநேக வேறு அற்புதங்களைச் செய்து காட்டினார். அவை இந்நூலில் எழுதப்படவில்லை. 31 ஆனால் இயேசுவே கிறிஸ்து என்றும் தேவனின் குமாரன் என்றும் நீங்கள் நம்பும்படிக்கும், அதோடு நம்பிக்கையின் மூலம் அவரது பெயரால் நித்திய வாழ்வைப் பெறவும் இவைகள் எழுதப்பட்டிருக்கின்றன.

சங்கீதம் 119:153-176

ரேஷ்

153 கர்த்தாவே, என் துன்பங்களைக் கண்டு, என்னை விடுவியும்.
    நான் உமது போதனைகளை மறக்கவில்லை.
154 கர்த்தாவே, எனக்காக நீர் போரிட்டு, என்னைக் காப்பாற்றும்.
    நீர் வாக்குறுதி அளித்தபடி என்னை வாழவிடும்.
155 தீயோர் உமது சட்டங்களைப் பின்பற்றாததால்
    அவர்கள் வெற்றிபெறமாட்டார்கள்.
156 கர்த்தாவே, நீர் மிகுந்த தயவுள்ளவர்.
    நீர் சரியென நினைப்பவற்றைச் செய்யும, என்னை வாழவிடும்.
157 என்னைத் துன்புறுத்த முயலும் பல பகைவர்கள் எனக்குண்டு.
    ஆனால் நான் உமது உடன்படிக்கையைப் பின்பற்றுவதை நிறுத்தவில்லை.
158 நான் அந்தத் துரோகிகளைப் பார்க்கிறேன்.
    கர்த்தாவே, அவர்கள் உமது வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவதில்லை.
    நான் அதை வெறுக்கிறேன்.
159 பாரும், நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மிகவும் முயல்கிறேன்.
    கர்த்தாவே, உமது முழுமையான அன்பினால், என்னை வாழவிடும்.
160 கர்த்தாவே, துவக்கம் முதலாகவே உமது வார்த்தைகள் எல்லாம் நம்பக்கூடியவை.
    உமது நல்ல சட்டம் என்றென்றும் நிலைத்திருக்கும்.

ஷீன்

161 எக்காரணமுமின்றி வல்லமையுள்ள தலைவர்கள் என்னைத் தாக்கினார்கள்.
    ஆனால் நான் உமது சட்டத்திற்கு மட்டுமே பயந்து, அதை மதிக்கிறேன்.
162 கர்த்தாவே, மிகுந்த பொக்கிஷத்தைக் கண்டெடுத்த மனிதன் பெறும்
    சந்தோஷத்தைப்போல உமது வார்த்தைகள் என்னை மகிழ்விக்கின்றன.
163 நான் பொய்களை வெறுக்கிறேன்!
    நான் அவற்றை அருவருக்கிறேன்!
    ஆனால் கர்த்தாவே, நான் உமது போதனைகளை நேசிக்கிறேன்.
164 உமது நல்ல சட்டங்களுக்காக
    ஒரு நாளில் ஏழுமுறை உம்மைத் துதிக்கிறேன்.
165 உமது போதனைகளை நேசிக்கும் ஜனங்கள் உண்மையான சமாதானத்தைக் காண்பார்கள்.
    அந்த ஜனங்களை வீழ்த்த எதனாலும் முடியாது.
166 கர்த்தாவே, நீர் என்னைக் காப்பாற்றுவீரெனக் காத்துக்கொண்டிருக்கிறேன்.
    நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தேன்.
167 நான் உமது உடன்படிக்கையைப் பின்பற்றினேன்.
    கர்த்தாவே, நான் உமது சட்டங்களை மிகவும் நேசிக்கிறேன்.
168 நான் உமது உடன்படிக்கைக்கும் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிகிறேன்.
    கர்த்தாவே, நான் செய்தவற்றையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்.

தௌ

169 கர்த்தாவே, என் மகிழ்ச்சியான பாடலுக்குச் செவிகொடும்.
    நீர் வாக்குறுதி தந்தபடியே என்னை ஞானமுள்ளவனாக்கும்.
170 கர்த்தாவே, என் ஜெபத்திற்குச் செவிகொடும்.
    நீர் வாக்களித்தபடி என்னைக் காப்பாற்றும்.
171 நான் துதிப் பாடல்களைப் பாடிக் களிப்படைகிறேன்.
    ஏனெனில் நீர் உமது சட்டங்களை எனக்குப் போதித்தீர்.
172 உமது வார்த்தைகளுக்கு மறு உத்தரவு கொடுக்க எனக்கு உதவும், எனது பாடல்களை நான் பாடட்டும்.
    கர்த்தாவே, உமது எல்லா சட்டங்களும் நல்லவை.
173 என்னருகில் வந்து எனக்கு உதவும்.
    ஏனெனில் நான் உமது கட்டளைகளைப் பின்பற்றுவதெனத் தீர்மானித்தேன்.
174 கர்த்தாவே, நீர் என்னைக் காப்பாற்றவேண்டுமென விரும்புகிறேன்.
    ஆனால் உமது போதனைகள் என்னை மகிழ்விக்கின்றன.
175 கர்த்தாவே, நான் வாழ்ந்து உம்மைத் துதிக்கட்டும்.
    உமது சட்டங்கள் எனக்கு உதவட்டும்.
176 காணாமற்போன ஆட்டைப்போன்று நான் அலைந்து திரிந்தேன்.
    கர்த்தாவே, என்னைத் தேடிவாரும்.
நான் உமது ஊழியன்,
    நான் உமது கட்டளைகளை மறக்கவில்லை.

நீதிமொழிகள் 16:14-15

14 அரசனுக்குக் கோபம் வந்தால் அவன் ஒருவனைக்கொல்லலாம். அறிவுள்ளவர்கள் அரசனை எப்பொழுதும் மகிழ்ச்சி உடையவர்களாகச் செய்வார்கள்.

15 அரசன் மகிழ்ச்சியாக இருக்கும்போது, அனைவரின் வாழ்வும் நன்றாக இருக்கும். உன் காரியங்களால் அரசன் மகிழ்ச்சிகொண்டானெனில், அது மேகத்தில் இருந்து வசந்தகால மழை பொழிவதற்கு ஒப்பாகும்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center