Print Page Options
Previous Prev Day Next DayNext

The Daily Audio Bible

This reading plan is provided by Brian Hardin from Daily Audio Bible.
Duration: 731 days

Today's audio is from the NLT. Switch to the NLT to read along with the audio.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
2 சாமுவேல் 15:23-16

23 எல்லா ஜனங்களும் சத்தமாய் அழுதார்கள். தாவீது அரசனும் கீதரோன் ஆற்றைக் கடந்தான். ஜனங்கள் பாலைவனத்திற்குச் சென்றார்கள். 24 சாதோக்கும் லேவியரும் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்து சென்றார்கள். அவர்கள் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியைக் கீழே வைத்தார்கள். எருசலேமை விட்டு எல்லா ஜனங்களும் வெளியேறும் வரைக்கும் அபியத்தார் ஜெபம் செய்துக் கொண்டிருந்தான்.

25 தாவீது அரசன் சாதோக்கிடம், “தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை எருசலேமுக்குத் திரும்பவும் கொண்டு போ. கர்த்தர் என்னிடம் இரக்கம் காட்டினால் என்னைத் திரும்பவும் வரவழைத்துக்கொள்வார். கர்த்தர் எருசலேமையும் அவருடைய ஆலயத்தையும் பார்ப்பதற்கு எனக்கு உதவுவார். 26 கர்த்தர் என்னிடம் கருணை காட்டவில்லை என்பாராயின், அவர் விரும்புகிற எதையும் எனக்குச் செய்யட்டும்” என்றான்.

27 அரசன் ஆசாரியனாகிய சாதோக்கைப் பார்த்து, “நீ தீர்க்கதரிசி அல்லவா? நகரத்திற்குச் சமாதானத்தோடு திரும்பிப் போ. உன் மகனாகிய அகிமாசையும் அபியத்தாரின் மகன் யோனத்தானையும் உன்னோடு அழைத்துப் போ. 28 ஜனங்கள் பாலைவனத்திற்குள் கடந்து செல்லும் இடங்களில் நான் காத்திருப்பேன். உங்களிடமிருந்து செய்தி எனக்குக் கிடைக்கும் வரைக்கும் நான் காத்திருப்பேன்” என்றான்.

29 எனவே சாதோக்கும் அபியத்தாரும் தேவனுடைய பரிசுத்த பெட்டியை எருசலேமுக்கு எடுத்துச் சென்று அங்கே தங்கினார்கள்.

அகித்தோப்பேலுக்கு எதிராக தாவீதின் ஜெபம்

30 தாவீது ஒலிவமலைக்குப் போனான். அழுதுக் கொண்டிருந்தான். அவன் தலையை மூடிக்கொண்டு, கால்களில் மிதியடி இல்லாமல் நடந்தான். தாவீதோடிருந்த எல்லா ஜனங்களும் அவர்களுடைய தலைகளை மூடிக்கொண்டனர். அவர்கள் அழுதபடியே, தாவீதோடு சென்றனர்.

31 ஒருவன் தாவீதிடம், “அப்சலோமோடு திட்டமிட்டவர்களில் அகித்தோப்பேலும் ஒருவன்” என்றான். அப்போது தாவீது, “கர்த்தாவே நீர் அகித்தோப்பேலின் உபதேசம் பயனற்றவையாக இருக்கும்படி செய்யும்” என்று ஜெபம் செய்தான். 32 தாவீது மலையின் உச்சிக்கு வந்தான். இங்கு அவன் அடிக்கடி தேவனை தொழுதுகொள்ள வந்திருக்கின்றான். அப்போது அற்கியனாகிய ஊசாய் அவனிடம் வந்தான். அவன் அங்கி கிழிந்திருந்தது. தலையில் புழுதி இருந்தது.

33 தாவீது ஊசாய்க்கு, “நீ என்னோடு வந்தால் எனக்குப் பாரமாவாய். 34 ஆனால் நீ எருசலேமுக்குத் திரும்பிப் போனால் அகித்தோப்பேலின் அறிவுரை பயனற்றுப் போகும்படி நீ செய்யலாம். அப்சலோமிடம், ‘அரசனே, நான் உங்கள் பணியாள். நான் உங்கள் தந்தைக்கு சேவை செய்தேன். இப்போது உங்களுக்கு சேவை செய்வேன்’ என்று கூறு. 35 ஆசாரியர்களான சாதோக்கும், அபியத்தாரும் உன்னோடு இருப்பார்கள். நீ அரண்மனையில் கேட்கும் செய்திகளை அவர்களிடம் சொல்லவேண்டும். 36 சாதோக்கின் மகன் அகிமாசும் அபியத்தாரின் மகன் யோனத்தானும் அவர்களோடிருப்பார்கள். அவர்கள் மூலமாக உனக்குத் தெரியவரும் செய்திகளை எனக்கு அனுப்பு” என்றான்.

37 தாவீதின் நண்பனாகிய ஊசாய் நகரத்திற்குப் போனான். அப்சலோம் எருசலேமுக்கு வந்தான்.

சீபா தாவீதைச் சந்திக்கிறான்

16 தாவீது ஒலிவமலை உச்சியின் மேல் கொஞ்சதூரம் நடந்துப்போனான். அங்கு மேவிபோசேத்தின் பணியாளாகிய சீபா தாவீதைச் சந்தித்தான். சீபாவிடம் சேணம் கட்டப்பட்ட இரண்டு கழுதைகள் இருந்தன. கழுதைகள் 200 ரொட்டிகளையும், 100 குலைகள் உலர்ந்த திராட்சைகளையும், 100 கோடைக்காலக் கனிகளையும் ஒரு துருத்தி திராட்சைரத்தையும் சுமந்து வந்தன. தாவீது அரசன் சீபாவைப் பார்த்து, “இவைகளெல்லாம் எதற்கு?” என்று கேட்டான்.

சீபா பதிலாக, “இந்தக் கழுதைகள் அரசனின் குடும்பத்தினர் செல்வதற்காகவும் ரொட்டியும் பழங்களும் அதிகாரிகளின் உணவிற்காகவும், திராட்சைரசம் பாலைவனத்தில் நடந்து செல்வோர் சோர்வுறும் போது குடிப்பதற்காகவும் பயன்படும்” என்றான்.

அரசன், “மேவிபோசேத் எங்கே?” என்று கேட்டான்.

சீபா அரசனிடம், “மேவிபோசேத் எருசலேமில் இருக்கிறான் ஏனென்றால் அவன் ‘இன்று என் பாட்டனாரின் அரசை இஸ்ரவலர்கள் எனக்குத் திருப்பிக் கொடுப்பார்கள் என நினைக்கிறான்’” என்று கூறினான்.

பின்னர் அரசன் சீபாவிடம், “சரி மேவிபோசேத்திற்கு உரியவற்றையெல்லாம் இப்போது நான் உனக்குத் தருகிறேன்” என்றான்.

சீபா, “நான் உங்களை வணங்குகிறேன். நான் எப்போதுமே உங்கள் தயை பெறுவேன் எனக் கருதுகிறேன்” என்றான்.

சீமேயி தாவீதை சபிக்கிறான்

தாவீது பகூரிமுக்கு வந்தான். சவுலின் குடும்பத்தைச் சேர்ந்த மனிதன் ஒருவன் பகூரிமுலிருந்து அங்கு வந்தான். இம்மனிதன் கேராவின் மகனாகிய சீமேயி. சீமேயி தாவீதிடம் தீயவற்றைப் பேசியவனாக வந்தான். அவன் மீண்டும் மீண்டும் தீயனவற்றையே பேசினான்.

தாவீதின் மீதும் அவனது அதிகாரிகள் மீதும் சீமேயி கற்களை வீச ஆரம்பித்தான். ஆனால் மக்களும் வீரர்களும் தாவீதைச் சூழ்ந்து நின்று அவனைக் காத்தனர். சீமேயி தாவீதை சபித்தான். அவன், “கொலைகாரனே! வெளியே போ. வெளியே போ. கர்த்தர் உன்னைத் தண்டிக்கிறார். ஏனெனில், நீ சவுலின் குடும்பத்தாரைக் கொலைச் செய்தாய். நீ சவுலின் இடத்தில் அரசனாக அமர்ந்தாய். ஆனால் இப்போது கர்த்தர் அரசாட்சியை உனது மகனான அப்சலோமுக்குக் கொடுத்துள்ளார். இப்போது அதே தீமைகள் உனக்கு நேர்கின்றன. ஏனெனில் நீ ஒரு கொலைக்காரன்” என்றான்.

செருயாவின் மகனாகிய அபிசாய் அரசனை நோக்கி, “எனது அரசனாகிய ஆண்டவரே, ஏன் இந்த மரித்த நாய் உம்மை சபிக்க வேண்டும்? நான் சீமேயியின் தலையை வெட்டப் போகிறேன்” என்றான்.

10 அதற்கு அரசன், “நான் என்ன செய்ய முடியும், செருயாவின் ஜனங்களே? சீமேயி என்னை சபிக்கிறான். ஆனால் அவன் என்னை சபிக்குமாறு அவனிடம் கர்த்தர் கூறியுள்ளார்” என்றான். 11 தாவீது அபிசாயிடமும் அவனது பணியாட்களிடமும், “இங்கே பாருங்கள், என் சொந்த மகனான அப்சலோம் என்னைக் கொல்ல முயல்கிறான். சீமேயி என்ற பென்யமீன் கோத்திரத்திலிருந்து வந்தவன் என்னைக் கொல்ல அதிக உரிமையுடைவன். அவன் அதைச் செய்யட்டும். அவன் தீய வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டே இருக்கட்டும். கர்த்தர் அவ்வாறு செய்ய அவனிடம் கூறியுள்ளார். 12 ஒரு வேளை கர்த்தர் தீய காரியங்கள் எனக்கு நேரிடுவதைப் பார்ப்பார். பின்பு கர்த்தர் சீமேயி சொல்லும் தீய காரியங்கள் ஒவ்வொன்றிற்கும் பதிலாக நல்லதைச் செய்யலாம்” என்றான்.

13 இவ்வாறு தாவீதும் அவனுடைய ஆட்களும் பாதையில் தொடர்ந்து நடந்துச் சென்றனர். ஆனால் சீமேயி தாவீதைப் பின் தொடர்ந்தான். மலையோரமுள்ள மறுபுறத்துப் பாதையில் சிமேயி நடந்தான். சீமேயி தீயவற்றைச் சொல்லிக்கொண்டே நடந்தான். சீமேயி கற்களையும் அழுக்கையுங்கூட தாவீதின் மீது எறிந்தான்.

14 தாவீது அரசனும் அவனது ஆட்களும் பகூரிம்முக்கு வந்தனர். அரசனும் அவனது ஆட்களும் சோர்வுற்றிருந்தனர். ஆகையால் பகூரிமில் ஓய்வெடுத்தனர்.

15 அப்சலோம், அகித்தோப்பேல் மற்றும் இஸ்ரவேலர் அனைவரும் எருசலேமுக்கு வந்தனர். 16 தாவீதின் நண்பனாகிய அற்கியனாகிய ஊசாய் அப்சலோமிடம் வந்தான். ஊசாய் அப்சலோமிடம், “அரசரே! நீண்டகாலம் வாழ்க” என்றான்.

17 அப்சலோம் பதிலாக, “நீ உன் நண்பனான தாவீதுக்கு உண்மையாக இருக்கவில்லையா? எருசலேமைவிட்டு உன் நண்பனோடு ஏன் போகவில்லை?” என்று கூறினான்.

18 அதற்கு ஊசாய், “கர்த்தர் தேர்ந்தெடுக்கும் ஆளைச் சார்ந்தவன் நான். இந்த ஜனங்களும் இஸ்ரவேலரும் உம்மைத் தேர்ந்தெடுத்தனர். நான் உம்மோடு தங்குவேன். 19 முன்பு நான் உமது தந்தைக்குப் பணியாற்றியிருக்கிறேன். ஆகவே இப்போது நான் தாவீதின் மகனுக்குப் பணிசெய்யவேண்டும். எனவே உமக்குப் பணி செய்வேன்” என்றான்.

அப்சலோம் அகித்தோப்பேலிடம் அறிவுரை கேட்கிறான்

20 அப்சலோம் அகித்தோப்பேலிடம், “நாம் இப்போது என்ன செய்யவேண்டுமென்று சொல்லுங்கள்” என்றான்.

21 அகித்தோப்பேல் அப்சலோமிடம், “உங்கள் தந்தையார் அவரது மனைவியரில் சிலரை இங்கிருக்கும் வீட்டைக் கவனிக்க விட்டிருந்தார். போய், அவர்களோடு பாலின உறவுக்கொள்ளுங்கள். பின்பு எல்லா இஸ்ரவேலரும் உங்கள் தந்தை உங்களை வெறுப்பதை அறிவார்கள். உங்கள் ஜனங்கள் உங்களுக்கு அதிகமான ஆதரவு காட்ட ஊக்கமடைவார்கள்” என்றான்.

22 பின்பு அவர்கள் அப்சலோமிற்காக வீட்டின் மாடியின் மீது ஒரு கூடாரத்தை அமைத்தனர். அப்சலோம் தன் தந்தையின் மனைவியரோடு பாலின உறவுக்கொண்டான். இஸ்ரவேலர் அதனைப் பார்த்தனர். 23 அந்நேரத்தில் அகித்தோப்பேலின் உபதேசம் தாவீதுக்கும், அப்சலோமுக்கும் மிக முக்கியமானதாக இருந்தது. தேவன் மனிதனுக்குச் சொன்ன வாக்கைப்போன்று முக்கியமானதாக இருந்தது.

யோவான் 18:25-19:22

பேதுருவின் பொய்(A)

25 சீமோன் பேதுரு நெருப்பருகில் நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தான். அப்பொழுது அருகில் இருந்தவர்கள் “அந்த மனிதனின் சீஷர்களுள் நீயும் ஒருவன்தானே?” என்று கேட்டார்கள்.

பேதுரு அதனை மறுத்தான். அவன், “இல்லை. நான் அல்ல” என்றான்.

26 தலைமை ஆசாரியனின் வேலைக்காரர்களுள் ஒருவன் அங்கு இருந்தான். அவன் பேதுருவால் காது அறுபட்டவனின் உறவினன். அவன், “அந்தத் தோட்டத்தில் நான் உன்னையும் அந்த மனிதனோடு பார்த்தேன் என்று நினைக்கிறேன்” என்றான்.

27 ஆனால் பேதுரு மீண்டும், “இல்லை. நான் அவரோடு இருக்கவில்லை” என்று கூறினான். அப்பொழுது சேவல் கூவிற்று.

பிலாத்துவுக்கு முன் இயேசு(B)

28 பிறகு யூதர்கள் இயேசுவைக் காய்பாவிடம் இருந்து ரோம ஆளுநரின் அரண்மனைக்கு அழைத்துக்கொண்டு போனார்கள். அப்போது அதிகாலை நேரம். யூதர்கள் அரண்மனைக்கு உள்ளே போக விரும்பவில்லை. போனால் அவர்களின் தூய்மை கெட்டுத் தீட்டுப்படும். ஏனென்றால் அவர்கள் பஸ்கா பண்டிகையின் விருந்தை உண்ண விரும்பினர். 29 எனவே பிலாத்து வெளியே வந்தான். அவன் அவர்களிடம், “இந்த மனிதன் மீது என்ன குற்றம் சாட்டுகிறீர்கள்?” என்று கேட்டான்.

30 அதற்கு யூதர்கள், “அவன் ஒரு கெட்ட மனிதன். அதனால்தான் அவனை உம்மிடம் அழைத்து வந்தோம்” என்றனர்.

31 பிலாத்து யூதர்களிடம், “யூதர்களாகிய நீங்கள் இவனை அழைத்துக்கொண்டு போய் உங்கள் விதி முறைகளின்படி நியாயம் தீருங்கள்” என்றான்.

அதற்கு யூதர்கள், “எவரையும் மரண தண்டனைக்குட்படுத்த எங்களுக்கு அதிகாரமில்லையே” என்றனர். 32 (தான் எவ்வாறு மரிக்கப்போகிறேன் என்று ஏற்கெனவே இயேசு சொல்லியிருந்தது உண்மையாகும்படி இவ்வாறு நிகழ்ந்தது)

33 பிறகு பிலாத்து அரண்மனைக்குள் திரும்பிச் சென்றான். அவன் இயேசுவைத் தன்னிடம் அழைத்தான். “நீ யூதர்களின் அரசரா?” என்று அவரிடம் கேட்டான்.

34 இயேசு அவனிடம், “இது உமது சொந்தக் கேள்வியா அல்லது என்னைப்பற்றி பிறர் உம்மிடம் சொன்னதா?” என்று கேட்டார்.

35 பிலாத்து அதற்கு, “நான் யூதனல்ல. உனது சொந்த மக்களும் அவர்களின் தலைமை ஆசாரியனும் உன்னை என்னிடம் கொண்டுவந்திருக்கிறார்கள். நீ என்ன தவறு செய்தாய்?” என்று கேட்டான். 36 “எனது இராஜ்யம் இந்த உலகத்துக்கு உரியதன்று. அது இந்த உலகத்தோடு தொடர்புடையது எனில் என் சேவகர்கள் எனக்காகப் போரிட்டிருப்பார்கள். நான் யூதர்களின் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கமாட்டேன். எனவே என் இராஜ்யம் இவ்விடத்திற்கு உரியதன்று” என்று இயேசு சொன்னார்.

37 பிலாத்து அவரிடம், “அப்படியானால் நீ அரசன் தானோ?” என்று கேட்டான்.

அதற்கு இயேசு, “நான் அரசன் என்று நீ சொல்கிறாய். அது உண்மைதான். இந்த நோக்கத்துக்காகத் தான் நான் இந்த உலகத்தில் பிறந்தேன். உண்மையைச் சொல்வதற்காக வந்தேன். உண்மையுடையவன் எவனும் என் பேச்சைக் கேட்கிறான்” என்றார்.

38 பிலாத்து, “உண்மை என்பது என்ன?” என்று கேட்டான். கேட்டுக்கொண்டே மறுபடியும் அவன் யூதர்களிடம் போனான். “நான் அவனுக்கெதிராகக் குற்றம்சாட்ட முடியவில்லை. 39 பஸ்கா பண்டிகையில் உங்களுக்காக எவனாவது ஒருவனை நான் விடுதலை செய்யலாமே. ஆகையால் யூதருடைய இராஜாவை நான் உங்களுக்காக விடுதலை செய்யலாமா?” என்று கேட்டான்.

40 அதற்கு யூதர்கள், “இவனை அல்ல, பரபாஸை விடுதலை செய்யுங்கள்” என்று சத்தமிட்டார்கள். (பரபாஸ் என்பவன் ஒரு திருடன்).

19 பிறகு பிலாத்து இயேசுவை அழைத்துப்போய் சவுக்கால் அடிக்குமாறு கட்டளையிட்டான். போர்ச் சேவகர்கள் முள்ளினால் ஒரு முடியைப் பின்னினர். அவர்கள் அதை இயேசுவின் தலைமீது அணிவித்தனர். பிறகு சிவப்பான அங்கியை அவருக்கு உடுத்தினார்கள். “யூதருடைய இராஜாவே, வாழ்க” என்று அடிக்கடி பலதடவை அவரிடம் வந்து சொன்னார்கள். அவர்கள் இயேசுவை முகத்தில் அறைந்தார்கள்.

மீண்டும் பிலாத்து யூதர்களிடம் போய் “பாருங்கள்! நான் உங்களுக்காக இயேசுவை வெளியே கொண்டு வருகிறேன். நான் இவனிடம் ஒரு குற்றமும் காணவில்லை என்று நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்” என்றான். பிறகு இயேசு வெளியே வந்தார். அவர் தலையில் முள்முடியும் சரீரத்தில் சிவப்பு அங்கியும் அணிந்திருந்தார். “இதோ அந்த மனிதன்” என்று யூதர்களிடம் பிலாத்து சொன்னான்.

பிரதான ஆசாரியரும் யூதக் காவலர்களும் இயேசுவைக் கண்டவுடன் “அவனைச் சிலுவையில் அறையுங்கள்” என்று சத்தமிட்டனர்.

ஆனால் பிலாத்துவோ, “நீங்கள் அவனை அழைத்துப்போய் நீங்களாகவே அவனைச் சிலுவையில் அறையுங்கள். நான் தண்டனை தரும்படியாக இவனுக்கு எதிராக எந்த குற்றத்தையும் கண்டு பிடிக்கவில்லை” என்று கூறிவிட்டான்.

யூதர்களோ, “எங்களுக்கென்று ஒரு சட்டம் உண்டு. அதன்படி இவன் சாகவேண்டும். ஏனென்றால் அவன் தன்னை தேவனின் குமாரன் என்று கூறியிருக்கிறான்” என்றனர்.

பிலாத்து இவற்றைக் கேட்டதும் மேலும் பயந்தான். பிலாத்து மீண்டும் அரண்மனைக்குள் போனான். அவன் இயேசுவிடம், “நீ எங்கே இருந்து வருகிறாய்?” எனக் கேட்டான். ஆனால் இயேசு அவனுக்குப் பதில் சொல்லவில்லை. 10 அதனால் பிலாத்து, “நீ என்னோடு பேச மறுக்கவா செய்கிறாய்? நான் உன்னை விடுதலை செய்யக்கூடிய அதிகாரத்தில் இருப்பவன். இதனை நினைத்துக்கொள். உன்னைச் சிலுவையில் அறைந்து கொல்லும் அதிகாரமும் எனக்கு இருக்கிறது” என்றான்.

11 “தேவனிடமிருந்து அதிகாரம் வந்தால் ஒழிய நீர் என்மீது எவ்வித அதிகாரமும் செலுத்த முடியாது. எனவே, என்னை உம்மிடம் ஒப்படைத்தவனுக்கு அதிகப் பாவம் உண்டு” என்று இயேசு பதிலுரைத்தார்.

12 இதற்குப் பிறகு இயேசுவை விடுதலை செய்யப் பிலாத்து முயற்சி செய்தான். ஆனால் யூதர்களோ, “எவனொருவன் தன்னை அரசன் என்று கூறுகிறானோ அவன் இராயனின் பகைவன். எனவே, நீங்கள் இயேசுவை விடுதலை செய்தால் நீங்கள் இராயனின் நண்பன் இல்லை என்று பொருள்” எனச் சத்தமிட்டார்கள்.

13 யூதர்கள் சொன்னவற்றைப் பிலாத்து கேட்டான். எனவே, அவன் இயேசுவை அரண்மனையை விட்டு வெளியே இழுத்து வந்தான். யூதர்களின் மொழியில் கபத்தா என்று அழைக்கப்பெறும் கல்தள வரிசை அமைக்கப்பட்ட மேடைக்கு வந்தான். அங்கே இருந்த நீதிபதியின் இருக்கையில் அமர்ந்தான். 14 அப்பொழுது அது பஸ்காவுக்குத் தயாராகும் நாளாகவும் மதியவேளையாகவும் இருந்தது. பிலாத்து யூதர்களிடம் “இதோ உங்கள் இராஜா” என்றான்.

15 அதற்கு யூதர்கள், “அவனை அப்புறப்படுத்துங்கள்! அவனை அப்புறப்படுத்துங்கள்! அவனைச் சிலுவையில் அறைந்து கொல்லுங்கள்” என்று சத்தமிட்டனர்.

அவர்களிடம் பிலாத்து, “உங்களது அரசனை நான் சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்று விரும்புகிறீர்களா?” என்று கேட்டான்.

அதற்குத் தலைமை ஆசாரியன், “எங்களது ஒரே அரசர் இராயன் மட்டுமே” என்று பதில் சொன்னான். 16 அதனால் பிலாத்து இயேசுவைச் சிலுவையில் அறைந்து கொல்லும்படி அவரை அவர்களிடம் ஒப்படைத்தான்.

சிலுவையில் இயேசு(C)

சேவகர்கள் இயேசுவை இழுத்துக்கொண்டுபோனார்கள். 17 இயேசு தனது சிலுவையைத் தானே சுமந்துகொண்டுபோனார். அவர் மண்டை ஓடுகளின் இடம் என்னும் கபாலஸ்தலம் என்று அழைக்கப்படும் இடத்துக்குப்போனார். (இதனை யூத மொழியில் கொல்கதா என்று அழைப்பர்) 18 கொல்கதாவில் சிலுவையில் இயேசுவை ஆணிகளால் அறைந்தார்கள். அவர்கள் வேறு இருவரையும் சிலுவையில் அறைந்தனர். இயேசுவை நடுவிலும் ஏனைய இருவரை இரு பக்கத்திலும் நட்டு வைத்தனர்.

19 பிலாத்து ஓர் அறிவிப்பு எழுதி அதனை இயேசுவின் சிலுவையின் மேல் பொருத்தி வைத்தான். அந்த அறிவிப்பில் “நசரேயனாகிய இயேசு, யூதர்களின் அரசர்” என்று எழுதப்பட்டிருந்தது. 20 அந்த அறிவிப்பு யூத மொழியிலும் இலத்தீன், கிரேக்க மொழிகளிலும் இருந்தது. ஏராளமான யூதர்கள் இந்த அறிவிப்பை வாசித்தனர். ஏனென்றால் இயேசுவைச் சிலுவையில் அறைந்த அந்த இடம் நகரத்தின் அருகில் இருந்தது.

21 யூதர்களின் தலைமை ஆசாரியன் பிலாத்துவிடம், “யூதருடைய அரசர் என்று எழுதக்கூடாது. அவன் தன்னை யூதருடைய அரசன் என்று சொன்னதாக எழுதவேண்டும்” என்றான்.

22 அதற்குப் பிலாத்து, “நான் எழுதினதை மாற்றி எழுதமாட்டேன்” என்று கூறிவிட்டான்.

சங்கீதம் 119:113-128

சாமெக்

113 கர்த்தாவே, உம்மிடம் முற்றிலும் நேர்மையாக இராத ஜனங்களை நான் வெறுக்கிறேன்.
    ஆனால் நான் உமது போதனைகளை நேசிக்கிறேன்.
114 என்னை மூடிமறைத்துப் பாதுகாத்துக்கொள்ளும்.
    கர்த்தாவே, நீர் கூறுகிற ஒவ்வொன்றையும் நான் நம்புகிறேன்.
115 கர்த்தாவே, தீய ஜனங்கள் என்னருகே வரவிடாதேயும்.
    நான் என் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவேன்.
116 கர்த்தாவே, நீர் வாக்குறுதியளித்தபடியே என்னைத் தாங்கி உதவும். நானும் வாழ்வேன்.
    நான் உம்மை நம்புகிறேன், நான் ஏமாற்றமடையாதபடிச் செய்யும்.
117 கர்த்தாவே, எனக்கு உதவும், நான் காப்பாற்றப்படுவேன்.
    நான் உமது கட்டளைகளை என்றென்றைக்கும் கற்பேன்.
118 கர்த்தாவே, உமது சட்டங்களை மீறுகிற ஒவ்வொருவரையும் நீர் தள்ளிவிடுகிறீர்.
    ஏனெனில் அந்த ஜனங்கள் உம்மைப் பின்பற்ற சம்மதித்தபோது பொய் கூறினார்கள்.
119 கர்த்தாவே, நீர் பூமியிலுள்ள தீயோரைக் களிம்பைப்போல் அகற்றிவிடுகிறீர்.
    எனவே நான் உமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் நேசிப்பேன்.
120 கர்த்தாவே, நான் உம்மைக் கண்டு பயப்படுகிறேன்.
    நான் உமது சட்டங்களுக்குப் பயந்து அவற்றை மதிக்கிறேன்.

ஆயின்

121 நான் நியாயமும் நல்லதுமானவற்றைச் செய்கிறேன்.
    கர்த்தாவே, என்னைத் துன்புறுத்த விரும்புவோரிடம் என்னை ஒப்புவியாதேயும்.
122 என்னிடம் நல்லவராக இருக்க உறுதியளியும்.
    நான் உமது ஊழியன். கர்த்தாவே, அந்தப் பெருமைக்காரர்கள் என்னைத் துன்புறுத்தவிடாதேயும்.
123 கர்த்தாவே, உம்மிடமிருந்து உதவியை எதிர் நோக்கியும், ஒரு நல்ல வார்த்தையை எதிர்பார்த்தும்,
    என் கண்கள் தளர்ந்து போய்விட்டன.
124 நான் உமது ஊழியன்.
    உமது உண்மை அன்பை எனக்குக் காட்டும்.
    உமது சட்டங்களை எனக்குப் போதியும்.
125 நான் உமது ஊழியன்.
    உமது உடன்படிக்கையை நான் அறிந்துகொள்ளும்படியான புரிந்துகொள்ளுதலைப் பெற எனக்கு உதவும்.
126 கர்த்தாவே, நீர் ஏதேனும் செய்வதற்கு இதுவே தக்கநேரம்.
    ஜனங்கள் உமது சட்டத்தை மீறிவிட்டார்கள்.
127 கர்த்தாவே, மிகவும் தூய்மையான பொன்னைக் காட்டிலும்
    நான் உமது கட்டளைகளை நேசிக்கிறேன்.
128 நான் உமது கட்டளைகளுக்கெல்லாம் கவனமாகக் கீழ்ப்படிகிறேன்.
    தவறான போதனைகளை நான் வெறுக்கிறேன்.

நீதிமொழிகள் 16:10-11

10 அரசன் பேசும்போது, அவனது வார்த்தைகள் சட்டமாகும். அவனது முடிவுகள் எப்பொழுதும் சரியாக இருக்கவேண்டும்.

11 எல்லா அளவுக் கருவிகளும் சரியாக இருக்க வேண்டும் என்றும், அனைத்து வியாபார ஒப்பந்தங்களும் நேர்மையாக இருக்கவேண்டும் என்றும் கர்த்தர் விரும்புகின்றார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center