Print Page Options Listen to Reading
Previous Prev Day Next DayNext

The Daily Audio Bible

This reading plan is provided by Brian Hardin from Daily Audio Bible.
Duration: 731 days

Today's audio is from the VOICE. Switch to the VOICE to read along with the audio.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
2 சாமுவேல் 2:12-3:39

ஆபத்தான போட்டி

12 நேரின் மகனாகிய அப்னேரும் சவுலின் மகனாகிய இஸ்போசேத்தின் அதிகாரிகளும் மகனாயீமைவிட்டுக் கிபியோனுக்குச் சென்றனர். 13 செருயாவின் மகனாகிய யோவாபும், தாவீதின் அதிகாரிகளும் சேர்ந்து கிபியோனுக்குச் சென்றனர். கிபியோனின் குளத்தருகே அவர்கள் அப்னேரையும் இஸ்போசேத்தின் அதிகாரிகளையும் சந்தித்தனர். அப்னேரின் கூட்டத்தினர் குளத்தின் ஒரு கரையிலும், யோவாபின் கூட்டத்தார் குளத்தின் மறுகரையிலும் அமர்ந்தனர்.

14 அப்னேர் யோவாபிடம், “இளம் வீரர்கள் நமக்கு முன்பு ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக் கொள்ளட்டும்” என்றான்.

யோவாபும், “சரி நாம் போட்டியிடலாம்” என்றான். 15 எனவே இளம் வீரர்கள் எழுந்தனர். இரு குழுவினரும் போராடத் துணிந்து தங்கள் ஆட்களை எண்ணிக்கையிட்டனர். சவுலின் மகனாகிய இஸ்போசேத்திற்காகச் சண்டையிட பென்யமீன் கோத்திரத்திலிருந்து 12 பேர்களையும் தாவீதின் பக்கத்திலிருந்து 12 பேர்களையும் அவர்கள் தேர்ந்தெடுத்தனர். 16 ஒவ்வொருவனும் பகைவனின் தலையைப் பிடித்து வாளால் விலாவில் குத்திக்கொண்டான். எனவே அம்மனிதர்கள் ஒருமித்து வீழ்ந்தனர். எனவே அந்த இடம், “கூரிய கத்திகளின் நிலம்” (எல்கா அருரீம்) என அழைக்கப்பட்டது. இந்த இடம் கிபியோனில் இருக்கிறது. 17 பின் அந்தச் சண்டை பெரும் யுத்தமாக மாறிற்று. அந்த நாளில் தாவீதின் அதிகாரிகள் அப்னேரையும் இஸ்ரவேலரையும் தோற்கடித்தனர்.

அப்னேர் ஆசகேலைக் கொல்வது

18 செருயாவிற்கு மூன்று மகன்கள் இருந்தனர். அவர்கள் யோவாப், அபிசாய், ஆசகேல் ஆகியோராவார்கள். ஆசகேல் மிக வேகமாக ஓடக்கூடியவன். காட்டுமானைப் போன்ற வேகமுள்ளவன். 19 ஆசகேல் அப்னேரிடம் ஓடி அவனைத் துரத்த ஆரம்பித்தான். 20 அப்னேர் திரும்பி பார்த்து, “நீ ஆசகேலா?” எனக் கேட்டான்.

ஆசகேல், “ஆம், நானே தான்” என்றான்.

21 அப்னேர் ஆசகேலைத் தாக்க விரும்பவில்லை. எனவே அப்னேர் ஆசகேலை நோக்கி, “என்னைத் துரத்துவதைவிட்டு, இளம் வீரர்களுள் வேறு ஒருவனைத் துரத்து, நீ எளிதில் அவனை வென்று அவன் போர் அங்கிகளை எடுத்துவிடுவாய்” என்றான். ஆனால் ஆசகேல் அப்னேரைத் துரத்துவதை நிறுத்தவில்லை.

22 அப்னேர் மீண்டும் ஆசகேலிடம், “என்னைத் துரத்துவதை விட்டுவிடு. இல்லையென்றால் நான் உன்னைக் கொல்ல வேண்டியிருக்கும். பிறகு உனது சகோதரனாகிய யோவாபின் முகத்தை மீண்டும் நான் பார்க்க முடியாது” என்றான்.

23 ஆனால் ஆசகேலோ அப்னேரை விடாமல் துரத்தினான். எனவே அப்னேர் ஈட்டியின் மறுமுனையால் ஆசகேலின் வயிற்றில் குத்தினான். ஈட்டி ஆசகேலின் வயிற்றினுள் புகுந்து முதுகில் வெளி வந்தது. ஆசகேல் அங்கேயே விழுந்து மரித்தான்.

யோவாபும் அபிசாயும் அப்னேரைத் துரத்துதல்

ஆசகேலின் உடல் நிலத்தில் கிடந்தது. ஓடிவந்த மனிதர்கள் அவனருகே நின்றுவிட்டனர். 24 ஆனால் யோவாபும், அபிசாயும் [a] அப்னேரைத் தொடர்ந்து துரத்திக் கொண்டே ஓடினார்கள். அம்மா என்னும் மேட்டை அவர்கள் அடைந்தபோது சூரியன் அஸ்தமித்துக்கொண்டிருந்தது. (கிபியோன் பாலைவனத்திற்குப் போகும் வழியில் கீயாவிற்கு எதிரில் அம்மா மேடு இருந்தது) 25 பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த மனிதர்கள் அப்னேரிடம் வந்தனர். அவர்கள் எல்லோரும் சேர்ந்து மலையின் உச்சியில் நின்று கொண்டிருந்தார்கள்.

26 அப்னேர் யோவாபை நோக்கி உரக்க, “நாம் போரிட்டு ஒருவரையொருவர் கொல்லவேண்டுமா? இது துக்கத்திலேயே முடிவுறும் என்பது உங்களுக்கு நிச்சயமாகத் தெரியும். சொந்த சகோதரர்களையே துரத்திக் கொண்டு இருக்கவேண்டாம் என ஜனங்களுக்குச் சொல்” என்றான்.

27 அப்போது யோவாப், “நீ அவ்வாறு சொன்னது நல்லதாயிற்று, நீ அவ்வாறு சொல்லாவிட்டால், எல்லாரும் தங்கள் சகோதரர்களைக் காலைவரை துரத்திக்கொண்டே இருப்பார்கள் என்று தேவனுடைய ஜீவனைக் கொண்டுச் சொல்லுகிறேன்” என்றான். 28 எனவே, யோவாப் ஒரு எக்காளத்தை ஊதி, தனது ஆட்கள் இஸ்ரவேலரைக் துரத்தாதபடி தடுத்து நிறுத்தினான். அவர்கள் இஸ்ரவேலரோடு போரிட முயலவில்லை.

29 அப்னேரும் அவனது ஆட்களும் யோர்தான் பள்ளத்தாக்கு வழியாக இரவுப் பொழுதில் அணிவகுத்து சென்றனர். அவர்கள் யோர்தான் நதியைக் கடந்து மகனாயீமுக்கு வரும்வரை பகல் முழுவதும் அணிவகுத்து நடந்தனர்.

30 அப்னேரைத் துரத்துவதை விட்டுவிட்டு யோவாப் திரும்பிச் சென்றான். யோவாப் தன் ஆட்களை அழைத்தான். ஆசகேல் உட்பட தாவீதின் அதிகாரிகளுள் 19 பேர் அங்கு இல்லாதிருப்பதைக் கண்டான். 31 ஆனால் தாவீதின் அதிகாரிகள் பென்யமீன் கோத்திரத்திலிருந்து அப்னேரின் ஆட்களில் 360 பேரைக் கொன்றிருந்தனர். 32 தாவீதின் அதிகாரிகள் ஆசகேலை எடுத்துச் சென்று பெத்லகேமிலிருந்த அவனது தந்தையின் கல்லறையில் புதைத்தனர்.

யோவாபும், அவனது மனிதர்களும் இரவு முழுவதும் அணிவகுத்துச் சென்றனர். அவர்கள் எப்ரோனை அடைந்தபோது சூரியன் உதித்தது.

இஸ்ரவேலுக்கும் யூதாவுக்குமிடையே போர்

சவுல், தாவீது ஆகியோரின் குடும்பத்தாருக்கிடையே நீண்டகாலம் யுத்தம் தொடர்ந்தது. தாவீது வலிமை பெற்றுக்கொண்டே இருந்தான். சவுலின் குடும்பத்தார் தளர்ந்துக்கொண்டே வந்தனர்.

தாவீதுக்கு ஆறு மகன்கள் எப்ரோனில் பிறந்தனர்

எப்ரோன் நகரில் தாவீதுக்கு ஆண் பிள்ளைகள் பிறந்தனர்.

முதல் மகன் அம்மோன். அம்மோனின் தாய் யெஸ்ரயேலைச் சேர்ந்த அகினோவாள் ஆவாள்.

இரண்டாவது மகன் கீலேயாப். கீலேயாபின் தாய் அபிகாயில். அவள் கர்மேலிலுள்ள நாபாலின் விதவையாயிருந்தாள்.

மூன்றாவது மகன் அப்சலோம். இவனது தாய், கேசூரின் அரசனாகிய தல்மாயின் மகள் மாக்காள் என்பவள் ஆவாள்.

நான்காம் மகன் அதோனியா. அதோனியாவின் தாய் ஆகீத்.

ஐந்தாம் மகன் செப்பத்தியா. இவனது தாய் அபித்தால்.

ஆறாம் மகன் இத்ரேயாம். தாவீதின் மனைவி எக்லாள் இத்ரேயாமுக்கு தாய்.

தாவீதுக்கு எப்ரோனில் இந்த ஆறு மகன்களும் பிறந்தனர்.

தாவீதோடு சேர அப்னேரின் தீர்மானம்

தாவீது, சவுல் ஆகியோரின் குடும்பங்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டிருந்த போது சவுலின் படையில் அப்னேர் மிகவும் பலமடைந்து வந்தான். சவுலிடம் ஆயாவின் மகளான ரிஸ்பாள் என்னும் பெயருள்ள வேலைக்காரி ஒருத்தி இருந்தாள். இஸ்போ சேத் அப்னேரை நோக்கி, “எனது தந்தையின் வேலைக்காரியோடு நீ ஏன் பாலின உறவு கொண்டாய்?” என்று கேட்டான்.

இஸ்போசேத் இவ்வாறு கேட்டதால் அப்னேர் கோபமடைந்தான். அப்னேர், “நான் சவுலுக்கும் அவனது குடும்பத்துக்கும் உண்மையுள்ளவனாக இருந்தேன். நான் உன்னைத் தாவீதிடம் ஒப்படைக்கவில்லை. அவன் உன்னைத் தோற்கடிக்க அனுமதிக்கவில்லை. நான் யூதாவுக்காக உழைக்கும் வஞ்சகன் அல்ல. நான் இத்தீயக் காரியத்தைச் செய்ததாக நீ கூறிக்கொண்டிருக்கிறாய். 9-10 நான் இப்போது இந்த வாக்குறுதியை அளிக்கிறேன். தேவன் சொன்ன காரியங்கள் நிறைவேறும் என நான் உறுதியாக நம்புகிறேன். சவுலின் குடும்பத்தாரிடமிருந்து அரசை எடுத்து தாவீதின் குடும்பத்தாருக்குக் கொடுப்பதாக கர்த்தர் கூறினார். கர்த்தர் தாவீதை இஸ்ரவேலுக்கும் யூதாவுக்கும் அரசனாக்குவார். தாணிலிருந்து பெயெர்செபா வரைக்கும் [b] அவன் அரசாளுவான். இது நிகழும்படியாக நான் செய்யாவிட்டால் தேவன் எனக்குத் தீமை செய்வார் என்று நான் எதிர்பார்க்கிறேன்!” என்றான். 11 இஸ்போசேத்தால் அப்னேருக்கு எந்த பதிலும் கூற முடியவில்லை. அவனைக் கண்டு இஸ்போசேத் மிகவும் பயந்தான்.

12 அப்னேர் தாவீதிடம் செய்தி சொல்வோரை அனுப்பினான். அப்னேர், “நீ யார் இந்த நாட்டை ஆளவேண்டும் என்று நினைக்கிறாய்? என்னோடு ஒப்பந்தம் செய்துக்கொள். இஸ்ரவேலருக்கு அரசனாகும்படியாக நான் உனக்கு உதவுவேன்” என்றான்.

13 தாவீது, “நல்லது! நான் உன்னோடு ஒரு ஒப்பந்தம் செய்துக்கொள்வேன். ஆனால் உன்னிடம் ஒரு காரியத்தைக் கேட்கிறேன்: சவுலின் மகள் மீகாளை என்னிடம் அழைத்துவரும்வரை உன்னை நான் சந்திக்கமாட்டேன்” என்றான்.

தாவீது தன் மனைவி மீகாளை பெற்றுக்கொள்கிறான்

14 தாவீது சவுலின் மகனாகிய இஸ்போசேத்திடம் செய்தியோடு தூதுவரை அனுப்பினான். தாவீது, “என்னுடைய மனைவியாகிய மீகாளைக் கொடு. அவளை எனக்கு கொடுப்பதாக வாக்களிக்கப்பட்டுள்ளது. நான் அவளுக்காக நூறு பெலிஸ்தியரைக் கொன்றேன்” என்றான்.

15 இஸ்போசேத் லாயிசின் மகனாகிய பல்த்தியேலிடமிருந்து மீகாளை அழைத்து வருமாறு ஆட்களை அனுப்பினான். 16 மீகாளைப் பின் தொடர்ந்து அவள் கணவன் பல்த்தியேலும் சென்றான். மீகாளோடு பகூரீமுக்கு வந்தபோது பல்த்தியேல் அழுதுக்கொண்டே பின்தொடர்ந்தான். ஆனால் அப்னேர் பல்த்தியேலை நோக்கி, “வீட்டிற்குப் போ” என்றான். எனவே பல்த்தியேல் தன் வீட்டிற்குத் திரும்பிச் சென்றான்.

தாவீதுக்கு உதவுவதாக அப்னேரின் உறுதி

17 இஸ்ரவேலின் தலைவர்களுக்கு அப்னேர் செய்தி சொல்லியனுப்பினான். அவன், “நீங்கள் தாவீதை அரசனாக ஆக்கக் காத்திருக்கிறீர்கள். 18 இப்போது அவ்வாறே செய்யுங்கள்! கர்த்தர் தாவீதைக் குறித்து ஏற்கெனவே இவ்வாறு சொல்லியிருக்கிறார். ‘இஸ்ரவேலராகிய எனது ஜனங்களை நான் பெலிஸ்தியரிடமிருந்தும் பிற பகைவர்களிடமிருந்தும் விடுவிப்பேன். எனது தாசனாகிய தாவீதின் மூலமாக இதைச் செய்வேன்’” என்றார்.

19 எப்ரோனிலிருந்த தாவீதுக்கு அப்னேர் சொன்ன இக்காரியங்களை பென்யமீன் கோத்திரத்திற்கும் சொன்னான். பென்யமீன் கோத்திரத்திற்கும் இஸ்ரவேல் ஜனங்களுக்கும் அப்னேர் கூறிய காரியங்கள் நன்மையாகத் தோன்றின.

20 பின்பு எப்ரோனிலிருந்த தாவீதிடம் அப்னேர் வந்தான். அவன் தன்னோடு 20 பேரை அழைத்து வந்திருந்தான். அப்னேருக்கும் அவனோடு வந்த ஆட்களுக்கும் தாவீது விருந்தளித்தான்.

21 அப்னேர் தாவீதை நோக்கி, “எனது ஆண்டவனும், அரசருமானவரே! நான் அனைத்து இஸ்ரவேலரையும் உம்மிடம் அழைத்துவர அனுமதியும். அப்போது அவர்கள் உம்மோடு ஒரு ஒப்பந்தம் செய்துக்கொள்வார்கள். பின் நீர் விரும்பியதுபோல் இஸ்ரவேலை ஆளலாம்” என்றான்.

எனவே தாவீது அப்னேரை அனுப்பிவிட்டான். அப்னேர் சமாதானமாய் திரும்பினான்.

அப்னேரின் மரணம்

22 யோவாபும் தாவீதின் அதிகாரிகளும் யுத்தத்திலிருந்து திரும்பினார்கள். பகைவரிடமிருந்து எடுத்த பல பொருட்கள் அவர்களிடமிருந்தன. அப்போதுதான் அப்னேர் தாவீதிடமிருந்து சமாதானமாய் புறப்பட்டுச் சென்றிருந்தான். ஆதலால் அந்நேரம் எப்ரோனில் தாவீதோடு அப்னேர் இருக்கவில்லை 23 யோவாபும் அவனது படையும் எப்ரோனை அடைந்தது. படையினர் யோவாபிடம், “நேரின் மகனாகிய அப்னேர் தாவீது அரசனிடம் வந்திருந்தான். அவன் சமாதானமாய் செல்லுமாறு தாவீது அனுமதித்தான்” என்றனர்.

24 யோவாப் அரசனிடம் வந்து, “நீங்கள் என்ன செய்தீர்கள்? அப்னேர் உங்களிடம் வந்தும், அவனுக்கு எந்தத் துன்பமும் செய்யாமல் அவனை அனுப்பியுள்ளீர்கள்! 25 நேரின் மகனாகிய அப்னேரை உமக்குத் தெரியும். அவன் உம்மை வஞ்சிக்க வந்தான். நீர் செய்துக்கொண்டிருக்கும் காரியங்களைக் குறித்து வேவு பார்க்க அவன் வந்தான்” என்றான்.

26 யோவாப் தாவீதை விட்டுச்சென்று சீராவின் கிணற்றருகே இருந்த அப்னேரைச் சந்திக்கும்படி தூதுவர்களை முன்னே அனுப்பினான். அவர்கள் அப்னேரை தனியே அழைத்து வந்தனர். அது தாவீதுக்குத் தெரிந்திருக்கவில்லை. 27 அப்னேர் எப்ரோனை அடைந்ததும், அவனோடு தனித்துப் பேசும்படியாக யோவாப் வாசலின் பின்புறம் அழைத்துச் சென்றான். அப்போது யோவாப் அப்னேரை வயிற்றில் குத்தினான். அப்னேர் மரித்தான். யோவாபின் சகோதரனான ஆசகேலை அப்னேர் கொன்றிருந்தான். ஆகையால் இப்போது யோவாப் அப்னேரைக் கொன்றான்.

அப்னேருக்காக தாவீதின் அழுகை

28 தாவீது நடந்ததை எல்லாம் கேள்விப்பட்டான். தாவீது, “நானும் எனது அரசும் நேரின் மகனாகிய அப்னேரின் மரணத்தைக் குறித்து என்றும் களங்கமற்றவர்கள். இதைக் குறித்து கர்த்தர் அறிவார். 29 யோவாபின் குடும்பத்தார் குற்றவாளிகள். அவர்களுக்கும் பல தொல்லைகள் நேரக்கூடும். தொழு நோய் போன்றவற்றால் அக்குடும்பத்தினர் பாதிக்கப்படக்கூடும். அவர்கள் முடவர்களாகக் கூடும். யுத்தத்தில் மரிக்கக்கூடும், உண்ண உணவின்றி வாழக்கூடும்!” என்றான்.

30 கிபியோனில் நடந்த யுத்தத்தில் தங்கள் சகோதரனாகிய ஆசகேலை அப்னேர் கொன்றதால் யோவாபும் அவனது சகோதரன் அபிசாயும் அப்னேரைக் கொன்றார்கள்.

31-32 யோவாபிடமும், யோவாபுடனிருந்த எல்லா ஜனங்களிடமும் தாவீது, “உங்கள் ஆடைகளைக் கிழித்து துக்கத்திற்குரிய ஆடைகளை அணிந்துகொள்ளுங்கள். அப்னேருக்காக அழுங்கள்” என்றான். அவர்கள் எப்ரோனில் அப்னேரைப் புதைத்தார்கள். அடக்கத்திற்கு தாவீது சென்றிருந்தான். தாவீது அரசனும் எல்லா ஜனங்களும் கல்லறையருகே அப்னேருக்காக அழுதனர்.

33 அப்னேரின் அடக்கத்தின்போது தாவீது அரசன் இந்த சோக கீதத்தைப் பாடினான்:

“அறிவில்லாத குற்றவாளியைப்போல அப்னேர் மரித்தானா?
34     அப்னேர், உனது கைகள் கட்டப்படவில்லை.
    கால்களில் விலங்கு மாட்டப்படவில்லை, அப்னேரே, தீயோர் உன்னை கொன்றனர்!”

அப்போது ஜனங்கள் எல்லோரும் அப்னேருக்காக மீண்டும் அழுதனர். 35 அந்த நாள் முழுவதும் ஜனங்கள் தாவீதிடம் வந்து அப்பம் உண்ணுமாறு வற்புறுத்தினார்கள். ஆனால் தாவீது விசேஷ வாக்குறுதி செய்திருந்தான். அவன், “சூரியன் மறையும் முன்னர் நான் ரொட்டியையோ, வேறு உணவையோ உட்கொண்டால் தேவன் என்னைத் தண்டிப்பாராக” என்றான். 36 எல்லோரும் நடந்ததைக் கண்டனர். தாவீது அரசனின் செய்கையைக் கண்டு திருப்தியுற்றனர். 37 நேரின் மகனாகிய அப்னேரைத் தாவீது அரசன் கொல்லவில்லையென யூதா ஜனங்களும் இஸ்ரவேலரும் புரிந்துக்கொண்டனர்.

38 தாவீது அரசன் அதிகாரிகளை நோக்கி, “இஸ்ரவேலில் இன்று ஒரு முக்கியமான தலைவன் மரித்துவிட்டான் என்பதை அறிவீர்கள். 39 இதே நாளில் நான் அரசனாகவும், அபிஷேகம் செய்யப்பட்டேன். இந்த செருயாவின் மகன்கள் எனக்கு மிகுந்த துன்பத்தை கொடுத்துவிட்டனர். அவர்கள் தவறுக்கேற்ற தண்டனையை கர்த்தர் அளிப்பார் என நம்புகிறேன்” என்றான்.

யோவான் 13:1-30

சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்

13 இது ஏறக்குறைய பஸ்கா பண்டிகைக்கான நேரம். இதுதான் இந்த உலகத்தை விட்டுச் செல்வதற்கான நேரம் என்பதை இயேசு அறிந்திருந்தார். இயேசு, தன் பிதாவிடம் திரும்பிப் போவதற்கான காலம் இது. இயேசு அவருடைய மக்களின் மீது பெரிதான அன்பை எப்போதும் வைத்திருந்தார். இப்பொழுது, அவருக்கு அவர்களிடம் கொண்ட அன்பை வெளிப்படுத்தும் நேரமாயிற்று.

இயேசுவும் அவர் சீஷர்களும் மாலை உணவுக்காக அமர்ந்தனர். ஏற்கெனவே சாத்தான் யூதாஸ்காரியோத்தின் மனதில் புகுந்து அவனை இயேசுவுக்கு எதிராக ஆக்கியிருந்தான். (யூதாஸ் சீமோனின் மகன்) இயேசுவுக்கு அவரது பிதா எல்லாவிதமான அதிகாரத்தையும் கொடுத்திருந்தார். இயேசு இதனை அறிந்திருந்தார். தேவனிடமிருந்து தான் வந்ததாக இயேசு தெரிந்துவைத்திருந்தார். அதோடு அவர் தன் பிதாவிடமே திரும்பிப் போகவேண்டும் என்பதனை அறிந்திருந்தார். அவர்கள் உணவு உண்டுகொண்டிருக்கும்போது, இயேசு எழுந்து ஆடைகளைக் கழற்றி வைத்தார். ஒரு துண்டை எடுத்துத் தன் இடுப்பில் கட்டிக் கொண்டார். பிறகு இயேசு ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றினார். அவர் தம் சீஷர்களின் கால்களைக் கழுவிச் சுத்தப்படுத்த ஆரம்பித்தார். பின் தன் இடுப்புத் துண்டால் அவர்கள் கால்களைத் துடைத்தார்.

இயேசு, சீமோன் பேதுருவிடம் வந்தார். ஆனால் பேதுருவோ இயேசுவிடம், “ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவக்கூடாது” என்றான்.

அதற்கு இயேசு அவனிடம், “நான் என்ன செய்கிறேன் என்று இப்போது உனக்குத் தெரியாது. ஆனால் பிறகு நீ புரிந்துகொள்வாய்” என்றார்.

பேதுருவோ, “இல்லை நீர் என் கால்களைக் கழுவவேகூடாது” என்றான்.

இயேசுவோ, “நான் உன் கால்களைக் கழுவாவிட்டால், நீ என்னோடு பங்குள்ளவனாக இருக்க முடியாது” என்றார்.

உடனே பேதுரு, “ஆண்டவரே, அப்படியானால் என் கால்களோடு, என் கைகளையும் தலையையும்கூடக் கழுவுங்கள்” என்றான்.

10 “ஒரு மனிதன் குளித்தபிறகு அவனது சரீரம் எல்லாம் சுத்தமாகிவிடுகிறது. அதன் பிறகு அவன் கால்களை மட்டும் கழுவினால் போதும். நீங்கள் சுத்தமாக இருக்கிறீர்கள். ஆனால் அனைவரும் அல்ல” என்றார் இயேசு. 11 யார் தனக்கு எதிராக மாறியுள்ளவன் என்று இயேசுவுக்குத் தெரியும். அதனால்தான் இயேசு “நீங்கள் அனைவரும் சுத்தமாக இல்லை” என்று கூறினார்.

12 இயேசு அவர்களின் கால்களைச் சுத்தப்படுத்தி முடித்தார். பிறகு அவர் தன் ஆடைகளை அணிந்துகொண்டு சாப்பாடு மேசைக்குத் திரும்பினார். இயேசு அவர்களிடம், “நான் உங்களுக்குக்காகச் செய்தவற்றை நீங்கள் புரிந்துகொண்டீர்களா? 13 நீங்கள் என்னை ‘ஆண்டவரே’ என்று அழைக்கிறீர்கள், இதுதான் சரியானது, ஏனென்றால் உண்மையில் நான் ஆண்டவராகவே இருக்கிறேன். 14 நான் உங்கள் போதகராகவும் ஆண்டவராகவும் இருக்கிறேன். ஆனால் நான் ஒரு வேலைக்காரனைப்போன்று உங்கள் கால்களைக் கழுவினேன். ஆகையால் நீங்கள் ஒருவருக்கொருவர் உங்கள் கால்களைக் கழுவிக்கொள்ளுங்கள். 15 இதை நான் ஒரு முன்மாதிரியாகவே செய்தேன். நான் உங்களுக்குச் செய்ததுபோலவே நீங்களும் ஒருவருக்கொருவர் செய்துகொள்ளுங்கள். 16 நான் உங்களுக்கு உண்மையாகவே கூறுகிறேன். ஒரு வேலைக்காரன் தன் எஜமானனைவிடப் பெரியவன் அல்ல. ஒருவன் என்னதான் பெரிய காரியங்களைச் செய்தாலும் அனுப்பப்பட்டவன் அனுப்பியவரைவிட பெரியவனல்ல. 17 நீங்கள் இவற்றை அறிந்துகொண்டால், அவற்றைச் செய்யும்போது மகிழ்ச்சியடைவீர்கள்.

18 “நான் உங்கள் எல்லாரையும்பற்றிப் பேசவில்லை. நான் தேர்ந்தெடுத்த மக்களைப் பற்றி நான் அறிவேன். ஆனால் வேதவாக்கியங்கள் நிறைவேறவேண்டும். ‘என்னோடு பகிர்ந்துகொண்டு உண்பவனே எனக்கு எதிராகத் திரும்பிவிட்டான்.’ [a] 19 இது நிறைவேறும் முன்னால் நான் உங்களுக்கு இதை இப்பொழுது சொல்லுகிறேன். இது நடக்கும்போது நானே அவர் என நம்புவீர்கள். 20 நான் உங்களுக்கு உண்மையாகவே கூறுகிறேன். என்னை ஏற்றுக்கொள்பவன் என்னை அனுப்பியவரையும் ஏற்றுக்கொள்கிறான்” என்றார்.

காட்டிக் கொடுப்பவன்(A)

21 இவற்றைச் சொன்னபிறகு இயேசு மிகவும் கலக்கம் அடைந்தார். வெளிப்படையாக அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன். உங்களில் ஒருவனே என்னைக் காட்டிக்கொடுப்பான்” என்றார்.

22 இயேசுவின் சீஷர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். இயேசுவால் குறிப்பிடப்பட்டவன் எவனென்று அவர்களால் அறிந்துகொள்ள முடியவில்லை. 23 சீஷர்களில் ஒருவன் இயேசுவுக்கு அடுத்து அமர்ந்திருந்தான். அவனைத்தான் இயேசு பெரிதும் நேசித்தார். 24 சீமோன் பேதுரு அவனிடம் இயேசுவிடம் கேட்கும்படி சாடையாகத் தெரிவித்தான்.

25 அவன் இயேசுவின் அருகில் சாய்ந்து, “ஆண்டவரே, உங்களுக்கு எதிரானவன் யார்?” என்று கேட்டான்.

26 இயேசு அதற்கு, “நான் இந்தத் தோய்த்தெடுத்த அப்பத்துண்டை எவனுக்குக் கொடுக்கிறேனோ அவனே எனக்கு எதிரானவன்” என்றார். பின்னர் அவர் அப்பத்துண்டை தோய்த்து எடுத்தார். சீமோனின் மகனான யூதாஸ்காரியோத்திடம் அதனைக் கொடுத்தார். 27 யூதாஸ் அந்த அப்பத்துண்டை வாங்கிக்கொண்டதும் சாத்தான் அவனுக்குள் புகுந்துகொண்டான். இயேசு யூதாஸிடம், “நீ செய்யப் போவதைச் சீக்கிரமாகக் செய்” என்றார். 28 அந்த மேஜையைச் சுற்றியிருந்த எவருக்கும் இயேசு யூதாஸிடம் ஏன் அவ்வாறு சொன்னார் என்பது புரியவில்லை. 29 அவர்களில் யூதாஸ் மட்டும் தான் பணப்பெட்டியைப் பாதுகாப்பவன். எனவே அவர்கள், இயேசு யூதாஸிடம் விருந்துக்கான பொருட்களை வாங்கி வரும்படியாக ஏதோ கூறுவதாக எண்ணிக்கொண்டார்கள். அல்லது யூதாஸ் ஏழைகளுக்குக் கொஞ்சம் பணம் கொடுக்குமாறு இயேசு கூறுவதாக நினைத்துக்கொண்டனர்.

30 இயேசு கொடுத்த அப்பத்துண்டை யூதாஸ் பெற்றுக்கொண்டான். பிறகு அவன் வெளியேறினான். அப்போது இரவு நேரமாயிருந்தது.

சங்கீதம் 119:1-16

ஆலெப

119 பரிசுத்த வாழ்க்கை வாழும் ஜனங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
    அந்த ஜனங்கள் கர்த்தருடைய போதனைகளைப் பின்பற்றுகிறார்கள்.
கர்த்தருடைய உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிகிற ஜனங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
    அவர்கள் தங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறார்கள்.
அந்த ஜனங்கள் தீயவற்றைச் செய்வதில்லை.
    அவர்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறார்கள்.
கர்த்தாவே, நீர் எங்களுக்கு உமது கட்டளைகளைக் கொடுத்தீர்.
    அந்தக் கட்டளைகளுக்கு முற்றிலுமாகக் கீழ்ப்படியுமாறு கூறினீர்.
கர்த்தாவே, நான் எப்போதும் உமது சட்டங்களுக்குக்
    கீழ்ப்படிந்தால் ஒருபோதும் அவமானப்படமாட்டேன்.
நான் உமது கட்டளைகளைப் படிக்கும்போது
    நான் ஒருபோதும் அவமானத்திற்கு உள்ளாக்கப்படுவதில்லை.
உமது நியாயத்தையும் நன்மையையும் குறித்துப் படிக்கும்போது
    உம்மை உண்மையாகவே மகிமைப்படுத்தமுடியும்.
கர்த்தாவே, நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவேன்.
    எனவே தயவுசெய்து என்னை விட்டு விலகாதேயும்!

பேத்

ஒரு இளைஞன் எவ்வாறு பரிசுத்த வாழ்க்கை வாழமுடியும்?
    உமது வழிகாட்டுதலின்படி நடப்பதால் மட்டுமே.
10 நான் என் முழு இருதயத்தோடும் தேவனுக்கு சேவைசெய்ய முயல்வேன்.
    தேவனே, உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய எனக்கு உதவும்.
11 நான் மிகவும் கவனமாக உமது போதனைகளைக் கற்றுக்கொள்ளுகிறேன்.
    ஏனெனில் அப்போது நான் உமக்கெதிராகப் பாவம் செய்யமாட்டேன்.
12 ஆண்டவரே நீர் ஸ்தோத்தரிக்கப்பட்டவர்.
    உமது சட்டங்களை எனக்குப் போதியும்.
13 உமது ஞானமான முடிவுகளைப்பற்றி நான் பேசுவேன்.
14 வேறெதைக் காட்டிலும் உமது உடன்படிக்கையைக்
    கற்பதில் களிப்படைவேன்.
15 நான் உமது சட்ட விதிகளை கலந்து ஆலோசிப்பேன்.
    உமது வாழ்க்கை முறைகளைப் பின்பற்றுவேன்.
16 நான் உமது சட்டங்களில் களிப்படைகிறேன்.
    உமது வார்த்தைகளை நான் மறக்கமாட்டேன்.

நீதிமொழிகள் 15:29-30

29 தீயவர்களிடமிருந்து கர்த்தர் வெகு தூரத்தில் உள்ளார். ஆனால் நல்லவர்களின் ஜெபங்களை எப்போதும் கேட்கிறார்.

30 ஒருவனின் புன்னகை மற்றவர்களை மகிழச் செய்கிறது. நல்ல செய்திகள் ஜனங்களை நல்லுணர்வுக்கொள்ளச் செய்கின்றன.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center