Print Page Options Listen to Reading
Previous Prev Day Next DayNext

The Daily Audio Bible

This reading plan is provided by Brian Hardin from Daily Audio Bible.
Duration: 731 days

Today's audio is from the VOICE. Switch to the VOICE to read along with the audio.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
1 சாமுவேல் 26-28

தாவீதும் அபிசாயும் சவுலின் முகாமிற்குள் நுழைகின்றனர்

26 சீப் ஜனங்கள் சவுலைப் பார்க்க கிபியாவிற்குச் சென்றார்கள். அவர்கள் சவுலிடம், “தாவீது ஆகிலா மேட்டில் ஒளிந்திருக்கிறான். அந்த இடம் எஷிமோனை அடுத்துள்ளது” என்று சொன்னார்கள்.

சவுல் சீப் பாலைவனத்திற்கு இறங்கிப் போனான். சவுல் இஸ்ரவேல் முழுவதிலும் இருந்து 3,000 வீரர்களைத் தேர்ந்தெடுத்தான். அவர்கள் பாலைவனத்தில் தாவீதைத் தேடினார்கள். சவுல் ஆகிலா மேட்டில் தன் முகாமை அமைத்திருந்தான். இது எஷிமோனிலிருந்து வரும் சாலைக்கு அருகில் இருந்தது.

தாவீது அதே பாலைவனத்தில்தான் தங்கியிருந்தான். சவுல் தன்னைத் தேடி வந்திருப்பதை தாவீது அறிந்துகொண்டான். அவன் ஒற்றர்களை அனுப்பி சவுல் ஆகிலாவிற்கு வந்துவிட்டதையும் தெரிந்துகொண்டான். பிறகு தாவீது சவுலின் முகாமிற்குச் சென்றான். அங்கே சவுலும் அப்னேரும் தூங்குவதைக் கண்டான். (அப்னேர் சவுலின் படைத்தலைவனான நேரின் மகன்) சவுல் முகாமின் மையத்தில் தூங்கிக்கொண்டிருந்தான். அவனைச் சுற்றிலும் படைவீரர்கள் இருந்தனர்.

ஏத்தியனாகிய அகிமெலேக்கிடமும், செருயாவின் மகனும் யோவாபின் சகோதரனுமான அபிசாயிடமும் தாவீது பேசினான். “நான் சவுலின் முகாமிற்குப் போகிறேன். என்னோடு யார் வருகிறீர்கள்?” என்று கேட்டான்.

அபிசாயோ, “நான் உங்களுடன் வருகிறேன்” என்று பதிலுரைத்தான்.

இரவில் அவர்கள் அங்குச் சென்றார்கள். முகாமின் மையத்தில் சவுல் தூங்க, அவனது தலைமாட்டில் அவனது ஈட்டி தரையில் குத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்னேரும் மற்ற வீரர்களும் சவுலைச் சுற்றிலும் தூங்கிக்கொண்டிருந்தனர். அபிசாய் தாவீதிடம், “உங்கள் எதிரியைத் தோல்வியுறச் செய்ய தேவன் இன்று வாய்ப்பு அளித்துள்ளார். தரையோடு இவனை ஈட்டியால் ஒரே குத்தாக குத்திவிடட்டுமா? ஒரே தடவையில் அதைச் சாதிக்க என்னால் முடியும்!” என்றான்.

ஆனால் தாவீது அபிசாயிடம், “சவுலைக் கொல்லவேண்டாம்! கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசனுக்கு யார் கேடு செய்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்! 10 ஜீவிக்கின்ற கர்த்தர் தாமே இவரைத் தண்டிப்பார். இவர் இயற்கையாகவும் மரிக்கலாம், அல்லது போரில் கொல்லப்படலாம். 11 ஆனால், கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசனுக்கு என்னால் மரணம் வரும்படி கர்த்தர் செய்யக் கூடாது! இப்போது ஈட்டியையும் தண்ணீர் செம்பையும் எடுத்துக்கொண்டுபோவோம்” என்றான்.

12 சவுலின் தலைமாட்டில் இருந்த ஈட்டியையும் தண்ணீர்ச் செம்பையும் எடுத்துக் கொண்டு தாவீது கிளம்பினான். பிறகு தாவீதும், அபிசாயும் முகாமை விட்டு வெளியேறினார்கள். நடந்தது என்னதென்று யாருக்கும் தெரியவில்லை! யாரும் இதைப் பார்க்கவுமில்லை, எழும்பவுமில்லை. கர்த்தரால் சவுலும் மற்ற வீரர்களும் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தனர்.

மீண்டும் சவுலை தாவீது அவமானப்படுத்துகிறான்

13 பள்ளத்தாக்கின் மறு பக்கத்திற்கு தாவீது கடந்து போனான். மலையின் உச்சியில் நின்று கொண்டான். 14 அப்னேரிடமும், சவுலின் வீரர்களிடமும் சத்தமான குரலில், “அப்னேர்! எனக்குப் பதில் சொல்” என்றான்.

அப்னேரும், “நீ யார்? ஏன் அரசனை அழைக்கிறாய்?” என்று கேட்டான்.

15 தாவீது, “நீ ஒரு மனிதன் தானே? இஸ்ரவேலில் உள்ள பிற மனிதர்களைவிட நீ சிறந்தவன் அல்லவா? நான் சொல்வது சரி என்றால் பின் ஏன் உன் அரசனைக் காக்கவில்லை? உன் அரசனைக் கொல்ல ஒரு சாதாரண மனிதன் உன் கூடாரத்திற்கு வந்தான். 16 நீ பெரிய தவறுச் செய்துவிட்டாய்! நீயும் உன் ஆட்களும் மரித்திருக்க வேண்டும். கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசனைப் பாதுகாக்கத் தவறிவிட்டீர்கள். உன் அரசனின் தலைமாட்டில் உள்ள ஈட்டியும் தண்ணீர் செம்பும் எங்கே என்று பாருங்கள்?” என்றான். 17 சவுல் தாவீதின் சத்தத்தை அறிந்துகொண்டான். “என் மகனே! தாவீது, இது உனது குரலா?” என்று கேட்டான்.

அதற்கு தாவீது, “ஆமாம், என் அரசனாகிய எஜமானே, என் குரலேதான்” என்றான். 18 தாவீது மேலும், “ஐயா என்னை ஏன் தேடுகிறீர்கள்? நான் என்ன தவறு செய்தேன்? நான் என்ன குற்றவாளியா? 19 எனது எஜமானனாகிய அரசனே! நான் சொல்வதைக் கவனியும்! என் மீது உமக்கு கோபம் வரும்படி, கர்த்தர் செய்திருந்தால் அதற்கு தகுந்த காணிக்கையை அவர் ஏற்றுக்கொள்வாராக, மனிதர்கள் செய்திருந்தால், அதற்கு கர்த்தர் அவர்களுக்குத் தண்டனை அளிக்கட்டும். கர்த்தர் எனக்குக் கொடுத்த நாட்டைவிட்டுப் போகும்படி மனிதர்கள் செய்துவிட்டார்களே. ‘போய் அந்நியரோடு வாழு, அவர்களின் தெய்வங்களுக்கு சேவைசெய்’ என்று மனிதர்கள் சொல்லியிருக்கிறார்கள். 20 இப்போது கர்த்தருடைய சந்நிதிவிட்டு வெகு தூரத்தில் நான் மரிக்கும்படி நீர் செய்யவேண்டாம். மலையில் ஒரு கவுதாரியை வேட்டையாடுவதுபோன்று இஸ்ரவேலின் அரசன் ஒரு தெள்ளுப்பூச்சியை வேட்டையாட வந்தாரோ?” என்று கேட்டான்.

21 பிறகு சவுல், “நான் பாவம் செய்துவிட்டேன். திரும்பி வா மகனே, என் உயிர் உனக்கு முக்கியமானது என்பதை எனக்குக் காட்டிவிட்டாய். இனிமேல் உனக்குக் கேடுசெய்ய முயலமாட்டேன். நான் அறிவீனமாக நடந்துகொண்டேன். நான் பெருந்தவறு செய்துவிட்டேன்” என்றான்.

22 தாவீதோ, “இதோ, அரசனின் ஈட்டி என்னிடம் உள்ளது, யாராவது ஒரு இளைஞன் வந்து பெற்றுக்கொள்ளட்டும். 23 கர்த்தர் ஒவ்வொரு மனிதருக்கும், அவரவரின் செயலுக்குதக்க பலன் அளிக்கிறார். நீதியான காரியங்களை செய்பவர்களுக்கு நன்மை தருகிறார். தீமை செய்பவர்களுக்கு தண்டனையை தருகிறார். கர்த்தர் எனக்கு இன்று உங்களைத் தோற்கடிக்க வாய்பளித்தார். ஆனால் நான் கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசனுக்கு கேடு செய்யவில்லை. 24 இன்று உங்கள் வாழ்க்கை எனக்கு முக்கியமானது என்பதைக் காட்டினேன்! அதேபோல் கர்த்தரும் என் வாழ்க்கை அவருக்கு முக்கியமானது என்று காட்டுவார்! கர்த்தர் என்னை அனைத்து துன்பங்களில் இருந்தும் காப்பார்” என்றான்.

25 பின் சவுல் தாவீதிடம், “தேவன் உன்னை ஆசீர்வதிப்பார், என் மகனே, நீ பெரியக் காரியங்களைச் செய்து, வாழ்வில் பெரும் வெற்றியைப் பெறுவாய்” என்றான்.

தாவீது தன் வழியே போனான். சவுல் தன் வீட்டிற்குத் திரும்பிப் போனான்.

பெலிஸ்தர்களோடு தாவீது வாழ்கிறான்

27 தாவீது தனக்குள், “என்றாவது சவுல் என்னைப் பிடித்துக் கொல்லுவான். எனவே பெலிஸ்தரின் நாட்டிற்குத் தப்பிச் செல்வதுதான் நான் இப்போது செய்ய வேண்டியது. பிறகு சவுல் என்னை இஸ்ரவேலில் தேடுவதை விட்டுவிடுவான். இவ்வாறுதான் இவனிடமிருந்து தப்பிக்கவேண்டும்” என்று நினைத்துக்கொண்டான்.

எனவே தாவீதும் அவனது 600 ஆட்களும் இஸ்ரவேலை விட்டு மாயோகின் மகனான ஆகீஸிடம் சென்றனர். ஆகீஸ் காத்தின் அரசன். தாவீதும் அவனது குடும்பமும், ஆட்களும் காத்தில் ஆகீஸோடு வாழ்ந்தனர். தாவீதுடன் அவனது இரு மனைவியரும் இருந்தனர். அவர்கள் யெஸ்ரேலின் அகினோவாளும், கர்மேலின் அபிகாயிலும் ஆவார்கள். அபிகாயில் நாபாலின் விதவை. தாவீது காத்துக்கு ஓடிப் போனதாக ஜனங்கள் வந்து சவுலிடம் சொல்லவே, அவனும் தாவீதைத் தேடுவதை விட்டுவிட்டான்.

ஆகீஸிடம் தாவீது, “என்னை உங்களுக்கு பிடிக்குமானால், எனக்கு நாட்டிலுள்ள ஒரு நகரத்தில் ஓரிடத்தைக் கொடுங்கள். நான் உங்கள் வேலைக்காரன். நான் அங்கே வாழ்வேன். உங்களோடு இத்தலைநகரத்தில் வாழமாட்டேன்” என்றான். அன்றைய தினம் ஆகீஸ் தாவீதிற்கு சிக்லாக் நகரத்தைக் கொடுத்தான். அன்று முதல் அந்நகரம் யூதாவின் அரசர்களுக்கு உரியதாய் இருந்தது. அங்கே தாவீது பெலிஸ்தர்களோடு ஓராண்டும் நான்கு மாதமும் வாழ்ந்தான்.

அரசனான ஆகீஸை தாவீது ஏமாற்றுகிறான்

தாவீதும் அவனது ஆட்களும் கெசூரியர், கெர்சியர் மற்றும் அமலேக்கியர் ஆகியோர்க்கு எதிராக படையெடுத்தனர். பழங்காலம் முதல் இவர்கள் தேலீம் அருகிலுள்ள சூர் முதல் எகிப்துவரை பரந்துள்ள நாட்டில் வாழ்ந்தனர். அவர்களைத் தோற்கடித்து செல்வங்களை அபகரித்தான். தாவீது அப்பகுதியில் உள்ளவர்களையெல்லாம் தோற்கடித்தான். அவர்களின் ஆடுகள், மாடுகள், கழுதைகள், ஒட்டகங்கள், ஆடைகள் போன்றவற்றைப் பறித்து ஆகீஸிடம் கொண்டு வந்தான். யாரையும் அவன் உயிரோடு விடவில்லை.

10 தாவீது இவ்வாறு பலமுறைச் செய்தான். ஆகீஸ் அவனிடம், “யாரோடு எங்கே போரிட்டு இவற்றை எடுத்து வருகிறாய்?” என்று கேட்டான். அதற்கு தாவீது, “நான் யூதாவின் தென்பகுதியில் சண்டையிட்டு வருகிறேன்” என்பான். அல்லது, “நான் யெராமியேலின் தென்பகுதியில் சண்டையிட்டேன்” என்பான். அல்லது “நான் கேனியருடைய தென்பகுதியில் சண்டையிட்டேன்” என்பான். 11 தாவீது காத்திலிருந்து உயிரோடு ஆண் பெண் யாரையும் ஒரு நாளும் கொண்டு வந்ததில்லை. “யாரையாவது உயிரோடு கொண்டு வந்தால் அவர்கள் உண்மையைச் சொல்லிவிடலாம்” என்று நினைத்தான்.

பெலிஸ்தர்களின் நாட்டில் இருக்கும்வரை தாவீது இப்படி செய்து வந்தான். 12 ஆகீஸும் தாவீதை நம்பினான். அவன் தனக்குள்ளே, “இப்போது தாவீதின் சொந்த ஜனங்கள் அவனை வெறுப்பார்கள். இஸ்ரவேலரும் தாவீதை மிகவும் வெறுப்பார்கள். எனவே தாவீது என்றும் எனக்கே சேவைச் செய்வான்” என்று நினைத்துக்கொண்டான்.

பெலிஸ்தர் போருக்குத் தயாராகுதல்

28 பிறகு பெலிஸ்தர்கள் இஸ்ரவேலுக்கு எதிராகப் போரிட கூடினார்கள். ஆகீஸ் தாவீதிடம், “இப்போது நீயும் உனது ஆட்களும் என்னோடு இஸ்ரவேலுக்கு எதிராகச் சண்டையிட வரவேண்டும் என்று அறிவாயா?” என்று கேட்டான்.

தாவீது, “உறுதியாக! என்னால் என்ன செய்ய முடியும் என்பதை நீங்களே பார்ப்பீர்கள்!” என்றான்.

ஆகீஸும், “நல்லது நான் உன்னை எனது மெய்க்காப்பாளனாக நியமிக்கிறேன். என்றென்றும் என்னை நீ காப்பாற்றுவாய்” என்றான்.

சவுலும் எந்தோரின் பெண்ணும்

சாமுவேல் மரித்ததும், அனைத்து இஸ்ரவேலரும் தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தினார்கள். சாமுவேலை அவனது தாய் மண்ணான ராமாவில் அடக்கம் செய்திருந்தனர்.

சவுல் மரித்தவர்களின் ஆவிகளோடு பேசுகிறவர்களையும் ஆரூடம், குறி சொல்கிறவர்களையும் நகரத்தில் இராதபடித் துரத்தியிருந்தான்.

பெலிஸ்தர் போருக்குத் தயாரானார்கள். அவர்கள் சூநேமிலே கூடி முகாமிட்டு தங்கினார்கள். சவுல் இஸ்ரவேலரையெல்லாம் கூட்டி கில்போவாவில் முகாமிட்டான். சவுல் பெலிஸ்தியரின் படையைப் பார்த்து பயந்தான். அவன் மனதில் பயம் நிறைந்தது. சவுல் கர்த்தரிடம் ஜெபம் செய்தான். ஆனால் கர்த்தர் அவனுக்குப் பதில் சொல்லவில்லை. சவுலின் கனவிலும் தேவன் பேசவில்லை. ஊரிம் மூலமாகவோ, தீர்க்கதரிசிகள் மூலமாகவோ தேவன் பதில் சொல்லவில்லை. கடைசியாக சவுல் தனது அதிகாரிகளிடம், “குறி பார்க்கிற ஒரு பெண்ணை அழைத்து வாருங்கள், போரின் முடிவை அவள் மூலம் அறிந்துகொள்வேன்” என்றான்.

அவனது அதிகாரிகளோ, “எந்தோரிலே குறிபார்பவள் ஒருவள் இருக்கிறாள்” என்றனர்.

சவுல் தன்னை மறைத்து மாறுவேடத்தில் போனான். அன்று இரவு சவுல் இரண்டு ஆட்களோடு அந்தப் பெண்ணை சந்தித்தான். அவன் அவளிடம், “நீ ஒரு ஆவியைக் கூப்பிடு. நான் விரும்பி பேர் சொல்லுகிறவனின் ஆவியை நீ அழைக்க வேண்டும்” என்றான்.

ஆனால் அந்தப் பெண்ணோ சவுலிடம், “சவுல் என்ன செய்தான் என்று உனக்குத் தெரியும்! அவன் குறி பார்ப்பவர்கள் எல்லாரையும் இஸ்ரவேல் நாட்டை விட்டுத் துரத்திவிட்டான். நீயும் என்னை சூழ்ச்சியின் மூலம் குற்றத்தில் அகப்படுத்தி என்னைக் கொல்லப் பார்க்கிறாய்” என்றாள்.

10 சவுல் கர்த்தருடைய நாமத்தில் ஆணையிட்டான். “இதற்காக நீ தண்டிக்கப்படமாட்டாய். இது கர்த்தருடைய ஜீவன் மீது ஆணை” என்றான்.

11 அப்பெண்ணோ சவுலிடம், “உனக்காக யாரை வரவழைக்க நீ விரும்புகிறாய்?” என்று கேட்டாள்.

அதற்கு அவன், “சாமுவேலின் ஆவியை” என்றான்.

12 அப்படியே ஆயிற்று! அப்பெண் சாமுவேலின் ஆவியைப் பார்த்து மகா சத்தமாய் கூப்பிட்டு, “நீ சூழ்ச்சி செய்துவிட்டாய்! நீ தானே சவுல்” என்று கேட்டாள்.

13 அரசன் அவளிடம், “பயப்படாதே! நீ என்ன பார்க்கிறாய்?” எனக் கேட்டான்.

“நான் ஆவியொன்று பூமிக்குள்ளிருந்து [a] வெளியே வருவதைப் பார்க்கிறேன்” என்றாள்.

14 சவுல் அவளிடம், “அந்த ஆவி யாரைப் போல் இருக்கிறது?” என்று கேட்டான்.

அதற்கு அப்பெண், “அது சிறப்பான சால்வையைப் போர்த்திக் கொண்டு மிக வயதான தோற்றத்தில் தெரிகிறது” என்றாள்.

அப்போது சவுலுக்கு அது சாமுவேலின் ஆவி என்று புரிந்தது. சவுல் குனிந்து வணங்கினான். அவன் முகம் தரையைத் தொட்டது. 15 சாமுவேலின் ஆவி சவுலிடம், “என்னை ஏன் தொந்தரவு செய்கிறாய்? எதற்காக எழுப்பினாய்!” என்று கேட்டது.

அதற்கு சவுல், “நான் ஆபத்தில் சிக்கி இருக்கிறேன். பெலிஸ்தியர் எனக்கு எதிராகச் சண்டையிட வந்திருக்கிறார்கள். தேவன் என்னை கைவிட்டு விலகிவிட்டார். தேவன் இனி எனக்கு பதில் சொல்வதில்லை. அவர் தீர்க்கதரிசியையோ, கனவையோ பயன்படுத்தி பதில் சொல்லுவதில்லை. அதனால் உங்களை அழைத்தேன், நான் செய்யவேண்டியது இன்னது என்று நீங்கள் சொல்ல விரும்புகிறேன்” என்றான்.

16 சாமுவேலின் ஆவி, “கர்த்தர் உன்னைவிட்டு விலகிவிட்டார். அவர் இப்போது உனக்கு அருகிலுள்ள தாவீதோடு இருக்கிறார். அதற்கு என்னை ஏன் தொந்தரவு செய்கிறாய்? 17 கர்த்தர் என்ன செய்ய இருக்கிறாரோ அதையே என் மூலம் எற்கனவே கூறிவிட்டார்! கர்த்தர் சொன்னதை இப்போது நிறைவேற்றுகிறார். உனது கைகளிலிருந்து கர்த்தர் அரசைக் கிழித்தெடுத்து, உனக்கு அருகிலுள்ள தாவீதுக்குக் கொடுத்திருக்கிறார். 18 நீ கர்த்தருக்குக் கீழ்ப்படியவில்லை. அமலேக்கியரை நீ முழுமையாக அழிக்கவில்லை. கர்த்தர் அவர்கள் மீது கோபமுடையவராக இருக்கிறார் என்பதைக் காட்டவில்லை. அதனால் இன்று கர்த்தர் உனக்கு இவ்வாறு செய்கிறார். 19 கர்த்தர் உன்னையும் இஸ்ரவேல் படையையும் பெலிஸ்தர்கள் மூலமாகத் தோற்கடிப்பார். நாளை நீயும், உனது மகன்களும் இங்கே என்னோடு இருப்பீர்கள்!” என்றது.

20 சவுல் உடனே தரையில் விழுந்து கிடந்தான். சாமுவேல் சொன்னதைக் கேட்டு மிகவும் பயந்தான். அன்று சவுல் இரவும் பகலும் உண்ணாமல் இருந்ததால் மிகவும் பலவீனமாக இருந்தான்.

21 அந்தப் பெண் சவுலிடம் வந்து, உண்மையில் அவன் பயப்படுவதைக் கவனித்தாள். அவள் “நான் உங்கள் வேலைக்காரி, நான் உங்களுக்கு கீழ்ப்படிந்து இருக்கிறேன். என் உயிரைப் பணயம் வைத்து நீங்கள் சொன்னப்படி செய்தேன். 22 இப்போது தயவு செய்து எனக்குச் செவிகொடுங்கள், உங்களுக்குச் சிறிது உணவு கொடுக்க அனுமதியுங்கள், நீங்கள் அதனை உண்ணவேண்டும். பின் உங்கள் வழியில் செல்லப் போதுமான பலம் கிடைக்கும்” என்றாள்.

23 ஆனால் சவுல், “நான் உண்ணமாட்டேன்” என மறுத்துவிட்டான்.

சவுலின் அதிகாரிகளும் அந்தப் பெண்ணோடு சேர்ந்து கெஞ்சினார்கள். இறுதியில் அவள் சொன்னதைக் கேட்டான், தரையிலிருந்து எழுந்து படுக்கையில் உட்கார்ந்தான். 24 அப்பெண்ணின் வீட்டில் கொழுத்த கன்றுகுட்டி இருந்தது. அவள் அதை வேகமாகக் கொன்று சமைத்தாள். மாவை பிசைந்து புளிப்பு இல்லாத அப்பம் சுட்டாள். 25 சவுல் மற்றும் அவனது அதிகாரிகளின் முன்னர் அவள் அந்த உணவை வைத்தாள். அவர்கள் அதை புசித்தப்பின், அன்று இரவே புறப்பட்டுச் சென்றார்கள்.

யோவான் 11:1-54

லாசருவின் இறப்பு

11 லாசரு என்ற பெயருள்ள ஒரு மனிதன் நோயுற்றிருந்தான். அவன் பெத்தானியா என்ற நகரத்தில் வாழ்ந்து வந்தான். இந்நகரத்தில்தான் மரியாளும் அவளது சகோதரி மார்த்தாளும் வாழ்ந்தனர். (இந்த மரியாள்தான் பின்பு இயேசுவிற்கு வாசனைத் தைலம் பூசித் தன் கூந்தலால் அவரது கால்களைத் துடைத்தவள்) மரியாளின் சகோதரன்தான் லாசரு. அவன் இப்போது நோயுற்றிருந்தான். ஆகையால் மரியாளும் மார்த்தாளும் இயேசுவிடம் செய்தி அனுப்பி “ஆண்டவரே, உங்கள் அன்பான நண்பன் லாசரு நோயுற்றிருக்கிறான்” என்று சொன்னார்கள்.

இயேசு இதனைக் கேட்டு “நோயின் முடிவு மரணம் அன்று. இந்த நோய் தேவனை மகிமைப்படுத்துவதற்காக ஏற்பட்டது. இது, தேவனின் குமாரனுக்குப் புகழைக் கொண்டுவருவதற்காகவே உண்டானது” என்றார். (மார்த்தாள், மரியாள், லாசரு ஆகிய மூவரையும் இயேசு நேசித்து வந்தார்) இயேசு லாசருவின் நோயைப்பற்றி அறிந்தபோது மேலும் இரண்டு நாட்கள் ஏற்கெனவே இருந்த இடத்திலேயே தங்கினார். பிறகு இயேசு தன் சீஷர்களிடம் “நாம் மறுபடியும் யூதேயாவுக்குத் திரும்பிப் போவோம்” என்றார்.

அவரது சீஷர்கள், “ஆண்டவரே, யூதேயாவில் உள்ள யூதர்கள் உம்மைக் கல்லெறிந்து கொல்ல முயற்சித்தார்கள். அது நடந்தது சமீபகாலத்தில்தான். எனவே, இப்பொழுது அங்கே திரும்பிப் போக வேண்டுமா?” என்று கேட்டனர்.

இயேசுவோ, “பகலில் பன்னிரண்டு மணிநேரம் வெளிச்சம் இருக்கும். சரிதானே. ஒருவன் பகலில் நடந்தால், அவன் தடுமாறி விழமாட்டான். ஏனென்றால், அவனால் உலகின் வெளிச்சத்தைப் பார்க்க முடியும். 10 ஆனால் ஒருவன் இரவிலே நடந்தால் அவன் தடுமாறுவான். ஏனென்றால் அவனுக்கு உதவி செய்ய வெளிச்சம் இல்லை” என்றார்.

11 அவர் மேலும், “நமது நண்பன் லாசரு இப்பொழுது தூங்கிக்கொண்டிருக்கிறான். ஆனால் நான் அவனை எழுப்பப்போகிறேன்” என்றார்.

12 அவரது சீஷர்களோ, “ஆண்டவரே, அவன் தூங்கிக்கொண்டிருந்தால் நிச்சயம் குணமாவான்” என்றார்கள். 13 லாசரு இறந்து போனான் என்பதைக்குறித்தே இயேசு அவ்வாறு சொன்னார். ஆனால் அவரது சீஷர்களோ லாசரு உண்மையில் தூங்குவதாக நினைத்துக்கொண்டனர்.

14 பிறகு இயேசு தெளிவாக, “லாசரு இறந்துபோனான். 15 அங்கே அப்பொழுது நான் இல்லை என்பதால் நான் மகிழ்ச்சியடைகிறேன். இப்பொழுது என்னை நீங்கள் நம்புவீர்கள். அதனால்தான் மகிழ்கிறேன். நாம் அவனிடம் போவோம்” என்றார்.

16 பிறகு தோமா என்று அழைக்கப்படும் சீஷன், ஏனைய சீஷர்களைப் பார்த்து, “நாமும் அவரோடு போவோம். யூதேயாவில் இயேசுவோடு நாமும் சாவோம்” என்றான்.

பெத்தானியாவில் இயேசு

17 இயேசு பெத்தானியாவுக்கு வந்தார். அங்கு வந்ததும் லாசரு இறந்துபோனாதாகவும் அவன் கல்லறையில் வைக்கப்பட்டு நான்கு நாட்கள் ஆனதாகவும் அறிந்தார். 18 எருசலேமிலிருந்து இரண்டு மைல் தூரத்தில் பெத்தானியா உள்ளது. 19 யூதர்கள் பலர் மார்த்தாளிடமும் மரியாளிடமும் வந்திருந்தனர். அவர்களின் சகோதரன் லாசருவின் மரணம் குறித்து துக்கம் விசாரிக்க வந்தனர்.

20 இயேசு வந்துகொண்டிருப்பதாக மார்த்தாள் கேள்விப்பட்டாள். அவரை வரவேற்க அவள் போனாள். ஆனால் மரியாள் வீட்டிலேயே தங்கிக்கொண்டாள். 21 மார்த்தாள் இயேசுவிடம், “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்கமாட்டான். 22 ஆனால் இப்பொழுதுகூட நீர் கேட்பவற்றை தேவன் உமக்குத் தருவார்” என்றாள்.

23 இயேசுவோ, “உன் சகோதரன் எழுவான், மீண்டும் உயிர்வாழ்வான்” என்றார்.

24 மார்த்தாளோ, “உயிர்த்தெழுதல் நடைபெறும் கடைசிநாளில் அவன் மீண்டும் எழுந்து உயிர் வாழ்வான் என்று எனக்குத் தெரியும்” என்றாள்.

25 இயேசு அவளிடம், “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் இருக்கிறேன். என்னில் நம்பிக்கை வைக்கிற எவனும் தான் இறந்த பிறகும் எழுந்து வாழ்வு பெறுவான். 26 என்னில் வாழ்ந்து நம்பிக்கை வைக்கிற எவனும் உண்மையிலேயே இறப்பதில்லை. மார்த்தாளே, இதை நீ நம்புகிறாயா?” எனக் கேட்டார்.

27 “ஆம், ஆண்டவரே. நீர்தான் கிறிஸ்து என்று நம்புகிறேன். நீர்தான் தேவனின் குமாரன். நீரே உலகத்திற்கு வரவிருந்தவர்” என்றாள் மார்த்தாள்.

இயேசு அழுதல்

28 மார்த்தாள் இவ்வாறு சொன்ன பிறகு அவள் தன் சகோதரி மரியாளிடம் திரும்பிச் சென்றாள். அவள் தனியாக அவளிடம் பேசினாள். “இயேசு இங்கே இருக்கிறார். அவர் உன்னை அழைத்தார்” என்றாள் மார்த்தாள். 29 இதைக் கேட்டதும் மரியாள் எழுந்து இயேசுவிடம் விரைவாகப் போனாள். 30 இயேசு இன்னும் அக்கிராமத்துக்கு வந்து சேரவில்லை. மார்த்தாள் சந்தித்த இடத்திலேயே அவர் இருந்தார். 31 யூதர்கள் பலர் மரியாளோடு அவளது வீட்டில் இருந்தனர். அவளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தனர். மரியாள் எழுந்து வேகமாகச் செல்வதைப் பார்த்து அவள் லாசருவின் கல்லறைக்குப் போகக்கூடும் என எண்ணினர். அவள் அங்கு அழப்போகலாம் என்று கருதி அவளோடு அவர்களும் சென்றனர். 32 இயேசு இருந்த இடத்துக்கு மரியாள் சென்றாள். அவள் இயேசுவைப் பார்த்ததும் குனிந்து அவரை வணங்கினாள். “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என்னுடைய சகோதரன் இறந்துபோயிருக்கமாட்டான்” என்று சொன்னாள்.

33 மரியாள் அழுவதை இயேசு பார்த்தார். அவளோடு வந்த யூதர்களையும் அவர் கவனித்தார். அவர்களும் அழுதனர். இயேசு மனப்பூர்வமாக வருந்தி, ஆழமாக வேதனைப்பட்டார். 34 “அவனை எங்கே வைத்திருக்கிறீர்கள்?” என்று அவளிடம் கேட்டார்.

அவர்கள் அவரிடம், “கர்த்தரே, வந்து பாரும்” என்றனர். 35 இயேசு அழுதார்.

36 இதைக் கண்ட யூதர்கள், “பாருங்கள், இயேசு லாசருவை மிகவும் நேசித்திருக்கிறார்” என்றனர்.

37 ஆனால் சில யூதர்களோ, “இயேசு குருடனின் கண்களைக் குணப்படுத்தினார். லாசருவுக்கு உதவிசெய்ய. அவனை ஏன் சாகாமலிருக்கச் செய்திருக்கக் கூடாது?” என்று கேட்டனர்.

லாசருவை உயிர்ப்பித்தல்

38 மீண்டும் இயேசு மனதில் மிகவும் வருத்தம் அடைந்தார். பிறகு லாசரு வைக்கப்பட்ட கல்லைறைக்கு வந்தார். அக்கல்லறை பெரிய பாறையால் அடைக்கப்பட்டிருந்த குகைக்குள் இருந்தது. 39 இயேசு, “அந்தப் பாறையை அகற்றுங்கள்” என்றார்.

மார்த்தாளோ, “ஆண்டவரே, லாசரு இறந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டன. அதில் கெட்ட நாற்றம் வீசுமே” என்றாள். அவள் இறந்துபோன லாசருவின் சகோதரி.

40 இயேசு மார்த்தாளிடம், “நான் சொன்னவற்றை நினைத்துப்பார். நீ என்னை நம்புகிறதானால் தேவனின் மகிமையை அறியலாம் எனச் சொல்லியிருக்கிறேன்” என்றார்.

41 ஆகையால் அவர்கள் அந்தப் பாறையை குகையின் வாசலில் இருந்து அகற்றினார்கள். இயேசு மேலே ஏறிட்டுப் பார்த்து “பிதாவே! நான் சொல்வதை நீர் கேட்டதற்காக நன்றி கூறுகிறேன். 42 எப்பொழுதும் நான் சொல்வதை நீர் கேட்கிறீர் என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் நான் இங்கே கூடியிருக்கிற இம்மக்களுக்காகவே இவற்றைக் கூறுகிறேன். நீர்தான் என்னை அனுப்பினீர் என்று இவர்கள் நம்பவேண்டும் என்று விரும்புகிறேன்” என்றார். 43 இவ்விதம் சொன்னபிறகு இயேசு உரத்த குரலில், “லாசருவே, வெளியே வா” என்று அழைத்தார். 44 இறந்தவன் வெளியே வந்தான். அவனது கைகளிலும் கால்களிலும் துணிகள் சுற்றப்பட்டிருந்தன. அவன் முகத்தை ஒரு துண்டுத் துணி மூடியிருந்தது.

இயேசு மக்களிடம், “துணிகளை அப்புறப்படுத்தி அவனை விடுவியுங்கள்” என்றார்.

யூதத்தலைவர்களின் சதித்திட்டம்(A)

45 மரியாளைப் பார்ப்பதற்காக ஏராளமான யூதர்கள் வந்திருந்தனர். இயேசு செய்ததை அவர்கள் பார்த்தார்கள். அவர்களில் பலர் இயேசுவின் மீது நம்பிக்கை வைத்தனர். 46 ஆனால், சிலர் பரிசேயர்களிடம் சென்றனர். இயேசு செய்ததை அவர்கள் பரிசேயர்களிடம் சொன்னார்கள். 47 பிறகு ஆசாரியர்களும் பரிசேயர்களும் யூதர்களின் ஆலோசனைச் சபையைக் கூட்டினர். “இனி என்ன செய்யலாம்? இயேசு பல அற்புதங்களைச் செய்து வருகிறான். 48 அவனை இவ்வாறு தொடர்ந்து செய்ய அனுமதித்தால் பிறகு மக்கள் அனைவரும் அவனை நம்ப ஆரம்பித்துவிடுவார்கள். பின் ரோமானியர்கள் வந்து நமது ஆலயத்தையும், நாட்டையும் அபகரித்துக்கொள்வார்கள்” என்று பேசிக்கொண்டனர்.

49 அங்கே அவர்களில் ஒருவன் காய்பா. அவன் அந்த ஆண்டின் தலைமை ஆசாரியன். அவன் “உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. 50 நாடு முழுவதும் அழிவதைவிட மக்களுக்காக ஒருவன் இறந்துபோவது நல்லது அல்லவா? இதை ஏன் நீங்கள் எண்ணிப்பார்க்கவில்லை?” என்று சொன்னான்.

51 காய்பா இவற்றைச் சொந்தமாகச் சிந்தித்துச் சொல்லவில்லை. அவன் அந்த ஆண்டின் தலைமை ஆசாரியன். இயேசு யூத நாட்டுக்காக மரிக்கப்போகிறார் என்பதை அவன் உண்மையில் தீர்க்கதரிசனமாகவே கூறினான். 52 ஆம். இயேசு யூதர்களுக்காகவே மரிக்கப் போகிறார். உலகில் சிதறிக் கிடக்கிற மக்களையெல்லாம் ஒன்று திரட்டி, அவர்களை ஒரே மக்களாக்க அவர் மரிக்கப் போகிறார்.

53 அன்றிலிருந்து யூதத்தலைவர்கள் இயேசுவைக் கொலைசெய்யத் திட்டம் தீட்டினர். 54 ஆகையால் இயேசு யூதர்களின் மத்தியில் வெளிப்படையாக நடமாடுவதை நிறுத்தினார். இயேசு எருசலேமை விட்டு வனாந்தரத்திற்கு அருகிலுள்ள இடத்துக்கு சென்றார். இயேசு எப்பிராயீம் என்று அழைக்கப்படுகிற நகரத்துக்குச் சென்றார். அங்கே அவர் தம் சீஷர்களோடு தங்கினார்.

சங்கீதம் 117

117 எல்லா தேசங்களே, கர்த்தரைத் துதியுங்கள்.
    ஜனங்கள் எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்.
தேவன் நம்மை அதிகமாக நேசிக்கிறார்!
    என்றென்றைக்கும் தேவன் நமக்கு உண்மையாக இருப்பார்.

கர்த்தரைத் துதிப்போம்!

நீதிமொழிகள் 15:22-23

22 ஒருவன் போதுமான அறிவுரையைப் பெறாவிட்டால் அவனது திட்டங்கள் தோல்வியுறும். ஆனால் அறிவுள்ளவர்களின் அறிவுரைகளைக் கவனமுடன் கேட்கிறவன் தன் செயல்களில் வெற்றிபெறுகிறான்.

23 நல்ல பதிலைத் தருபவன் மகிழ்ச்சி அடைகிறான். சரியான நேரத்தில் சரியான வார்த்தைகள் சொல்வது மிகவும் நல்லது.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center