Print Page Options Listen to Reading
Previous Prev Day Next DayNext

The Daily Audio Bible

This reading plan is provided by Brian Hardin from Daily Audio Bible.
Duration: 731 days

Today's audio is from the EHV. Switch to the EHV to read along with the audio.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
1 சாமுவேல் 22-23

பல இடங்களுக்கு தாவீது போகிறான்

22 தாவீது காத்தை விட்டு அதுல்லாம் குகைக்கு ஓடினான். தாவீது அதுல்லாமில் இருப்பதாக அவனது சகோதரர்களும் உறவினர்களும் அறிந்துக்கொண்டனர். அவனைப் பார்க்க அங்கே சென்றார்கள். பலர் தாவீதோடு சேர்ந்துகொண்டார்கள். சிலர் சிலவிதமான பிரச்சனைகளில் இருந்தனர். சிலர் கடன்பட்டவர்கள். சிலர் தம் வாழ்வில் விரக்தியடைந்தவர்கள். இவர்கள் அனைவரும் தாவீதோடு சேர்ந்து, அவனை தலைவன் ஆக்கினார்கள். இப்போது அவன் 400 பேர்களோடு இருந்தான்.

தாவீது அதுல்லாமை விட்டு மோவாபிலுள்ள மிஸ்பாவிற்கு சென்றான். மோவாபின் அரசனிடம், “எனக்காக தேவன் என்ன செய்யப்போகிறார் என்று தெரியும்மட்டும் என் தாயும் தந்தையும் இங்கு வந்து தங்கி இருக்க தயவு செய்து அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டான். அவ்வாறே அவர்களை அங்கே அடைக்கலமாக இருக்கச் செய்தான். தாவீது கோட்டையில் இருக்கும்வரை அவர்களும் இருந்தார்கள்.

ஆனால் காத் என்னும் தீர்க்கதரிசி தாவீதிடம், “கோட்டையில் தங்க வேண்டாம். யூதா நாட்டிற்குப் போ” என்று சொன்னான். எனவே அவன் விலகி ஏரேத் எனும் காட்டிற்குச் சென்றான்.

சவுல் அகிமெலேக்கின் குடும்பத்தை அழிக்கிறான்

ஜனங்கள் தாவீது மற்றும் அவனது ஆட்கள் மூலம் சேர்ந்து வருவதை சவுல் கேள்விப்பட்டான். அவன் கிபியா மேட்டில் ஒரு மரத்தடியில் உட்கார்ந்துகொண்டிருந்தான். அவனது கையில் ஈட்டி இருந்தது. அதிகாரிகள் அவனைச் சுற்றிலும் நின்றுகொண்டிருந்தனர். அவன் அவர்களிடம், “பென்யமீனின் ஜனங்களே! கவனியுங்கள். தாவீது உங்களுக்கு வயல்களையும், திராட்சைத் தோட்டங்களையும் தருவான் என்று நினைக்கிறீர்களா? அவன் உங்களை 1,000 பேருக்கும் 100 பேருக்கும் அதிகாரிகளாக்குவான் என்று எண்ணுகிறீர்களா? நீங்கள் எனக்கு எதிராகச் சூழ்ச்சி செய்கிறீர்கள்! இரகசியத் திட்டங்களைப் போடுகிறீர்கள். என் மகன் யோனத்தானைப் பற்றி எனக்குச் சொல்லவில்லை. அவன் தாவீதோடு ஒரு ஒப்பந்தம் செய்திருக்கிறான் என்று யாரும் சொல்லவில்லை. என் மகன் தாவீதை உற்சாகப்படுத்தி, அவனிடம் மறைந்திருந்து என்னைத் தாக்கச் சொல்கிறான் என்பதை யாரும் எனக்குக் கூறவில்லை. நீங்கள் யாரும் என் மீது அக்கறை கொள்ளவில்லை! யோனத்தான் தாவீதுடன் சேர்ந்து அதையே இப்போது செய்துக்கொண்டிருக்கிறான்!” என்றான்.

அப்போது ஏதோமியனாகிய தோவேக்கு, சவுலின் அதிகாரிகளோடு நின்று கொண்டிருந்தான். அவன், “நான் தாவீதை நோப்பில் பார்த்தேன். அவன் அகிதூபின் மகனான அகிமெலேக்கைப் பார்க்க வந்தான். 10 அகிமெலேக்கும் தாவீதிற்காக கர்த்தரிடம் ஜெபம் செய்தான், உணவளித்தான், கோலியாத்தின் பட்டயத்தைக் கொடுத்தான்” என்றான்.

11 பிறகு சவுல் சிலரை அனுப்பி ஆசாரியனை அழைத்துவரக் கட்டளையிட்டான். நோப்பில் ஆசாரியர்களாக இருந்த அகிமெலேக்கின் உறவினர்களையும் அழைத்து வர கட்டளையிட்டான். அகிமெலேக்கின் உறவினர்களும் நோப்பில் ஆசாரியர்களாக இருந்தார்கள். அனைவரும் அரசனிடம் வந்தார்கள். 12 சவுல் அகிமெலேக்கிடம், “அகிதூபின் மகனே! கவனி” என்றான்.

அவன், “சரி ஐயா” என்றான்.

13 சவுல் அகிமெலேக்கிடம், “நீயும் ஈசாயின் மகனான தாவீதும் சேர்ந்து எனக்கு எதிராக ஏன் இரகசிய திட்டமிட்டீர்கள்? நீ அவனுக்கு அப்பமும் பட்டயமும் கொடுத்திருக்கிறாய்! அவனுக்காக தேவனிடம் ஜெபம் செய்திருக்கிறாய்? இப்போது தாவீது என்னை தாக்குவதற்குத் தயாராக இருக்கிறான்!” என்றான்.

14 அதற்கு அகிமெலேக்கு, “உங்களிடம் தாவீது உண்மையுள்ளவனாக இருக்கிறான். உங்கள் அதிகாரிகளில் எவரும் அவனைப் போன்றவர்கள் இல்லை. அவன் உமது சொந்த மருமகன் அவன் உமது கட்டளைகளுக்கு விசுவாசத்தோடு அடிபணிகிறான். உமது குடும்பம் அவனை மதிக்கிறது. 15 நான் தாவீதிற்காக தேவனிடம் ஜெபம் செய்வது முதல் முறையன்று, இல்லவே இல்லை, என்னையோ, என் உறவினர்களையோ இதற்காகப் பழி சுமத்த வேண்டாம். நாங்கள் உமது சேவகர்கள், நீர் சொல்லும் காரியங்கள் நடந்து கொண்டிருப்பதைப் பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது” என்றான்.

16 ஆனால் அரசனோ, “அகிமெலேக்கே, நீயும் உனது உறவினர்களும் மரிக்க வேண்டும்!” என்றான். 17 பிறகு அவன் தன் காவலர்களைப் பார்த்து, “போய் கர்த்தருடைய ஆசாரியர்களைக் கொல்லுங்கள். ஏனென்றால், அவர்கள் தாவீதின் பக்கம் இருக்கிறார்கள். அவன் தப்பித்துப்போனதை அறிந்தும், அவர்கள் என்னிடம் சொல்லவில்லை” என்றான்.

ஆனால் கர்த்தருடைய ஆசாரியர்களைக் கொல்ல அதிகாரிகள் மறுத்துவிட்டனர். 18 எனவே, அரசன் தோவேக்கிற்கு கட்டளையிட்டான். தோவேக், “நீ போய் ஆசாரியர்களைக் கொன்றுவிடு” என்றான். எனவே, அவன் போய் ஆசாரியர்களைக் கொன்றான். அன்று 85 ஆசாரியர்கள் அவனால் கொல்லப்பட்டனர். 19 நோவாப் ஆசாரியர்களின் நகரமாக இருந்தது. அங்குள்ள அனைவரையும் கொன்றான். அவன் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், கைப்பிள்ளைகள் என அனைவரையும் வாளால் கொன்றுப் போட்டான். அதோடு அவன் பசுக்கள், கழுதைகள், ஆடுகள் ஆகியவற்றையும் கொன்றான்.

20 ஆனால், அபியத்தார் தப்பித்தான். அவன் அகிதூபின் மகனான அகிமெலேக்கின் மகன். இவன் ஓடிப்போய் தாவீதோடு சேர்ந்துக்கொண்டான். 21 அவன் தாவீதிடம் சவுல் கர்த்தருடைய ஆசாரியர்களைக் கொன்றுப்போட்டதைக் கூறினான். 22 பின் தாவீது அவனிடம், “நான் ஏதோமியனாகிய தோவேக்கை அன்று பார்த்தேன். அவன் சவுலிடம் சொல்வான் என்றும் தெரியும்! எனவே உன் தந்தையும் மற்றவர்களும் மரித்துப் போனதற்கு நானே பொறுப்பு. 23 சவுல் உன்னை மட்டுமல்ல என்னையும் கொல்ல விரும்புகிறான். பயப்படாதே, என்னோடு பாதுகாப்பாக இருக்கலாம்” என்றான்.

கேகிலாவில் தாவீது

23 ஜனங்கள் தாவீதிடம், “பாருங்கள் பெலிஸ்தியர்கள் கேகிலாவிற்கு எதிராகப் போரிடுகிறார்கள். அவர்கள் அறுவடை களத்திலிருந்து தானியங்களைக் கொள்ளையிடுகிறார்கள்” என்றனர்.

உடனே தாவீது கர்த்தரிடம், “நான் போய் பெலிஸ்தியர்களோடு போரிடட்டுமா?” என்று கேட்டான்.

கர்த்தர், “ஆமாம் நீ பெலிஸ்தியர்களோடு போரிட்டு கேகிலாவைக் காப்பாற்று” என்று பதிலுரைத்தார்.

ஆனால் தாவீதைச் சேர்ந்தவர்கள், “பாருங்கள், யூதாவில் உள்ள நாங்களே பயந்து போயுள்ளோம். பெலிஸ்தியர்கள் இருக்கும் இடத்திற்குப் போனால் எவ்வளவு பயப்படுவோம் என எண்ணிப்பாரும்” என்றனர்.

தாவீது மீண்டும் கர்த்தரிடம் கேட்டான். கர்த்தர், “கேகிலாவிற்குப் போ, பெலிஸ்தியர்களை வெல்ல நான் உதவுவேன்” என்றார். எனவே, தாவீதும் அவனது ஆட்களும் கேகிலாவிற்கு சென்றனர். அவர்கள் பெலிஸ்தியரோடு சண்டையிட்டு தோற்கடித்து, அவர்களின் மந்தைகளைக் கவர்ந்துகொண்டனர். இவ்வாறு, தாவீது கேகிலாவைக் காப்பாற்றினான். (அபியத்தார் தாவீதிடம் ஓடிப்போனபோது அவன் தன்னோடு ஏபோத்தையும் கொண்டு சென்றான்.)

ஜனங்கள் சவுலிடம் வந்து தாவீது கேகிலாவில் இருப்பதை அறிவித்தனர். அதற்கு சவுல் “தேவன் தாவீதை எனக்குக் கொடுத்தார்! அவன் தானே வலைக்குள் விழுந்திருக்கிறான். அவன் பூட்டிப் போடக்கூடிய கோட்டைக் கதவுகளை உடைய நகரத்திற்குள் போய்விட்டான்” என்றான். சவுல் தனது படை வீரர்களைப் போரிடுவதற்காகக் கூட்டினான். அவர்கள் கேகிலாவிற்கு சென்று தாவீதையும் அவனது ஆட்களையும் தாக்கத் தயாரானார்கள்.

தனக்கு எதிரான சவுலின் திட்டங்களைத் தாவீது அறிந்துக்கொண்டான். பிறகு ஆசாரியனாகிய அபியத்தாரிடம், “ஏபோத்தை கொண்டு வா” என்றான்.

10 தாவீது, “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, எனக்காக சவுல் இந்நகரத்திற்கு வந்து அதை அழிக்கப்போவதாக அறிந்தேன். 11 சவுல் கேகிலாவிற்கு வருவாரா? இங்குள்ள ஜனங்கள் என்னை சவுலிடம் ஒப்படைப்பார்களா? இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தாவே! நான் உமது தாசன்! தயவு செய்து சொல்லும்!” என்று வேண்டினான்.

“சவுல் வருவான்” என்று கர்த்தர் பதிலுரைத்தார்.

12 மீண்டும் தாவீது, “என்னையும் எனது ஆட்களையும் கேகிலா ஜனங்கள் சவுலிடம் ஒப்படைத்துவிடுவார்களா?” என்று கேட்டான்.

“அவர்கள் செய்வார்கள்” என்று கர்த்தர் சொன்னார்.

13 எனவே தாவீதும் அவனது ஆட்களும் கேகிலாவை விட்டு விலகினார்கள். அவனோடு 600 பேர் சென்றனர். அவர்கள் ஒவ்வொரு இடமாக நகர்ந்தனர். கேகிலாவிலிருந்து தாவீது தப்பிவிட்டதை சவுல் அறிந்தான். எனவே அவன் அந்நகரத்திற்குப் போகவில்லை.

சவுல் தாவீதைத் துரத்துகிறான்

14 பாலைவனத்தின் கோட்டைகளில் தாவீது மறைந்திருந்தான். அவன் சீப் பாலைவனத்தில் உள்ள மலை நகரத்திற்குச் சென்றான். ஒவ்வொரு நாளும் சவுல் தாவீதைத்தேடினான். ஆனால் சவுல் தாவீதைப் பிடிக்கும்படி கர்த்தர் அனுமதிக்கவில்லை.

15 சீப் பாலைவனத்தில் உள்ள ஓரேஷில் தாவீது இருந்தான். சவுல் அவனைக் கொல்ல முயன்றதால் அவன் பயந்தான். 16 ஆனால் சவுலின் மகனான யோனத்தான் ஓரேஷில் தாவீதை சந்தித்தான். தேவனில் உறுதியான நம்பிக்கையை வைக்கும்படி யோனத்தான் தாவீதுக்கு உதவினான். 17 யோனத்தான், “பயப்படாதே என் தந்தையான சவுல் உன்னைக் கொல்லமாட்டார். நீ இஸ்ரவேலின் அரசனாவாய். நான் உனக்கு அடுத்தவனாக இருப்பேன். இதுவும் என் தந்தைக்குத் தெரியும்” என்றான்.

18 யோனத்தானும், தாவீதும் கர்த்தருக்கு முன்னால் ஒரு ஒப்பந்தம் செய்துக் கொண்டனர். யோனத்தான் தன் வீட்டிற்குப் போக, தாவீது ஓரேஷிலேயே தங்கினான்.

சீப்பிலுள்ள ஜனங்கள் தாவீதைப் பற்றி சவுலிடம் சொல்கின்றனர்

19 சீப்பிலுள்ள ஜனங்கள் சவுலைப் பார்க்க கிபியாவிற்குச் சென்றனர். அவர்கள், “எங்கள் பகுதியில் தான் தாவீது ஒளிந்திருக்கிறான். அவன் ஆகிலா மேட்டில் உள்ள, ஓரேஷ் கோட்டைக்குள் இருக்கிறான். அது யெஷிமோனின் தெற்கில் உள்ளது. 20 இப்போது அரசே நீர் விரும்பும் எந்தக் காலத்திலும் இறங்கி வாரும். தாவீதை உங்களிடம் ஒப்படைப்பது எங்கள் கடமை” என்றார்கள்.

21 சவுலோ, “எனக்கு உதவினதற்காக கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். 22 போய், அவனைப்பற்றி அதிகமாகத் தெரிந்துக்கொள்ளுங்கள். தாவீது எங்கே தங்கியிருக்கிறான்? அவனை யார் யார் வந்து சந்திக்கின்றனர். ‘தாவீது தந்திரக்காரன். அவன் என்னை ஏமாற்ற விரும்புகிறான்’ என்று நினைத்தான். 23 தாவீது ஒளிந்துள்ள எல்லா இடங்களையும் அறிந்துகொள்ளுங்கள். பின் என்னிடம் வந்து எல்லாவற்றையும் கூறுங்கள். பின் நான் உங்களோடு வருவேன். தாவீது அந்தப் பகுதியில் இருந்தால் அவனைக் கண்டுபிடிப்பேன். யூதாவில் உள்ள அனைத்துக் குடும்பங்களிலும் அவனைத் தேடிக் கண்டுபிடிப்பேன்” என்றான்.

24 பின்னர் சீப்பிலுள்ள ஜனங்கள் திரும்பிப் போனார்கள். சவுல் தாமதமாகப் போனான்.

தாவீதும் அவனது ஆட்களும் மாகோன் பாலைவனத்தில் இருந்தனர். அவர்கள் இருந்த பகுதி எஷிமோனின் தென் பகுதியில் இருந்தது. 25 சவுல் தன் ஆட்களோடு தாவீதைத் தேடிச் சென்றான். சவுல் தேடுவதாக ஜனங்கள் தாவீதை எச்சரித்தனர். அதனால் மாவோனில் உள்ள “கன்மலையில்” தாவீது இறங்கினான். சவுல் இதனை அறிந்து அங்கும் தாவீதைத் தேடிப்போனான்.

26 சவுல் மலையின் ஒரு பகுதியில் இருந்த போது தாவீதும் அவனது ஆட்களும் அடுத்த பகுதியில் இருந்தனர். தாவீது சவுலை விட்டு விரைவாக விலகினான். சவுலும் அவனது ஆட்களும் மலையைச் சுற்றிப் போய் தாவீதையும் அவனது ஆட்களையும் பிடிக்க முயன்றனர்.

27 அப்போது ஒரு தூதுவன் சவுலிடம் வந்து, “வேகமாக வாருங்கள்! பெலிஸ்தியர் நம்மை தாக்கப் போகின்றனர்!” என்றான்.

28 எனவே சவுல் தாவீதைத் துரத்துவதை விட்டு பெலிஸ்தியரோடு சண்டையிடப் போனான். எனவே ஜனங்கள் இந்த மலையை “வழுக்கும் பாறை” அல்லது “சேலா அம்மாலிகோத்” என்று அழைக்கின்றனர். 29 தாவீது அவ்விடத்தை விட்டு என்கேதியிலுள்ள கோட்டைகளுக்குச் சென்றான்.

யோவான் 10:1-21

நல்ல மேய்ப்பனும் ஆடுகளும்

10 “உண்மையாகவே நான் உங்களுக்குக் கூறுகிறேன், ஒருவன் ஆட்டுத்தொழுவத்திற்குள் வாசல் வழியாகவே நுழையவேண்டும். வேறு வழியாக நுழைந்தால், அவன் ஒரு திருடன். அவன் ஆடுகளைத் திருடவே முயற்சி செய்வான். ஆனால் மேய்ப்பன் வாசல் வழியாக நுழைகிறவன். அவனே மேய்ப்பன். வாசலைக் காக்கிற காவல்காரன் மேய்ப்பனுக்காகக் கதவைத் திறந்துவிடுவான். ஆடுகள் மேய்ப்பனின் குரலுக்கு செவி கொடுக்கும். மேய்ப்பன் தன் சொந்த ஆடுகளை அவற்றின் பெயரைச் சொல்லி அழைப்பான். அவன் அவற்றை வெளியே நடத்திக்கொண்டு போவான். மேய்ப்பன் தனது ஆடுகளையெல்லாம் வெளியே கொண்டுவந்த பின் அவற்றுக்கு முன்னால் நடந்து அவற்றை நடத்திக்கொண்டு போகிறான். ஆடுகள் அவனது குரல் குறிப்புகளை அடையாளம் கண்டபடியால், அவை அவன் பின்னே செல்கின்றன. ஆனால் ஆடுகள் தாம் அறியாதவன் பின்னால் செல்வதில்லை. அவனைவிட்டு அவை விலகி ஓடும். ஏனென்றால் அவற்றிற்கு அவனது குரல் புரியாது” என்று

இயேசு மக்களிடம் இந்த உவமையைச் சொன்னார். இந்த உவமையின் உட்பொருளை அந்த மக்களால் அறிந்துகொள்ள முடியவில்லை.

இயேசுவே நல்ல மேய்ப்பர்

எனவே இயேசு மேலும் சொன்னார், “நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், ஆடுகளுக்கு நானே வாசலாக இருக்கிறேன். எனக்கு முன்னால் வந்தவர்கள் அனைவரும் கள்ளரும், கொள்ளைக்காரர்களுமாக இருந்தார்கள். ஆடுகள் அவர்களைக் கவனிக்கவில்லை. நானே வாசல். என் மூலமாக நுழைகிறவனே மீட்கப்படுவான். அவன் உள்ளேயும் வெளியேயும் போய் மேய்ச்சலைக் கண்டடைவான். 10 திருடன் திருடுவதற்காகவே வருகிறான். அவன் ஆடுகளைக் கொல்லவும் அழிக்கவுமே செய்வான். ஆனால் நானோ ஜீவனைக் கொடுக்க வந்துள்ளேன். அந்த ஜீவன் பூரணமும், நன்மையுமானது.

11 “நானே நல்ல மேய்ப்பன். நல்ல மேய்ப்பன் தனது ஆடுகளுக்காக ஜீவனைக் கொடுப்பான். 12 கூலிக்காக ஆடுகளைக் கவனிக்கிறவன் மேய்ப்பனைவிட வித்தியாசமானவன். கூலிக்காரனுக்கு ஆடுகள் சொந்தமானவை அல்ல. ஆகையால் ஓநாய் வருவதைக் கண்டால் கூலிக்காரன் ஆடுகளை விட்டு விட்டு ஓடிப் போவான். பிறகு ஓநாய்கள் ஆடுகளை கிழித்து கொன்று சிதறடிக்கும். 13 அந்த மனிதன் ஓடிவிடுகிறான். ஏனென்றால் அவன் கூலிக்காரன். அவனுக்கு ஆடுகளைப்பற்றிய அக்கறை இல்லை.

14-15 “ஆடுகளைப்பற்றி (மக்களைப்பற்றி) அக்கறை கொண்ட நல்ல மேய்ப்பன் நான். என் பிதா என்னை அறிந்திருப்பது போலவே நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன். நான் என் பிதாவை அறிந்திருப்பது போலவே என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. நான் என் ஆடுகளுக்காக என் ஜீவனைக் கொடுக்கிறேன். 16 எனக்கு வேறு ஆடுகளும் உள்ளன. அவை இந்த மந்தையில் இல்லை. நான் அவற்றையும் அழைத்து வர வேண்டும். அவை என் குரலைக் கவனிக்கும். வருங்காலத்தில் எல்லாம் ஒரே மந்தையாகவும் ஒரே மேய்ப்பனாகவும் இருக்கும். 17 என் பிதா என்னை நேசிக்கிறார். ஏனென்றால் நான் என் ஜீவனைக் கொடுக்கிறேன். நான் என் ஜீவனைக் கொடுப்பதால் அதனை மீண்டும் பெறுவேன். 18 என்னிடமிருந்து என் ஜீவனை எவரும் பறிக்க முடியாது. நானே என் ஜீவனைத் தாராளமாகக் கொடுக்கிறேன். அதற்கான உரிமை எனக்குண்டு. அதுபோல் அதனைத் திரும்பப் பெறுகிற உரிமையும் எனக்குண்டு. இதைத்தான் பிதா எனக்குக் கட்டளையிட்டார்” என்றார்.

19 இயேசு சொன்ன இக்காரியங்களினால் மீண்டும் யூதர்கள் பிரிந்துபோயினர். 20 பல யூதர்கள் “பிசாசு அவனுக்குள் புகுந்துகொண்டது. அவன் பைத்தியமாக உளறுகிறான். அவன் கூறுவதை ஏன் கேட்கிறீர்கள்?” என்றனர்.

21 அதற்குப் பதிலாக வேறு சில யூதர்கள், “பிசாசு பிடித்து உளறுகிறவனால் இதுபோன்ற உண்மைகளைப் பேசமுடியுமா? குருடனின் கண்களைப் பிசாசு குணமடையச் செய்யுமா? செய்யாது” என்றனர்.

சங்கீதம் 115

115 கர்த்தாவே, நாங்கள் எந்த மகிமையையும் ஏற்றுக்கொள்வதில்லை.
    மகிமை உமக்கே உரியது.
    உமது அன்பினாலும் நாங்கள் உம்மை நம்பக்கூடும் என்பதாலும் மகிமை உமக்கே உரியது.
எங்கள் தேவன் எங்கே என்று
    ஏன் தேசங்கள் ஆச்சரியப்பட வேண்டும்?
தேவன் பரலோகத்தில் இருக்கிறார்.
    அவர் தாம் விரும்புகின்றவற்றையெல்லாம் செய்கிறார்.
அத்தேசங்களின் “தெய்வங்கள்” பொன்னாலும் வெள்ளியாலும் செய்யப்பட்ட சிலைகள் மட்டுமே.
    அவை சில மனிதர்கள் செய்த சிலைகள் மட்டுமே.
அச்சிலைகளுக்கு வாய் உண்டு, ஆனால் பேச இயலாது.
    அவற்றிற்குக் கண்கள் உண்டு, ஆனால் காண இயலாது.
அவற்றிற்குக் காதுகளுண்டு, ஆனால் கேட்க இயலாது.
    அவற்றிற்கு மூக்குகள் உண்டு, ஆனால் முகர இயலாது.
அவற்றிற்குக் கைகள் உண்டு, ஆனால் உணர இயலாது.
    அவற்றிற்குக் கால்கள் உண்டு, ஆனால் நடக்க இயலாது.
    அவற்றின் தொண்டையிலிருந்து எந்தவிதமான சத்தமும் வெளிவருவதில்லை.
அச்சிலைகளைச் செய்து,
    அவற்றில் நம்பிக்கை வைக்கிற ஜனங்களும் அவற்றைப் போலாவார்கள்.
இஸ்ரவேலின் ஜனங்களே, கர்த்தரை நம்புங்கள்!
    கர்த்தர் அவர்களின் பெலனும், கேடகமுமானவர்.
10 ஆரோனின் குடும்பத்தாரே, கர்த்தரை நம்புங்கள்!
    கர்த்தர் அவர்களின் பெலனும் கேடகமுமானவர்.
11 கர்த்தரைப் பின்பற்றுகிறவர்களே, கர்த்தரை நம்புங்கள்!
    கர்த்தர் அவர்களின் பெலனும் கேடகமுமானவர்.

12 கர்த்தர் நம்மை நினைவுக்கூருகிறார்,
    கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்.
கர்த்தர் இஸ்ரவேலை ஆசீர்வதிப்பார்.
    கர்த்தர் ஆரோனின் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார்.
13 கர்த்தர் தம்மைப் பின்பற்றும்
    உயர்ந்தோரையும் தாழ்ந்தோரையும் ஆசீர்வதிப்பார்.
14 கர்த்தர் உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும்
    அதிகமதிகமாகக் கொடுப்பார் என்று நான் நம்புகிறேன்.
15 கர்த்தர் பரலோகத்தையும் பூமியையும் உண்டாக்கினார்.
    கர்த்தர் உங்களை வரவேற்கிறார்!
16 பரலோகம் கர்த்தருக்குச் சொந்தமானது.
    ஆனால் பூமியை ஜனங்களுக்குக் கொடுத்தார்.
17 மரித்தவர்களும்,
    கல்லறைக்குச் செல்பவர்களும் கர்த்தரைத் துதிப்பதில்லை.
18 நாம் கர்த்தரை துதிப்போம்.
    இது முதல் என்றென்றைக்கும் நாம் அவரை துதிப்போம்.

அல்லேலூயா! கர்த்தரைத் துதிப்போம்.

நீதிமொழிகள் 15:18-19

18 எளிதில் கோபப்படுகிறவர்கள் துன்பங்களுக்குக் காரணமாக இருக்கிறார்கள். பொறுமையுள்ளவர்களோ சமாதானத்துக்குரியவர்கள்.

19 எல்லா இடங்களிலும் சோம்பேறி துன்பம் அடைகிறான். ஆனால் நேர்மையானவனுக்கு வாழ்வு எளிதாக இருக்கும்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center