Print Page Options Listen to Reading
Previous Prev Day Next DayNext

The Daily Audio Bible

This reading plan is provided by Brian Hardin from Daily Audio Bible.
Duration: 731 days

Today's audio is from the EHV. Switch to the EHV to read along with the audio.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
1 சாமுவேல் 20-21

தாவீதும் யோனத்தானும் ஒரு ஒப்பந்தம் செய்கிறார்கள்

20 ராமாவிற்கு அருகில் உள்ள முகாம்களில் இருந்து தாவீது தப்பி ஓடி யோனத்தானிடம் வந்தான். தாவீது, “உன் தந்தை என்னைக் கொல்ல தேடுகிறாரே. நான் என்ன தவறு செய்தேன்? நான் அவருக்குச் செய்த துரோகம் என்ன?” என்று கேட்டான்.

அதற்கு யோனத்தான், “அது உண்மையாக இருக்க முடியாது! என் தந்தை உன்னைக் கொல்ல முயலவில்லை. என்னிடம் சொல்லாமல் எந்தக் காரியத்தையும் என் தந்தை செய்வதில்லை. அது சின்ன காரியமோ, பெரிய காரியமோ, எதுவாக இருந்தாலும் சரி, உன்னைக் கொல்லும் திட்டத்தை என்னிடமிருந்து அவர் ஏன் மறைத்தார்? இல்லை, இது உண்மையன்று!” என்றான்.

ஆனால் தாவீது, “உன் கண்களில் எனக்கு தயை கிடைத்தது, இதை உன் தந்தை அறிவார். அதனால், என்னிடமுள்ள நட்பினிமித்தம் நீ சஞ்சலம் அடையாதபடிக்கு இதை உன்னிடம் மறைத்தார். கர்த்தர் ஜீவித்திருக்க, நீயும் ஜீவித்திருக்கிற உண்மைபடி கூறுகிறேன், நான் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறேன்!” என்று பதிலளித்தான்.

யோனத்தான் அப்போது, “நீ சொல்லுகிறபடி நான் செய்வேன்” என்றான்.

தாவீது, “கவனி, நாளை அமாவாசை விருந்து, நான் அரச பந்தியில் சாப்பிட வேண்டும். ஆனால் மாலைவரை ஒளிந்திருக்க எனக்கு உத்தரவு வேண்டும்! உன் தந்தை கேட்டால், ‘தன் ஊராகிய பெத்லேகேமில் ஆண்டுக்கு ஒரு தடவை மாதப் பலிச் செலுத்துவதால் அதில் கலந்துகொள்ள தன் குடும்பத்தோடு போயிருப்பதாகச் சொல்.’ அதற்கு அவர், ‘நல்லது’ என்றால் எனக்குச் சமாதானம். அவருக்கு எரிச்சல் வந்தால், அவரால் ஆபத்து என்று அர்த்தம், எனவே தயவுச் செய்யவேண்டும். என்னோடு கர்த்தருக்கு முன்னால் ஒப்பந்தம் செய்துள்ளாய். என் மீது தவறு என்றால் என்னைக் கொல். என்னை உன் தந்தையிடம் மட்டும் அழைத்துப் போகாமல் இருக்க வேண்டும்!” என வேண்டினான்.

அதற்கு யோனத்தான், “அந்த நிலை உனக்கு ஏற்படாமல் இருப்பதாக! என் தந்தையால் உனக்கு ஆபத்து என்றால் நான் சொல்லாமல் இருப்பேனா?” என்று கேட்டான்.

10 ஆனால் தாவீது, “உன் தந்தைக் கடுமையான உத்தரவு போட்டால் எனக்கு அதை யார் சொல்வது?” என்று கேட்டான்.

11 அதற்கு யோனத்தான், “வா ஊருக்கு வெளியே வயலுக்குப்போவோம்” என்றான். இருவரும் வெளியே போனார்கள்.

12 யோனத்தான், “இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தருடைய முன்னிலையில் வாக்களிக்கிறேன், நான் நாளையோ மறுநாளோ என் தந்தையின் மனதை அறிந்துவிடுவேன். அவர் உன்மேல் தயவாக இருந்தாலும், தீங்கு செய்யும் எண்ணமாக இருந்தாலும் 3 நாட்களுக்குள் அறிவிப்பேன். 13 ஒருவேளை, எனது தந்தை உனக்குத் தீமை செய்யத் துடித்துக் கொண்டிருந்தால் அதையும் அறிவிப்பேன். அதோடு அமைதியாக நீ ஒதுங்கிவிட உதவுகிறேன். நான் உனக்கு உண்மையைச் சொல்லாவிட்டால் கர்த்தர் எனக்கு அதற்கு நிகராகவும் அதிகமாகவும் துன்பம் தரட்டும்! கர்த்தர் உன் தந்தையோடு இருந்தது போலவே உன்னோடும் இருப்பாராக. 14 மேலும் நான் உயிரோடு இருக்கும்வரை என் மீது கருணையோடு இரு. 15 நான் மரித்தப் பிறகும் என் குடும்பத்தின் மேலுள்ள கருணையை நிறுத்தாமல் இரு. உன் பகைவரையெல்லாம் கர்த்தர் பூமியில் இருந்து அழிப்பார். 16 யோனத்தான் பெயர் தாவீதின் குடும்பத்திலிருந்து எடுத்துப் போடாமல் இருப்பதாக. தாவீதின் பகைவர்களை கர்த்தர் தண்டிப்பாராக” என்று தாவீதின் குடும்பத்தோடு ஒப்பந்தம் செய்துக்கொண்டான்.

17 யோனத்தான் தாவீதிடம், அவனது அன்பு பற்றிய வாக்குறுதியைத் திருப்பிச் சொல்லும்படி கேட்டான். ஏனென்றால், அவன் தன்னைத் தானே எவ்வளவு நேசித்தானோ அவ்வளவு அதிகமாய் தாவீதையும் நேசித்தான்.

18 யோனத்தான் தாவீதிடம், “நாளை அமாவாசை விருந்து. நீ உட்காரவேண்டிய இடம் காலியாயிருப்பதால் உன்னைக் குறித்து விசாரிக்கப்படும். 19 இந்த சிக்கல் முதலில் ஆரம்பித்தபோது நீ ஒளிந்திருந்த இடத்திற்குப் போ. அங்கேயே காத்திரு 20 மூன்றாவது நாள், ஏஸேல் எனும் கல்லருகில் காத்திரு, பிறகு மூன்றாம் நாளில் ஒரு இலக்கைக் குறிவைத்து எய்வதுபோல், நான் அங்கு போய் அதன் பக்கமாக மூன்று அம்புகளை எய்வேன். 21 ஒரு பிள்ளையை அம்பைத் தேடிவருமாறு அனுப்புவேன். நான் அவனிடம், ‘அதிக தூரம் போனாய் அம்புகள் என் அருகில் உள்ளன,’ என்று சொன்னால் வந்துவிடு. அப்போது ஒன்றும் இல்லை, உனக்கு சமாதானம். இதை கர்த்தருடைய அன்பால் கூறுகிறேன்! 22 ஏதாவது தொந்தரவு இருந்தால் அவனிடம், ‘அம்புகள் ரொம்ப தூரத்தில் கிடக்கிறது, எடுத்து வா’ என்று சத்தமிடுவேன். உடனே நீ விலகவேண்டும். கர்த்தர் உன்னை தூர அனுப்பிகொண்டிருக்கிறார் என்று அர்த்தம். 23 அப்போது நமக்கு இடையேயுள்ள ஒப்பந்தத்தை மறவாமல் இரு. கர்த்தர் தாமே நமக்கு எப்போதும் சாட்சியாக இருப்பார்!” என்றான்.

24 பிறகு தாவீது வயலில் ஒளிந்துக்கொண்டான்.

விருந்தில் சவுலின் போக்கு

அமாவாசை விருந்துக்கு சமயம் வந்தது, அரசன் உணவுண்ண உட்கார்ந்தான். 25 அரசன் வழக்கம் போல் சுவரை அடுத்து உட்கார்ந்தான். யோனத்தான் எதிரே இருந்தான். அப்னேர் சவுலுக்கடுத்து இருந்தான். தாவீதின் இடம் வெறுமையாய் இருந்தது. 26 சவுல் எதுவும் சொல்லவில்லை. அவன், “தாவீதிற்கு ஏதேனும் நடந்து அதனால் தீட்டாக இருப்பான்” என்று எண்ணிக்கொண்டான்.

27 மாதத்தின் இரண்டாம் நாளான மறுநாள் மீண்டும் தாவீதின் இடம் வெறுமையாய் இருந்தது. சவுல் தன் மகனிடம் “எதற்காக ஈசாயின் மகன் நேற்றும் இன்றும் அமாவாசை விருந்து உண்ண வரவில்லை?” என்று கேட்டான்.

28 யோனத்தான், “தாவீது தன்னை பெத்லேகேமுக்குப் போக அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டான். 29 அதனால் என்னிடம், என்னைப் போகவிடு. எங்கள் குடும்பத்திற்குப் பெத்லேகேமில் ஒரு பலியைச் செலுத்த வேண்டியுள்ளது. எனது சகோதரன் அங்கே இருக்கும்படி எனக்கு கட்டளையிட்டிருக்கிறார். இப்பொழுது நான் உனது நண்பனானால், நான் போய் என் சகோதரர்களைப் பார்க்க அனுமதி தா, என்று கேட்டான். அதனால் தாவீது அரசனுடைய பந்திக்கு வரவில்லை” என்று பதிலுரைத்தான்.

30 சவுல் யோனத்தான் மீது கோபமுற்று, “அடிபணிய மறுத்த கலகக்காரப் பெண்ணின் மகன் நீ, நீயும் அவளைப்போல் இருக்கிறாய், நீ தாவீதின் பக்கத்தில் உள்ளாய். நீ உனக்கும் உன் தாய்க்கும் அவமானத்தைத் தந்தாய்! 31 ஈசாயின் மகன் இருக்கும்வரை நீ அரசனாக முடியாது. உனக்கு அரசும் கிடைக்காது. இப்போது தாவீதைக் கொண்டு வா! அவன் ஒரு மரித்தவன்” என்றான்.

32 யோனத்தான் அவனிடம், “தாவீது ஏன் கொல்லப்பட வேண்டும்? அவனது தவறு யாது?” எனக் கேட்டான்.

33 ஆனால் சவுல் ஈட்டியை அவன் மீது எறிந்து கொல்லப் பார்த்தான். எனவே யோனத்தான் தனது தந்தை தாவீதைக் கொன்றுவிட பெரிதும் விரும்புகிறான் என்பதை அறிந்தான். 34 அவன் தந்தை மீது கோபங்கொண்டுப் பந்தியிலிருந்து விலகிக் கொண்டான். விருந்தின் இரண்டாம் நாளில் யோனத்தான் உணவுண்ண மறுத்தான். தனது தந்தை தன்னை அவமானப்படுத்தியதாலும் தாவீதை கொல்ல விரும்பியதாலும் யோனத்தான் கோபமடைந்தான்.

தாவீதும் யோனத்தானும் விடை பெறுகின்றனர்

35 மறுநாள் காலை யோனத்தான் வயலுக்குப் போனான். அவர்கள் ஏற்கெனவே திட்டமிட்ட இடத்தில் தாவீதை சந்திக்க தன்னோடு ஒரு சிறுவனை அழைத்துப் போனான். 36 அவன் சிறுவனிடம், “நான் எறிகிற அம்பைத் தேடி கண்டுபிடித்து வா” என்றான். பையனின் தலைக்கு மேலாக எறிந்த அம்பை அவன் தேடிப்போனான். 37 அம்பு விழுந்த இடத்தில் சிறுவன் தேட, “அம்புகள் இன்னும் தூரத்தில் உள்ளது” என்றான். 38 மீண்டும் அவன், “சும்மா நிற்காதே! போய் அம்பைத் தேடு” என்றான். சிறுவன் அம்பைத்தேடி தன் எஜமானனிடம் எடுத்து வந்தான். 39 என்ன நடைபெறுகிறது என்று அந்தப் பையன் அறியாதிருந்தான். ஆனால் தாவீதிற்கும் யோனத்தானுக்கும் அது புரிந்தது. 40 யோனத்தான் சிறுவனிடம், வில்லையும் அம்பையும் கொடுத்து, “நகரத்திற்குத் திரும்பிப் போ” என்று அனுப்பினான்.

41 பையன் போனதும் தாவீது வெளியே வந்து யோனத்தானைத் தரையில் குனிந்து 3 முறை வணங்கினான். பின் அவர்கள் ஒருவரை ஒருவர் முத்தமிட்டனர். இருவரும் சத்தமிட்டு அழ, தாவீது யோனத்தானைவிட மிகுதியாக அழுதான்.

42 யோனத்தான் தாவீதிடம், “சமாதானமாகப் போ, நாம் கர்த்தருடைய நாமத்தால் நண்பர்களாக இருப்போம் என்று ஆணையிட்டோம் அதன்படியே நமக்கும் நமது சந்ததியினருக்கும் நடுவே உள்ள ஒப்பந்தத்திற்கு கர்த்தரே என்றென்றைக்கும் சாட்சியாக இருப்பார்” என்றான்.

தாவீது ஆசாரியனாகிய அகிமெலேக்கைப் பார்க்கப் போகிறான்

21 பின்பு தாவீது வெளியே போனான். யோனத்தான் நகரத்திற்குத் திரும்பிப் போனான். 2தாவீது நோப் எனும் நகரத்திற்கு ஆசாரியனான அகிமெலேக்கைப் பார்க்கப் போனான்.

அகிமெலேக்கு தாவீதை சந்திக்க வெளியே வந்தான். அவன் பயத்தால் நடுங்கினான். அவன், “ஏன் தனியாக வந்தீர்கள்? உங்களோடு ஏன் யாரும் வரவில்லை?” என்று கேட்டான்.

அதற்கு தாவீது, “அரசன் எனக்கு விசேஷ கட்டளையை இட்டிருக்கிறான். அவர் என்னிடம், ‘எவரும் இதனைப் பற்றித் தெரிந்துக்கொள்ளாமல் இருக்கட்டும். நீ செய்ய வேண்டுமென்று நான் சொன்னதை ஒருவரும் தெரிந்துக்கொள்ளாமல் இருக்கட்டும்’ என்றார். நான் என் ஜனங்களிடம் என்னை சந்திக்கிற இடத்தைப் பற்றி கூறியிருக்கிறேன். இப்போது உன்னோடு என்ன உணவை வைத்திருக்கிறாய்? எனக்கு 5 அப்பங்களையோ அல்லது உன்னிடம் உள்ள எதையேனும் புசிக்கக் கொடு” என்றான்.

ஆசாரியன் தாவீதிடம், “என்னிடம் சாதாரணமான அப்பங்கள் இல்லை. பரிசுத்த அப்பங்கள் மட்டுமே உள்ளன. உங்கள் ஆட்கள் எந்தப் பெண்ணோடும் பாலின உறவு கொள்ளாமல் இருந்தால், அவர்கள் அவற்றை உண்ணலாம்” என்றான்.

அதற்கு தாவீது, ஆசாரியனிடம், “எங்களோடு பெண்கள் இல்லை. எங்கள் வீரர்கள் போருக்குப் போகும்போது தங்கள் உடலை பரிசுத்தமாக வைத்திருப்பார்கள். எங்கள் வேலை மிகவும் சிறப்பானது. எனவே, விசேஷமாக இன்று இது உண்மை” என்றான்.

பரிசுத்த அப்பங்களைத் தவிர வேறு அப்பங்கள் இல்லாததால் ஆசாரியன் அவற்றை தாவீதுக்கு கொடுத்தான். அவை கர்த்தருக்கு முன்பு பரிசுத்தமான மேஜையின் மேல் வைக்கப்பட்டவை. ஒவ்வொரு நாளும் ஆசாரியர் புதிய அப்பங்களை வைப்பர்கள்.

சவுலின் அதிகாரிகளில் ஒருவன் அவர்களோடு இருந்தான். அவன் பெயர் ஏதோமியனான தோவேக்கு ஆகும். அவன் சவுலின் ஒற்றர் தலைவனாவான். கர்த்தருக்கு முன்பாக அவன் காவலில் அடைக்கப்பட்டிருந்தான்.

தாவீது அகிமெலேக்கிடம், “இங்கு ஈட்டியாவது பட்டயமாவது உள்ளதா? அரசனது வேலை முக்கியமானது, அது விரைவாக நடக்கவேண்டும். நான் சடுதியில் புறப்பட்டதால் பட்டயமாவது எந்தவித ஆயுதங்களையாவது எடுத்து வரவில்லை” என்றான்.

10 அதற்கு ஆசாரியன், “இங்கே பெலிஸ்தனாகிய கோலியாத்தின் பட்டயம் மட்டுமே உள்ளது. அது உன்னால் அவனிடமிருந்து எடுக்கப்பட்டது. துணியில் சுற்றி ஏபோத்தின் பின்னால் வைக்கப்பட்டுள்ளது. உனக்கு விருப்பமானால் எடுத்துக்கொள்ளலாம்” என்றான்.

தாவீதோ, “அதனை எனக்குக் கொடு. கோலியாத்தின் வாளைப்போன்று வேறு நல்ல வாள் இல்லை!” என்றான்.

காத்தில் உள்ள எதிரிகளிடத்தில் தாவீது ஓடுகிறான்

11 அன்று தாவீது சவுலிடமிருந்து ஓடினான். அவன் காத்தின் அரசனான ஆகீஸிடம் சென்றான். 12 ஆகீஸின் வேலைக்காரர் அவனிடம் சொன்னார்கள், “இவன் இஸ்ரவேல் நாட்டின் அரசனான தாவீது, இஸ்ரவேலரால் போற்றப்படுபவன். அவர்கள் ஆடிக்கொண்டே,

‘சவுல் ஆயிரம் வீரர்களைக் கொன்றிருக்கிறான்.
    ஆனால் தாவீதோ பதினாயிரம் வீரர்களைக் கொன்றிருக்கிறான்!’

என்று பாடுகின்றனர்.

13 அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை தாவீது உற்று கவனித்தான். அவன் காத்தின் அரசனான ஆகீஸுக்கு மிகவும் பயந்தான். 14 எனவே, அவன் ஆகீஸ் அதிகாரிகளுக்கு முன்பு பைத்தியக்காரனைப் போல் நடித்தான். வாசற்படிகளில் கீறிக் கொண்டான். வாயில் நுரைதள்ளி தாடியில் ஒழுகவிட்டான்.

15 ஆகீஸ் தனது அதிகாரிகளிடம், “இவனைப் பாருங்கள்! இவன் பைத்தியமடைந்தவன்! என்னிடம் ஏன் அழைத்து வந்தீர்கள்? 16 என்னிடம் இப்படிபட்டவர்கள் போதுமானப் பேர் உள்ளனர். இவனை மீண்டும் என் வீட்டுக்குள் வர அனுமதிக்காதீர்கள்!” என்றான்.

யோவான் 9

பிறவிக் குருடனைக் குணமாக்குதல்

இயேசு நடந்துகொண்டிருக்கும்போது, ஒரு குருடனைப் பார்த்தார். அவன் பிறந்தது முதல் குருடனாக இருந்தான். இயேசுவின் சீஷர்கள் அவரிடம், “போதகரே! இந்த மனிதன் குருடனாகப் பிறந்தான். யார் செய்த பாவம் இவனைக் குருடனாக்கியது? அது இவனது பாவமா? அல்லது இவனது பெற்றோர் செய்த பாவமா?” என்று கேட்டனர்.

இயேசு அவர்களிடம், “இவனது பாவமோ, இவனது பெற்றோரின் பாவமோ இவனைக் குருடன் ஆக்கவில்லை. நான் இவனைக் குணப்படுத்தும்போது தேவனின் வல்லமை இவன் மூலமாக வெளிப்படும்படியாக இவன் குருடனாகப் பிறந்தான். பகலாக இருக்கும்போது மட்டும்தான் என்னை அனுப்பினவருடைய செயல்களை நாம் செய்யவேண்டும். இரவு வந்துகொண்டிருக்கிறது. எவராலும் இரவில் வேலை செய்யமுடியாது. நான் உலகத்தில் இருக்கும்வரை உலகத்துக்கு நானே ஒளியாக இருக்கிறேன்” என்றார்.

இயேசு இவற்றைச் சொன்ன பிறகு, அவர் புழுதியில் துப்பினார். அதில் சேறு உண்டாக்கினார். அதனை அவனது கண்களின் மேல் பூசினார். இயேசு அவனிடம், “போ, சீலோவாம் குளத்தில் (சீலோவாம் என்றால் ‘அனுப்பப்பட்டவன்’ என்று பொருள்) கழுவு” என்றார். அதன்படியே அந்த மனிதன் குளத்திற்குச் சென்றான். அவன் கழுவிவிட்டுத் திரும்பி வந்தான். இப்பொழுது பார்வை பெற்றிருந்தான்.

இவன் இதற்கு முன்னால் பிச்சை எடுத்துக்கொண்டிருந்ததைப் பலர் பார்த்திருந்தனர். அவர்களும் அவனது சுற்றத்தார்களும், “பாருங்கள்! இவன் அங்கே உட்கார்ந்து எப்பொழுதும் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த அதே மனிதனல்லவா?” என்றனர்.

இன்னும் சிலர், “ஆம். இவன்தான் அவன்”, என்றனர். ஆனால் இன்னும் சிலர், “இல்லை. இவன் அவன் இல்லை. இவன் அவனைப்போன்றே இருக்கிறான்” என்றனர்.

அப்போது அவன் தானாகவே, “முன்பு குருட்டுப் பிச்சைக்காரனாக இருந்தவன் நான்தான்” என்றான்.

10 “என்ன நடந்தது? நீ எப்படிப் பார்வை பெற்றாய்?” என்று கேட்டனர்.

11 அதற்கு அவன், “இயேசு என்று மக்களால் அழைக்கப்படுகிற அந்த மனிதர் ஏதோ சேறு உண்டாக்கினார். அதனை என் கண்களின்மீது தடவினார். பிறகு அவர் என்னிடம் சீலோவாம் குளத்தில் போய் கழுவச் சொன்னார். ஆகையால் நான் போய் கழுவினேன். பின்னர் என்னால் பார்க்க முடிந்தது” என்றான்.

12 அந்த மனிதனிடம் மக்கள், “எங்கே அந்த மனிதர்?”

என்று கேட்டனர். அதற்கு அந்த மனிதன் “எனக்குத் தெரியாது” என்று கூறினான்.

இயேசு குணமாக்கிய மனிதனிடம் யூதர்களின் விசாரணை

13 பிறகு மக்கள் பரிசேயரிடம் அந்த மனிதனை அழைத்துச்சென்றனர். குருடாயிருந்த அந்த மனிதன் இவன்தான். 14 இயேசு சேறு உண்டாக்கி இவனது கண்களைக் குணப்படுத்தினார். அவர் இதனை ஓய்வு நாளில் செய்திருக்கிறார். 15 ஆகையால் இப்பொழுது பரிசேயர்கள் அந்த மனிதனிடம், “எப்படி நீ பார்வை பெற்றாய்?” என மீண்டும் கேட்டனர். அதற்கு அந்த மனிதன், “அவர் என் கண்களின்மேல் சேற்றைப் பூசினார். நான் கழுவினேன். இப்பொழுது என்னால் பார்க்க முடிகிறது” என்றான்.

16 சில பரிசேயர்கள், “அந்த மனிதன் ஓய்வு நாள் பற்றிய சட்டங்களுக்குக் கீழ்ப்படியவில்லை. எனவே அவன் தேவனிடமிருந்து வரவில்லை” என்றனர்.

ஆனால் சிலரோ, “பாவம் செய்கிற எந்த மனிதராலும் இதுபோன்ற அற்புதங்களைச் செய்ய முடியாதே” என்றனர். யூதர்கள் தங்களுக்குள் ஒத்துப்போகவில்லை.

17 யூதர்கள் குருடனாயிருந்த அந்த மனிதனிடம் மீண்டும் கேட்டார்கள். “இயேசு உன்னைக் குணமாக்கினான். உன்னால் பார்க்க முடிகிறது. அவனைப்பற்றி நீ என்ன சொல்கிறாய்?”

அந்த மனிதன் “அவர் ஒரு தீர்க்கதரிசி” என்றான். 18 அந்த மனிதன் குருடனாயிருந்து பார்வை பெற்றது குறித்து யூதர்களுக்கு இன்னும் முழுமையான நம்பிக்கை ஏற்படவில்லை. எனவே அந்த மனிதனின் பெற்றோர்களுக்கு ஆளனுப்பினர். 19 யூதர்கள் அவனது பெற்றோர்களிடம், “இவன் உங்கள் மகன்தானே. அவன் குருடனாகவே பிறந்தான் என்று சொன்னீர்கள். இப்பொழுது அவனால் எவ்வாறு பார்க்கமுடிகிறது?” என்று கேட்டனர்.

20 அதற்கு அவனது பெற்றோர்கள், “இவன் எங்கள் மகன் என்பது எங்களுக்குத் தெரியும். அவன் குருடனாகப் பிறந்தான் என்பதும் தெரியும். 21 அவன் இப்போது எப்படிப் பார்க்கிறான் என்றும், கண்களைக் குணமாக்கியது யார் என்றும் எங்களுக்குத் தெரியாது. அவனைக் கேளுங்கள். அவனே பதில் சொல்லுகிற வகையில் வளர்ந்திருக்கிறான்” என்றனர். 22 ஏனென்றால் அவர்களுக்கு யூதத் தலைவர்களைப்பற்றிய அச்சம் இருந்தது. இயேசுதான் கிறிஸ்து என்று சொல்கிற எவரொருவரையும் தண்டித்துவிட வேண்டும் என்று யூதத்தலைவர்கள் முடிவு செய்திருந்தனர். அவர்கள் அம்மக்களை வழிபாட்டு இடத்திலிருந்து விலக்கியும் வைப்பர். 23 எனவே அவனது பெற்றோர்கள். “இவன் வளர்ந்து நிற்கிறவன். அவனையே கேளுங்கள்” என்றனர்.

24 முன்பு குருடனாயிருந்த அந்த மனிதனை மீண்டும் அழைத்தார்கள். யூதத் தலைவர்கள் அவனிடம், “நீ உண்மையைச் சொல்லி தேவனை மகிமைப்படுத்து. இந்த மனிதன் ஒரு பாவி என்று நாங்கள் அறிந்திருக்கிறோம்” என்றனர்.

25 “அவர் பாவியென்று எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு ஒன்று தெரியும். நான் முன்பு குருடனாக இருந்தேன். இப்போது என்னால் பார்க்க முடிகிறது” என்று அந்த மனிதன் சொன்னான்.

26 அதற்கு யூதத்தலைவர்கள், “உனக்கு அவன் என்ன செய்தான். எப்படி அவன் உன் கண்களைக் குணப்படுத்தினான்?” எனக் கேட்டனர்.

27 “நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். ஆனால் நான் சொல்வதை நீங்கள் கேட்பதில்லை. ஏன் மீண்டும் அதைக் கேட்க விரும்புகிறீர்கள்? அவரது சீஷராக விரும்புகிறீர்களா?” என்று கேட்டான்.

28 யூதத்தலைவர்கள் கோபம்கொண்டனர். அவனைக் கெட்ட வார்த்தைகளால் திட்டினர். “நீதான் இயேசுவின் சீஷன். நாங்கள் மோசேயின் சீஷர்கள். 29 தேவன் மோசேயிடம் பேசினார் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால் இந்த மனிதன் எங்கிருந்து வந்தான் என்பது எங்களுக்குத் தெரியாது” என்றனர்.

30 அதற்கு அம்மனிதன் “இது மிகவும் ஆச்சரியமான ஒன்று. இயேசு எங்கிருந்து வந்தார் என்பது உங்களுக்குத் தெரியாது. ஆனால் அவர் என் கண்களைக் குணப்படுத்தினார். 31 பாவிகளுக்கு தேவன் செவிக்கொடுப்பதில்லையென்று அறிந்திருக்கிறோம். பக்தியும் கீழ்ப்படிதலும் உள்ள ஒருவனுக்கு தேவன் செவிகொடுப்பார். 32 பிறவி குருட்டு மனிதனைக் குணப்படுத்திய அற்புதம் முதன் முறையாக இப்போதுதான் நிகழ்ந்துள்ளது. 33 இயேசு தேவனிடமிருந்தே வந்திருக்க வேண்டும். அவர் தேவனிடமிருந்து வந்திராவிட்டால் அவரால் இதுபோன்ற செயல்களைச் செய்ய இயலாது” என்றான்.

34 அதற்கு யூதத்தலைவர்கள், “நீ முழுவதும் பாவத்தில் பிறந்திருக்கிறாய். நீ எங்களுக்கு உபதேசிக்க முயற்சிக்கிறாயா?” என்று கேட்டனர். பின்னர் அவனை வெளியே தள்ளினர்.

ஆன்மீகக் குருடு

35 அவர்கள் அவனை வெளியேற்றியதை இயேசு அறிந்தார். அவர் அவனிடம் வந்து, “நீ மனிதகுமாரனிடத்தில் நம்பிக்கை உடையவனாக இருக்கிறாயா?” என்று கேட்டார்.

36 அதற்கு அவன், “அவரை நான் நம்பும்படியாக அந்த மனிதகுமாரன் யார் என்று எனக்குச் சொல்லுங்கள்” என்றான்.

37 “நீ ஏற்கெனவே அவரைப் பார்த்திருக்கிறாய். இப்போது உன்னோடு பேசிக்கொண்டிருப்பவர்தான் அந்த மனிதகுமாரன்” என்றார்.

38 உடனே அவன், “ஆண்டவரே! நான் நம்புகிறேன்” என்றான். இயேசுவை அவன் குனிந்து வணங்கினான்.

39 “இந்த உலகம் நியாயம் தீர்க்கப்படும்படியாக நான் இந்த உலகத்துக்கு வந்தேன். குருடர்கள் பார்வை பெறும்படியாக நான் வந்தேன். காண்கிறவர்கள் எனத் தம்மை நினைத்துக்கொள்கிறவர்கள் குருடராகும்படியாக நான் வந்தேன்” என்றார் இயேசு.

40 இயேசுவுடன் சில பரிசேயர்களும் இருந்தனர். அவர்கள் இயேசு சொல்வதைக் கேட்டனர். “என்ன? நாங்களும்கூட குருடர்கள் என்றா கூறுகின்றாய்?” எனக் கேட்டனர்.

41 இயேசு அவர்களுக்கு, “நீங்கள் உண்மையிலேயே குருடராயிருந்தால் நீங்கள் பாவம் செய்த குற்றவாளிகள் அல்ல. ஆனால் உங்களுக்குப் பார்வை உண்டு என நீங்கள் சொல்வதால், நீங்கள் குற்றவாளிகளே” என்றார்.

சங்கீதம் 113-114

113 கர்த்தரைத் துதியுங்கள்.
கர்த்தருடைய ஊழியர்களே, அவரைத் துதியுங்கள்!
    கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்.
கர்த்தருடைய நாமம் என்றென்றும் ஆசீர்வதிக்கப்படுவதாக.
சூரியன் உதிக்கும் கிழக்கிலிருந்து சூரியன் மறைகிற மேற்குவரை
    கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக.
எல்லா தேசங்களிலும் கர்த்தர் உயர்ந்தவர்.
    வானங்கள் மட்டும் அவரது மகிமை எழும்புகிறது.
எங்கள் தேவனாகிய கர்த்தரைப் போன்றோர் எவருமில்லை.
    தேவன் பரலோகத்தின் உயரத்தில் வீற்றிருக்கிறார்.
வானத்தையும் பூமியையும் கீழே குனிந்து நோக்கும்வண்ணம்
    தேவன் நமக்கு மேலே மிக உயரத்தில் இருக்கிறார்.
தூசியிலிருந்து ஏழைகளை தேவன் தூக்கிவிடுகிறார்.
    குப்பைக் குவியலிலிருந்து தேவன் பிச்சைக்காரர்களை வெளியேற்றுகிறார்.
அந்த ஜனங்களை தேவன் முக்கியமானவர்களாக்குகிறார்.
    அந்த ஜனங்களை தேவன் முக்கியமான தலைவர்களாக்குகிறார்.
ஒரு பெண்ணிற்குக் குழந்தைகள் இல்லாமல் இருக்கலாம்,
    ஆனால் தேவன் அவளுக்குக் குழந்தைகளைத் தந்து அவளை மகிழ்ச்சியாக்குவார்.
கர்த்தரைத் துதியுங்கள்!

114 இஸ்ரவேல் எகிப்தை விட்டு நீங்கினான்.
    யாக்கோபு அந்நிய நாட்டை விட்டுச் சென்றான்.
யூதா தேவனுக்கு விஷேசமான ஜனங்களானார்கள்.
    இஸ்ரவேல் அவருடைய இராஜ்யமானது.
செங்கடல் இதைக்கண்டு விலகி ஓடிற்று.
    யோர்தான் நதியோ திரும்பி ஓடிப்போயிற்று.
ஆட்டுக்கடாக்களைப்போல் மலைகள் நடனமாடின.
    ஆட்டுக்குட்டிகளைப் போல் மலைகள் நடனமாடின.
செங்கடலே, நீ ஏன் ஓடிப்போனாய்?
    யோர்தான் நதியே, நீ ஏன் திரும்பி ஓடிப் போனாய்?
மலைகளே, நீங்கள் ஏன் ஆட்டுக் கடாக்களைப்போல் நடனமாடினீர்கள்?
    மலைகளே, நீங்களும் ஏன் ஆட்டுக் குட்டிகளைப்போல் நடனமாடினீர்கள்?
யாக்கோபின் தேவனும் கர்த்தருமாகிய ஆண்டவருக்கு முன்னே
    பூமி நடுங்கி அதிர்ந்தது.
கன்மலையிலிருந்து தண்ணீர் பெருகி ஓடச் செய்தவர் தேவனேயாவார்.
    கெட்டியான பாறையிலிருந்து நீரூற்றின் வெள்ளத்தைப் பாய்ந்தோடச் செய்தவர் தேவனேயாவார்.

நீதிமொழிகள் 15:15-17

15 சில ஏழைகள் எப்போதும் துக்கமாக இருக்கிறார்கள். ஆனால் மனதில் மகிழ்ச்சி கொண்ட ஜனங்களுக்கு வாழ்க்கை ஒரு விருந்தாகும்.

16 ஒருவன் ஏழையாக இருந்து கர்த்தரை மதிப்பது சிறந்ததாகும். ஒருவன் செல்வனாக இருந்து துன்பப்படுவதைவிட இது மேலானதாகும்.

17 வெறுப்புள்ள இடத்தில் ஏராளமாக உண்பதைவிட அன்புள்ள இடத்தில் கொஞ்சம் உண்பதே நல்லது.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center