Print Page Options Listen to Reading
Previous Prev Day Next DayNext

The Daily Audio Bible

This reading plan is provided by Brian Hardin from Daily Audio Bible.
Duration: 731 days

Today's audio is from the NET. Switch to the NET to read along with the audio.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
ரூத் 2-4

ரூத் போவாஸை சந்தித்தல்

பெத்லெகேமில் ஒரு பணக்காரன் வாழ்ந்து வந்தான். அவனது பெயர் போவாஸ். அவன் நகோமியின் நெருங்கிய உறவினன். அவன் எலிமெலேக்கின் குடும்பத்தைச் சார்ந்தவன்.

ஒருநாள் ரூத் (மோவாபிலிருந்து வந்த பெண்) நகோமியிடம், “நான் வயலுக்குப் போகலாம் என்றும், என்மீது இரக்கம் காட்டக்கூடிய ஒருவரைக் காண முடியும் என்றும், வயலில் சிதறிக் கிடக்கும் தானியங்களைச் சேகரித்துக்கொள்ள அவர் அனுமதிக்கக் கூடும் என்றும் எண்ணுகின்றேன்” என்றாள்.

நகோமி, “நல்லது மகளே, போய் வா” என்றாள். எனவே ரூத் வயலுக்குப் போய், தானியங்களை அறுவடை செய்யும் வேலைக்காரர்களுக்குப் பின்னால் போனாள். சிதறிக்கிடக்கும் தானியங்களைச் சேகரித்தாள். அந்த வயலின் ஒரு பகுதி போவாஸுக்கு உரியது. அவன் எலிமெலேக்கின் குடும்பத்தைச் சேர்ந்தவன்.

பிறகு போவாஸ் பெத்லெகேமிலிருந்து வயலுக்கு வந்தான். அவன் வேலைக்காரர்களை வாழ்த்தி, “கர்த்தர் உங்களோடு இருக்கட்டும்” என்று கூறினான்.

அதற்கு வேலைக்காரர்களும், “கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கட்டும்!” என்றனர்.

பிறகு, போவாஸ் தனது வேலைக்காரர்களிடம், “அந்தப் பெண் யார்?” என்று கேட்டான்.

வேலைக்காரன் அதற்கு, “அவள் மோவாபிய பெண். அவள் மலைநாடான மோவாபிலிருந்து நகோமியோடு வந்திருக்கிறாள். அவள் அதிகாலையில் என்னிடம் வந்து, வேலைக்காரர்களின் பின்னால் போய், சிதறும் தானியங்களை எடுத்துக்கொள்ளட்டுமா? என்று கேட்டாள். இதுவரை இங்கேயே இருக்கிறாள். அவளது குடிசையும் இங்கேதான் இருக்கிறது” என்றான்.

பிறகு போவாஸ் ரூத்திடம், “பெண்ணே கவனி, நீ என் வயலிலேயே தங்கியிருந்து சிதறும் தானியங்களை எல்லாம் சேகரித்து உனக்காக எடுத்துக்கொள்ளலாம். மற்றவர்களின் வயலுக்குப் போக வேண்டிய அவசியம் இல்லை. தொடர்ந்து பெண் வேலைக்காரர்களின் பின்னால் போ. அவர்கள் எந்த வயலுக்குப் போகிறார்கள் என்பதைப் பார்த்திருந்து, அவர்களைப் பின்தொடர்ந்து செல். உனக்குத் தொந்தரவு செய்யாதபடி இங்குள்ள இளைஞர்களை எச்சரித்திருக்கிறேன். உனக்குத் தாகமாக இருக்கும்போது, எனது ஆட்கள் குடிக்கும் ஜாடியில் இருந்தே நீயும் தண்ணீரை எடுத்துக் குடிக்கலாம்” என்றான்.

10 ரூத் தரையில் பணிந்து வணங்கினாள். அவள் போவாஸிடம், “என்னைப் பொருட்படுத்தி கவனித்ததுபற்றி ஆச்சரியப்படுகிறேன். நான் அந்நிய தேசத்தாளாயிருந்தும் என் மீது கருணை காட்டுகிறீர்” என்றாள்.

11 போவாஸ் அவளுக்குப் பதிலாக, “நீ உன் மாமியாரான நகோமிக்குச் செய்துவரும் உதவியைப் பற்றி, நானும் அறிந்துள்ளேன். உன் கணவன் மரித்தப் பிறகும் நீ அவளுக்கு உதவி வருகிறாய். நீ உனது தந்தை, தாய், உறவினர், நாடு அனைத்தையும் விட்டு விட்டு இங்கே வந்திருக்கிறாய். இங்குள்ள எவரையும் உனக்குத் தெரியாது. எனினும் நீ நகோமியோடு இங்கே வந்துவிட்டாய். நீ செய்த நல்ல செயல்களுக்கெல்லாம் கர்த்தர் உனக்கு நன்மைச் செய்வார். 12 இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர் உனக்கு முழுமையான பலனைத் தருவார். அவரிடம் பாதுகாப்புக்காக வந்திருக்கிறாய். அவர் உன்னைப் பாதுகாப்பார்” என்றான்.

13 பிறகு ரூத், “நீங்கள் என்னிடம் மிகுந்த கருணையோடு இருக்கிறீர்கள். நான் ஒரு சாதாரண வேலைக்காரி. நான் உங்கள் வேலைக்காரிகளுள் ஒருத்திக்குக்கூட சமமானவள் அல்ல. ஆனால் நீங்கள் என்னிடம் கருணையான வார்த்தைகளைக் கூறி ஆறுதலடையச் செய்துள்ளீர்கள்” என்றாள்.

14 மதிய உணவு நேரத்தில், போவாஸ், “இங்கே வா! எங்களிடம் இருக்கும் அப்பத்தில், நீயும் கொஞ்சம் சாப்பிடு. உன் அப்பத்தை இந்த காடியிலே தோய்த்துக் கொள்” என்று ரூத்திடம் சொன்னான்.

எனவே ரூத் வேலைக்காரர்களோடு உட்கார்ந்தாள். போவாஸ் அவளுக்குக் கொஞ்சம் வறுத்த கோதுமையைக் கொடுத்தான். அவள் வயிறு நிறைய சாப்பிட்டாள். எனினும் உணவு மிஞ்சியது. 15 பிறகு அவள் எழுந்து தன் வேலைக்குத் திரும்பிப் போனாள்.

பின்னர் போவாஸ் தன் வேலைக்காரர்களிடம், “அவள் அறுத்த கட்டுகளின் நடுவே இருக்கும் தானியங்களையுங்கூடச் சேகரித்துக்கொள்ளட்டும். அவளைத் தடுக்க வேண்டாம். 16 அவளுக்கு எளிதாக இருக்கும்படி, அறுக்கும்போதே சில தானியக் கதிர்களை விட்டுச் செல்லுங்கள். அவள் அவற்றை சேகரித்துக்கொள்ளட்டும். சேகரிக்கும் வேலையை நிறுத்தும்படி சொல்ல வேண்டாம்” என்றான்.

நகோமி போவாஸைப்பற்றிக் கேள்விப்படுதல்

17 ரூத் மாலைவரை வயல்களில் வேலை செய்தாள். பிறகு அவள் தான் பொறுக்கியதை தட்டி அடித்துப் புடைத்தாள். அது ஏறக்குறைய ஒரு மரக்கால் வாற்கோதுமை இருந்தது. 18 ரூத் அதனை எடுத்துக்கொண்டு நகரத்துக்குள் போய் தன் மாமியாரிடம் அவற்றைக் காட்டினாள். அத்துடன் தன்னிடம் மீதியிருந்த மதிய உணவையும் அவளுக்குக் கொடுத்தாள்.

19 அவளது மாமியாரோ அவளிடம், “நீ இந்த தானியத்தை எங்கே சேகரித்தாய்? எங்கே வேலை செய்தாய்? உன்னை விசாரித்தவன் ஆசீர்வதிக்கப்படுவான்” என்றாள்.

ரூத் அவளிடம் தான் யாரோடு வேலை செய்தாள் என்பதைக் கூறினாள். அவள், “இன்றைக்கு நான் வேலைசெய்த வயல்காரனின் பெயர் போவாஸ்” என்றாள்.

20 நகோமி தன் மருமகளிடம், “கர்த்தர் அவனை ஆசீர்வதிக்கட்டும்! உயிருடன் இருப்பவர்களுக்கும், மரித்துப்போனவர்களுக்கும் தொடர்ந்து தன் கருணையை அவரே காட்டி வருகிறார்” என்றாள். அத்துடன் “போவாஸ் நமது உறவினர்களில் ஒருவன், போவாஸ் நமது பாதுகாவலர்களிலும் [a] ஒருவன்” என்றாள்.

21 பிறகு ரூத், “மீண்டும் வரும்படியும், வயலில் தொடர்ந்து வேலை செய்யும்படியும் போவாஸ் என்னிடம் சொன்னார். அறுவடைக்காலம் முடியும்வரை அவரது வேலைக்காரர்களுடனேயே நானும் வேலை செய்யலாம் என்றார்” என்று சொன்னாள்.

22 பிறகு நகோமி தன் மருமகளிடம், “அவனது பெண் வேலைக்காரிகளோடு சேர்ந்து வேலை செய்வது உனக்கும் நல்லது. நீ வேறு ஏதாவது வயலில் வேலை செய்தால், யாராவது உனக்குத் தொல்லை கொடுக்கக் கூடும்” என்றாள். 23 எனவே ரூத், போவாஸின் வேலைக்காரிகளோடு சேர்ந்து தொடர்ந்து வேலை செய்துவந்தாள். வாற் கோதுமையின் அறுவடை முடியும் வரை அவள் தானியத்தைச் சேகரித்து வந்தாள். கோதுமை அறுவடைக் காலம் முடியும்வரையும் அங்கு வேலைசெய்தாள். ரூத் தனது மாமியாரான நகோமியோடு தொடர்ந்து வாழ்ந்து வந்தாள்.

தானியத்தைப் போரடிக்கும் இடம்

பிறகு நகோமி ரூத்திடம், “என் மகளே, உனக்காக நான் ஒரு நல்ல கணவனையும், சிறந்த வீட்டையும் ஏற்பாடு செய்ய வேண்டும். அதுதான் உனக்கும் நல்லது. அதற்கு போவாஸ் சரியான மனிதனாக இருக்கலாம். போவாஸ் நமது நெருக்கமான உறவினன். நீ அவனது வேலைக்காரிகளோடு வேலை செய்திருக்கிறாய். இன்று இரவு களத்தில் தானியத்தைப் போரடிக்கும் இடத்தில் அவன் வேலை செய்வான். நீ குளித்து நன்றாக ஆடை அணிந்துகொள். தானியத்தை போரடிக்கும் களத்திற்குப் போ. அவன் இரவு உண்டு முடிக்கும்வரை போவாஸின் கண்ணில் படாமல் இரு. அவன் உண்டு முடித்ததும், ஓய்வுக்காகப் படுப்பான். அவனையே கவனித்துக்கொண்டிருந்தால் அவன் படுக்கும் இடத்தை நீ அறிந்து கொள்ள முடியும். அங்கேபோய் அவனது காலை மூடியிருக்கும் போர்வையை ஒதுக்கிவிட்டு அவனோடு படுத்துக்கொள். நீ திருமணத்துக்காகச் செய்ய வேண்டியதைப்பற்றி அவன் உனக்குக் கூறுவான்” என்றாள்.

பிறகு ரூத், “நீங்கள் சொன்னபடியே நான் செய்வேன்” என்று பதில் சொன்னாள்.

எனவே ரூத் தானியத்தைப் போரடிக்கும் களத்திற்குச் சென்றாள். ரூத் தனது மாமியார் சொன்னபடியே எல்லாவற்றையும் செய்து முடித்தாள். உணவை உண்டு, குடித்தபின் போவாஸ் மிகவும் மனநிறைவோடு இருந்தான். அவன் ஒரு தானிய அம்பாரத்துக்கு அடியிலே படுத்துக்கொண்டான். பிறகு ரூத் அமைதியாக அவன் அருகிலே சென்று காலருகே போர்வையை விலக்கிவிட்டு படுத்துக்கொண்டாள்.

நடு இரவில் போவாஸ் தூக்கத்தில் புரண்டு படுத்தான். அப்போது விழிப்பு வந்தது. தன் காலடியில் ஒரு பெண் படுத்திருப்பதைக் கண்டு அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. போவாஸ் அவளிடம், “யார் நீ?” என்று கேட்டான்.

அவளோ, “நான் உங்கள் வேலைக்காரியான ரூத். உங்கள் போர்வையை என்மேல் மூடுங்கள். நீங்களே எனது பாதுகாவலர்” என்றாள்.

10 பிறகு போவாஸ், “இளம்பெண்ணே! கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கட்டும். நீ என்னிடம் கருணை உடையவளாய் இருக்கிறாய். நீ உன் மாமியாரின் பேரில் வைத்திருக்கும் கருணையைவிட என்மீது வைத்திருக்கும் கருணை மிகவும் உயர்ந்தது. ஏழையோ பணக்காரனோ, உன்னால் ஒரு இளைஞனை மணந்திருக்க முடியும். ஆனால் நீ அவ்வாறு செய்யவில்லை. 11 இளம் பெண்ணே, இனிமேல் நீ பயப்பட வேண்டாம். நீ கேட்கும் உதவியை உனக்குச் செய்வேன். நீ மிகவும் சிறந்த பெண் என்பதை நகரத்தில் உள்ள அனைவரும் அறிவார்கள். 12 நான் உனது நெருங்கிய உறவினன் என்பதும் உண்மைதான். ஆனால் என்னைவிட நெருக்கமான உறவினன் ஒருவன் உனக்கு இருக்கிறான். 13 இன்று இரவு இங்கேயே தங்கியிரு. காலையில் அவன் உனக்கு உதவுவானா என்று பார்க்கலாம். அவன் உனக்கு உதவுவதாகத் தீர்மானித்துவிட்டால் அது மிகவும் நல்லதாக இருக்கும். ஒருவேளை அவன் மறுத்துவிட்டால், பிறகு கர்த்தருடைய பேரால் ஆணையிட்டுக் கூறுகிறேன், நானே உன்னை மணந்துகொள்வேன். உனக்காக எலிமெலேக்கின் நிலத்தையும் வாங்கித் தருவேன். எனவே காலைவரை இங்கேயே படுத்திரு” என்றான்.

14 எனவே ரூத், போவாஸின் காலருகே காலைவரை படுத்திருந்தாள். விடியும் முன், இருள் இருக்கும்போதே ரூத் எழுந்தாள்.

போவாஸ் அவளிடம், “நேற்று இரவு நீ இங்கே வந்தது நமக்குள் இரகசியமாக இருக்கட்டும்” என்று கூறினான். 15 மேலும் அவன், “உனது போர் வையைக் கொண்டு வா. அதனை விரித்துப்பிடி” என்று கூறினான்.

எனவே ரூத் போர்வையை விரித்துப் பிடித்தாள், போவாஸ் அதில் ஆறுபடி வாற்கோதுமையை அளந்துபோட்டான். அதை நகோமிக்குத் தனது அன்பளிப்பாகக் கொடுக்கச் சொன்னான். பிறகு அதை அவளது முதுகில் ஏற்றிவிட்டு, நகரத்தை நோக்கி போவாஸ் போனான்.

16 ரூத் தனது மாமியாரான நகோமி இருந்த வீட்டிற்குப் போனாள். நகோமி கதவருகே வந்து, “யாரங்கே?” என்று கேட்டாள்.

ரூத் வீட்டிற்குள்ளே போய் போவாஸ் அவளுக்காகச் செய்ததை எல்லாம் எடுத்துச் சொன்னாள். 17 அவள், “போவாஸ் உங்களுக்கு அன்பளிப்பாக இதை என்னிடம் கொடுத்தார். உங்களுக்கு அன்பளிப்பாக எதையும் எடுத்துச் செல்லாமல் நான் வீட்டுக்குப் போகக் கூடாது என்று சொன்னார்” என்றாள்.

18 அதற்கு நகோமி, “மகளே, என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ளும்வரை பொறுமையாக இருப்போம். தான் செய்ய வேண்டியவற்றை போவாஸ் செய்து முடிக்கும்வரை ஓய்வெடுக்கமாட்டான். என்ன நடக்கப் போகிறது என்பதை இன்று இரவுக்குள் நாமறிவோம்” என்றாள்.

போவாஸும் மற்ற உறவினனும்

நகரவாசலில் ஜனங்கள் கூடும் இடத்திற்கு போவாஸ் சென்றான். தான் சொன்ன உறவினன் வரும்வரை அங்கேயே அவன் காத்திருந்தான். அவன் வந்ததும், “நண்பனே! வா, இங்கே உட்காரு!” என்றான்.

பிறகு போவாஸ் சில சாட்சிகளையும் அருகில் அழைத்தான். நகரத்திலுள்ள 10 மூப்பர்களையும் அழைத்து, “இங்கு உட்காருங்கள்!” என்றான். அவர்களும் உட்கார்ந்தனர்.

பிறகு போவாஸ் நெருங்கிய உறவினனிடம், “மோவாபின் மலை நகரத்திலிருந்து நகோமி வந்திருக்கிறாள். எலிமெலேக்கின் நிலத்தை அவள் விற்கப்போகிறாள். நான் இங்கே வாழும் ஜனங்களின் முன்னிலையிலும் நமது மூப்பர்களின் முன்னிலையிலும் இதைக்கூற முடிவு செய்தேன். நீ அதனைத் திரும்ப மீட்க வேண்டுமென விரும்பினால் வாங்கிக்கொள்! நீ அந்த நிலத்தை மீட்டுக்கொள்ள விரும்பாவிட்டால் என்னிடம் கூறு. நானே அதை மீட்டுக்கொள்ளும் இரண்டாவது உரிமையாளன். நீ அதனைத் திரும்ப மீட்டுக் கொள்ளாவிட்டால் நான் வாங்கிக் கொள்வேன்” என்றான்.

பிறகு போவாஸ், “நீ நகோமியிடமிருந்து நிலத்தை வாங்கும்போதே நீ மரித்துப் போனவனின் மனைவியையும் பெறுவாய், அவள் மோவாபிய பெண்ணான ரூத். அவளுக்குக் குழந்தை பிறந்தால், இந்த நிலமும் அதற்கு உரியதாகும். இதன் மூலம், அந்த நிலம் மரித்துப்போனவனின் குடும்பத்திற்குரியதாகவே விளங்கும்” என்றான்.

அந்த நெருங்கிய உறவினனோ, “என்னால் அந்த நிலத்தைத் திரும்ப வாங்கிக் கொள்ள முடியாது. அது எனக்கே உரியதாகவேண்டும். ஆனால் என்னால் விலைகொடுத்து வாங்கமுடியாது. நான் அவ்வாறு செய்தால் என் நிலத்தை இழந்துபோனவன் ஆகிறேன். நீங்களே அந்நிலத்தை வாங்கிக்கொள்ளுங்கள்” என்றான். (இஸ்ரவேலில் முற்காலத்தில், ஒருவன் ஒரு சொத்தை வாங்கினாலோ மீட்டுக் கொண்டாலோ, ஒருவன் தனது பாதரட்சையை எடுத்து மற்றவனிடம் கொடுக்கவேண்டும். இது வாங்கியதற்கான ஒரு சான்றாக விளங்கும்.) எனவே நெருக்கமான உறவினன், “நிலத்தை வாங்கிக்கொள்” என்று கூறி, தனது பாதரட்சையை எடுத்து போவாஸிடம் கொடுத்தான்.

பிறகு போவாஸ் மூப்பர்களிடமும், மற்ற ஜனங்களிடமும், “இன்று நான் நகோமியிடமிருந்து எலிமெலேக்குக்கும், கிலியோனுக்கும், மக்லோனுக்கும் சொந்தமாக இருந்த எல்லாவற்றையும் வாங்கிக்கொள்கிறேன். 10 நான் ரூத்தையும் என் மனைவியாகப் பெற்றுக்கொள்கிறேன். இவ்வாறு நான் செய்வதால், மரித்துப்போனவனின் சொத்தானது அவனது குடும்பத்துக்கு உரியதாகவே விளங்கும். இதன் மூலம் அவனது பெயரானது அவனது குடும்பத்தையும் சொத்துக்களையும் விட்டு பிரிக்கப்படாமல் இருக்கும். இன்று இதற்கு நீங்களே சாட்சிகளாக இருக்கிறீர்கள்” என்றான்.

11 நகரவாசலில் உள்ள ஜனங்களும் மூப்பர்களும், சாட்சிகளாக இருந்தவர்களும், “உனது வீட்டிற்கு வருகிற இந்தப் பெண்ணை இஸ்ரவேல் வீட்டைக் கட்டுவித்த ராகேலைப் போலவும், லேயாளைப் போலவும் கர்த்தர் ஆக்குவாராக. நீ எப்பிராத்தாவிலே அதிகாரத்தைப் பெறுவாயாக! பெத்லெகேமில் புகழ் பெறுவாயாக! 12 தாமார் யூதாவுக்குப் பேரேசை மகனாகப் பெற்றாள். அதனால் அந்தக் குடும்பம் உயர்வு பெற்றது. அதைப்போலவே, ரூத் மூலமாக கர்த்தர் உனக்கு நிறைய பிள்ளைகளைத் தரட்டும். உனது குடும்பமும் அதைப்போலவே, உயர்வைப் பெறட்டும்” என்றனர்.

13 எனவே போவாஸ் ரூத்தை மணந்துகொண்டான். அவள் கர்ப்பவதியாக கர்த்தர் கருணை செய்தார். அவள் ஒரு மகனைப் பெற்றாள். 14 நகரத்தில் உள்ள பெண்கள் நகோமியிடம், “உனக்குப் பிள்ளையைக் கொடுத்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அவன் இஸ்ரவேலில் மிகுந்த புகழைப் பெறுவான். 15 அவன் மீண்டும் உன்னை வாழவைப்பான், உனது முதியவயதில் அவன் உன்னைக் கவனித்துக்கொள்வான். இவ்வாறு நடக்குமாறு உனது மருமகள் செய்தாள். அவள் உனக்காகவே இந்தக் குழந்தையைப் பெற்றாள். அவள் உன்மீது அன்புடையவள். அவள் 7 ஆண் மகன்களையும்விட உனக்கு மேலானவள்” என்றனர்.

16 நகோமி பிள்ளையை எடுத்துத் தனது கைகளில் ஏந்தி அவனைக் கவனித்துக் கொண்டாள். 17 அயல் வீட்டுப் பெண்கள், “இந்த பையன் நகோமிக்காக பிறந்தவன்” என்றனர். அவர்கள் அவனுக்கு ஓபேத் என்று பேரிட்டனர். அவன் ஈசாயின் தந்தையானான். ஈசாய் அரசனான தாவீதின் தந்தையானான்.

ரூத் மற்றும் போவாஸின் குடும்பம்

18 இது பேரேசுடைய குடும்பத்தின் வரலாறு:

பேரேஸ் எஸ்ரோனின் தந்தையானான்.

19 எஸ்ரோன் ராமின் தந்தையானான்.

ராம் அம்மினதாபின் தந்தையானான்.

20 அம்மினதாப் நகசோனின் தந்தையானான்.

நகசோன் சல்மோனின் தந்தையானான்.

21 சல்மோன் போவாஸின் தந்தையானான்.

போவாஸ் ஓபேதின் தந்தையானான்.

22 ஓபேத் ஈசாயின் தந்தையானான்.

ஈசாய் தாவீதின் தந்தையானான்.

யோவான் 4:43-54

அதிகாரியின் மகன் குணப்படுதல்(A)

43 இரு நாட்கள் கழிந்ததும் இயேசு அந்நகரத்தை விட்டு கலிலேயாவுக்குச் சென்றார். 44 (இயேசு ஏற்கெனவே “ஒரு தீர்க்கதரிசி தன் சொந்த ஊரில் மதிக்கப்படமாட்டான்” என்று சொல்லியிருந்தார்) 45 அவர் கலிலேயாவுக்கு வந்தபோது அங்குள்ள மக்கள் அவரை நல்ல முறையில் வரவேற்றனர். அந்த மக்கள் இயேசு எருசலேமில் பஸ்கா பண்டிகையில் செய்தவற்றையெல்லாம் நேரில் கண்டவர்கள். அந்த மக்கள் அப்பண்டிகையில் கலந்துகொண்டவர்கள்.

46 கலிலேயாவிலுள்ள கானா என்ற ஊருக்கு இயேசு மீண்டும் சென்றார். ஏற்கெனவே அவர் அங்குதான் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியிருந்தார். அரசனின் முக்கியமான அதிகாரி ஒருவன் கப்பர்நகூமில் வசித்து வந்தான். அவனது மகன் நோயுற்றிருந்தான். 47 அந்த மனிதன், இயேசு இப்பொழுது யூதேயா நாட்டிலிருந்து கலிலேயாவுக்கு வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டான். ஆகையால் அவன் கானா ஊருக்குப் போய் இயேசுவைச் சந்தித்தான். கப்பர்நகூமுக்கு வந்து தன் மகனது நோயைக் குணமாக்கும்படி இயேசுவை வேண்டினான். அவனது மகன் ஏற்கெனவே சாகும் நிலையில் இருந்தான். 48 “நீங்கள் அற்புதங்களையும் அதிசயங்களையும் காணாவிட்டால் என்னை நம்பமாட்டீர்கள்” என்று இயேசு சொன்னார்.

49 அந்த அதிகாரியோ, “ஐயா, என் சிறிய மகன் சாவதற்கு முன் என் வீட்டிற்கு வாருங்கள்” என்று அழைத்தான்.

50 அதற்கு இயேசு, “போ, உன் மகன் பிழைப்பான்” என்றார்.

அந்த மனிதன் இயேசு சொன்னதில் நம்பிக்கை வைத்து தன் வீட்டிற்குத் திரும்பினான். 51 வழியில் அவனது வேலைக்காரர்கள் எதிரில் வந்தார்கள். “உங்கள் மகன் குணமாகிவிட்டான்” என்று அவர்கள் சொன்னார்கள்.

52 “என் மகன் எப்போது குணமாகத் தொடங்கினான்?” என்று கேட்டான் அவன். “நேற்று ஒருமணி இருக்கும்போது உங்கள் மகனின் காய்ச்சல் விலகி குணமானது” என்றார்கள் வேலைக்காரர்கள்.

53 இயேசு, “உன் மகன் பிழைப்பான்” என்று சொன்ன நேரமும் ஒரு மணிதான் என்பதை அந்த அதிகாரி உணர்ந்துகொண்டான். ஆகையால் அவனும் அவனது வீட்டில் உள்ள அனைவரும் இயேசுவின்மீது விசுவாசம் வைத்தனர்.

54 யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்த பிறகு, இயேசு செய்த இரண்டாவது அற்புதம் இது.

சங்கீதம் 105:16-36

16 தேவன் தேசத்தில் பஞ்சம் வரப்பண்ணினார்.
    ஜனங்களுக்கு உண்பதற்குத் தேவையான உணவு இருக்கவில்லை.
17 ஆனால் அவர்களுக்கு முன்னே தேவன் யோசேப்பு என்ற மனிதனை அனுப்பினார்.
    யோசேப்பு ஒரு அடிமையாக விற்கப்பட்டான்.
18 யோசேப்பின் கால்களை அவர்கள் ஒரு கயிற்றால் கட்டினார்கள்.
    அவன் கழுத்தைச் சுற்றிலும் ஒரு இரும்பு வளையத்தை அணிவித்தார்கள்.
19 அவர் சொன்ன காரியங்கள் அப்படியே நிகழும்வரை யோசேப்பு அடிமையாக இருந்தான்.
    யோசேப்பு நேர்மையானவன் என்பதை கர்த்தருடைய செய்தி நிரூபித்தது.
20 எனவே எகிப்திய அரசன் அவனை விடுதலை செய்தான்.
    தேசத்தின் தலைவன் அவனைச் சிறையினின்று விடுவித்தான்.
21 அவர் அவனுக்குத் தமது வீட்டின் பொறுப்பைக் கொடுத்தார்.
    அவருக்குச் சொந்தமான அனைத்தையும் யோசேப்பு கண்காணித்து வந்தான்.
22 பிற தலைவர்களுக்கு யோசேப்பு ஆணைகள் அளித்தான்.
    யோசேப்பு முதியவர்களுக்குக் கற்பித்தான்.
23 பின்பு இஸ்ரவேல் எகிப்திற்கு வந்தான்.
    யாக்கோபு காமின் நாட்டில் வாழ்ந்தான்.
24 யாக்கோபின் குடும்பம் பெருகிற்று.
    அவர்களின் பகைவர்களைக் காட்டிலும் அவர்கள் பலவான்களானார்கள்.
25 எனவே எகிப்தியர்கள் யாக்கோபின் குடும்பத்தைப் பகைக்கத் தொடங்கினார்கள்.
    அவர்களின் அடிமைகளுக்கு எதிரான திட்டங்கள் வகுத்தார்கள்.
26 எனவே தேவன் தமது தாசனாகிய மோசேயை அனுப்பினார்.
    தேவன் தேர்ந்தெடுத்த ஆசாரியனாக ஆரோன் இருந்தான்.
27 காமின் நாட்டில் பல அதிசயங்களைச் செய்வதற்கு
    தேவன் மோசேயையும் ஆரோனையும் பயன்படுத்தினார்.
28 தேவன் மிகக் கடும் இருளை அனுப்பினார்.
    ஆனால் எகிப்தியர்கள் அவருக்குச் செவி சாய்க்கவில்லை.
29 எனவே தேவன் தண்ணீரை இரத்தமாக்கினார்.
    எல்லா மீன்களும் மடிந்தன.
30 அவர்கள் நாடு தவளைகளால் நிரம்பிற்று.
    அரசனின் படுக்கையறையில் கூட தவளைகள் இருந்தன.
31 தேவன் கட்டளையிட்டார்.
    ஈக்களும் பேன்களும் வந்தன.
    அவை எங்கும் நிரம்பின.
32 தேவன் கல்மழையைப் பெய்யப்பண்ணினார்.
    நாடு முழுவதையும் மின்னல் பாதித்தது.
33 தேவன் அவர்களது திராட்சைக் கொடிகளையும் அத்திமரங்களையும் அழித்தார்.
    அந்நாட்டின் ஒவ்வொரு மரத்தையும் தேவன் அழித்தார்.
34 தேவன் கட்டளையிட்டார், வெட்டுக்கிளிகளும் புல்புழுக்களும் வந்தன.
    அவை எண்ணமுடியாத அளவு இருந்தன!
35 வெட்டுக்கிளிகளும் பச்சைப்புழுக்களும் நாட்டின் எல்லா தாவரங்களையும்,
    வயலின் எல்லா பயிர்களையும் தின்றன.
36 பின்பு தேவன் நாட்டின் முதற்பேறான ஒவ்வொன்றையும் கொன்றார்.
    தேவன் முதலில் பிறந்த மகன்களைக் கொன்றார்.

நீதிமொழிகள் 14:26-27

26 கர்த்தரை மதிக்கிறவன் பாதுகாப்பாக இருப்பான். அவனது பிள்ளைகளும் பாதுகாப்பாக வாழ்வார்கள்.

27 கர்த்தரை மதிப்பது உண்மையான வாழ்வைத் தரும். அது அவன் மரண வலையில் விழாமல் அவனைக் காப்பாற்றும்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center