Print Page Options Listen to Reading
Previous Prev Day Next DayNext

The Daily Audio Bible

This reading plan is provided by Brian Hardin from Daily Audio Bible.
Duration: 731 days

Today's audio is from the MEV. Switch to the MEV to read along with the audio.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
நியாயாதிபதிகள் 21 - ரூத் 1

பென்யமீன் மனிதர்களுக்கு மனைவியரைத் தேர்ந்தெடுத்தல்

21 மிஸ்பாவில் இஸ்ரவேல் மனிதர்கள் ஒரு வாக்குறுதி செய்து கொண்டனர். இதுவே அவர்கள் செய்த வாக்குறுதி: “நம் கோத்திரத்தில் யாருடைய மகளும், பென்யமீன் கோத்திரத்தை சேர்ந்த ஒருவனை மணக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.”

இஸ்ரவேலர் பெத்தேல் நகரத்திற்குச் சென்றனர். மாலைவரைக்கும் தேவனுக்கு முன்பு அமர்ந்தனர். அவர்கள் அங்கு உட்கார்ந்திருந்து உரக்க அழுதனர். அவர்கள் தேவனிடம், “கர்த்தாவே, நீர் இஸ்ரவேலரின் தேவன். ஏன் இந்தக் கொடியக் காரியம் எங்களுக்கு நேர்ந்தது? ஏன் ஒரு கோத்திரத்தினர் இஸ்ரவேலரிலிருந்து மறையவேண்டும்?” என்றார்கள்.

மறுநாள் அதிகாலையில், இஸ்ரவேலர் ஒரு பலிபீடத்தைக் கட்டினார்கள். அவர்கள் அப்பலிபீடத்தில் கர்த்தருக்கென்று தகன பலியையும் சமாதான பலியையும் செலுத்தினார்கள். அப்போது இஸ்ரவேலர், “கர்த்தருக்கு முன்பாக எங்களுடன் இங்கு வந்து சேராத இஸ்ரவேல் கோத்திரங்களில் யாரேனும் இருக்கிறார்களா?” என்றனர். அவர்கள் தீவிரமான வாக்குறுதி கொடுத்திருந்ததினால் இந்த கேள்வியைக் கேட்டனர். மிஸ்பாவில் பிறக் கோத்திரங்களோடு வந்து சேராதவன் கொல்லப்படுவான் என்று வாக்குறுதி அளித்திருந்தனர்.

தமது உறவினரான பென்யமீன் ஜனங்களுக்காக இஸ்ரவேலர் துக்கமடைந்தனர். அவர்கள், “இன்று இஸ்ரவேலிலிருந்து ஒரு கோத்திரம் விலக்கப்பட்டுவிட்டது. கர்த்தருக்கு முன் நாம் ஒரு வாக்குறுதி அளித்தோம். பென்யமீன் கோத்திரத்தைச் சார்ந்தவனை நமது பெண்கள் மணக்க அனுமதிப்பதில்லை என்றோம். பென்யமீன் ஆட்களுக்கு மனைவியர் கிடைப்பதற்கு நாம் என்ன செய்யலாம்?” என்றார்கள்.

பின் இஸ்ரவேலர், “மிஸ்பாவிற்கு இஸ்ரவேலின் எந்தக் கோத்திரத்தினர் வந்து சேரவில்லை? நாம் கர்த்தருக்கு முன்னே ஒருமித்துக் கூடியுள்ளோம். இங்கு ஒரு குடும்பம் நிச்சயமாக வரவில்லை!” என்றனர். இஸ்ரவேலர் யார் யார் வந்திருக்கிறார்கள் என்பதை அறிய ஒவ்வொருவராக எண்ணிக்கை எடுத்தனர். கீலேயாத்திலுள்ள யாபேசிலிந்து ஒருவரும் வரவில்லை என்பதைக் கண்டு கொண்டார்கள். 10 எனவே இஸ்ரவேலர் 12,000 வீரர்களை கீலேயாத்திலுள்ள யாபேசு நகரத்திற்கு அனுப்பினார்கள். அவர்கள் வீரரிடம், “கீலேயாத்திலுள்ள யாபேசுக்குப் போங்கள். உங்கள் வாளால் அங்கு வாழும் அனைவரையும் பெண்களையும் குழந்தைகளையும் கூட கொல்லுங்கள். 11 நீங்கள் இதைச் செய்ய வேண்டும். அங்குள்ள எல்லா ஆண்களையும் கொல்ல வேண்டும். ஆணோடு பாலின உறவுகொண்ட பெண்களையெல்லாம் கொல்லுங்கள். ஆனால் ஆணோடு பாலின உறவு கொண்டிராத கன்னிகைகளைக் கொல்லாதீர்கள்” என்றார்கள். எனவே அவ்வீரர்கள் அப்படியே செய்தார்கள். 12 ஆண்களோடு பாலின உறவுகொண்டிராத 400 கன்னிகைகளை அந்த 12,000 வீரர்களும் கண்டனர். சீலோவிலுள்ள முகாமிற்கு அவர்கள் அந்த கன்னிகைகளை அழைத்து வந்தனர். சீலோ என்னும் இடம் கானான் தேசத்தில் இருந்தது.

13 பின்பு இஸ்ரவேலர் பென்யமீன் மனிதருக்கு ஒரு செய்தி அனுப்பினர். அவர்கள் பென்யமீன் மனிதரோடு சமாதானம் செய்து கொள்ள முன் வந்தனர். ரிம்மோன் பாறை என்னுமிடத்தில் பென்யமீன் ஆட்கள் இருந்தனர். 14 எனவே பென்யமீன் மனிதர்கள் இஸ்ரவேலுக்குத் திரும்பி வந்தனர். கீலேயாத்திலுள்ள யாபேசில் கொல்லாமல் விட்ட பெண்களை அவர்களுக்கு இஸ்ரவேலர் கொடுத்தனர். ஆனால் பென்யமீன் மனிதருக்கு வேண்டிய எண்ணிக்கைக்குப் பெண்கள் போதவில்லை.

15 இஸ்ரவேலர் பென்யமீன் மனிதருக்காக கவலைப்பட்டனர். இஸ்ரவேலின் பிற கோத்திரங்களிலிருந்து கர்த்தர் அவர்களை பிரித்ததற்காக இஸ்ரவேலர் வருந்தினர். 16 இஸ்ரவேலின் தலைவர்கள், “பென்யமீன் கோத்திரத்தின் பெண்கள் கொல்லப்பட்டனர். உயிரோடிருக்கிற பென்யமீன் ஆட்களுக்கு எங்கிருந்து பெண்களைத் தருவோம்? 17 உயிரோடிருக்கிற பென்யமீன் மனிதர்கள் தம் தலைமுறை தொடர்வதற்காக பிள்ளைகளைப் பெறுதல் வேண்டும். இஸ்ரவேலின் ஒரு கோத்திரம் அழிந்து போகாதபடிக்கு இது நடைபெற வேண்டும். 18 ஆனால் பென்யமீன் மனிதரை மணந்து கொள்ள நம் பெண்களை அனுமதிக்க முடியாது. நாம் இந்த வாக்குறுதி அளித்துள்ளோம்: ‘பென்யமீனைச் சேர்ந்தவனுக்குப் பெண் கொடுக்கிற எவனும் சபிக்கப்படுவான்.’ 19 நமக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. சீலோ நகரத்தில் கர்த்தருடைய பண்டிகை காலம் இது. ஒவ்வொரு ஆண்டும் அப்பண்டிகை நடக்கிறது” என்றனர். (சீலோ நகரம் பெத்தேல் நகரத்திற்கு வடக்கிலும் பெத்தேலிலிருந்து சீகேமுக்குப் போகிற பாதையின் கிழக்கிலும் உள்ளது. அது லிபோனா நகரத்திற்குத் தெற்கேயும் இருக்கிறது.)

20 எனவே தலைவர்கள் பென்யமீன் கோத்திரத்திற்கு தங்கள் யோசனையைத் தெரிவித்தனர். அவர்கள், “போய் திராட்சைத் தோட்டங்களில் மறைந்துகொள்ளுங்கள். 21 பண்டிகைச் சமயத்தில் நடனமாடும்படி சீலோ நகர இளம் பெண்கள் வருகிற சமயத்தைப் பார்த்துக் கொண்டே இருங்கள். அப்போது திராட்சைத் தோட்டங்களில் உங்கள் மறைவிடங்களில் இருந்து ஓடி வாருங்கள். உங்களில் ஒவ்வொருவரும் சீலோ நகரத்து கன்னிகைகளில் ஒருத்தியை எடுத்துக்கொள்ளலாம். அந்த கன்னிகைகளை பென்யமீன் தேசத்திற்குக் கொண்டு சென்று மணந்துகொள்ளுங்கள். 22 அந்த கன்னிகைகளின் தந்தையாரோ, சகோதரரோ வந்து எங்களிடம் முறையிடுவார்கள். ஆனால் நாங்கள், ‘பென்யமீன் மனிதரிடம் இரக்கம் காட்டுங்கள். அப்பெண்களை அவர்கள் மணந்துகொள்ளட்டும். அவர்கள் உங்கள் பெண்களைத்தானே கொண்டு சென்றார்கள். அவர்கள் உங்களோடு போர் தொடுக்கவில்லை. அவர்களே கன்னிகைகளை எடுத்துச்சென்றதால், நீங்கள் தேவனுக்குக் கொடுத்த வாக்குறுதியை மீறவில்லை. நீங்கள் பென்யமீன் ஆட்களுக்கு உங்கள் பெண்களை மணம் முடித்து வைப்பதில்லை என்றுதானே வாக்குறுதி அளித்தீர்கள். நீங்களே பென்யமீன் ஆட்களுக்குப் பெண்களைக் கொடுக்கவில்லை. அவர்களே உங்களிடமிருந்து பெண்களை எடுத்துச்சென்றார்கள். எனவே நீங்கள் உங்கள் வாக்குறுதியை மீறவில்லை’ என்போம்” என்றார்கள்.

23 அவ்வாறே பென்யமீன் ஆட்கள் செய்தார்கள். அந்த கன்னிகைகள் நடனமாடி வரும்போது, ஒவ்வொருவனும் ஒவ்வொரு பெண்னைப் பிடித்துக் கொண்டான். அவர்கள் அப்பெண்களைக் கவர்ந்து சென்று, மணந்து கொண்டார்கள். அவர்கள் தங்கள் தேசத்திற்குப் போனார்கள். அத்தேசத்தில் மீண்டும் நகரங்களை கட்டி, அந்நகரங்களில் குடியேறினார்கள். 24 பின் இஸ்ரவேலர் தங்கள் இருப்பிடத்திற்குத் திரும்பினார்கள். அவர்கள் தங்கள் தேசத்திற்கும் கோத்திரங்களுக்கும் சென்றனர்.

25 அந்நாட்களில் இஸ்ரவேலருக்கு அரசன் இருக்கவில்லை. எனவே ஒவ்வொருவனும் தனக்கு சரியெனக் கருதியதைச் செய்தான்.

யூதாவில் பஞ்சம்

நியாயதிபதிகளின் ஆட்சிக்காலத்தில், உண்ணக்கூட போதுமான உணவில்லாத மோசமான ஒரு பஞ்சம் யூதா நாட்டில் ஏற்பட்டது. அப்போது யூதாவிலுள்ள பெத்லெகேமை விட்டு, எலிமெலேக்கு என்பவன் தனது மனைவியுடனும், இரண்டு மகன்களுடனும் மலைநாடான மோவாபுக்குச் சென்றான். அவனது மனைவியின் பெயர் நகோமி. அவனது இரண்டு மகன்களின் பெயர்களும் மக்லோன், கிலியோன் என்பவை ஆகும். இவர்கள் யூதாவிலுள்ள பெத்லெகேமில் எப்பிராத்தியர் வம்சத்தைச் சேர்ந்தவர்கள். இக்குடும்பமானது மலை நாடான மோவாபுக்கு சென்று அங்கேயே தங்கியது.

பின்னர், நகோமியின் கணவனான எலிமெலேக்கு மரித்துப் போனான். எனவே நகோமியும் அவளது இரண்டு மகன்களும் மட்டுமே மீந்திருந்தார்கள். அவளது மகன்கள் மோவாப் நாட்டிலுள்ள பெண்களை மணந்துகொண்டனர். ஒருவனின் மனைவி பெயர் ஓர்பாள், இன்னொருவனின் மனைவி பெயர் ரூத். அவர்கள் அங்கே 10 ஆண்டுகள் வாழ்ந்தனர். பின், மக்லோனும் கிலியோனும் கூட மரித்துவிட்டனர். அதன்பின் கணவனும், மகன்களும் இல்லாமல் நகோமி தனித்தவளானாள்.

நகோமி வீட்டிற்குத் திரும்பிப் போகுதல்

மலைநாடான மோவாப்பில் நகோமி வாழ்ந்துகொண்டிருக்கும்போது, கர்த்தர் யூதாவில் தன் ஜனங்களுக்கு உணவு கொடுத்தார் என்று அறிந்தாள். எனவே நகோமியும் மலைநாடான மோவாபை விட்டுத் தன் சொந்த நாட்டிற்குப் போக முடிவு செய்தாள். அவளது மருமகள்களும் அவளோடு புறப்பட்டனர். அவர்கள் தாம் வாழ்ந்த இடத்தை விட்டுவிட்டு யூதா நாட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

அப்போது நகோமி தன் மருமகள்களிடம், “நீங்கள் இருவரும் உங்கள் தாய் வீட்டுக்கேத் திரும்பிச் செல்லவேண்டும். நீங்கள் என்னோடும், மரித்துப்போன எனது மகன்களோடும் மிக அன்பாக இருந்தீர்கள். எனவே கர்த்தரும் உங்களிடம் கருணை காட்டுமாறு வேண்டிக்கொள்வேன். உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு நல்ல கணவனும், வீடும் கிடைக்கவேண்டுமென்று நான் வேண்டுவேன்” என்றாள். நகோமி அவர்களை முத்தமிட்டபோது, அவர்கள் அழ ஆரம்பித்தனர்.

10 பிறகு அவர்கள், “நாங்கள் உம்மோடு வர விரும்புகிறோம். உம்முடைய குடும்பத்தில் சேரவே விரும்புகிறோம்” என்றனர்.

11 ஆனால் நகோமி, “வேண்டாம் மகள்களே, உங்கள் தாய் வீட்டுக்கே திரும்பிச் செல்லுங்கள். நீங்கள் என்னோடு ஏன் வரவேண்டும்? என்னால் உங்களுக்கு உதவமுடியாது. உங்களோடு கணவனாக வாழவேறு மகன்களும் என்னிடம் இல்லை. 12 உங்கள் வீட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்! ஒரு புதிய கணவனைப் பெறமுடியாத அளவிற்கு நானும் முதியவளாகிவிட்டேன். நான் மீண்டும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று விரும்பினாலும், உங்களுக்கு உதவமுடியாது. இன்று இரவே நான் கர்ப்பமாகி இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்றாலும் அது உங்களுக்கு உதவாது. 13 ஏனென்றால் அவர்கள் வளர்ந்து ஆளாகும்வரை நீங்கள் காத்திருக்கவேண்டும். நான் அவ்வளவு காலம் உங்களைக் காக்கவைக்கக் கூடாது. அது எனக்கு மிகவும் துக்கத்தைத் தரும்! எனக்காக கர்த்தர் செய்த பல காரியத்துக்காக நான் ஏற்கெனவே துக்கமாக இருக்கிறேன்!” என்றாள்.

14 எனவே, அந்தப் பெண்கள் மேலும் அழுதனர். பிறகு ஓர்பாள் நகோமிக்கு முத்தமிட்டு விட்டு விலகிப் போனாள். ஆனால் ரூத் அவளைக் கட்டி அணைத்துக்கொண்டு அவளோடு தங்கிவிட்டாள்.

15 நகோமியோ அவளிடம், “பார், உனது சகோதரி தனது சொந்த ஜனங்களிடமும் தெய்வங்களிடமும் சென்றாள். எனவே, நீயும் அவளைப் போன்றே நடந்துகொள்ள வேண்டும்” என்றாள்.

16 ஆனால் ரூத், “உம்மைவிட்டு விலகும்படி என்னை வற்புறுத்த வேண்டாம்! என் சொந்தக்காரர்களிடம் திரும்பிப் போகுமாறு என்னைக் கட்டாயப்படுத்த வேண்டாம். என்னை உம்மோடு வரவிடும். நீர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் நானும் உம்மோடு வருவேன். நீர் உறங்கும் இடத்திலேயே நானும் உம்மோடு உறங்குவேன். உம் ஜனங்களே என் ஜனங்கள். உம்முடைய தேவனே என் தேவன். 17 நீர் மரிக்கும் இடத்திலேயே நானும் மரிப்பேன். அதே இடத்தில்தான் நான் அடக்கம் பண்ணப்பட வேண்டும். நான் இந்த வாக்குறுதியைக் காப்பாற்றாவிட்டால் என்னைத் தண்டிக்கும்படி கர்த்தரிடம் கேட்டுக்கொள்வேன்: மரணம் ஒன்றுதான் நம்மைப் பிரிக்கும்” என்றாள்.

வீட்டிற்குத் திரும்புதல்

18 ரூத் தன்னோடு வர மிகவும் விரும்புவதை நகோமி அறிந்துக்கொண்டாள். எனவே நகோமி அவளோடு விவாதம் செய்வதை நிறுத்திவிட்டாள். 19 நகோமியும், ரூத்தும் பெத்லெகேம்வரை பயணம் செய்தனர். அவர்கள் பெத்லெகேமிற்குள் நுழைந்தபோது அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள், “இது நகோமியா?” என்று கேட்டார்கள்.

20 ஆனால் நகோமியோ ஜனங்களிடம், “என்னை நகோமி என்று அழைக்காதீர்கள், மாராள் என்று அழையுங்கள். ஏனென்றால் எனது வாழ்க்கையை சர்வ வல்லமையுள்ள தேவன் துக்கம் நிறைந்ததாக்கிவிட்டார். 21 நான் இங்கிருந்து போகும்போது எனக்கு விருப்பமான அனைத்தையும் பெற்றிருந்தேன். ஆனால் இப்போது நான் வெறுமையானவளாகும்படி கர்த்தர் செய்துவிட்டார். என்னைத் துக்கமுள்ளவளாகும்படி கர்த்தர் செய்தபிறகு, ஏன் என்னை நகோமி (மகிழ்ச்சி) என்று அழைக்கிறீர்கள்? சர்வ வல்லமையுள்ள தேவன் எனக்கு மிகுந்த துன்பத்தைக் கொடுத்துவிட்டார்” என்றாள்.

22 இவ்வாறு நகோமியும் அவளது மருமகளான ரூத்தும் மலைநாடான மோவாபிலிருந்து திரும்பி வந்தனர். இரண்டு பெண்களும் பெத்லெகேம் வந்தபோது, யூதாவில் வாற்கோதுமை அறுவடை தொடங்கியது.

யோவான் 4:4-42

கலிலேயாவுக்குச் செல்கிற வழியில் இயேசு சமாரியா நாட்டைக் கடந்து செல்ல இருந்தார்.

சமாரியாவில் இயேசு சீகார் என்னும் பட்டணத்துக்கு வந்தார். அந்தப் பட்டணம், யாக்கோபு தன் மகன் யோசேப்புக்குக் கொடுத்த நிலத்தின் அருகில் இருந்தது. யாக்கோபின் கிணறும் அங்கே இருந்தது. இயேசு தன் நீண்ட பயணத்தால் களைத்துப் போயிருந்தார். ஆகையால் இயேசு கிணற்றின் அருகில் இளைப்பாறிட அமர்ந்தார். அது மதிய வேளை. ஒரு சமாரியப் பெண் தண்ணீரெடுப்பதற்காக அக்கிணற்றுக்கு வந்தாள். இயேசு அவளிடம், “தயவுசெய்து நான் குடிப்பதற்குத் தண்ணீர் கொடு” என்று கேட்டார். (இயேசுவின் சீஷர்கள் பட்டணத்தில் உணவுப் பொருட்களை வாங்கிக்கொண்டிருக்கும்போது இது நடந்தது.)

“குடிப்பதற்கு நீங்கள் என்னிடம் கேட்பதை எண்ணி எனக்கு ஆச்சரியமாக உள்ளது. நீங்கள் ஒரு யூதர். நானோ சமாரியப் பெண்” என்று அவள் பதிலுரைத்தாள். (ஏனென்றால் யூதர்கள் சமாரியர்களோடு எப்பொழுதும் நட்புடன் இருப்பதில்லை.)

10 “தேவன் கொடுப்பவற்றைப்பற்றி நீ அறியவில்லை. குடிக்கத் தண்ணீர் கேட்கிற நான் யாரென்று உனக்குத் தெரியாது. இவற்றைப்பற்றி நீ அறிந்தால் நீ என்னிடம் தண்ணீர் கேட்டிருப்பாய். ஜீவத் தண்ணீரை நான் உனக்குக் கொடுத்திருப்பேன்” என்றார் இயேசு.

11 “ஐயா, ஜீவத் தண்ணீரை நீங்கள் எங்கிருந்து பெறுவீர்கள்? இந்தக் கிணறோ ஆழமாக இருக்கிறது. இதிலிருந்து தண்ணீர் எடுப்பதற்கும் உங்களிடம் எதுவும் இல்லையே! 12 நீங்கள் எமது மூதாதையரான யாக்கோபை விடப் பெரியவரா? அவர்தான் எங்களுக்கு இந்தக் கிணற்றைக் கொடுத்தார். அவரும் இந்தக் கிணற்றிலுள்ள தண்ணீரைத்தான் குடித்தார். அத்துடன் அவரது பிள்ளைகளும் மிருகங்களும் இதிலுள்ள தண்ணீரைத்தான் குடித்தார்கள்” என்று அந்தப் பெண் சொன்னாள்.

13 “இந்த தண்ணீரைக் குடிக்கிறவர்களுக்கு மீண்டும் தாகம் எடுக்கும். 14 ஆனால் நான் கொடுக்கிற தண்ணீரைக் குடிப்பவர்களுக்கோ மறுபடியும் தாகம் எடுப்பதில்லை. என்னால் கொடுக்கப்படுகிற தண்ணீர், அதைக் குடிப்பவனுக்குள் நீரூற்றாகப் பெருக்கெடுக்கும். அது அவனுக்கு எக்காலத்துக்கும் உரிய வாழ்க்கையைத் தரும்” என்று இயேசு பதிலுரைத்தார்.

15 “ஐயா! எனக்கு அந்தத் தண்ணீரை வழங்குங்கள். அப்போது ஒருபோதும் மறுபடியும் எனக்குத் தாகம் எடுக்காது. மிகுதியாகத் தண்ணீரெடுக்க இங்கே நான் மீண்டும் வர வேண்டியதும் இராது” எனக் கூறினாள் அந்தப் பெண்.

16 “போ, உன் கணவனோடு இங்கே திரும்ப வா” என்றார் இயேசு.

17 “ஆனால், எனக்குக் கணவன் இல்லையே” என்றாள் அப்பெண்.

“உனக்குக் கணவன் இல்லையென்று நீ சொல்வது சரிதான். 18 உண்மையில் உனக்கு ஐந்து கணவர்கள் இருந்திருக்கின்றனர். ஆனால் நீ இப்பொழுது யாரோடு வாழ்ந்துகொண்டிருக்கிறாயோ அவன் உன் கணவனல்ல. நீ என்னிடம் உண்மையைச் சொன்னாய்” என்றார் இயேசு.

19 “உம்மை நான் தீர்க்கதரிசியாகக் காண்கிறேன். 20 எங்கள் முன்னோர்கள் இந்த மலையில் வழிபட்டுவந்தனர். ஆனால் யூதராகிய நீங்களோ, எருசலேம்தான் வழிபாட்டுக்குரிய இடம் என்று கூறுகிறீர்கள்” என்றாள் அந்தப் பெண்.

21 “பெண்ணே! என்னை நம்பு. இந்த மலையிலும் எருசலேமிலும் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் பிதாவை (தேவனை) வழிபடுகிற காலம் வந்துகொண்டிருக்கிறது. 22 சமாரியர்களாகிய நீங்கள் உங்களால் புரிந்துகொள்ள முடியாததை வணங்கி வருகிறீர்கள். யூதர்களாகிய நாங்கள், எங்களால் வணங்கப்படுபவரைப் புரிந்துகொண்டிருக்கிறோம். யூதர்களிடமிருந்தே இரட்சிப்பு வருகின்றது. 23 உண்மையாக வழிபடுகிறவர்கள் (தேவனை) ஆவியோடும் உண்மையோடும் வழிபடுகிற காலம் வந்துகொண்டிருக்கிறது. அது இப்பொழுதே வந்திருக்கிறது. பிதாவும் தம்மை வழிபடுகிறவர்கள் இத்தகைய மக்களாக இருக்க விரும்புகிறார். 24 தேவன் ஆவியாயிருக்கிறார். ஆகையால் தேவனை வழிபடுகிற மக்கள் ஆவியோடும் உண்மையோடும் தேவனை வழிபடுதல் வேண்டும்” என்றார் இயேசு.

25 “கிறிஸ்து என்று அழைக்கப்படுகிற மேசியா வந்துகொண்டிருக்கிறார் என்பது எனக்குத் தெரியும். அவர் வந்ததும் எங்களுக்கு அனைத்தையும் விளக்குவார்” என்றாள் அப்பெண்.

26 பிறகு இயேசு, “இப்பொழுது அவர்தான் உன்னோடு பேசிக்கொண்டிருக்கிறார். நான்தான் மேசியா” என்றார்.

27 அப்பொழுது இயேசுவின் சீஷர்கள் பட்டணத்தில் இருந்து திரும்பி வந்தனர். இயேசு ஒரு பெண்ணோடு பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு அவர்கள் வியப்புற்றனர். ஆனால் எவரும், “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்றோ “ஏன் நீங்கள் அவளோடு பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?” என்றோ கேட்கவில்லை.

28 பிறகு அந்தப் பெண் தன் தண்ணீர்க் குடத்தை விட்டுவிட்டு நகருக்குத் திரும்பப் போனாள். 29 அங்கே அவள் மக்களிடம், “நான் செய்தவற்றையெல்லாம் ஒருவர் எனக்குச் சொன்னார். அவரை வந்து பாருங்கள். ஒரு வேளை அவர் கிறிஸ்துவாக இருக்கலாம்” என்றாள். 30 ஆகையால் மக்கள் நகரத்தை விட்டு வெளியேறி இயேசுவைக் காண வந்தனர்.

31 அந்தப் பெண் நகரத்திற்குள் இருந்தபோது இயேசுவின் சீஷர்கள், அவரை உண்ணும்படி வேண்டிக்கொண்டனர்.

32 ஆனால் இயேசுவோ, “என்னிடம் உண்பதற்கு உணவுண்டு. அதனைப் பற்றி உங்களுக்கு ஒன்றும் தெரியாது” என்றார்.

33 “ஏற்கெனவே வேறு யாராவது அவருக்கு உணவு கொண்டுவந்திருப்பார்கள்” என்று சீஷர் கள் தமக்குள் பேசிக்கொண்டனர்.

34 “எனது உணவு என்னை அனுப்பிய தேவன் செய்யச் சொன்னதைச் செய்வதுதான்; எனக்குக் கட்டளையிட்டபடி செய்து முடிப்பதுதான் எனது உணவாக இருக்கிறது. 35 நீங்கள் பயிரை நடும்போது ‘அறுவடைக்காக இன்னும் நான்கு மாதங்கள் காத்திருக்க வேண்டும்’ என்று சொல்வீர்களல்லாவா? ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன். கண்களைத் திறவுங்கள், மக்களைப் பாருங்கள். அவர்கள் அறுவடைக்காகத் தயாராக இருக்கிற வயலைப்போன்று இருக்கிறார்கள். 36 இப்பொழுதுகூட அறுவடை செய்கிறவன் சம்பளம் பெறுகிறான். அவன் தனது நித்திய வாழ்வுக்கு அனுகூலமாக அறுவடை செய்துகொள்கிறவன். ஆகையால் இப்பொழுது விதைக்கிறவனோடு அறுவடை செய்கிறவனும் மகிழ்ச்சியடைய இயலும். 37 விதைக்கிறவன் ஒருவன் அறுக்கிறவன் இன்னொருவன் என்கிற பழமொழி இதனால் உண்மையாகிறது. 38 நீங்கள் பாடுபட்டு விதைக்காத நிலத்தை அறுவடை செய்யுமாறு உங்களை அனுப்பினேன். மற்றவர்கள் பாடுபட்டார்கள். நீங்கள் அவர்கள் உழைப்பின் பயனை அனுபவிக்கிறீர்கள்” என்று இயேசு கூறினார்.

39 அந்நகரத்தில் உள்ள ஏராளமான மக்கள் இயேசுவின் மீது நம்பிக்கை வைத்தனர். அந்தப் பெண் இயேசுவைப்பற்றிக் கூறியவற்றால்தான் அவர்கள் அவரை நம்பினர். அவள், “நான் செய்த எல்லாவற்றையும் அவர் எனக்குச் சொல்லி விட்டார்” என்று கூறி இருந்தாள். 40 சமாரியர்கள் இயேசுவிடம் சென்றார்கள். இயேசுவை அவர்களோடு தங்கும்படி வேண்டினார்கள். ஆகையால் இயேசு அவர்களோடு இரண்டு நாட்கள் தங்கினார். 41 மேலும் மிகுதியான மக்கள், இயேசு சொன்னவற்றின் மூலம் அவரை நம்பினர்.

42 அவர்கள், “முதலில் நீ சொன்னவற்றையெல்லாம் கேட்டு இயேசுவை நம்பினோம். ஆனால் இப்பொழுது நாங்களாகவே அவர் சொன்னவற்றைக் கேட்டதால் விசுவாசிக்கிறோம். அவர் உண்மையாகவே இந்த உலகத்தை இரட்சிக்கப்போகிறவர் என்று நம்புகிறோம்” என்று அந்தப் பெண்ணிடம் சொன்னார்கள்.

சங்கீதம் 105:1-15

105 கர்த்தருக்கு நன்றி கூறுங்கள்.
    அவர் நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள்.
    அவர் செய்யும் அற்புதங்களைத் தேசங்களுக்குக் கூறுங்கள்.
கர்த்தரை நோக்கிப் பாடுங்கள்.
    அவருக்குத் துதிகளைப் பாடுங்கள்.
    அவர் செய்யும் வியக்கத்தக்க காரியங்களைக் குறித்துக் கூறுங்கள்.
கர்த்தருடைய பரிசுத்த நாமத்தைக் குறித்துப் பெருமைகொள்ளுங்கள்.
    ஜனங்களாகிய நீங்கள் கர்த்தரைத் தேடிவந்தீர்கள். சந்தோஷமாயிருங்கள்!
வல்லமைக்காக கர்த்தரிடம் போங்கள்.
    உதவிக்காக எப்போதும் அவரிடம் போங்கள்.
அவர் செய்யும் வியப்பிற்குரிய காரிங்களை நினைவுகூருங்கள்.
    அவர் செய்த அதிசயங்களையும் ஞானமுள்ள முடிவுகளையும் எண்ணிப் பாருங்கள்.
நீங்கள் அவரது பணியாளாகிய ஆபிரகாமின் சந்ததியினர்.
    நீங்கள் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட யாக்கோபின் சந்ததியினர்.
கர்த்தரே நமது தேவன்.
    கர்த்தர் உலகம் முழுவதையும் ஆளுகிறார்.
தேவனுடைய உடன்படிக்கையை என்றென்றும் நினைவுகூருங்கள்.
    ஆயிரம் தலைமுறை வரையிலும் அவரது கட்டளைகளை நினைவுகூருங்கள்.
தேவன் ஆபிரகாமோடு ஒரு உடன்படிக்கை செய்தார்.
    தேவன் ஈசாக்கோடு ஒரு வாக்குறுதியைச் செய்தார்.
10 பின்பு அவர் அதனை யாக்கோபிற்கு ஒரு சட்டமாகச் செய்தார்.
    தேவன் இஸ்ரவேலோடு ஒரு உடன்படிக்கை செய்தார்.
    அது என்றென்றும் தொடரும்!
11 தேவன்: “நான் கானானின் தேசத்தை உனக்குக் கொடுப்பேன்.
    அத்தேசம் உனக்குச் சொந்தமாகும்” என்றார்.
12 ஆபிரகாமின் குடும்பம் சிறியதாயிருந்தபோது தேவன் அவ்வாக்குறுதியை அளித்தார்.
    அவர்கள் அங்கு அந்நியராகச் சில காலத்தைக் கழித்தனர்.
13 அவர்கள் ஒரு அரசிலிருந்து மற்றோர் அரசிற்கும்,
    ஒரு தேசத்திலிருந்து மற்றொரு தேசத்திற்கும் பயணம் செய்தார்கள்.
14 ஆனால் ஜனங்கள் அவர்களைத் தகாதபடி நடத்த தேவன் அனுமதிக்கவில்லை.
    அவர்களைத் துன்புறுத்தாதபடிக்கு தேவன் அரசர்களை எச்சரித்தார்.
15 தேவன், “நான் தேர்ந்தெடுத்த ஜனங்களுக்குத் தீமை செய்யாதீர்கள்.
    எனது தீர்க்கதரிசிகளுக்கு எந்தத் தீமையும் செய்யாதீர்கள்” என்றார்.

நீதிமொழிகள் 14:24-25

24 அறிவுள்ளவர்கள் செல்வத்தால் வெகுமதிகளைப் பெறுவர். ஆனால் அறிவற்றவர்களோ முட்டாள்தனத்தையே பெறுகின்றனர்.

25 உண்மையைப் பேசுகிறவர்கள் மற்றவர்களுக்கு உதவியாக இருக்கிறார்கள். பொய் சொல்லுகிறவன் மற்றவர்களின் மனதைப் புண்படுத்துகிறான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center