Print Page Options Listen to Reading
Previous Prev Day Next DayNext

The Daily Audio Bible

This reading plan is provided by Brian Hardin from Daily Audio Bible.
Duration: 731 days

Today's audio is from the MEV. Switch to the MEV to read along with the audio.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
நியாயாதிபதிகள் 19-20

லேவியனான மனிதனும் அவனது வேலைக்காரியும்

19 அக்காலத்தில் இஸ்ரவேலருக்கு அரசன் இருக்கவில்லை. எப்பிராயீம் என்னும் மலைநாட்டில் ஒரு லேவியன் வாழ்ந்து வந்தான். அவனுடன் இருந்த வேலைக்காரி, அவனுக்கு மனைவியைப் போல வாழ்ந்து வந்தாள். அந்த வேலைக்காரி யூதா தேசத்துப் பெத்லெகேமைச் சேர்ந்தவள். அந்த வேலைக்காரி லேவியனோடு ஒரு விவாதம் செய்து அவனை விட்டுவிட்டு, யூதாவிலுள்ள பெத்லேகேமிலிருந்த தனது தந்தையின் வீட்டிற்குத் திரும்பிச் சென்று, அங்கு நான்கு மாதங்கள் தங்கியிருந்தாள். பின்பு அவள் கணவன் அவளிடம் சென்றான். அவள் அவனோடு வரும்படி அழைப்பதற்காக அவளோடு அன்பாகப் பேச விரும்பினான். அவன் தன்னோடு தன் பணியாளையும், இரண்டு கழுதைகளையும் அழைத்துச் சென்றான். லேவியன் அவளது தந்தையின் வீட்டை அடைந்தான். லேவியனைக் கண்ட அவளது தந்தை சந்தோஷம் அடைந்து அவனை வரவேற்பதற்கு வெளியே வந்தான். அப்பெண்ணின் தந்தை லேவியனை வீட்டிற்குள் அழைத்துச் சென்றான். லேவியனின் மாமானார் அவனைத் தங்கிச் செல்லுமாறு கூறினான். எனவே லேவியன் மூன்று நாட்கள் அங்கு தங்கியிருந்தான். அவன் மாமனார் வீட்டிலேயே உண்டு, பருகித் தூங்கினான்.

நான்காம் நாளில் அவர்கள் அதிகாலையில் எழுந்தனர். லேவியன் புறப்படுவதற்குத் தயாரானான். ஆனால் அந்தப் பெண்ணின் தந்தை, தன் மருமகனைப் பார்த்து, “முதலில் ஏதாவது சாப்பிடு. சாப்பிட்டப் பின்னர் புறப்படலாம்” என்றான். எனவே லேவியனும் அவனது மாமனாரும் சாப்பிடவும் குடிக்கவும் உட்கார்ந்தனர். பின் அந்த இளம் பெண்ணின் தந்தை லேவியனை நோக்கி, “இன்றிரவு தயவுசெய்து இங்கேயே தங்கு இளைப்பாறி மகிழ்ச்சியோடு இரு. நடுப்பகல் வரைக்கும் இருந்து போகலாம்” என்றான். எனவே இருவரும் உண்ண ஆரம்பித்தனர். வேவியன் புறப்படுவதற்கு எழுந்தான். ஆனால் அன்றிரவும் அவனைத் தங்கும்படியாக அவனது மாமனார் வேண்டினான்.

பின்பு, ஐந்தாம் நாளில், லேவியன் அதிகாலையில் எழுந்தான். புறப்படுவதற்கு அவன் தயாரானான். ஆனால் அப்பெண்ணின் தந்தை மருமகனை நோக்கி, “முதலில் ஏதேனும் சாப்பிடு. களைப்பாறி நடுப்பகல் வரைக்கும் தங்கியிரு” என்றான். எனவே இருவரும் சேர்ந்து உண்டனர்.

பின் லேவியனும், அவனது வேலைக்காரியும், அவனது வேலையாளும், புறப்படுவதற்கு எழுந்தனர். ஆனால் அந்த இளம் பெண்ணின் தந்தை, “இருள் சூழ்ந்து வருகிறது. பகல் மறைய ஆரம்பிக்கிறது. எனவே இரவு இங்கே தங்கி களித்திரு. நாளைக் காலையில் சீக்கிரமாக எழுந்து உன் வழியே செல்” என்றான்.

10 மற்றொரு இரவும் தங்கியிருக்க அந்த லேவியன் விரும்பவில்லை. அவன் தன் 2 கழுதைகளோடும், வேலைக்காரியோடும் புறப்பட்டான். அவன் பயணம் செய்து எபூசை நெருங்கினான். (எருசலேமுக்கு மற்றொரு பெயர் எபூசு.) 11 பகல் கழிந்தது. அவர்கள் எபூசு நகரத்திற்கு அருகில் வந்தனர். எனவே பணியாள் எஜமானனாகிய லேவியனை நோக்கி, “இந்த எபூசு நகரத்தில் தங்கி இங்கு இரவைக் கழிப்போம்” என்றான்.

12 ஆனால் லேவியனாகிய அந்த எஜமானன், “இல்லை, இஸ்ரவேல் ஜனங்களில்லாத அந்நிய நகரத்திற்கு நாம் போகவேண்டாம், நாம் கிபியா நகரத்திற்குச் செல்வோம்” என்றான். 13 லேவியன், “வாருங்கள், நாம் கிபியாவுக்கோ, ராமாவுக்கோ செல்வோம். அந்த இரண்டு நகரங்களில் ஒன்றில் இரவில் தங்கலாம்” என்றான்.

14 லேவியனும் அவனோடிருந்தோரும் பயணத்தைத் தொடர்ந்தனர். கிபியாவில் அவர்கள் நுழைந்ததும் சூரியன் மறைந்தது. பென்யமீன் கோத்திரத்திற்குரிய பகுதியில் கிபியா இருந்தது. 15 எனவே அவர்கள் கிபியாவில் தங்கினார்கள். இரவை அந்த நகரில் கழிக்க எண்ணினார்கள். அவர்கள் நகர சதுக்கத்திற்கு வந்து அங்கு அமர்ந்தனர். ஆனால் இரவில் தங்குவதற்கு யாரும் அவர்களை அழைக்கவில்லை.

16 அன்று மாலை வயல்களிலிருந்து ஒரு முதியவன் நகரத்திற்குள் வந்தான். அவனுடைய வீடு எப்பிராயீம் மலை நாட்டிலிருந்தது. ஆனால் அவன் கிபியா நகரத்தில் வசித்துக்கொண்டிருந்தான். (கிபியாவின் ஆட்கள் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள்.) 17 முதிய மனிதன் நகரசதுக்கத்தில் பயணியைப் (லேவியனை) பார்த்தான். முதியவன், “எங்கு போய்க் கொண்டிருக்கிறாய்? எங்கிருந்து வந்தாய்?” என்று கேட்டான்.

18 லேவியன், “நாங்கள் யூதாவிலுள்ள பெத்லெகேம் நகரிலிருந்து பயணம் செய்கிறோம். நாங்கள் கர்த்தருடைய கூடாரத்துக்குப் போகிறோம். நான் எப்பிராயீம் மலை நாட்டில் தொலைவான இடத்தில் வாழ்கிறவன். நான் யூதாவிலுள்ள பெத்லெகேமிற்குப் போயிருந்தேன். இப்போது என் வீட்டிற்குப் போய்க்கொண்டிருக்கிறேன். 19 எங்கள் கழுதைகளுக்கு வைக்கோலும் தீனியும் உண்டு. எனக்கும், இளம்பெண்ணுக்கும், பணியாளுக்கும் ரொட்டியும் திராட்சைரசமும் உண்டு. எங்களுக்கு எதுவும் தேவையில்லை” என்று கூறினான்.

20 முதியவன், “நீ என் வீட்டில் வந்து தங்கலாம். உனக்குத் தேவையான ஏதாவது நான் கொடுப்பேன். ஆனால் இரவில் நகர சதுக்கத்தில் மட்டும் தங்காதே” என்றான். 21 பின்‌பு முதியவன் லேவியனையும் அவனோடிருந்தவர்களையும் தன் வீட்டிற்கு அழைத்துக் கொண்டுச் சென்றான். லேவியனின் கழுதைகளுக்குத் தீனி கொடுத்தான். அவர்கள் கால்களைக் கழுவி, உண்ணவும் பருகவும் செய்தனர்.

22 லேவியனும் அவனோடிருந்தவர்களும் அவற்றை அனுபவித்துக்கொண்டிருந்த பொழுது அந்நகர மனிதர்களில் துன்மார்க்கரான சிலர் அந்த வீட்டைச் சூழ்ந்துகொண்டனர். அவர்கள் கதவை பலமாகத் தட்ட ஆரம்பித்தார்கள். அந்த வீட்டின் சொந்தக்காரனான முதியவனிடம் உரக்கப் பேசினார்கள். அவர்கள், “உன் வீட்டிற்கு வந்த மனிதனை வெளியே அழைத்து வா. நாங்கள் அவனோடு பாலின உறவு கொள்ளவேண்டும்” என்றனர்.

23 முதியவன் வெளியே போய், அந்த துன்மார்க்கரிடம் பேசி, “வேண்டாம், எனது நண்பர்களே, அத்தகைய தீயகாரியத்தைச் செய்யாதீர்கள். அவன் என் வீட்டு விருந்தினன். இத்தகைய கொடிய பாவத்தைச் செய்யாதீர்கள். 24 பாருங்கள், இவள் என் மகள். இதற்கு முன் பாலியல் அனுபவத்தை அறிந்ததில்லை. அவளை உங்களிடம் அழைத்து வருவேன். மேலும் எனது விருந்தினனுடைய வேலைக்காரியையும் அழைத்து வருகிறேன். உங்கள் விருப்பம் போல் அவர்களை நடத்தலாம். ஆனால் இம்மனிதனுக்கு அத்தகைய கொடுமை செய்யாதீர்கள்” என்றான்.

25 ஆனால் அந்த துன்மார்க்கர் முதியோன் கூறியதைப் பொருட்படுத்தவில்லை. எனவே லேவியன் வேலைக்காரியை அழைத்து வெளியே அனுப்பினான். அவர்கள் அவளை இராமுழுவதும் கற்பழித்து காயப்படுத்தினார்கள். அதிகாலையில் அவர்கள் அவளைப் போகவிட்டனர்.

26 விடியும்போது அவள் தன் எஜமானன் தங்கியிருக்கும் வீட்டிற்குத் திரும்பிவந்து முன் வாசலில் வந்து விழுந்தாள். வெளிச்சம் உதிக்கும்வரை அங்கேயே கிடந்தாள்.

27 வேவியன் மறுநாள் அதிகாலையில் விழித்து தன் வீட்டிற்குப் போகவிரும்பி வெளியே போவதற்காக கதவைத் திறந்த போது கதவின் நிலையில் ஒரு கை குறுக்கே விழுந்தது. அவன் வேலைக்காரி அங்கே வாசலுக்கெதிரில் விழுந்துகிடந்தாள். 28 லேவியன் அவளிடம், “எழுந்திரு புறப்படலாம்” என்றான். ஆனால் அவள் பதில் தரவில்லை (மரித்து கிடந்தாள்.)

லேவியன் தன் வேலைக்காரியை கழுதையின் மேலேற்றிக் கொண்டு, வீட்டிற்குச் சென்றான்.

29 அவன் வீட்டிற்கு வந்ததும், ஒரு கத்தியை எடுத்து அவளை 12 துண்டுகளாக வெட்டினான். அந்த வேலைக்காரியின் 12 துண்டுகளையும் இஸ்ரவேலர் வாழ்ந்த பகுதிகளுக்கெல்லாம் அனுப்பினான். 30 அதைப் பார்த்தவர்கள் எல்லோரும், “இதைப்போன்ற எதுவும் இதுவரைக்கும் இஸ்ரவேலில் நடந்ததில்லை. எகிப்திலிருந்து நாம் வந்த காலத்திலிருந்து இதைப்போன்று எதையும் பார்த்ததில்லை இதை விசாரித்து, என்ன முடிவு செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்” என்றனர்.

இஸ்ரவேலுக்கும் பென்யமீனுக்கும் யுத்தம்

20 இஸ்ரவேலர் எல்லோரும் மிஸ்பா நகரில் கர்த்தருக்கு முன்பாக நிற்பதற்காக ஒன்று கூடினார்கள். தாண் முதல் பெயர்செபா வரை இஸ்ரவேலின் எல்லாப் பகுதிகளிலிருந்தும், கீலேயாத்திலுள்ள இஸ்ரவேலரும் அங்குக் கூடினார்கள். இஸ்ரவேல் கோத்திரங்களின் எல்லாத் தலைவர்களும் அங்கிருந்தனர். தேவனுடைய ஜனங்களின் கூட்டத்தில் அவரவருக்குரிய இடங்களில் அமர்ந்தனர். அங்கு 4,00,000 வீரர்கள் தங்கள் வாளோடு நின்றனர். பென்யமீன் கோத்திரத்தின் ஜனங்கள், இஸ்ரவேலர் மிஸ்பாவில் ஒன்று கூடியிருப்பதை அறிந்தனர். இஸ்ரவேலர், “இந்த கொடிய காரியம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதைக் கூறு” என்றனர்.

எனவே கொல்லப்பட்ட பெண்ணின் கணவன் நடந்ததை விளக்கினான். அவன், “எனது வேலைக்காரியும் நானும் பென்யமீன் பகுதியிலுள்ள கிபியா நகரத்திற்கு வந்து, அங்கு இரவைக் கழித்தோம். ஆனால் இரவில் கிபியா நகரத்தின் தலைவர்கள் நான் தங்கியிருந்த வீட்டிற்கு வந்தனர். அவர்கள் வீட்டைச் சூழ்ந்து என்னைக் கொல்ல விரும்பினார்கள். அவர்கள் என் வேலைக்காரியை கற்பழித்தனர். அவள் மரித்தாள். எனவே நான் என் பணிப் பெண்ணை எடுத்துச் சென்று அவளைத் துண்டுகளாக்கினேன். பின் நான் ஒவ்வொரு துண்டையும் இஸ்ரவேலின் ஒவ்வொரு கோத்திரத்துக்கும் அனுப்பினேன். நாம் பெற்ற தேசங்களுக்கெல்லாம் 12 துண்டுகளையும் அனுப்பி வைத்தேன். இஸ்ரவேலில் பென்யமீன் ஜனங்கள் இத்தகைய கொடிய காரியத்தைச் செய்ததால் நான் இவ்வாறு செய்தேன். இப்போது இஸ்ரவேலின் மனிதர்களே பேசுங்கள். நாம் செய்ய வேண்டியதென்ன என்பது பற்றிய உங்கள் முடிவைக் கூறுங்கள்” என்றான்.

அப்போது எல்லா ஜனங்களும் ஒரே நேரத்தில் எழுந்து நின்றனர். அவர்கள் ஒருமித்த குரலில், “யாரும் வீட்டிற்குத் திரும்பமாட்டோம். ஆம், யாரும் வீட்டிற்கு திரும்பிப் போக வேண்டியதில்லை. இப்போது கிபியா நகரத்திற்கு இதனைச் செய்வோம். சீட்டுப்போட்டு தேவன் அவர்களுக்குச் செய்ய நினைப்பதென்ன என்பதைக் கண்டுபிடிப்போம். 10 இஸ்ரவேலின் எல்லா கோத்திரங்களிலிருந்தும் 100 பேரில் 10 ஆட்களைத் தேர்ந்தெடுப்போம். ஒவ்வொரு 1,000 பேரிலும் 100 பேரைத் தேர்ந்தெடுப்போம். ஒவ்வொரு 10,000 பேரிலும் 1,000 பேர்களைத் தேர்ந்தெடுப்போம். நாம் தேர்ந்தெடுத்தோர் ஆயுதங்களைக் கொண்டு வருவார்கள். இந்த சேனை பென்யமீன் பகுதியிலுள்ள கிபியா நகரத்திற்குச் செல்லும். இஸ்ரவேல் ஜனங்களிடையே அவர்கள் செய்தக் கொடிய தீமைக்காக அந்த ஜனங்களை சேனை தண்டிக்கும்” என்றனர்.

11 எனவே இஸ்ரவேலர் கிபியா நகரில் கூடினார்கள். தாங்கள் செய்வதில் எல்லோரும் ஒருமனப்பட்டிருந்தனர். 12 இஸ்ரவேல் கோத்திரங்கள் சேர்ந்து பென்யமீன் கோத்திரம் எங்கும் பின்வரும் செய்தியுடன் ஒருவனை அனுப்பினார்கள். “உங்கள் ஆட்களில் சிலர் இந்த கொடிய தீமையைச் செய்ததேன்? 13 கிபியா நகரிலிருந்து அந்த துன்மார்க்கரை எங்களிடம் அனுப்புங்கள். அவர்களைக் கொல்லும்படிக்கு எங்களிடம் ஒப்படையுங்கள். இஸ்ரவேலரிடமிருந்து தீமையை அகற்ற வேண்டும்.”

ஆனால் பென்யமீன் கோத்திரத்தினர் பிற இஸ்ரவேலரிடமிருந்து வந்த செய்தியைப் பொருட்படுத்தவில்லை. 14 பென்யமீன் கோத்திரத்தின் ஜனங்கள் தங்கள் நகரங்களை விட்டு, கிபியா நகரத்திற்குச் சென்றனர். இஸ்ரவேலின் பிற கோத்திரங்களுடன் போரிட அவர்கள் கிபியாவுக்குச் சென்றனர். 15 பென்யமீன் கோத்திரத்தினர் போருக்குப் பயிற்சியளிக்கப்பட்ட 26,000 வீரர்களை ஒன்றாகக் கூட்டினார்கள். அவர்களிடம் கிபியாவில் பயிற்சி பெற்ற 700 வீரர்களும் இருந்தனர். 16 இடதுகை பழக்கமுள்ள 700 பயிற்சி பெற்ற வீரர்களும் இருந்தனர். அவர்கள் கவண் கல்லை மிகவும் திறமையாகப் பயன்படுத்தக்கூடியவர்கள். ஒரு மயிரிழையும் தவறாது. அவர்கள் கவண் கல்லைப் பயன்படுத்துவதற்கு அறிந்திருந்தனர்.

17 பென்யமீன் அல்லாத மற்ற எல்லா இஸ்ரவேல் கோத்திரங்களும் 4,00,000 வீரர்கனளத் திரட்டினார்கள். அந்த 4,00,000 மனிதர்களும் வாளேந்தியிருந்தனர். ஒவ்வொருவனும் பயிற்சிப் பெற்ற வீரனாக இருந்தான். 18 இஸ்ரவேலர் பெத்தேல் நகரத்திற்குச் சென்றனர். பெத்தேலில் அவர்கள் தேவனிடம், “எந்தக் கோத்திரத்தினர் முதலில் பென்யமீன் கோத்திரத்தைத் தாக்கவேண்டும்?” என்று கேட்டனர்.

கர்த்தர், “யூதா முதலில் போகட்டும்” என்றார்.

19 மறுநாள் காலையில் இஸ்ரவேலர் எழுந்தனர். கிபியா நகருக்கருகே அவர்கள் ஒரு முகாம் அமைத்தனர். 20 அப்போது இஸ்ரவேல் சேனை பென்யமீன் சேனையோடுப் போருக்குச் சென்றது. கிபியா நகரில் இஸ்ரவேல் சேனை பென்யமீன் சேனையை எதிர்த்துப் போரிடுவதற்குத் தயாராயிற்று. 21 அப்போது பென்யமீன் சேனை கிபியா நகரத்திலிருந்து வெளி வந்தது. அந்த நாளில் நடந்த போரில் பென்யமீன் சேனை இஸ்ரவேல் சேனையின் 22,000 மனிதர்களைக் கொன்றது.

22-23 இஸ்ரவேலர் கர்த்தரிடம் சென்றனர். மாலைவரைக்கும் அழுதனர். அவர்கள் கர்த்தரை நோக்கி, “பென்யமீன் ஜனங்களோடு மீண்டும் போரிடுவதற்குச் செல்ல வேண்டுமா? அவர்கள் எங்கள் உறவினர்கள்” என்றனர்.

கர்த்தர், “போய், அவர்களுக்கெதிராகப் போர் செய்யுங்கள்” என்று பதில் கூறினார். இஸ்ரவேல் மனிதர்கள் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தினார்கள். மீண்டும் போருக்கு முதல்நாளைப் போலவே சென்றனர்.

24 இஸ்ரவேல் சேனை பென்யமீன் படையை நெருங்கிற்று. அது போரின் இரண்டாம்நாள். 25 பென்யமீன் சேனை கிபியா நகரிலிருந்து இஸ்ரவேல் சேனையைத் தாக்க வந்தது. இம்முறை பென்யமீன் சேனை மேலும் இஸ்ரவேல் சேனையின் 18,000 மனிதர்களைக் கொன்றது. இஸ்ரவேலர் படையிலிருந்த அவ்வீரர்கள் அனைவரும் பயிற்சி பெற்றிருந்தனர்.

26 பின் இஸ்ரவேலர் பெத்தேல் நகரம் வரைக்கும் சென்றனர். அந்த இடத்தில் அமர்ந்திருந்து கர்த்தரை நோக்கி அழுதனர். அன்று மாலைவரை நாள் முழுவதும் அவர்கள் எதுவும் உண்ணவில்லை. அவர்கள் கர்த்தருக்குத் தகன பலியையும், சமாதான பலிகளையையும் செலுத்தினார்கள். 27 இஸ்ரவேலர் கர்த்தரிடம் ஒரு கேள்வி கேட்டனர். (அந்நாளில் பெத்தேலில் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டி இருந்தது. பினெகாஸ் என்பவன் தேவனுடைய ஆசாரியனாக இருந்தான். 28 பினெகாஸ் எலெயாசாரின் மகன், எலெயாசார் ஆரோனின் மகன்.) இஸ்ரவேலர், “பென்யமீன் ஜனங்கள் எங்கள் உறவினர். நாங்கள் அவர்களோடு போரிட மீண்டும் போக வேண்டுமா? அல்லது போரை நிறுத்த வேண்டுமா?” என்று கேட்டனர்.

கர்த்தர், “போங்கள், நாளை அவர்களை வெல்வதற்கு உங்களுக்கு உதவுவேன்” என்று பதில் உரைத்தார்.

29 பின்பு இஸ்ரவேல் சேனை கிபியா நகரைச் சுற்றிலும் சிலரை ஒளித்து வைத்தது. 30 மூன்றாம் நாள் இஸ்ரவேல் சேனை கிபியா நகரை எதிர்த்துப் போரிடச் சென்றது. அவர்கள் முன்பு செய்தது போலவே போருக்குத் தயாராயினார்கள். 31 பென்யமீன் சேனை இஸ்ரவேல் சேனையோடு போர் செய்வதற்காக கிபியா நகரை விட்டு வெளியே வந்தது. இஸ்ரவேல் சேனை பின்னிட்டுத் தங்களைப் பென்யமீன் சேனை துரத்தும்படி செய்தது. இவ்வாறாக நகரை விட்டு சேனை வெகு தூரம் வரும்படியாக பென்யமீன் சேனைக்கு எதிராக தந்திரம் செய்யப்பட்டது.

ஏற்கெனவே செய்தது போன்று பென்யமீன் சேனை இஸ்ரவேல் சேனையில் சில மனிதர்களைக் கொல்ல ஆரம்பித்தனர். சுமார் 30 இஸ்ரவேல் மனிதர்களை அவர்கள் கொன்றனர். வயல்களில் சிலரையும், பாதைகளில் சிலரையும் கொன்றனர். ஒரு பாதை பெத்தேல் நகரத்திற்கும் மற்றொருபாதை கிபியாவிற்கும் சென்றது. 32 பென்யமீன் மனிதர்கள், “முன்பு போலவே நாம் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கிறோம்” என்றனர்.

இஸ்ரவேல் மனிதர் ஓடிப்போய்க் கொண்டிருந்தார்கள், ஆனால் அது ஓர் தந்திரமே. பென்யமீன் மனிதர்களை நகரத்திலிருந்து வெகுதூரத்திற்கும், பெரும் பாதைகளுக்கும் அழைத்துவர விரும்பினர். 33 எனவே எல்லா மனிதரும் ஓடிவிட்டனர். பாகால் தாமார் என்னுமிடத்தில் அவர்கள் நின்றனர். கிபியாவிற்கு மேற்கே இஸ்ரவேலரில் சிலர் ஒளிந்து கொண்டிருந்தனர். அவர்கள் மறைவிடங்களிலிருந்து ஓடிவந்து, கிபியாவைத் தாக்கினார்கள். 34 கிபியா நகரை இஸ்ரவேலின் 10,000 வீரர்கள் தாக்கினார்கள். போர் கடுமையாக இருந்தது. ஆனால் பென்யமீன் சேனை தங்களுக்கு நேரவிருக்கும் கொடுமையானக் காரியத்தை அறியாதிருந்தார்கள்.

35 கர்த்தர் இஸ்ரவேல் சேனையைப் பயன்படுத்தி, பென்யமீன் சேனையைத் தோற்கடித்தார். அந்த நாளில் இஸ்ரவேல் படை பென்யமீன் சேனையிலிருந்து 25,100 வீரரைக் கென்றனர். அவர்கள் போர்ப்பயிற்சி பெற்றிருந்தனர். 36 பென்யமீன் ஜனங்கள் தாம் தோற்கடிக்கப்பட்டதைக் கண்டனர்.

இஸ்ரவேல் சேனை பின்னோக்கிச் சென்றது. அவர்கள் திடீர் தாக்குதலை நம்பியிருந்ததால் அவ்வாறு பின்னே சென்றார்கள். 37 மறைந்திருந்த மனிதர்கள் கிபியா நகரத்திற்கு விரைந்தனர். அவர்கள் நகரெங்கும் சென்று அங்கிருந்தோரை வாளால் கொன்றனர். 38 ஒளிந்திருந்த மனிதர்கள் மூலம் நிறைவேற்றக்கூடிய திட்டத்தை இஸ்ரவேல் வகுத்திருந்தனர். ஒளித்திருந்த மனிதர்கள் ஒரு விசேஷ அடையாளத்தைத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தார்கள். ஒரு பெரும் புகை மண்டலத்தை எழுப்புமாறு எதிர்பார்க்கப்பட்டனர்.

39-41 பென்யமீன் சேனை சுமார் 30 இஸ்ரவேல் படைவீரர்களைக் கொன்றிருந்தது. எனவே பென்யமீன் ஆட்கள், “முன்பு போலவே, நாங்கள் வெல்கிறோம்” என்றனர். அப்போது நகரிலிருந்து புகையெழுந்தது. பென்யமீன் ஜனங்கள் திரும்பி, புகையைப் பார்த்தனர். நகரம் முழுவதும் எரிய ஆரம்பித்தது. அப்போது இஸ்ரவேல் சேனையினர் ஓடுவதை நிறுத்தினார்கள். இதைக் கண்ட பென்யமீன் மனிதர்கள் பயந்தனர். அப்பொழுது தமக்கு நேர்ந்த கொடிய நிலையை அறிந்தனர்.

42 எனவே பென்யமீன் சேனை இஸ்ரவேல் சேனையைக் கண்டு ஓட ஆரம்பித்தது. அவர்கள் பாலைவனத்தை நோக்கி ஓடினார்கள். ஆனால் அவர்களால் போரிடுவதை நிறுத்த முடியவில்லை. இஸ்ரவேலர் நகரங்களிலிருந்து வந்து அவர்களைக் கொன்றனர். 43 இஸ்ரவேலர் பென்யமீன் மனிதரைச் சூழ்ந்துக்கொண்டு துரத்த ஆரம்பித்தனர். அவர்களை ஓய்வெடுக்க விடவில்லை. கிபியாவின் கிழக்குப் பகுதியில் அவர்களைத் தோற்கடித்தனர். 44 பென்யமீன் சேனையைச் சார்ந்த 18,000 துணிவுமிக்க, பலமுள்ள வீரர்கள் கொல்லப்பட்டனர்.

45 பென்யமீன் சேனை திரும்பி, பாலைவனத்திற்கு நேரே ஓடினார்கள். அவர்கள் ரிம்மோன் பாறை எனப்படும் இடத்திற்கு ஓடினார்கள்.

ஆனால் இஸ்ரவேல் சேனையினர் பெரும் பாதைகளில் 5,000 பென்யமீன் வீரர்களைக் கொன்றனர். பென்யமீன் மனிதர்களை அவர்கள் துரத்திக் கொண்டேயிருந்தனர். அவர்களைக் கீதோம் வரைக்கும் துரத்தினார்கள். அவ்விடத்தில் இஸ்ரவேல் சேனை இன்னும் 2,000 வீரர்களைக் கொன்றது.

46 அந்த நாளில் பென்யமீன் படையிலுள்ள 25,000 பேர் கொல்லப்பட்டனர். அம்மனிதர்கள் வாளைச் சுழற்றி மிகவும் துணிவுடன் போர் செய்தனர். 47 ஆனால் பென்யமீனைச் சேர்ந்த 600 பேர் பாலைவனத்திற்குள் ஓடினார்கள். அவர்கள் ரிம்மோன் பாறை என்னுமிடத்திற்குச் சென்று நான்கு மாதங்கள் அங்குத் தங்கினார்கள். 48 இஸ்ரவேல் ஆட்கள் பென்யமீன் தேசத்திற்குத் திரும்பிச் சென்றார்கள். அவர்கள் கடந்து வந்த நகரங்களிலுள்ள மனிதர்களைக் கொன்றார்கள். அவர்கள் மிருகங்களையெல்லாம் கொன்றனர். அகப்பட்ட பொருட்களையெல்லாம் அழித்தனர். அவர்கள் நுழைந்த நகரங்களையெல்லாம் எரித்தனர்.

யோவான் 3:22-4:3

இயேசுவும், யோவான் ஸ்நானகனும்

22 அதற்குப் பிறகு, இயேசுவும் அவரது சீஷர்களும் யூதேயா பகுதிக்குப் போனார்கள். அங்கு இயேசு தன் சீஷர்களோடு தங்கி ஞானஸ்நானம் கொடுத்தார். 23 யோவானும் அயினோனில் ஞானஸ்நானம் கொடுத்து வந்தான். அயினோன், சாலிம் அருகில் உள்ளது. அங்கே தண்ணீர் மிகுதியாக இருந்ததால் யோவான் ஞானஸ்நானம் கொடுத்துக்கொண்டிருந்தான். மக்கள் அவனிடம் போய் ஞானஸ்நானம் பெற்றார்கள். 24 (இது யோவான் சிறையில் அடைக்கப்படும் முன்பு நிகழ்ந்தது).

25 யோவானின் சீஷர்களுள் சிலர், யூதரோடு விவாதித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் மத சம்பந்தமான முறையைப்பற்றியே விவாதித்தனர். 26 ஆகையால் யோவானிடம் அவர்கள் வந்தனர். “போதகரே! யோர்தான் நதிக்கு அக்கரையில் ஒருவர் உம்மோடு இருந்தாரே, நினைவிருக்கிறதா? நீங்கள் அந்த மனிதரைப்பற்றியும் மக்களிடம் சொல்லியிருக்கிறீர்கள். அவர் மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்துக்கொண்டிருக்கிறார். அவரிடம் ஏராளமான மக்கள் சென்றுகொண்டிருக்கின்றனர்” என்று கூறினர்.

27 “தேவன் எதை ஒருவனுக்குக் கொடுக்கிறாரோ, அதையே ஒரு மனிதன் பெற்றுக்கொள்ள முடியும். 28 ‘நான் கிறிஸ்து அல்ல’ என்று நானே கூறியதையும் நீங்கள் சோதித்து அறிந்திருக்கிறீர்கள். ‘அவருக்கான பாதையைச் செம்மை செய்வதற்காகவே தேவன் என்னை அனுப்பியிருக்கிறார்.’ 29 மணமகனுக்கே மணமகள் உரியவளாகிறாள். மணமகனுக்கு உதவி செய்கிற மாப்பிள்ளையின் தோழன், மணமகனின் வரவைக் கவனித்து எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கிறான். மணமகனின் சத்தத்தைக் கேட்டு அவன் மிகவும் மகிழ்கிறான். நானும் அதே மகிழ்ச்சியை அடைகிறேன். இதுவே எனது மகிழ்ச்சிகரமான நேரம். 30 இயேசு மேலும் பெருமை பெறவேண்டும். எனது முக்கியத்துவம் குறைந்துவிடவேண்டும்.

பரலோகத்திலிருந்து வந்தவர்

31 “பரலோகத்திலிருந்து வந்திருக்கிற இயேசு மற்ற எல்லாரையும்விடப் பெரியவர். பூமியில் இருந்து வந்தவன் பூமியைச் சார்ந்தவன். அவன் பூமியில் உள்ளவற்றைப்பற்றி மட்டுமே பேசுவான். ஆனால் பரலோகத்திலிருந்து வந்திருக்கிற இயேசுவோ மற்ற எல்லாரையும்விட உயர்ந்தவர். 32 அவர் எதைக் கண்டாரோ, கேட்டாரோ அதையே கூறுகிறார். ஆனால் எவரும் அவர் சொல்வதை ஏற்றுக்கொள்வதில்லை. 33 அவர் சொல்வதை எவனொருவன் ஒப்புக்கொள்கிறானோ அவன், தேவன் உண்மையாய் இருக்கிறார் என்று நிரூபிக்கிறான். 34 தேவன் இயேசுவை அனுப்பினார். அவர் தேவன் சொன்னதைச் சொல்கிறார். தேவன் அவருக்கு ஆவியை நிரம்பக் கொடுத்திருக்கிறார். 35 பிதாவானவர் தன் குமாரனை நேசிக்கிறார். அவர் தன் குமாரனுக்கு அனைத்தின் மேலும் அதிகாரம் கொடுத்திருக்கிறார். 36 இந்தக் குமாரனை நம்புகிற எவரும் நித்திய ஜீவனைப் பெறுவர். ஆனால் அவருக்குக் கீழ்ப்படிய மறுக்கிற எவரும் அந்த வாழ்வை ஒருபோதும் பெற முடியாது. தேவனுடைய கோபம் அவர்கள் மேல் இருக்கும்” என்று யோவான் அவர்களுக்குக் கூறினான்.

சமாரியப் பெண்ணும் இயேசுவும்

யோவானைவிட இயேசு மிகுதியான மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதாகப் பரிசேயர்கள் கேள்விப்பட்டனர். (ஆனால் உண்மையில் இயேசு எவருக்கும் ஞானஸ்நானம் கொடுக்கவில்லை. அவரது சீஷர்களே கொடுத்தனர்.) பரிசேயர்கள் கேள்விப்பட்டதைப்பற்றி இயேசுவும் அறிந்துகொண்டார். ஆகையால் அவர் யூதேயாவை விட்டுத் திரும்பி கலிலேயாவுக்குச் சென்றார்.

சங்கீதம் 104:24-35

24 கர்த்தாவே, நீர் பல அற்புதமான காரியங்களைச் செய்திருக்கிறீர்.
    பூமி, நீர் உண்டாக்கின பல பொருள்களால் நிரம்பியிருக்கிறது.
    நீர் செய்யும் ஒவ்வொன்றிலும் உமது ஞானத்தைக் காண்கிறோம்.
25 சமுத்திரத்தைப் பாருங்கள், அது எவ்வளவு பெரியது!
    பல உயிர்கள் அங்கு வாழ்கின்றன!
    எண்ணமுடியாத சிறியதும் பெரியதுமான உயிரினங்கள் அங்கு வாழ்கின்றன.
26 நீர் உண்டாக்கின கடல் விலங்கான லிவியாதான் கடலில் விளையாடும்போது
    கப்பல்கள் சமுத்திரத்தின் மேல் பயணம் செய்கின்றன.

27 தேவனே, எல்லாக்காரியங்களும் உம்மைச் சார்ந்திருக்கின்றன.
    தக்கநேரத்தில் நீர் அவற்றிற்கு உணவைக் கொடுக்கிறீர்.
28 தேவனே, எல்லா உயிரினங்களுக்கும் அவை உண்ணும் உணவை நீர் கொடுக்கிறீர்.
    நல்ல உணவால் நிரம்பிய உமது கைகளை நீர் திறக்கிறீர், அவை வயிறு நிரம்பும்வரை அவற்றை உண்ணும்.
29 நீர் அவற்றை விட்டு விலகும்போது அவை அஞ்சும்.
    அவற்றின் சுவாசம் அவற்றைவிட்டு நீங்கும்.
அவை சோர்ந்து மரிக்கும்.
    அவற்றின் உடல்கள் மீண்டும் புழுதியாகிவிடும்.
30 ஆனால் கர்த்தாவே, நீர் உமது ஆவியை அனுப்பும்போது அவை ஆரோக்கியம் பெறும்!
    நீர் மீண்டும் நிலத்தைப் புதிதாகமாற்றுவீர்.

31 கர்த்தருடைய மகிமை என்றென்றும் தொடரட்டும்!
    கர்த்தர் தாம் உண்டாக்கின பொருள்களைக் கண்டு களிப்படையட்டும்.
32 கர்த்தர் பூமியைச்சற்றே பார்த்தால் அது அதிரும்.
    அவர் மலைகளைத் தொட நேர்ந்தால் அவற்றிலிருந்து புகையெழத் தொடங்கும்.

33 என் ஆயுள் முழுவதும் நான் கர்த்தரைப் பாடுவேன்.
    நான் வாழும்வரை கர்த்தரைத் துதித்துப் பாடுவேன்.
34 நான் கூறுபவை அவரை மகிழ்ச்சியாக்கும் என நம்புகிறேன்.
    நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருக்கிறேன்.
35 பூமியிலிருந்து பாவம் மறைந்து போகட்டும்.
    தீயோர் என்றென்றும் அழிந்து போவார்களாக.
என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி!
    கர்த்தரை துதியுங்கள்!

நீதிமொழிகள் 14:22-23

22 தீமைபுரியத் திட்டமிடும் எவனுமே தவறு செய்தவனாகிறான். ஆனால் ஒருவன் நன்மை செய்ய முயல்வதால் நிறைய நண்பர்களைப் பெறுகிறான். எல்லோரும் அவனை நேசித்து நம்புகின்றனர்.

23 நீ கடினமாக உழைத்தால் உனக்குத் தேவையானதை நீ பெறுவாய். ஆனால் நீ எதையும் செய்யாமல் பேசிக்கொண்டே இருந்தால் ஏழையாவாய்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center