Print Page Options Listen to Reading
Previous Prev Day Next DayNext

The Daily Audio Bible

This reading plan is provided by Brian Hardin from Daily Audio Bible.
Duration: 731 days

Today's audio is from the MEV. Switch to the MEV to read along with the audio.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
நியாயாதிபதிகள் 15-16

சிம்சோன் பெலிஸ்தியருக்குத் தொல்லை கொடுத்தல்

15 கோதுமை அறுவடையின்போது சிம்சோன் தன் மனைவியைச் சந்திக்கப் போனான். அவளுக்கு அன்பளிப்பாக ஒரு வெள்ளாட்டுக் குட்டியைக் கொண்டு வந்தான். அவன், “என் மனைவி இருக்கும் அறைக்குச் செல்கிறேன்” என்றான்.

அவளது தந்தை சிம்சோனை உள்ளே விடவில்லை. அவளது தந்தை சிம்சோனிடம், “நீ அவளை வெறுத்தாய் என நான் நினைத்தேன். எனவே மாபிள்ளைத் தோழனை அவள் திருமணம் செய்துகொள்ள நான் அனுமதித்து விட்டேன். அவள் தங்கை இன்னும் அழகானவள், அவளை மணந்துகொள்” என்றான்.

ஆனால் சிம்சோன் அவனிடம், “இப்போது பெலிஸ்தியராகிய உங்கள் அனைவரையும் துன்புறுத்துவதற்கு எனக்கு ஒரு நல்ல காரணம் கிடைத்திருக்கிறது. என்னை இப்போது யாரும் குறைச் சொல்ல முடியாது” என்றான்.

பின்பு சிம்சோன் வெளியே சென்று 300 நரிகளைப் பிடித்தான். அவற்றை இரண்டு இரண்டாகச் சேர்த்து அவற்றின் வாலைக் கட்டி, வால்களுக்கிடையில் நெருப்புப் பந்தத்தை வைத்தான்.

பின்பு சிம்சோன் அவற்றைக் கொளுத்தி வாலில் நெருப்பு வைக்கப்பட்ட அந்நரிகளைப் பெலிஸ்தியரின் தானியங்கள் விளையும் வயல்களுக்கிடையில் துரத்திவிட்டான். இவ்வாறு அவர்களின் வயல்களில் விளைந்துகொண்டிருந்த பயிர்களையும், அறுவடை செய்து தனியே குவித்து வைத்த கதிர்க்கட்டுகளையும் நெருப்பால் அழித்தான். மேலும் திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவ மரங்களையும் எரித்தான்.

பெலிஸ்தியர், “இதனைச் செய்தது யார்?” என்று கேட்டார்கள்.

திம்னாவிலுள்ள மனிதனின் மருமகனான சிம்சோன் அதனைச் செய்ததாகச் சிலர் கூறினார்கள். அவர்கள் “சிம்சோனின் மாமனார் தன் மகளை மாப்பிள்ளைத் தோழனுக்குத் திருமணம் செய்து வைத்ததால் அவன் அத்தகைய செயலைச் செய்தான்” என்றார்கள். அதனால் பெலிஸ்தியர் சிம்சோனின் மனைவியையும், அவளது தந்தையையும் எரித்துக் கொன்றனர்.

பின்பு சிம்சோன் அப்பெலிஸ்திய ஜனங்களிடம் “நீங்கள் தீமை செய்ததால் நானும் உங்களுக்குத் தீமை செய்வேன். நான் உங்கள் மேல் பழி சுமத்துகிறவரைக்கும் நிறுத்தமாட்டேன்!” என்றான்.

பின்பு சிம்சோன் பெலிஸ்தியரைத் தாக்கி அவர்களில் பலரைக் கொன்றான். பின்பு அவன் ஒரு குகையில் சென்று தங்கினான். அக்குகை ஏத்தாம் பாறையில் இருந்தது.

பின்பு பெலிஸ்தியர் யூதாவின் தேசத்திற்குச் சென்று, லேகி என்னுமிடத்திற்கருகில் தங்கினார்கள். அவர்களின் சேனையும் அங்கேயே தங்கிப் போருக்குத் தயாரானது. 10 யூதா கோத்திரத்தினர் அவர்களிடம், “பெலிஸ்தியராகிய நீங்கள் ஏன் எங்களோடு போரிட வந்துள்ளீர்கள்?” என்று கேட்டனர்.

அதற்கு பெலிஸ்தியர், “நாங்கள் சிம்சோனைக் கைது செய்ய வந்துள்ளோம். எங்கள் ஜனங்களுக் கெதிராக அவன் செய்த செயல்களுக்கு அவனைத் தண்டிக்க விரும்புகிறோம்” என்றனர்.

11 பின்பு 3,000 யூதா கோத்திரத்தினர் சேர்ந்து ஏத்தாம் பாறைக்கு அருகில் இருந்த குகைக்கு சிம்சோனிடம் சென்றனர். அவர்கள், “நீ எங்களுக்கு என்ன செய்தாய் என்பதை அறிவாயா? பெலிஸ்தியர் நம்மை ஆட்சி வலிமை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியாதா?” என்று கேட்டனர்.

அதற்கு சிம்சோன், “அவர்கள் எனக்குத் தீங்கு செய்ததால் அவர்களைத் தண்டித்தேன்” என்றான்.

12 பின்பு அவர்கள், “உன்னைக் கட்டி, பெலிஸ்தியரிடம் கொடுப்பதற்காக வந்துள்ளோம்” என்றனர்.

சிம்சோன் யூதா ஜனங்களிடம், “நீங்களாகவே என்னை காயப்படுத்தமாட்டீர்கள் என்று எனக்கு வாக்குக் கொடுங்கள்” என்று கேட்டான்.

13 அதற்கு அவர்கள், “அதற்கு நாங்கள் ஒத்துக்கொள்கிறோம். உன்னைக் கட்டி பெலிஸ்தியரிடம் நாங்கள் கொடுப்போமேயன்றி, உன்னைக் கொல்லமாட்டோம்” என்றனர். அவ்வாறே அவர்கள் அவனை இரண்டு புதிய கயிறுகளால் கட்டி, குகைக்கு வெளியே கொண்டு வந்தனர்.

14 லேகி என்னுமிடத்திற்குச் சிம்சோன் வந்தபோது, பெலிஸ்தியர்கள் அங்கு வந்தனர். அவர்கள் மகிழ்ச்சியால் துள்ளினார்கள். அப்போது கர்த்தருடைய ஆவியானவர் வல்லமையோடு சிம்சோன் மீது வந்தார். சிம்சோன் கயிறுகளை அறுத்தான். அந்த கயிறுகள் எரிந்துபோன நூலைப் போல காணப்பட்டன. உருகின கயிறுகள் போல அவன் கரங்களிலிருந்து அவை நழுவின. 15 அவ்விடத்தில் மரித்த ஒரு கழுதையின் தாடையெலும்பு அவனுக்குக் கிடைத்தது. அத்தாடையெலும்பால் அவன் 1,000 பெலிஸ்தியர்களைக் கொன்றான்.

16 பின்பு சிம்சோன்,

“ஒரு கழுதையின் தாடையெலும்பால்
    1,000 பேரைக் கொன்றேன்!
கழுதையின் தாடையெலும்பால்
    ஒன்றின் மேலொன்றாக பெரும் குவியலாக குவித்தேன்” என்றான்.

17 இவ்வாறு சொல்லி அத்தாடையெலும்பை கீழே எறிந்தான். அந்த இடம் அதனால் ராமாத்லேகி என்று அழைக்கப்பட்டது.

18 சிம்சோன் மிகவும் தாகமாயிருந்தான். அவன் கர்த்தரை நோக்கி, “நான் உமது ஊழியன், நீர் எனக்குப் பெரும் வெற்றியைத் தந்தீர். நான் தாகத்தால் மரிக்கும்படி தயவு செய்துவிடாதிரும். விருத்தசேதனம் இல்லாத மனிதர்கள் என்னைப் பிடிக்க அனுமதியாதிரும்” என்று அழுது முறையிட்டான்.

19 லேகியின் தரையில் ஒரு துவாரம் இருந்தது. தேவன் அந்தத் துவாரத்தின் வழி வெடித்து தண்ணீர் வரும்படியாகச் செய்தார். சிம்சோன் அந்தத் தண்ணீரைக் குடித்து மறுபடியும் வலிமைபெற்றான். அந்த நீரூற்றுக்கு எந்நக்கோரி என்று பெயரிட்டான். அது இன்னும் லேகி நகரில் உள்ளது. 20 இவ்வாறு சிம்சோன் இஸ்ரவேலருக்கு இருபது ஆண்டுகள் நியாயாதிபதியாக இருந்தான். இது பெலிஸ்தியரின் காலத்தில் நடந்தது.

காசா என்னும் நகருக்கு சிம்சோன் செல்லுதல்

16 ஒரு நாள் சிம்சோன் காசா நகரத்திற்குச் சென்றான். அவன் அங்கு ஒரு வேசியைச் சந்தித்து, அன்றிரவு அவளோடு தங்கச் சென்றான். காசா நகர ஜனங்களிடம், “சிம்சோன் இங்கு வந்திருக்கிறான்” என்று யாரோ தெரிவித்தனர். அவர்கள் அவனைக் கொல்ல எண்ணினார்கள். எனவே, அவன் இருந்த இடத்தை சூழ்ந்தனர். அவர்கள் மறைந்திருந்து சிம்சோனின் வரவுக்காக காத்திருந்தனர். அவர்கள் நகர வாயிலருகே இரவு முழுவதும் அமைதியாகத் தங்கியிருந்தனர். அவர்கள் ஒருவருக்கொருவர், “காலையில் சிம்சோனைக் கொல்வோம்” என்று பேசிக்கொண்டனர்.

ஆனால் சிம்சோன் அவ்விலைமகளோடு நள்ளிரவுவரை மட்டுமே தங்கியிருந்தான். சிம்சோன் நள்ளிரவில் விழித்தெழுந்தான். சிம்சோன் நகரவாயில் கதவுகளை பிடித்து, மதிலிலிருந்து தளர்த்திப் பெயர்த்தெடுத்தான். சிம்சோன் கதவுகளையும், அவற்றின் இரண்டு தூண்களையும், கதவுகளை மூடும் இரும்புத் துண்டுகளையும் சேர்த்துத் தூக்கிக்கொண்டான். சிம்சோன் அதை தோளில் சுமந்துக்கொண்டு, எபிரோன் நகருக்கு அருகிலுள்ள மலையின்மீது ஏறினான்.

சிம்சோனும் தெலீலாளும்

பின்னர் சிம்சோன் தெலீலாள் என்னும் ஒரு பெண்ணை நேசித்தான். அவள் சோரேக் என்னும் பள்ளத்தாக்கைச் சேர்ந்தவள்.

பெலிஸ்திய ஜனங்களின் தலைவர்கள் தெலீலாளிடம் சென்றனர். அவர்கள், “சிம்சோனைப் பெலசாலியாக வைத்திருப்பது எதுவென்று நாங்கள் அறிய விரும்புகிறோம். அவனது இரகசியத்தை உனக்குத் தெரிவிக்குமாறு நீ ஏதேனும் தந்திரம் செய். அப்போது அவனைப் பிடித்துக் கட்டுவது எப்படியென்பதை நாம் அறிந்துகொள்ள முடியும். பிறகு அவனைக் கட்டுப்படுத்துவதும் எளிதாயிருக்கும். நீ இதைச் செய்தால் நாங்கள் ஒவ்வொரு வரும் உனக்கு 28 பவுண்டு எடையுள்ள வெள்ளியைக் கொடுப்போம்” என்றார்கள்.

எனவே தெலீலாள் சிம்சோனிடம், “நீங்கள் எதனால் பெலசாலியாக இருக்கிறீர்கள் என்பதைக் கூறுங்கள். எவ்வாறு உங்களைக் கட்டி பெலவீனப்படுத்த முடியும்?” என்று கேட்டாள்.

சிம்சோன் பதிலாக, “ஏழு பச்சையான உலராத வில் நாண்களால் என்னைக் கட்டவேண்டும். அவ்வாறு செய்தால் நான் பிறரைப் போன்று பெலனற்றவனாவேன்” என்றான்.

அப்போது பெலிஸ்தியரின் அதிகாரிகள் தெலீலாளிடம் ஏழு பச்சையான வில் நாண்களைக் கொண்டு வந்தனர். அவை இன்னும் உலர்ந்திருக்கவில்லை. அவற்றால் தெலீலாள் சிம்சோனைக் கட்டினாள். சிலர் அடுத்த அறையில் ஒளித்திருந்தனர். தெலீலாள் சிம்சோனிடம், “சிம்சோன், உங்களைப் பெலிஸ்தியர்கள் பிடிக்கப் போகிறார்கள்!” என்றாள். ஆனால் சிம்சோன் எளிதாக அந்த வில் நாண்களை அறுத்துப்போட்டான். விளக்கில் எரியும் திரியிலுள்ள சாம்பலைப் போன்று அவைத் தெறித்து விழுந்தன. எனவே பெலிஸ்தியர்கள் சிம்சோனின் பெலத்தின் இரகசியத்தை அறிந்துகொள்ளவில்லை.

10 அப்போது தெலீலாள் சிம்சோனிடம், “நீங்கள் என்னிடம் பொய் சொன்னீர்கள்! என்னை முட்டாளாக்கினீர்கள். உண்மையைத் தயவுசெய்து எனக்குக் கூறுங்கள். எப்படி, யாரால் உங்களைக் கட்டிப்போட முடியும்?” என்று கேட்டாள்.

11 சிம்சோன், “யாராவது என்னை முன்னால் பயன்படுத்தப்படாத புதுக் கயிறுகளால் கட்டவேண்டும். அவ்வாறு யாரேனும் எனக்குச் செய்தால் நானும் பிற மனிதர்களைப் போன்று பெலமிழந்தவனாகிவிடுவேன்” என்றான்.

12 எனவே தெலீளாள் சில புதுக்கயிறுகளை எடுத்து சிம்சோனைக் கட்டினாள். சில ஆட்கள் அடுத்த அறையில் ஒளித்துக்கொண்டிருந்தனர். தெலீலாள் அவனை அழைத்து, “சிம்சோன், பெலிஸ்திய ஆட்கள் உங்களைப் பிடிக்கபோகிறார்கள்!” என்றாள். ஆனால் அவன் கயிறுகளை எளிதாக அறுத்துவிட்டான். நூலை அறுத்தாற்போன்று அவன் கயிறுகளை அறுத்தெறிந்தான்.

13 பின்பு தெலீலாள் சிம்சோனை நோக்கி, “நீங்கள் என்னிடம் மீண்டும் பொய் சொல்லிவிட்டீர்கள்! என்னை முட்டாள் ஆக்கிவிட்டீர்கள். இப்போது உங்களை ஒருவன் எவ்வாறு கட்டக்கூடும் என்பதைக் கூறுங்கள்” என்றாள்.

சிம்சோன், “நீ என் தலைமயிரின் 7 ஜடைகளையும் நெசவு தறியால் நெய்து அதனைப் பின்னலிட்டு இறுகக் கட்டினால் நானும் பிற மனிதரைப்போல் பெலமற்றவனாவேன்” என்றான்.

14 பின் சிம்சோன் உறங்கப்போனான். தெலீலாள் நெசவுத் துணியின் நூலைப் பயன்படுத்தி அவனது தலைமயிரின் 7 ஜடைகளையும் நெய்தாள். பின் தறியை நிலத்தில் ஒரு கூடார ஆணியால் அடித்தாள். அவள் மீண்டும் சிம்சோனை அழைத்து, “சிம்சோன், பெலிஸ்திய ஆட்கள் உங்களைப் பிடிக்கப் போகிறார்கள்!” என்றாள். சிம்சோன் கூடார ஆணியையும், தறியையும், பாவையும் பிடுங்கி எடுத்துக் கொண்டு எழுந்தான்!

15 பின் தெலீலாள் சிம்சோனைப் பார்த்து, “முற்றிலும் என்மேல் நம்பிக்கையற்றவராக இருக்கும்போது ‘நான் உன்னை நேசிக்கிறேன்’ என்று நீங்கள் எப்படி சொல்ல முடியும்? உங்கள் இரகசியத்தை சொல்ல மறுக்கிறீர்கள்? மூன்றாவதுமுறை நீங்கள் என்னை முட்டாளாக்கிவிட்டீர்கள். உங்களது பேராற்றலின் இரகசியத்தை நீங்கள் இன்னும் எனக்குக் கூறவில்லை” என்றாள். 16 தினந்தோறும் அவள் சிம்சோனைத் தொந்தரவுச் செய்துக்கொண்டேயிருந்தாள். அவனது இரகசியத்தைப்பற்றி அவள் கேட்டதினால் அவன் ஆத்துமா மிகவும் சோர்ந்து, வாழ்க்கையை வெறுத்தான். 17 இறுதியில் சிம்சோன் தெலீலாளுக்கு எல்லாவற்றையும் கூறினான். அவன், “நான் எனது தலைமயிரைச் சிரைத்ததில்லை. நான் பிறக்கும் முன்னரே தேவனுக்கென்று அர்ப்பணிக்கப்பட்டவன். யாராவது எனது தலை மயிரை நீக்கினால் எனது பலத்தை இழந்துவிடுவேன். நான் வேறெந்த மனிதனைப் போன்றும் பலவீனனாய் காணப்படுவேன்” என்றான்.

18 சிம்சோன் அவளிடம் இரகசியத்தைக் கூறிவிட்டான் என்பதைத் தெலீலாள் கண்டு கொண்டாள். பெலிஸ்தியரின் தலைவர்களுக்கு அவள் செய்தியைச் சொல்லியனுப்பினாள். அவள், “மீண்டும் இங்கே வாருங்கள். சிம்சோன் என்னிடம் எல்லாவற்றையும் கூறிவிட்டான்” என்றாள். எனவே பெலிஸ்தியரின் தலைவர்கள் தெலீலாளிடம் வந்தார்கள். அவளுக்குக் கொடுப்பதாக வாக்களித்திருந்த பணத்தை அவர்கள் கொண்டு வந்திருந்தார்கள்.

19 சிம்சோன் அவள் மடியில் படுத்திருந்தபோதே அவனைத் தெலீலாள் உறங்க வைத்தாள். பின்பு அவள் சவரம் செய்யும் ஒருவனை அழைத்து அவனது தலைமயிரின் 7 ஜடைகளையும் சிரைத்துவிடச் செய்தாள். அப்போது சிம்சோன் தனது பெலத்தை இழந்தான். சிம்சோனின் பலம் அவனை விட்டு நீங்கியது. 20 அப்போது தெலீலாள் அவனை அழைத்து, “சிம்சோன், பெலிஸ்தியர் உன்னைப் பிடிக்கப் போகிறார்கள்!” என்றாள். அவன் எழுந்து, “நான் எப்போதும் போல் என்னை விடுவித்து தப்பிவிடுவேன்” என்று நினைத்தான். கர்த்தர் அவனை விட்டு நீங்கிச்சென்றதை அவன் அறியவில்லை.

21 பெலிஸ்திய ஆட்கள் சிம்சோனைச் சிறைபிடித்தனர். அவர்கள் அவனது கண்களைப் பிடுங்கி, அவனைக் காசா நகரத்திற்கு அழைத்துச் சென்றனர். அவன் ஓடிவிடாதபடிக்கு அவனுக்கு விலங்கிட்டுக் கட்டினார்கள். அவர்கள் சிம்சோனைச் சிறையில் அடைத்து, அவனைத் தானியம் அரைக்குமாறு செய்தனர். 22 ஆனால் சிம்சோனின் தலைமயிர் மீண்டும் வளர ஆரம்பித்தது.

23 பெலிஸ்தியரின் தலைவர்கள் கொண்டாட்டத்திற்கென ஓரிடத்தில் கூடினார்கள். தங்கள் பொய்த் தெய்வமாகிய தாகோனிற்குப் பெரும்பலிகொடுக்க அங்கு வந்தனர். அவர்கள், “நமது தேவன் நமது பகைவனாகிய சிம்சோனை வெல்வதற்கு நமக்கு உதவினார்” என்று சொன்னார்கள். 24 பெலிஸ்தியர் சிம்சோனைக் காணும்பொழுது, அவர்கள் தம் பொய்த் தெய்வத்தை வாழ்த்தினார்கள். அவர்கள்,

“இம்மனிதன் நம் ஜனங்களை அழித்தான்!
    இம்மனிதன் நம் ஜனங்களில் பலரைக் கொன்றான்!
ஆனால் நமது தெய்வம்
    நம் பகைவனை வெல்ல உதவினார்!” என்றார்கள்.

25 அவர்கள் கொண்டாட்டத்தில் களிகூர்ந்து நன்றாகப் பொழுதைப் போக்கினார்கள். எனவே அவர்கள், “சிம்சோனை வெளியே அழைத்து வாருங்கள். அவனை ஆட்டம் காண்பித்து கிண்டல் செய்ய நாங்கள் விரும்புகிறோம்” என்றார்கள். எனவே அவர்கள் சிம்சோனைச் சிறையிலிருந்து அழைத்து வந்து அவனைக் கேலிச் செய்தனர். பொய்த் தெய்வம் தாகோன் கோவிலின் தூண்களுக்கு நடுவே அவனை நிறுத்தினார்கள். 26 ஒரு பணியாள் அவனது கைகளைப் பிடித்துக் கொண்டிருந்தான். சிம்சோன் அவனிடம், “இக்கோவிலைத் தாங்கி நிற்கும் தூண்களை நான் தொடுமாறு என்னை நிறுத்து. நான் அவற்றில் சாய்ந்துகொள்ள விரும்புகிறேன்” என்றான்.

27 அக்கோவில் ஆண்களாலும் பெண்களாலும் நிரம்பிவழிந்தது. பெலிஸ்தியரின் எல்லா தலைவர்களும் அங்கிருந்தனர். கோவிலின் மாடி அடுக்கில் சுமார் 3,000 ஆண்களும் பெண்களும் இருந்தனர். அவர்கள் நகைத்துக் கொண்டு, சிம்சோனைக் கேலிச் செய்தபடி இருந்தனர்.

28 அப்போது சிம்சோன் கர்த்தரை நோக்கி ஜெபம் செய்தான். அவன், “சர்வ வல்லமையுள்ள கர்த்தாவே, என்னை நினைவுகூரும். தேவனே, எனக்கு இன்னொருமுறை பெலன் தாரும். எனது இரு கண்களையும் பிடுங்கியதற்காய் இப்பெலிஸ்தியரை ஒருமுறை நான் தண்டிக்க அனுமதியும்!” என்றான். 29 பின்பு கோவிலின் நடுவே கோவிலைத் தாங்கிக் கொண்டிருந்த இரண்டு தூண்களையும் சிம்சோன் பற்றிக்கொண்டான். ஒரு தூண் அவனது வலதுபுறமும், இன்னொரு தூண் அவனது இடதுபுறமும் இருக்கும்படி நின்று கொண்டான். 30 சிம்சோன், “என்னையும் இந்த பெலிஸ்தியர்களுடன் மரிக்கவிடும்” என்றான். பின்பு அத்தூண்களைப் பலங்கொண்டமட்டும் தள்ளினான். தலைவர்கள் மீதும், அதிலிருந்த ஜனங்கள்மீதும் கோவில் இடிந்து விழுந்தது. இவ்வாறு உயிரோடிருந்தபோது கொன்றதைக் காட்டிலும் அதிகமான பெலிஸ்தியரைச் சிம்சோன் மரித்தபோது கொன்றான்.

31 சிம்சோனின் சகோதரர்களும் அவனது தந்தையின் குடும்பத்தினரும் அவனது உடலை எடுத்துக் கொண்டு வந்து, அவனது தந்தையின் கல்லறையிலேயே புதைத்தனர். அக்கல்லறை சோரா நகரத்திற்கும் எஸ்தாவோல் நகரத்திற்கும் நடுவே இருந்தது. இஸ்ரவேலருக்கு 20 ஆண்டுகள் சிம்சோன் நியாயாதிபதியாக இருந்தான்.

யோவான் 2

கானாவூர் கல்யாணம்

கலிலேயாவிலுள்ள கானா என்ற ஊரில் இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு திருமணம் நடந்தது. இயேசுவின் தாய் அங்கே இருந்தார். இயேசுவும் அவரது சீஷர்களும் அந்தத் திருமணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். திருமண வீட்டில் திராட்சை இரசம் போதுமான அளவு இல்லை. அது முழுவதும் தீர்ந்துபோன பின்பு இயேசுவிடம் அவரது தாயார், “அவர்களிடம் வேறு திராட்சை இரசம் இல்லை” என்றார்.

“அன்பான பெண்ணே! நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு நீர் சொல்ல வேண்டாம். என் நேரம் இன்னும் வரவில்லை” என்றார் இயேசு.

“இயேசு என்ன சொல்கிறாரோ அதன்படி நீங்கள் செய்யுங்கள்” என்று இயேசுவின் தாயார் வேலையாட்களிடம் சொன்னார்.

அந்த இடத்தில் தண்ணீர் நிரப்பி வைப்பதற்கென்று கல்லால் ஆன ஆறு பெரிய (பாத்திரங்கள்) தொட்டிகள் இருந்தன. இவ்வித தண்ணீர்த் தொட்டிகளை யூதர்கள் தங்கள் சுத்திகரிப்பின் சடங்குகளில் உபயோகித்தனர். ஒவ்வொரு தொட்டியும் இரண்டு முதல் மூன்று குடம் தண்ணீரைக் கொள்வன.

இயேசு வேலைக்காரர்களைப் பார்த்து, “அந்தத் தொட்டிகளில் தண்ணீரை நிரப்புங்கள்” என்று கூறினார். அவர்களும் அவ்வாறே அத்தொட்டிகளை நிரப்பினர்.

பிறகு இயேசு வேலைக்காரர்களிடம், “இப்பொழுது இதிலிருந்து கொஞ்சம் தண்ணீரை எடுத்து அதனை விருந்தின் பொறுப்பாளியிடத்தில் கொண்டுபோங்கள்” என்றார்.

வேலையாட்கள் அவ்வாறே கொண்டு போனார்கள். அந்த விருந்தின் பொறுப்பாளன் அதைச் சுவைத்துப்பார்த்தான். அப்பொழுது தண்ணீர் திராட்சை இராசமாகியிருந்தது. அவனுக்கு அது எங்கிருந்து வந்ததென்று தெரியவில்லை. ஆனால் நீரைக் கொண்டுபோன வேலையாட்களுக்குத் தெரிந்திருந்தது. 10 விருந்தின் பொறுப்பாளன் மணமகனை அழைத்து, “என்ன இது, இவ்வாறு செய்கிறீர்கள்? எல்லோரும் நல்ல திராட்சை இரசத்தை முதலில் பரிமாறுவார்கள். விருந்தினர்கள் குடித்துத் திருப்தியடைந்த பின்னர் ருசி குறைந்த திராட்சை இரசத்தைப் பரிமாறுவார்கள். நீங்களோ நல்ல திராட்சை இரசத்தை இதுவரைக்கும் பத்திரப்படுத்தி வைத்திருந்தீர்கள்” எனறான்.

11 இதுவே இயேசு செய்த முதல் அற்புதமாகும். இயேசு இதனை கலிலேயா நாட்டில் உள்ள கானா என்ற ஊரில் நிகழ்த்தினார். இயேசு தனது மகிமையை வெளிப்படுத்தினார். அவரது சீஷர்கள் அவரை நம்பினர்.

12 பிறகு இயேசு கப்பர்நகூம் நகருக்குச் சென்றார். அவரோடு அவரது தாயும், சகோதரர்களும் சீஷர்களும் சென்றனர். அவர்கள் அங்கே கொஞ்ச நாட்கள் தங்கினர்.

தேவாலாயத்தில் இயேசு(A)

13 அப்போது யூதர்களின் பஸ்கா பண்டிகை நெருங்கிக்கொண்டிருந்தது. ஆகையால் இயேசு எருசலேமுக்குச் சென்றார். அங்கே அவர் தேவாலயத்தில் நுழைந்தார். 14 தேவாலயத்தில் வியாபாரிகள் ஆடுகள், மாடுகள், புறாக்கள் போன்றவற்றை விற்றுக்கொண்டிருந்தனர். மேசைக்கு அருகில் அமர்ந்திருக்கும் வேறு சிலரையும் இயேசு கவனித்தார். அவர்கள் பொதுமக்கள் பணத்தை பண்டமாற்று செய்தபடி இருந்தார்கள். 15 இயேசு கயிறுகளால் ஒரு சவுக்கை உருவாக்கினார். அந்த வியாபாரிகளையும் ஆடுமாடுகளையும் தேவாலயத்திற்கு வெளியே அடித்துத் துரத்தினார். அவர் மேஜைகள் பக்கம் திரும்பி காசுக்காரர்களுடைய காசுகளைக் கொட்டினார். அப்பலகைகளைக் கவிழ்த்துப்போட்டார். 16 புறா விற்கிறவர்களைப் பார்த்து, “இவற்றை எடுத்துக்கொண்டு இங்கே இருந்து வெளியே செல்லுங்கள். என் பிதாவின் வீட்டைச் சந்தைக்கடை ஆக்காதீர்கள்” என்று இயேசு கட்டளையிட்டார்.

17 இது இவ்வாறு நிகழும்போது, இயேசுவின் சீஷர்கள் ஏற்கெனவே எழுதப்பட்டிருக்கும் வேதவாக்கியங்களை நினைவுகூர்ந்தனர்.

“உமது வீட்டைக் குறித்த என் பக்தி உணர்வு என்னை வைராக்கியமுள்ளவனாக்கும்.” (B)

18 யூதர்கள் இயேசுவைப் பார்த்து, “ஓர் அடையாளமாக அதிசயம் ஒன்றை எங்களுக்குக் காட்டும். இவற்றையெல்லாம் செய்வதற்கு உமக்கு உரிமை இருக்கிறது என்பதை நிரூபித்துக்காட்டும்” என்றார்கள்.

19 “இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள். இதனை மூன்று நாட்களுக்குள் நான் மீண்டும் கட்டி முடிப்பேன்” என்றார் இயேசு.

20 அதற்குப் பதிலாக யூதர்கள், “மக்கள் நாற்பத்தாறு ஆண்டுகள் பாடுபட்டு இந்த ஆலயத்தைக் கட்டி முடித்தார்கள். இதனை உம்மால் மூன்று நாட்களில் கட்டி முடிக்க முடியும் என்று நீர் உண்மையாகவே சொல்கிறீரா?” என்று கேட்டார்கள். 21 (ஆனால் இயேசு ஆலயம் என்று கூறியது அவரது சரீரத்தை. 22 இதனை அவரது சீஷர்கள், இயேசு மரித்தபின் மூன்று நாட்களில் உயிர்த்தெழுந்தபோது அவர் சொன்னதை நினைவுபடுத்திப் புரிந்துக்கொண்டனர். ஆகையால் அவரது சீஷர்கள் ஏற்கெனவே எழுதப்பட்ட வேதவாக்கியங்களையும், இயேசுவின் வார்த்தைகளையும் நம்பினர்.)

23 இயேசு பஸ்கா பண்டிகையின்போது எருசலேமில் இருந்தார். ஏராளமான மக்கள் அவர் செய்த அற்புதங்களைக் கண்டு அவர் மீது நம்பிக்கை வைத்தனர். 24 ஆனால் இயேசு அவர்களை நம்பவில்லை. ஏனென்றால் அவர்களது எண்ணங்களை அவர் அறிந்திருந்தார். 25 இயேசுவுக்கு அம்மக்களைப்பற்றி எவரும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது. ஒரு மனிதனின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அவர் அறிந்தவராயிருந்தார்.

சங்கீதம் 103

தாவீதின் ஒரு பாடல்

103 என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி!
    என் ஒவ்வொரு அவயவங்களே அவரது பரிசுத்த நாமத்தைத் துதியங்கள்.
என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி!
    அவர் உண்மையிலேயே தயவுள்ளவர் என்பதை மறக்காதே.
நாம் செய்யும் பாவங்களையெல்லாம் தேவன் மன்னிக்கிறார்.
    அவர் நமது நோய்களையெல்லாம் குணமாக்குகிறார்.
தேவன் கல்லறையிலிருந்து நம் உயிரை மீட்கிறார்.
    அவர் நமக்கு அன்பையும் தயவையும் தருகிறார்.
தேவன் நமக்கு மிகுதியான நல்ல பொருட்களைத் தருகிறார்.
    அவர் நம்மைக் கழுகைப் போன்று இளமையாக்குகிறார்.
கர்த்தர் நியாயமானவர்.
    பிறரால் புண்படுத்தப் பட்டிருக்கிறவர்களுக்கு தேவன் நியாயத்தைக் கொண்டு வருகிறார்.
தேவன் அவரது சட்டங்களை மோசேக்குக் கற்பித்தார்.
    அவர் செய்யத்தக்க வல்லமையுள்ள காரியங்களை இஸ்ரவேல் காணுமாறு தேவன் செய்தார்.
கர்த்தர் தயவும் இரக்கமும் உள்ளவர்.
    தேவன் பொறுமையும் மிகுந்த அன்பும் உடையவர்.
கர்த்தர் எப்போதும் குற்றங்காண்பதில்லை.
    கர்த்தர் என்றென்றும் நம்மிடம் கோபங்கொண்டிருப்பதில்லை.
10 நாங்கள் தேவனுக்கு எதிராகப் பாவம் செய்தோம்,
    ஆனால், நமக்குரிய தண்டனையை தேவன் வழங்கவில்லை.
11 வானம் பூமிக்கு எவ்வளவு உயரத்தில் உள்ளதோ,
    அதைப்போன்று தம்மைப் பின்பற்றுவோரிடம் தேவன் காட்டும் அன்பும் மிக மேலானது.
12 மேற்கிலிருந்து கிழக்கு எவ்வளவு தூரமோ
    அந்த அளவு தேவன் நமது பாவங்களை நம்மை விட்டு வெகுதூரத்திற்கு விலக்கிவிட்டார்.
13 தந்தை தனது பிள்ளைகளிடம் இருப்பதைப் போன்று
    கர்த்தரும், அவரைப் பின் பற்றுவோரிடம் இரக்கமாக இருக்கிறார்.
14 தேவன் நம்மைப்பற்றிய எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார்.
    நாம் மண்ணிலிருந்து படைக்கப்பட்டவர்கள் என்பதையும் தேவன் அறிகிறார்.
15 நம் வாழ்க்கை குறுகியது என்பதை தேவன் அறிகிறார்.
    நம் வாழ்க்கை புல்லைப்போன்றது என்பதை அவர் அறிகிறார்.
16 நாம் சிறிய காட்டுப் பூக்களைப் போன்றவர்கள் என்பதை தேவன் அறிகிறார்.
    அம்மலர் சீக்கிரம் மலர்கிறது.
வெப்பமான காற்று வீசும்போது, அம்மலர் மடிகிறது.
    பின்னர் அம்மலர் இருந்த இடத்தைக் கூட உன்னால் கூற முடியாது.
17 ஆனால் தேவன் எப்போதும் தம்மைப் பின் பற்றுவோரை நேசிக்கிறார்.
    என்றென்றைக்கும் எப்போதும் அவர் தம்மைப் பின்பற்றுவோரை நேசிப்பார்.
    தேவன் அவர்களுடைய பிள்ளைகளுக்கும், அவர்களின் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் நல்லவர்.
18 அவரது உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிகிற ஜனங்களுக்கு தேவன் நல்லவர்.
    அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிற ஜனங்களுக்கு தேவன் நல்லவர்.
19 பரலோகத்தில் தேவனுடைய சிங்காசனம் உள்ளது.
    அவர் எல்லாவற்றின் மீதும் அரசாள்கிறார்.
20 தேவதூதர்களே, கர்த்தரைத் துதியுங்கள்!
    தேவ தூதர்களாகிய நீங்கள் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிற வல்லமை வாய்ந்த வீரர்களாவீர்கள்.
    நீங்கள் தேவனுக்குச் செவி கொடுத்து அவர் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியங்கள்.
21 அவரது எல்லா சேனைகளே, கர்த்தரைத் துதியுங்கள்.
    நீங்கள் அவரது பணியாட்கள்.
    தேவன் விரும்புகிற காரியங்களை நீங்கள் செய்யுங்கள்.
22 எல்லா இடத்திலுமுள்ள எல்லாவற்றையும் கர்த்தர் உண்டாக்கினர்.
    எல்லா இடத்திலுமுள்ள எல்லாவற்றையும் தேவன் ஆளுகிறார்.
    அவை அனைத்தும் கர்த்தரைத் துதிக்கவேண்டும்.
என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி.

நீதிமொழிகள் 14:17-19

17 விரைவில் கோபம்கொள்கிறவன் முட்டாள்தனமான செயல்களையே செய்வான். ஆனால் அறிவுள்ளவனோ பொறுமையாக இருப்பான்.

18 அறிவற்றவர்கள் தங்கள் மூடத்தனத்திற்காகத் தண்டிக்கப்படுவார்கள். ஆனால் அறிவாளிகளோ ஞானத்தையே வெகுமதியாகப் பெறுவார்கள்.

19 நல்லவர்கள் தீயவர்களுக்கு எதிராக வெற்றிப் பெறுவார்கள். தீயவர்கள் அவர்களின் உதவிக்காகக் கெஞ்சும்படி கட்டாயப்படுத்தப்படுவார்கள்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center