Print Page Options Listen to Reading
Previous Prev Day Next DayNext

The Daily Audio Bible

This reading plan is provided by Brian Hardin from Daily Audio Bible.
Duration: 731 days

Today's audio is from the NLT. Switch to the NLT to read along with the audio.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
உபாகமம் 32:28-52

28 “இஸ்ரவேல் ஜனங்கள் அறிவில்லாதிருக்கிறார்கள்.
    அவர்கள் புரிந்துகொள்கிறதில்லை.
29 அவர்கள் அறிவுள்ளவர்களாக இருந்தால், அவர்கள் புரிந்திருக்கக்கூடும்.
    என்ன நடந்திருக்கக் கூடும் என்று அவர்கள் அறிந்திருப்பார்கள்!
30 ஒருவனால் 1,000 பேரைத் துரத்த முடியுமா?
    இரண்டு பேரால் 10,000 பேரை ஓடவைக்க முடியுமா?
கர்த்தர் அவர்களை எதிரிகளுக்குக் கொடுத்திருந்தால் மட்டுமே அது நிகழும்!
    அவர்களின் பாறையானவர் (தேவன்) அடிமைகளைப்போன்று விற்றிருந்தால் மட்டுமே அது நிகழும்!
31 எதிரிகளின் ‘பாறையானவன்’ நமது பாறையானவரைப் (கர்த்தர்) போன்று பலமுள்ளவன் அல்ல.
நமது பகைவர்கள் கூட இதனைத் தெரிந்திருக்கின்றார்கள்!
32 பகைவர்களின் திராட்சைத் தோட்டங்களும், வயல்களும் சோதோம் மற்றும் கொமோராவைப் போன்று அழிக்கப்படும்.
அவர்களது திராட்சைப் பழங்கள் விஷமுள்ளதாகும்.
33     அவர்களது திராட்சைரசம் பாம்பு விஷம் போன்றிருக்கும்.

34 “கர்த்தர் கூறுகிறார்,
‘நான் அந்தத் தண்டனையைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்.
    நான் அதனை எனது சேமிப்பு அறையில் பூட்டியுள்ளேன்!
35 அவர்கள் தீமையான கிரியைகளைச் செய்யும்போது
    நான் அதற்குத் தண்டனையை வைத்திருப்பேன்.
அவர்கள் தவறானவற்றைச் செய்ததால் நான் அவர்களைத் தண்டிப்பேன்.
அவர்களின் துன்ப காலம் அருகில் உள்ளது.
    அவர்களது தண்டனை விரைவில் வரும்.’

36 “கர்த்தர் தமது ஜனங்களை நியாயந்தீர்ப்பார்.
    அவர்கள் அவரது வேலைக்காரர்கள், அவர்களுக்கு அவர் இரக்கம் காண்பிப்பார்.
அவர்களது வல்லமை போய்விட்டதை அவர் பார்ப்பார்.
    அவர்களில் அடிமைகளும், சுதந்திரமானவர்களும் ஏகமாய் உதவியற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதை அவர் பார்ப்பார்.
37 பின்னர் கர்த்தர் கூறுவார்,
    ‘பொய்த் தெய்வங்கள் எங்கே இருக்கிறார்கள்?
    பாதுகாப்பிற்காக நீங்கள் ஓடிய “பாறை” எங்கே?
38 அப்பொய்த் தெய்வங்கள் உங்கள் பலிகளில் உள்ள கொழுப்பைத் தின்றன.
    அவை உங்கள் காணிக்கையில் உள்ள திராட்சை ரசத்தைக் குடித்தன.
எனவே அந்தத் தெய்வங்கள் எழுந்து உங்களுக்கு உதவட்டும்.
    அவை உங்களைக் காக்கட்டும்!

39 “‘இப்பொழுது நானே, நான் ஒருவரே தேவனாக இருக்கிறதைப் பார்!
    வேறு தேவன் இல்லை. நான் ஜனங்களை மரிக்கச் செய்வேன்.
நானே ஜனங்களை உயிருடன் வைப்பேன்.
    நான் ஜனங்களைக் காயப்படுத்த முடியும்.
நான் அவர்களைக் குணப்படுத்தவும் முடியும்.
    எனது அதிகாரத்திலிருந்து ஒருவனும் இன்னொருவனைக் காப்பாற்ற முடியாது.
40 நான் எனது கையைப் பரலோகத்தை நோக்கி உயர்த்தி, இந்த வாக்குறுதியைச் செய்கிறேன்.
    நான் என்றென்றும் ஜீவித்திருக்கிறவர் என்பதினால் அவை நிகழும் என்பதும் உண்மையாகும்!
41 நான் எனது பளபளக்கும் வாளைக் கூர்மைப்படுத்துவேன்.
    எனது எதிரிகளைத் தண்டிக்க அதனைப் பயன்படுத்துவேன்.
    அவர்களுக்கு ஏற்ற தண்டனையை நான் கொடுப்பேன்.
42 எனது பகைவர்கள் கொல்லப்படுவார்கள்.
கைதிகளாக சிறைபிடிக்கப்படுவார்கள்.
எனது அம்புகள் அவர்களது இரத்தத்தால் மூடப்படும்.
அவர்களது வீரர்களின் தலைகளை எனது வாள் வெட்டும்.’

43 “இந்த உலகம் முழுவதும் தேவஜனங்களுக்காக மகிழவேண்டும், ஏனென்றால் அவர்களுக்கு அவர் உதவுகிறார்.
    அவர்களது வேலைகாரர்களைக் கொன்ற ஜனங்களை அவர் தண்டிக்கிறார்.
அவர் அவரது பகைவர்களுக்கு ஏற்ற தண்டனைகளைக் கொடுக்கிறார்.
அவர் அவரது நாட்டையும், ஜனங்களையும் சுத்தம் செய்கிறார்.”

மோசே அவனது பாடலை ஜனங்களுக்குக் கற்றுத்தருகிறான்

44 மோசே வந்து அவனது பாடலில் உள்ள எல்லா வார்த்தைகளையும் இஸ்ரவேல் ஜனங்கள் கேட்கும்படி பாடினான். நூனின் மகனாகிய யோசுவாவும் மோசேயோடு இருந்தான். 45 மோசே இவற்றை ஜனங்களுக்குக் கற்றுக்கொடுத்து முடித்தபோது 46 அவன் அவர்களிடம், “இன்று நான் உங்களுக்குச் சொன்ன அனைத்துக் கட்டளைகளிலும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். இந்த சட்டத்தில் உள்ள கட்டளைகளுக்கு முழுமையாகக் கீழ்ப்படியும்படி உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் சொல்லவேண்டும். 47 இந்தப் போதனைகளை முக்கியமற்றவை என்று நீங்கள் எண்ணவேண்டாம். அவை உங்கள் ஜீவன் ஆகும். இந்தப் போதனைகள் மூலம், யோர்தான் ஆற்றைக் கடந்துபோய் நீங்கள் சுதந்தரிக்கத் தயாராக இருக்கும் தேசத்தில் நீண்ட வாழ்வை வாழப்போகிறீர்கள்” என்றான்.

நேபோ மலையின்மேல் மோசே

48 கர்த்தர் மோசேயிடம் அதே நாளில் பேசினார். கர்த்தர், 49 “அபாரீம் எனும் மலைகளுக்குப் போ, எரிகோவிற்கு எதிர்ப்புறமாக இருக்கிற மோவாப் நாட்டிலுள்ள நேபோ மலையின்மேல் ஏறு. பிறகு நீ, இஸ்ரவேல் ஜனங்கள் வாழ்வதற்காக நான் கொடுக்கிற, கானான் நாட்டினைப் பார்க்க முடியும். 50 நீ அந்த மலைமீது மரணமடைவாய். உன் சகோதரன் ஆரோன் ஓர் மலைமீது மரித்து முற்பிதாக்களிடம் சேர்ந்ததுபோல் நீயும் உன் முற்பிதாக்களிடம் சேருவாய். 51 ஏனென்றால், நீங்கள் இருவரும் எனக்கு எதிராக பாவம் செய்தீர்கள். நீங்கள் காதேசிலே மேரிபாவின் தண்ணீர் அருகில் இருந்தீர்கள். அது சீன் வனாந்தரத்திலே இருந்தது. அங்கே, இஸ்ரவேல் ஜனங்கள் முன்பாக, நான் பரிசுத்தமானவர் என்று நீ கனப்படுத்தவில்லை. 52 எனவே, இப்போது இஸ்ரவேல் ஜனங்களுக்கு நான் கொடுக்கிற தேசத்தை நீ பார்க்கலாம். ஆனால், நீ அந்த தேசத்திற்குள் செல்லமுடியாது” என்று கூறினார்.

லூக்கா 12:35-59

எப்போதும் ஆயத்தமாக இருங்கள்(A)

35 “ஆயத்தமாக இருங்கள். எல்லா ஆடைகளையும் அணிந்து தீபங்களை ஏற்றி வையுங்கள். 36 திருமண விருந்திலிருந்து எஜமானர் வீட்டுக்குத் திரும்பி வருவதை எதிர்ப்பார்த்திருக்கும் ஊழியர்களைப் போல் இருங்கள். எஜமானர் வந்து தட்டுகிறார். அதே தருணத்தில் வேலைக்காரர்கள் எஜமானருக்காகக் கதவைத் திறக்கிறார்கள். 37 எஜமானர் வீட்டுக்கு வந்தவுடன் ஊழியர்கள் தயாராக அவருக்குக் காத்திருந்தபடியால் ஆசீர்வதிக்கப்படுவார்கள். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். எஜமானர் வேலைக்குரிய ஆடைகளைத் தானே அணிந்துகொண்டு ஊழியர்களை மேசையின் அருகே அமரும்படியாகச் சொல்வார். பின்னர், எஜமானரே அவர்களுக்கு உணவைப் பரிமாறுவார். 38 அந்த ஊழியர்கள் நள்ளிரவு வரையிலோ இன்னும் அதிகமாகவோ எஜமானருக்காகக் காத்திருக்க வேண்டியதிருக்கும். ஆனால் எஜமானர் வந்து அந்த ஊழியர்கள் அவருக்காகக் காத்திருப்பதைப் பார்க்கும்போது அவர் அதிக மகிழ்ச்சியடைவார்.

39 “இதனை நினைவில் வைத்திருங்கள்: திருடன் வரும் நேரத்தை வீட்டுச் சொந்தக்காரன் அறிந்திருந்தால், வீட்டினுள் திருடன் நுழைய அவன் அனுமதிக்கமாட்டான். 40 எனவே நீங்களும் ஆயத்தமாக இருத்தல் வேண்டும். மனித குமாரன் நீங்கள் எதிர்பாராத நேரத்தில் வருவார்” என்றார்.

நம்பிக்கையான ஊழியன் யார்(B)

41 “ஆண்டவரே நீங்கள் இந்த உவமையை எங்களுக்காக மட்டுமா அல்லது எல்லா மக்களுக்காகவுமா கூறினீர்கள்?” என்று பேதுரு கேட்டான்.

42 அவனுக்குப் பதிலாகக் கர்த்தர், “யார் ஞானமுள்ள, நம்பிக்கைக்குரிய ஊழியன்? எஜமானர் பிற ஊழியர்களைக் கவனிக்கவும் அவர்களுக்குத் தக்க நேரத்தில் உணவளிக்கும்பொருட்டும் ஒரு ஊழியனை நியமிப்பார். அந்த வேலையைச் செய்யும்படி எஜமானர் நம்புகின்ற ஊழியன் யார்? 43 எஜமானர் வந்து அந்த ஊழியன் கொடுக்கப்பட்ட வேலையைச் சரிவர செய்துவருவதைப் பார்க்கும்போது, அந்த ஊழியன் மிகவும் மகிழ்ச்சியடைவான். 44 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். எஜமானருக்குச் சொந்தமான எல்லாவற்றையும் கவனிக்கும் பொறுப்பை ஏற்க அந்த ஊழியனை எஜமானர் ஏற்படுத்துவார்.

45 “ஆனால் எஜமானர் விரைவில் திரும்பி வரமாட்டார் என்று எண்ணினால் நடப்பதென்ன? அந்த ஊழியன் மற்ற ஊழியர்களை அவர்கள் ஆண்களானாலும், பெண்களானாலும் அடித்துத் துன்புறுத்த ஆரம்பிப்பான். அவன் உண்டு, பருகி, மிதமிஞ்சிப் போவான். 46 அந்த உழியனுக்குத் தகவலே தெரியாதபோது எஜமானர் வருவார். அந்த ஊழியன் சற்றும் எதிர்பார்த்திராத நேரத்தில் அவர் வருவார். அப்போது அந்த எஜமானர் அந்த ஊழியனைத் தண்டிப்பார். கீழ்ப்படியாத பிற மனிதரோடு இருக்கும்படியாக எஜமானர் அவனையும் அனுப்பிவிடுவார்.

47 “எஜமானர் தன்னிடம் எதிர்ப்பார்த்த வேலை என்ன என்பது அந்த ஊழியனுக்குத் தெரியும். ஆனால் அந்த ஊழியன் அவனது எஜமானர் விரும்பியதைச் செய்ய முயல்வதோ, அதற்குத் தன்னை ஆயத்தப்படுத்திக்கொள்வதோ இல்லை. எனவே அந்த ஊழியன் அதிகமாகத் தண்டிக்கப்படுவான். 48 ஆனால் எஜமானர் தன்னிடம் எதிர்ப்பார்ப்பதை அறிந்துகொள்ளாத ஊழியனின் நிலை என்ன? தண்டனைக்குரிய செயல்களை அவன் செய்கிறான். ஆனால் தான் செய்ய வேண்டியதை அறிந்தும் செய்யாத ஊழியனைக் காட்டிலும் அவன் குறைந்த தண்டனையைப் பெறுவான். ஒருவனுக்கு அதிகமாக அளிக்கப்பட்டால் அவனுடைய பொறுப்பும் அதிகரிக்கும். அதிகமாக ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டால் அவனிடமிருந்து அதிகம் எதிர்ப்பார்க்கப்படும்” என்றார்.

வித்தியாசமான போதனை(C)

49 இயேசு தொடர்ந்து சொன்னார், “உலகத்தில் அக்கினியைக் கொண்டு வருவதற்காக நான் வந்தேன். அது ஏற்கெனவே எரியத் தொடங்கி இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். 50 நான் இன்னொரு ஞானஸ்நானத்தைப் பெறவேண்டும். அது முடியும்வரைக்கும் நான் தொல்லைக்குள்ளானதாக உணர்கிறேன். 51 நான் உலகத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காக வந்தேன் என்று எண்ணுகிறீர்களா? இல்லை. நான் உலகில் பிரிவை ஏற்படுத்த வந்தேன். 52 இப்போதிலிருந்து, ஐந்து பேருள்ள ஒரு குடும்பத்தில் மூன்று பேர் இருவருக்கு எதிராகவும், இருவர் மூவருக்கு எதிராகவும் பிரிந்திருப்பார்கள்.

53 “தந்தையும் மகனும் பிரிந்திருப்பார்கள்.
    மகன் தந்தையை எதிர்த்து நிற்பான்.
    தந்தை மகனை எதிர்த்து நிற்பான்.
தாயும் மகளும் பிரிந்திருப்பார்கள்.
    மகள் தாயை எதிர்த்து நிற்பாள்.
    தாய் மகளை எதிர்த்து நிற்பாள்.
மாமியாரும் மருமகளும் பிரிந்திருப்பார்கள்.
    மருமகள் மாமியாரை எதிர்த்து நிற்பாள்.
    மாமியார் மருமகளை எதிர்த்து நிற்பாள்.”

காலத்தை அறியுங்கள்(D)

54 பின்பு இயேசு மக்களை நோக்கி, “மேற்கில் மேகங்கள் பெருகுகையில் நீங்கள் ‘மழைக்குரிய புயல் வந்து கொண்டிருக்கிறது’ என்று உடனே சொல்கிறீர்கள். உடனே மழை பொழிய ஆரம்பிக்கிறது. 55 தெற்கிலிருந்து காற்று வீசுவதை உணர்ந்ததும் நீங்கள், ‘இன்று வெப்பமான நாள்’ என்று சொல்கிறீர்கள். நீங்கள் சொல்வது சரியானதே. 56 வேஷதாரிகளே! காலத்தைப் புரிந்து பூமி மற்றும் வானத்தின் மாற்றங்களுக்குப் பொருள் உரைக்கிறீர்கள். இப்போது நடந்துகொண்டிருப்பவற்றை ஏன் உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை?” என்றார்.

பிரச்சனையைத் தீருங்கள்(E)

57 “சரியான ஒன்றைக் குறித்து ஏன் உங்களால் முடிவெடுக்க முடியவில்லை? 58 ஒருவன் உங்கள் மீது வழக்குத் தொடுக்கும்போது அதைத் தீர்க்கும்பொருட்டு அவனோடு நீதிமன்றத்துக்குப் போகும்போது, வழியிலேயே அதைத் தீர்த்துக்கொள்ள கடினமாக முயற்சி செய்யுங்கள். அந்த வழக்கைத் தீர்த்துக்கொள்ளாவிட்டால் அவன் நியாயாதிபதியிடம் உங்களை அழைத்துச் செல்லக் கூடும். நியாதிபதி உங்களை ஓர் அதிகாரியிடம் ஒப்படைக்க, அவன் உங்களைச் சிறையில் தள்ளக் கூடும். 59 அவர்கள் உங்களிடமிருக்கும் கடைசிக் காசுவரை அனைத்தையும் எடுக்கிறவரைக்கும் நீங்கள் அங்கிருந்து வெளியே வரப்போவதில்லை” என்றார்.

சங்கீதம் 78:56-64

56 ஆனால் அவர்கள் மிக உன்னதமான தேவனை சோதித்து அவரை விசனத்திற்குள்ளாக்கினார்கள்.
    அந்த ஜனங்கள் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவில்லை.
57 இஸ்ரவேலர் தேவனிடமிருந்து விலகிச் சென்றார்கள். அவர்கள் தந்தையர் செய்தாற்போன்று அவர்கள் அவருக்கெதிராகத் திரும்பினார்கள்.
    எறியும் வில்லைப்போன்று அவர்கள் தங்கள் போக்கினை மாற்றிக்கொண்டார்கள்.
58 இஸ்ரவேலர் உயர்ந்த பீடங்களைக் கட்டி, தேவனை கோபமடையச் செய்தார்கள்.
    அவர்கள் பொய் தெய்வங்களுக்குச் சிலைகளை எழுப்பி, தேவனை பொறாமை அடையச் செய்தார்கள்.
59 தேவன் இதைக் கேட்டு மிகுந்த கோபமடைந்தார்.
    அவர் இஸ்ரவேலரை முற்றிலும் தள்ளினார்.
60 தேவன் சீலோவிலுள்ள பரிசுத்தக் கூடாரத்தை விட்டு நீக்கினார்.
    ஜனங்களோடு கூட தேவன் அக்கூடாரத்தில் வாழ்ந்திருந்தார்.
61 பிற தேசங்கள் அவரது ஜனங்களைச் சிறை பிடிக்க, தேவன் அனுமதித்தார்.
    பகைவர்கள் தேவனுடைய “அழகிய நகையை” எடுத்துக்கொண்டார்கள்.
62 தேவன் அவரது ஜனங்களுக்கெதிராகத் தமது கோபத்தைக் காட்டினார்.
    அவர்கள் போரில் கொல்லப்படும்படியாக அனுமதித்தார்.
63 இளைஞர்கள் மரணமடையும்படியாக எரிக்கப்பட்டார்கள்.
    அவர்கள் மணக்க வேண்டிய இளம் பெண்கள் திருமணப்பாடல் எதையும் பாடவில்லை.
64 ஆசாரியர்கள் கொல்லப்பட்டார்கள்.
    ஆனால் அவர்களின் விதவைகள் அவர்களுக்காக அழவில்லை.

நீதிமொழிகள் 12:24

24 கடினமாக உழைக்கிறவர்கள் மற்ற உழைப்பாளிகளுக்கு பொறுப்பாளி ஆவார்கள். சோம்பேறியோ அடிமையைப்போன்று மற்றவர்களின் கீழ் வேலைசெய்வான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center