Print Page Options Listen to Reading
Previous Prev Day Next DayNext

The Daily Audio Bible

This reading plan is provided by Brian Hardin from Daily Audio Bible.
Duration: 731 days

Today's audio is from the GW. Switch to the GW to read along with the audio.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
உபாகமம் 29-30

மோவாபில் உடன்படிக்கை

29 கர்த்தர், இஸ்ரவேல் ஜனங்களோடு ஓரேப் மலையின் (சீனாய்) மேல் உடன்படிக்கை செய்தார். அவர்கள் மோவாபில் இருக்கும்போது உடன்படிக்கையோடு கர்த்தர், இன்னொரு உடன்படிக்கையைச் செய்துகொள்ளும்படி மோசேக்குக் கட்டளையிட்டார். இதுதான் அந்த உடன்படிக்கை:

மோசே இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரையும் கூட்டி அழைத்தான். அவன் அவர்களிடம், “நீங்கள் கர்த்தர் எகிப்தில் செய்த எல்லாவற்றையும் பார்த்தீர்கள். அவர் பார்வோனுக்கும், பார்வோனின் அதிகாரிகளுக்கும், நாடு முழுவதற்கும் செய்தவற்றை நீங்கள் பார்த்தீர்கள். அவர் கொடுத்த பெருந் துன்பங்களையும் நீங்கள் பார்த்தீர்கள். அவர் செய்த அற்புதங்களையும், வியக்கத்தக்கவற்றையும் பார்த்தீர்கள். ஆனால், இன்றுவரை என்ன நடந்தது என்று நீங்கள் புரிந்துகொள்ளவில்லை. நீங்கள் பார்த்தவற்றையும் கேட்டவற்றையும் பற்றி உண்மையிலேயே புரிந்துகொள்ள கர்த்தர் அனுமதிக்கவில்லை. கர்த்தர் 40 ஆண்டுகளாக உங்களை வனாந்தரத்தில் வழி நடத்தினார். அக்காலம் முழுவதும் உங்கள் ஆடைகளும் பாதரட்சைகளும் கிழிந்து போகவில்லை. உங்களோடு எவ்வித உணவும் இருக்கவில்லை. உங்களிடம் குடிப்பதற்குத் திராட்சைரசமோ வேறு பானமோ இருக்கவில்லை. ஆனால், கர்த்தர் உங்களைக் கவனிக்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டார். அவரே உங்கள் தேவனாகிய கர்த்தர் என்பதைப் புரிந்து கொள்ளும்படி அவர் இதனைச் செய்தார்.

“நீங்கள் இந்த இடத்திற்கு வந்தீர்கள். நமக்கு எதிராகச் சண்டையிட எஸ்போனின் அரசனாகிய சீகோனும், பாசானின் அரசனாகிய ஓகும் வந்தார்கள். ஆனால் நாம் அவர்களைத் தோற்கடித்தோம். பிறகு நாம் அவர்களுடைய நாடுகளை எடுத்து ரூபனியருக்கும், காத்தியருக்கும், மனாசேயின் பாதிக் கோத்திரத்திற்கும் கொடுத்தோம். இந்த உடன்படிக்கையில் உள்ள அனைத்துக் கட்டளைகளுக்கும் நீ கீழ்ப்படிந்தால் பிறகு நீ செய்கிற எல்லாவற்றிலும் தொடர்ந்து வெற்றிபெறுவாய்.

10 “இன்று அனைத்து இஸ்ரவேல் ஜனங்களும் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு முன் நின்று கொண்டிருக்கிறீர்கள். உங்கள் தலைவர்கள், அதிகாரிகள், மூப்பர்கள் மற்றும் எல்லா மனிதர்களும், 11 உங்கள் மனைவிகளும் பிள்ளைகளும் இங்கே இருக்கிறார்கள். உங்களிடையே அயல் நாட்டுக் குடிகள் வாழ்கிறார்கள். அவர்கள் உங்களுக்கென்று மரத்தை வெட்டி, தண்ணீரைக்கொண்டு வருகிறார்கள். 12 உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் உடன்படிக்கை செய்ய நீங்கள் அனைவரும் இங்கே இருக்கிறீர்கள். கர்த்தர் இன்று உங்களோடு இந்த உடன்படிக்கையைச் செய்கிறார். 13 இந்த உடன்படிக்கையோடு, கர்த்தர் உங்களைத் தமது சொந்த விசேஷமான ஜனங்களாக்கிக்கொண்டிருக்கிறார். அவர்தாமே உங்கள் தேவன் ஆவார். அவர் இதை உனக்குக் கூறுகிறார். அவர் உனது முற்பிதாக்களான ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு ஆகியோர்களுக்கு வாக்களித்திருக்கிறார். 14 கர்த்தர் இந்த உடன்படிக்கையை தமது வாக்குறுதிகளோடு உங்களுக்கு மட்டும் கொடுக்கவில்லை. 15 நமது தேவனாகிய கர்த்தருக்கு முன்பு நிற்கிற நம் அனைவரோடும் அவர் உடன்படிக்கை செய்திருக்கிறார். ஆனால் இந்த உடன்படிக்கை இன்று நம்மோடு இங்கே இல்லாத நமது சந்ததிகளுக்கும் உரியதாகிறது. 16 நாம் எகிப்து நாட்டில் எப்படி வாழ்ந்தோம் என்றும், நாம் கடந்து வந்த வழியிலுள்ள இந்நாடுகளில் எப்படிப் பயணம் செய்தோம் என்றும் நினைத்துக்கொள்ளுங்கள். 17 அவர்களது வெறுக்கத்தக்க பொருட்களான மரத்தாலும், கல்லாலும், வெள்ளியாலும், தங்கத்தாலும் செய்யப்பட்ட விக்கிரகங்களை பார்த்தீர்கள். 18 இங்கே ஒரு ஆணோ, பெண்ணோ, கோத்திரமோ இன்று, நமது தேவனாகிய கர்த்தரைவிட்டு விலகாதபடி உறுதியாயிருங்கள். அந்நிய நாடுகளிலுள்ள தெய்வங்களுக்கு சேவை செய்ய எவரும் போகவேண்டாம். அவ்வாறு செய்கிற ஜனங்கள் கசப்பும், விஷத் தன்மையும் உள்ள கனியுள்ள செடி போல இருப்பார்கள்.

19 “ஒருவன் இந்தச் சாபங்களைக் கேட்கலாம். ஆனால் அவன் தன்னை ஆறுதல்படுத்திக்கொண்டு தனக்குள், ‘நான் என் விருப்பம் போல்தான் செய்வேன். எனக்கு எந்தத் தீமையும் ஏற்படாது’ என்று சொல்லலாம். அவன் தனக்கு மட்டும் தீமையை வரவழைப்பதில்லை. ஆனால் எல்லோருக்கும், நல்லவர்களுக்கும் கூடத் தீமையை வரவழைக்கிறான். 20-21 கர்த்தர் அவனை மன்னிப்பதில்லை. அவன்மேல் கர்த்தர் கோபமும் எரிச்சலும் அடைவார். அவனை கர்த்தர் தண்டிப்பார். கர்த்தர் அவனது பெயரை வானத்தின் கீழிருந்து அழித்துப் போடுவார். கர்த்தர் அவனை முழுமையாக அழிப்பார். இப்புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள எல்லாத் தீமைகளும் அவனுக்கு ஏற்படும். இந்தப் போதனைகளின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள உடன்படிக்கையின் ஒரு பகுதியாக அவை இருக்கும்.

22 “எதிர்காலத்தில் உங்கள் சந்ததிகளும், தொலை தூரத்து அயல்நாட்டுக் குடிகளும் இந்நாடு எவ்வாறு பாழானது என்று காண்பார்கள். கர்த்தர் இந்த நாட்டிற்குக் கொண்டு வந்திருக்கிற நோய்களையும் பார்ப்பார்கள். 23 அனைத்து நாடுகளும் பயனற்றுப்போகும். எரிகின்ற கந்தகத்தால் அழிக்கப்பட்டு உப்பால் மூடப்படும். எதுவும் நடுவதற்கு ஏற்றதாக பூமி இருக்காது. களைகள் கூட வளராத அளவிற்குப் பாழாய் போகும். கர்த்தர் மிகக் கோபத்தோடு இருந்தபோது, நகரங்களான சோதோமையும், கொமோராவையும், அத்மாவையும், செபோயீமையும் அழித்தது போன்று இந்த நாடும் அழிக்கப்படும்.

24 “‘கர்த்தர் இந்த நாட்டிற்கு ஏன் இவ்வாறு செய்தார்? அவர் ஏன் இவ்வளவு கோபமாக இருக்கிறார்?’ மற்ற அனைத்து நாடுகளும் கேட்கும். 25 அதன் பதில் இவ்வாறு இருக்கும்: ‘கர்த்தர் கோபமாக இருக்கிறார். ஏனென்றால், இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கையை விட்டுவிலகிப் போனார்கள். அவர்களை கர்த்தர் எகிப்தை விட்டு வெளியே கொண்டுவந்தபோது அவர்களோடு அவர் செய்த உடன்படிக்கையை பின்பற்றுவதை நிறுத்தினர். 26 இஸ்ரவேல் ஜனங்கள் அந்நிய தெய்வங்களுக்கும், இதற்குமுன்பு தொழுதுகொள்ளாத தெய்வங்களுக்கும் பணிவிடை செய்யத் தொடங்கினார்கள். அத்தெய்வங்களை ஆராதிக்க வேண்டாம் என்று கர்த்தர் அந்த ஜனங்களிடம் கூறினார். 27 அதனால்தான், கர்த்தர் அந்நாட்டு ஜனங்களுக்கு எதிராக மிகவும் கோபங்கொண்டார். எனவே, புத்தகத்தில் எழுதப்பட்ட எல்லா சாபங்களையும் அவர்களுக்கு அவர் கொண்டு வந்தார். 28 கர்த்தர் அவர்கள்மேல் மிகவும் கோபங்கொண்டு எரிச்சல் அடைந்தார். எனவே, அவர்களை அவர் அந்நாட்டைவிட்டு வெளியே எடுத்தார். அவர் அவர்களை இன்று இருக்கிற நாட்டில் விட்டார்.’

29 “நமது தேவனாகிய கர்த்தர் சில காரியங்களை இரகசியமாக வைத்துள்ளார். அவற்றை அவர் மட்டுமே தெரிந்திருக்கிறார். ஆனால் கர்த்தர் தமது போதனைகளை நமக்கும் நமது சந்ததிகளுக்கும் என்றென்றைக்கும் கொடுத்திருக்கிறார். அந்தச் சட்டத்திலுள்ள எல்லா கட்டளைகளுக்கும் நாம் கீழ்ப்படிய வேண்டும்.

இஸ்ரவேலர்கள் தங்கள் நாட்டிற்குத் திரும்புவார்கள்

30 “நான் சொல்லியிருக்கிற அனைத்தும் உங்களுக்கு நிகழும். நீங்கள் ஆசீர்வாதங்களிலிருந்து நன்மையைப் பெறுவீர்கள். நீங்கள் சாபங்களிலிருந்து தீமைகளைப் பெறுவீர்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை வேறு நாடுகளுக்கு அனுப்புவார். பிறகு நீங்கள் இவற்றைப் பற்றி நினைப்பீர்கள். அந்த நேரத்தில் நீங்களும் உங்கள் சந்ததிகளும் உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் திரும்பி வருவீர்கள். நீங்கள் முழுமனதோடு அவரைப் பின்பற்றுவீர்கள். நான் இன்று உங்களுக்குக் கொடுத்திருக்கிற அவரது அனைத்து கட்டளைகளுக்கும் முழுமையாக அடிபணிவீர்கள். பிறகு உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களிடம் இரக்கம்கொள்வார். கர்த்தர் உங்களை மீண்டும் விடுதலை செய்து உங்களை அனுப்பிய தேசங்களிலிருந்து திரும்பக் கூட்டிச் சேர்ப்பார். அவர் உங்களை பூமியின் ஒரு பகுதிக்கு அனுப்பியிருந்தாலும் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சேகரித்துக் திரும்ப அங்கிருந்து உங்களைக் கொண்டு வருவார். உங்கள் முற்பிதாக்களுக்குரிய நாட்டிற்கு கர்த்தர் உங்களைக் கொண்டுவருவார். அந்நாடு உங்களுக்கு உரியதாகும். கர்த்தர் உங்களுக்கு நன்மையைச் செய்வார். உங்கள் முற்பிதாக்களுக்குரியதைவிட நீங்கள் அதிகம் பெறுவீர்கள். அவர்களிடம் இருந்த ஜனங்களைவிட உங்கள் நாட்டில் மிகுதியான ஜனங்கள் இருப்பார்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களையும் உங்கள் சந்ததிகளையும் கீழ்ப்படிய விரும்பும்படிச் செய்வார். பிறகு நீ உன் முழு இருதயத்தோடு கர்த்தரை நேசிப்பாய். நீ வாழ்வாய்!

“பிறகு உனது தேவனாகிய கர்த்தர் உங்கள் பகைவர்களுக்கு அத்தீமைகளை எல்லாம் ஏற்படும்படிச் செய்வார். ஏனென்றால், அந்த ஜனங்கள் உன்னை வெறுத்து உனக்குத் தீமையைச் செய்தார்கள். நீ மீண்டும் கர்த்தருக்குக் கீழ்ப்படிவாய். நான் இன்று உங்களுக்குக் கொடுக்கிற அவரது அனைத்துக் கட்டளைகளுக்கும் நீ கீழ்ப்படிவாய். உனது தேவனாகிய கர்த்தர் நீ செய்கிற அனைத்திலும் வெற்றி அடையும்படிச் செய்வார். அவர் உன்னை அதிகக் குழுந்தைகள் பெறும்படி ஆசீர்வதிப்பார். அவர் உனது பசுக்களை ஆசீர்வதிப்பார். அவை மிகுதியான கன்றுகளைப் பெறும். அவர் உனது வயல்களை ஆசீர்வதிப்பார். அவை நல்ல விளைச்சல் அடையும். கர்த்தர் உனக்கு நல்லவராக இருப்பார். கர்த்தர் உனக்கு நன்மை செய்வதில் உங்கள் முற்பிதாக்களுக்கு நன்மை செய்யும் போது மகிழ்ந்ததைப்போன்று மீண்டும் மகிழ்வார். 10 ஆனால் நீ உனது தேவனாகிய கர்த்தர் சொன்னபடி செய்ய வேண்டும். நீ அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும். இந்தப் போதனைகளின் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள விதிகளைப் பின்பற்ற வேண்டும். உனது தேவனாகிய கர்த்தருக்கு நீ உன் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் கீழ்ப்படிய வேண்டும். அப்போது உனக்கு இந்த நன்மைகள் ஏற்படும்.

ஜீவன் அல்லது மரணம்

11 “இன்று நான் உனக்கு கொடுக்கிற இந்த கட்டளைகள் கடினமானவை அல்ல, உங்களுக்குத் தூரமானதும் அல்ல. 12 ‘பரலோகத்துக்குச் சென்று, எங்களுக்காக அதனைக் கொண்டுவருவது யார்? அப்பொழுதுதான் எங்களால் அதைக் கேட்கவும் அதன்படி நடக்கவும் முடியும்’ என்று நீ சொல்லாதபடிக்கு அது பரலோகத்தில் உள்ளதும் அல்ல. 13 ‘கடல் கடந்துபோய் நாங்கள் கேட்கவும், செய்யவும் யார் கொண்டு வருவார்கள்?’ என்று நீ சொல்லாதபடிக்கு அது கடலுக்கு அக்கரையிலும் இல்லை. 14 இந்த வார்த்தை உனக்கு மிகவும் அருகில் இருக்கிறது. அது உன் வாயிலும், உன் இருதயத்திலும் இருக்கிறது. எனவே நீ அதற்குக் கீழ்ப்படிய முடியும்.

15 “இன்று நான் வாழ்வையும், மரணத்தையும், நன்மையையும், தீமையையும் உனக்கு முன்பாகத் தெரிந்துகொள்ளும்படியாகக் கொடுக்கிறேன். 16 உனது தேவனாகிய கர்த்தரை நேசிக்கும்படி இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். அவரைப் பின்பற்றும்படியும் அவரது சட்டங்களுக்கும், விதிகளுக்கும், கட்டளைகளுக்கும் கீழ்ப்படியுமாறு நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். பிறகு நீ வாழ்வாய், உனது ஜனம் பெரிதாக வளரும். உனக்குச் சொந்தமாக்கிக்கொள்ள நீ நுழைகின்ற இந்த நாட்டில் உன்னை, உனது தேவனாகிய கர்த்தர் ஆசீர்வதிப்பார். 17 ஆனால் கர்த்தரிடமிருந்து விலகி நீ அவருக்குச் செவிசாய்க்க மறுத்து நீ அவரை தொழுதுகொள்வதிலிருந்து விலகி பிற பொய்த் தெய்வங்களுக்கு சேவை செய்தால். 18 நீ அழிக்கப்படுவாய். நான் உன்னை எச்சரிக்கிறேன். நீ கர்த்தரிடமிருந்து விலகினால், உனக்குச் சொந்தமாக்கிக்கொள்ள நீ நுழைந்து கொண்டிருக்கிற யோர்தானைக் கடந்து போகிற நாட்டில் நீண்டகாலம் வாழமாட்டாய்.

19 “இன்று நான் உனக்கு முன்பாக இரண்டு வழிகளை வைத்தேன். உனது தேர்வுக்கு பரலோகத்தையும் பூமியையும் சாட்சியாக வைத்தேன். நீ வாழ்வு அல்லது மரணத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். நீ வாழ்வைத் தெரிந்தெடுத்தால் அது ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும். நீ மரணத்தைத் தெரிந்தெடுத்தால் அது உனக்கு சாபத்தைக் கொண்டுவரும். எனவே வாழ்வைத் தேர்ந்தெடு. பிறகு நீயும் உனது பிள்ளைகளும் வாழலாம். 20 நீ உனது தேவனாகிய கர்த்தரை நேசித்து அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும். அவரைவிட்டு விலகக்கூடாது. ஏனென்றால், கர்த்தரே உனது வாழ்வு. உனது முற் பிதாக்களான ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு ஆகியோருக்கு கர்த்தர் வாக்களித்த நாட்டில் நீண்ட காலம் வாழும்படி அவர் உன்னை ஆசீர்வதிப்பார்.”

லூக்கா 11:37-12:7

பரிசேயரை இயேசு விமர்சித்தல்(A)

37 இயேசு இவற்றையெல்லாம் கூறி முடித்த பின்பு, பரிசேயர்களில் ஒருவன் அவனோடு சாப்பிடுமாறு இயேசுவை அழைத்தான். எனவே இயேசு வந்து மேசையருகே அமர்ந்தார். 38 இயேசு உணவு உண்பதற்கு முன்னே கைகளைக் கழுவாது வந்து அமர்ந்ததைக் கண்ட பரிசேயன் வியப்படைந்தான். 39 இயேசு அவனை நோக்கி, “பரிசேயர்களாகிய நீங்கள் பாத்திரத்தையும், குவளையையும் வெளிப்புறத்தில் சுத்தமாகக் கழுவுகின்றீர்கள். ஆனால் உட்புறத்தில் பிறரை ஏமாற்றித் தீமை செய்யும் காரியங்களால் நிரம்பி இருக்கின்றீர்கள். 40 நீங்கள் மூடர்கள். வெளிப்புறத்தை உண்டாக்கியவரே (தேவனே) உள்புறத்தையும் உண்டாக்கி உள்ளார். 41 உங்கள் பாத்திரங்களிலும் குவளைகளிலும் இருப்பவற்றை தேவைப்படுகின்ற மக்களுக்குக் கொடுங்கள். அப்போது நீங்கள் முற்றிலும் சுத்தமானவர்களாக இருப்பீர்கள்.

42 “பரிசேயரே, உங்கள் நிலை மோசமானதாக இருக்கும். உங்களுக்குச் சொந்தமானவற்றில், உங்கள் தோட்டத்தின் சகல விளை பொருட்களில் புதினா, மரிக்கொழுந்து முதலானவற்றில்கூட பத்தில் ஒரு பாகத்தை தேவனுக்குக் கொடுக்கின்றீர்கள். ஆனால் பிறரிடம் நியாயமாக நடந்துகொள்வதையும் தேவனை நேசிப்பதையும் மறந்துவிடுகின்றீர்கள். இவற்றை நீங்கள் கண்டிப்பாகச் செய்தல் வேண்டும். கூடவே, பத்தில் ஒரு பாகம் கொடுப்பது போன்ற காரியங்களையும் தொடர்ந்து செய்து வருதல் வேண்டும்.

43 “பரிசேயரே, உங்கள் நிலை மோசமானதாக இருக்கும். ஜெப ஆலயங்களில் மிக முக்கியமான இடத்தில் வீற்றிருப்பதை நீங்கள் விரும்புகிறீர்கள். சந்தை இடங்களில் மக்கள் உங்களுக்கு மரியாதை செலுத்த வேண்டுமென விரும்புகிறீர்கள். 44 நீங்கள் மறைக்கப்பட்ட கல்லறைகளைப் போல் இருந்தால் அது உங்களுக்கு மோசமானதாக இருக்கும். அதை அறியாமல் மக்கள் அவற்றின் மீது நடந்து செல்வார்கள்” என்றார்.

யூத போதகர்களுக்குப் போதனை

45 வேதபாரகர்களில் ஒருவன் இயேசுவை நோக்கி, “போதகரே, பரிசேயரைக் குறித்து இக்காரியங்களை நீங்கள் சொல்லும்போது, எங்களையும் விமர்சிக்கிறீரே” என்றான்.

46 அவனுக்குப் பதிலாக இயேசு, “வேதபாரகரே, உங்கள் நிலைமை மோசமானதாக இருக்கும். மக்கள் கீழ்ப்படிய இயலாத வகையில் கடுமையான விதிகளை விதிக்கிறீர்கள். மற்ற மக்கள் அவ்விதிகளுக்குக் கட்டுப்படுமாறு அவர்களைக் கட்டாயப்படுத்துகின்றீர்கள். ஆனால் நீங்களோ அவ்விதிகளைப் பின்பற்றுவதற்கு முயன்றுகூடப் பார்ப்பதில்லை. 47 தீர்க்கதரிசிகளுக்கு நினைவுச்சின்னங்களைக் கட்டுவதால் உங்கள் நிலை மோசமானதாக இருக்கும். அதே தீர்க்கதரிசிகளை உங்கள் முன்னோர்கள் கொன்றார்களே. 48 உங்கள் முன்னோர் செய்ததை நீங்கள் ஏற்றுக்கொள்வதாக எல்லா மக்களிடமும் காட்டிக் கொள்கிறீர்கள். அவர்கள் தீர்க்கதரிசிகளைக் கொன்றார்கள், அவர்களுக்கு நீங்கள் நினைவுச் சின்னங்களை எழுப்புகின்றீர்கள்! 49 எனவே தேவனின் ஞானமானது, ‘நான் தீர்க்கதரிசிகளையும், சீஷர்களையும், அவர்களிடம் அனுப்புவேன். தீய மனிதரால் தீர்க்கதரிசிகளிலும் சீஷர்களிலும் சிலர் கொல்லப்படுவார்கள். வேறு சிலர் துன்புறுத்தப்படுவார்கள்’” என்று உரைத்தார்.

50 “உலகம் தோன்றிய காலம் தொடங்கி கொல்லப்பட்ட எல்லா தீர்க்கதரிசிகளின் மரணத்திற்காகவும், இன்று வாழும் மக்களாகிய நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள். 51 ஆபேலின் மரணத்திற்காக நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள். சகரியாவின் கொலைக்காக நீங்கள் தண்டனை பெறுவீர்கள். பலிபீடத்திற்கும் ஆலயத்திற்கும் நடுவில் சகரியா கொல்லப்பட்டான். அவர்கள் எல்லாருக்காகவும் இன்று வாழும் மக்களாகிய நீங்கள் தண்டனை பெறுவீர்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

52 “வேதபாரகரே, உங்களுக்குத் தீமை வரும். தேவனைப்பற்றி அறிவதற்குரிய திறவுகோலை ஒளித்து வைத்திருக்கிறீர்கள். நீங்களும் அறிந்துகொள்வதில்லை. பிறர் அறிந்துகொள்வதையும் தடைசெய்கிறீர்கள்” என்றார்.

53 இயேசு அங்கிருந்து கிளம்பும்போது, வேதபாரகர்களும் பரிசேயர்களும் அவரைத் தொல்லைப்படுத்த ஆரம்பித்தார்கள். பலவற்றைக் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு இயேசுவை வற்புறுத்தினார்கள். 54 இயேசு தவறாக ஏதேனும் சொல்ல நேர்ந்தால் அவரைப் பிடிக்கலாம் என வழிகாண முயன்றுகொண்டிருந்தார்கள்.

பரிசேயரைப் போல இராதீர்

12 பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றாகக் கூடி வந்தார்கள். ஒருவரை ஒருவர் மிதிக்கும் அளவுக்குத் திரளான மக்கள் குழுமினர். மக்களிடம் பேசும் முன்பு இயேசு தம் சீஷர்களை நோக்கி, “பரிசேயரின் புளிப்பைக் (தீய தொடர்பை) குறித்து எச்சரிக்கையாக இருங்கள். அவர்கள் வேஷதாரிகள். மறைக்கப்பட்ட அனைத்தும் வெளிப்படும். இரகசியங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்படும். இருளில் கூறுகின்ற செயல்கள் ஒளியில் தெரிவிக்கப்படும். இரகசியமாக அறையில் முணுமுணுக்கிற செய்திகள் வீட்டின் மேலிருந்து உரக்கத் தெரிவிக்கப்படும்” என்றார்.

தேவனுக்கு மட்டுமே அஞ்சுங்கள்(B)

பின்பு இயேசு மக்களை நோக்கி, “எனது நண்பர்களே! மக்களுக்கு அஞ்சாதீர்கள், என்று நான் உங்களுக்குச் சொல்கின்றேன். மக்கள் உங்கள் சரீரத்தை அழிக்கக்கூடும். ஆனால் அதற்கு மேல் உங்களுக்கு அவர்கள் வேறெதையும் செய்ய முடியாது. நீங்கள் யாருக்குப் பயப்படவேண்டுமோ அவரை நான் உங்களுக்குக் காட்டுகிறேன். உங்களைக் கொல்வதற்கும் நரகத்தில் தள்ளுவதற்கும் ஆற்றல் வாய்ந்தவருக்கு (தேவனுக்கு) நீங்கள் பயப்படவேண்டும். ஆம், நீங்கள் பயப்படவேண்டியவர், அவர் மட்டுமே.

“பறவைகளை விற்கும்போது ஐந்து சிறியவைகள் இரண்டு காசுக்கு மாத்திரமே விலை பெறும். ஆனால், தேவன் அவற்றில் எதையும் மறப்பதில்லை. இதற்கும் மேலாக உங்கள் தலையில் இருக்கும் முடியின் எண்ணிக்கையைக்கூட தேவன் அறிவார். பயப்படாதீர்கள். பல பறவைகளைக் காட்டிலும் உங்கள் தகுதி மிகுதியானது.

சங்கீதம் 78:1-31

ஆசாபின் ஒரு மஸ்கீல்

78 என் ஜனங்களே, என் போதனைகளுக்கு செவிக்கொடுங்கள்.
    நான் கூறுவனவற்றைக் கவனித்துக் கேளுங்கள்.
நான் உங்களுக்கு இந்தக் கதையைக் கூறுவேன்.
    நான் உங்களுக்கு இப்பழங்கதையைக் கூறுவேன்.
நாங்கள் இக்கதையைக் கேட்டோம், அதை நன்றாக அறிந்தோம்.
    எங்கள் தந்தையர் இக்கதையைக் கூறினார்கள்.
நாங்கள் இக்கதையை மறக்கவும்மாட்டோம்.
    இறுதி தலைமுறை வரைக்கும் எங்கள் ஜனங்கள் இக்கதையைச் சொல்லிக்கொண்டேயிருப்பார்கள்.
நாம் அனைவரும் கர்த்தரைத் துதிப்போம்.
    அவர் செய்த அற்புதமான காரியங்களைக் குறித்துச் சொல்வோம்.
கர்த்தர் யாக்கோபோடு ஒரு உடன்படிக்கையைச் செய்தார்.
    தேவன் இஸ்ரவேலருக்குச் சட்டத்தை (நீதிமுறையை) கொடுத்தார்.
நம் முற்பிதாக்களுக்கு தேவன் கட்டளைகளை அளித்தார்.
    தமது பின் சந்ததியினருக்கு அந்தச் சட்டங்களைப் போதிக்குமாறு அவர் நம் முற்பிதாக்களுக்குக் கூறினார்.
புது குழந்தைகள் பிறப்பார்கள், அவர்கள் இனைஞராக வளருவார்கள்.
    அவர்கள் அக்கதைகளைத் தங்கள் குழந்தைகளுக்குச் சொல்வார்கள்.
    இவ்வகையில் கடைசி தலைமுறையினர் வரைக்கும் எல்லோரும் சட்டத்தை அறிந்திருப்பார்கள்.
எனவே அந்த ஜனங்கள் எல்லோரும் தேவனை நம்புவார்கள்.
    தேவன் செய்தவற்றை அவர்கள் மறக்கமாட்டார்கள்.
    அவர்கள் கவனமாக அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவார்கள்.
தங்கள் தேவனுடைய கட்டளைகளை ஜனங்கள் அவர்கள் குழந்தைகளுக்குச் சொல்வார்களானால், அந்தக் குழந்தைகள் அவர்களின் முற்பிதாக்களைப்போல் இருக்கமாட்டார்கள்.
    அவர்கள் முற்பிதாக்கள் தேவனுக்கு எதிராகத் திரும்பினார்கள்.
அவர்கள் அவருக்குக் கீழ்ப்படிய மறுத்தார்கள்.
    அந்த ஜனங்கள் பிடிவாதமாக இருந்தார்கள்.
    அவர்கள் தேவ ஆவியானவருக்கு உண்மையாக இருக்கவில்லை.

எப்பிராயீமின் மனிதர்கள் ஆயுதங்களைத் தாங்கியிருந்தார்கள்,
    ஆனால் அவர்கள் யுத்தத்திலிருந்து ஓடிப்போனார்கள்.
10 அவர்கள் தேவனோடு செய்த உடன்படிக்கையைப் பின்பற்றவில்லை.
    அவரது போதனைகளுக்குக் கீழ்ப்படிய அவர்கள் மறுத்தார்கள்.
11 தேவன் செய்த பெரிய காரியங்களை எப்பிராயீமின் மனிதர்கள் மறந்துவிட்டார்கள்.
    அவர் காட்டிய அற்புதமான காரியங்களை அவர்கள் மறந்துப்போனார்கள்.
12 எகிப்தின் சோவானில் தேவன்
    அவர்களின் தந்தையருக்குத் தனது மிகுந்த வல்லமையை வெளிப்படுத்தினார்.
13 தேவன் செங்கடலைப் பிளந்து ஜனங்களை அதனூடே நடத்திச்சென்றார்.
    இருபுறங்களிலும் தண்ணீரானது உறுதியான சுவராய் எழுந்து நின்றது.
14 ஒரு உயர்ந்த மேகத்தினால் தேவன் அவர்களை ஒவ்வொரு பகலிலும் வழிநடத்தினர்.
    ஒவ்வோர் இரவும் ஒரு நெருப்புத் தூணின் ஒளியினால் தேவன் அவர்களை வழிநடத்தினர்.
15 பாலைவனத்தின் பாறையை தேவன் பிளந்தார்.
    நிலத்தின் ஆழத்திலிருந்து அவர் அந்த ஜனங்களுக்கு தண்ணீரைக் கொடுத்தார்.
16 கன்மலையிலிருந்து
    ஆறாகப் பெருக்கெடுக்கும் தண்ணீரை தேவன் வரவழைத்தார்!
17 ஆனால் ஜனங்கள் தேவனுக்கெதிராகத் தொடர்ந்து பாவம் செய்தனர்.
    பாலைவனத்திலும் அவர்கள் மிக உன்னதமான தேவனுக்கெதிராகத் திரும்பினார்கள்.
18 பின் அந்த ஜனங்கள் தேவனை சோதிக்க விரும்பினார்கள்.
    தங்கள் இச்சையை நிறைவேற்றிக் கொள்வதற்காக அவர்கள் தேவனிடம் உணவைக் கேட்டார்கள்.
19 அவர்கள் தேவனைக்குறித்து முறையிட்டு,
    “பாலைவனத்தில் தேவன் நமக்கு உணவைக் கொடுக்கக்கூடுமா?
20 தேவன் பாறையை அடித்தார், பெருவெள்ளம் வெளிப்பட்டது.
    நிச்சயமாக, அவர் நமக்கு ரொட்டியும் (அப்பமும்) இறைச்சியும் கொடுக்க முடியும்” என்றார்கள்.
21 அந்த ஜனங்கள் கூறியவற்றை கர்த்தர் கேட்டார்.
    யாக்கோபிடம் தேவன் கோபமடைந்தார்.
    தேவன் இஸ்ரவேலிடம் கோபமடைந்தார்.
22 ஏனெனில் ஜனங்கள் அவரை நம்பவில்லை.
    தேவன் அவர்களைக் காக்கக்கூடுமென அவர்கள் நம்பவில்லை.
23-24 ஆனால் தேவன் மேலேயுள்ள மேகங்களைத் திறந்தார்.
    உணவுக்கான மன்னா அவர்கள் மீது பொழிந்தது.
வானில் கதவுகள் திறக்கப்பட்டு வானிலுள்ள கிடங்கிலிருந்து
    தானியங்கள் கீழே கொட்டினாற்போல காட்சி தந்தது.
25 தேவதூதர்களின் உணவை ஜனங்கள் உண்டார்கள்.
    அவர்கள் திருப்தியடையும்வரை தேவன் மிகுதியான உணவை அனுப்பினார்.
26-27 தேவன் கிழக்கிலிருந்து ஒரு பெருங்காற்று வீசுமாறு செய்தார்.
    காடைகள் மழையைப்போன்று அவர்கள் மீது வீழ்ந்தன.
தேமானிலிருந்து தேவன் காற்றை வீசச்செய்தார்.
    பறவைகள் மிகுதியாக இருந்தமையால் நீல வானம் இருண்டது.
28 பாளையத்தின் நடுவே
    கூடாரங்களைச் சுற்றிலும் அப்பறவைகள் வீழ்ந்தன.
29 அவர்களுக்கு உண்பதற்கு மிகுதியான உணவு இருந்தது.
    ஆனால் தங்களின் பசியால் தாங்களே பாவம் செய்யும்படி தங்களை அவர்கள் ஆட்படுத்திக்கொண்டார்கள்.
30 அவர்கள் தங்கள் பசியை அடக்கிக்கொள்ளவில்லை.
    எனவே அவர்கள் பறவைகளின் இரத்தம் வடிந்து போகும்வரை காத்திராது அக்காடைகளை உண்டார்கள்.
31 தேவன் அந்த ஜனங்களிடம் மிகவும் கோபங்கொண்டார்.
    அவர்களில் பலரைக் கொன்றுபோட்டார்.
    பல ஆரோக்கியமான இளைஞர்கள் இறக்கும்படி செய்தார்.

நீதிமொழிகள் 12:19-20

19 ஒருவன் பொய் சொன்னால் அவ்வார்த்தைகள் வீணாகிப்போகும். ஆனால் உண்மை என்றென்றைக்கும் வாழும்.

20 தீயவர்கள் எப்பொழுதும் துன்பம் செய்யவே எண்ணுவார்கள். ஆனால் சமாதானத்திற்காக வேலைசெய்பவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center