The Daily Audio Bible
Today's audio is from the CSB. Switch to the CSB to read along with the audio.
சில வீரர்களின் போர்த் திறமை
18 ரூபனின் ஜனங்களிலும், காத்தியரிலும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தினரிலும் 44,760 பேர் போர் செய்வதற்குத் தயாராக இருந்தனர். அவர்கள் போரில் திறமை உடையவர்கள். அவர்கள் கேடயங்களையும் வாட்களையும் தாங்கினார்கள். வில்லிலும் அம்புகளிலும் வல்லவர்களாக இருந்தனர். 19 அவர்கள் ஆகாரிய ஜனங்களுக்கு எதிராகச் சண்டையைத் தொடங்கினார்கள். பின் யெத்தூர் நோதாப் நாப்பீஸ் ஆகியோர்களோடும் சண்டை செய்தனர். 20 மனாசே, ரூபன், காத் ஆகியக் கோத்திரங்களின் ஜனங்கள் போரில் தேவனிடம் ஜெபித்தனர். அவர்கள் தேவனை நம்பியதால் வெற்றிக்கு உதவும்படி ஜெபித்தனர். எனவே, தேவன் உதவினார். அவர்கள் ஆகாரியர்களை வெல்லுவதற்கு தேவன் அனுமதித்தார். ஆகாரியர்களோடு சேர்ந்த மற்ற எதிரிகளையும் அவர்கள் தோற்கடித்தனர். 21 அவர்கள் ஆகாரியர்கள் உரிமையுடைய மிருகங்களைக் கவர்ந்துக்கொண்டனர். 50,000 ஒட்டகங்களையும், 2,50,000 ஆடுகளையும், 2,000 கழுதைகளையும், 1,00,000 ஜனங்களையும் கவர்ந்துகொண்டனர். 22 ஏராளமான ஆகாரியர்கள் கொல்லப்பட்டனர். ஏனென்றால் தேவன் ரூபனின் ஜனங்கள் போரில் வெல்லும்படி உதவினார். பிறகு மனாசே, ரூபன், காத் ஆகிய கோத்திரங்கள் ஆகாரியரின் நிலங்களில் வசித்தனர். அவர்கள் அங்கே பாபிலோனின் படைகள் வந்து சிறைபிடித்து போகும்வரை வாழ்ந்தனர்.
23 மனாசே கோத்திரத்தினரில் பாதி ஜனங்கள் பாசான் பகுதி தொடங்கி பாகால் எர்மோன், செனீர், எர்மோன் மலைவரை பரவியிருந்தனர். இவர்கள் மிகப் பெருங்கூட்டமாகப் பெருகி இருந்தனர்.
24 இவர்கள் மனாசேயின் பாதி கோத்திரங்களின் ஜனங்களுக்குத் தலைவர்கள். இவர்கள் ஏப்பேர், இஷி, ஏலியேல், அஸ்ரியேல், எரேமியா, ஒதாவியா, யாதியேல் ஆகியோராவர். அவர்கள் வலிமையும், தைரியமும் கொண்டவர்களாய் இருந்தனர். அவர்கள் புகழ்பெற்றவர்களாயிருந்தனர். அவர்கள் தமது குடும்பத் தலைவர்களாகவும் இருந்தனர். 25 ஆனால் அத்தலைவர்கள் தமது முற்பிதாக்கள் தொழுதுவந்த தேவனுக்கு எதிராகப் பாவம் செய்தனர். அவர்கள் அங்கு வாழ்ந்த தேவனால் அழிக்கப்பட ஜனங்கள் தொழுதுகொண்ட பொய் தெய்வங்களை தொழுதுவந்தனர்.
26 இஸ்ரவேலரின் தேவன் பூலைப் போருக்குப் போகும்படி செய்தார். பூல் அசீரியாவின் ராஜா, அவனது இன்னொரு பெயர் தில்காத் பில்நேசர். இவன் மனாசே, ரூபன், காத் ஆகிய கோத்திரங்களோடு சண்டையிட்டான். அவர்களை வீட்டிலிருந்து வெளியேறி கைதிகளாகும்படி பலவந்தப்படுத்தினான். பூல் அவர்களைப் பிடித்து ஆலா, ஆபோர், ஆரா, கோசான் ஆற்றங்கரை போன்ற இடங்களுக்குக் கொண்டு போனான். அந்த கோத்திரத்தினர் அவ்விடங்களில் அன்று முதல் இந்நாள்வரை வாழ்ந்து வருகின்றனர்.
லேவியின் சந்ததியார்
6 கெர்சோன், கோகாத், மெராரி ஆகியோர் லேவியின் குமாரர்கள்.
2 அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் ஆகியோர் கோகாத்தின் குமாரர்கள்,
3 அம்ராம், மோசே, மிரியாம் ஆகியோர் அம்ராமின் குமாரர்கள்.
நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் ஆகியோர் அம்ராமின் பிள்ளைகள் 4 எலெயாசார் பினெகாசின் தந்தை, பினெகாஸ் அபிசுவாவின் தந்தை. 5 அபிசுவா புக்கியின் தந்தை, புக்கி ஊசியின் தந்தை. 6 ஊசி செராகியாவின் தந்தை, செராகியா மெராயோதின் தந்தை. 7 மெராயோத் அமரியாவின் தந்தை, அமரியா அகிதூபின் தந்தை. 8 அகிதூப் சாதோக்கின் தந்தை, சாதோக் அகிமாசின் தந்தை. 9 அகிமாஸ் அசரியாவின் தந்தை, அசரியா யோகானானின் தந்தை. 10 யோகானான் அசரியாவின் தந்தை. (இவன்தான் சாலொமோன் எருசலேமில் ஆலயத்தைக் கட்டியபோது ஆசாரிய பணியைச் செய்தவன்.) 11 அசரியா அமரியாவின் தந்தை, அமரியா அகிதூபின் தந்தை. 12 அகிதூப் சாதோக்கின் தந்தை, சாதோக் சல்லூமின் தந்தை. 13 சல்லூம் இல்க்கியாவின் தந்தை, இல்க்கியா அசரியாவின் தந்தை. 14 அசரியா செராயாவின் தந்தை, செராயா யோசதாக்கின் தந்தை.
15 யூதர்களையும், எருசலேம் ஜனங்களையும் கர்த்தர் வெளியேற்றியபோது யோசதாக்கினையும் கட்டாயமாக வெளியேற்றினார். இவர்கள் இன்னொரு நாட்டில் அடிமைகளானார்கள். நேபுகாத்நேசரைப் பயன்படுத்தி கர்த்தர் இவர்களைச் சிறை பிடித்தார்.
லேவியின் மற்ற சந்ததியினர்
16 கெர்சோம், கோகாத், மெராரி ஆகியோர் லேவியின் குமாரர்கள்.
17 லிப்னி, சிமேயி ஆகியோர் கெர்சோமின் குமாரர்கள்.
18 கோகாத்தின் குமாரர்கள் அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் ஆகியோர்.
19 மெராரியின் குமாரர்கள் மகேலி, மூசி ஆகியோர். இதுதான் லேவியின் கோத்திரத்தில் உள்ள குடும்பங்களின் விபரமாகும். அவர்கள் தம் தந்தை பெயர்களோடு சேர்க்கப்பட்டனர்.
20 இது கெர்சோமின் சந்ததியினரின் விபரம்: கெர்சோமின் குமாரன் லிப்னி, லிப்னியின் குமாரன் யாகாத், யாகாத்தின் குமாரன் சிம்மா. 21 சிம்மாவின் குமாரன் யோவா, யோவாவின் குமாரன் இத்தோ, இத்தோவின் குமாரன் சேரா, சேராவின் குமாரன் யாத்திராயி.
22 இது கோகாத்தின் சந்ததியினரின் விபரம்: கோகாத்தின் குமாரன் அம்மினதாப், அம்மினதாபின் குமாரன் கோராகு, கோராகுவின் குமாரன் ஆசீர். 23 ஆசீரின் குமாரன் எல்க்கானா, எல்க்கானாவின் குமாரன் அபியாசாப், அபியாசாப்பின் குமாரன் ஆசிர். 24 ஆசிரின் குமாரன் தாகாத், தாகாத்தின் குமாரன் ஊரியேல், ஊரியேலின் குமாரன் ஊசியா, ஊசியாவின் குமாரன் சவுல்.
25 அமாசாயியும், ஆகிமோத்தும் எல்க்கானாவின் குமாரர்கள். 26 எல்க்கானாவின் இன்னொரு குமாரன் சோபாய், சோபாயின் குமாரன் நாகாத். 27 நாகாத்தின் குமாரன் எலியாப், எலியாப்பின் குமாரன் எரோகாம், எரோகாமின் குமாரன் எல்க்கானா. 28 சாமுவேலின் மூத்த குமாரன் யோவேல், இரண்டாவது குமாரன் அபியா.
29 இவர்கள் மெராரியின் பிள்ளைகள், மெராரியின் குமாரர்களில் ஒருவன் மகேலி. மகேலியின் குமாரன் லிப்னி, லிப்னியின் குமாரன் சிமேயி, சிமேயியின் குமாரன் ஊசா. 30 ஊசாவின் குமாரன் சிமெயா, சிமெயாவின் குமாரன் அகியா, அகியாவின் குமாரன் அசாயா.
ஆலயத்தின் இசைக் கலைஞர்கள்
31 கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை கூடாரத்திற்குள் வைத்தபோது, அதைப் பாதுகாக்கவென தாவீதால் இசை சேவை செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பெயர்கள் பின்வருமாறு. 32 இவர்கள் பரிசுத்தக் கூடாரத்தில் பாடி சேவை செய்தனர். இப்பரிசுத்தக் கூடாரம் ஆசரிப்புக் கூடாரமென்றும் அழைக்கப்பட்டது. எருசலேமில் சாலோமோன் கர்த்தருடைய ஆலயத்தை கட்டும்வரை இவர்கள் சேவை செய்தனர். இவர்களது வேலைக்கான சட்டங்களைப் பின்பற்றி சேவை செய்து வந்தனர்.
33 கீழ்க்கண்ட பெயர்கள் இசை மூலம் சேவை செய்த ஆண்கள் மற்றும் அவர்களது குமாரர்களுக்குடையவை:
கோகாத் குடும்பத்தின் சந்ததியினர்: ஏமான் என்பவன் ஒரு பாடகன். இவன் யோவேலின் குமாரன், யோவேல் சாமுவேலின் குமாரன். 34 சாமுவேல் எல்க்கானாவின் குமாரன், எல்க்கானா யெரொகாமின் குமாரன், யெரொகாம் எலியேலின் குமாரன், எலியேல் தோவாகின் குமாரன். 35 தோவாக் சூப்பின் குமாரன், சூப் இல்க்கானாவின் குமாரன், இல்க்கானா மாகாத்தின் குமாரன், மாகாத் அமாசாயின் குமாரன், 36 அமாசாய் எல்க்கானாவின் குமாரன், எல்க்கானா யோவேலின் குமாரன், யோவேல் அசரியாவின் குமாரன், அசரியா செப்பனியாவின் குமாரன். 37 செப்பனியா தாகாதின் குமாரன், தாகாத் ஆசீரின் குமாரன், ஆசீர் எபியாசாப்பின் குமாரன், எபியாசாப் கோராகின் குமாரன், 38 கோராக் இத்சாரின் குமாரன், இத்சார் கோகாத்தின் குமாரன், கோகாத் லேவியின் குமாரன், லேவி இஸ்ரவேலின் குமாரன்.
39 ஏமானின் உறவினன் ஆசாப். இவன் ஏமானின் வலதுபுறத்தில் பணிசெய்வான். ஆசாப் பெரகியாவின் குமாரன், பெரகியா சிமேயாவின் குமாரன். 40 சிமேயா மிகாவேலின் குமாரன், மிகாவேல் பாசெயாவின் குமாரன், பாசெயா மல்கியாவின் குமாரன். 41 மல்கியா எத்னியின் குமாரன், எத்னி சேராவின் குமாரன், சேரா அதாயாவின் குமாரன். 42 அதாயா ஏத்தானின் குமாரன், ஏத்தான் சிம்மாவின் குமாரன், சிம்மா சீமேயின் குமாரன். 43 சீமேயி யாகாதின் குமாரன், யாகாத் கெர்சோமின் குமாரன், கெர்சோம் லேவியின் குமாரன்.
44 இவர்களுடைய சகோதரர்கள் மெராரியின் சந்ததியினர். இவர்கள் ஏமானின் இடது பக்கத்தில் நின்று பாடினார்கள். ஏதான் கிஷியின் குமாரன். கிஷி அப்தியின் குமாரன், அப்தி மல்லூகின் குமாரன். 45 மல்லூக் அஸபியாவின் குமாரன், அஸபியா அமத்சியாவின் குமாரன், அமத்சியா இல்க்கியாவின் குமாரன். 46 இல்க்கியா அம்சியின் குமாரன், அம்சி பானியின் குமாரன், பானி சாமேரின் குமாரன். 47 சாமேர் மகேலியின் குமாரன், மகேலி மூசியின் குமாரன், மூசி மெராரியின் குமாரன், மெராரி லேவியின் குமாரன்.
48 ஏமானும் ஆசாப்பின் சகோதரர்களும் லேவியின் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். லேவியின் கோத்திரத்தில் வந்தவர்கள் லேவியர்கள் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் பரிசுத்தக் கூடாரத்தில் சேவைசெய்ய தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இப்பரிசுத்தக் கூடாரமே தேவனுடைய ஆலயம். 49 ஆனால் ஆரோனின் சந்ததியினர் மட்டுமே நறு மணப் பொருட்களை தகனபலிக்காக பலிபீடத்தில் எரிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனை ஆரோனின் சந்ததியினர் தேவனுடைய ஆலயத்திலுள்ள மகா பரிசுத்தமான இடத்தில் செய்துவந்தனர். அவர்கள் இஸ்ரவேலரைச் சுத்தமாக்கும் சடங்குகளையும் செய்துவந்தனர். மோசே கட்டளையிட்ட சட்டங்களையும், அவர்கள் பின்பற்றி வந்தனர். மோசே தேவனுடைய ஊழியன்.
ஆரோனின் சந்ததியினர்
50 கீழ்க்கண்டவர்கள் ஆரோனின் குமாரர்கள்: ஆரோனின் குமாரன் எலெயாசார், எலெயாசாரின் குமாரன் பினெகாஸ், பினெகாஸின் குமாரன் அபிசுவா. 51 அபிசுவாவின் குமாரன் புக்கி, புக்கியின் குமாரன் ஊசி, ஊசியின் குமாரன் செராகியா. 52 செராகியாவின் குமாரன் மெராயோத், மெராயோத்தின் குமாரன் அமரியா, அமரியாவின் குமாரன் அகித்தூப். 53 அகித்தூப்பின் குமாரன் சாதோக், சாதோக்கின் குமாரன் அகிமாஸ்.
லேவியர் குடும்பங்களுக்கான வீடுகள்
54 ஆரோனின் சந்ததியினர் வாழ்ந்த இடங்கள் பின் வருவன: இவர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலங்களில் அமைக்கப்பட்ட முகாம்களில் வாழ்ந்தார்கள். கோகாத் குடும்பத்தினர் லேவியர்களுக்குக் கொடுக்கப்பட்ட முதல் பங்கைப்பெற்றனர். 55 அவர்களுக்கு எப்ரோன் நகரமும் அதைச் சுற்றியுள்ள வயல்வெளிகளும் கொடுக்கப்பட்டன. இவ்விடங்கள் யூதாவின் ஒரு பகுதியாக உள்ளது. 56 ஆனால் அந்நகரத்தின் வயல்களையும் கிராமங்களையும் எப்புன்னேயின் குமாரனாகிய காலேபுக்குக் கொடுத்தார்கள். 57 ஆரோனின் சந்ததியினருக்கு எப்ரோன் எனும் நகரம் கொடுக்கப்பட்டது. இது அடைக்கலம் தேடுபவர்களுக்கான நகரமாக[a] விளங்கியது. அதோடு அவர்களுக்கு லிப்னா, யாத்தீர், எஸ்தெ மோவா, 58 ஈலேன், தெபீர், 59 ஆசான், பெத்சேமே சஸ், ஆகிய நகரங்களையும் அதைச் சுற்றியுள்ள வெளி நிலங்களையும் கொடுத்தனர். 60 பென்யமீன் கோத்திரத்தினர் கேபா, அலெமேத், ஆனதோத், ஆகிய நகரங்களையும் அதன் வெளிநிலங்களையும் பெற்றனர்.
கோகாத் கோத்திரத்தினருக்கு 13 நகரங்கள் கொடுக்கப்பட்டன.
61 மற்ற கோகாத்தின் சந்ததியினர் 10 நகரங்களைப் பெற்றனர். இவை மனாசே கோத்திரத்தின் பாதி பேர்களிடம் இருந்து பெறப்பட்டன.
62 கெர்சோமின் கோத்திரத்தினர் 13 நகரங்களைப் பெற்றனர். அவர்கள் அவற்றை, இசக்கார், ஆசேர், நப்தலி, பாசானில் உள்ள மனாசேயின் ஒரு பகுதி, கோத்திரத்தினரிடமிருந்தும் பெற்றுக்கொண்டனர்.
63 மெராரி கோத்திரத்தினர் 12 நகரங்களைப் பெற்றனர். அவர்கள் அவற்றை ரூபன், காத், செபுலோன் ஆகிய கோத்திரங்களில் இருந்து பெற்றுக்கொண்டனர். அவர்கள் அவற்றைச் சீட்டுக் குலுக்கல் முறையில் பெற்றுக்கொண்டனர்.
64 எனவே, இஸ்ரவேல் ஜனங்கள் அந்த நகரங்களையும் வயல்களையும் லேவியர்களுக்குக் கொடுத்தனர். 65 அந்நகரங்கள் எல்லாம் யூதா, சிமியோன், பென்யமீன் ஆகியோர்களிடமிருந்து வந்தன. அவர்கள் இதனைச் சீட்டு குலுக்கல் மூலமே தீர்மானம் செய்தனர்.
66 சில நகரங்களை எப்பிராயீம் கோத்திரத்தினர் கோகாத் ஜனங்களுக்குக் கொடுத்தனர். அந்நகரங்கள் சீட்டு குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டன. 67 அவர்களுக்குச் சீகேம் எனும் நகரமும் கொடுக்கப்பட்டது. இது பாதுகாப்பான நகரம். அவர்களுக்கு கேசேரும் அதைச் சுற்றிய வெளிநிலங்களும் கொடுக்கப்பட்டன. 68 அதோடு யோக்மேயாம், பேத் ஓரோன். 69 ஆயலோன், காத்ரிம்மோன் ஆகிய நகரங்களையும் வெளிநிலங்களையும் பெற்றனர். அந்நகரங்கள் எப்பிராயீம் மலைநாட்டிற்குள் இருந்தன. 70 மனாசே கோத்திரத்தினரின் பாதி குடும்பங்களுடைய ஆனேர் மற்றும் பீலியாம் நகரங்களை இஸ்ரவேல் ஜனங்கள் கோகாத் கோத்திரத்தினருக்கு கொடுத்தனர். அந்நகரங்களைச் சுற்றியுள்ள வெளிநிலங்களையும் கோகாத் கோத்திரத்தினர் பெற்றனர்.
மற்ற லேவிய குடும்பத்தினர் வீடுகள் பெற்றது
71 கெர்சோம் குடும்பங்கள் மனாசே கோத்திரத்தின் பாதி குடும்பங்களிடமிருந்து பாசான் மற்றும் அஸ்தரோத் ஆகிய பகுதிகளிலிருந்த கோலானின் நகரங்களைப் பெற்றன. இந்நகரங்களின் சுற்று வட்டாரத்தில் உள்ள நிலங்களையும் அவர்கள் பெற்றார்கள்.
72-73 கெர்சோம் கோத்திரத்தினர் கேதேஸ், தாபிராத், ராமோத், ஆனேம் ஆகிய நகரங்களையும் அவற்றின் சுற்றுப்புறத்தில் உள்ள நிலங்களையும் பெற்றனர். இவை இசக்கார் கோத்திரத்தினருக்குரியவை.
74-75 கெர்சோம் கோத்திரத்தினர் மாஷால், அப்தோன், உக்கோக், ரேகோப் ஆகிய நகரங்களையும் அவற்றின் சுற்றுப்புறத்தில் உள்ள நிலங்களையும் பெற்றுக்கொண்டனர். இவை ஆசேர் கோத்திரத்தைச் சேர்ந்தது.
76 கெர்சோம் கோத்திரத்தினர் கலிலேயாவிலுள்ள கேதேஸ், அம்மோன், கீரியாத்தாயீம் ஆகிய நகரங்களையும், அவற்றின் சுற்றிலுமுள்ள நிலங்களையும் பெற்றுக்கொண்டனர். இவை நப்தலி கோத்திரத்தினருக்கு உரியவை.
77 மெராரியின் மற்ற ஜனங்களுக்கு ரிம்மோன், தாபோர் ஆகிய நகரங்களையும் அவற்றின் சுற்றுப்புற நிலங்களையும் பெற்றனர். இவை செபுலோன் கோத்திரத்தினருக்குரியவை.
78-79 மெராரி கோத்திரத்தினர் மேலும் வனாந்திரத்திலிருந்த பேசேர் யாத்சா, கேதேமோத், மேப்பாத் ஆகிய நகரங்களையும், அவற்றைச் சுற்றியுள்ள நிலங்களையும் பெற்றனர். இவை ரூபன் கோத்திரத்தினருக்குரியவை. ரூபன் கோத்திரத்தினர், எரிகோவுக்கப் புறமுள்ள யோர்தான் ஆற்றுக்குக் கிழக்கே வாழ்ந்தனர்.
80-81 மெராரி கோத்திரத்தினர் மேலும் கீலேயாத்திலுள்ள ராமோத், மக்னாயீம், எஸ்போன், யாசேர் ஆகிய நகரங்களையும், அவற்றைச் சுற்றியும் உள்ள நிலங்களையும் பெற்றனர். இவை காத் கோத்திரத்தினருக்குரியவை.
அகிரிப்பா மன்னன் முன் பவுல்
26 அகிரிப்பா பவுலை நோக்கி, “இப்போது உன்னைப்பற்றி நீயே பேசலாம்” என்றான். பின் பவுல் தனது கையை உயர்த்தித் தனக்கு சார்பாகப் பேசத் துவங்கினான். 2 அவன், “அகிரிப்பா மன்னரே, யூதர்கள் எனக்கு எதிராகச் சொன்ன எல்லா வழக்குகளுக்கும் நான் பதில் கூறுவேன். நான் இன்று உங்கள் முன்பாக நின்று இதைச் செய்வதை ஓர் ஆசீர்வாதமாகக் கருதுகிறேன். 3 நீங்கள் எல்லா யூத வழக்கங்களையும் யூதர்கள் வாதிடுகிற காரியங்களையும் மிகுதியாக அறிந்திருப்பதால் நான் உங்களோடு பேசுவதில் மகிழ்ச்சி கொள்ளுகிறேன். தயவு செய்து நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள்.
4 “எனது முழு வாழ்க்கையைக் குறித்து எல்லா யூதர்களும் அறிந்திருக்கிறார்கள். முதலில் எனது சொந்த நாட்டில் நான் வாழ்ந்த வகையையும், பின்னர் எருசலேமில் வாழ்ந்த வகையையும் பற்றி அவர்கள் அறிந்திருக்கிறார்கள். 5 இந்த யூதர்களுக்கு என்னைப் பல காலமாகத் தெரியும். அவர்கள் விரும்பினால் நான் ஒரு நல்ல பரிசேயன் என்று உங்களுக்குக் கூற முடியும். யூத மக்களில் பிற எல்லா பிரிவினரைக் காட்டிலும் பரிசேயர்கள் யூத மதவிதிகளைக் கவனமாகப் பின்பற்றுகிறார்கள். 6 தேவன் நமது முன்னோருக்குக் கொடுத்த வாக்குறுதியை நான் நம்புவதால் இப்போது நான் விசாரணையிலிருக்கிறேன். 7 நமது மக்களில் பன்னிரண்டு குலத்தினரும் பெறவேண்டுமென நம்பும் வாக்குறுதி இதுவே. இந்நம்பிக்கைக்காக யூதர்கள் தேவனுக்கு இரவும் பகலும் சேவை புரிகின்றனர். எனது மன்னரே, நான் இந்த வாக்குறுதியிலே நம்பிக்கை வைத்திருப்பதால் யூதர்கள் என் மீது பழி சுமத்துகின்றனர்! 8 தேவன் மரணத்தினின்று மக்களை எழுப்ப முடியுமென்பது நம்ப இயலாதது என ஏன் மக்கள் எண்ணுகின்றனர்?
9 “நான் பரிசேயனாக இருந்தபோது, நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவின் பெயருக்கு எதிராகப் பல காரியங்களைச் செய்ய எண்ணினேன். 10 எருசலேமில் விசுவாசிகளுக்கு[a] எதிராகப் பல காரியங்களைச் செய்தேன். விசுவாசிகளில் பலரைச் சிறையிலிடும் அதிகாரத்தைத் தலைமை ஆசாரியர் எனக்குக் கொடுத்திருந்தனர். இயேசுவின் சீஷர்கள் கொல்லப்பட்டபோது, அது ஒரு நல்ல செய்கை என்று நான் ஒப்புக்கொண்டேன். 11 ஒவ்வொரு யூத ஜெப ஆலயத்திலும் நான் அவர்களைத் தண்டித்தேன். இயேசுவுக்கு எதிராக அவர்கள் தகாதவற்றைப் பேசச் செய்வதற்கு முயற்சித்தேன். அம்மக்களிடம் நான் கொண்ட அதிக சினத்தால் அவர்களைக் கண்டு பிடித்துத் துன்புறுத்துவதற்காக வேறு நகரங்களுக்கு சென்றேன்.
இயேசுவைப் பற்றி பவுலின் சாட்சி
12 “ஒரு முறை தலைமை ஆசாரியர் தமஸ்கு நகரத்திற்குப் போகும் அதிகாரத்தையும் அனுமதியையும் கொடுத்தார்கள். 13 நான் தமஸ்குவுக்குப் போய்க்கொண்டிருந்தேன். அது நண்பகல் பொழுது. நான் வானத்திலிருந்து ஓர் ஒளியைப் பார்த்தேன். சூரியனைக் காட்டிலும் அதிகமாக அவ்வொளி பிரகாசித்தது. அந்த ஒளி என்னையும் என்னோடு பயணம் செய்த மனிதர்களைச் சுற்றியும் பிரகாசித்தது. 14 நாங்கள் எல்லோரும் நிலத்தில் வீழ்ந்தோம். அப்போது யூத மொழியில் ஒரு குரல் என்னோடு பேசுவதைக் கேட்டேன். அக்குரல் ‘சவுலே, சவுலே, ஏன் இக்கொடுமைகளை எனக்கு எதிராகச் செய்கிறாய்? நீ என்னை எதிர்ப்பதன் மூலம் உன்னை நீயே துன்புறுத்திக்கொண்டிருக்கிறாய்’ என்றது.
15 “நான், ‘ஆண்டவரே, நீங்கள் யார்’ என்றேன். ஆண்டவர், ‘நான் இயேசு. நீ துன்பப்படுத்துகிறவர் நானே. 16 எழுந்திரு. நான் உன்னை எனது ஊழியனாகத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். நீ எனக்குச் சாட்சியாக இருப்பாய். இன்று பார்த்த என்னைப் பற்றிய செய்திகளையும், உனக்கு நான் காட்டப்போகிற விஷயங்களையும் நீ மக்களுக்குக் கூறுவாய். 17 நான் உனது சொந்த மக்கள் உன்னைத் துன்புறுத்துவதற்கு அனுமதிக்கமாட்டேன். யூதரல்லாத மக்களிடமிருந்தும் நான் உன்னைப் பாதுகாப்பேன். நான் உன்னை இம்மக்களிடம் அனுப்புகிறேன். 18 உண்மையை இம்மக்களுக்கு நீ காட்டுவாய். அதனால் மக்கள் இருளிலிருந்து ஒளிக்குத் திரும்புவார்கள். சாத்தானின் அதிகாரத்திலிருந்து தேவனிடம் திரும்புவார்கள். மேலும் அவர்களது பாவங்கள் மன்னிக்கப்படும். என்னை நம்புவதால் பரிசுத்தமாக்கப்பட்ட மனிதரோடு அவர்களும் பங்குபெற முடியும்’ என்றார்” என்று கூறினான்.
தன் ஊழியம் பற்றி பவுல்
19 பவுல் தொடர்ந்து பேசினான். “அகிரிப்பா மன்னரே, பரலோகத்திலிருந்து இக்காட்சி வந்தபோது, நான் அதற்குக் கீழ்ப்படிந்தேன். 20 மக்கள் அவர்களது இருதயங்களையும் வாழ்க்கைகளையும் மாற்றிக்கொண்டு, தேவனிடம் திரும்ப வேண்டுமென்று அவர்களுக்குக் கூற ஆரம்பித்தேன். அவர்கள் மனம் மாறினார்கள் என்பதை வெளிக்காட்டும்படியான செயல்களைச் செய்யுமாறு மக்களுக்குக் கூறினேன். தமஸ்குவிலுள்ள மக்களுக்கு முதலில் இதைக் கூற ஆரம்பித்தேன். பின் எருசலேமுக்கும், யூதேயாவின் ஒவ்வொரு பாகத்திற்கும் சென்று, அங்குள்ள மக்களுக்கு இவற்றைக் கூறினேன். மேலும் யூதரல்லாத மக்களிடமும் நான் சென்றேன்.
21 “எனவேதான் யூதர்கள் என்னைப் பிடித்து, தேவாலயத்தில் என்னைக் கொல்ல முயன்றார்கள். 22 ஆனால் தேவன் எனக்கு உதவினார். இன்னமும் எனக்கு உதவிக் கொண்டிருக்கிறார். தேவனுடைய உதவியால் நான் இன்று இங்கு நின்று கொண்டிருக்கிறேன். நான் கண்ட மகத்தானதும் எளியதுமானவற்றையும் கூறிக்கொண்டுள்ளேன். ஆனால் நான் எதையும் புதிதாகக் கூறிக் கொண்டிருக்கவில்லை. பின்னர் நிகழுமென்று மோசேயும் தீர்க்கதரிசிகளும் கூறியவற்றை நான் கூறிக்கொண்டிருக்கிறேன். 23 தொல்லைகளை அனுபவித்தபின் மரணத்தின்று முதன் முதலில் எழுபவர் கிறிஸ்துவே என்று அவர்கள் கூறினர். மோசேயும் தீர்க்கதரிசிகளும் கிறிஸ்து யூத மக்களுக்கும் யூதரல்லாத மக்களுக்கும் ஒளியைத் தருபவர் என்று கூறினார்கள்” என்றான்.
அகிரிப்பாவை தன் சார்பாக்க முனைவது
24 பவுல் இவற்றைத் தனக்குச் சாதகமாகக் கூறிக்கொண்டிருந்தபொழுது பெஸ்து உரக்க, “பவுலே, நீ பைத்தியக்காரன்! அதிகப் படிப்பு உன்னைப் பித்தனாக்கிவிட்டது!” என்றான்.
25 பவுல், “மிக மாட்சிமைமிக்க பெஸ்துவே, நான் பித்தன் அல்லன். நான் கூறுபவை உண்மையானவை. எனது வார்த்தைகள் ஒரு மூடனின் வார்த்தைகள் அல்ல. அவை உண்மையானவையும், ஞானமிக்கவையும் ஆகும். 26 அகிரிப்பா மன்னர் இவற்றை நன்கு அறிந்திருக்கிறார். நான் சுதந்திரமாக அவரோடு பேசமுடியும். இவை அனைத்தையும் குறித்து அவர் கேள்விப்பட்டிருக்கிறார் என்பதை நான் அறிவேன். ஏன்? இவையனைத்தும் மக்கள் காணும்படியாக நடந்தவையே. 27 அகிரிப்பா மன்னரே, தீர்க்கதிரிசிகள் எழுதியவற்றை நம்புகிறீர்களா? நீங்கள் நம்புகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும்!” என்றான்.
28 அகிரிப்பா பவுலிடம் “நீ அவ்வளவு எளிதாக என்னைக் கிறிஸ்தவனாக மாறுவதற்குத் தூண்ட முடியும் என்று நினைக்கிறாயா?” என்று கேட்டான்.
29 பவுல், “அது எளிதானதா கடினமானதா, என்பது முக்கியமல்ல. நீங்கள் மட்டுமல்ல, என்னைக் கேட்கிற இங்குள்ள ஒவ்வொருவரும் இன்று இரட்சிக்கப்பட்டு எனக்குப் பூட்டப்பட்டுள்ள இந்த விலங்குகளைத் தவிர்த்து எல்லாவற்றிலும் என்னைப் போலாக வேண்டுமென்று தேவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்” என்றான்.
30 அகிரிப்பா மன்னரும் கவர்னர் பெஸ்துவும் பெர்னிசும் அவர்களோடு அமர்ந்திருந்த எல்லா மக்களும் எழுந்து 31 ஒருவரோடொருவர் பேசிக்கொண்டு அந்த அறையை விட்டுச் சென்றார்கள். அவர்கள், “இம்மனிதன் கொல்லப்படவோ, சிறையில் அடைக்கப்படவோ கூடாது, உண்மையிலேயே தவறான எதையும் அவன் செய்யவில்லை!” என்றார்கள். 32 அகிரிப்பா பெஸ்துவை நோக்கி, “அவன் மட்டும் இராயரிடம் விண்ணப்பிக்காமலிருந்திருந்தால் அவன் விடுதலை செய்யப்பட்டிருக்கலாம்” என்றான்.
செமினீத்தால் நரம்புக் கருவிகளை இசைப்போரின் இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.
6 கர்த்தாவே, கோபத்தில் என்னைக் கண்டிக்காதிரும்.
    என் மீது கோபமடையாமலும் என்னைத் தண்டியாமலும் இரும்.
2 கர்த்தாவே, என்னிடம் தயவாயிரும். நான் நோயுற்றுத் தளர்ந்தேன்.
    என்னைக் குணமாக்கும்!
    என் எலும்புகள் நடுங்குகின்றன.
3 என் முழு உடம்பும் நடுங்குகிறது.
    கர்த்தாவே, நீர் என்னைக் குணப்படுத்த எவ்வளவு காலம் நீடிக்கும்?
4 கர்த்தாவே, என்னை வலிமையாக்கும்.
    நீர் தயவுள்ளவர், என்னைக் காப்பாற்றும்.
5 கல்லறையிலுள்ள மரித்த மனிதர்கள் உம்மை நினையார்கள்.
    மரணத்தின் இடத்திலுள்ள ஜனங்கள் உம்மைத் துதிக்கமாட்டார்கள்.
    எனவே என்னை நீர் குணமாக்கும்!
6 கர்த்தாவே, இரவு முழுவதும் நான் உம்மிடம் ஜெபம் செய்தேன்.
    என் கண்ணீரால் என் படுக்கை நனைந்தது.
என் படுக்கையிலிருந்து கண்ணீர் சிந்துகின்றது.
    உம்மை நோக்கி அழுவதால் நான் பெலனற்றுப்போகிறேன்.
7 எனது பகைவர்கள் எனக்குத் துன்பம் பல செய்தனர்.
    வருத்தத்தால் என் துயரம் பெருகிற்று.
    தொடர்ந்து அழுவதினால் என் கண்கள் சோர்ந்தன.
8 தீயோரே அகன்று போங்கள்!
    ஏனெனில் கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்.
9 கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்.
    கர்த்தர் என் ஜெபத்தைக் கேட்டு பதில் தந்தார்.
10 எனது எதிரிகள் எல்லோரும் மனமுடைந்து கலங்கினார்கள்.
    ஏதோ திடீரென நிகழும், அவர்கள் வெட்கமுற்றுத் திரும்பிச் செல்வார்கள்.
20 நீ சொல்பவை உன் வாழ்வைப் பாதிக்கும். நீ நன்மையைச் சொன்னால் உனக்கு நன்மை ஏற்படும். நீ தீயவற்றைச் சொன்னால் உனக்கும் தீமை ஏற்படும்.
21 மரணம் அல்லது வாழ்வு நேரும்படியாக நாவால் பேசமுடியும். எனவே பேசுவதை நேசிக்கிறவர்கள் அதன் பலனையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும்.
2008 by World Bible Translation Center