Print Page Options Listen to Reading
Previous Prev Day Next DayNext

The Daily Audio Bible

This reading plan is provided by Brian Hardin from Daily Audio Bible.
Duration: 731 days

Today's audio is from the NET. Switch to the NET to read along with the audio.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
2 நாளாகமம் 29

யூதாவின் அரசனான எசேக்கியா

29 எசேக்கியா அவனது 25 வது வயதில் அரசன் ஆனான். அவன் எருசலேமில் 29 ஆண்டுகள் அரசாண்டான். அவனது தாயின் பெயர் அபியாள். இவள் சகரியாவின் மகள். அவன் செய்யவேண்டு மென கர்த்தர் விரும்பியபடியே எசேக்கியா செயல்களைச் செய்து வந்தான். இவனது முற்பிதாவான தாவீது சரியானவை என்று எவற்றைச் செய்தானோ அவற்றையே இவனும் செய்துவந்தான்.

எசேக்கியா கர்த்தருடைய ஆலயத்திற்குக் கதவுகளைப் பொருத்தினான். அதனைப் பலமுள்ளதாக ஆக்கினான். எசேக்கியா மீண்டும் ஆலயத்தைத் திறந்தான். அவன் அரசனான முதல் ஆண்டின் முதல் மாதத்திலேயே இதனைச் செய்தான். 4-5 எசேக்கியா ஆசாரியர்களையும் லேவியர்களையும் ஒரே மன்றத்தில் கூட்டினான். ஆலயத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள திறந்தவெளி பிரகாரத்தில் அவர்களோடு கூட்டம் போட்டான். எசேக்கியா அவர்களிடம், “லேவியர்களே! நான் சொல்வதைக் கவனியுங்கள். பரிசுத்தமான சேவைக்கு உங்களைத் தயார் செய்துக்கொள்ளுங்கள். தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தையும் பரிசுத்த சேவைக்குரிய இடமாக ஆக்குங்கள். உங்கள் முற்பிதாக்களால் தொழுதுகொள்ளப்பட்ட தேவன் அவர். ஆலயத்திற்குச் சொந்தமில்லாத பொருட்களை அங்கிருந்து வெளியே எடுத்து விடுங்கள். அப்பொருட்கள் ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்தமாட்டாது. நமது முற்பிதாக்கள் கர்த்தரை விட்டு விலகினார்கள். தங்கள் முகங்களை கர்த்தருடைய ஆலயத்திலிருந்து திருப்பிக் கொண்டனர். அவர்கள் ஆலயக் கதவுகளை மூடிவிட்டனர். விளக்குகளை அணைத்தனர். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு அவரது பரிசுத்தமான இடத்தில் நறுமணப் பொருட்கள் எரிப்பதையும் தகனபலியிடுவதையும் விட்டனர். எனவே, யூதா மற்றும் எருசலேம் ஜனங்கள் மீது கர்த்தர் பெரும் கோபங்கொண்டார். கர்த்தர் அவர்களைத் தண்டித்தார். மற்றவர்கள் இதனைப் பார்த்து பயந்தனர். யூதா மற்றும் எருசலேம் ஜனங்களுக்குக் கர்த்தர் செய்தவற்றைப் பார்த்து திகைத்துவிட்டனர். அவர்கள் எருசலேம் ஜனங்களுக்காக வெறுப்புடனும் வெட்கத்துடனும் தலையை அசைத்தார்கள். இவையனைத்தும் உண்மை என்பது உங்களுக்குத் தெரியும். இவற்றை உங்களது கண்களாலேயே நீங்கள் பார்க்கலாம். அதனால்தான் நமது முற்பிதாக்கள் போரில் கொல்லப்பட்டனர். நமது மகன்களும், மகள்களும், மனைவியரும் சிறைபிடிக்கப்பட்டனர். 10 எனவே, இப்பொழுது நான், எசேக்கியா, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடன் ஒரு உடன்படிக்கை செய்துகொள்ள முடிவு செய்துவிட்டேன். பிறகு அவர் நம்மோடு மேற்கொண்டு கோபங்கொள்ளமாட்டார். 11 எனவே என் மகன்களே, சோம்பேறிகளாக இராதீர்கள். நேரத்தை வீணாக்காதீர்கள். கர்த்தர் தனக்கு சேவைசெய்ய உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அவர், ஆலயத்தில் சேவைசெய்யவும் நறுமணப் பொருட்களை எரிக்கவும் உங்களைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்” என்று சொன்னான்.

12-14 வேலைசெய்ய ஆரம்பித்த லேவியர்களின் பட்டியல் இது:

கோரா குடும்பத்திலிருந்து அமாசாயின் மகனான மாகாத்து என்பவனும், அசரியாவின் மகன் யோவேல் என்பவனும்,

மெராரி குடும்பத்திலிருந்து அப்தியின் மகன் கீசும் என்பவனும் எகலேலின் மகன் அசரியா என்பவனும்,

கெர்சோனிய குடும்பத்திலிருந்து சிம்மாவின் மகன் யோவாகு என்பவனும் யோவாகின் மகன் ஏதேன் என்பவனும்,

எளச்சாப்பான் சந்ததியிலிருந்து சிம்ரி, ஏயெல் என்பவர்களும்,

ஆசாப்பின் சந்ததியிலிருந்து சகரியா, மத்தனியா என்பவர்களும்,

ஏமானின் சந்ததியிலிருந்து எகியேல், சிமியி என்பவர்களும்,

எதுத்தானின் சந்ததியிலிருந்து செமாயா, ஊசியேல் என்பவர்களும்,

அந்த பட்டியலில் அடங்கும்.

15 பிறகு இந்த லேவியர்கள் தம் சகோதரர்களையும் சேர்த்துக் கொண்டு தங்களைக் கர்த்தருடைய ஆலயத்தில் பரிசுத்த சேவைசெய்யத் தயார் செய்துக்கொண்டார்கள். கர்த்தரிடமிருந்து வந்த அரசனின் கட்டளைக்கு அவர்கள் பணிந்தனர். சுத்தம் செய்து பரிசுத்தப்படுத்துவதற்காக அவர்கள் கர்த்தருடைய ஆலயத்திற்குள் சென்றார்கள். 16 ஆசாரியர்கள் சுத்தம் செய்யும் பொருட்டு ஆலயத்தின் உட்பகுதிக்குள் சென்றனர். அவர்கள் கர்த்தருடைய ஆலயத்திற்குள் கண்ட, சுத்தமில்லாத பொருட்கள் அனைத்தையும் வெளியே எடுத்துப்போட்டனர். அவற்றை அவர்கள் கர்த்தருடைய ஆலயப் பிரகாரத்தில் கொண்டுவந்து போட்டனர். பிறகு அவை அனைத்தையும் லேவியர்கள் கீதரோன் பள்ளத்தாக்குக்குக் கொண்டுச்சென்றனர். 17 முதல் மாதத்தின் முதல் நாளில், லேவியர்கள் பரிசுத்தச் சேவைசெய்ய தம்மை தயார் செய்துக்கொண்டனர். அந்த மாதத்தின் எட்டாவது நாள் லேவியர்கள் கர்த்தருடைய ஆலய முற்றத்திற்கு வந்தார்கள். பரிசுத்தக் காரியங்களுக்குப் பயன்படுத்தத் தயார் செய்வதற்காக அவர்கள் மேலும் 8 நாட்கள் கர்த்தருடைய ஆலயத்தைச் சுத்தம் செய்தார்கள். முதல் மாதத்தில் 16வது நாள் அதைச் செய்து முடித்தார்கள்.

18 பிறகு அவர்கள் எசேக்கியா அரசனிடம் சென்றனர். அவர்கள் அவனிடம், “எசேக்கியா அரசனே! கர்த்தருடைய ஆலயம் முழுவதையும் சுத்தம் செய்துவிட்டோம். தகனபலி கொடுக்க பலிபீடத்தையும் மற்ற பொருட்களையும் தயார் செய்துவிட்டோம். சமூகத்தப்பங்களின் மேஜையையும் அதன் சகல பணிமூட்டுகளையும் சுத்தம் செய்துவிட்டோம். 19 ஆகாஸ் அரசாளும்போது அவன் தேவனுக்கு உண்மையுள்ளவனாக இல்லாமல் ஆலயத்தில் உள்ள பல பொருட்களை வெளியில் எறிந்தான். இப்போது நாங்கள் சுத்தப்படுத்தி பரிசுத்தமாகப் பயன்படுகிற அளவிற்கு ஆலயத்தின் உள்ளே வைத்துவிட்டோம். இப்போது அவை கர்த்தருடைய பலி பீடத்தின் எதிரில் உள்ளது” என்றனர்.

20 எசேக்கியா அரசன் நகர அதிகாரிகளைக் கூட்டினான். மறுநாள் காலையில் அவர்களுடன் கர்த்தருடைய ஆலயத்திற்குள் நுழைந்தான். 21 அவர்கள் 7 காளைகளையும், 7 ஆண் ஆட்டுக்கடாக்களையும், 7 ஆட்டுக்குட்டிகளையும், 7 வெள்ளாட்டுக் கடாக்களையும், பாவப்பரிகாரப் பலிக்காகக் கொண்டுவந்தனர். இதன் மூலம் அவர்கள் யூதா அரசாங்கம், பரிசுத்த இடம், யூதா ஜனங்கள் ஆகியோரைப் பரிசுத்தப்படுத்தினார்கள். கர்த்தருடைய பலிபீடத்தில் இவற்றைப் பலியிடுமாறு ஆசாரியர்களுக்கு எசேக்கியா அரசன் கட்டளையிட்டான். இவ்வாசாரியர்கள் ஆரோனின் சந்ததியினர் ஆவார்கள். 22 எனவே, ஆசாரியர்கள் காளைகளைக் கொன்று இரத்தத்தைச் சேகரித்தனர். பிறகு அதனைப் பலிபீடத்தின்மேல் தெளித்தனர். பின்னர் செம்மறி ஆட்டுக்கடாக்களைக் கொன்று அவற்றின் இரத்தத்தைப் பலிபீடத்தின் மேல் தெளித்தனர். 23-24 பின்னர் ஆசாரியர்கள் ஆண் ஆட்டுக் கடாக்களை அரசனுக்கு முன்பு கொண்டு வந்தனர். ஜனங்களும் கூடினார்கள். இவை பாவப்பரிகாரப் பலிக்குரியவை. எனவே ஆசாரியர்கள் தம் கைகளை அவற்றின் தலையில் வைத்துவிட்டு கொன்றனர். ஆசாரியர்கள் அவற்றின் இரத்தத்தைப் பலிபீடத்தின் மேல் தெளித்து பாவப்பரிகாரம் செய்தனர். அவர்கள் இவ்வாறு செய்ததால் தேவன் இஸ்ரவேலர்களது பாவங்களை மன்னித்துவிட்டார். அரசன் அந்த தகன பலிகளும் பாவப்பரிகாரப் பலிகளும் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவருக்கும் செய்யப்பட வேண்டும் என்றான்.

25 எசேக்கியா அரசன் லேவியர்களைக் கர்த்தருடைய ஆலயத்தில் கைத்தாளங்கள், தம்புருக்கள், சுரமண்டலங்கள் ஆகியவற்றோடு தொண்டுசெய்ய நியமித்தான். இது தாவீதும், அரசனின் ஞானதிருஷ்டிக்காரனாகிய காத்தும், தீர்க்கதரிசியாகிய நாத்தானும் காட்டிய வழியாகும். இந்த ஆணைகள் கர்த்தரிடமிருந்து தீர்க்கதரிசிகள் மூலம் வந்தன. 26 எனவே லேவியர்கள் தாவீதின் இசைக்கருவிகளோடு தயாராக நின்றனர். ஆசாரியர்கள் தம் பேரிகைகளோடு தயாராக நின்றார்கள். 27 பிறகு எசேக்கியா, பலிபீடத்தின் மேல் தகனபலிகளும், காணிக்கைகளும் கொடுக்குமாறு கட்டளையிட்டான். தகனபலி தொடங்கியதும் கர்த்தருக்காகப் பாடுவதும் தொடங்கியது. எக்காளங்கள் ஊதப்பட்டன. தாவீதின் இசைக்கருவிகளும் இசைக்கப்பட்டன. 28 அங்கே கூடியிருந்தவர்கள் பணிந்து நின்றனர். இசைக் கலைஞர்கள் பாடினார்கள். எக்காளங்களை இசைப்பவர்கள் அவற்றை ஊதினார்கள். இது தகனபலி முடியும்வரை நிகழ்ந்தது.

29 பலிகள் முடிவுற்றதும் எசேக்கியா அரசனும், ஜனங்களும் குனிந்து தொழுதுகொண்டார்கள். 30 எசேக்கியா அரசனும், அவனது அதிகாரிகளும் லேவியர்களை கர்த்தரைத் துதிக்கும்படி கட்டளையிட்டனர். அவர்கள், தாவீதும் ஞானதிருஷ்டிக்காரனாகிய ஆசாபும் எழுதிய பாடல்களைப் பாடினார்கள். அவர்கள் தேவனைத் துதித்துப் பாடி மகிழ்ந்தனர். அவர்கள் பணிந்து தேவனைத் தொழுதுகொண்டனர். 31 எசேக்கியா, “இப்போது யூதா ஜனங்களாகிய நீங்கள் உங்களையே கர்த்தருக்காகக் கொடுத்துவிட்டீர்கள். அவரண்டைக்கு வாருங்கள். கர்த்தருடைய ஆலயத்திற்குத் தகனபலிகளையும், ஸ்தோத்திரப் பலிகளையும், கொண்டுவாருங்கள்” என்று சொன்னான். பிறகு ஜனங்களும் அவ்வாறே தகனபலிகளையும் ஸ்தோத்திரப் பலிகளையும் கொண்டுவந்தனர். விடுப்பட்டவர்கள் எல்லாம் கொண்டுவந்தனர். 32 கூடியிருந்தவர்கள் கொண்டுவந்த தகனபலிகளின் விபரம்: 70 காளைகள், 100 ஆட்டுக்கடாக்கள், 200 ஆட்டுக்குட்டிகள், இவை அனைத்தும் கர்த்தருக்கு சர்வாங்க தகனபலிகளாகக் கொடுக்கப்பட்டன. 33 600 காளைகளும் 3,000 செம்மறி ஆடுகளும் ஆட்டுக் கடாக்களும் பரிசுத்த பலிகளாகக் கொடுக்கப்பட்டன. 34 எனினும் ஆசாரியர்களின் எண்ணிக்கை குறைவாய் இருந்ததால் அவர்களால் தகன பலிகளின் மிருகங்களை வெட்டி தோல் உரிக்க முடியாமல் போனது. எனவே, அவர்களின் உறவினர்களான லேவியர்கள் அவர்களுக்கு உதவினார்கள். அவர்கள் வேலையை முடிக்கும்வரையிலும் மற்ற ஆசாரியர்கள் தம்மைப் பரிசுத்தம் செய்யும்வரையிலும் உதவினார்கள். ஆசாரியர்களைவிட லேவியர்கள் கர்த்தருக்கு சேவை செய்தவற்குத் தங்களைத் தயார் செய்துக் கொள்வதில் தீவிரமாக இருந்தார்கள். 35 தகனபலிகளும், சமாதானப் பலிகளின் கொழுப்பும், பானங்களின் காணிக்கைகளும் மிகுதியாயிற்று. இவ்வாறு மீண்டும் கர்த்தருடைய ஆலயத்தில் சேவை ஆரம்பமாயிற்று. 36 எசேக்கியாவும் ஜனங்களும் தேவன்தம் ஜனங்களுக்காக ஆலயத்தைத் தயார் செய்ததைப்பற்றி மகிழ்ந்தனர். இவ்வளவு விரைவாக கர்த்தர் செய்துமுடித்ததால் அவர்கள் மேலும் மகிழ்ந்தனர்.

ரோமர் 14

பிறரை விமர்சியாதிருங்கள்

14 விசுவாசத்தில் பலவீனமான ஒருவனை உங்கள் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ள மறுக்க வேண்டாம். அவனது மாறுபட்ட சிந்தனைகளைப் பற்றி அவனோடு விவாதிக்க வேண்டாம். ஒருவன் தான் விரும்புகிற எந்த வகையான உணவையும் உண்ணலாம் என்று நம்புகிறான். பவவீனமான நம்பிக்கை உள்ளவனோ காய்கறிகளை மட்டும் உண்ணலாம் என்று நம்புகிறான். காய்கறிகளை மட்டும் உண்ணுகிறவர்களைப் பார்த்து மற்றவர்கள் அற்பமானவர்களாக எண்ணாமல் இருக்க வேண்டும். காய்கறிகளை மட்டும் உண்ணுகிறவர்களும் மற்றவர்களைத் தவறாக நியாயம் தீர்க்காமல் இருக்கவேண்டும். தேவன் அவனையும் ஏற்றுக்கொண்டார். மற்றொருவனின் வேலைக்காரனைக் குற்றவாளியாகத் தீர்ப்பு சொல்லுகிற உரிமை உங்களுக்கு இல்லை. அவன் செய்கிற தவறையும், நல்லவற்றையும் தீர்ப்பு சொல்ல அவனது எஜமானன் இருக்கிறார். கர்த்தரின் ஊழியன் நிலை நிறுத்தப்படுவான். ஏனென்றால் கர்த்தர் அவனை நிலை நிறுத்த வல்லவராய் இருக்கிறார்.

ஒருவன் ஒரு நாளை மற்ற நாட்களைவிடச் சிறப்பாகக் கருதுகிறான். மற்றொருவன் எல்லா நாட்களையும் ஒன்றுபோல எண்ணுகிறான். ஒவ்வொருவரும் தம் மனதில் தம் நம்பிக்கைகளை உறுதியாக எண்ணிக்கொள்ளவேண்டும். மற்ற நாட்களை விட ஒரு நாளைச் சிறப்பாகக் கருதுகிறவன் கர்த்தருக்காக அவ்வாறு கருதுகிறான். எல்லா வகை உணவுகளையும் உண்பவனும் கர்த்தருக்காகவே உண்ணுகிறான். அந்த உணவுக்காக அவன் தேவனுக்கு நன்றி செலுத்துகிறான். ஒருவன் சிலவகை உணவுகளை உண்ண மறுப்பதும் அதே கர்த்தருக்காகத்தான். அவனும் தேவனுக்கு நன்றி செலுத்துகிறான்.

நாம் அனைவரும் கர்த்தருக்காகவே வாழ்கிறோம். வாழ்வதோ, சாவதோ நமக்காக அல்ல. நாம் அனைவரும் வாழும்போது கர்த்தருக்காகவே வாழ்கிறோம். சாகும்போது கர்த்தருக்காகவே சாகிறோம். வாழ்வதானாலும் சரி, சாவதானாலும் சரி நாம் கர்த்தருக்குச் சொந்தம் ஆனவர்கள். எனவேதான் கிறிஸ்து இறந்தார். பிறகு மீண்டும் வாழ்வதற்காக இறப்பிலிருந்து உயிர்த்தெழுந்தார். இதனால் அவர் இறந்தவர்களுக்கும் வாழ்கிறவர்களுக்கும் கர்த்தர் ஆக முடியும்.

10 எனவே, நீ உன் சகோதரனை எவ்வாறு குற்றவாளியென்று தீர்ப்பளிக்கலாம்? உன் சகோதரனைவிடப் பெரியவன் என்று நீ எப்படி எண்ணலாம்? நாம் அனைவரும் தேவன் முன்பாக நிற்போம். அவர் ஒருவரே நமக்குத் தீர்ப்பை அளிக்கிறவர்.

11 “ஒவ்வொருவனும் எனக்கு முன்பு தலை வணங்குவான்.
    ஒவ்வொருவனும் தேவனை ஏற்றுக்கொள்வான்.
    நான் வாழ்வது எப்படி உண்மையோ அப்படியே இவை நிகழும் என்று கர்த்தர் கூறுகின்றார்” (A)

என்று எழுதப்பட்டுள்ளது.

12 எனவே, நம்மில் ஒவ்வொருவரும் தம் வாழ்க்கையைப் பற்றி தேவனுக்குக் கணக்கு ஒப்படைக்க வேண்டும்.

இடறலற்றவர்களாயிருங்கள்

13 நாம் ஒருவருக்கொருவர் நியாயம் தீர்த்துக்கொள்வதை நிறுத்தவேண்டும். நமது சகோதரனோ சகோதரியோ பலவீனமுறவும், அல்லது பாவத்தில் விழும் வகையிலும் நாம் எதுவும் செய்யக்கூடாது என்று தீர்மானித்துக்கொள்ள வேண்டும். 14 நான் இயேசு கிறிஸ்துவுக்குள் இருக்கிறேன். எந்த உணவையும் உண்ணத் தகாதது என்று கூற முடியாது என்பது எனக்குத் தெரியும். ஆனால் எவராவது ஒரு உணவை உண்ணத்தகாதது என்று நம்பினால் அந்த உணவும் உண்ணமுடியாதபடி தீட்டுள்ளதாகும்.

15 நீ சாப்பிடும் ஒன்றின் பொருட்டு, உன் சகோதரனின் விசுவாசத்தைப் புண்படுத்தினால், நீ உண்மையிலேயே அன்பு வழியைப் பின்பற்றவில்லை என்பதே அதன் பொருள். தவறு என்று ஒருவன் கருதும் உணவை உண்டு ஒருவனது நம்பிக்கையை அழித்து விடாதே. கிறிஸ்து அவனுக்காகவும் தன் உயிரை கொடுத்தார். 16 நல்லவை என நீங்கள் நம்பும் விஷயங்கள் தீமை என மற்றவர்களால் பழிக்கப்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். 17 தேவனுடைய இராஜ்யத்தில் குடிப்பதும் உண்பதும் முக்கியமல்ல. தேவனுக்கேற்ற நீதிமானாக இருப்பதும், பரிசுத்த ஆவியானவருக்குள் சமாதானமும் சந்தோஷமும் அடைவதுமே முக்கியம். 18 இவ்வழியில் கிறிஸ்துவுக்கு சேவை செய்கிறவன் தேவனுக்கு ஏற்றவனாக இருப்பான். அவன் மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படுபவனுமாயிருப்பான்.

19 அதனால் சமாதானத்துக்கேற்றவற்றை சிரமப்பட்டாவது செய்ய முயற்சி செய்வோம். ஒருவருக்கொருவர் உதவியானவற்றைச் செய்ய முயல்வோம். 20 உணவு உண்ணுவதால் தேவனுடைய வேலையை அழிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அனைத்து உணவும் உண்பதற்கு ஏற்றதே. ஆனால் நாம் உண்ணும் உணவு மற்றவர்கள் பாவத்தில் விழுவதற்கு ஏதுவாக இருந்தால் அது தவறாகும். 21 நீ மாமிசம் உண்பதும், மது குடிப்பதும், உனது சகோதரனையோ சகோதரியையோ பாவத்தில் விழச் செய்யுமானால் அவற்றைச் செய்யாமல் இருப்பது நல்லது. உன் சகோதரனையோ சகோதரியையோ பாவத்தில் விழச் செய்யும் எதனையும் செய்யாமல் இருப்பாயாக.

22 இவை பற்றிய உன் நம்பிக்கைகள் எல்லாம் உனக்கும் தேவனுக்கும் இடையில் இரகசியமாய் வைக்கப்பட வேண்டும். நல்லதென்று ஒருவன் நினைக்கும் காரியங்களில் ஒருவன் குற்றவளியாக இல்லாமல் இருப்பது பெரும் பாக்கியமாகும். 23 சரியானதுதான் என்ற நிச்சயமில்லாமல் ஒருவன் ஒரு உணவை உண்பானேயானால் அவன் தனக்குத் தானே தப்பானவனாகிறான். ஏனென்றால் அவனுக்கு அவனது செயலில் நம்பிக்கை இல்லை. எனவே நம்பிக்கை இல்லாமல் செய்யும் எச்செயலும் பாவமானதே.

சங்கீதம் 24

தாவீதின் பாடல்

24 பூமியும் அதிலுள்ள எல்லாப் பொருள்களும் கர்த்தருடையவை.
    உலகமும் அதன் ஜனங்களும் அவருக்கே உரிமையாம்.
கர்த்தர் பூமியை தண்ணீரின் மேல் உண்டாக்கினார்.
    ஆறுகளின் மீது அதை உண்டாக்கினார்.

கர்த்தருடைய மலைகளின் மேல் யார் ஏறக்கூடும்?
    கர்த்தருடைய பரிசுத்த ஆலயத்தில் யார் நிற்கக்கூடும்?
    யார் அங்கு வழிபட முடியும்?
தீயவை செய்யாத ஜனங்களும்,
    பரிசுத்த இருதயம் உடையோரும்,
பொய்யை உண்மையெனக் கூறுவதற்கு என் பெயரைப் [a] பயன்படுத்தாதோரும், பொய்யும்,
    பொய்யான வாக்குறுதிகளும் அளிக்காதோரும், மட்டுமே அங்கு தொழுதுகொள்ள முடியும்.

நல்ல ஜனங்கள் கர்த்தரிடம் மற்ற ஜனங்களை ஆசீர்வதிக்கச் சொல்வார்கள்.
    அந்த நல்ல ஜனங்கள் தங்கள் இரட்சகராகிய தேவனை நல்லக் காரியங்களைச் செய்யச் சொல்வார்கள்.
அந்த நல்லோர் தேவனைப் பின்பற்ற முயல்வார்கள்.
    யாக்கோபின் தேவனிடம் உதவி வேண்டி அவர்கள் செல்வார்கள்.

வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்!
    பழைமையான கதவுகளே! திறவுங்கள்!
    மகிமை வாய்ந்த அரசர் உள்ளே வருவார்.
யார் இந்த மகிமைமிக்க அரசர்?
    கர்த்தரே அந்த அரசர். அவரே வல்லமையுள்ள வீரர்.
    கர்த்தரே அந்த அரசர். அவரே போரின் நாயகன்.

வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்!
    பழைமையான கதவுகளே, திறவுங்கள்!
    மகிமை மிக்க அரசர் உள்ளே வருவார்.
10 யார் அந்த மகிமை மிக்க அரசர்?
    சர்வ வல்லமையுள்ள கர்த்தரே அந்த அரசர்.
    அவரே மகிமை மிக்க அரசர்.

நீதிமொழிகள் 20:12

12 பார்ப்பதற்குக் கண்களையும் கேட்பதற்குக் காதுகளையும் கர்த்தர் நமக்காகப் படைத்துள்ளார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center