Print Page Options Listen to Reading
Previous Prev Day Next DayNext

The Daily Audio Bible

This reading plan is provided by Brian Hardin from Daily Audio Bible.
Duration: 731 days

Today's audio is from the NET. Switch to the NET to read along with the audio.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
2 நாளாகமம் 26-28

யூதாவின் அரசனான உசியா

26 யூதா ஜனங்கள் அமத்சியாவின் இடத்தில் உசியா என்பவனைப் புதிய அரசனாகத் தேர்ந்தெடுத்தனர். அமத்சியா, உசியாவின் தந்தை ஆவான். இது இவ்வாறு நிகழும்போது உசியாவின் வயது 16. உசியா மீண்டும் ஏலோத் நகரத்தை கட்டி யூதாவிற்குத் திருப்பிக் கொடுத்தான். அமத்சியா மரித்த பிறகு உசியா இதனைச் செய்தான். அம்த்சியாவை அவனது முற்பிதாக்களோடு அடக்கம் செய்தனர்.

உசியா அரசனாகும்போது அவனுக்கு 16 வயது. அவன் எருசலேமில் 52 ஆண்டுகள் அரசாண்டான். அவனது தாயின் பெயர் எக்கோலியாள். இவள் எருசலேம் நகரத்தவள். கர்த்ததருடைய விருப்பம் போலவே உசியா காரியங்களைச் செய்தான். அவனது தந்தை அமத்சியாவைப் போலவே தேவனுக்கு அடிபணிந்து வாழ்ந்து வந்தான். சகரியாவின் வாழ்நாளிலே உசியா தேவனைப் பின்பற்றினான். சகரியா அவனுக்கு எவ்வாறு தேவனுக்கு மரியாதை செலுத்துவது என்பதைப்பற்றியும் தேவனுக்கு கீழ்ப்படிவது பற்றியும் சொல்லித்தந்தான். உசியா கர்த்தரிடம் கீழ்ப்படிந்து இருந்தவரை தேவனும் அவனுக்கு வெற்றியைத் தந்தார்.

உசியா பெலிஸ்தர்களுக்கு எதிராகப் போரிட்டான். காத், யப்னே, அஸ்தோத் ஆகிய நகர சுவர்களை இடித்து வீழ்த்தினான். அஸ்தோத் நகரத்தின் அருகிலே இவன் புதிய நகரங்களைக் கட்டினான். பெலிஸ்திய ஜனங்களுக்கிடையில் வேறு இடங்களிலும் ஊர்களை கட்டினான். பெலிஸ்தர்களுடனான போரிலும், கூர்பாகாலில் இருந்த அரபியரோடான போரிலும், மெகுனியரோடான போரிலும் வெற்றிபெற உசியாவுக்கப் பெருமளவில் தேவன் உதவினார். அம்மோனியர்கள் உசியாவிற்கு காணிக்கைகளைக் கொடுத்தனர். எகிப்தின் எல்லைவரை உசியாவின் புகழ் பரவி இருந்தது. இவன் பலமிக்கவன் ஆதலால் பெரும் புகழையும் பெற்றான்.

உசியா எருசலேமில் மூலைவாசலிலும் பள்ளத்தாக்கு வாசலிலும் சுவர்களின் முடிவிலும் கோபுரங்களைக் கட்டினான். அவற்றைப் பலப்படுத்தினான். 10 உசியா வனாந்தரத்திலே கோபுரங்களைக் கட்டினான். பல கிணறுகளைத் தோண்டினான். இவனுக்கு மலைநாடுகளிலும் சமவெளிகளிலும் ஏராளமான ஆடுகள் இருந்தன. உசியா மலை நாடுகளில் விவசாயிகளைப் பெற்றிருந்தான். பயிர்கள் நன்றாக விளைந்தன. திராட்சைத் தோட்டத்தைக் கவனிப்பவர்களும் இருந்தனர். உசியா விவசாயத்தைப் பெரிதும் விரும்பினான்.

11 பயிற்சி பெற்ற வீரர்கள் நிறைந்த படை உசியாவிடம் இருந்தது. அவ்வீரர்கள் பல குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். செயலாளனான ஏயெலியும் அதிகாரியான மாசேயாவும் இப்பிரிவுகளைச் செய்தனர். அனனியாவும் அரசனின் அதிகாரிகளுள் ஒருவன். இவன் மற்ற அதிகாரிகளுக்குத் தலைவன். 12 இந்த வீரர்களுக்கு 2,600 தலைவர்கள் இருந்தனர். 13 இக்குடும்பத் தலைவர்களே மிகுந்த ஆற்றலுடன் போரிடவல்ல 3,07,500 வீரர்களுக்கும் பொறுப்பாளர்களாக இருந்தனர். வில்வீரர்கள் அனைவரும் பகைவர்களுக்கு எதிராக வெல்ல அரசனுக்கு உதவினார்கள். 14 உசியா படைக்குக் கேடயங்கள், ஈட்டிகள், தலைகவசங்கள், மார்க்கவசங்கள், வில்கள், கவண்களுக்குக் கற்கள் ஆகியவற்றைக் கொடுத்தான். 15 எருசலேமில் உசியா, புத்திசாலிகளால் அமைக்கப்பட்ட எந்திரங்களை கோபுரங்களின் மேலும், சுவர்களின் மேலும் வைத்தான். இந்த எந்திரங்கள் அம்புகளையும், கற்களையும் எறிந்தன. இதனால் உசியா பெரும் புகழ்பெற்றான். வெகு தொலை நாடுகளிலுள்ள ஜனங்களும் இவனைப்பற்றி அறிந்துகொண்டனர். அதிகமான உதவியைப் பெற்று அவன் வலிமைமிக்க ஒரு அரசனானான்.

16 ஆனால் உசியா பலமுள்ளவனாக ஆனதும் அவனது தற்பெருமை அவனுக்கு அழிவை விளைவித்தது. அவன் தனது தேவனாகிய கர்த்தருக்கு உண்மையுள்ளவனாக இல்லை. அவன் நறுமணப் பொருட்களை எரிக்கும் பலிபீடத்தின் மீது நறுமணப் பொருட்களை எரிப்பதற்காக கர்த்தருடைய ஆலயத்திற்குள் சென்றான். 17 அசரியா என்ற ஆசாரியனும் கர்த்தருடைய ஆசாரியர்களுள் தைரியமிக்க 80 ஆசாரியர்களும் உசியாவைப் பின்தொடர்ந்து ஆலயத்திற்குள் சென்றனர். 18 அவர்கள் உசியாவின் தவறுகளை எடுத்துச் சொன்னார்கள். அவர்கள் அவனிடம், “உசியாவே, கர்த்தருக்குத் தூபம் காட்டுவது உனது வேலையல்ல. இவ்வாறு செய்வது உனக்கு நல்லதன்று. இந்த ஆசாரியர்கள் பரிசுத்தமான நறுமணப்பொருட்களை எரிப்பதற்குப் பயிற்சிப் பெற்றவர்கள். ஆசாரியர்களும் ஆரோனின் சந்ததியார் மட்டுமே இதனைச் செய்யவேண்டும். மகா பரிசுத்தமான இடத்தை விட்டு வெளியே போ, நீ உண்மையுள்ளவனாக இல்லை. இதற்காக தேவனாகிய கர்த்தர் உம்மை கனம் பண்ணமாட்டார்” என்றனர். 19 இதனால் உசியா கோபம் கொண்டான். அவன் தன் கையில் நறுமணப் பொருட்களை எரிப்பதற்காக ஒரு கலசத்தை வைத்திருந்தான். அத்தோடு அவன் ஆசாரியர்களோடு கோபமாகப் பேசியபோது அவன் நெற்றியில் தொழுநோய் தோன்றியது. இது ஆசாரியர்களுக்கு முன்பாக கர்த்தருடைய ஆலயத்தின் பலிபீடத்தின் அருகில் நறுமணப் பொருட்களை எரிக்கும்போது நடந்தது. 20 தலைமை ஆசாரியனாகிய அசரியாவும் மற்ற ஆசாரியர்களும் இதனைக் கண்டனர். அவர்கள் அவனது நெற்றியில் ஏற்பட்ட தொழுநோயையும் கண்டனர். உடனே உசியாவை ஆலயத்தைவிட்டு வெளியேறும்படி அவர்கள் கூறினார்கள். கர்த்தர் அவனைத் தண்டித்து விட்டதால் அவனும் வேகமாக ஆலயத்தைவிட்டு வெளியேறினான். 21 உசியா எனும் அரசன் தொழுநோயாளியானான். அவனால் கர்த்தருடைய ஆலயத்திற்குள் நுழைய முடியவில்லை. ஒரு தனி வீட்டில் அவன் வசிக்க வேண்டியதாயிற்று. அவனது மகனான யோதாம் அரண்மனையைக் கட்டுப்படுத்தினான். அவனே ஜனங்களின் ஆளுநர் ஆனான்.

22 தொடக்ககாலம் முதல் இறுதிவரை உசியா செய்த வேறு செயல்கள், ஆமோத்சின் மகனான ஏசாயா எனும் தீர்க்கதரிசியால் எழுதப்பட்டுள்ளன. 23 உசியா மரித்ததும் அவனது முற்பிதாக்களோடு அவனும் அடக்கம் செய்யப்பட்டான். அரசர்களின் கல்லறைகளுக்கு அருகில் உள்ள வயல் வெளிகளில் உசியாவை அடக்கம் செய்தனர். ஜனங்கள், “உசியாவிற்குத் தொழு நோய் இருந்தது” என்றனர் என்பதே இதன் காரணம் யோதாம் புதிய அரசனாக உசியாவின் இடத்தில் அரசேற்றான். யோதாம் உசியாவின் மகன் ஆவான்.

யூதாவின் அரசனான யோதாம்

27 யோதாம் அரசனானபோது அவனுக்கு 25 வயது ஆகும். இவன் எருசலேமில் 16 ஆண்டுகள் அரசாண்டான். இவனது தாயின் பெயர் எருசாள் ஆகும். இவள் சாதோக்கின் மகள் ஆவாள். கர்த்தர் செய்ய விரும்பியதையே, யோதாம் செய்து வந்தான். அவன் தன் தந்தை உசியாவைப் போலவே தேவனுக்குக் கீழ்ப்படிந்து வந்தான். ஆனால் தன் தந்தையைப் போல யோதாம் கர்த்தருடைய ஆலயத்திற்குள் நுழைந்து நறுமணப் பொருட்களை எரிக்க முயலவில்லை. எனினும் ஜனங்கள் தொடர்ந்து தவறு செய்தனர். யோதாம் மீண்டும் கர்த்தருடைய ஆலயத்தின் மேல் வாசலைக் கட்டினான். ஓபேலின் மதில்சுவர் மீது அனேக கட்டிடங்களைக் கட்டினான். யூதாவின் மலைநாட்டில் புதிய நகரங்களையும் கட்டினான். யோதாம் காடுகளில் கோட்டைகளையும் கோபுரங்களையும் கட்டினான். யோதாம் அம்மோனிய அரசர்களுக்கு எதிராகப் போரிட்டான். அவர்களது படைகளை அவன் தோற்கடித்தான். எனவே ஆண்டுதோறும் அம்மோனியர்கள் அவனுக்கு 100 தாலந்து வெள்ளியையும் பதினாயிரங்கலங் கோதுமையையும் பதினாயிரங்கல வாற் கோதுமையையும் கொடுத்தார்கள். இவ்வாறு மூன்று ஆண்டுகள் கொடுத்தனர்.

யோதாம் உண்மையாகவே தேவனாகிய கர்த்தருக்குக் கீழ்ப்படிந்ததால், பலமுள்ளவன் ஆனான். யோதாம் செய்த மற்ற செயல்களும் போர்களும் யூதா மற்றும் இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. யோதாம் 25 வயதில் அரசனானான். அவன் எருசலேமில் 16 ஆண்டுகள் அரசாண்டான். பிறகு யோதாம் மரிக்க அவனை அவனது முற்பிதாக்களோடு அடக்கம் செய்தனர். அவன் தாவீது நகரத்திலே அடக்கம் செய்யப்பட்டான். யோதாமின் இடத்திலே புதிய அரசனாக ஆகாஸ் வந்தான். ஆகாஸ் யோதாமின் மகன்.

யூதாவின் அரசனான ஆகாஸ்

28 ஆகாஸ் அரசனானபோது அவனுக்கு 20 வயது. அவன் எருசலேமில் 16 ஆண்டுகள் அரசாண்டான். தனது முற்பிதாவான தாவீதைப் போன்று ஆகாஸ் சரியான வழியில் வாழவில்லை. கர்த்தர் விரும்பியவற்றை ஆகாஸ் செய்யவில்லை. இஸ்ரவேல் அரசர்களின் தவறான முன்மாதிரிகளை கடைபிடித்தான். அவன் பாகால் தெய்வங்களைத் தொழுதுகொள்ள வார்ப்புச் சிலைகளைச் செய்தான். ஆகாஸ் பென்இன்னோம் பள்ளத்தாக்கில் நறுமணப் பொருட்களை எரித்தான். தன் சொந்த மகன்களை நெருப்பில் எரித்துப் பலிக்கொடுத்தான். அந்நாடுகளில் வாழ்ந்தோர் செய்த பயங்கரமான பாவங்களையே அவனும் செய்தான். இஸ்ரவேல் ஜனங்கள் அந்நாட்டுக்குள் நுழைந்தபோது ஏற்கெனவே அங்கிருந்த பாவமிக்க ஜனங்களை கர்த்தர் வெளியே துரத்தியிருந்தார். மலைகளில் இருந்த மேடைகளிலும் ஒவ்வொரு பசுமையான மரத்தின் அடியிலும் ஆகாஸ் பலிகளைக் கொடுத்து நறுமணப் பொருட்களை எரித்தான்.

5-6 ஆகாஸ் பாவங்களைச் செய்ததால், ஆராமின் அரசன் ஆகாஸை வெல்லும்படி தேவனாகிய கர்த்தர் செய்தார். ஆராமின் அரசனும் அவனது படைகளும் ஆகாஸைத் தோற்கடித்து யூத ஜனங்களில் பலரைச் சிறைபிடித்தனர். ஆராம் அரசன், சிறைக் கைதிகளை தமஸ்கு என்ற நகரத்திற்கு அழைத்துச் சென்றான். மேலும் கர்த்தர், இஸ்ரவேல் அரசனான பெக்கா ஆகாஸை வெல்லும்படிச் செய்தார். பெக்காவின் தந்தையின் பெயர் ரெமலியா ஆகும். ஒரே நாளில் பெக்காவும், அவனது படையும் யூதாவில் 1,20,000 வீரர்களைக் கொன்றனர். பெக்கா யூதா வீரர்களை வென்றதற்குக் காரணம் அவர்கள் தம் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்கு அடிபணியவில்லை என்பது ஆகும். எப்பிராயீமில் சிக்ரி என்பவன் பலமிக்க வீரன். அவன் ஆகாஸ் அரசனின் மகனான மாசேயாவையும், அரண்மனைத் தலைவனாகிய அஸ்ரிக்காமையும் எல்க்கானாவையும் கொன்றான். எல்க்கானா அரசனுக்கு இரண்டாவது நிலையில் இருந்தார்.

இஸ்ரவேலிய படையானது யூதாவில் வாழ்ந்த தம் சொந்த உறவினர்களான 2,00,000 பேரைச் சிறை பிடித்தனர். அவர்கள் பெண்களையும், குழந்தைகளையும் அடிமைகளாகக் கொண்டுசென்றார்கள். அவர்கள் யூதாவிலிருந்து பல விலையுயர்ந்த பொருட்களை அபகரித்துச் சென்றார்கள். அந்த அடிமைகளையும், அப்பொருட்களையும் இஸ்ரவேலர்கள் சமாரிய நகருக்குக் கொண்டுவந்தார்கள். ஆனால் அங்கே கர்த்தருடைய தீர்க்கதரிசி ஒருவன் இருந்தான். அவனது பெயர் ஒதேத். சமாரியாவிற்கு வந்த இஸ்ரவேல் படையை ஒதேத் சந்தித்தான். ஒதேத் இஸ்ரவேல் படையினரிடம், “உங்கள் முற்பிதாக்கள் பணிந்த தேவனாகிய கர்த்தர், நீங்கள் யூதாவின் ஜனங்களைத் தோற்கடிக்கவிட்டார். ஏனென்றால் அவர்கள் மீது அவர் கோபமாயிருந்தார். மிக மோசமான முறையில் நீங்கள் யூதாவின் ஜனங்களைக் கொன்று தண்டித்தீர்கள். இப்போது தேவன் உங்கள் மீது கோபமாக இருக்கிறார். 10 நீங்கள் யூதாவின் ஜனங்களையும், எருசலேமையும் அடிமையாக்கத் திட்டமிட்டுள்ளீர்கள். உங்களது தேவனாகிய கர்த்தருக்கு எதிராக நீங்களும் பாவம் செய்திருக்கிறீர்கள். 11 இப்போது நான் சொல்வதைக் கவனியுங்கள். நீங்கள் கைப்பற்றிய உங்கள் சகோதர சகோதரிகளைத் திருப்பி அனுப்புங்கள். கர்த்தருடைய கடுமையான கோபம் உங்கள் மீது உள்ளது. எனவே நான் சொன்னபடி செய்யுங்கள்” என்று சொன்னான்.

12 பிறகு எப்பிராயீம் தலைவர்கள், இஸ்ரவேல் வீரர்கள் போர்க்களத்திலிருந்து வீட்டிற்குத் திரும்புவதைப் பார்த்தனர். அந்தத் தலைவர்கள் இஸ்ரவேல் வீரர்களைச் சந்தித்து எச்சரிக்கைச் செய்தனர். யோகனானின் மகன் அசரியா, மெஷிலேமோத்தின் மகனான பெரகியா, சல்லூமின் மகனான எகிஸ்கியா, அத்லாயின் மகனான அமாசா ஆகியோர் அந்தத் தலைவர்களாகும். 13 அவர்கள் இஸ்ரவேல் வீரர்களிடம், “யூதாவிலிருந்து கைதிகளை இங்கே கொண்டுவராதீர்கள். அவ்வாறு செய்தால் அது கர்த்தருக்கு எதிராக நாம் பாவம் செய்வது போல் ஆகும். நமது பாவங்களையும் குற்ற உணர்வையும் அது மோசமாக்கும். கர்த்தர் இஸ்ரவேலுக்கு எதிராகக் கோபம் கொள்வார்” என்றார்கள்.

14 எனவே, வீராகள் கைதிகளையும், விலையுயர்ந்த பொருட்களையும் தலைவர்களிடமும், ஜனங்களிடமும் கொடுத்தனர். 15 உடனே அசரியா, பெரக்கியா, எகிஸ்கியா, அமாசா, ஆகிய தலைவர்கள் கைதிகளுக்கு உதவினார்கள். அந்நால்வரும் இஸ்ரவேல் படை அபகரித்த ஆடைகளை எடுத்து நிர்வாணமாயிருந்த கைதிகளுக்குக் கொடுத்தனர். அவர்களுக்கு பாதரட்சைகளைக் கொடுத்தனர். உண்ணவும், குடிக்கவும் கைதிகளுக்கு உணவுப் பொருட்களைக் கொடுத்தனர். அவர்களுக்கு எண்ணெய் தடவினார்கள். பிறகு அந்த எப்பிராயீம் தலைவர்கள் பலவீனமான கைதிகளைக் கழுதைமேல் ஏற்றி எரிகோவில் உள்ள அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். எரிகோ பேரீச்ச மரங்கள் நிறைந்த பட்டணம். பிறகு அந்தத் தலைவர்கள் நால்வரும் தம் நகரமான சமாரியாவிற்குத் திரும்பினார்கள்.

16-17 அதே நேரத்தில் ஏதோம் நாட்டு ஜனங்கள் யூதாவைத் தோற்கடித்தனர். ஏதோமியர் ஜனங்களைச் சிறைபிடித்து கைதிகளாக கொண்டு சென்றார்கள். எனவே ஆகாஸ் அரசன் அசீரியா அரசனிடம் உதவுமாறு வேண்டினான். 18 பெலிஸ்தர்களும் மலைநாட்டு நகரங்களையும் யூதாவின் தென் பகுதியையும் தாக்கினார்கள். இவர்கள் பெத்ஷிமேஸ், ஆயலேன், கெதெரோத், சொக்கோ, திம்னா மற்றம் கிம்சோ ஆகிய ஊர்களைக் கைப்பற்றினார்கள். மேலும் அவர்கள் அந்த ஊர்களுக்கு அருகிலிருந்த கிராமங்களையும் கைப்பற்றினார்கள், பிறகு பெலிஸ்தியர்கள் அந்த ஊர்களில் வாழ்ந்தார்கள். 19 யூதா ஜனங்களுக்கு கர்த்தர் கடுமையான துன்பங்களைத் தந்தார். ஏனென்றால் ஆகாஸ் அரசன் யூதா ஜனங்கள் பாவம் செய்யும்படி தூண்டினான். அவன் கர்த்தருக்கு உண்மை இல்லாதவனாக நடந்துக் கொண்டான். 20 அசீரியாவின் அரசனான தில்காத்பில் நேசர் உதவுவதற்குப் பதிலாகத் துன்பங்களைத் தந்தார். 21 ஆகாஸ் கர்த்தருடைய ஆலயம், அரண்மனை, இளவரசர்களின் அரண்மனை ஆகியவற்றில் இருந்து விலையுயர்ந்த பொருட்களை எடுத்துவந்தான். அவற்றை அசீரியா அரசனுக்குக் கொடுத்தான். எனினும் அது ஆகாசுக்கு உதவவில்லை.

22 இவ்வளவு இடையூறுகளுக்கு நடுவிலும் ஆகாஸ் மேலும் மோசமான பாவங்களையே தொடர்ந்து செய்தான். இதனால் கர்த்தருக்கு மிகவும் உண்மையற்றவனாக இருந்தான். 23 தமஸ்கு ஜனங்கள் தொழுதுகொண்ட தெய்வங்களுக்கே இவன் பலிகளைக் கொடுத்து வந்தான் தமஸ்கு ஜனங்கள் ஆகாஸைத் தோற்கடித்தனர். அதனால் ஆகாஸ், “ஆராம் ஜனங்களுக்கு அவர்கள் தொழுதுகொண்ட தெய்வங்கள் உதவுகின்றன. எனவே நானும் அத்தெய்வங்களுக்குப் பலியிட்டால் அத்தெய்வங்கள் எனக்கும் உதவும்” என்று எண்ணினான். ஆகாஸ் அத்தெய்வங்களைத் தொழுதுகொண்டான். இவ்வாறு இவன் தானும் பாவம் செய்து இஸ்ரவேல் ஜனங்களையும் பாவம் செய்யவைத்தான்.

24 ஆகாஸ் தேவனுடைய ஆலயத்தில் இருந்து பொருட்களை எடுத்து உடைத்துப் போட்டான் பிறகு அவன் கர்த்தருடைய ஆலய கதவுகளை மூடினான். அவன் பலிபீடங்களைச் செய்து எருசலேமின் ஒவ்வொரு தெரு முனையிலும் வைத்தான். 25 ஆகாஸ் யூதாவின் ஒவ்வொரு நகரங்களிலும் மேடைகள் அமைத்து நறுமணப் பொருட்களை எரித்து அந்நிய தெய்வங்களை தொழுதுகொண்டான். ஆகாஸ் தன் முற்பிதாக்களால் தொழுதுகொள்ளப்பட்ட தேவனாகிய கர்த்தரை மேலும் கோபமூட்டினான்.

26 ஆகாஸ் தொடக்ககாலம் முதல் இறுதிவரை செய்த மற்ற செயல் எல்லாமும் யூதா மற்றம் இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. 27 ஆகாஸ் மரித்ததும் அவனை அவனது முற்பிதாக்களுக்கு அருகில் அடக்கம் செய்தனர். ஜனங்கள் அவனை எருசலேம் நகரிலேயே அடக்கம் செய்தனர். ஆனால் அவனை இஸ்ரவேல் அரசர்களை அடக்கம் செய்யும் இடத்துக்கருகில் அடக்கம் செய்யவில்லை. ஆகாசின் இடத்தில் புதிய அரசனாக எசேக்கியா வந்தான். எசேக்கியா ஆகாசின் மகன்.

ரோமர் 13

அரசு அதிகாரத்திற்கு அடிபணியவும்

13 நீங்கள் அனைவரும் ஆட்சியாளர்களுக்கு அடிபணிய வேண்டும். ஆட்சி செய்யும் ஒவ்வொருவருக்கும் ஆட்சி புரியும் அதிகாரத்தை தேவன் கொடுத்திருக்கிறார். இப்பொழுது அதிகாரம் செய்கின்றவர்களுக்கு தேவனாலேயே அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே அரசு அதிகாரத்திற்கு எதிராக இருப்பவன் உண்மையில் தேவனுடைய கட்டளைக்கு எதிராக இருக்கிறான் என்றே பொருளாகும். அரசுக்கு எதிராகச் செயல்படுபவன் உண்மையில் தண்டிக்கப்படத்தக்கவன். நன்மை செய்கிறவர்கள் ஆள்வோர்களிடம் அச்சப்படவேண்டிய தேவையில்லை. ஆனால் தீமை செய்கிறவர்கள் ஆள்வோர்களிடம் அச்சப்படவேண்டும். நீங்கள் ஆள்வோர்களைக் கண்டு அச்சம்கொள்வதில் இருந்து விடுதலை பெறவேண்டுமா? அப்படியானால் நன்மையை மட்டும் செய்யுங்கள். நீங்கள் நன்மையைச் செய்தால் அவர்கள் உங்களைப் பாராட்டுவார்கள்.

ஒரு ஆள்வோன் என்பவன் உங்களுக்கு உதவி செய்வதற்காக தேவனால் நியமிக்கப்பட்டவன். ஆனால் நீங்கள் தப்பு செய்தால் அஞ்சவேண்டும். உங்களைத் தண்டிக்கிற அதிகாரம் அவர்களுக்குண்டு. அதை அவர்கள் பயன்படுத்துவார்கள். தேவனுடைய பணியாளாகவே அவர்கள் தண்டனை வழங்குவார்கள். எனவே நீங்கள் அரசாங்கத்திற்கு அடிபணியுங்கள். நீங்கள் பணியாவிட்டால் தண்டிக்கப்படுவீர்கள். நீங்கள் செய்யத்தக்க நல்ல காரியமே அரசுக்குப் பணிவதுதான்.

இதற்காகத்தான் நீங்கள் வரிகளைச் செலுத்துகிறீர்கள். அவர்கள் தேவனுக்காகவும் உங்களுக்காகவும் உழைத்து வருகிறார்கள். தம் நேரமனைத்தையும் ஆட்சி செலுத்துவதிலேயே செலவழிக்கிறார்கள். அனைவருக்கும் செய்யவேண்டிய கடமைகளைச் செய்யுங்கள். கொடுக்க வேண்டிய வரிகளையும் கொடுத்துவிடுங்கள். மரியாதை செலுத்த வேண்டியவர்களுக்கு மரியாதை செலுத்துங்கள். எவருக்கு பயப்பட வேண்டுமோ அவர்களுக்கு பயப்படுங்கள்.

பிறரை நேசிப்பதே பிரமாணம்

எதற்காகவும் மற்றவர்களிடம் கடன் படாதிருங்கள். அன்புக்கு மட்டும் கடன்படுங்கள். மற்றவர்களிடம் அன்பு செலுத்துகிற ஒருவன் உண்மையில் சட்டமுழுவதிற்கும் அடிபணிந்தவனாய் இருப்பான். இவற்றையெல்லாம் நான் எதற்காகக் கூறுகிறேன் என்றால் “விபசாரம் செய்யாதிருங்கள். கொலை செய்யாதிருங்கள். களவு செய்யாதிருங்கள். அடுத்தவர்க்கு உரிய பொருட்களை விரும்ப வேண்டாம்.” [a] சட்டவிதி இவற்றைச் சொல்கிறது. இவை எல்லா கட்டளைகளும், “தன்னை தானே நேசித்துக்கொள்வது போலவே ஒருவன் அடுத்தவனையும் நேசிக்க வேண்டும்” [b] என்று ஒரு விதியையே சொல்கின்றன. 10 அன்பானது மற்றவர்களுக்குத் தவறு செய்யாதது. எனவே, அன்பு சட்டவிதியின் நிறைவேறுதலாய் இருக்கிறது.

11 நாம் மிக முக்கியமான காலத்தில் வாழ்ந்துகொண்டிருப்பதால் இவற்றைக் கூறுகிறேன். நீங்கள் தூக்கத்திலிருந்து எழ வேண்டிய நேரம் இதுதான். நாம் முதலில் நம்பியதைக் காட்டிலும் இரட்சிப்பின் காலம் நெருங்கிவிட்டது. 12 “இரவு” ஏறக்குறைய முடிந்து போனது. “பகல்” அநேகமாக முளைக்கத் தொடங்கி விட்டது. எனவே இருட்டுக்குச் சொந்தமான செயல்களை விட்டுவிடுவோம். வெளிச்சத்தின் ஆயுதங்களை அணிந்துகொள்வோம். 13 பகலுக்குரியவர்கள் செய்யத்தக்க செயல்களைச் சீராய் நாம் செய்வோம். களியாட்டமும், குடிவெறியும், வேசித்தனமும், காமவிகாரமும், வாக்குவாதமும், பொறாமையும் உள்ளவர்களாக நாம் இருக்கக் கூடாது. 14 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையே ஆடையாக அணிந்துகொள்ளுங்கள். உங்கள் பாவ ஆசைகளைப் பூர்த்தி செய்துகொள்வது பற்றியும் தீய காரியங்களை செய்வது பற்றியும் யோசிக்காதீர்கள்.

சங்கீதம் 23

தாவீதின் பாடல்

23 கர்த்தர் என் மேய்ப்பர்.
    எனக்குத் தேவையானவை எப்போதும் என்னிடமிருக்கும்.
அவர் பசுமையான புல்வெளிகளில் என்னை இளைப்பாறச் செய்கிறார்.
    குளிர்ந்த நீரோடைகளருகே அவர் என்னை வழிநடத்துகிறார்.
அவர் நாமத்தின் நன்மைக்கேற்ப, என் ஆத்துமாவிற்குப் புது வலிமையைத் தருகிறார்.
    அவர் நல்லவரெனக் காட்டும்படி, நன்மையின் பாதைகளில் என்னை நடத்துகிறார்.
மரணத்தின் இருண்ட பள்ளத்தாக்குகளில் நான் நடந்தாலும் எந்தத் தீமைக்கும் பயப்படமாட்டேன்.
    ஏனெனில் கர்த்தாவே, நீர் என்னோடிருக்கிறீர்.
    உமது கோலும் தடியும் எனக்கு ஆறுதல் நல்கும்.
கர்த்தாவே, என் பகைவர்களின் முன்னிலையில் என் பந்தியை ஆயத்தமாக்கினீர்.
    என் தலையில் எண்ணெயை ஊற்றினீர். என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.
என் ஆயுள் முழுவதும் உமது நன்மையும் இரக்கமும் என்னோடிருக்கும்.
    நித்திய காலமாக நான் கர்த்தருடைய ஆலயத்தில் அமர்ந்திருப்பேன்.

நீதிமொழிகள் 20:11

11 ஒரு குழந்தைகூடத் தனது செயலால் நல்லதா கெட்டதா என்று வெளிப்படுத்த முடியும். அது நல்லதா நேர்மையானதா என்பதை நீ கவனித்தால் அறிந்துகொள்ள முடியும்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center