Print Page Options Listen to Reading
Previous Prev Day Next DayNext

The Daily Audio Bible

This reading plan is provided by Brian Hardin from Daily Audio Bible.
Duration: 731 days

Today's audio is from the NET. Switch to the NET to read along with the audio.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
2 நாளாகமம் 14-16

14 அபியா தன் முற்பிதாக்களோடு சேர்க்கப்பட்டான். ஜனங்கள் அவனை தாவீதின் நகரத்திலே அடக்கம் செய்தனர். பிறகு அபியாவின் மகனான ஆசா புதிய அரசனானான். ஆசாவின் காலத்தில் நாட்டில் பத்தாண்டு காலம் சமாதானம் இருந்தது.

யூத அரசனான ஆசா

ஆசா தன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நல்லனவற்றையும், சரியானவற்றையும் செய்தான். ஆசா அந்நிய தெய்வங்களின் பலிபீடங்களையும், மேடைகளையும் அகற்றினான். சிலைகளை உடைத்தான். விக்கிரகத் தோப்புகளை அழித்தான். யூத ஜனங்கள் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றும்படி கட்டளையிட்டான். அவரே நம் முற்பிதாக்களால் ஆராதிக்கப்பட்ட தேவன். அவரது கட்டளைகளையும், சட்டங்களையும் கைக்கொள்ள வேண்டும் என்றான். ஆசா யூதா நாட்டிலுள்ள அனைத்து நகரங்களிலும் அமைக்கப்பட்ட மேடைகளையும், நறுமணப் பொருட்கள் எரிக்கப்படும் பலிபீடங்களையும் அகற்றினான். எனவே ஆசா அரசனாக இருந்த காலத்தில் அவனது அரசு சமாதானமாக இருந்தது. இந்த சமாதானமான காலத்தில் ஆசா யூதா நாட்டில் பலமிக்க நகரங்களை உருவாக்கினான். இக்கால கட்டத்தில் ஆசா எந்தவிதமான போரிலும் ஈடுபடவில்லை. ஏனென்றால் கர்த்தர் அவனுக்கு சமாதானத்தைக் கொடுத்தார்.

ஆசா யூத ஜனங்களிடம், “இந்த நகரங்களை உருவாக்கி இவற்றைச் சுற்றி சுவர்களை எழுப்புவோம். கோபுரங்களையும், வாசல்களையும், வாசல்களுக்குத் தாழ்ப்பாள்களையும் அமைப்போம். இந்த நாட்டில் நாம் இன்னும் வாழ்ந்துக்கொண்டிருக்கின்ற காலத்தில் இதைச் செய்வோம். இந்நாடு நமக்குரியது. ஏனென்றால் நாம் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றுகிறோம். அவர் நம்மைச் சுற்றிலும் சமாதானத்தை உருவாக்கினார்” என்றான். எனவே அவர்கள் அவ்வாறே கட்டினார்கள். தம் செயல்களில் வெற்றி பெற்றனர்.

ஆசாவின் படையில் 3,00,000 பேர் கொண்ட படை யூதா கோத்திரத்திலிருந்தும், 2,80,000 பேர் கொண்ட படைக்குழு பென்யமீனின் கோத்திரத்திலிருந்தும் சேர்ந்திருந்தனர். யூத வீரர்கள் பெரிய கேடயங்களையும் ஈட்டிகளையும் சுமந்துவந்தனர். பென்யமீன் வீரர்கள் சிறிய கேடயங்களையும் வில்லம்புகளையும் தாங்கினார்கள். இவர்கள் அனைவரும் தைரியமும் பலமும் மிக்க வீரர்கள்.

அப்போது ஆசாவின் படைகளுக்கு எதிராகச் சேரா என்பவன் கிளம்பினான். சேரா எத்தியோப்பியன். அவனிடம் 10,00,000 வீரர்களும் 300 இரதங்களும் இருந்தன. அவனது படை மரேசாவரை வந்தது. 10 ஆசா சேராவுக்கு எதிராகப் போரிடவந்தான். மரேசாவில் உள்ள செப்பத்தா என்னும் பள்ளத்தாக்கிலே ஆசாவின் படை வீரர்கள் போரிடத் தயாராக இருந்தனர்.

11 ஆசா தனது தேவனாகிய கர்த்தரை அழைத்து, “கர்த்தாவே, பலமானவர்களை எதிர்க்கும் பலவீனர்களுக்கு உதவ உம்மால் தான் முடியும்! எங்களுக்கு உதவும்! எங்கள் தேவனாகிய கர்த்தாவே! நாங்கள் உம்மையேச் சார்ந்துள்ளோம். உமது பேரால் இப்பெரும் படையோடு போரிடப்போகிறோம். கர்த்தாவே, நீர் எங்கள் தேவன். உமக்கு எதிராக எவரையும் வெல்லும்படிவிடாதீர்!” என்றான்.

12 பிறகு கர்த்தர் எத்தியோப்பியா படையை வெல்ல ஆசாவின் படையைப் பயன்படுத்தினார். எத்தியோப்பியா படையினர் ஓடிப்போயினர். 13 ஆசாவின் படையினர் எத்தியோப்பியா படையினரைக் கேரார் வரை விரட்டிக்கொண்டு சென்றனர். எத்தியோப்பியா வீரர்கள் மீண்டும் கூடிப் போரிட முடியாதபடி கொல்லப்பட்டனர். கர்த்தராலும் அவரது படையினராலும் நசுக்கப்பட்டனர். பகைவரிடமிருந்து ஆசாவும், அவனது படையினரும் விலையுயர்ந்த பொருட்களைக் கைப்பற்றிக்கொண்டனர். 14 ஆசாவும், அவனது படையினரும் கேரார் அருகிலுள்ள அனைத்து நகரங்களையும் தோற்கடித்தனர். அந்நகரங்களில் வாழ்ந்த ஜனங்கள் கர்த்தருக்கு பயந்தார்கள். அந்நகரங்களில் ஏராளமாக விலையுயர்ந்தப் பொருட்கள் இருந்தன. அவற்றிலிருந்து ஆசாவின் படையினர் அந்த விலையுயர்ந்த பொருட்களை அள்ளிக்கொண்டு வந்தார்கள். 15 ஆசாவின் படை மேய்ப்பர்களின் கூடாரங்களையும் தாக்கியது. அவர்கள் அங்கிருந்த நிறைய வெள்ளாடுகளையும், ஒட்டகங்களையும் கவர்ந்தனர். பிறகு ஆசாவின் படையினர் எருசலேமிற்குத் திரும்பிச் சென்றனர்.

ஆசாவின் மாற்றங்கள்

15 தேவனுடைய ஆவி அசரியாவின் மீது வந்தது. அசரியா ஓபேதின் மகன். அசரியா, ஆசாவைச் சந்திக்கச் சென்றான். அசரியா, “ஆசாவே, யூதா மற்றும் பென்யமீனின் எல்லா ஜனங்களே! என்னைக் கவனியுங்கள். நீங்கள் கர்த்தரோடு இருக்கும்போது அவரும் உங்களோடு இருப்பார். நீங்கள் கர்த்தரைத் தேடினால் கண்டுகொள்ளலாம். ஆனால் நீங்கள் அவரை விட்டு விலகினால் அவரும் விலகி விடுவார். நீண்ட காலத்திற்கு இஸ்ரவேலர்கள் உண்மையான தேவன் இல்லாமல் இருந்தனர். மேலும் அவர்கள் போதிக்கும் ஆசாரியர் இல்லாமலும், சட்டங்கள் இல்லாமலும் இருந்தார்கள். ஆனால் இஸ்ரவேல் ஜனங்களுக்குத் துன்பம் வந்தபோது அவர்கள் மீண்டும் கர்த்தருடைய பக்கம் திரும்பினார்கள். அவரே இஸ்ரவேலின் தேவன். அவர்கள் கர்த்தரைத் தேடினார்கள்; கண்டுகொண்டனர். அந்தக் கஷ்டகாலங்களில் எவராலும் பாதுகாப்பாகப் பயணம் செய்ய முடியவில்லை. எல்லா நாடுகளிலும் துன்பங்கள் ஏற்பட்டன. ஒரு நாடு இன்னொரு நாட்டை அழித்தது. ஒரு நகரம் இன்னொரு நகரத்தை அழித்தது. தேவன் அவர்களுக்கு எல்லாவிதமான துன்பங்களையும் கொடுக்கவேண்டும் என்று எண்ணியதால் இவ்வாறு நிகழ்ந்தது. ஆனால் ஆசா, நீயும் யூதா மற்றும் பென்யமீனின் ஜனங்களும் பலமுடையவர்களாக இருங்கள். பலவீனமாய் இருக்காதீர்கள். எதையும் கைவிட்டுவிடாதீர்கள். ஏனென்றால் உங்கள் பணிகளுக்குத்தக்க வெகுமதி கிடைக்கும்!” என்றான்.

ஆசா இந்த வார்த்தைகளையும் தீர்க்கதரிசியான ஓபேதின் வார்த்தைகளையும் கேட்டதும் ஊக்க உணர்வை அடைந்தான். பிறகு அவன் யூதா மற்றும் பென்யமீன் பகுதிகளில் இருந்த வெறுக்கத்தக்க விக்கிரகங்களை அப்புறப்படுத்தினான். எப்பிராயீம் மலைநாட்டில் தான் கைப்பற்றிய ஊர்களில் இருந்த வெறுக்கத்தக்க விக்கிரகங்களையும் அப்புறப்படுத்தினான். கர்த்தருடைய ஆலய முன்வாயிலின் முன்னால் இருந்த கர்த்தருடைய பலிபீடத்தைப் புதுப்பித்தான்.

பிறகு ஆசா, யூதா மற்றும் பென்யமீன் ஜனங்கள் அனைவரையும் எருசலேமில் கூட்டினான். அவன் எப்பிராயீம், மனாசே, சிமியோன் ஆகிய கோத்திரத்தினர்களையும் கூட்டினான். அவர்கள் வாழ்வதற்காக இஸ்ரவேல் நாட்டிலிருந்து யூதாவிற்கு குடியேறியவர்கள். இதுபோல் ஏராளமான ஜனங்கள் யூதாவிற்கு வந்தனர். ஏனென்றால் ஆசாவின் தேவனாகிய கர்த்தர் ஆசாவோடு அங்கே இருப்பதைக் கண்டனர்.

10 ஆசாவும், அந்த ஜனங்கள் அனைவரும் எருசலேமில் கூடினார்கள். அது ஆசாவின் 15வது ஆட்சியாண்டின் மூன்றாவது மாதமாகும். 11 அப்போது அவர்கள் 700 காளைகளையும், 7,000 ஆடுகளையும் பலியிட்டனர். இப்பலிப் பொருட்களையும் மற்ற விலையுயர்ந்தவற்றையும் ஆசாவின் படையினர் தம் எதிரிகளிடமிருந்து அபகரித்து வந்தனர். 12 பிறகு அவர்கள் தம் மனப்பூர்வமாகவும், ஆத்மபூர்வமாகவும் தேவனாகிய கர்த்தருக்கு சேவைசெய்வதாக ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டனர். அவரே அவர்களது முற்பிதாக்களால் சேவைசெய்யப்பட்ட தேவன். 13 எவனொருவன் தேவனாகிய கர்த்தருக்குச் சேவை செய்ய மறுக்கிறானோ அவன் கொல்லப்பட்டான். அவன் முக்கியமானவனா அல்லது முக்கியம் இல்லாதவனா, அவன் ஆணா அல்லது பெண்ணா என்பது ஒரு பொருட்டல்ல. 14 பிறகு ஆசாவும், ஜனங்களும் கர்த்தருக்கு முன்னால் ஒரு சபதம் செய்தார்கள். அவர்கள் மிக உரத்தகுரலில் கூவினார்கள். மேலும் செம்மறியாட்டுக் கடாவின் கொம்புகளையும், எக்காளங்களையும் ஊதினார்கள். 15 யூதா ஜனங்கள் அனைவரும் அந்த உறுதிமொழியைக் குறித்து மகிழ்ச்சியடைந்தனர். ஏனென்றால் அவர்கள் தம் மனப்பூர்வமாகச் சத்தியம் செய்தனர். அவர்கள் மனப் பூர்வமாக தேவனைப் பின்பற்றினர். அவர்கள் தேவனைத் தேடிக் கண்டடைந்தனர். எனவே கர்த்தர் நாடு முழுவதிலும் உள்ள ஜனங்களுக்கு சமாதானத்தை அளித்தார்.

16 ஆசா அரசன் தன் தாயான மாகாளை ராஜாத்தி என்ற பதவியிலிருந்து நீக்கிவிட்டான். ஏனென்றால் அவள் அஷா என்னும் தேவதையை வழிபடும் கம்பத்தை உருவாக்கினாள். ஆசா அந்த அஷா கம்பத்தை உடைத்து துண்டுத்துண்டாக நொறுக்கிவிட்டான். பிறகு அத்துண்டுகளை கீதரோன் சமவெளியில் சுட்டெரித்தான். 17 பல மேடைகளோ யூதா நாட்டில் இன்னும் அழிக்கப்படாமல் இருந்தன. எனினும் ஆசாவின் இதயம் அவனது வாழ்நாள் முழுவதும் கர்த்தரோடு இருந்தது.

18 ஆசா, தானும் தன் தந்தையும் அளித்த பரிசுத்த அன்பளிப்புகளை தேவனுடைய ஆலயத்தில் கொண்டு வந்து வைத்தான். அவை பொன்னாலும், வெள்ளியாலும் செய்யப்பட்டவை. 19 ஆசாவின் 35வது ஆட்சியாண்டுவரை நாட்டில் போர் இல்லாமல் இருந்தது.

ஆசாவின் இறுதி ஆண்டுகள்

16 ஆசாவின் 36வது ஆட்சி ஆண்டில் யூதா நாட்டினை பாஷா தாக்கினான். பாஷா இஸ்ரவேலின் அரசன் ஆவான். அவன் ராமா என்னும் நகருக்குச் சென்று அதையே ஒரு கோட்டையாகக் கட்டினான். ஜனங்கள் யூதாவின் அரசனான ஆசாவிடம் செல்வதையோ அல்லது அவனிடமிருந்து திரும்புவதையோ தடுப்பதற்கான இடமாக ராமா ஊரினைப் பயன்படுத்தினான். கர்த்தருடைய ஆலயத்தில் கருவூலத்தில் இருந்த பொன்னையும் வெள்ளியையும் ஆசா வெளியே எடுத்தான். அரண்மனை கருவூலத்தில் உள்ள பொன்னையும் வெள்ளியையும் ஆசா எடுத்தான். பிறகு அவன் பென்னாதாத்துக்கு தூது அனுப்பினான். பென்னாதாத் ஆராம் நாட்டு அரசன். அவன் தமஸ்கு நகரத்தில் இருந்தான். ஆசாவின் செய்தி இது: “பென்னாதாத் நீயும் நானும் ஒரு ஒப்பந்தம் செய்துக்கொள்வோம். உன் தந்தையும் என் தந்தையும் செய்த ஒப்பந்தம் போன்று இருக்கட்டும். நான் உனக்குப் பொன்னும் வெள்ளியும் அனுப்புவேன். நீ இப்போது பாஷாவுடன் உள்ள ஒப்பந்தத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வந்துவிடு. அதனால் அவன் எனக்குத் துன்பம் தராமல் விலகிவிடுவான்.”

பென்னாதாத் அரசனாகிய ஆசா சொன்னவற்றை ஒத்துக்கொண்டான். அவன் தனது படைத் தளபதிகளை அனுப்பி இஸ்ரவேல் நகரங்களைத் தாக்கினான். அவர்கள் ஈயோன், தாண், ஆபேல், மாயீம், நப்தலிப் பகுதியில் இருந்த ஊர்கள் ஆகியவற்றைத் தாக்கினார்கள். இந்நகரங்களில் கருவூலங்களும் பண்டகச்சாலைகளும் இருந்தன. இஸ்ரவேல் நகரங்கள் தாக்கப்படுவதை பாஷா கேள்வியுற்றான். எனவே அவன் ராமாவில் கோட்டை கட்டுவதை விட்டுவிட்டு விலகிப்போனான். பிறகு ஆசா அரசன் யூதா ஜனங்கள் அனைவரையும் ஒன்றாகக் கூட்டினான். அவர்கள் ராமா நகரத்திற்குச் சென்றார்கள். அங்கு கோட்டை கட்டுவதற்காக பாஷா வைத்திருந்த கல், மரம் போன்றவற்றை எடுத்துக்கொண்டு வந்துவிட்டார்கள். அவற்றால் அவர்கள் கேபா, மிஸ்பா ஆகிய நகரங்களை பலமுள்ளதாகக் கட்டினார்கள்.

அப்போது யூதாவின் அரசனான ஆசாவிடம் அனானி எனும் ஞானதிருஷ்டிக்காரன் வந்தான். அனானி அரசனிடம், “ஆசா, நீ உதவிக்காக ஆராம் நாட்டு அரசனையே சார்ந்திருந்தாய். உனது தேவனாகிய கர்த்தரைச் சார்ந்திருக்கவில்லை. நீ உன் உதவிக்காக கர்த்தரைச் சார்ந்திருக்கவேண்டும். ஆனால் உதவிக்காகக் கர்த்தரைச் சாராததால் ஆராம் நாட்டு படையும் உன் கைகளில் இருந்து விலகிப்போனது. எத்தியோப்பியர்களிடமும் லூபியர்களிடமும் வலிமைமிக்க பெரிய படை இருந்தது. அவர்களிடம் ஏராளமான இரதங்களும் குதிரை வீரர்களும் இருந்தனர். ஆனால் நீ உதவிக்கு கர்த்தரை நாடியபோது அவர் இவர்களை வெல்லும்படி உதவினார். கர்த்தருடைய கண்கள் பூமியில் உள்ள அனைவர் மீதும் சுற்றிவரும். தனக்கு உண்மையானவர்களை அவர் தேடி அவர்களை பலமுள்ளவர் ஆக்குவார். ஆசா நீ முட்டாள்தனமாக நடந்துக்கொண்டாய். எனவே இப்போது முதல் நீ போர்களை சந்திப்பாய்” என்றான்.

10 ஆசாவிற்கு அனானி மீது அவன் பேசிய சொற்களுக்காக கோபம் வந்தது. அவன் எந்தவித காரணமின்றி அனானியைச் சிறையில் அடைத்தான். இக்காலக் கட்டத்தில் ஆசா பலரிடம் கொடூரமாக நடந்துக்கொண்டான்.

11 தொடக்கம் முதல் இறுதிவரை ஆசா செய்த செயல்கள் யூதா மற்றும் இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. 12 ஆசாவின் 39வது ஆட்சியாண்டில் அவன் காலில் நோய் வந்தது. இது மிக மோசமான நோய். எனினும் கர்த்தருடைய உதவியை நாடவில்லை. உதவிக்காக மருத்துவர்களை நாடினான். 13 ஆசா தனது 41வது ஆட்சியாண்டில் மரித்தான். அவன் தன் முற்பிதாக்களோடு சேர்க்கப்பட்டான். 14 தாவீதின் நகரத்திலே ஆசா தனக்கென்று ஒரு கல்லறை அமைத்திருந்தான். ஜனங்கள் அவனை அதிலேயே அடக்கம் செய்தனர். அவனை வாசனைப் பொருட்களாலும் பலவகை மணக்கலவைகளாலும் அமைக்கப்பட்ட மெத்தை மீது வைத்தனர். ஆசாவை கௌரவிப்பதற்காக ஜனங்கள் ஒரு பெரும் நெருப்பை உண்டாக்கினார்கள்.

ரோமர் 9:1-24

தேவனும் யூதமக்களும்

நான் கிறிஸ்துவுக்குள் இருக்கிறேன். நான் உண்மையைக் கூறுகிறேன். நான் பொய் சொல்வதில்லை. என் உணர்வுகள் பரிசுத்த ஆவியானவரால் ஆளப்படுகின்றன. அந்த உணர்வுகள் நான் பொய்யானவனில்லை என்று கூறுகின்றன. எனக்குப் பெருந்துக்கம் உண்டு. யூதமக்களுக்காக எப்பொழுதும் நான் மிகவும் கவலைப்படுகிறேன். அவர்கள் எனது சகோதர சகோதரிகளுமாகவும், மண்ணுலகக் குடும்பமுமாகவும் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவ விரும்புகிறேன். அவர்களுக்கு உதவியாக இருக்குமானால் நான் பழிக்கப்படவும், கிறிஸ்துவிலிருந்து துண்டித்துக்கொள்ளவும் தயாராக இருக்கிறேன். அவர்கள் இஸ்ரவேல் மக்கள். யூதர்கள் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிள்ளைகள். தேவனுடைய மகிமை அவர்களுக்கு உண்டு. தேவனுக்கும் அவர்களுக்கும் இடையில் உடன்படிக்கைகள் உண்டு. தேவன் அவர்களுக்கு மோசேயின் நியாயப்பிரமாணத்தையும், வழிபாட்டு முறைகளையும் கொடுத்தார். தனது வாக்குறுதிகளை யூதர்களுக்கு தேவன் கொடுத்திருக்கிறார். அவர்கள் நமது மூதாதையர்களின் வழி வந்தவர்கள். அவர்கள் வழியில் கிறிஸ்துவும் மண்ணுலகில் பிறந்தார். கிறிஸ்துவே எல்லாவற்றுக்கும் மேலான தேவன். அவரை எப்பொழுதும் துதியுங்கள். ஆமென்.

நான் யூதர்களுக்காக வருத்தப்படுகிறேன். அவர்களிடம் தேவன் தன் வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தவறிவிட்டார் என்று எண்ணுகிறதில்லை. ஆனால் இஸ்ரவேல் மக்களில் ஒரு சிலரே தேவனுடைய உண்மையான மக்களாய் இருக்கிறார்கள். ஆபிரகாமின் சில மரபுவழியினரே ஆபிரகாமின் உண்மையான மக்களாக இருக்கின்றனர். இதையே ஆபிரகாமிடம் தேவன் “ஈசாக்கு உனது சட்டபூர்வமான மகன்” [a] என்று கூறினார். ஆபிரகாமின் அனைத்து சந்ததியினருமே தேவனுடைய பிள்ளைகள் இல்லை என்பது தான் இதன் பொருள். ஆபிரகாமுக்கு அவர் வாக்குறுதி செய்தார். ஆனால் ஆபிரகாமின் உண்மையான பிள்ளைகள் எல்லாம் தேவனுக்கும் உண்மையான பிள்ளைகள் ஆகின்றனர். ஏனென்றால் “சரியான நேரத்தில் நான் திரும்ப வருவேன். சாராள் ஒரு மகனைப் பெற்றெடுப்பாள்” [b] என்பது தான் தேவனுடைய வாக்குறுதி.

10 அது மட்டுமல்ல, ரெபேக்காவும் பிள்ளைகளைப் பெற்றாள். ஒரே தந்தையை இப்பிள்ளைகள் கொண்டிருந்தார்கள். அவரே நமது தந்தையான ஈசாக்கு. 11-12 இரு மகன்களும் பிறப்பதற்கு முன்பே தேவன் ரெபேக்காவிடம், “மூத்த மகன் இளையவனுக்கு சேவை செய்வான்” [c] என்றார். அவர்கள் நல்லதோ தீயதோ எதுவாக இருந்தாலும் செய்வதற்கு முன்னரே தேவன் இவ்வாறு சொன்னார். இத்திட்டம் ஏற்கெனவே தேவனால் உருவாக்கப்பட்டது என்பதுதான் காரணம். தேவன் அவனைத் தேர்ந்தெடுக்க விரும்பினார். அதனால் தேர்ந்தெடுத்தார். அதுதான் காரணமே தவிர பிள்ளைகள் ஏதோ செய்ததற்காக அல்ல. 13 “நான் யாக்கோபை நேசித்தேன். ஏசாவை வெறுத்தேன்” [d] என்று எழுதப்பட்டிருக்கிறது.

14 எனவே இதைப்பற்றி நாம் என்ன சொல்ல முடியும்?தேவன் அநீதியாய் இருக்கிறார் என்று சொல்ல முடியுமா? முடியாதே. 15 “நான் யாரிடம் இரக்கம் காட்டவேண்டும் என்று விரும்புகிறேனோ அவனிடம் இரக்கம் காட்டுவேன்.” [e] என்று தேவன் மோசேயிடம் சொல்லி இருக்கிறார். 16 எனவே கருணை காட்டப்படத் தகுதியான ஒருவனை தேவன் தேர்ந்தெடுக்கிறார். அவரது தேர்ந்தெடுப்பு மனித விருப்பங்களுக்கும் முயற்சிகளுக்கும் அப்பாற்பட்டது. 17 “நான் உன்னை அரசனாக்கினேன். நீ எனக்காக இதைச் செய். எனது பலத்தை நான் உனக்குக் காட்டும்படியாக எனது பெயர் உலகமெங்கும் அறிவிக்கப்பட வேண்டும் என்று விரும்பினேன்” [f] என தேவன் பார்வோனிடம் கூறியதாக எழுதப்பட்டிருக்கிறது. 18 எனவே, தேவன் இரக்கத்துக்குரியவர்களாகத் தேர்ந்தெடுத்தவர்களிடம் இரக்கமாய் இருக்கிறார். கடினமாக இருக்கத் தேர்ந்தெடுத்தவர்களிடத்தில் கடினமாக இருக்கிறார்.

19 “நமது செயல்களையெல்லாம் தேவனால் கட்டுப்படுத்த முடியுமானால் பிறகு ஏன் அவர் நமது பாவங்களுக்காக நம்மைக் குற்றம் சாட்டுகிறார்” என்று உங்களில் ஒருவர் கேட்கலாம். 20 அதைக் கேட்காதீர்கள். நீங்கள் மானிடர். மானிடர்களுக்கு தேவனைக் கேள்வி கேட்கும் அதிகாரம் இல்லை. ஒரு மண்ஜாடி தன்னைச் செய்தவனிடம் கேள்வி எதுவும் கேட்கக்கூடாது. “என்னை ஏன் இவ்வாறு செய்தாய்?” என்று மண்ஜாடி கேட்கலாமா? 21 ஜாடியைச் செய்கிறவன் தன் விருப்பம் போல் எதை வேண்டுமானாலும் செய்யலாம். அதே களிமண்ணால் அவன் வேறு எந்தப் பொருளை வேண்டுமானாலும் செய்திருக்கலாம். ஒரு பொருளை அவன் சிறப்பான பயனுக்காகவும், மற்றொன்றை அவன் அன்றாட பயனுக்காகவும் செய்யலாம்.

22 இதைப் போன்றுதான் தேவனும் செய்கின்றார். அவர் தமது கோபத்தை வெளிக்காட்டவும் தனது வல்லமையை வெளிப்படுத்தவும் விரும்பினார். தன் கோபத்தைத் தூண்டிய மக்களை அழிக்கத் தயாராய் இருந்த நிலையில் தேவன் அவர்களை மிகப் பொறுமையுடன் சகித்துக்கொண்டார். 23 தன் உயர்வும் சிறப்பும் வெளிப்படும் காலம் வரைக்கும் தேவன் பொறுமையோடு காத்திருந்தார். அவரது இரக்கத்தைப் பெறுவோரிடம் அவர் தனது மகிமையைக் கொடுத்தார். அவர் அதற்குரியவர்களாக அவர்களைத் தயார்படுத்தினார். 24 நாங்களே தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள். நாங்களே தேவனால் அழைக்கப்பட்டவர்கள். அவர் எங்களை யூதர்களிடமிருந்தும் யூதர் அல்லாதவர்களிடமிருந்தும் தேர்ந்தெடுத்தார்.

சங்கீதம் 19

இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்

19 வானங்கள் தேவனுடைய மகிமையைக் கூறுகின்றன.
    தேவனுடைய கரங்கள் செய்த நல்ல செயல்களை ஆகாயங்கள் அறிவிக்கின்றன.
ஒவ்வொரு புதுநாளும் அந்தக் கதையை மேலும் கூறும்.
    ஒவ்வொரு இரவும் தேவனுடைய வல்லமையை மேலும் மேலும் உணர்த்தும்.
உண்மையில் பேச்சையோ, வார்த்தையையோ கேட்கமுடியாது.
    நாம் கேட்கவல்ல சத்தத்தை அவை எழுப்புவதில்லை.
ஆனால் அவற்றின் “குரல்” உலகமெங்கும் செல்கிறது.
    அவற்றின் “வார்த்தைகள்” பூமியின் இறுதியை எட்டுகின்றன.

    ஆகாயம் சூரியனின் வீட்டைப் போன்றிருக்கும்.
படுக்கையறையிலிருந்து வெளிவரும் மகிழ்ச்சியான மணமகனைப்போல் சூரியன் வெளிப்படும்.
    பந்தயத்திற்கு ஆசையாய் காத்திருக்கும் ஓட்ட வீரனைப் போல் சூரியன் வானத்தின் குறுக்கே தன் வழியில் செல்லும்.
ஆகாயத்தின் ஒருமுனையில் தொடங்கி அதன் மறுமுனை வரைக்கும் சூரியன் எங்கும் ஓடும்.
    அதன் வெப்பத்திற்கு எதுவும் தப்ப இயலாது. கர்த்தருடைய போதனைகளும் அப்படிப்பட்டவையே.

கர்த்தருடைய போதனைகள் குறையற்றவை.
    அவை தேவனுடைய ஜனங்களுக்குப் பெலனைக் (ஆற்றலை) கொடுக்கும்.
கர்த்தருடைய உடன்படிக்கை நம்பத்தக்கது.
    அறிவற்றோர் ஞானமடைவதற்கு அது உதவும்.
கர்த்தருடைய சட்டங்கள் நியாயமானவை.
    அவை ஜனங்களை சந்தோஷப்படுத்தும்.
கர்த்தருடைய கட்டளைகள் நல்லவை.
    வாழத்தக்க வழியை அவை ஜனங்களுக்குக் காட்டும்.

கர்த்தரைத் தொழுதுகொள்வது எப்போதும் வெளிச்சமாய் பிரகாசிக்கிற ஒளி போன்றது.
    கர்த்தருடைய நியாயத்தீர்ப்புகள் நல்லவை, செம்மையானவை. அவை முற்றிலும் சரியானவை.
10 கர்த்தருடைய போதனைகள் சுத்தமான பொன்னைக்காட்டிலும் பெருமதிப்புடையவை.
    தேனடையிலிருந்து வரும் உயர்ந்த தேனைக் காட்டிலும் அவை இனிமையானவை.
11 கர்த்தருடைய போதனைகள் அவர் வேலையாளை எச்சரிக்கின்றன.
    அவருக்குக் கீழ்ப்படிவதால் நல்லவை நிகழும்.

12 கர்த்தாவே, ஒருவனும் தன் எல்லா பிழைகளையும் காணமுடியாது.
    எனவே மறைவான பாவங்கள் நான் செய்யாதிருக்க உதவும்.
13 கர்த்தாவே, நான் செய்ய விரும்பும் பாவங்களிலிருந்து என்னை விலக்கும்.
    அப்பாவங்கள் என்னை ஆள அனுமதியாதிரும்.
நீர் உதவினால்
    நான் பாவங்களிலிருந்து விலகி தூயவனாய் இருக்க முடியும்.
14 என் வார்த்தைகளும் எண்ணங்களும் உமக்கு ஏற்றதாய் இருக்கட்டும்.
    கர்த்தாவே, நீர் என் பாறை. நீரே என்னை விடுவிப்பவர்.

நீதிமொழிகள் 20:1

20 திராட்சைரசமும் மதுவும் ஜனங்களின் சுயக் கட்டுப்பாட்டைக் குலைத்துவிடுகிறது. அவர்கள் சத்தமிட்டு ஆரவாரம் செய்வார்கள். அவர்கள் போதை ஏறி முட்டாள்தனமான செயல்களைச் செய்வார்கள்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center