Print Page Options Listen to Reading
Previous Prev Day Next DayNext

The Daily Audio Bible

This reading plan is provided by Brian Hardin from Daily Audio Bible.
Duration: 731 days

Today's audio is from the NLT. Switch to the NLT to read along with the audio.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
2 நாளாகமம் 11-13

11 ரெகொபெயாம் எருசலேம் வந்தபோது 1,80,000 சிறந்த வீரர்களை அணி திரட்டினான். இவ்வீரர்களை யூதா மற்றும் பென்யமீன் ஆகிய கோத்திரங்களிடமிருந்து அணி திரட்டினான். இஸ்ரவேலர்களுக்கு எதிராகச் சண்டையிடவே அவர்களை அணி திரட்டினான். இதன் மூலம் அவர்களை தன் ஆட்சிக்குள் வைத்திருக்க முடியும் என்று நம்பினான். ஆனால் கர்த்தரிடமிருந்து ஒரு செய்தி செமாயாவிற்கு வந்தது. அவன் தேவனுடைய மனிதன். கர்த்தர் அவனிடம், “யூதாவின் அரசனாகிய சாலொமோனின் மகன் ரெகொபெயாமிடமும், இஸ்ரவேலிலும், யூதாவிலும், பென்யமீனிலும் உள்ள ஜனங்களிடமும் கூறு என்று கர்த்தர் சொன்ன செய்திகள் இவை தான்: ‘உன் சகோதரர்களோடு நீ சண்டை போடாதே! ஒவ்வொருவரையும் தம் சொந்த வீட்டுக்குப் போகவிடு. நான் இவ்வாறு நிகழும்படிச் செய்தேன்.’” எனவே ரெகொபெயாமும் அவனது படையும் கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து திரும்பி வந்தது. அவர்கள் யெரொபெயாமைத் தாக்கவில்லை.

ரெகொபெயாம் யூதாவை பலப்படுத்துகிறான்

ரெகொபெயாம் எருசலேமில் வாழ்ந்தான். தாக்குதல்களில் இருந்து தப்பிக்க யூதாவில் அவன் பலமான நகரங்களை நிர்மாணித்தான். அவன் பெத்லேகம், ஏத்தாம், தெக்கோவா, பெத்சூர், சோகோ, அதுல்லாம், காத்து, மரேஷா, சீப்பு அதோராயீம், லாகீசு, அசேக்கா, 10 சோரா, ஆயிலோன், எப்ரோன் ஆகிய நகரங்களைச் செப்பனிட்டான். யூதாவிலும் பென்யமீனிலுமிருந்த இந்த நகரங்கள் பலப்படுத்தப்பட்டன. 11 ரெகொபெயாம் இவற்றைப் பலப்படுத்திய பிறகு அவற்றில் தலைவர்களை நியமித்தான். அவர்களுக்கு உணவு, எண்ணெய், திராட்சைரசம் போன்றவற்றை விநியோகித்தான். 12 இவன் ஈட்டிகளையும், கேடயங்களையும் வைத்து அந்நகரங்களைப் பலப்படுத்தினான். யூதா, பென்யமீன் ஆகிய நாடுகளின் நகரங்களையும் ஜனங்களையும் தன் ஆட்சிக்குள் வைத்திருந்தான்.

13 இஸ்ரவேலில் உள்ள அனைத்து ஆசாரியர்களும் லேவியர்களும் ரெகொபெயாமோடு சேர்ந்து கொண்டு அவனுக்கேற்றவர்கள் ஆனார்கள். 14 லேவியர்கள் தம் புல்வெளிகளையும் வயல்களையும் விட்டுவிட்டு யூதாவுக்கும் எருசலேமிற்கும் வந்தனர். காரணம், யெரொபெயாமும் அவனது மகன்களும், லேவியர்கள் கர்த்தருக்கு ஆசாரியர்களாக சேவை செய்வதை மறுத்தனர்.

15 யெரொபெயாம் தன் சொந்த ஆசாரியர்களையே மேடைகளில் பலிசெலுத்த தேர்ந்தெடுத்தான். அவன் செய்த ஆடு மற்றும் கன்றுக் குட்டியின் விக்கிரகங்களை அந்த மேடைகளில் அமைத்தான். 16 லேவியர்கள் இஸ்ரவேலை விட்டு விலகியதும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் மீது நம்பிக்கைகொண்ட இஸ்ரவேலின் அனைத்துக் கோத்திரங்களிலுமிருந்த ஜனங்களும் எருசலேமுக்கு வந்தார்கள். அவர்கள் தங்களது முன்னோர்களின் தேவனாகிய கர்த்தருக்கு காணிக்கை செலுத்த எருசலேமுக்கு வந்தார்கள். 17 அவர்கள் யூத அரசைப் பலமுள்ளதாக்கினார்கள். அவர்கள் மூன்று ஆண்டு காலத்திற்குச் சாலொமோனின் மகனான ரெகொபெயாமிற்கு உதவினார்கள். அவர்கள் இக்காலக்கட்டத்தில் தாவீதைப்போலவும் சாலொமோனைப் போலவும் வாழ்ந்ததால் இவ்வாறு செய்தனர்.

ரெகொபெயாமின் குடும்பம்

18 ரெகொபெயாம் மகலாத் என்னும் பெண்ணை மணந்தான். அவளது தந்தை எரிமோத். அவளது தாய் அபியாயேல், எரிமோத் தாவீதின் மகன். அபியாயேல் எலியாப்பின் மகள். எலியாப் ஈசாயின் மகன். 19 மகலாத் ரெகொபெயாமிற்கு ஏயூஸ், சமரியா சாகாம் என்னும் மகன்களைப் பெற்றாள். 20 பிறகு ரெகொபெயாம் மாக்கா என்னும் பெண்ணையும் மணந்தான். அவள் அப்சலோமின் பேத்தி. இவள் இவனுக்கு அபியா, அத்தாயி, சீசா, செலேமித் ஆகியோரைப் பெற்றாள். 21 ரெகொபெயாம் தனது மற்ற மனைவியரையும், வேலைக்காரிகளையும் விட மாக்காவைப் பெரிதும் நேசித்தான். அவனுக்கு 18 மனைவியரும், 60 வேலைக்காரிகளும் இருந்தனர். இவனுக்கு 28 மகன்களும், 60 மகள்களும் இருந்தனர்.

22 ரெகொபெயாம் அபியாவைத் தனது சகோதரர்களுக்கும் மேலான தலைவனாகத் தேர்ந்தெடுத்தான். அவன் இவனை அரசனாக்க விரும்பியதால் இவ்வாறு செய்தான். 23 ரெகொபெயாம் புத்திசாலித்தனமாகத் தன் மகன்களை யூதா மற்றும் பென்யமீன் ஆகிய நாடுகளில் பரவலாக ஒவ்வொரு பலமான நகரத்திலும் இருக்கும்படி செய்தான். அவர்களுக்கு வேண்டியவற்றை விநியோகம் செய்தான். அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்தான்.

எகிப்தின் அரசனான சீஷாக் எருசலேமைத் தாக்குகிறான்

12 ரெகொபெயாம் ஒரு பலமிக்க அரசன் ஆனான். அவன் தனது ஆட்சியையும் பலமுள்ளதாக்கினான். பின்னர் அவனும், அவனது யூதா கோத்திரத்தினரும் கர்த்தருடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிய மறுத்தனர். சீஷாக் எருசலேம் நகரத்தை ரெகொபெயாமின் ஐந்தாவது ஆட்சியாண்டில் தாக்கினான். இவன் எகிப்தின் அரசன். ரெகொபெயாமும், அவனுடன் ஆட்சி செய்தவர்களும் கர்த்தருக்கு உண்மையுள்ளவர்களாக இல்லாததால் இவ்வாறு நடந்தது. சீஷாக்கிடம் 12,000 இரதங்களும், 60,000 குதிரை வீரர்களும், எவராலும் எண்ணிக்கையிட முடியாத அளவுடைய படைவீரர்களும் இருந்தனர். இவனது பெரியப் படையில் லிபியன் வீரர்களும், சூக்கிய வீரர்களும், எத்தோப்பிய வீரர்களும் இருந்தனர். சீஷாக் யூதாவிலுள்ள பலமிக்க நகரங்களை வென்றான். பிறகு தனது படையை எருசலேமிற்கு கொண்டு வந்தான்.

பிறகு செமாயா எனும் தீர்க்கதரிசி ரெகொபெயாமிடமும் யூதத் தலைவர்களிடமும் வந்தான். அந்த யூதத் தலைவர்கள் எருசலேமில் கூடியிருந்தனர். ஏனென்றால் அவர்கள் சீஷாக்குக்குப் பயந்தனர். செமாயா அவர்களிடம், “கர்த்தரால் சொல்லப்பட்டது இதுதான்: ‘ரெகொபெயாம்! நீயும், உனது ஜனங்களும் என்னைவிட்டு விலகி எனது சட்டங்களுக்கு கீழ்ப்படிய மறுத்துவிட்டீர்கள். எனவே இப்போது உன்னைவிட்டு நான் விலகி நான் உங்களைச் சீஷாக்கின் கையில் அகப்படச் செய்வேன்’” என்றான்.

பிறகு யூதத் தவைர்களும், ரெகொபெயாம் அரசனும் வருத்தத்துடனும், பணிவுடனும் இருந்தனர். “கர்த்தர் சொல்வது சரிதான்” என்றனர்.

யூதத் தலைவர்களும், அரசனும் அடங்கிப் போனதைக் கர்த்தர் கவனித்தார். பிறகு கர்த்தரிடமிருந்து செமாயாவுக்குச் செய்தி வந்தது. கர்த்தர் செமாயாவிடம், “யூதத் தலைவர்களும், அரசனும் அடக்கமாயினர். எனவே நான் அவர்களை அழிக்கமாட்டேன். நான் விரைவில் அவர்களைக் காப்பேன். எனது கோபத்தை தீர்க்க சீஷாக்கை எருசலேமின் மீது அனுப்பமாட்டேன். ஆனால் எருசலேம் ஜனங்கள் சீஷாக்கின் வேலைக்காரர்கள் ஆவார்கள். இதனால் அவர்களுக்கு எனக்கு சேவைச் செய்வதற்கும் மற்ற தேசத்து அரசர்களுக்கு சேவைச் செய்வதற்கும் உள்ள வேறுபாடு புரியும்” என்றார்.

சீஷாக் எருசலேமைத் தாக்கினான். கர்த்தருடைய ஆலயத்தில் இருந்த கருவூலத்தைக் கைப்பற்றிக்கொண்டான். அரண்மனையில் இருந்த கருவூலத்தையும் கைப்பற்றிக் கொண்டான். அவன் அனைத்தையும் எடுத்துக் கொண்டு வெளியேறினான். சாலொமோன் செய்த தங்கக் கேடயங்களையும் எடுத்துக் கொண்டான். 10 அவற்றுக்குப் பதிலாக ரெகொபெயாம் அரசன் வெண்கல கேடயங்களைச் செய்தான். அக்கேடயங்களை ரெகொபெயாம் அரண்மனை வாசல் காவல்காரர்களின் தலைவர்கள் கையில் கொடுத்தான். 11 அரசன் கர்த்தருடைய ஆலய வாசலுக்குள் நுழையும்போது காவலர்கள் வந்து கேடயங்களை எடுத்துக்கொண்டு வருவார்கள். பிறகு அவர்கள் அக்கேடயங்களைத் தம் அறையிலே வைத்து பூட்டிவிடுவார்கள்.

12 ரெகொபெயாம் தனக்குள்ளே அடக்கமாகத் தாழ்வாக இருந்தபோது கர்த்தர் அவன் மீதுள்ள கோபத்தை விலக்கிக்கொண்டார். எனவே, கர்த்தர் ரெகொபெயாமை முழுவதுமாக அழிக்கவில்லை. ஏனென்றால் யூதாவில் சிலவற்றை நன்மையானதாகக் கண்டார்.

13 ரெகொபெயாம் தன்னை எருசலேமில் பலமுள்ள அரசனாக ஆக்கிக்கொண்டான். இவன் அரசனாகும்போது 41 வயது. இவன் எருசலேமில் 17 ஆண்டுகள் அரசனாக இருந்தான். இந்நகரம் கர்த்தரால் இஸ்ரவேல் கோத்திரங்களில் எல்லாம் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. கர்த்தர் தனது பெயரை எருசலேமில் விளங்கும்படி செய்தார். ரெகொபெயாமின் தாய் நாமாள். நாமாள் அம்மோன் நாட்டிலிருந்து வந்தவள். 14 ரெகொபெயாம் தீயச் செயல்களைச் செய்தான். ஏனென்றால் அவனது மனதில் கர்த்தருக்கு ஊழியம் செய்யவேண்டும் என்ற எண்ணம் இல்லை.

15 ரெகொபெயாம் தொடக்கக் காலமுதல், ஆட்சியின் இறுதிவரை செய்தச் செயல்களெல்லாம் தீர்க்கதரிசியான செமாயா மற்றும் ஞானதிருஷ்டிக்காரனான இத்தோ ஆகியோரின் எழுத்துக்களில் உள்ளன. இவர்கள் குடும்ப வரலாறுகளை எழுதினார்கள். ரெகொபெயாமுக்கும், யெரொபெயாமுக்கும் அவர்கள் இருவரும் ஆட்சிபுரிந்தக் காலம் முழுவதும் போர் நடந்தது. 16 ரெகொபெயாம் மரித்து தன் முற்பிதாக்களோடு சேர்ந்தான். அவனை தாவீதின் நகரத்திலே அடக்கம் செய்தனர். பிறகு ரெகொபெயாமின் மகன் அபியா புதிய அரசனானான்.

யூதாவின் அரசனான அபியா

13 இஸ்ரவேலில் யெரொபெயாமின் 18வது ஆட்சியாண்டில், அபியா யூதாவின் புதிய அரசனானான். அபியா எருசலேமில் 3 ஆண்டுகள் அரசனாக இருந்தான். அபியாவின் தாய் மாக்கா ஆவாள். மாக்கா ஊரியேலின் மகள். ஊரியேல் கிபியா என்னும் ஊரைச் சேர்ந்தவன். அபியாவிற்கும் யெரொபெயாமிற்கும் சண்டை ஏற்பட்டது. அபியாவின் படையில் 4,00,000 பலமிக்க வீரர்கள் இருந்தனர். அவர்களை அபியா போரில் ஈடுபடுத்தினான். யெரொபெயாமின் படையில் 8,00,000 வீரர்கள் இருந்தனர். யெரொபெயாம் அபியாவோடு போரிடத் தயாரானான்.

பிறகு அபியா மலைநாடான எப்பிராயீமில் செமராயீம் என்னும் மலைமீது ஏறி நின்றான். அபியா, “யெரொபெயாமே! இஸ்ரவேல் ஜனங்களே! நான் சொல்வதைக் கேளுங்கள். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் தாவீதிற்கும், அவரது பிள்ளைகளுக்கும் இஸ்ரவேல் அரசனாக என்றென்றைக்கும் இருக்கும்படியான உரிமையைக் கொடுத்திருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். தேவன் இந்த உரிமையை தாவீதிற்கு மாறாத உடன்படிக்கையாகக் கொடுத்திருக்கிறார். ஆனால் யெரொபெயாம் தன் எஜமானுக்கு எதிராகிவிட்டான். நேபாத்தின் மகனான யெரொபெயாம் சாலொமோனின் வேலைக்காரர்களில் ஒருவன். சாலொமோன் தாவீதின் மகன். பயனற்ற மோசமான நண்பர்களோடு சேர்ந்து யெரோபெயாம் சாலொமோனின் மகனான ரெகொபெயாமுக்கு எதிரானான். அவன் இளைஞனாகவும், அனுபவம் இல்லாதவனாகவும் இருந்தான். அதனால் அவனால் யெரொபெயாமையும், அவனது தீய நண்பர்களையும் தடுக்க முடியவில்லை.

“இப்போது யெரொபெயாமாகிய நீயும், இஸ்ரவேல் ஜனங்களும் கர்த்தருடைய அரசாட்சிக்கு எதிராக திட்டமிடுகிறீர்கள். கர்த்தருடைய அரசாங்கம் தாவீதின் சந்ததியாருக்கு உரியது. உங்களில் அநேகம் பேர் யெரொபெயாமால் செய்யப்பட்ட பொன் கன்றுக்குட்டிகளை தெய்வங்களாக வழிபடுகின்றீர்கள். நீங்கள் கர்த்தருடைய ஆசாரியர்களையும், லேவியர்களையும் விரட்டிவிட்டீர்கள். ஆசாரியர்கள் அனைவரும் ஆரோனின் சந்ததியினர். நீங்கள் உங்கள் ஆசாரியர்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டீர்கள். இதைத்தான் மற்ற நாட்டினரும் செய்கின்றனர். ஒரு காளைக் கன்றுக்குட்டியுடன் அல்லது ஏழு செம்மறியாட்டுக் கடாக்களுடன் தன்னைப் பரிசுத்தப்படுத்திக்கொள்ள வருகிற எவனும் ‘தெய்வங்கள் இல்லாத உருவச்சிலைகளுக்கு’ ஆசாரியனாகலாம்.

10 “ஆனால் எங்களுக்கோ கர்த்தரே தேவன். யூத ஜனங்களாகிய நாங்கள் தேவனுக்கு கீழ்ப்படிய மறுக்கவில்லை. நாங்கள் அவரை விட்டு விலகவில்லை. கர்த்தருக்கு சேவை செய்கிற ஆசாரியர்கள் அனைவரும் ஆரோனின் சந்ததிகளே. மேலும் கர்த்தருக்கு சேவைசெய்ய ஆசாரியர்களுக்கு லேவியர்கள் உதவுகிறார்கள். 11 அவர்கள் தகனபலி செலுத்துவார்கள். ஒவ்வொருநாள் காலையிலும், மாலையிலும் கர்த்தருக்கு நறுமணப் பொருட்களை எரிக்கிறார்கள். ஆலயத்தில் பரிசுத்தமான மேஜையின் மேல் சமூகத்தப்பங்களை அடுக்கி வைக்கிறார்கள். ஒவ்வொரு நாள் மாலையில் விளக்கை அதற்குரிய தங்கத் தண்டின் மேல் ஏற்றி வைக்கிறார்கள். எனவே அது ஒவ்வொரு மாலைப்பொழுதிலும் வெளிச்சத்துடன் பிரகாசிக்கிறது. எங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிவோம். ஆனால் யெரொபெயாமாகிய நீயும் இஸ்ரவேல் ஜனங்களும் கர்த்தருக்கு கீழ்ப்படியவில்லை. நீங்கள் அவரைவிட்டு விலகிவிட்டீர்கள். 12 தேவன் தாமே எங்களோடு இருக்கிறார். அவரே எங்களை ஆள்பவர். அவரது ஆசாரியர்களே எங்களோடு இருக்கின்றனர். தேவனுடைய ஆசாரியர்கள் எக்காளங்களை ஊதி உங்களுக்கு எதிராகப் போரிட அழைத்தனர். இஸ்ரவேல் ஜனங்களே உங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்கு எதிராகப் போர் செய்யாதீர்கள். ஏனென்றால் உங்களால் வெற்றிபெற இயலாது” என்றான்.

13 ஆனால் யெரொபெயாம் ஒரு படைக் குழுவை அபியாவின் படைக்குப் பின்புறமாக அனுப்பினான். யெரொபெயாமின் படையோ அபியாவிற்கு முன்னால் இருந்தது. மறைவாகச் சென்ற படைக்குழுவோ அபியாவின் படைக்குப் பின்னால் இருந்தது. 14 அபியாவின் படைவீரர்கள் தம்மைச் சுற்றிப் பார்த்தபோது யெரொபெயாமின் படை வீரர்கள் சுற்றி நின்று முன்னும் பின்னும் தாக்குவதைக் கண்டனர். உடனே யூத ஜனங்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள். ஆசாரியர்கள் எக்காளங்களை ஊதினார்கள். 15 பின்னர் அபியாவின் படையிலுள்ள ஜனங்கள் ஆர்ப்பரித்தனர். யூத ஜனங்கள் ஆர்ப்பரித்தபோது தேவன் யெரொபெயாமைத் தோற்கடித்தார். யெரொபெயாமின் இஸ்ரவேல் படைவீரர்களை, அபியாவின் யூதப்படை தோற்கடித்தது. 16 இஸ்ரவேல் ஆண்கள், யூதாவின் ஆண்களைவிட்டு ஓடிப்போனார்கள். இஸ்ரவேல் படைகளைத் தோற்கடிக்க தேவன் யூதப்படைகளை அனுமதித்தார். 17 அபியாவும் அவனுடைய படைவீரர்களும் இஸ்ரவேல் படை வீரர்களைத் தோற்கடித்து 5,00,000 வீரர்களைக் கொன்றுவிட்டனர். 18 இவ்வகையில் இஸ்ரவேல் ஜனங்கள் தோற்கடிக்கப்பட்டனர். யூத ஜனங்கள் வென்றனர். யூதப்படை வென்றதற்கான காரணம் அவர்கள் தம் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைச் சார்ந்திருந்ததுதான்.

19 அபியாவின் படை யெரொபெயாமின் படையைத் துரத்திச் சென்றது. அபியாவின் படை பெத்தேல், எஷானா, எப்பெரோன் ஆகிய நகரங்களையும், அவற்றைச் சுற்றியுள்ள கிராமங்களையும் கைப்பற்றினார்கள்.

20 அபியா உயிரோடு இருந்தவரை யெரொபெயாம் பலமுள்ளவனாக ஆக முடியவில்லை. கர்த்தர் தாமே யெரொபெயாமைக் கொன்றார். 21 ஆனால் அபியா பலமுள்ளவன் ஆனான். அவன் 14 பெண்களை மணந்துக்கொண்டான். 22 மகன்களுக்கும், 16 மகள்களுக்கும் தந்தையானான். 22 அபியாவின் மற்ற செயல்கள் இத்தோ தீர்க்கதரிசியின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன.

ரோமர் 8:26-39

26 அதோடு ஆவியானவர் நமக்கு உதவுகிறார். நாம் பலவீனமானவர்கள். ஆவியானவர் நமது பல வீனங்களில் உதவுகிறார். நாம் எவ்வாறு வேண்டிக்கொள்வது என்பதைத் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறோம். எனினும் ஆவியானவர் நமக்காக தேவனிடம் வேண்டுகிறார். அவரது வேண்டுதல்களை வார்த்தைகளால் விளக்கிச் சொல்ல இயலாது. 27 மக்களின் மனதில் உள்ளதை தேவன் ஆராய்கிறார். ஆவியானவரின் மனதில் உள்ளதும் தேவனுக்குத் தெரியும். ஏனென்றால் தேவனுடைய விருப்பப்படியே ஆவியானவரின் வேண்டுதல்கள் மக்களுக்காக அமைந்திருக்கும்.

28 தன்னை நேசிக்கும் மக்களுக்கு தேவன் எல்லாவற்றின் மூலமும் நன்மை செய்கிறார் என்பதை நாம் அறிகிறோம். தேவன் இம்மக்களைத் தம் திட்டப்படியே தேர்ந்தெடுத்துள்ளார். 29 தேவன் அம்மக்களை உலகம் படைக்கப்படுவதற்கு முன்னரே அறிந்திருக்கிறார். அம்மக்களைத் தம் குமாரனைப் போலவே இருக்கும்படி முடிவு செய்தார். அநேக சகோதரர்களுக்குள்ளே தமது குமாரனே முதற் பேறானவராய் இருக்க வேண்டும் என விரும்பினார். 30 எனவே தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாய் இருப்பதற்கு முன்குறித்திருக்கிறார். அவர்களைத் தேர்ந்தெடுத்தார். அவர்களை நீதிமான்களாக்கினார். அவர்களை மகிமையும்படுத்தினார்.

தேவனின் அன்பு

31 எனவே, இதைப் பற்றி என்ன சொல்லலாம்? தேவன் நம்மோடு இருந்தால் எவராலும் நாம் தோற்கடிக்கப்பட முடியாது. 32 தேவன் நமக்காகத் தனது சொந்தக் குமாரனையும் துன்பத்துக்குட்படுத்தினார். நமக்காகவே தன் குமாரனை தேவன் அர்ப்பணித்தார். எனவே இயேசு கிறிஸ்து இப்போது நம்மோடு இருப்பதால், தேவன் எல்லாவற்றையும் தருவார். 33 தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களை யாரால் குறை சொல்ல முடியும்? எவராலும் முடியாது, ஏனென்றால் தேவன்தான் தமது மக்களை நீதிமான்களாக்குகிறார். 34 தேவனுடைய மக்கள் தவறுடையவர்கள் என்று யாரால் குற்றம்சாட்ட முடியும்? எவராலும் முடியாது. கிறிஸ்து இயேசு நமக்காக இறந்தார். அதோடு முடியவில்லை. அவர் மரணத்திலிருந்து மீண்டும் உயிர்த்தெழுந்தார். இப்போது அவர் தேவனுடைய வலதுபுறத்தில் இருந்துகொண்டு நமக்காக வேண்டுதல் செய்துகொண்டிருக்கிறார். 35 கிறிஸ்துவின் அன்பிலிருந்து எவற்றாலும் நம்மைப் பிரிக்க இயலுமா? இயலாது. தொல்லைகளால் இயேசுவிடமிருந்து நம்மைப் பிரிக்க இயலுமா? பிரச்சனைகளும், தண்டனைகளும் இயேசுவிடமிருந்து நம்மைப் பிரிக்குமா? இயலாது. உணவும் உடையும் இல்லாத வறுமை கூட நம்மை அவரது அன்பிலிருந்து பிரிக்க முடியாது. ஆபத்தும் மரணமும் கூட நம்மை அவரது அன்பிலிருந்து பிரிக்க முடியாது.

36 “எப்பொழுதும் உமக்காக நாங்கள் மரண ஆபத்தில் இருக்கிறோம்.
    வெட்டப்படும் ஆடுகளைவிடவும் நாம் பயனற்றவர்கள் என மக்கள் நினைக்கின்றனர்” (A)

என எழுதப்பட்டுள்ளது.

37 தேவன் நம்மீது அன்புகொண்டவர். அவரால் நாம் அனைத்திலும் பெரும் வெற்றி பெறுகிறோம். 38-39 தேவனுடைய அன்பிலிருந்து நம்மை எதனாலும் பிரிக்க முடியாது என்று என்னால் உறுதியாய் சொல்ல முடியும். சாவாலோ, வாழ்வாலோ, தேவ தூதர்களாலோ, ஆளும் ஆவிகளாலோ, தற்காலப் பொருளாலோ, பிற்கால உலகத்தாலோ, நமக்கு மேலே உள்ள சக்திகளாலோ, நமக்குக் கீழே உள்ள சக்திகளாலோ, உலகில் உள்ள வேறு எதனாலுமோ கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் உள்ள தேவனுடைய அன்பிலிருந்து நம்மை ஒருபோதும் பிரித்துவிட முடியாது.

சங்கீதம் 18:37-50

37 நான் என் பகைவர்களைத் துரத்திப் பிடிக்க முடியும்.
    அவர்கள் அழியும்வரை நான் திரும்பேன்.
38 எனது பகைவரைத் தோற்கடிப்பேன்.
    அவர்கள் மீண்டும் எழுந்திரார்கள்.
    என் பகைவர்கள் என் பாதங்களுக்குக் கீழிருப்பார்கள்.
39 தேவனே, என்னை யுத்தங்களில் பலவான் ஆக்கினீர்.
    என் பகைவர்கள் என் முன்னே விழும்படி செய்தீர்.
40 என் பகைவரின் கழுத்தை முறிக்கப் பண்ணி,
    அவர்களை அழிக்கச் செய்தீர்.
41 என் பகைவர்கள் உதவி வேண்டினார்கள்.
    அவர்களைக் காப்பவர் எவருமில்லை.
கர்த்தரை நோக்கி முறையிட்டனர்,
    அவர் பதிலளிக்கவில்லை.
42 நான் என் பகைவரைத் துண்டிப்பேன்.
    அவர்கள் காற்றில் பறக்கும் தூளைப் போலாவார்கள்.

அவர்களைத் துண்டாக நசுக்குவேன்.

43 என்னிடம் போர் செய்கிற ஜனங்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
    என்னை அத்தேசங்களின் தலைவனாக்கும்.
    எனக்குத் தெரியாத ஜனங்களும் என்னைச் சேவிப்பார்கள்.
44 அந்த ஜனங்கள் என்னைக் குறித்துக் கேள்விப்படுவார்கள். எனக்கு உடனே கீழ்ப்படிவார்கள்.
    அந்த அயலார்கள் என்னைக் கண்டு அஞ்சுவார்கள். அந்த அயலார் நடுங்கி வீழ்வார்கள்.
45 அவர்கள் தைரியமிழந்து
    தங்கள் மறைவிடங்களிலிருந்து நடுங்கிக்கொண்டே வெளிவருவார்கள்.

46 கர்த்தர் உயிரோடிருக்கிறார்!
    நான் என் பாறையை (தேவனை) துதிப்பேன்!
    தேவன் என்னைக் காப்பாற்றுகிறார்.
    அவர் மேன்மையானவர்.
47 தேவன் எனக்காக என் பகைவர்களைத் தண்டித்தார்.
    என் கட்டுப்பாட்டின் கீழ் ஜனங்களைக் கொண்டுவந்தார்.
48 கர்த்தாவே, நீர் என் பகைவரிடமிருந்து என்னைக் காப்பாற்றினீர்.

எனக்கு எதிரான ஜனங்களைத் தோற்கடிக்க உதவினீர்.
    கொடியோரிடமிருந்து என்னை மீட்டீர்.
49 கர்த்தாவே, தேசங்களுக்கு முன்பாக உம்மைத் துதிப்பேன்.
    உமது நாமத்தைக் குறித்துப் பாடல்கள் இசைப்பேன்.

50 தான் ஏற்படுத்தின அரசன் யுத்தங்கள் பலவற்றில் வெல்ல கர்த்தர் உதவுகிறார்!
    தான் தேர்ந்தெடுத்த அரசனுக்குத் தன் உண்மையான அன்பை உணர்த்துகிறார்.
    அவர் தாவீதுக்கும் அவன் சந்ததியினருக்கும் என்றென்றும் உண்மையுள்ளவராக இருக்கிறார்.

நீதிமொழிகள் 19:27-29

27 போதனைகளைக் கவனமாகக் கேட்பதை நிறுத்தினால் நீ முட்டாள்தனமான தவறுகளைச் செய்துகொண்டே இருப்பாய்.

28 சாட்சி சொல்ல வருகிறவன் நேர்மையற்றவனாக இருந்தால், தீர்ப்பும் சரியானதாக இராது. தீயவர்கள் சொல்வது தீமையைத் தரும்.

29 மற்றவர்களைவிடத் தன்னைச் சிறந்தவனாக நினைப்பவன் தண்டிக்கப்படுவான். அறிவற்றவன் தனக்கான தண்டனையைப் பெறுகிறான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center