Print Page Options Listen to Reading
Previous Prev Day Next DayNext

The Daily Audio Bible

This reading plan is provided by Brian Hardin from Daily Audio Bible.
Duration: 731 days

Today's audio is from the CSB. Switch to the CSB to read along with the audio.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
1 நாளாகமம் 22-23

22 தாவீது, “தேவனாகிய கர்த்தருடைய ஆலயமும் சர்வாங்க தகனபலிக்கான பலிபீடமும் இங்கே கட்டப்படும்” என்றான்.

தாவீது ஆலயத்திற்கு திட்டமிடுகிறான்

தாவீது இஸ்ரவேலில் வாழும் அயல் நாட்டுக்காரர்களைக் கூடும்படிக் கட்டளையிட்டான். அவர்களில் கல்தச்சர்களைத் தேர்ந்தெடுத்தான். தேவனுடைய ஆலயத்திற்கானக் கற்களை வெட்டும்படி அவர்களுக்கு கட்டளையிட்டான். தாவீது வாசல் கதவுக்கான ஆணிகளுக்கும் கீல்களுக்கும் தேவையான இரும்பையும் பெற்றான். நிறுத்துபார்க்க முடியாத அளவிற்கு வெண்கலத்தையும் பெற்றான். எண்ண முடிகிற அளவிற்கும் அதிகமான அளவில் கேதுரு மரங்களையும் பெற்றான். சீதோன், தீரு போன்ற நகர ஜனங்கள் கேதுருமரங்களை தாவீதிற்குக் கொண்டுவந்தனர்.

தாவீது, “நாம் கர்த்தருக்காக மிகவும் மகத்தான ஆலயத்தை கட்டவேண்டும். ஆனால் என் மகன் சாலொமோன் இளைஞனாக இருக்கிறான். அவன் எதையெதை அறிந்துக்கொள்ள வேண்டுமோ அதனை இன்னும் அறிந்துக்கொள்ளவில்லை. கர்த்தருடைய ஆலயமானது மிக மகத்தானதாக இருக்க வேண்டும். அது தன் உயர்வாலும் அழகாலும் அனைத்து நாடுகளிலும் புகழ்பெறும். எனவே, நான் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்ட திட்டமிடுகிறேன்” என்றான். எனவே தாவீது இறப்பதற்கு முன்பு ஆலயம் கட்டுவதற்கான திட்டங்களை அமைத்தான்.

பிறகு தாவீது தன் மகன் சாலொமோனை அழைத்தான், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஆலயம் கட்டுமாறு சொன்னான். தாவீது சாலொமோனிடம், “என் மகனே, எனது தேவனாகிய கர்த்தருக்கு ஆலயம் கட்ட நான் விரும்பினேன். ஆனால் கர்த்தர் என்னிடம், ‘தாவீது, நீ பல போர்களைச் செய்து அதில் பலரைக் கொன்றிருக்கிறாய். எனவே எனது நாமத்தில் நீ ஆலயம் கட்டக் கூடாது. ஆனால் உனக்கு ஒரு மகன் இருப்பான். அவன் சமாதான புருஷனாக இருப்பான். நான் உனது மகனுக்குச் சமாதானத்திற்குரிய காலத்தைக் கொடுப்பேன். அவனைச் சுற்றியுள்ள பகைவர்கள் அவனுக்குத் தொந்தரவு செய்யமாட்டார்கள். அவனது பெயர் சாலொமோன். சாலொமோன் அரசனாக இருக்கும்போது இஸ்ரவேல் ஜனங்களுக்குச் சமாதானமும் அமைதியும் தருவேன். 10 சாலொமோன் எனது நாமத்துக்காக ஆலயம் கட்டுவான். அவன் எனது மகனாக இருப்பான், நான் அவனது தந்தையாக இருப்பேன். நான் சாலோமோனின் அரசைப் பலமுள்ளதாக்குவேன். அவனது குடும்பத்தில் உள்ளவர்கள் என்றென்றும் இஸ்ரவேலை ஆள்வார்கள்’ என்றார்!” என்றான்.

11 தாவீது மேலும், “இப்போது மகனே, கர்த்தர் உன்னோடு இருக்கட்டும், உன் செயல்களில் வெற்றி கிடைக்கட்டும். உனது தேவனாகிய கர்த்தருடைய நாமத்தால் ஆலயம் கட்டுவாய். அவர் சொன்னது போலவே கட்டாயம் நீ செய்வாய். 12 கர்த்தர் உன்னை இஸ்ரவேலின் அரசனாக்குவார். ஜனங்களை வழி நடத்தவும் கர்த்தருடைய சட்டங்களை மதித்து கட்டுப்பட்டு நடக்கவும் தேவையான ஞானத்தையும், புரிந்துகொள்ளும் திறனையும் தேவனாகிய கர்த்தர் உனக்கு வழங்கட்டும். 13 நீ வெற்றிமிக்கவனாய் இருப்பாய். இஸ்ரவேலுக்காக கர்த்தர் மோசேயிடம் கொடுத்த கட்டளைகளுக்கும், நியாயங்களுக்கும் நீ கவனமாகக் கீழ்ப்படிய வேண்டும். பலமாகவும், தைரியமாகவும் இரு. பயப்படாதே.

14 “சாலொமோன், நான் கடினமான வேலை செய்து கர்த்தருக்கு ஆலயம் கட்டதிட்டமிட்டேன். நான் 3,750 டன் தங்கம் கொடுத்திருக்கிறேன். 37,500 டன் வெள்ளி கொடுத்திருக்கிறேன். நிறுத்துபார்க்க முடியாத அளவிற்கு வெண்கலமும் இரும்பும் கொடுத்திருக்கிறேன். மரமும் கற்களும் கொடுத்திருக்கிறேன். சாலொமோன், உன்னால் மேலும் சேர்க்க முடியும். 15 உன்னிடம் ஏராளமான கல்தச்சர்களும் மரத்தச்சர்களும் உள்ளனர். எல்லா வேலைகளையும் செய்யும் திறமை உடையவர்களும் உனக்கு இருக்கின்றனர். 16 அவர்கள் பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு போன்ற வேலை செய்வதில் வல்லவர்கள். எண்ணிபார்க்க முடியாத அளவிற்கு அதிகமாக உள்ளனர். இப்போதே வேலையைத் தொடங்கு. கர்த்தர் உன்னோடு இருக்கட்டும்” என்றான்.

17 பிறகு தாவீது, இஸ்ரவேலின் தலைவர்கள் அனைவருக்கும் தனது மகன் சாலொமோனுக்கு உதவும்படி கட்டளையிட்டான். 18 தாவீது தலைவர்களிடம், “தேவனாகிய கர்த்தர் உங்களோடு இருக்கிறார். அவர் சமாதானத்திற்குரிய காலத்தைக் கொடுத்திருந்தார். நம்மைச் சுற்றி இருப்பவர்களைத் தோற்கடிக்க கர்த்தர் உதவினார். கர்த்தருக்கும், அவரது ஜனங்களுக்கும் இப்போது இந்த நிலம் கட்டுப்பட்டிருக்கிறது. 19 இப்போது உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் உங்கள் இதயத்தையும் ஆத்துமாவையும் கொடுங்கள். அவர் சொன்னபடி செய்யுங்கள். தேவனாகிய கர்த்தருக்கு பரிசுத்த இடத்தைக் கட்டுங்கள். கர்த்தருடைய நாமத்துக்காக ஆலயம் கட்டுங்கள். பிறகு உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டு வாருங்கள். மற்ற பரிசுத்தமான பொருட்களையும் ஆலயத்திற்குள் கொண்டு வாருங்கள்” என்றான்.

லேவியர்கள் ஆலயத்திற்கு சேவை செய்யத் திட்டமிடுகிறார்கள்

23 தாவீது முதியவன் ஆனான். எனவே இஸ்ரவேலின் புதிய அரசனாகத் தன் மகன் சாலொமோனை ஆக்கினான். அனைத்து இஸ்ரவேல் தலைவர்களையும், ஆசாரியர்களையும், லேவியர்களையும் தாவீது ஒன்றுக்கூட்டினான். அவன் லேவியர்களில் 30 வயதும் அதற்கும் மேற்பட்டவர்களை எண்ணினான். ஆக மொத்தம் 38,000 பேர் இருந்தனர். 4-5 தாவீது அவர்களிடம், “24,000 லேவியர்கள் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை மேற்பார்வை பார்க்க வேண்டும். 6,000 லேவியர் அதிகாரிகளாகவும் நீதிபதிகளாகவும் இருக்கவேண்டும். 54,000 லேவியர்கள் வாசல் காவலர்களாக இருக்கட்டும். 4,000 லேவியர்கள் இசைக் கலைஞர்களாக இருக்கட்டும். அவர்களுக்காக சிறப்பான இசைக் கருவிகளை தயாரித்து வைத்துள்ளேன். கர்த்தரை துதித்துப்பாட அவர்கள் அக்கருவிகளைப் பயன்படுத்துவார்கள்” என்றான்.

தாவீது லேவியர்களை 3 குழுவாகப் பிரித்தான். அவர்கள் லேவியின் மூன்று மகன்களான கெர்சோன், கோகாத், மெராரி ஆகியோரின் கோத்திரத்தினராக இருந்தனர்.

கெர்சோன் கோத்திரத்தினர்

லாதானும், சிமேயும், கெர்சோன் கோத்திரத்தில் இருந்து வந்தவர்கள். லாதானுக்கு மூன்று மகன்கள் இருந்தார்கள். மூத்த மகனின் பெயர் யெகியேல் ஆகும். அவனது மற்ற மகன்கள் சேத்தாம், யோவேல். சிமேயின் மகன்கள் செலோமித், ஆசியேல், ஆரான் எனும் மூன்று பேர்கள். இவர்கள் லாதானின் குடும்பத் தலைவர்களாக இருந்தனர்.

10 சிமேயிற்கு நான்கு பிள்ளைகள் இருந்தார்கள். யாகாத், சீனா, எயூஷ், பெரீயா என்பவை அவர்களின் பெயர்கள் ஆகும். 11 யாகாத் மூத்த மகன். சீனா அடுத்த மகன். ஆனால் எயூஷீக்கும் பெரீயாவுக்கும் அதிகப் பிள்ளைகள் இல்லை. எனவே இருவரும் ஒரே குடும்பமாக எண்ணப்பட்டனர்.

கோகாத் கோத்திரத்தினர்

12 கோகாத்திற்கு 4 பிள்ளைகள் இருந்தார்கள். அவர்கள் அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் ஆகியோர். 13 அம்ராமிற்கு ஆரோன், மோசே என இரு பிள்ளைகள் இருந்தார்கள். ஆரோன் சிறப்புக் குரியவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். ஆரோனும் அவனது சந்ததியினரும் எல்லா காலங்களிலும், எல்லா இடங்களிலும் சிறப்பானவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கர்த்தருடைய சேவைக்குப் பரிசுத்தப் பொருட்களைத் தயார் செய்வதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆரோனும், அவனது சந்ததியினரும் நறுமணப் பொருட்களை கர்த்தருக்கு முன்பு எரிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் ஆசாரியர்களாகப் பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் கர்த்தருடைய நாமத்தைப் பயன்படுத்தி எல்லாக் காலத்திலும் ஜனங்களுக்கு ஆசீர்வாதம் அளித்தனர்.

14 மோசே தேவனுடைய மனிதன். லேவி கோத்திரத்தினரின் ஒரு பகுதியினர், மோசேயின் பிள்ளைகள் ஆவார்கள். 15 கெர்சோமும், எலியேசரும் மோசேயின் மகன்கள். 16 செபுவேல், கெர்சோமின் மூத்த மகன். 17 ரெகபியா, எலியேசரின் மூத்த மகன். எலியேசருக்கு வேறு பிள்ளைகள் இல்லை. ஆனால் ரெகபியாவிற்கு ஏராளமான மகன்கள் இருந்தனர்.

18 செலோமித், இத்சாரின் மூத்தமகன்.

19 எரியா எப்ரோனின் மூத்த மகன். அமரியா இரண்டாவது மகன். யாகாசியேல் மூன்றாவது மகன். எக்காமியாம் நான்காவது மகன்.

20 ஊசியேல் மீகாவின் மூத்த மகன், இஷியா இரண்டாவது மகன்.

மெராரி கோத்திரத்தினர்

21 மகேலியும், மூசியும் மெராரியின் மகன்கள் ஆவார்கள். மகேலிக்கு எலெயாசார், கீஸ் எனும் மகன்கள் இருந்தனர். 22 எலெயாசார் ஆண் பிள்ளைகள் இல்லாமலேயே மரித்துப்போனான். அவனுக்குப் பெண் பிள்ளைகள் மட்டுமே இருந்தனர். எலெயாசாரின் மகள்கள் உறவினரையே மணந்துகொண்டனர். அவர்களின் உறவினர்கள் கீஸின் மகன்கள். 23 மூசியின் மகன்களாக மகலி, ஏதேர், ஏரோமோத் எனும் மூன்று பேர் இருந்தனர்.

லேவியர்களின் வேலை

24 இவர்கள் லேவியரின் சந்ததியினர். அவர்கள் குடும்ப வாரியாகக் கணக்கிடப்பட்டனர். அவர்கள் குடும்பத் தலைவர்களாக இருந்தனர். ஒவ்வொருவரின் பெயரும் பட்டியலிடப்பட்டது. இருபதும், அதற்கு மேலும் உள்ள வயதினர் பட்டியலிடப்பட்டனர். அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தில் பணி செய்தனர்.

25 தாவீது, “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் தனது ஜனங்களுக்குச் சமாதானத்தைக் கொடுத்திருந்தார். கர்த்தர், எருசலேமிற்கு எல்லாக் காலத்திலும் வாழ்வதற்கு வந்திருந்தார். 26 எனவே பரிசுத்தக் கூடாரத்தை இனி தூக்கிக்கொண்டு செல்லும் வேலை லேவியர்களுக்கு இல்லை. ஆலயப்பணியில் பயன்படுத்தப்பட்ட வேறு பொருட்களைத் தூக்குகிற வேலையும் இல்லை” என்றான்.

27 இஸ்ரவேல் ஜனங்களுக்கு, லேவியர் கோத்திரத்தை எண்ணிக் கணக்கிடும்படி தாவீது கடைசியாக அறிவுறுத்தினான். அவர்கள் இருபதும் அதற்கும் மேலும் வயது கொண்டவர்களை எண்ணினார்கள்.

28 ஆரோனின் சந்ததியினர் கர்த்தருடைய ஆலயத்தில் சேவை செய்யும்போது லேவியர்கள் உதவுவதை வேலையாகக் கொண்டனர். அவர்கள் ஆலயத்தின் பிரகாரங்களையும் பக்கத்து அறைகளையும் கவனித்துக்கொண்டனர். எல்லாப் பரிசுத்தமானப் பொருட்களையும் சுத்தப்படுத்தும் வேலையைச் செய்தனர். தேவனுடைய ஆலயத்திற்குள் பணி செய்வதில் இது அவர்களின் வேலையாய் இருந்தது. 29 ஆலய மேஜையின் மேல் அப்பத்தை வைக்கும் பொறுப்பு இவர்களுடையது. மாவு, தானியக் காணிக்கை, புளிக்காத மாவில் அப்பம் செய்யும் வேலை போன்றவற்றைக் கவனித்துக்கொண்டனர். சட்டிகளில் சுடுகிற வேலைக்கும், கலவை பலிகளுக்கும் அவர்களே பொறுப்பாளர்களாக இருந்தனர். எல்லா வகையான அளவிடுகின்ற வேலைகளையும் செய்தார்கள். 30 லேவியர்கள் ஒவ்வொரு காலையிலும் கர்த்தருக்கு முன்பு நின்று நன்றி சொல்லியும் துதித்தும் பாடினார்கள். இதனை ஒவ்வொரு மாலையிலும் கூடச் செய்து வந்தனர். 31 சிறப்பு ஓய்வு நாட்கள், மாதப் பிறப்பு நாட்கள், திருவிழாக்கள், சிறப்பு விடுமுறை நாட்கள் ஆகிய காலங்களில் அவர்கள் கர்த்தருக்குத் தகன பலியைச் செலுத்தினார்கள். அவர்கள் ஒவ்வொரு நாளும் கர்த்தருக்கு முன்னால் பணிவிடைச் செய்தார்கள். ஒவ்வொரு வேளையும் எத்தனை லேவியர்கள் பணிவிடைச் செய்யவேண்டும் என்பதிலும் சில சட்டவிதிகள் இருந்தன. 32 லேவியர்கள் எதையெதைச் செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்களோ, அவற்றையெல்லாம் செய்தனர். பரிசுத்தக் கூடாரத்தின் பொறுப்பை எடுத்துக்கொண்டனர். பரிசுத்த இடத்தின் பொறுப்பையும் எடுத்துக்கொண்டனர். அவர்கள் ஆரோனின் சந்ததியினர். தமது உறவினர்களுக்கும், ஆசாரியர்களுக்கும் உதவினார்கள். கர்த்தருடைய ஆலயத்தில் பணி விடைகளை ஆசாரியர்களுக்கு உதவியாகச் செய்து வந்தனர்.

ரோமர் 3:9-31

அனைவரும் குற்றவாளிகளே

யூதர்களாகிய நாம் மற்றவர்களைக் காட்டிலும் சிறப்பு மிக்கவர்களா? இல்லை. யூதர்களும், யூதரல்லாதவர்களும் சமமானவர்கள் என்று ஏற்கெனவே கூறியிருக்கிறோம். அவர்கள் எல்லாம் குற்றம் உடையவர்களே. 10 எழுதப்பட்டபடி,

“சரியானவன் ஒருவன் கூட இல்லை.
11 புரிந்துகொள்கிறவனும் எவனுமில்லை.
    உண்மையில் தேவனோடிருக்க விரும்புகிறவனும் யாரும் இல்லை.
12 எல்லோரும் வழிதப்பியவர்கள்.
    எல்லோருமே பயனற்றுப்போனவர்கள்.
நல்லவை செய்பவன் ஒருவனாகிலும் இல்லை.” (A)

13 “அவர்களின் வாய்கள் திறந்த சவக் குழிகள் போன்றவை;
    தங்கள் நாக்குகளை பொய் சொல்லவே பயன்படுத்துகிறார்கள்.” (B)

“அவர்கள் சொல்லும் காரியங்கள் பாம்புகளின் விஷத்தைப் போன்றது.” (C)

14 “அவர்களது வாய் சபிப்பினாலும் கசப்பினாலும் நிறைந்துள்ளது.” (D)

15 “அவர்கள் எப்போதும் தாக்கவும் கொலை செய்யவும் தயாராக உள்ளனர்.
16     அவர்கள் செல்லும் வழிகளில் நாசமும் துன்பமும் உள்ளன.
17 அவர்களுக்குச் சமாதானத்தின் வழி தெரியாது.” (E)

18 “அவர்களிடம் தெய்வ பயமில்லை; தேவனிடம் மரியாதையும் இல்லை.” (F)

19 நியாயப்பிரமாணம் சொல்லுவதெல்லாம் அதற்கு உட்பட்டவர்களுக்கே. இது யூதர்களின் வாய்களை அடைத்துவிட்டது. இது உலகத்தார் அனைவரையும் தேவனுடைய நியாயத்தீர்ப்புக்குக் கீழ்ப்படியும்படி செய்தது. 20 ஏனென்றால் எந்த மனிதனும் நியாயப்பிரமாணத்தின் செயல்களினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை. நியாயப்பிரமாணத்தின் நோக்கம் பாவம் பற்றிய உணர்வைக் கொண்டு வருவதுதான்.

நீதி செய்யும் தேவன்

21 சட்டவிதிகளின் உதவி இல்லாமலேயே தேவன் மக்களைச் சரியான வழியில் நடத்துகிறார். தேவன் இப்போது நமக்குப் புதிய வழியைக் காட்டியுள்ளார். சட்டங்களும், தீர்க்கதரிசிகளும் இப்புதிய வழியைப்பற்றிப் பேசியுள்ளனர். 22 இயேசு கிறிஸ்துவின் மேல் வைத்த விசுவாசத்தின் மூலம் தேவன் மக்களை சரியான வழிப்படுத்துகிறார். கிறிஸ்துவில் விசுவாசம் வைத்திருக்கும் எல்லாருக்கும் தேவன் இதைச் செய்தார். எந்த வேறுபாடும் இல்லை. 23 மக்களனைவரும் பாவம் செய்து தேவனுடைய மகிமையைப் பெறத் தகுதியில்லாதவராகிவிட்டனர். 24 இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவில் உள்ள இரட்சிப்பைக் கொண்டு நீதிமான்களாக்கப்படுவார்கள். 25 விசுவாசத்தின் மூலம் பாவிகள் மன்னிக்கப்பட தேவன் இயேசுவை ஒரு வழியாக வகுத்தார். இயேசுவின் இரத்தத்தால் தேவன் இதைச் செய்தார். எது சரியானதோ, நியாயமானதோ அதையே தேவன் செய்வார் என்பதை இது காட்டும். கடந்த காலத்தில் தேவன் மிகப் பொறுமையாக இருந்தார். மக்களின் பாவங்களுக்காக அவர்களைத் தண்டிக்காமல் விட்டார். 26 இவ்வாறு தேவன் சரியான வழியில் நியாயம்தீர்ப்பார் என்பதை இன்று இயேசு கிறிஸ்துவின் மூலம் வெளிக் காட்டியுள்ளார். அதே நேரத்தில் இயேசுவில் விசுவாசம் உள்ள எவரையும் தேவன் நீதிமான்களாக்குகிறார்.

27 எனவே நம்மை நாமே மேன்மை பாராட்டிக்கொள்ள ஏதேனும் காரணம் உள்ளதாக இல்லை. எதற்காக இல்லை? சட்ட வழிகளின்படி வாழ்வதால் அல்ல, விசுவாசத்தால் மட்டுமே. நாம் பெருமை பாராட்டுவதை நிறுத்த வேண்டும். எதற்காக? 28 ஏனென்றால் ஒருவன் சட்டவழிகளின்படி வாழ்வதால் நீதிமானாக முடியாது; இயேசுவை விசுவாசிப்பதன் மூலமே நீதிமானாக முடியும். இதுவே நமது நம்பிக்கை. 29 தேவன் என்பவர் யூதர்களுக்கு மட்டும் உரியவர் அல்லர். அவர் யூதர் அல்லாதவர்களுக்கும் உரியவரே. 30 ஒரே ஒரு தேவனே உள்ளார். அவரே யூதர்களையும் அவர்கள் விசுவாசத்தின் மூலம் நீதிமான்களாக்குகிறார். அவ்வாறே யூதரல்லாதவர்களையும் ஆக்குகிறார். 31 விசுவாசத்தின் வழியைப் பின்பற்றுவதன் மூலம் சட்ட விதிகளை அழித்துவிடுகிறோமா? இல்லை. இவ்வாறு நாம் உண்மையாகச் சட்டத்தைக் கைக்கொள்கிறோம்.

சங்கீதம் 12

செமினீத் என்னும் இசைக் கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்

12 கர்த்தாவே, என்னைக் காப்பாற்றும்.
    நல்லோர் மடிந்துபோயினர்.
    பூமியிலுள்ள ஜனங்களிடையே உண்மையான நம்பிக்கையுள்ளோர் எவருமில்லை.
அண்டை வீட்டாரிடம் ஜனங்கள் பொய் பேசுகிறார்கள்.
    பொய்களால் அயலானைப் புகழ்ந்து பேசுகிறார்கள்.
பொய் கூறும் நாவை கர்த்தர் அறுத்தெறிவார்.
    தங்களையே புகழ்வோரின் நாக்குகளை கர்த்தர் துண்டித்தெறிவார்.
அந்த ஜனங்கள், “நாங்கள் தக்க பொய்யுரைப்போம் எங்கள் நாக்குகளின் மூலமாக, நாங்கள் பெரியவர்களாவோம்.
    யாரும் எங்கள் எஜமானராக இயலாது!” என்கிறார்கள்.

ஆனால் கர்த்தரோ, “தீயோர் ஏழைகளின் பொருள்களைத் திருடுவார்கள்.
    உதவியற்ற ஜனங்களின் பொருள்களை அபகரிப்பார்கள்.
களைப்புற்றோரை இப்போது நான் எழுந்து பாதுகாப்பேன்” என்கிறார்.

கர்த்தருடைய சொற்கள் உண்மையும் தூய்மையுமானவை.
    நெருப்பில் உருக்கப்பட்ட வெள்ளியைப்போல் அவை தூய்மையானவை.
    ஏழுமுறை உருக்கித் தூய்மையாக்கப்பட்ட வெள்ளியைப் போல் அவை தூய்மையானவை.

கர்த்தாவே, உதவியற்ற ஜனங்களைப் பாதுகாத்தருளும்.
    இப்போதும் எப்போதும் அவர்களைப் பாதுகாப்பீராக.
அத்தீயோர் முக்கியமானவர்களைப் போன்று நடிப்பார்கள்.
    உண்மையில் அவர்கள் போலி நகைகளைப் போன்றவர்கள்.
    அவை விலையுயர்ந்ததாய் தோன்றும் ஆனால் அவை மலிவானவை.

நீதிமொழிகள் 19:13-14

13 ஒரு முட்டாள் மகன் தன் தந்தைக்கு வெள்ளம்போல நிறையத் தொல்லைகளைக்கொண்டு வருகிறான். ஓயாது குறைகளைச் சொல்லிக்கொண்டிருக்கிற மனைவி சொட்டுச்சொட்டாக ஒழுகிக்கொண்டிருக்கும் தண்ணீர் போன்றவள். அது மிகவும் துன்புறுத்தும்.

14 ஜனங்கள் தம் பெற்றோர்களிடமிருந்து வீட்டையும் செல்வத்தையும் பெறுகிறார்கள். ஆனால் ஒரு நல்ல மனைவி கர்த்தரிடமிருந்து கிடைக்கும் வெகுமதி ஆகும்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center