Print Page Options Listen to Reading
Previous Prev Day Next DayNext

The Daily Audio Bible

This reading plan is provided by Brian Hardin from Daily Audio Bible.
Duration: 731 days

Today's audio is from the CSB. Switch to the CSB to read along with the audio.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
1 நாளாகமம் 19-21

தாவீதின் ஆட்களை அம்மோனியர் அவமானப்படுத்தியது

19 நாகாஸ் என்பவன் அம்மோனியர்களின் அரசனாக இருந்தான். நாகாஸ் மரித்ததும், அவனது மகன் அரசன் ஆனான். பிறகு தாவீது, “நாகாஸ் என்னிடம் அன்பாய் இருந்தான், எனவே நான் அவனது மகன் ஆனூனிடம் அன்பாய் இருப்பேன்” என்றான். அதனால் தாவீது தூதுவர்களை ஆனூனுக்கு ஆறுதல் சொல்ல அனுப்பினான். தாவீதின் தூதுவர்கள் அம்மோன் நாட்டிற்கு ஆனூனுக்கு ஆறுதல் சொல்லச் சென்றனர்.

ஆனால் அம்மோனிய தலைவர்கள் ஆனூனிடம், “முட்டாளாகாதே, தாவீது உண்மையிலேயே உனக்கு ஆறுதல் சொல்லவும், மரித்துப்போன உன் தந்தையைக் கௌரவப்படுத்தவும் தூதுவர்களை அனுப்பவில்லை! அவன் உன்னையும், உன் நாட்டையும் உளவறியவே தூதுவரை அனுப்பியுள்ளான். அவன் உண்மையில் உன் நாட்டை அழிக்கவே விரும்புகிறான்!” என்றனர். எனவே, ஆனூன் தாவீதின் தூதுவர்களைக் கைதுசெய்து அவர்களது தாடியை வெட்டினான். இடுப்புப் பக்கத்தில் அவர்களின் ஆடையையும் வெட்டினான். பிறகு வெளியே துரத்திவிட்டான்.

தாவீதின் ஆட்களுக்கு வீட்டிற்குத் திரும்பிப் போக அவமானமாக இருந்தது. சிலர் தாவீதிடம் சென்று தங்களுக்கு ஏற்பட்டதைச் சொன்னார்கள். எனவே தாவீது தன் ஆட்களுக்கு, “உங்களது தாடி முழுவதும் வளரும்வரை எரிகோவிலேயே தங்கியிருங்கள். பிறகு உங்கள் வீட்டிற்கு வரலாம்” என்று செய்தி அனுப்பினான்.

அம்மோனியர்கள் தமது செயல்களாலேயே தாம் தாவீதிற்குப் பகையானதைக் கண்டனர். பின் ஆனூனும் அம்மோனியர்களும் 75,000 பவுண்டு வெள்ளியை செல விட்டு மெசொப்பொத்தாமியாவிலிருந்து இரதங்களையும் இரதமோட்டிகளையும் வாங்கினார்கள். அவர்கள் இரதங்களையும் இரதமோட்டிகளையும் மாக்கா, சோபா எனும் சீரியரின் நாடுகளிலிருந்தும் பெற்றனர். அம்மோனியர்கள் 32,000 இரதங்களை வாங்கினார்கள். அவர்கள் மாக்காவின் அரசுக்கு அதனுடைய படைகள் வந்து உதவுவதற்காகப் பணம் செலுத்தினர். மாக்காவின் அரசின் ஆட்களும் வந்து மேதேபாவுக்கு அருகில் பாசறை அமைத்தனர். அம்மோனியர்கள் தம் நகரங்களை விட்டு வெளியே வந்து போருக்கு தயாரானார்கள்.

அம்மோனியர்கள் போருக்குத் தயாராக இருப்பதை தாவீது அறிந்தான். எனவே, அவன் யோவாபையும், இஸ்ரவேலின் முழு படையையும் அனுப்பினான். அம்மோனியர்கள் வெளியே வந்து போருக்குத் தயாரானார்கள். அவர்கள் நகர வாசல்களுக்கு அருகில் இருந்தார்கள். உதவி செய்வதற்கு வந்த அரசர்களும் வயல்வெளிகளில் தனியாகத் தங்கியிருந்தார்கள்.

10 யோவாப், தனக்கு எதிராக இரண்டு படைகள் போர்ச் செய்ய தயாராக இருப்பதைக் கண்டான். ஒரு படை தனக்கு முன்பும் இன்னொரு படை தனக்குப் பின்னாலும் இருப்பதை அறிந்தான். உடனே தமது படையில் உள்ள சிறந்த வீரர்களைத் தேர்ந்தெடுத்தான். அவர்களை ஆராம் படையோடு போரிட அனுப்பினான். 11 மீதமிருந்த இஸ்ரவேலியப் படையை யோவாப் அபிசாயின் தலைமையின் கீழ் அமைத்தான். அபிசாயி அவனது சகோதரன். அவ்வீரர்கள் அம்மோனிய படையோடு போரிடச் சென்றனர். 12 யோவாப் அபிசாயிடம், “ஆராமிலுள்ள படைகள் என்னைவிட பலமானதாக இருந்தால், நீ வந்து உதவவேண்டும். ஆனால், அம்மோனியப் படைகள் உன்னைவிடப் பலமானதாக இருந்தால், நான் வந்து உனக்கு உதவுவேன். 13 நாம் நமது ஜனங்களுக்காகவும் தேவனுடைய நகரங்களுக்காகவும் போராடும்போது பலமாகவும், தைரியமாகவும் இருக்கவேண்டும். தனக்குச் சரி என்று எண்ணுவதைக் கர்த்தர் செய்வார்!” என்றான்.

14 யோவாபும், அவனது படையும் ஆராம் படையைத் தாக்கியது, ஆராம் படை தோற்று ஓடியது. 15 அம்மோனியரின் படை ஆராம் படை ஓடுவதைப் பார்த்து, தானும் ஓடியது. அது அபிசாயிடமும் அவனது படைகளிடமும் இருந்து ஓடியது. அம்மோனியர்கள் தம் நகரங்களுக்கும் யோவாப் எருசலேமிற்கும் திரும்பிச் சென்றனர்.

16 ஆராமிய தலைவர்கள், இஸ்ரவேலரால் தாம் தோற்கடிக்கப்பட்டதை அறிந்தனர். எனவே, அவர்கள் உதவிக்காகத் தூதுவர்களை ஐபிராத்து நதிக்கு கிழக்குப்புறத்தில் வசிப்பவர்களிடம் அனுப்பினார்கள். ஆராமில் இருந்து வந்த ஆதாரேசரின் படைத் தலைவன் சோப்பாக். அவனும் மற்ற ஆராமிய வீரர்களை வழிநடத்தினான்.

17 ஆராமியர்கள் மீண்டும் போருக்குத் தயாராகக் கூடுவதை தாவீது கேள்விப்பட்டான். எனவே அவனும் எல்லா இஸ்ரவேலர்களையும் கூட்டினான். யோர்தான் நதியைக் கடந்து தாவீது வழிநடத்தினான். அவர்கள் ஆராமியர்களுக்கு நேருக்கு நேராக வந்தனர். தாவீது போருக்குத் தயாராகி ஆராமியர்களைத் தாக்கினான். 18 ஆராமியர்கள் இஸ்ரவேலரிடம் தோற்று ஓடினார்கள். தாவீதும் அவனது படைகளும் 7,000 ஆராமிய இரத மோட்டிகளையும் 40,000 ஆராமிய வீரர்களையும் கொன்றனர். தாவீதின் படை ஆராமியப் படையின் தளபதியான சோபாக்கையும் கொன்றது.

19 ஆதாரேசரின் அதிகாரிகள், தாம் இஸ்ரவேலர்களால் தோற்கடிக்கப்படுவது அறிந்ததும் தாவீதோடு சமாதானம் செய்துகொண்டனர். அவர்கள் தாவீதின் வேலைக்காரர்கள் ஆனார்கள். எனவே ஆராமியர்கள் அம்மோனியர்களுக்கு மீண்டும் உதவ மறுத்துவிட்டனர்.

யோவாப் அம்மோனியர்களை அழிக்கிறான்

20 அடுத்த ஆண்டு வசந்தகால வேளையில், இஸ்ரவேல் படையைக் கூட்டி யோவாப் போருக்குத் தயார் செய்தான். பொதுவாக அரசர்கள் போருக்கு வெளியே புறப்பட்டுச் செல்லும் காலம் அது. ஆனால் தாவீது எருசலேமில் இருந்தான். இஸ்ரவேல் படை அம்மோன் நாட்டிற்குப் போய் அதை அழித்தது. பிறகு அவர்கள் ரப்பா நாட்டிற்குச் சென்று அங்கே முற்றுகையிட்டது. ஆட்களை உள்ளேயோ, வெளியேயோ போகவிடாமல் செய்தனர். யோவாப்பும் இஸ்ரவேல் படையும் அந்நகரம் அழியும்வரை போரிட்டனர்.

தாவீது அம்மோனிய அரசர்களின் கிரீடத்தை எடுத்தான். அந்தத் தங்க மகுடம் 75 பவுண்டு இருந்தது. அதில் விலையுயர்ந்த கற்கள் இருந்தன. அம்மகுடம் தாவீதின் தலையில் சூட்டப்பட்டது. பிறகு தாவீது ரப்பா நகரிலிருந்து மேலும் விலையுயர்ந்த பொருட்களை எடுத்துக்கொண்டான். தாவீது ரப்பாவிலிருந்து ஜனங்களைக் கூட்டிவந்து அவர்களைப் பலவந்தமாக ரம்பம், இரும்பு, ஊசிகள், கோடரி போன்றவற்றால் வேலைசெய்ய வைத்தான். தாவீது இதனை அனைத்து அம்மோனிய நகரங்களின் ஜனங்களுக்கும் விதித்தான். பிறகு தாவீதும், அவனது படையும் எருசலேமுக்குத் திரும்பியது.

இராட்சத பெலிஸ்தர் வீரர்கள் கொல்லப்படுகிறார்கள்

பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் பெலிஸ்தர்களுடன் கேசேர் நகரில் போரிட்டனர். அப்போது ஊசாத்தியனாகிய சிபெக்காய் இராட்சத மகனான சிப்பாயி என்பவனைக் கொன்றான். எனவே பெலிஸ்தர்கள் இஸ்ரவேலர்களுக்கு அடிமைகளானார்கள்.

இன்னொரு தடவை, மீண்டும் இஸ்ரவேலர்கள் பெலிஸ்தர்களோடு போரிட்டனர். யாவீரின் மகன் எல்க்கானான். இவன் லாகேமியைக் கொன்றான். லாகெமி கோலியாத்தின் சகோதரன். கோலியாத் காத் நகரைச் சேர்ந்தவன். லாகேமியின் ஈட்டி மிகப் பெரிதாகவும் பலமானதாகவும் இருந்தது. அது தாங்கு நெய்கிறவர்களின் படைமரம் போல் இருந்தது.

பிறகு இஸ்ரவேலர் பெலிஸ்தர்களோடு காத் நகரில் இன்னொரு தடவை போரிட்டனர். இந்நகரில் ஒரு பெரிய மனிதன் இருந்தான். அவனுக்கு 24 கைவிரல்களும் கால் விரல்களும் இருந்தன. அவனுக்கு ஒவ்வொரு கையிலும், ஒவ்வொரு காலிலும் ஆறு விரல்கள் இருந்தன. எனவே அவன் இராட்சதர்களின் மகன்தான். அவன் இஸ்ரவேலரைக் கேலிச் செய்தபோது, யோனத்தான் அவனைக் கொன்றான். யோனத்தான் சிமேயாவின் மகன். சிமேயா தாவீதின் சகோதரன் ஆவான்.

பெலிஸ்தர்கள் காத்திலுள்ள இராட்சதர்களுக்கு பிறந்தவர்கள். தாவீதும் அவனுடைய வீரர்களும் இவர்களைக் கொன்றனர்.

இஸ்ரவேலரை எண்ணுவதினால் தாவீது பாவம் செய்கிறான்

21 இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிராக சாத்தான் எழுந்தான். அவன் இஸ்ரவேல் ஜனங்களை எண்ணி கணக்கிட தாவீதை ஊக்கப்படுத்தினான். எனவே தாவீது யோவாப்பிடமும், ஜனங்கள் தலைவர்களிடமும், “போய் அனைத்து இஸ்ரவேலரின் எண்ணிக்கையையும் கணக்கிடு. நாட்டிலுள்ள ஒவ்வொருவரையும் பெயர்செபா முதல் தாண் வரையுள்ள அனைவரையும் கணக்கிடு. பிறகு எனக்குச் சொல். மொத்தத்தில் ஜனங்கள் தொகை எத்தனை என்று கணக்கிட்டு எனக்குச் சொல்” என்றான்.

ஆனால் யோவாப், “இப்போது இருக்கிற ஜனங்களைவிட நூறு மடங்காக கர்த்தர் செய்வார்! ஐயா, இஸ்ரவேலரின் அனைத்து ஜனங்களும் உங்கள் தொண்டர்கள். எனது அரசனும் ஆண்டவனும் ஆனவரே! இந்த செயலை ஏன் செய்ய விரும்புகிறீர்? நீங்கள் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரையும் பாவம் செய்த உணர்வுக்கு உள்ளாக்குவீர்கள்!” என்று சொன்னான்.

ஆனால், தாவீது அரசனோ உறுதியாக இருந்தான். அரசன் சொன்னபடியே யோவாப் செய்தான். எனவே அவன் இஸ்ரவேலின் முழுவதற்கும் போய் கணக்கிட்டான். பிறகு அவன் எருசலேமிற்குத் திரும்பி வந்தான். அவன் தாவீதிடம் ஜனங்களின் எண்ணிக்கையைச் சொன்னான். இஸ்ரவேலில் 1,100,000 பேர் வாளைப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள். யூதாவில் வாளைப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள் 4,70,000 பேர். யோவாப், லேவி மற்றும் பென்யமீன் கோத்திரங்களைக் கணக்கிடவில்லை. ஏனென்றால் அவன் தாவீது அரசனின் கட்டளையை விரும்பவில்லை. தேவனுடைய பார்வையில் தாவீது இந்த தீயச்செயலைச் செய்துவிட்டான். எனவே, தேவன் இஸ்ரவேலரைத் தண்டித்தார்.

தேவன் இஸ்ரவேலரைத் தண்டிக்கிறார்

பிறகு தாவீது தேவனிடம், “நான் முட்டாள்தனமான செயலைச் செய்துவிட்டேன். இஸ்ரவேல் ஜனங்களை எண்ணி ஒரு தீய பாவத்தைச் செய்துவிட்டேன். இப்போது உங்கள் தொண்டனாகிய எனது பாவத்தை என்னிடமிருந்து நீக்குமாறு கெஞ்சுகிறேன்” என்றான்.

9-10 காத் என்பவன் தாவீதின் தீர்க்கதரிசி ஆவான். கர்த்தர் காத்திடம், “போய் தாவீதிடம், ‘இதுதான் கர்த்தர் கூறியது: நான் உனக்குத் தேர்ந்தெடுக்க மூன்று காரியங்களைத் தருகிறேன். அவற்றில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பிறகு நீ தேர்ந்தெடுத்த முறையிலேயே உன்னைத் தண்டிப்பேன்’ என்று கூறு” என்றார்.

11-12 பிறகு காத் தாவீதிடம் சென்று, அவனிடம், “‘தாவீதே நீ விரும்புகிற தண்டனையைத் தேர்ந்தெடுத்துக்கொள்: மூன்று ஆண்டுகள் உணவில்லாமல் இருப்பது, அல்லது மூன்று மாதங்கள் உனது பகைவர்கள் தம் ஆயுதங்களால் துரத்த ஓடிக்கொண்டே இருப்பது, அல்லது மூன்று நாட்கள் கர்த்தர் தரும் தண்டனை. இதனால் பயங்கரமான நோய் நாடு முழுவதும் பரவும், கர்த்தருடைய தூதன் இஸ்ரவேல் முழுவதுமுள்ள ஜனங்களை அழிப்பான்’ என்று கர்த்தர் சொல்கிறார். தேவன் என்னை அனுப்பினார். இப்போது, நான் அவருக்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்று நீ முடிவு செய்” என்றான்.

13 தாவீது காத்திடம், “நான் இக்கட்டில் அகப்பட்டுக்கொண்டேன்! என்னை மனிதர்களின் கைகளில் அகப்பட்டுக்கொள்ளவிடாதே. மனிதர்கள் என் தண்டனையை முடிவுசெய்வதை நான் விரும்பவில்லை. கர்த்தர் இரக்கம் உள்ளவர், எனவே அவரே என் தண்டனையை முடிவுசெய்யட்டும்” என்றான்.

14 எனவே கர்த்தர் கொடிய நோயை இஸ்ரவேலரிடம் பரப்பினார். 70,000 பேர் மரித்தனர். 15 தேவன், எருசலேமை அழிக்க ஒரு தூதனை அனுப்பினார். ஆனால், அத்தூதன் எருசலேமை அழிக்கத் தொடங்கும்போது, கர்த்தர் அதனைப் பார்த்து வருத்தப்பட்டார். கர்த்தர் அத்தூதனிடம், “நிறுத்து! இதுபோதும்!” என்றார். கர்த்தருடைய தூதன் எபூசியனாகிய ஒர்னானின் களத்தருகில் நின்றான்.

16 கர்த்தருடைய தூதன் ஆகாயத்தில் நிற்பதைத் தாவீது கண்களை ஏறெடுத்துப் பார்த்தான். அத்தூதன் எருசலேம் நகரை நோக்கி தன் வாளை உருவிக்கொண்டு நின்றான். தாவீதும், மற்ற தலைவர்களும் தரையில் முகம்படும்படி குனிந்து வணங்கினார்கள். தாவீதும், தலைவர்களும் தங்கள் துக்கத்தை வெளிக்காட்ட சிறப்பான ஆடையை அணிந்திருந்தனர். 17 தாவீது தேவனிடம், “பாவம் செய்தவன் நான் ஒருவனே! ஜனங்களை எண்ணி கணக்கிடும்படி நானே கட்டளையிட்டேன்! நானே தவறு செய்தவன்! இஸ்ரவேல் ஜனங்கள் எந்தத் தவறையும் செய்யவில்லை! தேவனாகிய கர்த்தாவே, என்னையும் என் குடும்பத்தையும் தண்டியும்! உமது ஜனங்களை அழிக்கும் கொடிய நோயை நிறுத்தும்!” என்றான்.

18 பிறகு கர்த்தருடைய தூதன் காத்திடம் பேசினான். அவன், “தாவீதிடம், கர்த்தரை தொழுதுகொள்ள ஒரு பலிபீடம் கட்டுமாறு கூறு. தாவீது, அப்பலிபீடத்தை எபூசியனாகிய ஒர்னானின் களத்திலே கட்டவேண்டும்” என்றான். 19 காத் இவற்றை தாவீதிடம் கூற, தாவீது ஒர்னானின் களத்துக்குப் போனான்.

20 ஒர்னா கோதுமையை அடித்துக்கொண்டிருந்தான். அவன் திரும்பி தேவதூதனைப் பார்த்தான். ஒர்னானின் நான்கு மகன்களும் ஓடி ஒளிந்துக் கொண்டார்கள். 21 தாவீது ஒர்னாவிடம் சென்றான், ஒர்னா களத்தைவிட்டு வெளியே வந்தான். தாவீதின் அருகிலே போய் அவன் முன்பு தரைமட்டும் குனிந்து வணங்கினான்.

22 தாவீது ஒர்னாவிடம், “உனது களத்தை எனக்கு விற்றுவிடு நான் உனக்கு முழு விலையையும் தருவேன். பிறகு இந்த இடத்தை கர்த்தரை தொழுது கொள்வதற்கான பலிபீடத்தைக் கட்டப் பயன்படுத்துவேன். அதன் பிறகே இப்பயங்கர நோய் போகும்” என்றான்.

23 ஒர்னா தாவீதிடம், “களத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எனது அரசன், மற்றும் ஆண்டவன். உமது விருப்பப்படி செய்யும். நான் உங்களுக்கு தகனபலியிட மாடுகளும், விறகுகளும் தருவேன். தானியக் காணிக்கைக்காக, கோதுமையைத் தருவேன். நான் இவை அனைத்தையும் தருவேன்!” என்றான்.

24 ஆனால் தாவீது அரசன், “இல்லை, நான் உனக்கு முழு விலையையும் தருவேன். நான் உனக்குரிய எதையும் எடுத்து கர்த்தருக்கு கொடுக்கமாட்டேன். இலவசமாக எதையும் எடுத்து காணிக்கை செலுத்தமாட்டேன்” என ஒர்னாவிடம் கூறினான்.

25 எனவே தாவீது ஒர்னாவுக்கு 15 பவுண்டு தங்கத்தைக் கொடுத்தான். 26 தாவீது கர்த்தருக்கு அங்கே பலிபீடத்தைக் கட்டினான். தாவீது சர்வாங்க தகன பலியையும், சமாதானப் பலியையும் அளித்தான். தாவீது, கர்த்தரிடம் ஜெபம் செய்தான். வானிலிருந்து அக்கினியை வரவழைத்து, கர்த்தர் தாவீதிற்குப் பதில் சொன்னார். அந்த அக்கினி தகனபலிபீடத்தில் வந்து விழுந்தது. 27 பிறகு கர்த்தர் தூதனுக்கு அவனது வாளை உறையில் போடும்படி கட்டளையிட்டார்.

28 ஒர்னாவின் களத்தில் கர்த்தர் தனக்குப் பதில் சொன்னதை தாவீது கண்டான். எனவே, தாவீது கர்த்தருக்கு தானே பலிகளைச் செலுத்தினான். 29 தகன பலிபீடமும் பரிசுத்தக் கூடாரமும் மலைமீது கிபியோனில் இருந்தது. இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்தரத்தில் இருக்கும்போது மோசே இந்தப் பரிசுத்தக் கூடாரத்தை அமைத்தான். 30 தாவீது, பரிசுத்தக் கூடாரத்திற்குள் தேவனோடு பேச நுழையவில்லை. ஏனென்றால் அவனுக்கு அச்சம் ஏற்பட்டது. கர்த்தருடைய தூதனுக்கும் அவனது வாளுக்கும் தாவீது மிகவும் பயந்தான்.

ரோமர் 2:25-3:8

25 நீங்கள் நியாயப்பிரமாணத்தைக் கடைபிடித்தால்தான் விருத்தசேதனம் செய்துகொண்டதில் பொருள் உண்டு. நீங்கள் சட்ட விதிகளை மீறுவீர்களேயானால் நீங்கள் விருத்தசேதனம் செய்தும் அது பயனற்றதாகிறது. 26 யூதர் அல்லாதவர்கள் விருத்தசேதனம் செய்துகொள்ளாதவர்களே. எனினும் அவர்கள் சட்டவிதிகளின்படி வாழ்வார்களேயானால் அவர்களும் விருத்தசேதனம் செய்துகொண்டவர்களாகவே கருதப்படுவர். 27 யூதர்களாகிய உங்களுக்கு எழுதப்பட்ட சட்டவிதிகளும், விருத்தசேதனமும் உள்ளன. ஆனால் அவற்றை நீங்கள் மீறுகிறீர்கள். எனவே தம் சரீரங்களில் விருத்தசேதனம் செய்துகொள்ளாதவர்களாக இருந்தும் கூட சட்ட விதிகளை மதித்து நடப்பவர்கள் உங்கள் குற்றத்தை நிரூபித்து விடுகிறார்கள்.

28 சரீரத்தால் யூதனாகப் பிறந்தவன் எவனும் உண்மையில் யூதன் அல்லன். உண்மையான விருத்தசேதனம் என்பது சரீரத்தளவில் செய்யப்படுவது அல்ல. 29 மனத்தளவில் யூதனாக இருப்பவனே உண்மையான யூதன். உண்மையான விருத்தசேதனம் இருதயத்தில் செய்யப்படுவது. அது ஆவியால் செய்யப்படுவது. அது எழுதப்பட்ட ஆணைகளால் செய்யப்படுவதல்ல. ஆவியின் மூலம் இதயத்தில் விருத்தசேதனம் செய்யப்படும் ஒருவன் மக்களால் புகழப்படாவிட்டாலும் தேவனால் புகழப்படுவான்.

எனவே மற்றவர்களிடம் இல்லாத உயர்வு யூதர்களிடம் மட்டும் என்ன உள்ளது? அவர்களின் விருத்தசேதனம் என்பதில் அடங்கி இருக்கும் சிறப்பு என்ன? யூதர்களிடம் நிறைய சிறப்புத் தன்மைகள் உள்ளன. தேவன் அவர்களை நம்பியே தம் போதனைகளைக் கொடுத்தார். இதுதான் மிக சிறப்பான மேன்மையாகும். சில யூதர்கள் தேவனுடைய நம்பிக்கைக்கு உரியவர்களாக இல்லை என்பது உண்மையாகும். எனினும் அது தேவனுடைய வாக்குறுதியை மதிப்பற்றதாகச் செய்யாது. உலகில் உள்ள அத்தனை மக்களும் பொய்யராகிப் போனாலும் தேவன் தொடர்ந்து உண்மையுள்ளவராகவே இருப்பார்.

“நீர் உமது வார்த்தைகளில் நீதியுள்ளவராய் விளங்குவீர்.
    உம்முடைய நியாயம் விசாரிக்கப்படும்போது வெற்றியடைவீர்” (A)

என்று வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளது.

நாம் தவறு செய்யும்போது, தேவன் சரியானவர் என்று தெளிவாக அது காட்டிவிடும். எனவே தேவன் நம்மைத் தண்டிக்கும்போது அவர் நீதியில்லாதவர் என்று கூற முடியுமா? (சிலர் இவ்வாறு கூறுவதாக எண்ணுகிறேன்.) கூடாது நம்மை தேவன் தண்டிக்க முடியாமல் போனால், பின்பு உலகத்தையும் தேவனால் நியாயந்தீர்க்க முடியாமல் போகும்.

“நான் பொய் சொல்லும்போது அது தேவனுக்குப் பெருமையே சேர்க்கிறது. ஏனெனில் என் பொய் தேவனுடைய உண்மையை விளங்க வைக்கிறது. அப்படி இருக்கும்போது நான் ஏன் பாவி என்று தீர்ப்பளிக்கப்பட வேண்டும்?” என்று ஒருவன் கேட்கிறான். “நாம் தீமை செய்வோம். அதன் மூலம் நன்மை வரும்” என்று சொல்வதைப் போலாகும் அது. ஆனால் சிலர் அவ்வாறுதான் நாங்கள் போதிக்கிறோம் என்று விமர்சிக்கிறார்கள். அவர்கள் சொல்வது தவறு. அவர்கள் கண்டிக்கப்பட வேண்டும்.

சங்கீதம் 11

இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்

11 கர்த்தரை, நான் நம்பியிருக்கிறேன்.
ஏன் என்னை ஓடி ஒளிந்துகொள்ளச் சொல்லுகிறீர்கள்?
    நீங்கள் என்னிடம், “உன் மலைக்குப் பறவையைப்போல் பறந்து செல்!” என்றீர்கள்.

தீயோர் வேட்டைக்காரனைப் போன்றோர். இருளில் அவர்கள் ஒளிவார்கள்.
    அவர்கள் வில்லை வளைத்து அம்பைக் குறிவைப்பார்கள்.
    நல்ல, நேர்மையான இருதயமுள்ள ஜனங்களின் மேல் எய்வார்கள்.
நல்லவற்றை அவர்கள் அழித்தால் என்ன நிகழும்?
    நல்லோர் அப்போது என்ன செய்வார்கள்?

கர்த்தர் அவரது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்.
    பரலோகத்தில் தனது சிங்காசனத்தில் கர்த்தர் வீற்றிருக்கிறார்.
நடப்பவற்றை கர்த்தர் கண்காணிக்கிறார்.
    கர்த்தருடைய கண்கள் ஜனங்களை நல்லோரா, தீயோரா எனக் கண்டறியும்.
கர்த்தர் நல்லோரைத் தேடுகிறார்.
    கர்த்தர் தீயவரையும், கொடியோரையும், வெறுக்கிறார்.
தீயோர்மேல் வெப்பமான நிலக்கரியையும், எரியும் கந்தகத்தையும் மழையாய்ப் பொழியச் செய்வார்.
    வெப்பமான எரியும் காற்றைமட்டுமே அத்தீயோர் அனுபவிப்பார்கள்.
ஆனால் கர்த்தர் நல்லவர்.
    நல்லதைச் செய்யும் ஜனங்களை அவர் நேசிக்கிறார்.
    நல்லோர் அவருடன் இருப்பார்கள், அவர் முகத்தைக் காண்பார்கள்.

நீதிமொழிகள் 19:10-12

10 ஒரு முட்டாள் செல்வந்தனாகக் கூடாது. இது ஒரு அடிமை இளவரசனை ஆள்வதைப் போன்றது.

11 ஒருவன் அறிவுள்ளவனாக இருந்தால், அந்த அறிவு அவனுக்குப் பொறுமையைத் தரும். அவனுக்குத் தீமை செய்தவர்களை மன்னிப்பது அருமையானது.

12 ஒரு அரசன் கோபத்தோடு இருக்கும்போது, அது சிங்கத்தின் கெர்ச்சிப்பு போன்று இருக்கும். ஆனால் அவன் உன்னோடு மகிழ்ச்சியாக இருப்பது, மென்மையாக மழை பொழிவதுபோன்று இருக்கும்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center