Print Page Options Listen to Reading
Previous Prev Day Next DayNext

The Daily Audio Bible

This reading plan is provided by Brian Hardin from Daily Audio Bible.
Duration: 731 days

Today's audio is from the CSB. Switch to the CSB to read along with the audio.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
1 நாளாகமம் 12:19-14:17

19 மனாசேயின் கோத்திரத்தில் உள்ள சிலர் தாவீதோடு சேர்ந்துகொண்டனர். அவன் பெலிஸ்தர்களோடு சேர்ந்துகொண்டு சவுலுக்கு எதிராகச் சண்டை செய்யப் போனபோது மனாசே கோத்திரத்தினர் அவனோடு சேர்ந்தனர். ஆனால், தாவீதும் அவனது ஆட்களும் உண்மையில் பெலிஸ்தர்களுக்கு உதவி செய்யவில்லை. பெலிஸ்திய தலைவர்கள் தாவீது தமக்கு உதவுவதாகப் பேசிக்கொண்டனர். ஆனால், பிறகு அவனை அனுப்பிவிட முடிவு செய்தனர். இராஜாக்கள், “தாவீது தனது எஜமான் சவுலோடு போய் சேர்ந்துகொண்டால் பிறகு நமது தலைகள் அறுபடும்” என்றனர். 20 தாவீது சிக்லாகுக்குத் திரும்பிப் போகும்போது கீழ்க்கண்ட மனாசேயர்கள் அவனோடு சேர்ந்துகொண்டனர். அத்னாக், யோசபாத், எதியாவேல், மிகாயேல், யோசபாத், எலிகூ, சில்த்தாயி ஆகியோர். இவர்கள் மனாசே கோத்திரத்தினர். தாவீதின் படைக் குழு தலைவர்களானார்கள். 21 இவர்கள், தாவீதின் தீயவர்களுக்கு எதிராகப் போரிட உதவினார்கள். அத்தீயவர்கள் நாடு முழுவதும் சுற்றி ஜனங்களிடம் கொள்ளையடித்தனர். மனாசேயின் வீரர்கள் அனைவரும் பலசாலிகள். இவர்கள் தாவீதின் படையில் தலைவர்களானார்கள்.

22 ஒவ்வொரு நாளும் மேலும் மேலும் வீரர்கள் தாவீதிற்கு உதவ வந்தனர். எனவே தாவீதிடம் ஒரு பெரியப் பலமிக்க படை இருந்தது.

எப்ரோனில் தாவீதோடு சேர்ந்த மற்ற வீரர்கள்

23 எப்ரோன் நகரத்தில் கீழ்க்கண்ட ஆட்கள் தாவீதோடு சேர்ந்துகொண்டனர். அவர்கள் போர் செய்ய தயாராக இருந்தனர். சவுலின் அரசைத் தாவீதிற்கு அளிப்பதற்காக அவர்கள் வந்தனர். அது கர்த்தர் சொன்னபடி நிகழ்ந்தது. இது அவர்களின் எண்ணிக்கையாகும்.

24 யூதா கோத்திரத்தில் இருந்து 6,800 பேர் போர் செய்ய தயாராயிருந்தனர். அவர்கள் ஈட்டிகளையும் கேடயங்களையும் கொண்டுவந்தனர்.

25 சிமியோனின் கோத்திரத்தில் இருந்து 7,100 பேர் வந்தனர். அவர்கள் தைரியமுள்ளவர்களாக போர் செய்யத் தயாராக இருந்தனர்.

26 லேவியின் கோத்திரத்தில் இருந்து 4,600 பேர் வந்தனர். 27 யோய்தாவும் அந்த குழுவில் உள்ளவன். இவன் ஆரோனின் கோத்திரத்தில் உள்ளவன். இவனும் தலைவன். யோய்தாவுடன் 3,700 பேர் இருந்தனர். 28 சாதோக்கும் அந்த குழுவில் இருந்தான். இவன் வீரமிக்க இளைஞன். இவன் தன் குடும்பத்தில் உள்ள 22 வீரர்களோடு வந்தான்.

29 பென்யமீனின் கோத்திரத்திலிருந்து 3,000 பேர் வந்தனர். இவர்கள் சவுலின் உறவினர்கள். இதுவரை இவர்கள் சவுலின் குடும்பத்துக்கு உண்மையுள்ளவர்களாக இருந்தனர்.

30 எப்பிராயீம் கோத்திரத்திலிருந்து 20,800 பேர் வந்தனர். இவர்கள் பலமிக்க வீரர்கள். இவர்கள் தம்தம் குடும்பங்களில் பிரபலமானவர்கள்.

31 மனாசே கோத்திரத்தின் பாதிப்பிரிவில் இருந்து 18,000 பேர் வந்தனர். தாவீதை அரசனாக்குவதற்காக அவர்கள் ஒவ்வொருவராகப் பேர் சொல்லி அழைக்கப்பட்டனர்.

32 இசக்காரின் கோத்திரத்திலிருந்து 200 அறிஞர்கள் வந்தனர். இவர்கள் சரியான காலத்தில் சரியானவற்றை இஸ்ரவேலர்களுக்குச் செய்யத் தெரிந்தவர்கள். இவர்களின் உறவினர்கள் இவர்களுக்குக் கீழாக இவர்களின் கட்டளைப்படி இருந்தனர்.

33 செபுலோனின் கோத்திரத்திலிருந்து 50,000 பயிற்சிப் பெற்ற வீரர்கள் வந்தனர். இவர்கள் எல்லாவிதமான ஆயுதங்களையும் பயன்படுத்த பயிற்சிப் பெற்றிருந்தனர். இவர்கள் தாவீதிற்கு உண்மையுள்ளவர்களாக இருந்தனர்.

34 நப்தலி கோத்திரத்திலிருந்து 1,000 அதிகாரிகள் வந்தனர். இவர்களோடு 37,000 வீரர்கள் இருந்தனர். இவர்கள் ஈட்டியையும் கேடயத்தையும் கொண்டு வந்தனர்.

35 தாணின் கோத்திரத்திலிருந்து 28,600 பேர் போர் செய்ய தயாராக இருந்தனர்.

36 ஆசேரின் கோத்திரத்திலிருந்து 40,000 பயிற்சிப் பெற்ற போர் வீரர்கள் போர் செய்ய தயாராய் இருந்தார்கள்.

37 யோர்தான் ஆற்றுக்குக் கீழ்ப்பகுயில் இருந்து 1,20,000 பேர் வந்தனர். இவர்கள் ரூபன், காத் மற்றும் பாதி மனாசே கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களிடம் எல்லா வகையான ஆயுதங்களும் இருந்தன.

38 இவர்கள் அனைவரும் பலமிக்க போர் வீரர்கள். இவர்கள் தாவீதை அரசனாக்குவதற்கு சம்மதம் தெரிவித்தே எப்ரோன் நகருக்கு வந்தனர். இஸ்ரவேலில் உள்ள மற்ற ஜனங்களும் தாவீது அரசனாக வேண்டும் என எண்ணினார்கள். 39 இவர்கள் எப்ரோனில் தாவீதோடு 3 நாட்களைக் கழித்தனர். இவர்களின் உறவினர்கள் உணவு தயாரித்துக் கொடுத்ததால் இவர்கள் உண்ணுவதும், குடிப்பதுமாய் இருந்தனர். 40 இசக்கார், செபுலோன், நப்தலி ஆகிய கோத்திரங்கள் வசிக்கிற இடத்தின் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் கழுதைகள், ஒட்டகம், கோவேறு கழுதை, மாடுகள் மீது உணவைக் கொண்டு வந்தனர். இவர்கள் மாவு, அத்திப்பழ அடைகள், காய்ந்த திராட்சைப் பழங்கள், திராட்சைரசம், எண்ணெய், ஆடுமாடுகள் ஆகியவற்றைக் கொண்டுவந்தனர். இஸ்ரவேல் ஜனங்கள் பெரிதும் மகிழ்ந்தனர்.

உடன்படிக்கைப் பெட்டியைத் திரும்ப கொண்டுவந்தது

13 தாவீது தனது படையின் அனைத்து அதிகாரிகளோடும் பேசினான். பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரையும் அழைத்தான். அவன் அவர்களிடம், “இது நல்ல யோசனை என்று நீங்கள் நினைத்தால், கர்த்தருடைய விருப்பமும் இருந்தால், இஸ்ரவேலின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள நமது சகோதரர்களுக்குச் செய்தியை அனுப்புவோம். ஆசாரியர்களுக்கும், நகரங்களிலும், வெளி நிலங்களிலும், நமது சகோதரர்களோடு வாழும் லேவியர்களுக்கும் செய்தியை அனுப்புவோம். நம்முடன் வந்து சேர்ந்துகொள்ளும்படி செய்தி அவர்களுக்குச் சொல்லப்படட்டும். நமது கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை திரும்பவும் எருசலேமுக்குக் கொண்டுவருவோம். சவுல் அரசனாக இருந்தபோது உடன்படிக்கைப் பெட்டியை கொண்டுவர அக்கறை இல்லாமல் இருந்துவிட்டோம்” என்றான். எனவே இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் தாவீது சொன்னதை ஒப்புக்கொண்டார்கள். அவர்கள் அனைவரும் இதுவே செய்வதற் கேற்ற சரியான செயல் என்று எண்ணினர்.

எகிப்திலுள்ள சீகோர் ஆறுமுதல் லெபோ ஆமாத்தின் எல்லைவரையுள்ள அனைத்து ஜனங்களையும் தாவீது கூட்டினான். அவர்கள் அனைவரும் உடன்படிக்கைப் பெட்டியை கீரியாத் யாரீமிலிருந்து கொண்டுவருவதற்காகக் கூடினார்கள். தாவீதும் அவனோடு இருந்த மற்ற இஸ்ரவேலர்களும் யூதாவிலுள்ள பாலாவிற்குச் சென்றனர். (பாலா என்பது கீரியாத்யாரீமின் இன்னொரு பெயர்) உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துவர அவர்கள் அங்கே போனார்கள். உடன்படிக்கைப் பெட்டி என்பது தேவனாகிய கர்த்தருடைய பெட்டி. அவர் கேருபீன்களுக்கு மேலே அமர்ந்திருக்கிறார். இப்பெட்டி கர்த்தருடைய நாமத்தாலேயே அழைக்கப்படுகிறது.

ஜனங்கள் உடன்படிக்கைப் பெட்டியை அபினதாபின் வீட்டிலிருந்து தூக்கி வந்தனர். அதனைப் புதிய வண்டியில் வைத்தனர். ஊசாவும் அகியாவும் அவ்வண்டியை ஓட்டினார்கள்.

தாவீதும், இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் தேவனுக்கு முன்பாக கொண்டாடினார்கள். அவர்கள் தேவனை புகழ்ந்து பாடினார்கள். அவர்கள் சுரமண்டலங்களையும், மேளங்களையும், கைத்தாளங்களையும், எக்காளங்களையும் இசைத்தனர்.

அவர்கள் கீதோனின் தானியத்தைப் பிரித்தெடுக்கும் களம் வந்தனர். வண்டியை இழுத்து வந்த மாடுகள் இடறின. உடன்படிக்கைப் பெட்டியானது ஏறக்குறைய விழுவது போலானது. ஊசா, அதனை ஒரு கையால் விழாமல் பிடித்துக்கொள்ள கையை நீட்டினான். 10 ஊசாவின் மேல் கர்த்தருக்கு பெருங் கோபம் உண்டாயிற்று, ஊசா பெட்டியைத் தொட்டதால் கர்த்தர் அவனைக் கொன்றுப்போட்டார். எனவே அவன் தேவனுக்கு முன்னால் மரித்துப் போனான். 11 தேவன் தனது கோபத்தை ஊசாவின் மேல் காட்டினார். இதனால் தாவீதுக்குக் கோபம் வந்தது. அன்று முதல் இன்றுவரை இந்த இடம் “பேரேஸ் ஊசா” என்றே அழைக்கப்படுகிறது.

12 தாவீது அன்று தேவனுக்குப் பயந்தான். தாவீது, “தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியை இங்கு என்னிடம் என்னால் கொண்டுவர முடியாது!” என்றான். 13 எனவே தாவீது தனது நகரத்திற்கு உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துச் செல்லவில்லை. அவன் உடன்படிக்கைப் பெட்டியை ஓபேத் ஏதோமின் வீட்டில் விட்டுவிட்டுப் போனான். இவன் காத் நகரத்தைச் சேர்ந்தவன். 14 உடன்படிக்கைப் பெட்டியானது ஓபேத் ஏதோமின் வீட்டில் மூன்று மாதங்களுக்கு இருந்தது. ஓபேத் ஏதோமின் குடும்பத்தையும், அவனுக்குரிய அனைத்தையும் கர்த்தர் ஆசீர்வதித்தார்.

தாவீதின் அரசு வளர்ந்தது

14 ஈராம், தீரு எனும் நகரத்தின் அரசன், ஈராம், தாவீதுக்கு தூதுவனை அனுப்பியிருந்தான். அதோடு கேதுரு மரத்தடிகளையும், கல்தச்சர்களையும், மரவெட்டிகளையும் அனுப்பியிருந்தான். தாவீதிற்கு வீடு கட்டவே ஈராம் இவற்றை அனுப்பினான். உண்மையிலேயே கர்த்தர் தன்னை இஸ்ரவேலின் அரசனாக்கியதை தாவீது அறிய முடிந்தது. தாவீதின் அரசாங்கத்தைக் கர்த்தர் பலமுள்ளதாகவும் பெரிதானதாகவும் ஆக்கினார். தேவன், தாவீதையும் இஸ்ரவேல் ஜனங்களையும் நேசித்ததால் இவ்வாறு செய்தார்.

எருசலேம் நகரத்தில் தாவீது மேலும் பெண்களை மணந்துக்கொண்டான். அவனுக்கு ஏராளமாக ஆண் பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் பிறந்தனர். இவை எருசலேமில் தாவீதின் பிள்ளைகளின் பெயர்களாகும்: சம்முவா, சோபாப், நாத்தான், சாலொமோன், இப்கார், எலிசூவா, எல்பெலேத், நோகா, நெப்பேக், யப்பியா, எலிஷாமா, பெலியாதா, எலிப்பெலேத் ஆகியோர்.

தாவீது பெலிஸ்தர்களை வெல்கிறான்

இஸ்ரவேலின் அரசனாகத் தாவீது தேர்ந்தெடுக்கப்பட்டதை பெலிஸ்தர்கள் அறிந்தனர். எனவே பெலிஸ்தர்கள் அனைவரும் தாவீதை தேடுவதற்காக வந்தார்கள். இதனை தாவீது கேள்விப்பட்டான். பிறகு தாவீது பெலிஸ்தர்களோடு போரிடச் சென்றான். பெலிஸ்தர்கள், ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே உள்ள ஜனங்களைத் தாக்கி அவர்களது பொருட்களைக் கொள்ளை அடித்தனர். 10 தாவீது தேவனிடம், “நான் பெலிஸ்தர்களுக்கு எதிராகப் போரிடலாமா? நான் அவர்களைத் தோற்கடிக்கும்படி செய்வீரா?” என்று கேட்டான்.

அதற்குக் கர்த்தர் தாவீதிடம், “போ, நான் உன்னைப் பெலிஸ்தர்களை வெல்லும்படிச் செய்வேன்” என்று பதிலுரைத்தார்.

11 பிறகு, தாவீதும் அவனது ஆட்களும் பாகால் பிராசீம்வரை சென்றனர். அங்கே தாவீதும், அவனது ஆட்களும் பெலிஸ்தர்களைத் தோற்கடித்தனர். தாவீது அவர்களிடம், “உடைந்த அணையிலிருந்து தண்ணீர் பெருக்கெடுத்து வருவதைப்போல, என் எதிரிகளிடமிருந்து தேவன் வெற்றிக் கண்டுள்ளார்! தேவன், இதனை என் மூலம் செய்தார்” என்றான். அதனால் அந்த இடம் பாகால்பிராசீம் என்ற பெயரைப் பெற்றது. 12 பெலிஸ்தர்கள் பாகால்பிராசீமில் தங்கள் விக்கிரங்களை விட்டு விட்டு ஓடிப் போனார்கள். அவற்றை எரித்துப்போடும்படி தாவீது கட்டளையிட்டான்.

பெலிஸ்தர் மீது மேலும் வெற்றிபெற்றது

13 பெலிஸ்தர்கள், மீண்டும் ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே உள்ள ஜனங்களைத் தாக்கினார்கள். 14 தாவீது மீண்டும் தேவனிடம் ஜெபித்தான். தாவீதின் ஜெபத்திற்குத் தேவன் பதில் சொன்னார். தேவன், “நீ பெலிஸ்தர்களைத் தாக்கும்போது அவர்களுக்கு முன்பாகப் போகாதே. அதற்குப் பதிலாக அவர்களைச் சுற்றிக்கொண்டு செல். நறுமணம் வீசும் திரவங்கள் வடியும் மரங்களுக்குப்பின் மறைந்துக்கொள். 15 அவற்றின் மீது ஏறு. அதன் மேலிருந்து உன்னால் படைகளின் வருகை ஒலியைக் கேட்க முடியும். அப்போது, பெலிஸ்தர்களை நீ தாக்கு. நான் (தேவன்) உனக்கு முன்னால் போய் பெலிஸ்தர்களைத் தோற்கடிப்பேன்!” என்றார். 16 தேவன் சொன்னபடியே தாவீது செய்தான். அதனால் தாவீதும், அவனது ஆட்களும் பெலிஸ்தரின் படைகளை வென்றனர். பெலிஸ்தர் வீரர்களை கிபியோன் முதல் காசேர்வரை அவர்கள் கொன்றார்கள். 17 எனவே, தாவீது அனைத்து நாடுகளிலும் பிரபலமானான். தாவீதிற்கு அனைத்து தேசங்களும் பயப்படும்படி கர்த்தர் செய்தார்.

ரோமர் 1:1-17

இயேசு கிறிஸ்துவின் ஒரு ஊழியனும், அப்போஸ்தலனாகும்படி தேவனால் அழைக்கபட்டவனுமாகிய பவுல் எழுதுவது:

தேவனுடைய நற்செய்தியை எல்லாருக்கும் சொல்வதற்காக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். தனது மக்களுக்கு நற்செய்தியை தரப்போவதாக தேவன் ஏற்கெனவே வாக்குறுதி தந்துள்ளார். தேவன் தனது தீர்க்கதரிசிகள் மூலம் இவ்வாக்குறுதியை வழங்கினார். இந்த வாக்குறுதி பரிசுத்த வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளது. 3-4 அந்த நற்செய்தி தேவனுடைய குமாரனும் நமது கர்த்தருமாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றியது. ஒரு மனிதனைப் போன்று அவர் தாவீதின் குடும்பத்தில் பிறந்தார். ஆனால் பரிசுத்த ஆவியானவரின் மூலம் இயேசு தேவனுடைய குமாரன் என்பதை மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்ததன் மூலம் பலமாய் நிரூபித்துக் காட்டினார்.

கிறிஸ்துவின் மூலம் தேவனுக்குச் சேவை செய்யும் சிறப்பை எனக்குக் கொடுத்தார். தேவன் மேல் நம்பிக்கையும், கீழ்ப்படிதலுமுள்ளவர்களாக உலகில் உள்ள அனைத்து நாட்டு மக்களையும் வழிநடத்தும்படிக்கு இப்பணியை தேவன் எனக்குக் கொடுத்தார். நான் கிறிஸ்துவுக்காக இப்பணியைச் செய்கிறேன். ரோமிலுள்ள நீங்களும் இயேசு கிறிஸ்துவுக்கு உரியவர்களாக அழைக்கப்பட்டீர்கள்.

தன் பரிசுத்த மக்களாக தேவனால் அழைக்கப்பட்ட, ரோமிலுள்ள உங்கள் அனைவருக்கும் இக்கடிதம் எழுதப்படுகிறது.

தேவனுடைய நேசத்துக்குரியவர்கள் நீங்கள். பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவாலும் உங்களுக்குக் கிருபையும், சமாதானமும் உண்டாவதாக.

நன்றியின் பிரார்த்தனை

முதலில் நான் உங்களுக்காக இயேசு கிறிஸ்துவின் மூலம் தேவனுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால் உலகின் பல பகுதிகளிலுள்ள மக்களும் உங்களது பெரிய விசுவாசத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள். 9-10 ஒவ்வொரு முறையும் பிரார்த்தனை செய்யும்போதெல்லாம் உங்களை நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன். இது உண்மை என தேவனுக்குத் தெரியும். மக்களிடம் தேவனுடைய குமாரனைப் பற்றிய நற்செய்தியைக் கூறுவதன் மூலம் தேவன் ஒருவருக்கே நான் எனது ஆவியின் வழியே சேவை செய்கிறேன். உங்களிடம் வர அனுமதிக்குமாறு தேவனிடம் பிரார்த்திக்கிறேன். தேவன் விரும்பினால் இது நிகழும். 11 நான் உங்களைப் பார்க்க மிகவும் விரும்புகிறேன். உங்களைப் பலப்படுத்தும் ஆவிக்குரிய வரங்களை உங்களுக்குத் தர நான் விரும்புகிறேன். 12 நம்மிடம் உள்ள விசுவாசத்தின் மூலம் நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். எனது விசுவாசம் உங்களுக்கும், உங்கள் விசுவாசம் எனக்கும் உதவியாக இருக்கும்.

13 சகோதர, சகோதரிகளே, உங்களிடம் வருவதற்காக நான் பலமுறை திட்டமிட்டேன். ஆனால் இப்போதுவரை நான் வரத் தடைசெய்யப்பட்டேன். நீங்கள் ஆத்தும வளர்ச்சியைப் பெறுவதற்காக நான் அங்கே வர விரும்புகிறேன். யூதர் அல்லாத மக்களுக்கு நான் உதவியது போலவே நான் உங்களுக்கும் உதவ விரும்புகிறேன்.

14 கிரேக்கர்களுக்கும், கிரேக்கர் அல்லாதவர்களுக்கும், அறிவுள்ளவர்களுக்கும், அறிவற்றோருக்கும் நான் சேவை செய்யக் கடனாளியாயிருக்கிறேன். 15 அதனால் தான் நான் ரோமிலுள்ள உங்களுக்கும் நற்செய்தியைப் போதிக்க விரும்புகிறேன்.

16 நான் நற்செய்தியைப் பற்றி பெருமிதம் கொள்கிறேன். விசுவாசமுள்ள அனைவரையும் இரட்சிக்கவும், முதலில் யூதர்களையும் பின்னர் யூதர் அல்லாதவர்களையும் இரட்சிக்கவும் தேவன் பயன்படுத்திய வல்லமை இந்த நற்செய்தியே ஆகும். 17 தேவன் எவ்வாறு நீதிமான்களை உருவாக்குகிறார் என்று நற்செய்தி காட்டுகிறது. மக்களை நீதிமான்களாக தேவன் உருவாக்கும் வழிமுறையானது விசுவாசத்திலேயே தொடங்கி முடிகிறது. எழுதியிருக்கிறபடி “தேவன் மேலுள்ள விசுவாசத்தால் நீதிமான் என்றென்றும் வாழ்ந்திருப்பான்.” [a]

சங்கீதம் 9:13-20

13 நான் தேவனிடம் இந்த ஜெபத்தைக் கூறினேன்:
    “கர்த்தாவே, என்னிடம் தயவாயிரும்.
    பாரும், என் பகைவர்கள் என்னைத் தாக்குகிறார்கள்.
    ‘மரணவாசலில்’ இருந்து என்னைக் காப்பாற்றும்.
14 அப்போது கர்த்தாவே, எருசலேமின் வாசல்களில் நான் உம்மைத் துதித்துப் பாடக்கூடும்.
    என்னை நீர் காப்பாற்றியதால் நான் மிகவும் மகிழ்ச்சிகொள்வேன்.”

15 பிறரை அகப்படுத்த யூதரல்லாத ஜனங்கள் குழிகளைத் தோண்டினார்கள்.
    அக்குழிகளில் அவர்களே வீழ்ந்தனர்.
    பிறரை அகப்படுத்த வலைகளை விரித்தனர். அவ்வலைகளில் அவர்களே சிக்குண்டனர்.
16 கர்த்தர் அத்தீயோரைப் பிடித்தார்.
    தீயவை செய்வோரை கர்த்தர் தண்டிப்பாரென அந்த ஜனங்கள் அறிந்துகொண்டனர்.

17 தேவனை மறக்கும் ஜனங்கள் தீயோர்கள்.
    அந்த ஜனங்கள் மரணத்தின் இடங்களுக்குச் செல்வார்கள்.
18 துன்பப்பட்ட ஜனங்களை தேவன் மறந்துவிட்டாரென சில நேரங்களில் தோன்றும்.
    அந்த ஏழைகள் நம்பிக்கையிழக்கும் நிலை வந்ததென்று தோன்றும்.
    ஆனால் தேவன் அவர்களை என்றென்றும் மறப்பதில்லை.
19 கர்த்தாவே, எழுந்து தேசங்களை நியாந்தீரும்.
    தாங்கள் வல்லமை மிகுந்தோரென ஜனங்கள் தங்களை நினையாதபடி செய்யும்.
20 ஜனங்களுக்குப் பாடம் கற்பியும்.
    அவர்கள் தாங்கள் சாதாரண மனிதப் படைப்பு மட்டுமே என்றறியச் செய்யும்.

நீதிமொழிகள் 19:4-5

ஒருவன் செல்வந்தனாக இருந்தால், அவனது செல்வம் பல நண்பர்களைத் தரும். ஆனால் ஒருவன் ஏழையாக இருந்தால் எல்லா நண்பர்களும் அவனைவிட்டு விலகுவார்கள்.

இன்னொருவனுக்கு எதிராகப் பொய் சொல்பவன் தண்டிக்கப்படுவான். பொய் சொல்பவனுக்குப் பாதுகாப்பில்லை.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center