Print Page Options Listen to Reading
Previous Prev Day Next DayNext

The Daily Audio Bible

This reading plan is provided by Brian Hardin from Daily Audio Bible.
Duration: 731 days

Today's audio is from the ESV. Switch to the ESV to read along with the audio.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
1 நாளாகமம் 9-10

இஸ்ரவேலர்களின் பெயர்கள் எல்லாம் குடும்ப வரலாற்றில் சேர்க்கப்பட்டது. அந்த குடும்பங்களின் வரலாறு இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.

எருசலேம் ஜனங்கள்

யூதாஜனங்கள் கைதிகளாக்கப்பட்டு பாபிலோனுக்குப் பலவந்தமாகக் கொண்டுப் போகப்பட்டார்கள். அவர்கள் தேவனுக்கு உண்மையுள்ளவர்களாக இல்லாதபடியால் அந்த இடத்துக்குக் கொண்டுப் போகப்பட்டார்கள். சில இஸ்ரவேலர்களும், ஆசாரியர்களும், லேவியர்களும், ஆலயத்தில் பணியாற்றும் வேலையாட்களும் முதலில் அங்கு திரும்பி வந்து தங்கள் சொந்த நிலங்களிலும் பட்டணங்களிலும் குடியேறினார்கள்.

எருசலேமில் வாழ்ந்த யூதா, பென்யமீன், எப்பிராயீம், மனாசே ஆகிய கோத்திரங்களைச் சார்ந்தவர்களின் பட்டியல் பின்வருமாறு:

ஊத்தாய் அம்மியூதியின் மகன். அம்மியூதி உம்ரியின் மகன். உம்ரி இம்ரியின் மகன். இம்ரி பானியின் மகன். பானி பேரேசின் சந்ததியைச் சேர்ந்தவன். பேரேஸ் யூதாவின் மகன்.

எருசலேமில் வாழ்ந்த சேலாவின் ஜனங்கள்: அசாயா மூத்த மகன். இவனுக்கும் மகன்கள் இருந்தனர்.

எருசலேமில் வாழ்ந்த சேராவின் ஜனங்கள், அவர்கள் யெகுவேலும், அவர்களின் உறவினர்களும். அவர்கள் மொத்தம் 690 பேர்.

எருசலேமில் வாழ்ந்த பென்யமீன் கோத்திரத்தின் ஜனங்கள்: சல்லு மெசுல்லாவின் மகன். மெசுல்லா ஓதாவியாவின் மகன், ஓதாவியா அசெனூவாவின் மகன். இப்னெயா எரோகாமின் மகன். ஏலா ஊசியின் மகன். ஊசி மிக்கிரியின் மகன். மெசுல்லாம் செபதியாவின் மகன். செபதியா ரேகுவேலின் மகன்.ரேகுவேல் இப்னியாவின் மகன். பென்யமீன் குடும்ப வரலாறானது, அவர்கள் 956 பேர் எருசலேமில் வாழ்ந்ததாகக் கூறுகின்றது. அவர்கள் அனைவரும் குடும்பத் தலைவர்கள்.

10 எருசலேமில் வாழ்ந்த ஆசாரியர்கள்: யெதாயா, யோயாரீப், யாகின், 11 அசரியா. அசரியா இல்க்கியாவின் மகன். இல்க்கியா மெசுல்லாவின் மகன். மெசுல்லா சாதோக்கின் மகன். சாதோக் மெராயோதின் மகன். மெராயோது அகிதூபின் மகன். இவன் தேவனுடைய ஆலயத்தில் மிக முக்கியமான அதிகாரியாக இருந்தான். 12 அதோடு எரோகாமின் மகனான அதாயாவும் அங்கே வாழ்ந்தான். எரோகாம் பஸ்கூவின் மகன். பஸ்கூ மல்கியாவின் மகன். ஆதியேலின் மகனான மாசாயும் அங்கிருந்தான். ஆதியேல் யாசெராவின் மகன். யாசெரா மெசுல்லாமின் மகன். மெசுல்லாம் மெசிலேமித்தின் மகன். மெசிலேமித் இம்மெரின் மகன்.

13 அங்கே 1,760 ஆசாரியர்கள் இருந்தனர். அவர்கள் தங்கள் குடும்பத் தலைவர்களாகவும், தேவனுடைய ஆலயத்தில் பணிசெய்யும் பொறுப் பாளர்களாகவும் இருந்தனர்.

14 எருசலேமில் வாழ்ந்த லேவியர் கோத்திரத்தைச் சேர்ந்த ஜனங்களின் பட்டியல்: செமாயா அசூபின் மகன். அசூப் அஸ்ரீகாமுவின் மகன். அஸ்ரீகாமு அசபியாவின் மகன். அசபியா மெராரியின் சந்ததியைச் சேர்ந்தவன். 15 பக்பக்கார், ஏரேஸ், காலால், மத்தானியா ஆகியோரும் எருசலேமில் வாழ்ந்து வந்தார்கள். மத்தானியா மிக்காவின் மகன். மிக்கா சிக்ரியின் மகன். சிக்ரி ஆசாப்பின் மகன். 16 ஒபதியா செமாயாவின் மகன். செமாயா காலாலின் மகன். காலால் எதுத்தூனின் மகன். எருசலேமில் ஆசாவின் மகனான பெர்கியா வாழ்ந்தான். ஆசா எல்க்கானாவின் மகன். எல்க்கானா நெத்தோபாத்தியரின் சிறு நகரங்களில் வாழ்ந்தான்.

17 எருசலேமில் வாழ்ந்த காவலாளர்கள்: சல்லூம், அக்கூப், தல்மோன், அகிமான் ஆகியோரும் அவர்களது உறவினருமே. அவர்களின் தலைவனாகச் சல்லூம் இருந்தான். 18 சிலர் கிழக்கே இருக்கிற இராஜாவின் வாசலைக் காவல் காத்தனர். இவர்கள் லேவியரின் கோத்திரத்தின் வழிவந்த காவல்காரர்கள். 19 சல்லூம், கோரேயின் மகன். கோரே, எபியாசாவின் மகன். எபியாசா, கோராகின் மகன், சல்லூம் மற்றும் அவனது சகோதரர்கள் வாசலைக் காத்தனர். அவர்கள் கோராகின் வம்சத்தில் வந்தவர்கள். அவர்களுக்குப் பரிசுத்தக் கூடார வாசலைக் காவல் காப்பது வேலை ஆயிற்று. அதனை அவர்கள் அவர்களின் முற்பிதாக்கள் செய்தது போன்றே செய்து வந்தனர். 20 முன்பு பினேகாசு வாசலைக் காக்கும் பொறுப்பினை ஏற்றிருந்தான். பினேகாசு, எலியாசாரின் மகன். கர்த்தர் பினேகாசோடு இருந்தார். 21 மெசெலமியாவின் மகனான சகரியா பரிசுத்தக் கூடாரத்தின் வாயிலின் காவல்காரனாய் இருந்தான்.

22 பரிசுத்தக் கூடார வாசலைக் கண்காணிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 212. அவர்களின் பெயர்கள் சிறு நகரங்களின் வரலாற்றில் இடம் பெற்றுள்ளன. நம்பிக்கைக்கு உரிய அவர்களை தாவீதும் சீயர் ஆகிய சாமுவேலும் இந்தப் பணிக்குத் தேர்ந்தெடுத்தார்கள். 23 இந்த வாயில் காவலர்களும் அவர்களது சந்ததியினரும் கர்த்தருடைய ஆலயமாகிய பரிசுத்தக் கூடாரத்தைக் காக்கும் பொறுப்பை ஏற்று வந்தனர். 24 வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்று நான்கு பக்கமும் 4 வாசல்கள் இருந்தன. 25 சில நேரங்களில் வாயில் காவலர்களின் உறவினர்கள் சிறு நகரங்களிலிருந்து வந்து அவர்களுக்குக் காவல் பணிக்கு உதவி செய்தனர். அவர்கள் வருகைதந்த ஒவ்வொரு முறையும் ஏழு நாட்கள் வாயில் காவலர்களுக்கு உதவினார்கள்.

26 நான்கு வாசல் காவலர்களுக்கும், நான்கு தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் லேவியர்களாக இருந்தனர். அவர்களுக்கு தேவனுடைய ஆலயத்தின் பண்டகச்சாலை மற்றும் கருவூலங்களைக் காக்கும் பொறுப்பு இருந்தது. 27 அவர்கள் தேவனுடைய ஆலயத்தில் இரவில் தங்கியிருந்து காத்தனர். ஒவ்வொரு நாள் காலையிலும் தேவாலயத்தைத் திறப்பதும் அவர்களின் வேலையாய் இருந்தது.

28 சில வாசல் காவலர்களுக்கு, ஆலய பணிக்குரிய பாத்திரங்களைப் பாதுகாக்கும் பொறுப்பு இருந்தது. அவர்கள் அவற்றை எண்ணிப்பார்த்தே வெளியே எடுப்பதும் உள்ளே வைப்பதுமாய் இருந்தனர். 29 வேறு சில வாசல் காவலர்கள், மற்ற இருக்கை போன்றவற்றையும் பரிசுத்தமான பாத்திரங்களையும் கவனித்துக்கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதோடு மெல்லிய மா, திராட்சை ரசம், எண்ணெய், சாம்பிராணி, நறுமணப் பொருட்கள் போன்றவற்றுக்குப் பொறுப்பாளிகளாயினர். 30 வாசனைப் பொருட்களால் சிறப்பான தைலத்தைக் கலக்கும் வேலையைச் சில ஆசாரியர்கள் செய்து வந்தனர்.

31 ஒரு லேவியனின் பெயர் மத்தித்தியா. பலியிடுவதற்காக அப்பம் சுடுகிற வேலை அவனுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. சல்லூமின் மூத்த மகன் மத்தித்தியா. சல்லூம், கோரகியா குடும்பத்தில் வந்தவன். 32 சில வாசல் காப்பவர்கள் கோரகியா குடும்பத்தினர். அவர்களுக்கு ஓய்வு நாள்தோறும் அப்பங்களைத் தயாரித்து மேஜையின் மேல் அடுக்கும் பணி கொடுக்கப்பட்டது.

33 லேவியர்களில் பாடுபவர்களும் குடும்பத் தலைவர்களும் ஆலயத்தில் உள்ள அறைகளில் தங்கி இருந்தனர். அவர்கள் வேறு வேலைகளைச் செய்யமாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு இரவும் பகலும் ஆலயத்தில் வேலை இருந்தது.

34 இந்த லேவியர்கள் அனைவரும் அவரவர்கள் குடும்பங்களுக்கு தலைவர்களாக இருந்தனர். தம் குடும்ப வரலாற்றில் குடும்பத் தலைவர்களாக அவர்கள் விவரிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எருசலேமில் வாழ்ந்தார்கள்.

சவுல் அரசனின் குடும்ப வரலாறு

35 யெகியேல், கிபியோனின் தந்தை. யெகியேல், கிபியோன் நகரில் வாழ்ந்தான். யெகியேலின் மனைவியின் பெயர் மாக்காள். 36 யெகியேலின் மூத்த மகனின் பெயர் அப்தோன். மற்றவர்கள் சூர், கீஸ், பாகால், நேர், நாதாப், 37 கேதோர், அகியோ, சகரியா, மிக்லோத் ஆகியோர். 38 மிக்லோத், சிமியாமின் தந்தை. யெகியேலின் குடும்பம், அவர்களது உறவினர்களோடு எருசலேமில் வாழ்ந்து வந்தது.

39 நேர் கீஸின் தந்தை. கீஸ் சவுலின் தந்தை. சவுல் யோனத்தான், மல்கிசூவா, அபினதாப், எஸ்பால் ஆகியோரைப் பெற்றான்.

40 யோனத்தானின் மகன் மெரிபால். மெரிபால் மீகாவின் தந்தை.

41 மீகாவிற்கு பித்தோன், மேலேக், தரேயா, ஆகாஸ் எனும் மகன்கள் இருந்தனர். 42 ஆகாஸ் யாதாவின் தந்தை. யாதா யாராகின் தந்தை. யாராக் என்பவன் அலெமேத், அஸ்மவேத், சிம்ரி ஆகிய மகன்களைப் பெற்றான். சிம்ரி மோசாவின் தந்தை. 43 மோசா பினியாவின் தந்தை. பினியா ரப்பாயாவின் தந்தை. ரப்பாயா எலியாசாவின் தந்தை. எலியாசா ஆத்சேலின் தந்தை.

44 ஆத்சேலுக்கு ஆறு மகன்கள் இருந்தனர். அவர்களின் பெயர்கள் அசரீக்காம், பொக்குரு, இஸ்மவேல், சேராயா, ஒபதியா, ஆனான் ஆகும். இவர்கள் அனைவரும் ஆத்சேலின் பிள்ளைகள்.

சவுல் அரசனின் மரணம்

10 பெலிஸ்தர்கள், இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிராகப் போர் செய்தார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் தோற்று ஓடிப்போனார்கள். கில்போவா மலையில் அவர்கள் வெட்டுண்டு மரித்துப்போனார்கள். சவுலையும், அவனது மகன்களையும் பெலிஸ்தர்கள் தொடர்ந்து துரத்திக்கொண்டு போனார்கள். அவர்கள், இவர்களைப் பிடித்து கொன்றார்கள். பெலிஸ்தர்கள் சவுலின் மகன்களான யோனத்தான், அபினதாப், மல்கிசூவா ஆகியோரைக் கொன்றனர். சவுலைச் சுற்றி போர் பலமடைந்தது. வில் வீரர் அவனை அம்பால் எய்து காயப்படுத்தினார்கள்.

பிறகு சவுல் அவனது ஆயுதந்தாங்கியிடம், “உனது வாளை எடு. அதனால் என்னைக் கொல். அதனால் அந்த அந்நியர்கள் என்னைக் காயப்படுத்தமாட்டார்கள். அவர்கள் வரும்போது என்னைக் கேலிச் செய்யமாட்டார்கள்” என்றான்.

ஆனால், சவுலின் ஆயுதந்தாங்கி பயந்தான். அவன் சவுலைக் கொல்ல மறுத்தான். பிறகு சவுல், தனது சொந்த வாளையே தன்னைக் கொல்வதற்கு பயன்படுத்தினான். சவுல் மரித்துப்போனதை ஆயுதந்தாங்கி பார்த்தான். பின் அவனும் தற்கொலை செய்துக்கொண்டான். அவனும் சவுலைப் போலவே தன் வாளின் நுனியிலே விழுந்து மரித்துப் போனான். இவ்வாறு சவுலும், அவனது மூன்று மகன்களும் மரித்துப்போனார்கள். சவுலின் குடும்பம் முழுவதுமே மொத்தமாக மரித்துப்போனது.

அப்பள்ளத்தாக்கில் வாழ்ந்த இஸ்ரவேலர்கள் அனைவரும் தமது சொந்த படை ஓடுவதைக் கண்டனர். சவுலும், அவனது மகன்களும் மரித்துப் போனதைக் கண்டனர். எனவே, இவர்கள் தமது நகரங்களைவிட்டு ஓடிப்போனார்கள். இவர்கள் விட்டுப்போன இடங்களில், பெலிஸ்தர்கள் வந்து நுழைந்தனர். அவ்விடங்களிலே பெலிஸ்தர்கள் குடியேறினார்கள்.

மறுநாள், பெலிஸ்தர்கள் மரித்துப்போனவர்களின் உடலில் இருந்து விலைமதிப்புடைய பொருட்களை எடுக்கவந்தனர். அப்போது அவர்கள் சவுல் மற்றும் அவனது மகன்களின் உடல்களைக் கில்போவா மலையில் கண்டுபிடித்தனர். பெலிஸ்தர்கள் சவுலின் உடம்பிலுள்ள சில பொருட்களை எடுத்துக்கொண்டனர். அவர்கள் சவுலின் தலையையும் ஆயுதங்களையும் எடுத்தனர். அவர்கள் தூதுவர்களை அனுப்பி தங்கள் நாடுகளில் உள்ள ஜனங்களுக்கும், பொய்த் தெய்வங்களுக்கும் செய்தியை பரப்பினார்கள். 10 பெலிஸ்தர்கள், சவுலின் ஆயுதங்களைத் தமது பொய்த் தெய்வங்களின் ஆலயங்களில் வைத்தனர். சவுலின் தலையைத் தாகோன் ஆலயத்திலே தொங்கவிட்டனர்.

11 பெலிஸ்தர்கள் சவுலுக்குச் செய்தவற்றைப் பற்றி கீலேயாத் நாட்டு யாபேசு நகரத்தவர்கள் கேள்விப்பட்டனர். 12 சவுல் மற்றும் அவனது மகன்களின் உடல்களைக் கைப்பற்ற தைரியமுள்ள கீலேயாத் நாட்டு யாபேசு நகரத்தவர்கள் போனார்கள். அவற்றை எடுத்துவந்தனர். அவர்கள், சவுல் மற்றும் மகன்களின் எலும்புகளை யாபேசில் ஒரு பெரிய மரத்தடியில் அடக்கம்செய்தனர். பின் ஏழு நாட்கள் உபவாசமிருந்தார்கள்.

13 சவுல் கர்த்தருக்கு உண்மையுள்ளவனாக இல்லாதபடியால் அவன் கொல்லப்பட்டான். சவுல் கர்த்தருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியவில்லை. 14 அவன் தன் எதிர்காலத்தைப் பற்றி கர்த்தரிடம் கேட்பதற்குப் பதிலாக குறி சொல்வோரை நாடினான். அதனால்தான் கர்த்தர் அவனைக் கொன்று ஆட்சியை ஈசாயின் மகனான தாவீதிடம் தந்தார்.

அப்போஸ்தலர் 27:21-44

21 நீண்ட காலமாக அம்மனிதர்கள் சாப்பிடவில்லை. பின்பு ஒருநாள் பவுல் அவர்களுக்கு முன்பாக எழுந்து நின்று, “மனிதரே, கிரேத்தாவை விட்டுப் புறப்படாதீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன். நீங்கள் நான் சொல்வதைக் கேட்டிருக்க வேண்டும். இத்தனை தொல்லைகளும் நஷ்டமும் உங்களுக்கு ஏற்பட்டிருக்காது. 22 ஆனால் இப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும்படிக்கு உங்களுக்குக் கூறுகிறேன். உங்களில் ஒருவரும் இறக்கமாட்டீர்கள்! ஆனால் கப்பல் அழிந்து போகும். 23 நேற்று இரவு தேவனிடமிருந்து ஒரு தூதன் என்னிடம் வந்தான். நான் வணங்குகிற தேவன் அவரே. நான் அவருடையவன். 24 தேவதூதன், ‘பவுலே, பயப்படாதே! நீ இராயருக்குமுன் நிற்க வேண்டும். தேவன் உனக்கு இவ்வாக்குறுதியைத் தருகிறார். உன்னோடு பயணமாகிற எல்லா மனிதரின் உயிர்களும் காப்பாற்றப்படும்’ என்றான். 25 எனவே மனிதரே மகிழ்ச்சியாயிருங்கள்! நான் தேவனிடம் நம்பிக்கை வைத்துள்ளேன். அவரது தூதன் கூறியபடி எல்லாம் நடக்கும். 26 ஆனால் நாம் ஒரு தீவிற்குச் சென்று மோதுவோம்” என்றான்.

27 பதினான்காம் நாள் இரவில் ஆதிரியாக் கடலைச் சுற்றிலும் நாங்கள் கப்பலில் மிதந்துகொண்டிருந்தோம். மாலுமிகள் கரையை நெருங்குகிறோம் என்று எண்ணினர். 28 அவர்கள் ஒரு கனமான பொருளை நுனியில் கட்டி கயிற்றை நீருக்குள் வீசினர். நீர் 120 அடி ஆழமானது என்று அவர்கள் கண்டனர். இன்னும் சற்று தூரம் சென்று கயிற்றை மீண்டும் வீசினர். அங்கு நீர் 90 அடி ஆழமாயிருந்தது. 29 நாங்கள் பாறையில் மோதுவோமென்று மாலுமிகள் பயந்தார்கள். எனவே நான்கு நங்கூரங்களை நீருக்குள் பாய்ச்சினர். மறுநாளின் பகலொளிக்காகப் பிரார்த்தனை செய்தனர். 30 சில மாலுமிகள் கப்பலைக் கைவிட விரும்பினர். அவர்கள் உயிர் மீட்கும் படகை நீரில் இறக்கினர். கப்பலின் முன்பக்கத்திலிருந்து அதிகமான நங்கூரங்களை வீசுவதாக பிறமனிதர்கள் கருதும்படியாக நடந்துகொண்டனர். 31 ஆனால் பவுல் படை அதிகாரியையும், பிற வீரர்களையும் நோக்கி, “இம்மனிதர்கள் கப்பலிலே இருக்காவிட்டால் உங்கள் உயிர்களைக் காக்க முடியாது” என்றான். 32 எனவே வீரர்கள் கயிறுகளை அறுத்து உயிர் மீட்கும் படகை நீரில் விழச்செய்தனர்.

33 அதிகாலைக்குச் சற்று முன் பவுல் எல்லா மக்களையும் ஏதேனும் உண்பதற்குச் சம்மதிக்க வைத்தான். அவன் “கடந்த இரண்டு வாரங்களாக நீங்கள் காத்துக்கொண்டும், கவனித்துக்கொண்டும் இருக்கிறீர்கள். பதினான்கு நாட்களாக நீங்கள் எதையும் உண்ணவில்லை. 34 நீங்கள் இப்போது எதையாவது சாப்பிடுமாறு உங்களை வேண்டுகிறேன். உயிரோடிருப்பதற்கு உங்களுக்கு இது தேவை. உங்களில் யாரும் ஒரு தலை முடியைக் கூட இழக்கமாட்டீர்கள்” என்றான். 35 இதைக் கூறிய பிறகு பவுல் ரொட்டியை எடுத்து எல்லோர் முன்பாகவும் அதற்காக தேவனுக்கு நன்றி சொன்னான். அதில் ஒரு பகுதியை எடுத்து, அவன் உண்ண ஆரம்பித்தான். 36 எல்லா மனிதர்களும் உற்சாகம் பெற்றனர். அவர்களும் சாப்பிட ஆரம்பித்தார்கள். 37 (கப்பலில் 276 பேர் இருந்தனர்.) 38 நாங்கள் திருப்தியாகச் சாப்பிட்டோம். பின் கப்பலிலிருந்த தானியங்களை எல்லாம் கப்பலின் பாரத்தைக் குறைக்கும்பொருட்டு கடலுக்குள் வீசினோம்.

கப்பல் அழிந்தது

39 பகல் ஒளி வர ஆரம்பித்ததும் மாலுமிகள் நிலத்தைக் கண்டனர். அந்நிலம் எதுவென்று அவர்களால் அறியமுடியவில்லை. அவர்கள் கடற்கரையோடு கூடிய ஒரு வளைகுடாவைக் கண்டனர். மாலுமிகள் அவர்களால் முடிந்தவரைக்கும் கடற்கரைக்கு நேராக கப்பலைச் செலுத்த முயன்றனர். 40 ஆனால் கப்பல் மணல் மேட்டில் மோதியது. 41 கப்பலின் முன்பகுதி அதற்குள் நுழைந்து நின்றது. கப்பலால் அசைய முடியவில்லை. பெரும் அலைகள் வந்து கப்பலின் பின்பகுதியில் மோதி, கப்பலை உடைத்துவிட்டன.

42 எந்தக் கைதியும் நீந்தித் தப்பித்துப் போகாதவாறு வீரர்கள் அவர்களைக் கொல்வதற்கு முடிவு செய்தார்கள். 43 ஆனால் படைத் தலைவன் பவுலை உயிரோடு காக்க எண்ணினான். எனவே வீரர்கள் கைதிகளைக் கொல்வதற்கு அவன் அனுமதிக்கவில்லை. நீந்தத் தெரிந்தவர்கள் கடலில் குதித்து நீந்திக் கரை சேரலாமென்று ஜூலியஸ் மக்களுக்குக் கூறினான். 44 பிற மக்கள் மரப் பலகைகளையோ கப்பலின் உடைந்த பகுதிகளையோ பிடித்து நீந்தினர். இவ்வாறு எல்லா மக்களும் நிலத்தை அடைந்தனர். மக்களில் ஒருவரும் இறக்கவில்லை.

சங்கீதம் 8

கித்தீத் என்ற இசைக் கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்குத் தந்த தாவீதின் சங்கீதம்

எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உமது நாமம் பூமியின் எல்லா இடத்திலும் மிகுந்த அற்புதமானது!
    விண்ணுலகிலும் உமது நாமம் உமக்குத் துதிகளைக் கொண்டு வருகிறது.

பிள்ளைகள், குழந்தைகள் வாயிலுமிருந்து உம்மைத் துதிக்கும் பாடல்கள் வெளிப்படும்.
    உம் பகைவரை அமைதிப்படுத்த இவ்வல்லமையான பாடல்களைக் கொடுத்தீர்.

கர்த்தாவே, உமது கைகளால் நீர் செய்த வானங்களை நான் கண்டேன்.
    நீர் படைத்த நிலாவையும், நட்சத்திரங்களையும் நான் கண்டு ஆச்சரியமடைந்தேன்.
ஏன் மனிதர்கள் உமக்கு முக்கியமாயினர்?
    ஏன் அவர்களை நீர் நினைவுகூருகிறீர்?
    ஏன் அவர்களைக் கவனிக்கிறீர்?

ஆனால் மனிதர்கள் உமக்கு முக்கியமாயினர்!
    அவர்களை ஏறக்குறைய தேவர்களைப் போலவே உண்டாக்கினீர்.
    மனிதரை மகிமையாலும், மேன்மையாலும் முடிசூட்டினீர்.
நீர் உண்டாக்கின எல்லாவற்றிற்கும் அவர்களை அதிகாரிகளாக வைத்தீர்.
ஆடுகள்,பசுக்கள், காட்டு மிருகங்கள் அனைத்தையும் மனிதர்கள் ஆண்டனர்.
வானத்துப் பறவைகளையும்
    சமுத்திரத்தில் நீந்தும் மீன்களையும் அவர்கள் ஆண்டனர்.
எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உமது நாமம் உலகத்தில் எங்கும் மிகவும் மிகவும் அற்புதமானது!

நீதிமொழிகள் 18:23-24

23 ஒரு ஏழை உதவிக்காகக் கெஞ்சுகிறான். ஆனால் செல்வந்தனோ கடினமாகப் பதில் சொல்கிறான்.

24 பேசிச் சிரிக்க நல்லவர்களாக சில நண்பர்கள் இருப்பார்கள். ஆனால் ஒரு நல்ல நண்பன் சொந்த சகோதரனைவிடச் சிறந்தவன்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center