Print Page Options Listen to Reading
Previous Prev Day Next DayNext

The Daily Audio Bible

This reading plan is provided by Brian Hardin from Daily Audio Bible.
Duration: 731 days

Today's audio is from the NIV. Switch to the NIV to read along with the audio.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
2 இராஜாக்கள் 20:1-22:2

ஏசேக்கியா நோயுற்று மரணத்தை நெருங்குதல்

20 அப்போது, எசேக்கியா நோயுற்று மரண நிலையை நெருங்கினான். ஆமோத்சின் மகனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி எசேக்கியாவிடம் சென்று, “நீ உனது வீட்டை ஒழுங்குப்படுத்திவிடு. ஏனெனில், நீ மரிக்கப்போகிறாய். நீ வாழப் போவதில்லை! என்று கர்த்தர் கூறுகிறார்” என்றான்.

எசேக்கியா தனது முகத்தைச் சுவரின் பக்கம் திருப்பிக்கொண்டான். அவன் கர்த்தரிடம் ஜெபம் செய்து, “கர்த்தாவே! நான் உண்மையாக என் முழு மனதோடு உமக்கு சேவை செய்திருக்கிறேன் என்பதை நினைத்துப்பாரும். நீர் நல்லதென்று சொன்ன செயல்களை மட்டுமே நான் செய்திருக்கிறேன்” என்றான். பிறகு ஏசேக்கியா மிகப்பலமாக அழுதான்.

ஏசாயா பாதி முற்றத்தை விட்டு விலகு முன், கர்த்தருடைய செய்தி அவனுக்கு வந்தது. கர்த்தர் அவனிடம், “திரும்பிப் போய் எசேக்கியாவிடம் பேசு. எனது ஜனங்களின் தலைவனான அவனிடம், ‘கர்த்தரும் உனது முற்பிதாவான தாவீதின் தேவனும் சொல்லுவதாவது: நான் உனது ஜெபத்தைக் கேட்டேன். உனது கண்ணீரைப் பார்த்தேன். எனவே நான் உன்னைக் குணப்படுத்துவேன். மூன்றாவது நாள் நீ கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவாய். நான் உனது வாழ்நாளில் 15 ஆண்டுகளை அதிகரித்திருக்கிறேன். நான் உன்னையும் இந்த நகரத்தையும் அசீரிய அரசனின் வல்லமையிலிருந்து காப்பாற்றியிருக்கிறேன். நான் இந்த நகரத்தைப் பாதுகாப்பேன். நான் இவற்றை எனக்காகவே செய்வேன். ஏனென்றால் எனது தொண்டன் தாவீதுக்கு வாக்குறுதியளித்திருக்கிறேன்.’ என்று சொல்” என்று கூறினார்.

பிறகு ஏசாயா அரசனிடம், “அத்திப் பழத்தின் அடையைப் பிசைந்து புண்களின் மேல் பற்று போடுங்கள்” என்றான்.

அவ்விதமாகவே அத்திப்பழத்தின் அடையைப் பிசைந்து எசேக்கியாவின் புண்ணின் மேல் பூசினார்கள். பிறகு எசேக்கியா குணமானான்.

எசேக்கியாவிற்கு ஒரு அடையாளம்

எசேக்கியா ஏசாயாவிடம், “கர்த்தர் என்னைக் குணப்படுத்துவார் என்பதற்கான அடையாளம் எது? மூன்றாவது நாள் நான் கர்த்தருடைய ஆலயத்திற்கு போவதற்கான அடையாளமும் எது?” என்று கேட்டான்.

ஏசாயாவோ, “நீ என்ன விரும்புகிறாய்? நிழல் பத்தடி முன்னே போகவேண்டுமா, பத்தடி பின்னே போகவேண்டுமா? [a] இதுதான், கர்த்தர் தான் சொன்னபடியே செய்வார் என்று நிரூபிப்பதற்கான அடையாளமாகும்” என்றான்.

10 “நிழல் பத்தடி முன்னே போவது என்பது எளிதானது. அதைவிட நிழல் பத்தடிபின்னே போகவேண்டும்” என்று பதில் சொன்னான்.

11 பிறகு ஏசாயா, கர்த்தரிடம் வேண்டுதல் செய்தான். கர்த்தரும் ஆகாசுடைய (சூரிய கடியாரத்தில்) காலடிக்கு முன்போன நிழல் பின்னிட்டுத் திரும்பும்படி செய்தார்.

எசேக்கியாவும் பாபிலோன் ஆண்களும்

12 அப்போது, பாபிலோனின் அரசனான பலாதானின் மகனான பெரோதாக் பலாதான் என்பவன் இருந்தான். அவன் எசேக்கியாவிற்காக சில அன்பளிப்புகளையும் கடிதங்களையும் கொடுத்து அனுப்பினான். எசேக்கியா நோயுற்றிருக்கிறான் என்பதைக் கேள்விப்பட்டே அவன் இவ்வாறு செய்தான். 13 எசேக்கியா, பாபிலோனிலிருந்து வந்த ஜனங்களை வரவேற்றான். தன் வீட்டில் உள்ள விலைமதிப்புள்ள பொருட்களையெல்லாம் அவர்களுக்கு காட்டினான். அவன் பொன், வெள்ளி, வாசனைப் பொருட்கள் விலைமதிப்புள்ள தைலங்கள், ஆயுதங்கள், கருவூலத்திலுள்ள மற்ற பொருட்கள் எல்லாவற்றையும் காட்டினான். தனது அரண்மனையிலும் அரசாங்கத்திலும் அவன் அவர்களுக்குக் காட்டாத பொருள் எதுவுமில்லை.

14 பிறகு ஏசாயா தீர்க்கதரிசி அரசன் எசேக்கியாவிடம் வந்து, “இவர்கள் என்ன சொன்னார்கள்? இவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்?” என்று கேட்டான்.

எசேக்கியா, “இவர்கள் வெகுதூரத்திலுள்ள நாடான பாபிலோனிலிருந்து வருகிறார்கள்” என்று பதிலுரைத்தான்.

15 “இவர்கள் உன் வீட்டில் எதையெல்லாம் பார்த்திருக்கிறார்கள்?” என்று ஏசாயா கேட்டான்.

அதற்கு எசேக்கியா, “இவர்கள் என் வீட்டிலுள்ள அனைத்தையும் பார்த்துவிட்டார்கள், நான் அவர்களுக்குக் காட்டாதது என் கருவூலத்தில் எதுவும் இல்லை” என்று சொன்னான்.

16 பிறகு ஏசாயா எசேக்கியாவிடம், “கர்த்தரிடமிருந்து வார்த்தையைக் கேள். 17 உன்னாலும் உன் முற்பிதாக்களாலும் சேமித்து வைக்கப்பட்ட உன் வீட்டிலும் கருவூலத்திலுமுள்ள பொருட்கள் எல்லாம் பாபிலோனுக்கு எடுத்துச்செல்லும் காலம் வந்துக்கொண்டிருக்கிறது. எதுவும் மீதியாக வைக்கப்படாது. இதனைக் கர்த்தர் கூறுகிறார். 18 பாபிலோனியர்கள் உனது மகன்களையும் எடுத்துச்செல்வார்கள். பாபிலோனிய அரசனின் அரண்மனையில் உனது மகன்கள் அலிகளாக இருப்பார்கள்” என்றான்.

19 பிறகு எசேக்கியா ஏசாயாவிடம், “கர்த்தரிடமிருந்து வந்த இந்த செய்தி நல்லது தான்” என்றான். மேலும் எசேக்கியா, “என் வாழ்நாளிலேயே உண்மையான சமாதானம் இருப்பது நல்லதுதான்” என்றான்.

20 எசேக்கியா செய்த மற்ற அருஞ்செயல்களும் அவனது வல்லமையும் யூத அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. அதில் அவன் ஒரு குளத்தை உருவாக்கி, குழாய் மூலம் நகரத்திற்கு தண்ணீர் கொண்டு வந்ததும் சொல்லப்பட்டுள்ளன. 21 எசேக்கியா மரித்ததும் தன் முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். எசேக்கியாவின் மகனான மனாசே என்பவன் புதிய அரசன் ஆனான்.

யூதாவில் மனாசே தனது கெட்ட ஆட்சியைத் துவங்குகிறான்

21 மனாசே ஆட்சிக்கு வந்தபோது அவனுக்கு 12 வயது. அவன் எருசலேமில் 55 ஆண்டுகள் அரசாண்டான். அவனது தாயின் பெயர் எப்சிபாள்.

கர்த்தரால் தவறு என்று சொல்லப்பட்ட காரியங்களையே மனாசே செய்துவந்தான். மற்ற தேசத்தினர் செய்த பயங்கரச் செயல்களையே இவனும் செய்தான். (இஸ்ரவேலர்கள் வந்தபோது அத்தகைய தேசத்தினரைக் கர்த்தர் நாட்டைவிட்டுத் துரத்தினார்) தன் தந்தை எசேக்கியா அழித்த மேடைகளை பொய்த் தெய்வங்களின் கோவில்களை இவன் மீண்டும் கட்டினான். இவன் பாகாலின் பலிபீடங்களையும் அசெரியாவின் உருவத்தூண்களையும் இஸ்ரவேல் அரசன் ஆகாப் செய்தது போன்றே கட்டினான். இவன் வானில் உள்ள நட்சத்திரங்களையும் தொழுதுகொண்டு வந்தான். கர்த்தருக்கான ஆலயங்களில் இவன் (பொய்த் தெய்வங்களுக்கான) பலிபீடங்களைக் கட்டினான். (“என் நாமத்தை எருசலேமில் வைப்பேன்” என்று இந்த இடத்தைத்தான் கர்த்தர் சொல்லியிருந்தார்) கர்த்தருடைய ஆலயத்தின் இரு முற்றங்களிலும் வானில் உள்ள கோளங்களுக்கு (நட்சத்திரங்களுக்கு) பலி பீடங்களைக் கட்டினான். தன் சொந்த மகனைப் பலியிட்டு நெருப்பில் தகனம் செய்தான். இவன் எதிர்காலத்தை அறிந்து கொள்ள பலவழிகளில் முயன்றான். அவன் மத்திரவாதிகளையும் குறிச் சொல்லுகிறவர்களையும் அணுகினான்.

இவ்வாறு கர்த்தர் தவறென்று சொன்ன பல செயல்களை மனாசே செய்துவந்தான். இது கர்த்தருக்கு கோபத்தைக் கொடுத்தது. அசெராவின் உருவம் செதுக்கிய சிலை ஒன்றை அவன் உருவாக்கினான். அதனை ஆலயத்தில் நிறுவினான். கர்த்தர் இந்த ஆலயத்தைப்பற்றி தாவீதிடமும் அவன் மகன் சாலொமோனிடமும், “இஸ்ரவேலிலுள்ள மற்ற நகரங்களை எல்லாம் விட்டு விட்டு எருசலேமைத் தேர்ந்தெடுத்தேன். இந்நகரத்திலுள்ள ஆலயத்தில் என் பெயரை எப்போதும் விளங்கவைப்பேன். இஸ்ரவேலர்கள் தங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுக்கப்பட்ட நாட்டிலிருந்து வெளியேற வைக்கமாட்டேன். எனது கட்டளைகளுக்கும் என் தாசனாகிய மோசே மூலம் கொடுத்த போதனைகளின்படியும் கீழ்ப்படிந்து நடப்பவர்களை இங்கே தங்கச் செய்வேன்” என்று சொல்லியிருந்தார். ஆனால் ஜனங்கள் தேவன் சொன்னதைக் கவனிக்கவில்லை. இஸ்ரவேலர்கள் வருவதற்கு முன்னதாக கானானில் வாழ்ந்த தேசத்தவர்கள் செய்ததைவிடவும் மனாசே அதிகமாகத் தீய காரியங்களைச் செய்தான். இஸ்ரவேலர்கள் தங்கள் நிலத்திற்கு வந்தபொழுது கர்த்தர் அந்த தேசத்தவர்களை அழித்தார்.

10 தனது ஊழியக்காரரான தீர்க்கதரிசிகளைப் பயன்படுத்தி, கீழ்க்கண்ட செய்தியை கர்த்தர் சொல்லச்செய்தார்: 11 “யூத அரசனான மனாசேயின் செயல்கள் வெறுக்கத்தக்கவை (மிக அருவருப்பானவை) இவன் இவனுக்கு முன்பு செய்த எமோரியர்களைவிட கெட்ட செயல்களைச் செய்கிறான். தனது விக்கிரகங்கள் மூலம் யூதர்களையும் பாவத்துக்குள்ளாக்குகிறான். 12 எனவே இஸ்ரவேலர்களின் கர்த்தர், ‘பார்! நான் எருசலேமிற்கும் யூதாவிற்கும் எதிராகப் பெருந்துன்பத்தைத் தருவேன். இதைப்பற்றிக் கேட்கும் ஒவ்வொருவரும் அதிர்ச்சி அடைவார்கள். 13 எனவே எருசலேமின் மேல் சமாரியாவின் மட்டநூலையும் ஆகாப் வீட்டின் தூக்கு நூலையும் பிடிப்பேன். ஒருவன் ஒரு தட்டை கழுவி துடைத்து கவிழ்த்து வைப்பது போன்று எருசலேமைச் செய்வேன். 14 இங்கே இன்னும் எனக்கு வேண்டிய சிலர் இருக்கிறார்கள். அதனால் அவர்களை விட்டுவிடுவேன். மற்றவர்களைப் பகைவர்களிடம் ஒப்படைப்பேன். பகைவர்கள் அவர்களைக் கைதிகளாகச் சிறைபிடித்துச் செல்வார்கள். போரில் வீரர்கள் எடுத்துச்செல்லும் விலைமதிப்புடைய பொருட்களைப்போல அவர்கள் இருப்பார்கள். 15 ஏனென்றால் என்னுடைய ஜனங்களாகிய இவர்கள் நான் தவறென்று சொன்னவற்றைச் செய்தார்கள். இவர்களின் முற்பிதாக்கள் எகிப்திலிருந்து வெளிவந்த நாள் முதலாகவே எனக்குக் கோபமூட்டும்படி செய்து வருகிறார்கள். 16 மனாசே பல அப்பாவி ஜனங்களைக் கொன்றுவிட்டான். அவன் எருசலேமை ஒரு மூலையில் இருந்து இன்னொரு மூலைக்கு இரத்தத்தாலேயே நிரப்பினான். இப்பாவங்கள் எல்லாம் யூதாவிலுள்ள ஜனங்களை இன்னும் பாவம் செய்ய சேர்க்கையாக இருந்தது. கர்த்தர் தவறென்று சொன்னதை யூதர்கள் செய்வதற்கு மனாசே காரணமானான்.’”

17 மனாசே செய்த மற்ற அனைத்து செயல்களும் அவன் செய்த பாவங்கள் உட்பட யூத அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. 18 மனாசே மரித்ததும், தன் முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். அவனை வீட்டுத் தோட்டத்திலேயே அடக்கம் செய்தனர். அத்தோட்டத்தின் பெயர் “ஊசா தோட்டம்.” மனாசேயின் மகனான ஆமோன் புதிய அரசன் ஆனான்.

ஆமோனின் குறுகிய கால ஆட்சி

19 ஆமோன் ஆட்சிக்கு வந்தபோது அவனுக்கு 22 வயது. அவன் எருசலேமில் இரண்டு ஆண்டுகள் அரசாண்டான். அவனது தாயின் பெயர் மெகல்லேமேத். இவள் யோத்பா ஊரானாகிய ஆருத்சியின் மகள்.

20 இவனும் தன் தந்தை மனாசேயைப் போல், கர்த்தருக்கு வேண்டாததையே செய்துவந்தான். 21 அவன் தன் தந்தையைப் போலவே வாழ்ந்தான். தன் தந்தை செய்த விக்கிரகங்களையே தொழுதுகொண்டான். 22 இவன் தன் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைவிட்டு விலகி அவருக்கு விருப்பமான வழியில் வாழாமல் போனான்.

23 ஆமோனின் வேலைக்காரர்கள் இவனுக்கெதிராகச் சதி செய்து இவனை வீட்டிலேயே கொன்றுவிட்டனர். 24 பொது ஜனங்களோ அரசன் ஆமோனைக் கொன்றவர்களைக் கொன்றனர். பிறகு ஜனங்கள் இவனது மகனான யோசியா என்பவனை அரசனாக்கினார்கள்.

25 ஆமோன் செய்த மற்ற அனைத்து செயல்களும் யூத அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. 26 ஆமோன் ஊசா தோட்டத்தில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டான். ஆமோனின் மகனான யோசியா என்பவன் புதிய அரசனானான்.

யூதாவில் யோசியா ஆளத்தொடங்கியது

22 யோசியா ஆட்சிக்கு வந்தபோது அவனுக்கு 8 வயது. அவன் எருசலேமில் 31 ஆண்டுகள் அரசாண்டான். இவனது தாயின் பெயர் எதிதாள் ஆகும். இவள் போஸ்காத்திலுள்ள அதாயாவின் மகள் ஆவாள். கர்த்தர் நல்லதென்று சொன்னதன்படியே இவன் வாழ்ந்து வந்தான். தன் முற்பிதாவான தாவீது போலவே தேவனை பின்பற்றினான். யோசியா தேவனுடைய போதனைகளுக்குக் கீழ்ப்படிந்தான். தேவன் விரும்பியவற்றைக் கொஞ்சம் கூட மாற்றவில்லை.

அப்போஸ்தலர் 21:18-36

18 மறுநாள் பவுல் யாக்கோபைக் காண எங்களோடு வந்தான். எல்லா மூப்பர்களும் அங்கிருந்தனர். 19 பவுல் அவர்கள் எல்லோரையும் வாழ்த்தினான். யூதரல்லாத மக்கள் மத்தியில் பல காரியங்களைச் செய்வதற்கு தேவன் அவனை எவ்வாறு பயன்படுத்தினார் என்பதை அவன் அவர்களுக்குக் கூறினான். தேவன் அவன் மூலமாகச் செய்தவற்றையெல்லாம் அவன் அவர்களுக்குச் சொன்னான்.

20 மூப்பர்கள் இவற்றைக் கேட்டபோது, அவர்கள் தேவனை வாழ்த்தினர். பின் அவர்கள் பவுலை நோக்கி, “சகோதரரே, ஆயிரக்கணக்கான யூதர்கள் விசுவாசிகளாக மாறியதை நீங்கள் பார்க்க முடிகிறது. ஆனால் அவர்கள் மோசேயின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதை முக்கியமானதாக நினைக்கிறார்கள். 21 உங்கள் போதனையைக் குறித்து இந்த யூதர்கள் கேள்விப்பட்டிருக்கிறார்கள். யூதர்கள் அவர்கள் பிள்ளைகளுக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டாமென்றும், யூத வழக்கங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டாம் எனவும் நீர் கூறுவதாகக் கேட்டிருக்கிறார்கள்.

22 “நாங்கள் என்ன செய்வோம்? நீர் வந்திருப்பதை இங்குள்ள யூத விசுவாசிகள் அறிந்துகொள்வர். 23 எனவே நீங்கள் செய்ய வேண்டியதை நாங்கள் உங்களுக்குக் கூறுகிறோம். எங்களுடனிருப்போரில் நான்கு பேர் தேவனுக்கு ஒரு வாக்குறுதி அளித்துள்ளனர். 24 இம்மனிதர்களை உங்களோடு அழைத்துச் சென்று அவர்களின் தூய்மைப்படுத்தும் சடங்கில் பங்கு பெறுங்கள். அவர்கள் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள். எனவே அவர்கள் தங்கள் தலை முடியை சிரைத்துக்கொள்ள [a] முடியும். இதைச் செய்யுங்கள். உங்களைப்பற்றி அவர்கள் கேள்விப்பட்ட விஷயங்கள் பொய்யானவை என்று அது எல்லோருக்கும் நிரூபித்துக் காட்டும். உங்கள் சொந்த வாழ்க்கையில் மோசேயின் சட்டத்திற்குக் கீழ்ப்படிகிறீர்கள் என்பதை அவர்கள் காண்பார்கள்.

25 “யூதரல்லாத விசுவாசிகளுக்கு நாங்கள் ஏற்கெனவே ஒரு கடிதம் அனுப்பியுள்ளோம். அக்கடிதம்,

‘விக்கிரகங்களுக்குக் கொடுக்கப்பட்ட உணவை உண்ணாதீர்கள்.

இரத்தத்தை ருசிக்காதீர்கள், நெரித்துக்கொல்லப்பட்ட மிருகங்களை உண்ணாதீர்கள்,

பாலியல் தொடர்பான பாவங்களைச் செய்யாதீர்கள்’ என்று கூறிற்று” என்றார்கள்.

பவுல் கைதுசெய்யப்படுகிறார்

26 பின்பு பவுல் அந்த நான்கு மனிதர்களையும் அவனோடு அழைத்துச் சென்றான். மறுநாள் பவுல் தூய்மைப்படுத்தும் சடங்கில் பங்கேற்றான். பின் அவன் தேவாலயத்துக்குச் சென்றான். தூய்மைப்படுத்தும் சடங்கு முடிய வேண்டிய காலத்தைப் பவுல் பிறருக்கு அறிவித்தான். கடைசி நாளில் ஒவ்வொரு மனிதனுக்காகவும் ஒரு காணிக்கை கொடுக்கப்படும்.

27 ஏழு நாட்களும் முடிவடையும் காலம் நெருங்கிக்கொண்டிருந்தது. ஆசியாவிலுள்ள யூதர்களில் சிலர் பவுலை தேவாலயத்தில் கண்டனர். அவர்கள் எல்லா மக்களிடமும் குழப்பம் விளைவித்தனர். அவர்கள் பவுலைப் பிடித்தனர். 28 அவர்கள் உரக்க, “யூத மனிதரே, எங்களுக்கு உதவுங்கள்! மோசேயின் சட்டத்தை எதிர்க்கவும் நம் மக்களுக்கும் தேவாலயத்துக்கும் எதிராகவும் பலவற்றையும் கற்பிக்கின்ற மனிதன் இவன்தான். இம்மனிதன் எல்லா இடங்களிலுமுள்ள எல்லா மனிதருக்கும் இவ்விஷயங்களை உபதேசிக்கின்றான். இப்போது தேவாலயத்துக்கு உள்ளே சில கிரேக்க மக்களை அழைத்துக்கொண்டு வந்திருக்கிறான். இத்தூய ஸ்தலத்தைத் தூய்மையிழக்கச் செய்திருக்கிறான்!” என்றார்கள். 29 பவுலோடு துரோப்பீமுவை எருசலேமில் பார்த்ததால் யூதர்கள் இதைச் சொன்னார்கள். எபேசுவிலுள்ள துரோப்பீமு ஒரு கிரேக்கன். பவுல் அவனை தேவாலயத்துக்குள் அழைத்துச் சென்றான் என்று யூதர்கள் எண்ணினர்.

30 எருசலேமின் எல்லா மக்களும் நிலைகுலைந்தார்கள். அவர்கள் எல்லோரும் ஓடிப் பவுலைப் பிடித்தனர். தேவாலயத்துக்கு வெளியே அவனை இழுத்து வந்தனர். உடனே கதவுகள் மூடப்பட்டன. 31 மக்கள் பவுலைக் கொல்ல முயற்சித்தனர். எருசலேமிலுள்ள ரோமப் படை அதிகாரி நகரம் முழுவதும் தொல்லை அடைந்துள்ளது என்ற செய்தியைப் பெற்றான். 32 உடனே அவன் மக்கள் கூடியிருந்த இடத்திற்கு ஓடினான். அவன் வீரர்களையும் படை அதிகாரிகளையும் தன்னுடன் அழைத்து வந்தான். மக்கள் அதிகாரிகளையும் வீரர்களையும் கண்டனர். எனவே பவுலை அடிப்பதை நிறுத்தினர்.

33 அதிகாரி பவுலிடம் சென்று அவனைக் கைது செய்தான். இரண்டு விலங்குகளால் பவுலைக் கட்டுமாறு அதிகாரி வீரர்களுக்குக் கட்டளையிட்டான். பின் அதிகாரி, “இம்மனிதன் யார்? இவன் செய்த தவறு என்ன?” என்று கேட்டான். 34 அங்கிருந்தோரில் சிலர் ஒன்றைக் கூக்குரலிடவும் பிறர் வேறொன்றைக் கூக்குரலிடவும் செய்தனர். குழப்பமாகவும், கூச்சலாகவும் இருந்தமையால் அதிகாரி நடந்த உண்மையை அறிந்துகொள்ள முடியவில்லை. எனவே அதிகாரி வீரர்களிடம் பவுலைப் படைக்கூடத்துக்கு அழைத்துக்கொண்டு செல்லுமாறு கூறினான். 35-36 எல்லா மக்களும் அவர்களைப் பின்தொடர்ந்தனர். வீரர்கள் படிகளினருகே வந்தபோது, அவர்கள் பவுலை சுமக்க வேண்டியதாயிற்று. மக்கள் அவனைக் காயப்படுத்த முனைந்ததால் அவனது பாதுகாப்பிற்காக அவர்கள் இவ்வாறு செய்தனர். மக்கள் உரக்க, “அவனைக் கொல்லுங்கள்” என்று கத்தினர்.

சங்கீதம் 150

150 கர்த்தரைத் துதியுங்கள்!
தேவனை அவரது ஆலயத்தில் துதியுங்கள்!
    பரலோகத்தில் அவரது வல்லமையைத் துதியுங்கள்!
அவர் செய்கிற பெரிய காரியங்களுக்காக தேவனைத் துதியுங்கள்!
    அவரது எல்லா மேன்மைகளுக்காகவும் அவரைத் துதியுங்கள்!
எக்காளத் தொனியோடு தேவனைத் துதியுங்கள்!
    வீணைகளோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள்!
தேவனைத் தம்புருக்களோடும் நடனத்தோடும் துதியுங்கள்!
    நரம்புக் கருவிகளோடும் புல்லாங் குழலோடும் அவரைத் துதியுங்கள்!
ஓசையெழுப்பும் தாளங்களோடும் தேவனைத் துதியுங்கள்!
    பேரோசையெழுப்பும் தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்!

எல்லா உயிரினங்களும் கர்த்தரைத் துதிக்கட்டும்!

கர்த்தரைத் துதிப்போம்!

நீதிமொழிகள் 18:9-10

ஒருவன் கெட்ட செயல்களைச் செய்வது, பொருட்களை அழிப்பது போன்றதாகும்.

10 கர்த்தருடைய நாமத்தில் மிகுந்த பலம் உண்டு. இது உறுதியான கோபுரத்தைப் போன்றது. நல்லவர்கள் அவரிடம் ஓடிச் சென்று பாதுகாப்பைப் பெறுகின்றனர்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center