Chronological
அசீரியா நாட்டு ராஜா எசேக்கியாவிற்குத் துன்பம் கொடுக்கிறான்
32 இவையனைத்தையும் எசேக்கியா உண்மையுடன் செய்து முடித்தப் பிறகு, சனகெரிப் எனும் அசீரியா ராஜா யூதா நாட்டைத் தாக்க வந்தான். சனகெரிப்பும் அவனது படைகளும் கோட்டைக்கு வெளியே முகாமிட்டனர். அந்நகரங்களைத் தோற்கடிக்கத் திட்டங்கள் தீட்டும்பொருட்டு அவன் இவ்வாறுச் செய்தான். அவன் அனைத்து நகரங்களையும் தானே வென்றுவிட விரும்பினான். 2 எருசலேமைத் தாக்குவதற்காக சனகெரிப் வந்திருக்கும் செய்தியை எசேக்கியா அறிந்துகொண்டான். 3 பிறகு எசேக்கியா தனது அதிகாரிகளோடும் படை அதிகாரிகளோடும் கலந்தாலோசித்தான். அவர்கள் அனைவரும் நகரத்துக்கு வெளியே தண்ணீரை விநியோகிக்கும் ஊற்றுக் கண்களை அடைத்துவிட ஒப்புக் கொண்டனர். அந்த அதிகாரிகளும் அலுவலர்களும் எசேக்கியாவிற்கு உதவினார்கள். 4 நாட்டின் நடுவில் ஓடிக்கொண்டிருந்த ஓடைகளையும் ஊற்றுகளையும் எராளமான ஜனங்கள் சேர்ந்து வந்தடைத்தனர். அவர்கள், “அசீரியா ராஜா இங்கு வரும்போது அவனுக்கு அதிகம் தண்ணீர் கிடைக்காது!” என்றனர். 5 எசேக்கியா எருசலேமைப் பலமுள்ளதாக ஆக்கினான். இடிந்துபோன சுவர்களை மீண்டும் கட்டினான். சுவர்களின் மேல் கோபுரங்களைக் கட்டினான். முதல் சுவருக்கு அடுத்தாக இரண்டாம் சுவரையும் கட்டினான். எருசலேமின் பழைய பகுதியில் உள்ள கிழக்கு பாகத்தைப் பலமுள்ளதாகக் கட்டினான். அவன் பல்வேறு ஆயுதங்களையும் கேடயங்களையும் செய்தான். 6-7 ஜனங்களுக்குத் தலைமைத் தாங்கும் போர்த் தலைவர்களை எசேக்கியா தேர்ந்தெடுத்தான். நகர வாசலுக்கருகில் அவன் இந்த அதிகாரிகளை அழைத்துப் பேசினான். எசேக்கியா அவர்களோடு பேசி அவர்களை உற்சாகப்படுத்தினான். அவன், “நீங்கள் பலமாகவும், தைரியமாகவும் இருங்கள். அசீரியா ராஜாவைப்பற்றியோ, அவனது பெரும் படையைப் பற்றியோ பயமும் கவலையும் அடையாதீர்கள். அசீரியா ராஜாவுக்கு இருக்கிற பலத்தைவிட மாபெரும் வல்லமை நமக்கு பலமாக இருக்கிறது. 8 அசீரியா ராஜாவிடம் மனிதர்கள் மட்டுமே உள்ளனர். ஆனால் நம்மிடமோ நமது தேவனாகிய கர்த்தர் இருக்கிறார்! நமது தேவன் நமக்கு உதவுவார். நமது போர்களில் அவர் சண்டையிடுவார்” என்று பேசினான். இவ்வாறு யூதா ராஜாவாகிய எசேக்கியா ஜனங்களை உற்சாகப்படுத்தி அவர்களைப் பலமுள்ளவர்களாக உணரச்செய்தான்.
9 சனகெரிப்பும் அவனது படைகளும் லாகீசுக்கு எதிராக முற்றுகை இட்டனர். அதனைத் தோற்கடிக்க முடியும் என்றும் எண்ணினர். சனகெரிப் தனது வேலைக்காரர்களை யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவிடமும் எருசலேமில் உள்ள யூதா ஜனங்களிடமும் அனுப்பினான். எசேக்கியாவிற்கும், எருசலேமில் உள்ள ஜனங்களுக்கும் எடுத்துச்சொல்ல சனகெரிப்பின் வேலைக்காரர்களிடம் ஒரு செய்தி இருந்தது.
10 அவர்கள், “அசீரியாவின் ராஜாவாகிய சனகெரிப் சொல்வதாவது, ‘முற்றுகை இடப்பட்ட எருசலேமிற்குள் எந்த நம்பிக்கையின் பேரில் நீங்கள் அனைவரும் இருக்கிறீர்கள்? 11 எசேக்கியா உங்களை முட்டாளாக்குகிறான். நீங்கள் தந்திரமாக எருசலேமிற்குள் தங்கவைக்கப்படுகிறீர்கள். எனவே நீங்கள் பசியாலும் தாகத்தாலும் மரித்துப்போவீர்கள். எசேக்கியா உங்களிடம், “நமது தேவனாகிய கர்த்தர் அசீரியா ராஜாவிடமிருந்து நம்மைக் காப்பாற்றுவார்” என்று கூறுகிறான். 12 எசேக்கியாவே கர்த்தருடைய மேடைகளையும் பலிபீடங்களையும் அப்புறப்படுத்தினான். அவன் யூதாவுக்கும் எருசலேமிற்கும் ஒரே பலிபீடத்தையே தொழுதுகொள்ளுங்கள், நறு மணப்பொருட்களை எரியுங்கள் என்று சொன்னான். 13 நானும் என் முற்பிதாக்களும் மற்ற நாடுகளிலிருந்த அனைத்து ஜனங்களுக்கும் என்ன செய்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். மற்ற நாடுகளில் உள்ள தெய்வங்களால் தம் ஜனங்களையே காப்பாற்ற முடியாமல்போனது. அந்தத் தெய்வங்களின் ஜனங்களை நான் அழிக்கும்போதுகூட, அவர்களால் அதைத் தடுக்க முடியவில்லை. 14 என் முற்பிதாக்கள் அந்நாடுகளை அழித்தார்கள். தனது ஜனங்களை அழிப்பதிலிருந்து என்னைத் தடுக்கும் தேவன் யாரும் இல்லை. எனவே, உங்கள் தெய்வம் என்னிடமிருந்து உங்களைக் காப்பாற்றுவார் என்று நினைக்கிறீர்களா? 15 எசேக்கியா உங்களை முட்டாளாக்கவோ, உங்களிடம் தந்திரம் செய்யவோ அனுமதிக்காதீர்கள். அவனை நம்பாதீர்கள். ஏனென்றால் எந்த நாட்டையும், அரசையும் என்னிடமிருந்தும், என் முற்பிதாக்களிடமிருந்தும் எந்தத் தெய்வமும் காப்பாற்றவில்லை. எனவே என்னுடைய தாக்குதலில் இருந்து உங்கள் தெய்வம் உங்களைக் காப்பாற்றுவார் என்று எண்ணாதீர்கள்’” என்றார்கள்.
16 அசீரியா ராஜாவின் வேலைக்காரர்கள், தேவனாகிய கர்த்தருக்கும், அவரது தொண்டனான எசேக்கியாவுக்கும் எதிராக மிக மோசமாகப் பேசினார்கள். 17 அசீரியா ராஜா மேலும் தேவனாகிய கர்த்தரை நிந்தித்து கடிதங்கள் பல எழுதினான். அசீரியா ராஜா தம் கடிதத்தில் எழுதியிருந்த செய்திகள் பின் வருமாறு: “மற்ற நாடுகளில் உள்ள தெய்வங்களால் தம் ஜனங்களைக்கூட என்னிடமிருந்து காப்பாற்ற முடியவில்லை. இதைப் போலவே எசேக்கியாவின் தெய்வம் உங்களை எனது தாக்குதலிலிருந்து காப்பாற்ற முடியாது.” 18 பிறகு அசீரியா ராஜாவின் வேலைக்காரர்கள் சுவர்களின் மேலே இருந்த எருசலேமின் ஜனங்களைப் பார்த்து சத்தமிட்டார்கள். அப்போது அவர்கள் எபிரெய மொழியைப் பயன்படுத்தினர். எருசலேம் ஜனங்கள் அஞ்சவேண்டும் என்பதற்காகவே இவ்வாறு நடந்துக்கொண்டனர். தாம் அந்நகரத்தைக் கைப்பற்றிவிடுவோம் என்று நம்பினார்கள். 19 உலக ஜனங்கள் தொழுதுகொண்ட தேவனுக்கு எதிராக அந்த வேலைக்காரர்கள் கெட்ட செய்திகளைக் கூறினார்கள். அந்த தெய்வங்கள் அந்த ஜனங்களின் கைகளால் செய்யப்பட்ட பொருட்கள் மட்டுமே. இதைப்போலவே எருசலேமின் தேவனுக்கும் அதேபோன்ற தீமைகளை அந்த வேலைக்காரர்கள் செய்தார்கள்.
20 இந்தப் பிரச்சனையைப்பற்றி எசேக்கியா ராஜாவும், ஆமோத்தின் குமாரனாகியா ஏசாயா தீர்க்கதரிசியும் கர்த்தரிடம் ஜெபம் செய்தார்கள். அவர்கள் பரலோகத்தை நோக்கி மிகச் சத்தமாக ஜெபம் செய்தனர். 21 பிறகு கர்த்தர் அசீரியா ராஜாவின் முகாமிற்கு ஒரு தேவ தூதனை அனுப்பினார். தேவதூதன் அசீரியாவின் படையில் உள்ள எல்லா வீரர்களையும், தலைவர்களையும், அதிகாரிகளையும் கொன்றான். எனவே, அசீரியா ராஜா தனது சொந்த நாட்டிற்குத் திரும்பிப் போனான். அவனது ஜனங்கள் அவனுக்காக வெட்கப்பட்டனர். அவன் தனது பொய்த் தெய்வங்களின் கோவிலிற்குப் போனான். அங்கே அவனது குமாரர்கள் அவனை வாளால் கொன்றனர். 22 இவ்வாறு கர்த்தர், அசீரியா ராஜாவாகிய சனகெரிபிடமிருந்தும் மற்ற ஜனங்களிடமிருந்தும் எசேக்கியாவையும், அவனது ஜனங்களையும் காப்பாற்றினார். கர்த்தர் எசேக்கியா மீதும் எருசலேம் ஜனங்கள் மீதும் அக்கறைக்கொண்டார். 23 எருசலேமில் உள்ள கர்த்தருடைய ஆலயத்திற்கு பலரும் காணிக்கைகளைக் கொண்டு வந்தனர். அவர்கள் யூதா ராஜாவாகிய எசேக்கியாவுக்கும் விலையுயர்ந்த பொருட்களைக் கொண்டுவந்தனர். அந்நாளிலிருந்து அனைத்து நாடுகளும் எசேக்கியாவை மதித்தன.
24 அந்நாட்களில் எசேக்கியா நோய்வாய்ப் பட்டு மரணப்படுக்கையில் விழுந்தான். அவன் கர்த்தரிடம் ஜெபித்தான். கர்த்தர் எசேக்கியாவிடம் பேசினார். அவனுக்கு ஒரு அடையாளம் காட்டினார். 25 ஆனால் எசேக்கியாவின் மனதில் கர்வ உணர்வு தோன்றியது. எனவே அவன் தேவனுடைய கருணைக்காக அவருக்கு நன்றி செலுத்தவில்லை. இதனால் தேவனுக்கு எசேக்கியாவின் மீது கோபம் ஏற்பட்டது. அதோடு யூதா மற்றும் எருசலேம் ஜனங்கள் மீதும் கோபம் ஏற்பட்டது. 26 ஆனால் எசேக்கியாவும் எருசலேமில் உள்ள ஜனங்களும் தங்கள் இதயத்தையும், வாழ்வையும் மாற்றிக்கொண்டார்கள். அவர்கள் பணிவுள்ளவர்கள் ஆனார்கள். பெருமை உணர்வுக்கொள்வதை நிறுத்தினார்கள். அவர்கள் மேல் கர்த்தருக்கு எசேக்கியா உயிரோடு இருந்தவரை கோபம் வரவில்லை.
27 எசேக்கியாவுக்கு ஏராளமான செல்வமும், சிறப்பும் இருந்தது. அவன் வெள்ளி, தங்கம், விலைமதிப்புள்ள நகைகள், நறுமணப்பொருட்கள், கேடயங்கள் மற்றும் அனைத்துப் பொருட்களைப் பண்டகசாலைகள் கட்டி சேமித்தான். 28 ஜனங்கள் அனுப்பித் தரும் உணவு தானியங்களையும், புதிய திராட்சைரசத்தையும், எண்ணெயையும் சேகரித்து வைக்கும் கட்டிடங்கள் அவனிடம் இருந்தன. அவன் ஆடுகளுக்கும் மாடுகளுக்கும் தொழுவங்களை அமைத்தான். 29 எசேக்கியா அநேக நகரங்களையும் கட்டினான். அவன் ஏராளமான ஆட்டு மந்தைகளையும், மாட்டு மந்தைகளையுங்கூட பெற்றான். கர்த்தர் அவனுக்கு ஏராளமான செல்வத்தைக் கொடுத்தார். 30 எசேக்கியா கீகோன் என்னும் ஆற்றிலே அணையைக் கட்டினான். அந்த நீரை மேற்கேயிருந்து தாழ தாவீதின் நகரத்திற்குத் திரும்பினான். அவனது செயல்கள் அனைத்திலும் வெற்றிபெற்றான்.
31 ஒருமுறை பாபிலோனில் உள்ள தலைவர்கள் எசேக்கியாவுக்குத் தூதுவர்களை அனுப்பினார்கள். அவர்கள் தம் நாட்டில் ஏற்பட்ட ஒரு புதுவிதமான அடையாளத்தைப் பற்றிக் கேட்டனர். அப்போது தேவன் அவனைத் தனியாகவிட்டார். அவன் இதயத்தில் உண்டான அத்தனையையும் அறியும்படி அவனைச் சோதித்தார்.
32 எசேக்கியா செய்த மற்ற செயல்களும், அவன் எவ்வாறு கர்த்தரை நேசித்தான் என்ற விபரமும் ஆமோத்தின் குமாரனாகிய ஏசாயாவின் தரிசனம் என்ற புத்தகத்திலும் யூதா மற்றும் இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்திலும் எழுதப்பட்டுள்ளன. 33 எசேக்கியா மரித்தான். அவன்தன் முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். தாவீதின் முற்பிதாக்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகள் உள்ள மலைப் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டான். எசேக்கியா மரித்ததும் யூதா மற்றும் எருசலேமில் வாழ்ந்த ஜனங்கள் அனைவரும் அவனுக்கு மரியாதைச் செய்தார்கள். மனாசே என்பவன் அவனுக்குப் பிறகு எசேக்கியாவின் இடத்தில் புதிய ராஜா ஆனான். மனாசே எசேக்கியாவின் குமாரன்.
யூதாவின் ராஜாவாகிய மனாசே
33 மனாசே யூதாவின் ராஜாவாகியபோது அவனுக்கு 12 வயது. அவன் எருசலேமில் 55 ஆண்டுகள் அரசாண்டான். 2 கர்த்தர் தவறென்று சொன்னவற்றையே மனாசே செய்தான். இஸ்ரவேல் ஜனங்களுக்கு முன்னதாக கர்த்தர் கட்டாயமாக வெளியேற்றிய மற்ற தேசத்தவர்களின் பயங்கரமானதும், பாவமானதுமான வழிகளையே அவன் பின்பற்றினான். 3 மனாசே மீண்டும் தன் தந்தை உடைத்தெறிந்த மேடைகளைக் கட்டினான். பாகால் தெய்வத்துக்கு பலிபீடங்களையும் விக்கிரகத் தோப்புகளையும் அவன் கட்டினான். வானத்தின் சேனைகளையும், நட்சத்திரக் கூட்டங்களை அவன் தொழுது கொண்டான். 4 மனாசே கர்த்தருடைய ஆலயத்தில் பொய் தெய்வங்களுக்கும் பலிபீடங்களைக் கட்டினான். கர்த்தர், ஆலயத்தைப்பற்றி, “என் நாமம் எருசலேமில் எப்பொழுதும் இருக்கும்” என்றார். 5 மனாசே, கர்த்தருடைய ஆலயத்தில் உள்ள இரண்டு பிரகாரங்களிலும் வானத்து நட்சத்திரக் கூட்டங்களுக்கெல்லாம் பலிபீடத்தைக் கட்டினான். 6 மனாசே பென்இன்னோம் பள்ளதாக்கிலே தன் பிள்ளைகளையே நெருப்பில் எரித்து பலி கொடுத்தான். இவன் நிமித்தம், குறிபார்ப்பது, பில்லிசூனியங்களை அனுசரித்து மந்திரவாதிகளையும், குறி சொல்லுகிறவர்களையும் அணுகினான். அவன் கர்த்தர் தவறு என்று சொன்ன பலவற்றைச் செய்தான். மனாசேயின் பாவங்கள் கர்த்தருக்குக் கோபத்தைத் தந்தது. 7 அவன் ஒரு விக்கிரகத்தின் உருவச் சிலையைச் செய்து அதனை தேவனுடைய ஆலயத்திற்குள் வைத்தான். தேவன் ஆலயத்தைப் பற்றி தாவீதிடமும் அவனது குமாரன் சாலொமோனிடமும் பேசியிருக்கிறார். அவர், “நான் எனது பெயரை இவ்வாலயத்திலும் எருசலேமிலும் என்றென்றைக்கும் வைத்திருப்பேன். இஸ்ரவேலின் அனைத்து கோத்திரங்களிலிருந்தும் நான் எருசலேமைத் தேர்ந்தெடுத்தேன். 8 நான் இஸ்ரவேலர்களிடமிருந்து மீண்டும் அவர்களின் முற்பிதாக்களுக்குக் கொடுத்த நாட்டை எடுத்துக்கொள்ளமாட்டேன். ஆனால் அவர்கள் எனது கட்டளைகளுக்கு அடிபணிய வேண்டும். இஸ்ரவேல் ஜனங்கள் அனைத்து சட்டங்களுக்கும், விதிகளுக்கும், கட்டளைகளுக்கும் கீழ்ப்படியவேண்டும். இவற்றை நான் மோசேக்குக் கொடுத்துள்ளேன்.” என்றார்.
9 யூதா ஜனங்களையும், எருசலேமில் வாழ்ந்த ஜனங்களையும் மனாசே தவறு செய்ய ஊக்குவித்தான். இஸ்ரவேலர்களுக்கு முன்னதாக அந்த நிலத்தில் வாழ்ந்து கர்த்தரால் அழிக்கப்பட்ட தேசத்தவர்களைவிட அவர்கள் மோசமானவர்களாக இருந்தார்கள். பாவங்களைச் செய்தனர்.
10 மனாசே மற்றும் அவனது ஜனங்களிடமும் கர்த்தர் பேசினார். ஆனால் அவர்கள் அதைக் கவனிக்க மறுத்துவிட்டனர். 11 எனவே கர்த்தர் அசீரியா நாட்டு தளபதிகளை அழைத்து வந்து யூதாவைத் தாக்கினார். அந்தத் தளபதிகள் மனாசேயைப் பிடித்து அவனது உடலில் கொக்கிகளை மாட்டினார்கள். அவனது கைகளில் வெண்கலச் சங்கிலிகளைப் போட்டார்கள். அவனைக் கைதியாக பாபிலோனுக்கு கொண்டு போனார்கள்.
12 மனாசே கஷ்டப்பட்டான். அப்போது அவன் தேவனாகிய கர்த்தரிடம் ஜெபித்தான். தன் முற்பிதாக்களின் தேவனிடம் மிகப்பணிவாக நடந்துக்கொண்டான். 13 மனாசே கர்த்தரிடம் கெஞ்சி தன்னைக் காப்பாற்றும்படி ஜெபித்தான். கர்த்தர் அவனது வேண்டுகோளை கேட்டார். அவனுக்காக வருத்தப்பட்டார். பிறகு கர்த்தர் அவனை எருசலேமிற்குத் திரும்பி தனது சிங்காசனத்தில் அமரும்படிச்செய்தார். பின்னர் கர்த்தர்தான் உண்மையான தேவன் என்பதை மனாசே தெரிந்துகொண்டான்.
14 இது நடந்தப்பிறகு, மனாசே தாவீதின் நகரத்திற்கு ஒரு வெளிச்சுவரைக் கட்டினான். இந்த வெளிச்சுவர் கிதரான் பள்ளத்தாக்கில் கியோன் நீரூற்றுக்கு மேற்கிலிருந்து மீன் வாசல் வரை இருந்தது. ஒபேலைச் சுற்றிலும் அதனை வளைத்துக் கட்டினான். அதனை மிக உயரமாகக் கட்டினான். பிறகு அவன் யூதாவிலுள்ள அனைத்து கோட்டைகளுக்கும் அதிகாரிகளை நியமித்தான். 15 மனாசே அந்நிய தெய்வங்களையும், விக்கிரகங்களையும் கர்த்தருடைய ஆலயத்தில் இருந்து வெளியே எடுத்தான். அவன் எருசலேமிலும், மலை நகரங்களிலும் அமைத்த பலிபீடங்களையும் நீக்கினான். அவன் இவை அனைத்தையும் எருசலேம் நகருக்கு வெளியே தூக்கி எறிந்தான். 16 பிறகு அவன் கர்த்தருக்காக பலிபீடத்தை அமைத்தான். அதில் அவன் சமாதானப் பலியையும், நன்றிக்குரிய பலியையும் செலுத்தினான். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குச் சேவை செய்யுமாறு யூதாவிலுள்ள ஜனங்களுக்கெல்லாம் கட்டளையிட்டான். 17 ஜனங்கள் தொடர்ந்து மேடைகளிலும் பலிகள் கொடுத்துவந்தனர். ஆனாலும் அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தருக்கென்றே செய்தனர்.
18 மனாசே செய்த மற்ற செயல்களும், அவன் தேவனிடம் செய்த ஜெபங்களும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தில் அவனோடு ஞானதிருஷ்டிக்காரர்கள் பேசிய பேச்சும் இஸ்ரவேல் ராஜாக்களின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. 19 மனாசேயின் வேண்டுதல்களும், அதனைக் கேட்டு தேவன் எப்படி வருத்தப்பட்டார் என்பதும் தீர்க்கதரிசிகளின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. இதில் பணிவதற்கு முன் அவன் செய்த தவறுகளும், பாவங்களும், அவன் கட்டிய மேடைகளும், விக்கிரக தோப்புகளைபற்றியும் எழுதப்பட்டுள்ளன. 20 அவன் மரித்ததும் தனது முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். எனவே அவனை ஜனங்கள் அவனது சொந்த அரண்மனையிலேயே அடக்கம் செய்தனர். மனாசேயின் இடத்தில் ஆமோன் புதிய ராஜா ஆனான். அவன் மனாசேயின் குமாரன் ஆவான்.
யூதாவின் ராஜாவாகிய ஆமோன்
21 ஆமோன் ராஜாவாகும்போது அவனுக்கு 22 வயது. அவன் எருசலேமில் 2 ஆண்டுகள் ராஜாவாக இருந்தான். 22 ஆமோன் கர்த்தருக்கு முன்பாக எல்லா வகையான தீயச் செயல்களையும் செய்தான். அவனது தந்தை மனாசே செய்தது போன்று நல்ல காரியங்களை ஆமோன் செய்யவேண்டும் என்று கர்த்தர் விரும்பினார். ஆனால் ஆமோன், மனாசே வைத்த விக்கிரகங்களுக்கு பலிகளை கொடுத்தான். இவ்விக்கிரகங்களை ஆமோன் வழிபட்டான். 23 அவனது தந்தையாகிய மனாசே கர்த்தருக்கு முன்னால் பணிவாக இருந்ததுபோல கர்த்தருக்கு முன்னால் ஆமோன் தன்னைத்தானே பணிவுடையவனாக்கிக் கொள்ளவில்லை. ஆனால் அவன் மேலும், மேலும் பாவங்களைச் செய்துக்கொண்டிருந்தான். 24 ஆமோனின் வேலைக்காரர்கள் அவனுக்கு எதிராகத் திட்டங்கள் தீட்டினார்கள். அவர்கள் அவனை அவனது சொந்த வீட்டிலேயே கொன்றனர். 25 ஆனால் யூதா ஜனங்கள் அவ்வேலைக்காரர்கள் அனைவரையும் கொன்றனர். பிறகு ஜனங்கள் யோசியாவைப் புதிய ராஜாவாகத் தேர்ந்தெடுத்தனர். யோசியா ஆமோனின் குமாரன்.
2008 by World Bible Translation Center