Chronological
அசீரியர்கள் சமாரியாவைக் கைப்பற்றியது
9 அசீரியாவின் ராஜாவாகிய சல்மனாசார் சமாரியாவிற்கு எதிராகச் சண்டையிட்டான். அவனது படை நகரத்தைச் சுற்றிக் கொண்டது. யூதாவில் எசேக்கியாவின் நான்காம் ஆட்சியாண்டின்போது இது நடந்தது. (இது இஸ்ரவேல் ராஜாவாகிய ஏலாவின் குமாரன் ஓசேயாவின் ஏழாம் ஆட்சியாண்டு.) 10 மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சல்மனாசார் சமாரியாவைக் கைப்பற்றினான். யூத ராஜாவாகிய எசேக்கியாவின் ஆறாம் ஆட்சியாண்டில் சமாரியாவை இவன் பிடித்துக்கொண்டான். (இது இஸ்ரவேல் ராஜாவாகிய ஓசேயாவின் ஒன்பதாம் ஆட்சியாண்டு) 11 அசீரியாவின் ராஜா இஸ்ரவேலர்களை அசீரியாவுக்குச் சிறைபிடித்துக் கொண்டுசென்றான். அவன் அவர்களை கோசான் ஆற்றோரங்களிலுள்ள ஆலாக், ஆபோர், மேதியரின் நகரங்கள் ஆகியவற்றில் குடியேற்றினான். 12 இஸ்ரவேலர்கள் தமது தேவனாகிய கர்த்தருக்கு அடிபணியாததால் இது இவ்வாறு நிகழ்ந்தது. அவர்கள் கர்த்தருடைய உடன்படிக்கையை உடைத்தனர். அவர்கள் கர்த்தருடைய தாசனாகிய மோசே கட்டளையிட்டவற்றுக்கு அடிபணியவில்லை. இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தருடைய உடன்படிக்கையைக் கேட்காததோடு, அதனை அவர்கள் கைக்கொள்ளவில்லை.
அசீரியா யூதாவைப் பிடிக்கத் தயாராகிறது
13 எசேக்கியாவின் 14வது ஆட்சியாண்டின்போது சனகெரிப் எனும் அசீரியாவின் ராஜா, யூதாவிலுள்ள கோட்டையமைந்த நகரங்கள் அனைத்திலும் தாக்குதல் நடத்தினான். இவன் எல்லா நகரங்களையும் தோற்கடித்தான். 14 பிறகு யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா, லாகீசிலிருந்த அசீரியாவின் ராஜாவுக்கு தூது அனுப்பினான். அவன், “நான் தவறு செய்துவிட்டேன். என்னை தனியாகவிட்டுவிடுங்கள். பிறகு உங்களுக்கு வேண்டியதை நான் தருவேன்” என்றான்.
பிறகு அசீரியாவின் ராஜா யூத ராஜாவாகிய எசேக்கியாவிடம் 300 தாலந்து வெள்ளியையும் 30 தாலந்து பொன்னையும் கட்டும்படி கூறினான். 15 கர்த்தருடைய ஆலயத்திலும் அரண்மனை கருவூலத்திலும் உள்ள வெள்ளி முழுவதையும் எசேக்கியா கொடுத்தான் 16 அப்பொழுது, கர்த்தருடைய ஆலய வாசலில் உள்ள கதவுகளிலும் நிலைகளிலும் தான் பதித்திருந்த பொன்னையும் எடுத்து அசீரிய ராஜாவுக்குக் கொடுத்தான்.
அசீரியாவின் ராஜா எருசலேமிற்கு ஆட்களை அனுப்புகிறான்
17 அசீரியாவின் ராஜா தனது மூன்று மிக முக்கியமான படைத்தளபதி உள்ளப் பெரும்படையோடு எருசலேமிற்கு எசேக்கியா ராஜாவிடம் அனுப்பினான். அவர்கள் லாகீசிலிருந்து எருசலேமிற்குச் சென்றனர். அவர்கள் வண்ணார் துறையின் வழியிலுள்ள மேல்குளத்து வாய்க்காலில் நின்றனர். 18 அவர்கள் ராஜாவை வரவழைத்தார்கள். அப்பொழுது இல்க்கியாவின் குமாரனான எலிகாக்கீம் எனும் அரண்மனை விசாரிப்புக்காரனும் செப்னா என்னும் சம்பிரதியும் ஆசாப்பின் குமாரனாகிய யோவாக் எனும் கணக்கனும் அவர்களை சந்திக்கப் போனார்கள்.
19 தளபதிகளில் ஒருவன் (அவனுக்கு ரப்சாக்கே என்ற பட்டம் இருந்தது) அவர்களிடம், “மாபெரும் அசீரிய ராஜா சொன்னதை எசேக்கியாவிடம் கூறவும்” என்று சொன்னான். அவை வருமாறு:
“எதன் மேல் உன் நம்பிக்கையை வைத்திருக்கிறாய்? 20 நீ, வீணான வார்த்தைகளையே பேசுகிறாய். நீ, ‘போருக்கான ஆலோசனையும் பலமும் உண்டு’ என்று சொல்கிறாயா! நீ எனக்கு எதிராகக் கலகம்செய்ய, யார் மீது நம்பிக்கை வைத்திருக்கிறாய்? 21 உடைந்த நாணல் புல்லால் ஆன கைத்தடியை நம்புகிறாய். எகிப்து இத்தகைய கைத் தடியைப் போன்றது! ஒருவன் இக்கைத்தடியின் மீதே முழுக்கச் சாய்ந்தால், அதுவும் உடையும் கையைக் கிழித்து காயத்தை உருவாக்கும். எகிப்தும் தன்னை நம்புகிறவர்களுக்கு இவ்வாறே செய்து வருகிறது. 22 ஒருவேளை நீ, ‘எங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புகிறோம்’ என்று சொல்லலாம். ஆனால் எசேக்கியா கர்த்தருடைய மேடைகளையும் பலிபீடங்களையும் அகற்றினான். அவன் யூதாவையும் எருசலேமையும் நோக்கி, ‘எருசலேமில் உள்ள பலிபீடத்தின் முன் மட்டுமே ஆராதிக்க வேண்டும்’ என்று கூறினானே.
23 “இப்பொழுது எங்கள் எஜமானனான அசீரிய ராஜாவோடு இந்த ஒப்பந்தம் செய்துகொள். நான் 2,000 குதிரைகளை உன்னிடம் போதுமான சவாரி செய்பவர்கள் இருந்தால் கொடுப்பதாக உறுதி கூறுகிறேன். 24 உன்னால் எங்கள் எஜமானனின் அதிகாரிகளைக் கூட வெல்லமுடியாது! இரதங்களுக்கும் குதிரை வீரர்களுக்கும் நீங்கள் எகிப்தைச் சார்ந்து இருக்கவேண்டும்!
25 “நான் கர்த்தருடைய துணை இல்லாமல் எருசலேமை அழிக்க வரவில்லை. கர்த்தர் என்னிடம், ‘அந்த நாட்டிற்கு எதிராகப் போய் அதனை அழித்துவிடு!’ என்றார்” என்று சொன்னான்.
26 அப்போது இல்க்கியாவின் குமாரனான எலியாக், செப்னா, யோவாக் மூவரும் தளபதியான ரப்சாக்கேயைப் பார்த்து, “எங்களோடு தயவு செய்து ஆராமிக் மொழியில் பேசும். அந்த மொழிதான் எங்களுக்குப் புரியும். யூதமொழியில் எங்களோடு பேசவேண்டாம். ஏனெனில் சுவரிலுள்ள ஜனங்களின் காதுகளும் அவற்றைக் கேட்கும்!” என்றார்கள்.
27 ஆனால் ரப்சாக்கே அவர்களிடம், “எனது ஆண்டவன் உங்களிடமும் உங்கள் அரசரிடமும் மட்டும் பேச அனுப்பவில்லை. சுவருக்கு மேலேயுள்ள ஜனங்களுடனும் நான் பேசுகிறேன்! அவர்கள் உங்களோடு தங்கள் மலத்தைத் தின்று சிறுநீரைக் குடித்துக்கொள்வார்கள்!” என்றான்.
28 பிறகு தளபதி யூத மொழயில் மிகச் சத்தமாக,
“இச்செய்தியை கேளுங்கள்! அசீரியாவின் மிகப் பெரிய ராஜா உங்களுக்குச் செய்தி அனுப்பியுள்ளான். 29 ராஜா, ‘எசேக்கியா உங்களை முட்டாளாக்கும்படி விடாதீர்கள்! எனது பலத்திலிருந்து உங்களை அவனால் காப்பாற்ற முடியாது!’ என்கிறான். 30 அதுபோல் கர்த்தர் மீது நம்பிக்கையை அவன் ஏற்படுத்தும்படியும் விடாதீர்கள். ஏனென்றால் எசேக்கியா, ‘கர்த்தர் நம்மைக் காப்பாற்றுவார்! இந்நகரத்தை அசீரிய ராஜாவால் தோற்கடிக்க முடியாது!’ என்று கூறுகிறான்.
31 “ஆனால் அவன் கூறுவதைக் கேட்கவேண்டாம்! அசீரிய ராஜா: என்னோடு சமாதானமாக இருங்கள். என்னோடு வெளியே வாருங்கள். பிறகு ஒவ்வொருவரும் தம் சொந்த திராட்சைபழங்களைத் தின்னலாம், அத்திப்பழங்களைத் தின்னலாம், சொந்தக் கிணற்றிலுள்ளத் தண்ணீரைக் குடிக்கலாம். 32 நீங்கள் இதனை நான் உங்களை அழைத்துப்போய் இதுபோன்ற இன்னொரு நாட்டில் குடியேற்றும்வரை செய்யலாம். அந்த நிலம் தானியங்களும் திராட்சைரசமும் நிறைந்தது, அப்பமும் திராட்சைக் கொடிகளும் நிறைய ஒலிவமரமும் தேனும் நிறைந்தது. பிறகு நீங்கள் மரிக்க வேண்டாம், வாழலாம்.
“எசேக்கியா கூறுவதை கேளாதீர்கள். அவன் உங்கள் மனதை மாற்ற முயல்கிறான். அவனோ, ‘கர்த்தர் நம்மைக் காப்பார்’ என்கிறான். 33 இது போல் வேறு எந்த நாட்டிலாவது அங்குள்ள தேவர்கள் அந்த நாட்டை அசீரிய ராஜாவிடமிருந்து காப்பாற்றி இருக்கிறதா? இல்லையே! 34 ஆமாத் மற்றும் அர்பாத் எனும் தெய்வங்கள் என்ன ஆனார்கள்? செப்பர்வாயிம், ஏனா, ஈவாப் நகரங்களின் தெய்வங்கள் எங்கே? அவர்கள் சமாரியாவை என்றைக்காவது காப்பாற்றியதுண்டா? இல்லை! 35 வேறு எந்த நாட்டிலேனும் வேறு எந்த தெய்வங்களும் என்னிடமிருந்து அந்நாட்டைக் காப்பற்றியதுண்டா? இல்லை! கர்த்தர் என்னிடமிருந்து எருசலேமைக் காப்பாற்றுவாரா? காப்பாற்ற முடியாது” என்றான்.
36 ஆனால் ஜனங்கள் அமைதியாக இருந்தனர். அவர்கள் தளபதிக்கு ஒரு வார்த்தை கூட கூறவில்லை. ஏனென்றால் ராஜாவாகிய எசேக்கியா அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தான். அவன், “நீங்கள் அவனுக்கு எதையும் சொல்லவேண்டாம்” என்று கூறி இருந்தான்.
37 இல்க்கியா என்பவனின் குமாரனான எலியாக்கீம், (ராஜாவின் அரண்மனைக்குப் பொறுப்பானவன் எலியாக்கீம்.) செப்னா (செயலாளர்) ஆகாப் என்பவனின் குமாரன் யோவாக் (பதிவேடுகள் பாதுகாப்பாளர்) எல்லாரும் எசேக்கியாவிடம் வந்தார்கள். அவர்களின் ஆடைகள் கிழிந்தவை. (அவர்களின் துக்கத்தையும் கவலையையும் காட்டியது) ஆசாரியன் தளபதி சொன்னதையெல்லாம் எசேக்கியாவிடம் அவர்கள் சொன்னார்கள்.
ராஜாவாகிய எசேக்கியா தீர்க்கதரிசியான ஏசாயாவோடு பேசியது
19 ராஜாவாகிய எசேக்கியா அவற்றைக் கேள்விப்பட்டான். தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு முரட்டு துணியை அணிந்தான். தனது துக்கத்தையும் பாதிப்பையும் வெளிப்படுத்தினான். பிறகு அவன் கர்த்தருடைய ஆலயத்திற்குள் சென்றான்.
2 அவன் ஆமோத்சின் குமாரனான தீர்க்கதரிசி ஏசாயாவிடம் அரண்மனை விசாரிப்புக்காரனான எலியாக்கீம் என்பவனையும், செயலாளனான செப்னா என்பவனையும், மூத்த ஆசாரியர்களையும் அனுப்பி வைத்தான். அவர்கள் தங்கள் கவலையை வெளிப்படுத்தும் முறையில் முரட்டு ஆடையை அணிந்திருந்தனர். 3 அவர்கள் ஏசாயாவிடம், “‘இன்று பிரச்சனைக்குரிய நாள். நாம் தவறாக உள்ளோம் என்பதைக் காட்டும் நாள். இது குழந்தைகளின் பிரசவ காலம் போல உள்ளது. ஆனால் குழந்தையைப் பெறுவதற்கோ பலமில்லை. 4 அசீரிய ராஜாவின் தளபதியால், ஜீவனுள்ள தேவனைப்பற்றிய கெட்டசெய்திகள் சொல்லி அனுப்பப்பட்டன. உங்கள் தேவனாகிய கர்த்தர் இவை எல்லாவற்றையும் கேட்கலாம். ஒருவேளை கர்த்தர் பகைவனைத் தண்டிக்கலாம். இப்போதும் உயிரோடுள்ளவர்களுக்காக வேண்டுதல் செய்க’ என்று எசேக்கியா கூறினார்” என்றான்.
5 எசேக்கியா ராஜாவின் அதிகாரிகள் ஏசாயாவிடம் சென்றனர். 6 ஏசாயா அவர்களிடம், “எசேக்கியா என்னும் உங்கள் ராஜாவிடம் இதைக் கூறுங்கள்: ‘என்னைப்பற்றி அசீரியாவின் அதிகாரிகள் வேடிக்கையாகச் சொன்னதைப்பற்றி பயப்படவேண்டாம். 7 நான் அவனில் ஒரு ஆவியை வைப்பேன். அவன் ஒரு வதந்தியைக் கேட்பான். பிறகு அவன் தன் சொந்த நாட்டில் வாளால் கொல்லப்படும்படி செய்வேன்’ என்று கர்த்தர் கூறுகிறார்” என்று சொன்னான்.
எசேக்கியாவை அசீரிய ராஜா மீண்டும் எச்சரிக்கிறான்
8 அசீரிய ராஜா லாகீசை விட்டுப் புறப்பட்டுவிட்டதை அசீரிய தளபதி கேள்விப்பட்டான். அவன் திரும்பி வந்து தனது ராஜா லிப்னாவில் சண்டையிடுவதாக அறிந்தான். 9 அசீரிய ராஜா எத்தியோப்பியா ராஜாவாகிய தீராக்காப்பற்றி ஒரு வதந்தியைக் கேள்விப்பட்டான். அது, “உனக்கு எதிராக சண்டையிட தீராக்கா வந்துள்ளான்!” என்று சொன்னது.
எனவே அசீரிய ராஜா மீண்டும் ஒரு தூதுவனை எசேக்கியாவிடம் அனுப்பினான். அவன் அவர்களிடம் செய்தியைச் சொன்னான். அவன் சொன்னது: 10 யூத ராஜாவாகிய எசேக்கியாவிடம் கூறுங்கள்:
“‘நீ நம்புகின்ற தேவன் உன்னை முட்டாளாக்குவதற்கு விடாதே. அவனோ, “அசீரிய ராஜா எருசலேம் நகரை வெல்லமாட்டான்!” என்று சொல்கிறான். 11 அசீரிய ராஜா மற்ற நாடுகளில் செய்துள்ளவற்றைப் பற்றி நீ கேள்விப்பட்டிருப்பாய். நாங்கள் அவற்றை முழுமையாக அழித்துவிட்டோம்! நீ காப்பாற்றப்படுவாயா? இல்லை! 12 அந்நாட்டின் தெய்வங்கள் அந்நாட்டு ஜனங்களைக் காப்பற்றவில்லை. எனது முற்பிதாக்கள் அவர்களை அழித்தனர். கோசான், ஆரான், ரேத்சேப், தெலாசாரிலிருந்த ஏதேனின் ஜனங்கள் ஆகியோரையும் அழித்தனர்! 13 ஆமாத்சின் ராஜா எங்கே? அர்பாத்தின் ராஜா எங்கே? செப்பர் வாயிம் நகர ராஜா எங்கே? ஏனா ஈவா நகரங்களின் ராஜாக்களும் எங்கே? அவர்கள் அழிக்கப்பட்டார்கள்’” என்றான்.
எசேக்கியா கர்த்தரிடம் ஜெபிக்கிறான்
14 தூதுவர்களிடமிருந்து கடிதங்களை வாங்கி எசேக்கியா வாசித்துப் பார்த்தான். பிறகு கர்த்தருடைய ஆலயத்திற்குச் சென்றான். அக்கடிதத்தைக் கர்த்தருக்கு முன்பாக வைத்தான். 15 கர்த்தருக்கு முன்னால் ஜெபம் செய்து, “கர்த்தாவே! இஸ்ரவேலரின் தேவனே! கேருபீன்களின் மத்தியில் (அரசரைப்போன்று) வீற்றிருக்கிறவரே! நீர் ஒருவரே தேவன். பூமியின் அரசுகளுக்கெல்லாம் ராஜா. நீர் வானத்தையும் பூமியையும் படைத்தீர். 16 கர்த்தாவே, நான் சொல்வதைக் கேளும். கர்த்தாவே, உமது கண்களை திறந்து இக்கடிதத்தைப் பாரும். சனகெரிப் ஜீவனுள்ள தேவனை நிந்தித்து சொன்ன வார்த்தைகளைக் கேளும்! 17 கர்த்தாவே இது உண்மை. அசீரிய ராஜா இந்த ஜனங்களையும் இந்த நாடுகளையும் அழித்துவிட்டான்! 18 அவர்கள் அந்த ஜனங்களின் தெய்வங்களை நெருப்பிலே தூக்கியெறிந்தார்கள். ஆனால் அவை உண்மையில் தெய்வங்கள் அல்ல. அவை மனிதர்களால் செய்யப்பட்ட மரத்தாலும் கல்லாலும் ஆன சிலைகள். அதனால் தான் அசீரிய ராஜாக்கள் அவற்றை அழிக்க முடிந்தது. 19 எனவே இப்போது தேவனாகிய கர்த்தாவே அசீரிய ராஜாவிடமிருந்து எங்களைக் காப்பாற்றும். பிறகு பூமியிலுள்ள அனைத்து அரசுகளும் நீர் ஒருவரே தேவனாகிய கர்த்தர் என்பதை அறிந்துகொள்ளும்” என்றான்.
தேவன் எசேக்கியாவிற்கு பதில் தருகிறார்.
20 அப்போது அமோத்சின் குமாரனான ஏசாயா எசேக்கியாவிற்கு ஒரு செய்தியை அனுப்பினான். அவன், “இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர், ‘நீ அசீரிய ராஜாவாகிய சனகெரிபிற்கு எதிராக செய்த ஜெபங்களை நான் கேட்டுக்கொண்டேன்’ என்று சொன்னார்” என்றான்.
21 “சனகெரிப் பற்றிய கர்த்தருடைய செய்தி இவ்வாறு இருந்தது:
“சீயோனின் (எருசலேமின்) கன்னிப் பெண் உன்னை முக்கியமாக நினைக்கவில்லை.
உன்னைப் பற்றி கேலிச்செய்கிறாள்!
எருசலேமிலுள்ள பெண் அவளது தலையை உனக்குப் பின்னால் குலுக்குகிறாள்.
22 ஆனால் நீ அவமானப்படுத்தியதும் கேலிச்செய்ததும் யாரை?
யாருக்கு எதிராக நீ உனது குரலை உயர்த்தியிருக்கிறாய்?
நீ இஸ்ரவேலின் பரிசுத்தமானவருக்கு எதிரானவன்!
நீ அவரைவிடச் சிறந்தவனைப் போல் நடித்தாய்!
23 கர்த்தரை அவமானப்படுத்தவே நீ உன் தூதுவர்களை அனுப்பினாய்.
‘நான் ஏராளமான இரதங்களோடு மலை உச்சிகளுக்கும், லீபனோனின் உள்புறத்துக்கும் வந்தேன்.
நான் லீபனோனின் உயர்ந்த கேதுரு மரங்களையும் சிறந்த தேவதாரு மரங்களையும் வெட்டினேன்.
நான் லீபனோனின் உயர்ந்த பகுதிகளுக்கும் அடர்ந்த காடுகளுக்கும் போனேன்.
24 நான் புதிய இடங்களில் கிணறுகளைத் தோண்டி தண்ணீரைக் குடித்தேன்.
நான் எகிப்து ஆறுகளை வற்றச்செய்து அந்த நாட்டினில் நடந்து சென்றேன்’ என்று சொன்னாய்.
25 “இதைத்தான் நீ சொன்னாய்
ஆனால் தேவன் சொன்னதை நீ கேட்டிருக்கவில்லை.
நான் (தேவன்) நீண்ட காலத்திற்கு முன்பே அதனைத் திட்டமிட்டேன்.
பழங்காலத்திலிருந்தே நான் அதனைத் திட்டமிட்டேன்.
இப்போது, நிகழும்படி செய்கிறேன்.
கோட்டையமைந்த நகரங்களை அழிக்க உன்னை அனுமதித்தேன்.
அவற்றை பாறைகளாகும்படி மாற்றினேன்.
26 அந்நகரங்களில் உள்ள ஜனங்களுக்கு சக்தி இருக்கவில்லை.
அந்த ஜனங்கள் பயந்து, குழம்பினார்கள்.
அவர்கள் வயல் புறத்தில் வெட்டி எறியப்படப்போகிற புல்லைப் போலவும், செடியைப் போலவும் இருந்தார்கள்.
அவர்கள் வீட்டின்மேல் வளர்ந்த செடியைப் போன்றவர்கள்.
வளர்வதற்கு முன்பே அழிந்துப்போனவர்கள்.
27 நீ உட்கார்ந்திருப்பதையும் நான் அறிவேன்.
நான் நீ போருக்குப்போகும் பொழுதையும் அறிவேன்.
நீ வீட்டிற்கு வந்ததையும் அறிவேன்.
நீ என்னிடம் அலுத்துக் கொண்டதையும் அறிவேன்.
28 ஆமாம் நீ என்னிடம் அலுத்துக்கொண்டாய்.
உனது பெருமிதமான நிந்தனைகளைக் கேட்டேன்.
எனவே நான் உனது மூக்கில் துறட்டை மாட்டுவேன்.
நான் உனது வாயிலே எனது கடிவாளத்தை மாட்டுவேன்.
பிறகு நான் உன்னை சுற்றிவிடுவேன்.
வந்த வழியே திரும்பிப்போகச் செய்வேன்” என்றார்.
எசேக்கியாவிற்கு கர்த்தருடைய செய்தி
29 “நான் உனக்கு உதவி செய்வேன் என்பதற்கு இதுதான் அடையாளம்: இவ்வாண்டில் நீங்கள்தானாக விளைந்த தானியங்களைத் தின்பீர்கள். அடுத்த ஆண்டு அதன் விதையில் வளர்ந்த தானியத்தை உண்பீர்கள். ஆனால் மூன்றாவது ஆண்டில் நீங்கள் பயிர் செய்தவற்றிலிருந்து தானியத்தை பெறுவீர்கள். நீங்கள் திராட்சைத் தோட்டங்களைப் பயிர்செய்து அவற்றிலுள்ள திராட்சைப் பழங்களை உண்பீர்கள். 30 யூதாவின் குடும்பத்திலிருந்து தப்பித்து பிழைத்த ஜனங்கள் மீண்டும் வளரத் தொடங்குவார்கள். 31 ஏனென்றால் சிலர் உயிரோடு இருப்பார்கள். அவர்கள் எருசலேமைவிட்டு வெளியேறுவார்கள். உயிர் பிழைத்தவர்கள் சீயோன் மலையிலிருந்து வெளியேறுவார்கள். கர்த்தருடைய உறுதியான வைராக்கியமே இதைச்செய்யும்.
32 “எனவே, அசீரிய ராஜாவைப்பற்றிக் கர்த்தர் இவ்வாறு கூறுகிறார்:
‘அவன் இந்நகரத்திற்குள் வரமாட்டான்.
அவன் இந்நகரத்திற்குள் ஒரு அம்பையும் எய்யமாட்டான்.
அவன் இந்நகரத்திற்குள் கேடயங்களைக் கொண்டு வரமாட்டான்.
அவன் இந்நகரச் சுவர்களைத் தாக்குவதற்கு கொத்தளம் அமைக்கப்போவதில்லை.
33 அவன் வந்த வழியாகவே திரும்பிப் போவான்.
அவன் இந்நகரத்திற்குள் வரமாட்டான். இதனைக் கர்த்தர் கூறுகிறார்!
34 நான் இந்நகரத்தைப் பாதுகாத்து காப்பாற்றுவேன்.
இதனை நான் எனக்காகவும் என் தொண்டன் தாவீதிற்காகவும் செய்வேன்.’”
அசீரியப்படை அழிந்தது
35 அன்று இரவு, கர்த்தருடைய தூதன் போய் 1,85,000 ஜனங்களை அசீரியப் படையில் கொன்று போட்டான். ஜனங்கள் காலையில் எழுந்தபோது, மரித்த உடல்களைப் பார்த்தனர்.
36 எனவே அசீரிய ராஜாவாகிய சனகெரிப் என்பவன் விலகிப்போய் நினிவே நகரத்திற்கு திரும்பிப் போனான். 37 ஒரு நாள் சனகெரிப் தனது தெய்வமான நிஸ்ரோகின், ஆலயத்தில் தொழுகை செய்துக்கொண்டிருந்தான். அப்போது அவனை அவனது குமாரர்களான அத்ரமலேக் என்பவனும் சரேத்சேர் என்பவனும் சேர்ந்து வாளால் கொன்றனர். பிறகு அவர்கள் அங்கிருந்து தப்பித்து ஆரராத் நாட்டிற்கு ஓடினார்கள். சனகெரிப்பிற்குப் பிறகு அவனது குமாரன் எசரத்தோன் என்பவன் புதிய ராஜா ஆனான்.
அலமோத் என்னும் கருவியில் வாசிக்கும்படி கொடுக்கப்பட்ட கோராகின் குடும்பத்தின் இராகத் தலைவனுக்கு, ஒரு பாடல்.
46 தேவன் நம் வல்லமையின் ஊற்றாயிருக்கிறார்.
தொல்லைகள் சூழ்கையில் நாம் அவரிடமிருந்து எப்பொழுதும் உதவி பெறலாம்.
2 எனவே பூமி நடுங்கினாலும்,
மலைகள் கடலில் வீழ்ந்தாலும் நாம் அஞ்சோம்.
3 கடல் கொந்தளித்து இருள் சூழ்ந்தாலும்
பர்வ தங்கள் நடுங்கி அதிர்ந்தாலும் நாம் அஞ்சோம்.
4 உன்னத தேவனுடைய பரிசுத்த நகரத்திற்கு,
மகிழ்ச்சி அளிக்கிற ஓடைகளையுடைய நதி ஒன்று இருக்கிறது.
5 அந்நகரம் அழியாதபடி தேவன் அங்கிருக்கிறார்.
சூரிய உதயத்திற்குமுன் தேவன் அதற்கு உதவுவார்.
6 தேசங்கள் பயத்தால் நடுங்கும்.
கர்த்தர் சத்தமிடுகையில் அந்த இராஜ்யங்கள் விழும், பூமி சீர்குலையும்.
7 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் நம்மோடிருக்கிறார்.
யாக்கோபின் தேவன் நமது பாதுகாப்பிடம்.
8 கர்த்தர் செய்யும் வல்லமை மிக்க காரியங்களைப் பாருங்கள்.
அவர் பூமியின்மேல் செய்துள்ள பயத்திற்குரிய காரியங்களைப் பாருங்கள்.
9 பூமியில் எவ்விடத்தில் போர் நிகழ்ந்தாலும் கர்த்தர் அதை நிறுத்த வல்லவர்.
வீரர்களின் வில்லுகளை அவர் முறித்து அவர்கள் ஈட்டிகளைச் சிதறடிக்கிறார்.
இரதங்களை நெருப்பினால் அழிக்க தேவன் வல்லவர்.
10 தேவன், “நீங்கள் சண்டையிடுவதை நிறுத்தி அமைதியாயிருந்து நானே தேவன் என உணருங்கள்!
நான் பூமியில் பெருமையுற்று தேசங்களில் வாழ்த்தப்படுவேன்” என்று கூறினார்.
11 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் நம்மோடிருக்கிறார்.
யாக்கோபின் தேவன் நமது பாதுகாப்பிடம்.
“உடன்படிக்கையின் அல்லிகள்” என்னும் பாடலை இசைக்கும் இராகத் தலைவனுக்கு ஆசாப் அளித்த துதிப் பாடல்களுள் ஒன்று.
80 இஸ்ரவேலின் மேய்ப்பரே, என்னைக் கேளும்.
நீர் யோசேப்பின் ஆடுகளை (ஜனங்களை) வழி நடத்துகிறீர்.
கேருபீன்கள் மேல் ராஜாவாக நீர் வீற்றிருக்கிறீர்.
நாங்கள் உம்மைப் பார்க்கட்டும்.
2 இஸ்ரவேலின் மேய்ப்பரே, உமது பெருமையை எப்பிராயீமுக்கும் பென்யமீனுக்கும், மனாசேக்கும் காட்டும்.
வந்து எங்களைக் காப்பாற்றும்.
3 தேவனே, எங்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளும்.
எங்களை ஏற்றருளும், எங்களைக் காப்பாற்றும்.
4 சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, எப்போது நீர் எங்கள் ஜெபங்களைக் கேட்பீர்?
என்றென்றைக்கும் எங்களோடு கோபமாயிருப்பீரோ?
5 உமது ஜனங்களுக்கு நீர் கண்ணீரையே உணவாகக் கொடுத்தீர்.
உமது ஜனங்களின் கண்ணீர் நிரம்பிய பாத்திரத்தையே உமது ஜனங்களுக்கு நீர் கொடுத்தீர்.
அதுவே அவர்கள் பருகும் தண்ணீராயிற்று.
6 எங்கள் சுற்றத்தினர் சண்டையிடுவதற்கான பொருளாக எங்களை மாற்றினீர்.
எங்கள் பகைவர்கள் எங்களைப் பார்த்து நகைக்கிறார்கள்.
7 சர்வ வல்லமையுள்ள தேவனே, எங்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளும்.
எங்களை ஏற்றருளும், எங்களைக் காப்பாற்றும்.
8 கடந்த காலத்தில் எங்களை முக்கியமான ஒரு தாவரத்தைப்போன்று நடத்தி வந்தீர்.
நீர் உமது “திராட்சைக்கொடியை” எகிப்திலிருந்து கொண்டுவந்தீர்.
இத்தேசத்திலிருந்து பிறர் விலகிப்போகுமாறு கட்டாயப்படுத்தினீர்.
உமது “திராட்சைக் கொடியை” நீர் இங்கு நட்டு வைத்தீர்.
9 “திராட்சைக்கொடிக்காக” நீர் நிலத்தைப் பண்படுத்தினீர்.
அதன் வேர்கள் வேரூன்றிச் செல்வதற்கு நீர் உதவினீர்.
உடனே அத் “திராட்சைக்கொடி” தேசமெங்கும் படர்ந்தது.
10 அது பர்வதங்களை மூடிற்று.
அதன் இலைகள் பெரும் கேதுரு மரங்களுக்கு நிழல் தந்தன.
11 அதன் கொடிகள் மத்தியதரைக் கடல் வரைக்கும் படர்ந்தது.
அதன் கிளைகள் ஐபிராத்து நதிவரைக்கும் சென்றது.
12 தேவனே, உமது “திராட்சைக்கொடி” யைப் பாதுகாக்கும் சுவர்களை ஏன் இடித்துத் தள்ளினீர்?
இப்போது வழிநடந்து செல்பவன் ஒவ்வொருவனும் திராட்சைக் கனிகளைப் பறித்துச் செல்கிறான்.
13 காட்டுப்பன்றிகள் வந்து உமது “திராட்சைக் கொடியின்” மீது நடந்து செல்கின்றன.
காட்டு மிருகங்கள் வந்து அதன் இலைகளைத் தின்கின்றன.
14 சர்வ வல்லமையுள்ள தேவனே, மீண்டும் வாரும்.
பரலோகத்திலிருந்து கீழே உமது “திராட்சைக்கொடி” யைப் பார்த்து அதனைப் பாதுகாத்துக்கொள்ளும்.
15 தேவனே, உமது கைகளால் நட்ட “திராட்சைக் கொடியைப்” பாரும்.
நீர் வளர்த்தெடுத்த இளமையான செடியை நீர் பாரும்.
16 உலர்ந்த சருகைப்போல் உமது “திராட்சைக் கொடி” நெருப்பில் எரிக்கப்பட்டது.
நீர் அதனிடம் கோபங்கொண்டு, அதனை அழித்தீர்.
17 தேவனே, உமது வலது பக்கத்தில் நின்ற உமது குமாரனை நெருங்கும்.
நீர் வளர்த்தெடுத்த உமது மகனிடம் நெருங்கி வாரும்.
18 அவர் மீண்டும் உம்மை விட்டுச் செல்லமாட்டார்.
அவர் வாழட்டும், அவர் உமது நாமத்தைத் தொழுதுகொள்வார்.
19 சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரே, எங்களிடம் மீண்டும் வாரும்.
எங்களை ஏற்றுக்கொள்ளும், எங்களைக் காப்பாற்றும்.
135 கர்த்தரைத் துதிப்போம்!
கர்த்தருடைய நாமத்தைத் துதிப்போம்!
கர்த்தருடைய ஊழியர்களே, அவரைத் துதியுங்கள்!
2 தேவனுடைய ஆலய முற்றத்தில்,
கர்த்தருடைய ஆலயத்தில் நிற்கும் ஜனங்களே, அவரைத் துதியுங்கள்.
3 கர்த்தர் நல்லவர், எனவே அவரைத் துதியுங்கள்.
அவரது நாமத்தைத் துதியுங்கள், ஏனெனில் அது இன்பமானது.
4 கர்த்தர் யாக்கோபைத் தேர்ந்தெடுத்தார்.
இஸ்ரவேல் தேவனுக்கு உரியது.
5 கர்த்தர் உயர்ந்தவர் என நான் அறிகிறேன்!
நமது ஆண்டவர் எல்லா தெய்வங்களிலும் மேன்மையானவர்!
6 பரலோகத்திலும், பூமியிலும், கடல்களிலும் ஆழமான.
சமுத்திரங்களிலும், கர்த்தர் அவருக்கு வேண்டியவற்றையெல்லாம் செய்கிறார்.
7 பூமியின்மேல் மேகங்களை தேவன் உண்டாக்குகிறார்.
தேவன் மின்னலையும் மழையையும் உண்டாக்குகிறார்.
தேவன் காற்றையும் உண்டாக்குகிறார்.
8 எகிப்தின் எல்லா முதற்பேறான ஆண்களையும்,
எல்லா முதற்பேறான மிருகங்களையும் தேவன் அழித்தார்.
9 எகிப்தில் தேவன் பல அற்புதங்களையும் அதிசயங்களையும் நிகழ்த்தினார்.
பார்வோனுக்கும் அவனது அதிகாரிகளுக்கும் தேவன் அக்காரியங்களை நிகழப்பண்ணினார்.
10 தேவன் பல தேசங்களை முறியடித்தார்.
தேவன் வல்லமையுடைய ராஜாக்களைக் கொன்றார்.
11 எமோரியரின் ராஜாவாகிய சீகோனை தேவன் தோற்கடித்தார்.
பாஷானின் ராஜாவாகிய ஓகையும் தேவன் தோற்கடித்தார்.
கானானின் எல்லா தேசங்களையும் தேவன் தோற்கடித்தார்.
12 தேவன் இஸ்ரவேலருக்கு அவர்களின் தேசத்தைக் கொடுத்தார்.
அவரது ஜனங்களுக்கு தேவன் அத்தேசத்தைக் கொடுத்தார்.
13 கர்த்தாவே, உமது நாமம் என்றென்றும் புகழ்வாய்ந்ததாயிருக்கும்.
கர்த்தாவே, ஜனங்கள் உம்மை என்றென்றைக்கும் எப்போதும் நினைவுக்கூருவார்கள்.
14 கர்த்தர் தேசங்களைத் தண்டித்தார்.
ஆனால் கர்த்தர் அவரது ஊழியரிடம் தயவுடையவராயிருந்தார்.
15 பிற ஜனங்களின் தெய்வங்கள் வெறும் பொன்னாலும் வெள்ளியாலுமாகிய சிலைகள் மட்டுமே.
அவர்களின் தெய்வங்கள் ஜனங்கள் செய்த வெறும் சிலைகள் மட்டுமே.
16 சிலைகளுக்கு வாய்கள் இருந்தன, ஆனால் பேச முடியவில்லை.
சிலைகளுக்குக் கண்கள் இருந்தன, ஆனால் பார்க்க முடியவில்லை.
17 சிலைகளுக்குக் காதுகள் இருந்தன, ஆனால் கேட்க முடியவில்லை.
சிலைகளுக்கு மூக்குகள் இருந்தன, ஆனால் முகர்ந்துபார்க்க முடியவில்லை.
18 அச்சிலைகளைச் செய்த ஜனங்களும் அவற்றைப் போலாவார்கள்.
ஏனெனில் அச்சிலைகள் அவர்களுக்கு உதவ வேண்டுமென்று அவர்கள் நம்பினார்கள்.
19 இஸ்ரவேலின் குடும்பமே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்!
ஆரோனின் குடும்பமே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்!
20 லேவியின் குடும்பமே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்!
கர்த்தரைப் பின்பற்றுவோரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்!
21 கர்த்தர் சீயோனிலிருந்தும்,
அவரது வீடாகிய எருசலேமிலிருந்தும் போற்றப்படுகிறார்.
கர்த்தரைத் துதியுங்கள்!
2008 by World Bible Translation Center