Print Page Options
Previous Prev Day Next DayNext

Chronological

Read the Bible in the chronological order in which its stories and events occurred.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
2 நாளாகமம் 28

யூதாவின் ராஜாவாகிய ஆகாஸ்

28 ஆகாஸ் ராஜாவாகியபோது அவனுக்கு 20 வயது. அவன் எருசலேமில் 16 ஆண்டுகள் அரசாண்டான். தனது முற்பிதாவான தாவீதைப் போன்று ஆகாஸ் சரியான வழியில் வாழவில்லை. கர்த்தர் விரும்பியவற்றை ஆகாஸ் செய்யவில்லை. இஸ்ரவேல் ராஜாக்களின் தவறான முன்மாதிரிகளை கடைபிடித்தான். அவன் பாகால் தெய்வங்களைத் தொழுதுகொள்ள வார்ப்புச் சிலைகளைச் செய்தான். ஆகாஸ் பென்இன்னோம் பள்ளத்தாக்கில் நறுமணப் பொருட்களை எரித்தான். தன் சொந்த குமாரர்களை நெருப்பில் எரித்துப் பலிக்கொடுத்தான். அந்நாடுகளில் வாழ்ந்தோர் செய்த பயங்கரமான பாவங்களையே அவனும் செய்தான். இஸ்ரவேல் ஜனங்கள் அந்நாட்டுக்குள் நுழைந்தபோது ஏற்கெனவே அங்கிருந்த பாவமிக்க ஜனங்களை கர்த்தர் வெளியே துரத்தியிருந்தார். மலைகளில் இருந்த மேடைகளிலும் ஒவ்வொரு பசுமையான மரத்தின் அடியிலும் ஆகாஸ் பலிகளைக் கொடுத்து நறுமணப் பொருட்களை எரித்தான்.

5-6 ஆகாஸ் பாவங்களைச் செய்ததால், ஆராமின் ராஜா ஆகாஸை வெல்லும்படி தேவனாகிய கர்த்தர் செய்தார். ஆராமின் ராஜாவும் அவனது படைகளும் ஆகாஸைத் தோற்கடித்து யூத ஜனங்களில் பலரைச் சிறைபிடித்தனர். ஆராம் ராஜா, சிறைக் கைதிகளை தமஸ்கு என்ற நகரத்திற்கு அழைத்துச் சென்றான். மேலும் கர்த்தர், இஸ்ரவேல் ராஜாவாகிய பெக்கா ஆகாஸை வெல்லும்படிச் செய்தார். பெக்காவின் தந்தையின் பெயர் ரெமலியா ஆகும். ஒரே நாளில் பெக்காவும், அவனது படையும் யூதாவில் 1,20,000 வீரர்களைக் கொன்றனர். பெக்கா யூதா வீரர்களை வென்றதற்குக் காரணம் அவர்கள் தம் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்கு அடிபணியவில்லை என்பது ஆகும். எப்பிராயீமில் சிக்ரி என்பவன் பலமிக்க வீரன். அவன் ஆகாஸ் ராஜாவின் குமாரனான மாசேயாவையும், அரண்மனைத் தலைவனாகிய அஸ்ரிக்காமையும் எல்க்கானாவையும் கொன்றான். எல்க்கானா ராஜாவுக்கு இரண்டாவது நிலையில் இருந்தார்.

இஸ்ரவேலிய படையானது யூதாவில் வாழ்ந்த தம் சொந்த உறவினர்களான 2,00,000 பேரைச் சிறை பிடித்தனர். அவர்கள் பெண்களையும், குழந்தைகளையும் அடிமைகளாகக் கொண்டுசென்றார்கள். அவர்கள் யூதாவிலிருந்து பல விலையுயர்ந்த பொருட்களை அபகரித்துச் சென்றார்கள். அந்த அடிமைகளையும், அப்பொருட்களையும் இஸ்ரவேலர்கள் சமாரிய நகருக்குக் கொண்டுவந்தார்கள். ஆனால் அங்கே கர்த்தருடைய தீர்க்கதரிசி ஒருவன் இருந்தான். அவனது பெயர் ஒதேத். சமாரியாவிற்கு வந்த இஸ்ரவேல் படையை ஒதேத் சந்தித்தான். ஒதேத் இஸ்ரவேல் படையினரிடம், “உங்கள் முற்பிதாக்கள் பணிந்த தேவனாகிய கர்த்தர், நீங்கள் யூதாவின் ஜனங்களைத் தோற்கடிக்கவிட்டார். ஏனென்றால் அவர்கள் மீது அவர் கோபமாயிருந்தார். மிக மோசமான முறையில் நீங்கள் யூதாவின் ஜனங்களைக் கொன்று தண்டித்தீர்கள். இப்போது தேவன் உங்கள் மீது கோபமாக இருக்கிறார். 10 நீங்கள் யூதாவின் ஜனங்களையும், எருசலேமையும் அடிமையாக்கத் திட்டமிட்டுள்ளீர்கள். உங்களது தேவனாகிய கர்த்தருக்கு எதிராக நீங்களும் பாவம் செய்திருக்கிறீர்கள். 11 இப்போது நான் சொல்வதைக் கவனியுங்கள். நீங்கள் கைப்பற்றிய உங்கள் சகோதர சகோதரிகளைத் திருப்பி அனுப்புங்கள். கர்த்தருடைய கடுமையான கோபம் உங்கள் மீது உள்ளது. எனவே நான் சொன்னபடி செய்யுங்கள்” என்று சொன்னான்.

12 பிறகு எப்பிராயீம் தலைவர்கள், இஸ்ரவேல் வீரர்கள் போர்க்களத்திலிருந்து வீட்டிற்குத் திரும்புவதைப் பார்த்தனர். அந்தத் தலைவர்கள் இஸ்ரவேல் வீரர்களைச் சந்தித்து எச்சரிக்கைச் செய்தனர். யோகனானின் குமாரன் அசரியா, மெஷிலேமோத்தின் குமாரனான பெரகியா, சல்லூமின் குமாரனான எகிஸ்கியா, அத்லாயின் குமாரனான அமாசா ஆகியோர் அந்தத் தலைவர்களாகும். 13 அவர்கள் இஸ்ரவேல் வீரர்களிடம், “யூதாவிலிருந்து கைதிகளை இங்கே கொண்டுவராதீர்கள். அவ்வாறு செய்தால் அது கர்த்தருக்கு எதிராக நாம் பாவம் செய்வது போல் ஆகும். நமது பாவங்களையும் குற்ற உணர்வையும் அது மோசமாக்கும். கர்த்தர் இஸ்ரவேலுக்கு எதிராகக் கோபம் கொள்வார்” என்றார்கள்.

14 எனவே, வீராகள் கைதிகளையும், விலையுயர்ந்த பொருட்களையும் தலைவர்களிடமும், ஜனங்களிடமும் கொடுத்தனர். 15 உடனே அசரியா, பெரக்கியா, எகிஸ்கியா, அமாசா, ஆகிய தலைவர்கள் கைதிகளுக்கு உதவினார்கள். அந்நால்வரும் இஸ்ரவேல் படை அபகரித்த ஆடைகளை எடுத்து நிர்வாணமாயிருந்த கைதிகளுக்குக் கொடுத்தனர். அவர்களுக்கு பாதரட்சைகளைக் கொடுத்தனர். உண்ணவும், குடிக்கவும் கைதிகளுக்கு உணவுப் பொருட்களைக் கொடுத்தனர். அவர்களுக்கு எண்ணெய் தடவினார்கள். பிறகு அந்த எப்பிராயீம் தலைவர்கள் பலவீனமான கைதிகளைக் கழுதைமேல் ஏற்றி எரிகோவில் உள்ள அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். எரிகோ பேரீச்ச மரங்கள் நிறைந்த பட்டணம். பிறகு அந்தத் தலைவர்கள் நால்வரும் தம் நகரமான சமாரியாவிற்குத் திரும்பினார்கள்.

16-17 அதே நேரத்தில் ஏதோம் நாட்டு ஜனங்கள் யூதாவைத் தோற்கடித்தனர். ஏதோமியர் ஜனங்களைச் சிறைபிடித்து கைதிகளாக கொண்டு சென்றார்கள். எனவே ஆகாஸ் ராஜா அசீரியா ராஜாவிடம் உதவுமாறு வேண்டினான். 18 பெலிஸ்தர்களும் மலைநாட்டு நகரங்களையும் யூதாவின் தென் பகுதியையும் தாக்கினார்கள். இவர்கள் பெத்ஷிமேஸ், ஆயலேன், கெதெரோத், சொக்கோ, திம்னா மற்றம் கிம்சோ ஆகிய ஊர்களைக் கைப்பற்றினார்கள். மேலும் அவர்கள் அந்த ஊர்களுக்கு அருகிலிருந்த கிராமங்களையும் கைப்பற்றினார்கள், பிறகு பெலிஸ்தியர்கள் அந்த ஊர்களில் வாழ்ந்தார்கள். 19 யூதா ஜனங்களுக்கு கர்த்தர் கடுமையான துன்பங்களைத் தந்தார். ஏனென்றால் ஆகாஸ் ராஜா யூதா ஜனங்கள் பாவம் செய்யும்படி தூண்டினான். அவன் கர்த்தருக்கு உண்மை இல்லாதவனாக நடந்துக் கொண்டான். 20 அசீரியாவின் ராஜாவாகிய தில்காத்பில் நேசர் உதவுவதற்குப் பதிலாகத் துன்பங்களைத் தந்தார். 21 ஆகாஸ் கர்த்தருடைய ஆலயம், அரண்மனை, இளவரசர்களின் அரண்மனை ஆகியவற்றில் இருந்து விலையுயர்ந்த பொருட்களை எடுத்துவந்தான். அவற்றை அசீரியா ராஜாவுக்குக் கொடுத்தான். எனினும் அது ஆகாசுக்கு உதவவில்லை.

22 இவ்வளவு இடையூறுகளுக்கு நடுவிலும் ஆகாஸ் மேலும் மோசமான பாவங்களையே தொடர்ந்து செய்தான். இதனால் கர்த்தருக்கு மிகவும் உண்மையற்றவனாக இருந்தான். 23 தமஸ்கு ஜனங்கள் தொழுதுகொண்ட தெய்வங்களுக்கே இவன் பலிகளைக் கொடுத்து வந்தான் தமஸ்கு ஜனங்கள் ஆகாஸைத் தோற்கடித்தனர். அதனால் ஆகாஸ், “ஆராம் ஜனங்களுக்கு அவர்கள் தொழுதுகொண்ட தெய்வங்கள் உதவுகின்றன. எனவே நானும் அத்தெய்வங்களுக்குப் பலியிட்டால் அத்தெய்வங்கள் எனக்கும் உதவும்” என்று எண்ணினான். ஆகாஸ் அத்தெய்வங்களைத் தொழுதுகொண்டான். இவ்வாறு இவன் தானும் பாவம் செய்து இஸ்ரவேல் ஜனங்களையும் பாவம் செய்யவைத்தான்.

24 ஆகாஸ் தேவனுடைய ஆலயத்தில் இருந்து பொருட்களை எடுத்து உடைத்துப் போட்டான் பிறகு அவன் கர்த்தருடைய ஆலய கதவுகளை மூடினான். அவன் பலிபீடங்களைச் செய்து எருசலேமின் ஒவ்வொரு தெரு முனையிலும் வைத்தான். 25 ஆகாஸ் யூதாவின் ஒவ்வொரு நகரங்களிலும் மேடைகள் அமைத்து நறுமணப் பொருட்களை எரித்து அந்நிய தெய்வங்களை தொழுதுகொண்டான். ஆகாஸ் தன் முற்பிதாக்களால் தொழுதுகொள்ளப்பட்ட தேவனாகிய கர்த்தரை மேலும் கோபமூட்டினான்.

26 ஆகாஸ் தொடக்ககாலம் முதல் இறுதிவரை செய்த மற்ற செயல் எல்லாமும் யூதா மற்றம் இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. 27 ஆகாஸ் மரித்ததும் அவனை அவனது முற்பிதாக்களுக்கு அருகில் அடக்கம் செய்தனர். ஜனங்கள் அவனை எருசலேம் நகரிலேயே அடக்கம் செய்தனர். ஆனால் அவனை இஸ்ரவேல் ராஜாக்களை அடக்கம் செய்யும் இடத்துக்கருகில் அடக்கம் செய்யவில்லை. ஆகாசின் இடத்தில் புதிய ராஜாவாக எசேக்கியா வந்தான். எசேக்கியா ஆகாசின் குமாரன்.

2 இராஜாக்கள் 16-17

ஆகாஸ் யூதாவின் ராஜா ஆனது

16 யோதாமின் குமாரனான ஆகாஸ் என்பவன் யூதாவின் ராஜா ஆனான். அப்போது இஸ்ரவேலில் ரெமலியாவின் குமாரனான பெக்கா என்பவனின் 17வது ஆட்சியாண்டு நடைபெற்றது. ஆகாஸ் ராஜாவாகும்போது அவனது வயது 20, அவன் எருசலேமிலிருந்து 16 ஆண்டுகள் அரசாண்டான். நல்லதென்று கர்த்தர் சொன்னவற்றை ஆகாஸ் செய்யவில்லை. தேவனுக்குக் கீழ்ப்படிந்து நடந்த தனது முற்பிதாவான தாவீதைப்போன்று இவன் கர்த்தருக்குக் கீழ்ப்படியவில்லை. இவன் இஸ்ரவேலின் மற்ற ராஜாக்களைப்போன்று ஆண்டு வந்தான். அவன் தன் குமாரனையும் தகனபலியாகக் கொடுத்தான். இஸ்ரவேலர்கள் வந்தபொழுது, கர்த்தர் நாட்டை விட்டுத் துரத்திய ஜனங்கள் செய்துவந்ததுபோன்ற பயங்கரமான பாவங்களைச் செய்துவந்தான். ஆகாஸ் மேடைகளில் பலியிட்டும் நறுமணப் பொருட்களை எரித்தும் வந்தான். மேடை, மலைஉச்சி, ஒவ்வொரு மரத்தடி என அனைத்து இடங்களிலும் தொழுதுகொண்டு வந்தான்.

பிறகு, ஆராமின் ராஜாவாகிய ரேத்சீன் என்பவனும், இஸ்ரவேலின் ராஜாவாகிய ரெமலியாவின் குமாரனான பெக்கா என்பவனும், எருசலேமிற்கு எதிராகப் போரிட வந்தனர். அவர்கள் ஆகாசை முற்றுகையிட்டனர். ஆனால், தோற்கடிக்க முடியவில்லை. அப்போது ஆராம் ராஜாவாகிய ரேத்சீன் ஏலாத்தைத் திரும்பப் பெற்றான். ஏலாத்திலிருந்து யூதர்கள் அனைவரையும் திரும்ப எடுத்துக் கொண்டான். ஆராமியர்கள் ஏலாத்தில் குடியேறினார்கள். இன்றுவரை அங்கே அவர்கள் இருக்கின்றனர்.

ஆகாஸ் அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசரிடம் தூதுவனை அனுப்பினான். “நான் உங்கள் சேவகன். நான் உங்களுக்கு குமாரனைப் போன்றவன். என்னை ஆராம் ராஜாவிடமிருந்தும் இஸ்ரவேல் ராஜாவிடமிருந்தும் வந்து காப்பாற்றுங்கள். அவர்கள் என்னோடு போர் செய்ய வருகிறார்கள்!” என்று தூதுவிட்டான். ஆகாஸ் கர்த்தருடைய ஆலயத்திலும் அரண்மனை கருவூலத்திலும் உள்ள பொன்னையும், வெள்ளியையும் எடுத்து அசீரியாவின் ராஜாவுக்குக் காணிக்கையாக அனுப்பினான். அசீரியாவின் ராஜா, ஆகாஸ் சொன்னதைக் கேட்டு தமஸ்குவுக்குப் போய் அதற்கு எதிராகப் போரிட்டான். அவன் அந்நகரத்தைக் கைப்பற்றி அங்குள்ளவர்களைச் சிறைபிடித்து கீர்க்கு நாடு கடத்தினான் (வெளியேற்றினான்) அவன் ரேத்சீனையும் கொன்றான்.

10 அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசரை சந்திக்க ராஜா ஆகாஸ் தமஸ்குவுக்குப்போனான். ஆகாஸ் அங்கே பலி பீடத்தைப் பார்த்தான். அவன் அதனுடைய மாதிரியையும் வடிவத்தையும் ஆசாரியனாகிய உரியாவுக்கு அதேபோல ஒரு பலிபீடம் செய்வதற்காக அனுப்பினான். 11 ஆகாஸ் தமஸ்குவிலிருந்து திரும்பி வருவதற்குள் ஆசாரியன் உரியா ராஜாவால் அனுப்பப்பட்ட மாதிரியின்படியே ஒரு பலிபீடத்தைக் கட்டிமுடித்தான்.

12 ஆகாஸ் தமஸ்குவிலிருந்து திரும்பியதும், பலிபீடத்தைப் பார்த்தான். அதில் பலிகளைச் செலுத்தினான். 13 அதில் அவன் தகன பலியையும் தானிய காணிக்கைகளையும் செலுத்தினான். அதோடு, பானங்களின் காணிக்கையையும் சமாதானப் பலியின் இரத்தத்தையும் இந்தப் பலிபீடத்தின்மேல் தெளித்தான்.

14 கர்த்தருடைய முன்னிலையில் ஆலயத்தின் முன்னாலிருந்த வெண்கலப் பலி பீடத்தை ஆகாஸ் பெயர்த்தெடுத்தான். அந்த வெண்கலப் பலிபீடம் ஆகாஸின் பலிபீடத்திற்கும் கர்த்தருடைய ஆலயத்திற்கும் இடையில் இருந்தது. அந்த வெண்கலப் பலிபீடத்தைத் தனது பலிபீடத்திற்கு வடக்குப் பக்கத்தில் வைத்தான். 15 ஆசாரியனாகிய உரியாவிற்கு ராஜா ஒரு கட்டளையிட்டான். அவன், “நீ இந்த பெரிய பலிபீடத்தின் மேல் காலைச் சர்வாங்க தகனபலியையும் மாலை தானியக் காணிக்கையையும் தேசத்தின் ஜனங்களின் சர்வாங்கத் தகன பலியையும் அவர்களது தானியக் காணிக்கைகளையும் பானங்களின் காணிக்கையையும் செலுத்தவேண்டும். அதன்மேல் சர்வாங்க தகனபலி மற்றும் உயிர் பலிகளின் இரத்தத்தையும் தெளிப்பாய். நான் என் சொந்தக் காரியத்துக்கு தேவனிடம் கேட்க, (விசாரிக்க), (வழிகாட்ட) மட்டும் வெண்கலப் பலிபீடத்தைப் பயன்படுத்துவேன்” என்று கூறினான். 16 அதன்படியே ஆசாரியன் உரியா அனைத்தையும் ஆகாஸ் ராஜா அவனுக்குக் கட்டளையிட்டபடி செய்தான்.

17 மேலும் ஆகாஸ் ராஜா வண்டிகளில் உள்ள சவுக்குகளை (பீடங்களை) அறுத்தான். அவற்றின் மேலுள்ள கொப்பறைகளை எடுத்தான். வெண்கலக் காளைகளின் மேலிருந்த பெரிய (கடல்) தொட்டியை இறக்கி கற்களின் தள வரிசையில் வைத்தான். 18 ஆலயத்தின் உள்ளே கட்டப்பட்டிருந்த ஓய்வுநாள் (மண்டபத்தை) ஆகாஸ் நீக்கினான். மேலும் ராஜா பிரவேசிக்கும் மண்டபத்தையும் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து நீக்கினான். இவை அனைத்தையும் ஆலயத்திலிருந்து நீக்கி ராஜா அவற்றை அசீரியரின் ராஜாவுக்குக் கொடுத்தான்.

19 ஆகாஸ் செய்த மற்ற அருஞ்செயல்கள் அனைத்தும் யூத ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. 20 ஆகாஸ் மரித்ததும் தாவீது நகரத்திலே தனது முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப் பிறகு அவனது குமாரனான எசேக்கியா புதிய ராஜா ஆனான்.

இஸ்ரவேலை ஓசெயா ஆளத்தொடங்கியது

17 யூதாவின் ராஜாவாகிய ஆகாசின் 12ஆம் ஆட்சியாண்டில் ஏலாவின் குமாரனாகிய ஓசெயா என்பவன் இஸ்ரவேலின் ராஜாவானான். இவன் ஒன்பது ஆண்டுகள் சமாரியாவில் இருந்து இஸ்ரவேலை அரசாண்டான். கர்த்தரால் தவறு என்று குறிப்பிடப்பட்ட காரியங்களையே ஓசெயா செய்துவந்தான். ஆனால் இவன் இதற்கு முன் இஸ்ரவேலை ஆண்ட ராஜாக்களைப் போன்று அவ்வளவு கெட்டவனாக இல்லை.

அசீரியாவின் ராஜாவாகிய சல்மனாசார் என்பவன் இவனுக்கு எதிராகப் போர்செய்ய வந்தான். ஓசெயா சல்மனாசாரின் சேவகன் ஆகி அவனுக்கு வரி செலுத்தி வந்தான்.

ஆனால், பிறகு ஓசெயா தனக்கு எதிராகச் சதி செய்வதை அசீரியா ராஜா அறிந்துகொண்டான். ஓசெயா எகிப்து ராஜாவுக்குத் தூதுவர்களை அனுப்பியிருந்தான். எகிப்து ராஜாவின் பெயர் சோ ஆகும். அந்த ஆண்டில், முன்னைய ஆண்டுகளை போன்று ஓசெயா சல்மனாசாருக்கு வரி செலுத்தவில்லை. அதனால் சல்மனாசார் ஓசெயாவைப் பிடித்து சிறையில்போட்டான்.

பிறகு அசீரிய ராஜா இஸ்ரவேல் முழுவதும் பயணம் செய்தான். அவன் சமாரியாவிற்கு வந்தான். அவன் அதனை மூன்று ஆண்டுகள் முற்றுகையிட்டான். இஸ்ரவேலின் ராஜாவாகிய ஓசெயாவின் ஒன்பதாவது ஆட்சியாண்டில் அசீரிய ராஜா சமாரியாவைப் பிடித்தான். இஸ்ரவேலர்களைச் சிறை பிடித்து அசீரியாவுக்குக் கொண்டு போனான். அவன் அவர்களை கோசான் ஆற்று ஓரமான ஆலாகிலும் ஆபோரிலும் மேதியரின் நகரங்களிலும் குடிவைத்தான்.

இஸ்ரவேலர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்ததால் அவர்களுக்கு இவ்வாறு நடந்தது. கர்த்தர் தாமே இஸ்ரவேலர்களை எகிப்தின் பார்வோனிடமிருந்து மீட்டு வெளியே கொண்டு வந்தார்! ஆனால் அவர்கள் வேறு தெய்வங்களை தொழுதுகொள்ள ஆரம்பித்தனர். அவர்களுக்கு முன்பு (அந்நிலப்பகுதியில்) அங்கிருந்து கர்த்தர் துரத்தியிருந்த நாட்டினரின் பழக்கங்களை அவர்கள் பின்பற்றினார்கள். அவர்களும் தங்கள் ராஜாக்கள் செய்து கொண்டிருந்தவற்றையே (தீமை) செய்தனர். இஸ்ரவேலர்கள் இரகசியமாக தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு எதிராகக் காரியங்களைச் செய்தனர். அந்தக் காரியங்கள் தவறாயின.

இஸ்ரவேலர்கள் தங்களது சிறிய நகரங்கள் முதல் பெரிய கோட்டையமைந்த நகரங்கள் வரை அவர்களின் எல்லா நகரங்களிலும் மேடைகளை பொய்த் தெய்வங்களின் ஆலயங்களைக் கட்டினார்கள். 10 இவர்கள் ஞாபகக் கற்களையும் அசெரியா தூண்களையும் ஒவ்வொரு மலையின் உச்சியிலும் ஒவ்வொரு பச்சைமரத்தடிகளிலும் உருவாக்கினார்கள். 11 இஸ்ரவேலர்கள் அங்கு நறுமணப் பொருட்களை எரித்து தொழுதுகொண்டனர். ஏற்கெனவே கர்த்தரால் அந்நாட்டைவிட்டு வெளியே துரத்தப்பட்ட நாட்டினரைப்போன்றே இவர்களும் செய்து வந்தனர். இஸ்ரவேலர்கள் தீயச் செயல்களைச் செய்துக்கொண்டிருந்தனர். அது கர்த்தரைக் கோபங்கொள்ள செய்தது. 12 கர்த்தர், “நீங்கள் இதனைச் செய்யக்கூடாது” என்று ஏற்கெனவே சொல்லியிருந்தாலும் அவர்கள் விக்கிரகங்களுக்கு சேவைச் செய்தனர்.

13 இஸ்ரவேலர்களையும் யூத ஜனங்களையும் ஒவ்வொரு தீர்க்கதரிசிகள் மூலமும் ஞானதிருஷ்டிக்காரர்கள் மூலமும் கர்த்தர் எச்சரித்து வந்தார். கர்த்தர், “நீங்கள் செய்யும் கெட்ட செயல்களில் இருந்து திரும்புங்கள். எனது கட்டளைகளுக்கும் சட்டங்களுக்கும் கீழ்ப்படியுங்கள். உங்கள் முற்பிதாக்களுக்கு நான் கொடுத்த சட்டங்களைப் பின்பற்றுங்கள். இச்சட்டங்களை நான் உங்களுக்கு எனது ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகள் மூலம் கொடுத்து வந்தேன்” என்றார்.

14 ஆனால் ஜனங்கள் அதனைக் கவனிக்கவில்லை. அவர்கள் தம் முற்பிதாக்களைப் போலவே பிடிவாதமுள்ளவர்களாய் இருந்தனர். அவர்களின் முற்பிதாக்களும் தமது தேவனாகிய கர்த்தரை நம்பவில்லை. 15 ஜனங்கள் கர்த்தருடைய சட்டங்களை மறுத்தனர். தமது முற்பிதாக்களோடு கர்த்தர் செய்து கொண்ட உடன்படிக்கையும் மறுத்தனர். கர்த்தருடைய எச்சரிக்கைகளையும் அவர்கள் கவனிக்க மறுத்தனர். அவர்கள் பயனற்ற விக்கிரகங்களை தொழுதுக் கொண்டு பயனற்றுப்போனார்கள். அவர்கள் தம்மைச் சுற்றியுள்ள ஜனங்களைப் போன்று வாழ்ந்தனர். ஆனால் அது கர்த்தரால் விலக்கப்பட்ட வாழ்க்கையாய் இருந்தது.

16 ஜனங்கள் அவர்களது தேவனாகிய கர்த்தருடைய கற்பனைகளைப் பின்பற்றுவதை நிறுத்தினார்கள். அவர்கள் இரண்டு பொற்கன்றுக்குட்டிகளையும் உருவத் தூண்களை நாட்டி வானத்தில் உள்ள நட்சத்திரங்களையெல்லாம் தொழுதுகொண்டனர். பாகாலுக்கு சேவை செய்தனர். 17 நெருப்பில் தங்கள் குமாரர்களையும் குமாரத்திகளையும் அவர்கள் பலியாகக் கொடுத்தனர். எதிர்காலத்தை அறிந்துக் கொள்ள மந்திரங்களையும் சூனியங்களையும் பயன்படுத்தினார்கள். பாவம் என்று கர்த்தர் சொன்னவற்றுக்கு அவர்கள் தம்மைத்தாமே பலியாக்கிக்கொண்டு கர்த்தருடைய கோபத்துக்கு ஆளானார்கள். 18 எனவே இஸ்ரவேலில் கர்த்தர் மிகவும் கோபங்கொண்டு அவர்களைத் தம் பார்வையிலிருந்து அப்புறப்படுத்தினார். யூதாவின் கோத்திரத்தைத் தவிர, வேறு எந்த இஸ்ரவேலர்களையும் கர்த்தர் அங்கு விட்டுவைக்கவில்லை.

யூத ஜனங்களும் குற்றவாளியானது

19 யூத ஜனங்களும் கூட தங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவில்லை. அவர்களும் இஸ்ரவேல் ஜனங்களைப் போலவே வாழ்ந்தனர்.

20 இஸ்ரவேலின் வழிவந்தவர்கள் அனைவரையும் கர்த்தர் விலக்கினார். அவர்களுக்கு நிறைய துன்பங்களைக் கொடுத்தார். அவர்களது எதிரிகளால் அவர்களை அழியவிட்டார். இறுதியில், தமது பார்வையில் இருந்து தூர விலக்கினார். 21 கர்த்தர் இஸ்ரவேலை தாவீதின் (வீட்டைவிட்டுப்) குடும்பத்தை விட்டுப் பிரித்தார், நேபாத்தின் குமாரனான யெரொபெயாமை இஸ்ரவேலருக்கு ராஜாவாக்கினர். அப்போது அவன் இஸ்ரவேலரைக் கர்த்தரை விட்டு விலகவும் பெரும்பாவங்கள் செய்யவும் வைத்துவிட்டான். 22 எனவே இஸ்ரவேலர் யெரொபெயாமின் பாவங்களைப் பின்பற்றினார்கள். அப்பாவங்களைச் செய்துகொண்டிருக்காதபடி 23 தம்மை கர்த்தர் தமது பார்வையிலிருந்து அவர்களை விலக்கும்வரை தடுத்துக்கொள்ளவில்லை. ஏற்கெனவே இவ்வாறு நடக்கும் என்று கர்த்தர் கூறியிருந்தார். இதனைத் தனது தீர்க்கதரிசிகள் மூலம் சொல்லி வந்தார். எனவே, இஸ்ரவேலர்கள் தங்கள் நாட்டிலிருந்து அசீரியாவிற்குக் கொண்டு செல்லப்பட்டனர். இன்றுவரை அங்கேயே இருக்கின்றனர்.

சமாரியர்களின் தொடக்கம்

24 அசீரியாவின் ராஜா இஸ்ரவேலரை சமாரியாவிலிருந்து வெளியேற்றினான். பிறகு அவன் பாபிலோன், கூத்தா, ஆபா, ஆமாத், செப்பர்வாயிமிலும் ஆகிய நாடுகளிலிருந்து ஜனங்களை அங்கே குடியேற்றினான். அவர்கள் சமாரியாவிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் வாழ்ந்தனர். 25 அவர்கள் சமாரியாவில் வாழத்தொடங்கியபோது, கர்த்தரை உயர்வாக மதிக்கவில்லை. எனவே, கர்த்தர் சிங்கங்களை அனுப்பி அவர்களைத் தாக்கினார். அவர்களில் சிலரை அச்சிங்கங்கள் கொன்றுபோட்டன. 26 சிலர் அசீரியாவின் ராஜாவிடம், “நீங்கள் வெளியிடங்களில் இருந்து கொண்டுவந்து சமாரியாவில் குடியேற்றிய ஜனங்கள் அந்நாட்டு தெய்வத்தின் சட்டங்களைத் தெரிந்துகொள்ளவில்லை. அதனால் அந்த தெய்வம் அவர்களைக் தாக்க சிங்கங்களை அனுப்புகிறார். அவை அந்நாட்டு தெய்வத்தின் சட்டங்களை அறியாதவர்களைக் கொன்றுபோடுகிறது” என்றார்கள்.

27 அதற்கு அசீரியாவின் ராஜா, “நீங்கள் சமாரியாவிலிருந்து சில ஆசாரியர்களை அழைத்து வந்தீர்கள் அல்லவா. சமாரியாவுக்கு நான் கைப்பற்றி வந்த ஆசாரியர்களில் ஒருவனைத் திருப்பியனுப்பி அவனை அங்கே வாழும்படி விடுங்கள், பிறகு அவன் ஜனங்களுக்கு அந்நாட்டின் தெய்வத்தின் சட்டங்களைக் கற்றுத்தருவான்” என்றான்.

28 எனவே அவ்வாறே சமாரியாவிலிருந்து அழைத்துப்போயிருந்த ஆசாரியர்களில் ஒருவனை பெத்தேல் என்னும் இடத்தில் வாழவைத்தனர். அவன் கர்த்தரை எவ்வாறு கனப்படுத்துவது என்று ஜனங்களுக்குக் கற்றுத்தந்தான்.

29 ஆனால் அந்தந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் தங்கள் தெய்வங்களை உருவாக்கினார்கள். அவற்றை அவர்கள் குடியேறிய நகரங்களில் சமாரியர் உருவாக்கிய மேடைகளின் கோவில்களில் வைத்தனர். 30 பாபிலோனிய ஜனங்கள் சுக்கோத் பெனோத் என்னும் பொய்த் தெய்வத்தையும், கூத்தின் ஜனங்கள் நேர்கால் என்னும் பொய்த் தெய்வத்தையும், ஆமாத்தின் ஜனங்கள் அசிமா என்னும் பொய்த் தெய்வத்தையும், 31 ஆவியர்கள் நிபேகாஸ், தர்தாக் என்னும் பொய்த் தெய்வங்களையும் உண்டாக்கினார்கள். செப்பர்வியர் செப்பர்வாயிமின் தெய்வங்களாகிய அத்ரமலேக்குக்கும் அன்னமலேக்குக்கும் தங்கள் பிள்ளைகளை நெருப்பில் தகன பலி கொடுத்துவந்தனர்.

32 அவர்கள் கர்த்தருக்கும் ஆராதனைச் செய்தார்கள். அவர்கள் பொய்த் தெய்வங்களுக்கு அவர்களுக்குள் ஆசாரியர்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். இந்த ஆசாரியர்கள் ஜனங்களுக்காக அவ்வாலயங்களில் பலிகொடுத்து வந்தனர். 33 அவர்கள் கர்த்தரை மதித்தார்கள். அதே சமயத்தில தமக்குச் சொந்தமான பொய்த் தெய்வங்களையும் சேவித்தார்கள். தம் சொந்த நாடுகளில் வழிபட்டு வந்த விதத்திலே தம் சொந்தத் தெய்வங்களை அங்கும் சேவித்து வந்தனர்.

34 இன்றும் அவர்கள் முன்பு போலவே வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் கர்த்தரை கனப்படுத்துவதில்லை. அவர்கள் இஸ்ரவேலர்களின் விதிகளுக்கும் கற்பனைகளுக்கும் அடிபணிவதில்லை. இஸ்ரவேல் என்று பெயரிட்ட யாக்கோபுவின் ஜனங்களுக்குக் கற்பித்த சட்டத்திற்கும் கற்பனைகளுக்கும் அடிபணிவதில்லை. 35 இஸ்ரவேல் ஜனங்களோடு கர்த்தர் ஒரு உடன்படிக்கைச் செய்து கொண்டார். அவர் அவர்களிடம், “நீங்கள் அந்நிய தெய்வங்களை மதிக்கக் கூடாது. அதோடு அவற்றைத் தொழுதுகொள்ளவோ, அவற்றுக்கு சேவைசெய்யவோ பலிகள் செலுத்தவோ கூடாது, 36 ஆனால் நீங்கள் கர்த்தரைப் பின்பற்ற வேண்டும். தேவனாகிய கர்த்தரே உங்களை எகிப்திலிருந்து மீட்டார். உங்களைக் காப்பாற்ற கர்த்தர் தனது பெரிய வல்லமையைப் பயன்படுத்தினார். நீங்கள் கர்த்தரைத் தொழுதுகொண்டு அவருக்குப் பலிகள் தரவேண்டும். 37 நீங்கள் அவர் உங்களுக்காக எழுதிய விதிகளுக்கும், சட்டங்களுக்கும், போதனைகளுக்கும், கட்டளைகளுக்கும் அடிபணிய வேண்டும். எப்பொழுதும் இவற்றுக்கு அடிபணியவேண்டும். வேறு தெய்வங்களை மதிக்கக் கூடாது. 38 நான் உங்களோடு செய்த உடன்படிக்கையை மறக்கக்கூடாது. நீங்கள் பிற தெய்வங்களை மதிக்கக்கூடாது. 39 உங்கள் தேவனாகிய கர்த்தரை மட்டுமே நீங்கள் மதிக்க வேண்டும்! பிறகு அவர் உங்கள் பகைவர்களிடமிருந்து உங்களைக் காப்பாற்றுவார்” என்றார்.

40 ஆனால் இஸ்ரவேலர்கள் இதற்கு செவிசாய்க்கவில்லை. அவர்கள் அதற்கு முன்னால் செய்தவற்றையே மீண்டும் தொடர்ந்து செய்து வந்தனர். 41 எனவே, இப்போது வேறு நாட்டினர் கர்த்தரை மதிப்பதோடு தங்கள் தெய்வங்களையும் சேவித்து வருகின்றனர். அவர்களின் பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் இதனை தங்கள் முற்பிதாக்கள் செய்ததுபோலவே தொடர்ந்து இன்றுவரையிலும் கூட செய்து வருகின்றனர்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center