Print Page Options
Previous Prev Day Next DayNext

Chronological

Read the Bible in the chronological order in which its stories and events occurred.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
ஏசாயா 5-8

இஸ்ரவேல் தேவனுடைய விசேஷமான தோட்டம்

இப்பொழுது, நான் எனது நண்பருக்காக (தேவன்) ஒரு பாடல் பாடுவேன். இப்பாடல் என் நண்பர் திராட்சைத் தோட்டத்தின் (இஸ்ரவேல்) மேல் வைத்த அன்பைப்பற்றியது.

எனது நண்பருக்கு வளமான வெளியில் ஒரு திராட்சைத் தோட்டம் இருந்தது.
எனது நண்பர் அதனைச் சுத்தப்படுத்தினார்.
    அதில் சிறந்த திராட்சைக் கொடிகளை நட்டார்.
அதன் நடுவில் ஒரு கோபுரம் அமைத்தார். அதில் நல்ல திராட்சை வளரும் என்று நம்பினார்
    ஆனால் அதில் கெட்ட திராட்சைகளே இருந்தன.
எனவே தேவன் சொன்னார், “எருசலேமில் வாழும் ஜனங்களே யூதாவில் உள்ள மனிதர்களே
    என்னையும் என் திராட்சைத் தோட்டத்தையும் எண்ணிப் பாருங்கள்.
எனது திராட்சைத் தோட்டத்திற்காக நான் இன்னும் என்ன செய்ய முடியும்?
    என்னால் முடிந்தவற்றை நான் செய்துவிட்டேன்.
நல்ல திராட்சை வளரும் என்று நம்பினேன்.
    ஆனால் கெட்ட திராட்சைகளே உள்ளன. ஏன் இவ்வாறு ஆயிற்று?
இப்பொழுது, எனது திராட்சைத் தோட்டத்தில் என்ன செய்யப்போகிறேன் என்று சொல்வேன்.
    நான் முட்புதர்களை விலக்குவேன். அவை வயலைக் காக்கின்றன. அவற்றை எரித்துப்போடுவேன்.
கற்சுவர்களை இடித்துப்போடுவேன்.
    அது மிதியுண்டு போகும்.
என் திராட்சைத் தோட்டத்தை காலியாக வைப்பேன்.
    எவரும் கொடிகளைப்பற்றி கவலைப்படமாட்டார்கள். எவரும் தோட்டத்தில் வேலை செய்யமாட்டார்கள். முட்களும், புதர்களும் வளரும்.
தோட்டத்தில் மழைபொழியவேண்டாம் என்று
    நான் மேகங்களுக்குக் கட்டளை இடுவேன்.”

சர்வ வல்லமையுள்ள கர்த்தருக்கான திராட்சைத் தோட்டம் என்பது இஸ்ரவேல் நாட்டைக் குறிக்கும். கர்த்தருடைய மனமகிழ்ச்சியின் செடியானது யூதாவின் ஜனங்களே.

கர்த்தர் நியாயத்துக்குக் காத்திருந்தார்.
    ஆனால் கொலைகளே நடைபெற்றன.
கர்த்தர் நீதிக்காகக் காத்திருந்தார்.
    ஆனால் அழுகைகளே இருந்தன. மோசமாக நடத்தப்பட்வர்கள் முறையிட்டார்கள்.

ஜனங்களாகிய நீங்கள் மிக நெருங்கி வாழ்கிறீர்கள். வேறு எவருக்கும் இடமில்லாதபடி உங்கள் வீடுகளை கட்டுங்கள். ஆனால் கர்த்தர் உங்களைத் தண்டிப்பார். உங்களைத் தனித்து வாழும்படி செய்வார். முழு நாட்டில் நீங்கள் மட்டும் தனியாக வாழுவீர்கள்!

சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இதை என்னிடம் சொன்னார். அவர் அவரிடம், “இப்பொழுது ஏராளமான வீடுகள் உள்ளன. உறுதியாகச் சொல்கிறேன், எல்லா வீடுகளும் அழிக்கப்படும். இப்பொழுது அழகான பெரிய வீடுகள் உள்ளன. ஆனால் அவை காலியாகிப்போகும். 10 அப்போது, பத்து ஏக்கர் அளவுள்ள பெரிய திராட்சைத் தோட்டம் குறைந்த திராட்சை ரசத்தை தரும். பல மூட்டை நிறைந்த விதைகள் சிறிய அளவு தானியங்களையே விளைவிக்கும்.”

11 ஜனங்களாகிய நீங்கள் அதிகாலையில் எழுந்து, மதுபானம் குடிக்கப்போகிறீர்கள். இரவு நெடுநேரம் தூங்காமல் மதுவைக் குடித்து களிக்கிறீர்கள். 12 நீங்கள் மது, சுரமணடலம், தம்புரு, மேளம், நாகசுரம் போன்றவற்றோடு விருந்து கொண்டாடுகிறீர்கள். கர்த்தர் செய்த செயல்களை நீங்கள் பார்ப்பதில்லை. கர்த்தருடைய கைகள் பலவற்றைச் செய்துள்ளன. ஆனால் நீங்கள் அவற்றைக் கவனிக்கவில்லை. அதனால், இவை உங்களுக்குக் கேடு தரும்.

13 கர்த்தர், “என் ஜனங்கள் சிறை பிடிக்கப்பட்டு வெளியேற்றப்படுவார்கள்.” ஏனென்றால், அவர்கள் என்னை உண்மையில் அறிந்துகொள்ளவில்லை. இஸ்ரவேலில் வாழ்கின்ற சிலர் இப்பொழுது முக்கியமானவர்களாக உள்ளனர். அவர்கள் தம் எளிமையான வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் தாகத்தாலும், பசியாலும் துன்பமடைவார்கள்.

14 பிறகு அவர்கள் மரித்து கல்லறைக்குப்போவார்கள். பாதாளம் மேலும், மேலும் ஜனங்களைப் பெறும். அது அளவில்லாமல் தன் வாயைத் திறந்து வைத்திருக்கும். அனைவரும் பாதாளத்துக்குப்போவார்கள் என்றார்.

15 ஜனங்கள் பணிவுள்ளவர்களாக இருப்பார்கள். அப்பெரியவர்கள் தலை தரையை பார்த்தவாறு, தலை குனிந்து வணங்குவார்கள்.

16 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் நீதி வழங்குவார். ஜனங்கள் அவரை உயர்வானவர் என்று அறிந்துகொள்வார்கள். பரிசுத்தமான தேவன் சரியானவற்றை மட்டுமே செய்வார். ஜனங்கள் அவருக்கு மரியாதை செய்வார்கள். 17 தேவன், இஸ்ரவேல் ஜனங்களைத் தம் நாட்டை விட்டு போகும்படி செய்வார். நாடு காலியாக இருக்கும். ஆடுகள் தாம் விரும்பிய இடத்துக்குப்போகும். செல்வந்தர்கள் ஒருகாலத்தில் வைத்திருந்த நிலங்களில் பரதேசிகள் நடந்து திரிவார்கள்.

18 அந்த ஜனங்களைப் பாருங்கள்! அவர்கள் தம் குற்றங்களையும் பாவங்களையும் வண்டிகளைக் கயிறு கட்டி இழுத்துச் செல்வதுபோன்று இழுத்துத் செல்கிறார்கள். 19 அந்த ஜனங்கள், “தேவன் சீக்கிரமாய் செயல் புரிய விரும்புகிறோம். அவர் திட்டமிட்டபடி செய்துமுடிக்கட்டும். பிறகு, அவை நிறைவேறவேண்டும் என்று எங்களுக்குத் தெரியும். கர்த்தருடைய விருப்பம் விரைவில் நிறைவேறும் என்று விரும்புகிறோம். பின்னரே அவரது திட்டம் என்னவென்று எங்களுக்குத் தெரியும்” என்றார்கள்.

20 அந்த ஜனங்கள், நல்லதைக் கெட்டதென்றும் கெட்டதை நல்லது என்றும் கூறுகிறார்கள். அவர்கள் இருளை வெளிச்சம் என்றும் வெளிச்சத்தை இருள் என்றும் நினைக்கிறார்கள். அவர்கள் இனிப்பைக் கசப்பு என்றும் கசப்பை இனிப்பு என்றும் எண்ணுகிறார்கள். 21 அந்த ஜனங்கள் தங்களை ஞானிகள் என்றும் நினைக்கிறார்கள். அவர்கள் தங்களை மிகவும் புத்திசாலிகள் என்று நினைக்கிறார்கள். 22 அவர்கள் மது குடிப்பதிலே புகழ் பெற்றவர்கள். அவர்கள் குடிவகைகளைக் கலப்பதில் பராக்கிரமசாலிகள். 23 நீங்கள் அவர்களுக்கு இலஞ்சம் கொடுத்தால், அவர்கள் குற்றவாளிகளை விடுவிப்பார்கள். ஆனால் அவர்கள் நல்லவர்களுக்கு நியாயமாக நீதி வழங்கமாட்டார்கள். 24 அவர்கள் அனைவருக்கும் கேடு ஏற்படும். அவர்களின் சந்ததி முழுமையாக அழிக்கப்படும். அவர்கள் காய்ந்த புல் நெருப்பில் எரிவதுபோன்று அழிவார்கள். அவர்களின் சந்ததி வேர் வாடி, தூசியைப்போல் பறந்துபோகும். அவர்கள் நெருப்பில் எரியும் பூக்களைப்போன்று எரிந்து, காற்றில் சாம்பல் பறப்பது போன்று ஆவார்கள்.

சர்வ வல்லமையுள்ள கர்த்தருடைய போதனைகளுக்கு அடிபணிய அவர்கள் மறுத்துவிட்டனர். இஸ்ரவேலரின் பரிசுத்தமான தேவனிடமிருந்து வரும் செய்தியை அவர்கள் வெறுத்தனர்.

25 எனவே இந்த ஜனங்கள் மீது கர்த்தர் மிகுந்த கோபமாயிருக்கிறார். கர்த்தர் தன் கையை உயர்த்தி அவர்களைத் தண்டிப்பார். மலைகள் கூட அவருக்குப் பயப்படும். மரித்துப்போன உடல்கள் தெருக்களில் குப்பைபோன்று குவியும். ஆனாலும் தேவன் மேலும் கோபமாக இருப்பார். அவரது கை மேலும் உயர்ந்து அவர்களைத் தண்டிக்கும்.

இஸ்ரவேலர்களைத் தண்டிக்க தேவன் படைகளைக் கொண்டுவருவார்

26 பாருங்கள்! தேவன் தூர நாடுகளுக்கு ஒரு அடையாளம் காட்டிவிட்டார். தேவன் ஒரு கொடியை உயர்த்திவிட்டார். அவர் அவர்களைச் சத்தமிட்டு அழைப்பார். அவர்கள் தூர நாடுகளில் இருந்து வந்துகொண்டிருப்பார்கள். அவர்கள் விரைவில் நாட்டுக்குள் நுழைவார்கள். அவர்கள் வேகமாக நகருவார்கள். 27 பகைவர்கள் எப்பொழுதும் சோர்ந்து விழுவதில்லை. அவர்கள் தூக்கம் வந்து தூங்குவது இல்லை. அவர்களின் ஆயுதக் கச்சைகள் எப்போதும் தயாராக இருக்கும். அவர்களது பாதரட்சைகளின் கயிறுகள் அவிழ்வது இல்லை. 28 பகைவரின் அம்புகள் கூர்மையானதாக இருக்கும். அவர்களது வில்லுகள் எய்யத் தயாராக இருக்கும். குதிரைகளின் குளம்புகள் பாறையைப்போன்று கடுமையாக இருக்கும். அவர்களின் இரதங்களுக்குப் பின்னே புழுதி மேகங்கள் எழும்பும்.

29 பகைவர்கள் சத்தமிடுவார்கள். அச்சத்தம் சிங்கம் கெர்ச்சிப்பதுபோல் இருக்கும். அது இளஞ் சிங்கத்தின் சத்தம்போல் இருக்கும். பகைவர்கள் தமக்கு எதிராகச் சண்டையிடுபவர்களை பிடித்துக்கொள்வார்கள். ஜனங்கள் போராடி தப்ப முயற்சி செய்வார்கள். ஆனால் அவர்களைக் காப்பாற்ற யாரும் இல்லை. 30 ஆகவே, “சிங்கங்களின்” சத்தமானது கடலலைகளின் இரைச்சல் போல் கேட்கும். கைப்பற்றப்பட்ட ஜனங்கள் தரையைப் பார்ப்பார்கள். அதில் இருள் மட்டுமே இருக்கும். கெட்டியான மேகத்தால் வெளிச்சம் கூட இருட்டாகிவிடும்.

தேவன் ஏசாயாவைத் தீர்க்கதரிசியின் ஊழியத்திற்கு அழைக்கிறார்

உசியா ராஜா மரித்த ஆண்டிலே, நான் எனது ஆண்டவரைப் பார்த்தேன். அவர் மிகவும் உயரமான ஆச்சரியகரமான சிங்காசனத்தின் மேல் அமர்ந்திருந்தார். அவரது நீண்ட அங்கியானது ஆலயத்தை நிறைத்தது.

சேராபீன்கள்[a] கர்த்தரைச் சுற்றி நின்றார்கள். ஒவ்வொரு சேராபீனுக்கும் ஆறு சிறகுகள் இருந்தன. அவர்கள் இரு சிறகுகளால் தங்கள் முகத்தை மூடிக்கொண்டனர். இன்னும் இரு சிறகுகளால் தம் பாதங்களை மூடிக்கொண்டனர். அவர்கள் இரண்டு சிறகுகளைப் பறப்பதற்குப் பயன்படுத்தினார்கள். ஒருவரை ஒருவர் அழைத்து, அவர்கள்: “பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், சர்வ வல்லமையுள்ள கர்த்தர் மகா பரிசுத்தமானவர். அவரது மகிமை பூமியை நிரப்பியது” என்றனர். அவர்களின் சத்தம் மிகவும் பலமாக இருந்தது. அவர்களின் சத்தம் கதவின் நிலைகளை அசையப்பண்ணிற்று. பிறகு ஆலயமானது புகையால் நிரம்பியது.

நான் மிகவும் பயந்துவிட்டேன், நான்: “ஓ! நான் அழிக்கப்படுவேன். நான் தேவனோடு பேசுகிற அளவிற்கு பரிசுத்தமானவன் இல்லை. என்னைச் சுற்றி இருப்பவர்களும் தேவனோடு பேசுகிற அளவிற்கு பரிசுத்தமானவர்கள் இல்லை. எனினும், நான் சர்வ வல்லமையுள்ள கர்த்தராகிய நமது அரசரைப் பார்த்தேன்” என்றேன்.

பலிபீடத்தின்மேல் நெருப்பு இருந்தது. ஒரு சேராபீன் பலிபீடத்திலிருந்து தன் கையிலே பிடித்த குறட்டால் ஒரு நெருப்புத் தழலை எடுத்தான். அவன் என்னிடத்தில் நெருப்புத்தழலோடு பறந்து வந்தான். அந்த தனது நெருப்புத் தழலால் என் வாயைத் தொட்டான். பிறகு அவன், “பார் இது உன் உதடுகளைத் தொட்டதால் உன் தீய செயல்கள் எல்லாம் மறைந்தன. உனது பாவங்கள் துடைக்கப்பட்டன” என்றான்.

பிறகு நான் என் கர்த்தருடைய சத்தத்தைக் கேட்டேன். கர்த்தர், “நான் யாரை அனுப்புவேன்? நமக்காக யார் போவார்?” என்று சொன்னார்.

எனவே நான், “நான் இருக்கிறேன், என்னை அனுப்பும்” என்றேன்.

பிறகு கர்த்தர் சொன்னார்: “போ, இதனை ஜனங்களிடம் சொல்: ‘கவனமாகக் கேளுங்கள்! ஆனால் புரிந்துகொள்ளாமல் இருங்கள்! கவனமாகப் பாருங்கள். ஆனால் அறிந்துகொள்ளாமல் இருங்கள்!’ 10 ஜனங்களைக் குழப்பமடைய செய். ஜனங்கள் தாங்கள் கேட்பவற்றையும் காண்பவற்றையும் புரிந்துகொள்ளாதபடிக்குச் செய். நீ அவ்வாறு செய்யாவிட்டால், ஜனங்கள் தங்கள் காதால் கேட்பவற்றையும் புரிந்துகொள்வார்கள். அவர்கள் மனதில் உண்மையை உணர்ந்து கொள்வார்கள். இவற்றை அவர்கள் செய்தால், பிறகு அந்த ஜனங்கள் என்னிடம் திரும்பி வந்து குணமாவார்கள்” என்றார்.

11 பிறகு நான், “ஆண்டவரே, நான் எவ்வளவு காலம் இதனைச் செய்ய வேண்டும்?” எனக் கேட்டேன்.

அதற்கு கர்த்தர், “நகரங்கள் அழிந்துபோகும்வரை இதனைச் செய். ஜனங்கள் போகும்வரை செய். வீடுகளில் எவரும் வாழாத நிலைவரும்வரை செய். பூமி அழிந்து காலியாகும்வரை செய்”, என்றார்.

12 கர்த்தர் அந்த ஜனங்களை வெகு தூரத்திற்குப்போகச்செய்வார். நாட்டில் காலியான இடங்கள் அதிகமாக இருக்கும். 13 ஆனால் பத்தில் ஒரு பாகமான ஜனங்கள் மட்டும் இந்நாட்டில் வாழ அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் அழிக்கப்படமாட்டார்கள். ஏனென்றால், அவர்கள் கர்த்தரிடம் திரும்பி வருவார்கள். இவர்கள் கர்வாலிமரம் போன்றவர்கள். இது வெட்டுண்டு போனபிறகு அடிமரம் மட்டும் நிற்கும் இந்த அடிமரம் (மீதியான ஜனங்கள்) மகா விசேஷித்த ஒரு வித்தாக இருக்கும்.

ஆராமுக்கு ஏற்பட்ட தொல்லைகள்

ஆகாஸ் யோதாமின் குமாரன், யோதாம் உசியாவின் குமாரன், ரேத்சீன் ஆராமின் ராஜா. ரெமலியாவின் குமாரனான பெக்கா இஸ்ரவேலின் ராஜா. ஆகாஸ் யூதாவின் ராஜாவாக இருந்த காலத்திலே, ரேத்சீனும் பெக்காவும் எருசலேமிற்குப்போய் அதற்கு எதிராகச் சண்டையிட்டனர். ஆனால் அவர்களால் அந்நகரத்தைத் தோற்கடிக்க முடியவில்லை.

“ஆராமின் படையும் இஸ்ரவேலின் படையும் சேர்ந்துகொண்டு அவை இரண்டும் போருக்கு வந்துள்ளன” என்ற செய்தி தாவீதின் குடும்பத்திற்குச் சொல்லப்பட்டது.

ஆகாஸ் ராஜா இதனைக் கேள்விப்பட்டதும், அவனும் ஜனங்களும் மிகவும் பயந்தனர். அவர்கள் புயல் காற்றில் அகப்பட்ட மரங்களைப்போன்று நடுங்கினார்கள்.

பிறகு கர்த்தர் ஏசாயாவிடம், நீயும் உனது குமாரனான சேயார் யாசூபும் வெளியே போய் ஆகாசிடம் பேசுங்கள். மேல் குளத்தில் தண்ணீர் பாய்கிற இடத்துக்குப்போங்கள். இது வண்ணார நிலத்துக்குப்போகும் தெரு.

“ஆகாசிடம், ‘எச்சரிக்கையாக இரு, ஆனால் அமைதியாக இரு. அஞ்சாதே, ரேத்சீனையும் ரெமலியாவின் குமாரனையும் உனக்கு அச்சம் ஏற்படுத்தும்படிவிடாதே! அவர்கள் இருவரும் இரண்டு எரிந்த கட்டைகளைப்போன்றவர்கள். முன்பு எரிந்தார்கள். இப்போது அவர்கள் வெறுமனே புகைகிறார்கள். ரேத்சீன், ஆராம், ரெமலியாவின் குமாரன் ஆகிய அனைவரும் கோபமாக இருக்கிறார்கள். அவர்கள் உனக்கு எதிராகத் திட்டம் தீட்டினார்கள். அவர்கள்: “நாம் போய் யூதாவிற்கு எதிராகச் சண்டையிடுவோம். நாம் யூதாவை நமக்காகப் பங்கிட்டுக்கொள்வோம். நாம் தாபேயாலின் குமாரனை யூதாவின் புதிய ராஜாவாக்குவோம் என்றனர்.”’”

எனது கர்த்தராகிய ஆண்டவர், “அவர்களின் திட்டம் வெற்றி பெறாது. அது நிறைவேறாது. தமஸ்குவின் ராஜாவாக ரேத்சீன் இருக்கும்வரை இது நடக்காது. எப்பிராயீம் (இஸ்ரவேல்) இப்போது ஒரு தேசம். ஆனால் எதிர்காலத்தில் 65 ஆண்டுகளுக்குப் பிறகு இது ஒரு நாடாக இருக்காது. சமாரியா எப்பீராயீமின் (இஸ்ரவேலின்) தலைநகரமாக இருக்கும்வரை இது நடக்காது. ரெமலியாவின் குமாரன் சமாரியாவின் ராஜாவாக இருக்கும் அவர்களின் திட்டம் நிறைவேறாது. நீங்கள் இந்தச் செய்தியை நம்பாவிட்டால் பிறகு ஜனங்கள் உன்னை நம்பமாட்டார்கள்” என்றார்.

இம்மானுவேல், தேவன் நம்மோடு இருக்கிறார்.

10 பிறகு கர்த்தர் தொடர்ந்து ஆகாசோடு பேசினார். 11 கர்த்தர், “இவையெல்லாம் உண்மை என்று உங்களுக்கு நிரூபிக்க ஒரு அடையாளத்தைக் கேளுங்கள், நீங்கள் விரும்புகிற எந்த அடையாளத்தையும் நீங்கள் கேட்கலாம். அந்த அடையாளம் பாதாளம் போன்ற ஆழமான இடத்தில் இருந்தும் வரலாம், அல்லது அந்த அடையாளம் வானம் போன்ற உயரமான இடத்திலிருந்தும் வரலாம்” என்றார்.

12 ஆனால் ஆகாஸ், “அதை நிரூபிக்க நான் அடையாளத்தைக் கேட்கமாட்டேன். நான் கர்த்தரைச் சோதிக்கமாட்டேன்” என்றான்.

13 பிறகு ஏசாயா, “தாவீதின் குடும்பமே, கவனமாகக் கேளுங்கள்! நீங்கள் ஜனங்கள் பொறுமையைச் சோதிக்கிறீர்கள். அது உங்களுக்கு முக்கியமாகப்படவில்லை. எனவே இப்பொழுது என் தேவனுடைய பொறுமையைச் சோதிக்கிறீர்கள். 14 ஆனால் எனது தேவனாகிய ஆண்டவர் உனக்கு ஒரு அடையாளம் காட்டுவார்.

“இந்த இளம் கன்னிப் பெண்ணைப் பாரும். இவள் கர்ப்பமாக இருக்கிறாள்.
    இவள் ஒரு குமாரனைப் பெறுவாள் அவள் அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவாள்.
15 இம்மானுவேல் வெண்ணெயையும் தேனையும் தின்பார்,
    அவர் இவ்வாறு வாழ்வார், நல்லவற்றை எவ்வாறு செய்வது என்றும்
    பாவத்தை எவ்வாறு செய்யாமல் விடுவது என்றும் வாழ்ந்துக்காட்டுவார்.
16 ஆனால் அக்குழந்தை நன்மை தெரிந்து தீமையை வெறுக்க கற்றுக்கொள்ளும் வயது வரும் முன்னால்,
    எப்பிராயீம் (இஸ்ரவேல்) மற்றும் ஆராம் நாடு காலியாகிவிடும்.
    நீ இப்பொழுது அந்த இரண்டு நாட்டு ராஜாக்கள் பற்றியும் பயப்படுகிறாய்.

17 “ஆனால் நீ கர்த்தருக்குப் பயப்படவேண்டும். ஏனென்றால், கர்த்தர் உனக்கு துன்பக் காலங்களைக் கொண்டுவருவார். அத்துன்பங்கள் உனது ஜனங்களுக்கும் உன் தந்தையின் குடும்பத்து ஜனங்களுக்கும் ஏற்படும். தேவன் என்ன செய்வார்? தேவன் அசீரியாவின் ராஜாவை உனக்கு எதிராகப்போரிட அழைத்து வருவார்.

18 “அப்பொழுது, கர்த்தர் ‘ஈயை’ அழைப்பார். (அந்த ‘ஈக்கள்’ இப்போது எகிப்து ஓடைக் கரைகளில் உள்ளன). கர்த்தர் ‘தேனீக்களை’ அழைப்பார். (இந்த தேனீக்கள் இப்பொழுது அசீரியா நாட்டிலுள்ளன). இந்தப் பகைவர்கள் உன் நாட்டிற்குள் வருவார்கள். 19 இந்தப் பகைவர்கள், வனாந்தரங்களின் பள்ளத்தாக்குகளிலும், கல்மலைகளின் வெடிப்புகளிலும், எல்லா முள்காடுகளிலும், மேய்ச்சல் காடுகளிலும் தங்குவார்கள். 20 கர்த்தர் யூதாவைத் தண்டிக்க அசீரியாவைப் பயன்படுத்துவார். அசீரியா வாடகைக்கு வாங்கப்பட்ட சவரக்கத்தியைப்போலிருக்கும். கர்த்தர் யூதாவை தலையிலிருந்து கால்வரை சவரம் செய்து நீக்குவது போன்றிருக்கும். அது யூதாவின் தாடியை கர்த்தர் நீக்குவது போன்று இருக்கும்.

21 “அப்போது, ஒருவன் ஒரு பசுவையும் இரு ஆடுகளையும் மட்டும் உயிரோடு பாதுகாப்பான். 22 அவன் வெண்ணெய் தின்பதற்குரிய பாலை மட்டுமே பெறுவான். அந்நாட்டிலுள்ள ஒவ்வொருவனும் வெண்ணையையும் தேனையும் உண்பார்கள். 23 இந்தச் தேசத்தில், இப்பொழுது 1,000 திராட்சைத் தோட்டங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் 1,000 வெள்ளிகள் மதிப்புடையது. ஆனால் இந்த தேசம் முள்ளும் புதரும் நிறைந்ததாகும். 24 அவை காடாக இருப்பதால் வேட்டைக்கு மட்டுமே பயன்படும். 25 ஜனங்கள் ஒரு காலத்தில் உழைத்து இக்குன்றுகளில் உணவுப் பொருட்களை விளைய வைத்தனர். ஆனால் இப்போது ஜனங்கள் அங்கே செல்வதில்லை. அந்தத் தேசம் முள்ளாலும் பதராலும் நிறைந்துவிடும். அது ஆடு மாடுகள் செல்வதற்குரிய இடங்களாகும்” என்றான்.

அசீரியா விரைவில் வரும்

கர்த்தர் என்னிடம் கூறினார், “ஒரு பெரிய சுருளை எடுத்துக்கொள். இந்த வார்த்தைகளை எழுத ஒரு பேனாவை எடுத்துக்கொள். அதில் மகேர்-சாலால்-அஷ்-பாஸ் (‘அங்கே விரைவில் களவும் சூறையாடலும் நடக்கும்’ என்பது பொருள்) என்று எழுது” என்றார்.

நான் சிலரைச் சேகரித்தேன். அவர்கள் நம்பிக்கைக்குரிய சாட்சிகள். (அவர்கள் ஆசாரியனான உரியா, சகரியா, யெபெரெகியா ஆகியோர்). இவர்கள் நான் எழுதுவதைக் கவனித்தார்கள். பிறகு நான் தீர்க்கதரிசியான ஒரு பெண்ணிடம் சென்றேன். நான் அவளோடு இருந்தபிறகு அவள் கர்ப்பவதியானாள். அவள் ஒரு குமாரனைப் பெற்றாள். பிறகு கர்த்தர் என்னிடம், “அப்பையனுக்கு மகேர்-சாலால்-அஷ்-பாஸ்” என்னும் பெயரிடு. ஏனென்றால், இவன் “அம்மா, அப்பா” என்று சொல்லக் கற்பதற்கு முன்னால் தேவன், தமஸ்கு மற்றும் சமரியாவிலுள்ள செல்வங்களை எடுத்து அசீரியாவின் ராஜாவுக்குக் கொடுத்துவிடுவார் என்றார்.

மீண்டும் கர்த்தர், என்னிடம் கூறினார். என் ஆண்டவர், “இந்த ஜனங்கள் மெதுவாய் ஓடுகிற சீலோவாவின் தண்ணீரை மறுத்துவிட்டார்கள். இவர்கள் ரேத்சீனையும் ரெமலியாலின் குமாரனையும் ஏற்று மகிழ்ச்சிகொண்டார்கள்.” ஆனால் கர்த்தராகிய நான் அசீரியாவின் ராஜாவையும் அவனது வல்லமையயும் உங்களுக்கு எதிராகக் கொண்டுவருவேன். அவர்கள் ஐபிராத்து ஆற்றின் பெருவெள்ளத்தைப்போன்று வருவார்கள். அது குளத்தில் தண்ணீர்மட்டம் உயருவதுபோன்று இருக்கும். அந்த வெள்ளம் ஆற்றிலிருந்து வெளியே வந்து யூதாவின்மேல் பாய்வதுபோல இருக்கும். அந்த வெள்ளம் யூதாவின் கழுத்துவரை வந்து அதனை மூழ்கடிக்கும்.

“இம்மானுவேலே, உமது நாடு முழுவதிலும் பரவும்வரை அந்த வெள்ளம் வரும்” என்றார்.

நாடுகளே, நீங்கள் போருக்குத் தயாராகுங்கள்!
    நீங்கள் தோற்கடிக்கப்படுவீர்கள்.
கவனியுங்கள், தூர நாடுகளில் உள்ளவர்களே!
    போருக்குத் தயாராகுங்கள் நீங்கள் தோற்கடிக்கப்படுவீர்கள்.
10 போருக்கான திட்டங்களைத் தீட்டுங்கள்.
    உங்கள் திட்டங்கள் தோற்கடிக்கப்படும்.
உங்கள் படைகளுக்கு கட்டளையிடுங்கள்!
    உங்கள் கட்டளைகள் பயனற்றுப்போகும். ஏனென்றால், தேவன் எங்களோடு இருக்கிறார்!

ஏசாயாவிற்கு எச்சரிக்கைகள்

11 கர்த்தர் தன் பெரும் வல்லமையோடு என்னுடன் பேசினார். கர்த்தர், மற்ற ஜனங்களைப்போன்று இருக்கவேண்டாம் என்று என்னை எச்சரித்தார். 12 கர்த்தர், “ஒவ்வொருவரும் மற்றவர்கள் தனக்கெதிராகத் திட்டம் தீட்டுவதாகக் கூறுகின்றனர். நீ அவற்றை நம்பவேண்டாம். அவர்கள் பயப்படுகின்றவற்றுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்” என்றார்!

13 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் ஒருவருக்கே நீ பயப்பட வேண்டும். அவர் ஒருவருக்கே நீ மரியாதை செலுத்த வேண்டும். அவர் ஒருவருக்கே நீ அஞ்சவேண்டும். 14 நீ கர்த்தரை மதித்து அவரைப் பரிசுத்தமானவர் என்று எண்ணுவாயேயானால், அவரே உனக்கேற்ற பாதுகாப்பான இடமாயிருப்பார். ஆனால் நீ அவரை மதிப்பதில்லை. எனவே, அவர் நீங்கள் விழத்தக்கப் பாறையைப்போன்றிருப்பார். இஸ்ரவேலின் இரு குடும்பங்களை இடறச்செய்யும் பாறை இது. கர்த்தர் எருசலேம் ஜனங்களைப் பிடிக்கின்ற வலையைப்போன்று இருக்கிறார். 15 (ஏராளமானோர் இப்பாறையில் விழுந்தார்கள். அவர்கள் விழுந்து நொறுங்கிப்போவார்கள். அவர்கள் வலைக்குள்ளே அகப்படுவார்கள்).

16 ஏசாயா, “ஒரு ஒப்பந்தத்தைச்செய்து முத்திரை இடுவோம். எதிர்காலத்திற்காக என் போதனைகளைப் பத்திரப்படுத்துங்கள். என்னைப் பின்பற்றுகிறவர்கள் கவனித்துக்கொண்டிருக்கும்போதே இதனைச் செய்யுங்கள்.”

17 இது தான் அந்த ஒப்பந்தம்: நமக்கு உதவும்படி நான் கர்த்தருக்காகக் காத்திருப்பேன்.

யாக்கோபின் குடும்பத்தைப்பற்றி கர்த்தர் அவமானமடைகிறார்.
    அவர்களைப் பார்க்க அவர் மறுத்துவிட்டார்.
    ஆனால் நான் கர்த்தருக்காகக் காத்திருப்பேன் அவர் நம்மைக் காப்பாற்றுவார்.

18 இஸ்ரவேல் ஜனங்களின் அடையாளமாகவும் ஆதாரமாகவும் நானும் எனது பிள்ளைகளும் இருக்கிறோம். “சீயோன் மலையில் குடியிருக்கும் சர்வ வல்லமையுள்ள கர்த்தர் எங்களை அனுப்பியிருக்கிறார்” என்றான்.

19 சிலர், “என்ன செய்யலாம் என்பதையும் எதிர்காலம் பற்றி சொல்பவர்களையும், அஞ்சனம் பார்க்கிறவர்களையும் கேளுங்கள்” என்றனர். குறி சொல்லுகிறவர்களும், அஞ்சனம் பார்க்கிறவர்களும் பறவைகளைப்போன்று பேசுவார்கள். மறை பொருள் அறிந்தவர்கள் என்று கேட்பவர்கள் எண்ணும்படியாக கிசு கிசுத்து அவர்கள் பேசுவார்கள். ஆனால், நான் சொல்கிறேன் ஜனங்கள் உதவிக்காக தம் தேவனைக் கேட்க வேண்டும்! குறிசொல்லுகிறவர்களும், அஞ்சனம் பார்க்கிறவர்களும் என்ன செய்யலாம் என்று மரித்துபோனவர்களைக் கேட்கிறார்கள். உயிரோடு இருக்கிறவர்கள் மரித்துப்போனவர்களிடம் ஏன் இதுபோல் கேட்க வேண்டும்?

20 நீங்கள் போதனைகளையும், ஒப்பந்தத்தையும் பின்பற்ற வேண்டும். அந்தக் கட்டளைகளை நீங்கள் பின்பற்றாவிட்டால், பின்னர் நீங்கள் தவறான கட்டளைகளைப் பின்பற்றுவீர்கள். (தவறான கட்டளைகள் என்பது குறிகாரர்களும் அஞ்சனக்காரர்களும் கூறுவதாகும். அக்கட்டளைகள் பயனற்றவை. அக்கட்டளைகளைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் எந்த பயனையும் பெற முடியாது).

21 நீங்கள் அந்தத் தவறான கட்டளைகளைப் பின்பற்றினால், நாட்டில் துன்பமும், பசியும் ஏற்படும். ஜனங்களுக்குப் பசி ஏற்படும். எனவே, அவர்கள் கோபங்கொண்டு தம் ராஜாவுக்கும் அவனது தெய்வங்களுக்கும் எதிராகப் பேசுவார்கள். பிறகு அவர்கள் தம் உதவிக்கு தேவனிடம் வேண்டுவார்கள்.

22 அவர்கள் அந்த நாட்டில் தம்மைச் சுற்றிலும் பார்த்தால், துன்பத்தையும் கடும் இருளையும் காண்பார்கள். அத்துன்பமாகிய இருள் அவர்களை நாட்டை விட்டு வெளியேறச் செய்யும். அந்த இருள் வலைக்குள் சிக்கிக்கொண்டவர்கள் அதிலிருந்து விடுதலை பெறமுடியாது.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center