Chronological
யோவாஸ் தன் ஆட்சியைத் தொடங்கியது
12 இஸ்ரவேலில் யெகூ தன் ஆட்சியை ஏழாம் ஆண்டில் நடத்திக்கொண்டிருக்கும்போது, யோவாஸ் ஆட்சி செய்யத் தொடங்கினான். அவன் எருசலேமில் 40 ஆண்டுகள் ஆண்டான். பெயெர்செபாவிலுள்ள சிபியாள் என்பவள்தான் யோவாசின் தாயார். 2 கர்த்தர் சொன்ன நல்ல செயல்களை மட்டுமே யோவாஸ் செய்தான். அவன் தன் வாழ்நாள் முழுவதும் கர்த்தருக்கு அடிபணிந்து வந்தான். யோய்தா எனும் ஆசாரியன் அவனுக்கு கற்றுத் தந்ததையே கடைபிடித்தான். 3 ஆனால் அவன் மேடைகளை அழிக்கவில்லை. ஜனங்கள் பொய்த் தெய்வங்களை தொழுதுக்கொள்ளும் இடங்களில் பலிகொடுப்பதும் நறுமணப் பொருட்களை எரிப்பதுமாக இருந்தனர்.
ஆலயத்தைச் செப்பனிட யோவாஸ் ஆணையிட்டான்
4-5 யோவாஸ் ஆசாரியர்களிடம், “கர்த்தருடைய ஆலயத்தில் அதிக பணம் இருக்கிறது. ஜனங்கள் கர்த்தருடைய ஆலயத்திற்கு பரிசுத்தக் காணிக்கையாகப் பணம் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆலயவரி மற்றும் தம் விருப்பம்போல் கணக்குப் பார்க்கப்படும்பொழுதெல்லாம் அவர்கள் அதை செலுத்தியுள்ளார்கள். மற்றும் தம் விருப்பம்போலவும் பணம் தருகின்றனர். ஆசாரியர்களாகிய நீங்கள் உங்களுக்கு அறிமுகமான ஒவ்வொருவரிடமிருந்தும் அவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் அப்பணத்தைக் கொண்டுத் தேவையான இடத்தில் ஆலயப்பணி செய்யவேண்டும்” என்றான்.
6 ஆனால் ஆசாரியர்கள் பழுது பார்க்கவில்லை. யோவாஸ் தனது 23வது ஆட்சியாண்டில் கூட அவர்கள் ஆலயப்பணி செய்யவில்லை. 7 எனவே யோவாஸ் ராஜா யோய்தா ஆசாரியனையும் மற்ற ஆசாரியர்களையும் அழைத்து, “ஏன் நீங்கள் ஆலயத் திருப்பணிகள் செய்யவில்லை? ஜனங்களிடமிருந்து பணம் பெற்றுக்கொள்வதையும், அவற்றை பயன்படுத்துவதையும் நிறுத்துங்கள். ஜனங்களின் பணம் ஆலயத் திருப்பணிக்கே பயன்பட வேண்டும்” என்றான்.
8 ஜனங்களிடமிருந்து பணம் பெறுவதை நிறுத்திவிடுவதாக ஆசாரியர்கள் ஒப்புக்கொண்டனர். அதோடு ஆலயத்தைச் செப்பனிடும் பணியைச் செய்வதில்லை என்றும் முடிவுச்செய்தனர். 9 எனவே, ஆசாரியனான யோய்தா ஒரு பெட்டியை எடுத்து அதன் மேல் பகுதியில் துவாரமிட்டான். அதனைப் பலிபீடத்தின் தென்பகுதியில் வைத்தான். அப்பெட்டி கர்த்தருடைய ஆலயத்திற்குள் நுழையும் கதவுக்கருகில் இருந்தது. சில ஆசாரியர்கள் வாசலைக் காவல் செய்தனர். அவர்கள் கர்த்தருக்காக ஜனங்கள் தரும் பணத்தை வாங்கி பெட்டிக்குள் போட்டனர்.
10 பிறகு ஜனங்களே ஆலயத்திற்குப் போகும்போதெல்லாம் பணத்தைப் பெட்டிக்குள் போட ஆரம்பித்தனர். பெட்டியில் ஏராளமான பணம் இருப்பதை ராஜாவின் எழுத்தரும் (செயலாளர்) தலைமை ஆசாரியரும் பார்த்தால் அவர்கள் வந்து பெட்டியைத் திறந்து பணத்தை எடுப்பார்கள். அவர்கள் அப்பணத்தை பைகளில் போட்டு எண்ணினார்கள். 11 அப்பணம் எடை போடப்பட்டவுடன் அப்பணத்தை கர்த்தருடைய ஆலயத்தில் வேலை செய்பவர்களுக்குக் கொடுத்தனர். ஆலயத்தில் பணியாற்றும் தச்சர்கள், கட்டிட வேலைக்காரர்கள் போன்றோருக்கு அப்பணத்தைக் கொடுத்தனர். 12 அப்பணத்தைக் கல்வேலை செய்பவர்களும் பெற்றனர். இப்பணத்தின் மூலம் மரங்கள், கற்கள், கர்த்தருடைய ஆலய கட்டிடத்திற்கு பழுதுபார்க்கத் தேவையான மற்ற பொருட்களையும் வாங்கினார்கள்.
13-14 ஜனங்கள் கர்த்தருடைய ஆலயத்திற்காகப் பணத்தைக் கொடுத்தனர். வெள்ளிக் கிண்ணங்கள், இசைக்கருவிகள், எக்காளங்கள், பொன் பாத்திரங்கள், வெள்ளிப் பாத்திரங்கள் போன்றவற்றைச் செய்ய ஆசாரியர்களால் அப்பணத்தை உபயோகிக்க முடியாமல் போனது. வேலைக்காரர்களுக்குச் சம்பளம் கொடுக்கவே இப்பணம் உபயோகமானது. அந்த வேலைக்காரர்கள் கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்த்தார்கள். 15 எவரும் பணமுழுவதையும் எண்ணிப் பார்க்கவில்லை. பணத்தை என்ன செய்தார்கள் என வேலைக்காரர்களை வற்புறுத்தவும் இல்லை. ஏனெனில் அவ்வேலைக்காரர்கள் அனைவரும் நம்பிக்கைக்கு உரியவர்கள்!
16 குற்றப்பரிகாரப் பலியாகவும், பாவப்பரிகாரப் பலியாகவும் ஜனங்கள் பணம் கொடுத்தார்கள். ஆனால் அப்பணத்தை ஆலயத் திருப்பணி செய்யும் வேலைக்காரர்களுக்குச் சம்பளம் தர பயன்படுத்தவில்லை. அது ஆசாரியர்களுக்கு உரியதாக இருந்தது.
ஆசகேலிடமிருந்து எருசலேமை யோவாஸ் காப்பாற்றுகிறான்
17 ஆசகேல் ஆராம் நாட்டு மன்னன். அவன் காத்தூர் நகரத்தோடு போரிடச் சென்றான். அதனைத் தோற்கடித்த பின் எருசலேமோடு போரிடத் திட்டமிட்டான்.
18 யோசபாத், யோராம், அகசியா ஆகியோர் முன்பு யூதாவை ஆண்டனர். இவர்கள் யோவாசின் முற்பிதாக்கள். அவர்கள் கர்த்தருக்கு நிறைய பொருட்களைக் கொடுத்திருந்தனர். அவை ஆலயத்தில் இருந்தன. யோவாசும் ஆலயத்திற்குப் பொருட்களைக் கொடுத்திருந்தான். யோவாஸ் தன் அரண்மனை வீட்டிலும் ஆலயத்திலும் இருந்த பொன்னையும் பொருளையும் சேர்த்து ஆராம் (சீரியா) ராஜா ஆசகேலுக்குக் கொடுத்தனுப்பினான். ஆசகேல் எருசலேமுக்கு எதிராகப் போரிடவில்லை. அவன் வெளியேப் போனான்.
யோவாசின் மரணம்
19 யோவாஸ் செய்த பெருமைக்குரிய செயல்களெல்லாம் யூதா ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.
20 யோவாசின் வேலைக்காரர்கள் (அதிகாரிகள்) அவனுக்கெதிராகச் சதி செய்தனர். அவர்கள் அவனை சில்லாவுக்குப் போகும் வழியில் உள்ள மில்லோ வீட்டிலே கொன்றனர். 21 சிமியாதின் குமாரனான யோசகாரும் சோமேரின் குமாரனான யோசபாத்தும் யோவாசின் அதிகாரிகள். இவர்களே யோவாசைக் கொன்றனர்.
தாவீது நகரத்தில் ஜனங்கள் யோவாசை அவனது முற்பிதாக்களோடு அடக்கம் செய்தனர். யோவாசின் குமாரனான அமத்சியா அடுத்த புதிய ராஜா ஆனான்.
யோவாகாசின் ஆட்சி தொடக்கம்
13 சமாரியாவில் யெகூவின் குமாரனான யோவாகாஸ் இஸ்ரவேலின் புதிய ராஜா ஆனான். இது அகசியாவின் குமாரனான யோவாசின் 23வது ஆட்சியாண்டின்போது ஏற்பட்டது. யோவாகாஸ் 17 ஆண்டுகள் ஆட்சி செய்தான்.
2 கர்த்தருக்கு வேண்டாதவற்றையே யோவாகாஸ் செய்து வந்தான். இஸ்ரவேலரின் பாவத்துக்குக் காரணமாயிருந்த நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவச்செயல்களை இவனும் பின்பற்றினான். அதனைச் செய்வதை நிறுத்தவில்லை. 3 அதனால் இஸ்ரவேலர்மேல் கர்த்தருக்கு கோபம் வந்தது. எனவே அவர்களை கர்த்தர் ஆராம் ராஜா ஆசகேலின் கையிலும், ஆசகேலின் குமாரனான பெனாதாத் கையிலும் ஒப்படைத்தார்.
இஸ்ரவேல் ஜனங்கள் மீது கர்த்தர் இரக்கம் காட்டுகிறார்
4 பிறகு தமக்கு உதவி செய்யும்படி யோவாகாஸ் கர்த்தரிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டான். கர்த்தரும் செவிசாய்த்தார். கர்த்தர் இஸ்ரவேலரின் துன்பங்களைப் பார்த்தார். ஆராம் ராஜா இஸ்ரவேலரைக் கொடுமைப்படுத்துவதைக் கவனித்தார்.
5 எனவே கர்த்தர் இஸ்ரவேலரைக் காப்பாற்ற ஒருவனை அனுப்பினார். இஸ்ரவேலர்கள் ஆராமியர்களிடமிருந்து விடுதலை பெற்றனர். முன்பு போல, அவர்கள் தமது கூடாரங்களுக்கு (வீடுகள்) சென்றனர்.
6 எனினும் அவர்கள் தாம் பாவம் செய்வதை நிறுத்தவில்லை. இஸ்ரவேலர்கள் பாவம் செய்வதற்குக் காரணமான யெரொபெயாமின் குடும்பத்தார் பாவங்களை அவர்கள் தொடர்ந்து செய்தனர். அவர்கள் சமாரியாவில் அஷெரா தூண்களையும் வைத்திருந்தனர்.
7 ஆராமின் ராஜா யோவாகாசின் படையைத் தோற்கடித்தான். படையில் பல வீரர்களைக் கொன்றான். 50 குதிரை வீரர்கள், 10 இரதங்கள், 10,000 காலாட் வீரர்களை மட்டுமே விட்டுவிட்டான். யோவாகாசின் வீரர்கள் காலடியில் மிதிபட்ட தூசியைப்போன்று ஆனார்கள்.
8 யோவாகாஸ் செய்த மற்ற அருஞ்செயல்களைப் பற்றியும் அவனது வலிமைபற்றியும் இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. 9 யோவாகாஸ் மரித்ததும் அவனது முற்பிதாக்களோடு அவனும் அடக்கம் செய்யப்பட்டான். ஜனங்கள் அவனை சமாரியாவில் அடக்கம் செய்தனர். பிறகு அவனது குமாரன் யோவாஸ் ராஜா ஆனான்.
யோவாஸ் இஸ்ரவேலை ஆண்டது
10 யோவாகாசின் குமாரன் யோவாஸ் சமாரியாவில் இஸ்ரவேலரின் ராஜா ஆனான். இது யூதாவின் ராஜாவாகிய யோவாசின் 37வது ஆட்சியாண்டில் நிகழ்ந்தது. யோவாஸ் 16 ஆண்டுகள் இஸ்ரவேலை ஆண்டான். 11 யோவாசும் கர்த்தருக்குப் பிடிக்காதவற்றைச் செய்தான். இஸ்ரவேலர்களுக்குப் பாவத்தைத் தேடித்தந்த, பாவத்தை உண்டு பண்ணிய நேபாத்தின் குமாரனான யெரொபெயாமின் பாவச்செயல்களைச் செய்வதை இவனும் நிறுத்தவில்லை. அவன் அவற்றைத் தொடர்ந்து செய்தான். 12 யோவாஸ் செய்த மற்ற அருஞ்செயல்களும் அவனது வலிமையும் அவன் யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவோடு செய்த போர்களும் பற்றி இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. 13 யோவாஸ் மரித்ததும் இஸ்ரவேல் ராஜாக்களான அவனது முற்பிதாக்களோடு சமாரியாவில் அடக்கம் செய்யப்பட்டான். யோவாசின் சிம்மாசனத்தில் யெரொபெயாம் ராஜாவாக அமர்ந்தான்.
யோவாஸ் எலிசாவை சந்திக்கிறான்
14 எலிசா நோயுற்றான். பின், இந்த நோயாலேயே அவன் மரித்துப்போனான். இஸ்ரவேல் ராஜாவாகிய யோவாஸ், எலிசாவைப் பார்க்கப் போனான். யோவாஸ் எலிசாவுக்காக அழுதான். அவன் “என் தந்தையே! என் தந்தையே! இது இஸ்ரவேலின் இரதமும் அதன் குதிரைகளுக்கும் ஏற்ற நேரமா?”[a] என்றான்.
15 எலிசா அவனிடம், “ஒரு வில்லையும் சில அம்புகளையும் எடுத்துக்கொள்” என்றான்.
யோவாஸ் ஒரு வில்லையும், சில அம்புகளையும் எடுத்துக்கொண்டான். 16 பிறகு எலிசா இஸ்ரவேல் ராஜாவிடம், “வில்லில் உனது கையை வை” என்றான். யோவாஸ் அவ்வாறே செய்தான். பிறகு எலிசா தன் கையை ராஜாவின் கையோடு வைத்தான். 17 எலிசா, “கிழக்கு ஜன்னலைத் திறவுங்கள்” என்றான், யோவாஸ் அவ்வாறே திறந்தான். பிறகு எலிசா “எய்துவிடு” என்றான்.
யோவாஸ் எய்தான். பிறகு எலிசா, “இது கர்த்தருடைய வெற்றி அம்பு! இது ஆராம் மேல் கொள்ளும் வெற்றியாகும்! நீ ஆராமியர்களை ஆப்பெக்கில் வெல்வாய். அவர்களை அழிப்பாய்” என்றான்.
18 எலிசா மேலும், “அம்புகளை எடு” என்றான். யோவாஸ் எடுத்தான். “தரையின் மேல் அடி” என்று இஸ்ரவேல் ராஜாவிடம் கூறினான்.
யோவாஸ் மூன்று முறை தரையின் மீது அடித்தான். பிறகு நிறுத்தினான். 19 அதனால் தேவமனிதனுக்கு (எலிசாவிற்கு) யோவாசின் மேல் கோபம் வந்தது. அவன், “நீ ஐந்து அல்லது ஆறுமுறை அடித்திருக்க வேண்டும்! அதனால் ஆராமை அது அழியும்வரை தோற்கடித்திருப்பாய்! ஆனால் இப்போது நீ மூன்றுமுறை மட்டுமே ஆராமை வெல்வாய்!” என்றான்.
எலிசாவின் கல்லறையில் நிகழ்ந்த அதிசயம்
20 எலிசா மரித்தான். ஜனங்கள் அவனை அடக்கம் செய்தனர். அடுத்த ஆண்டில் ஒரு வசந்த காலத்தில் மோவாபிய வீரர்களின் குழு ஒன்று படையெடுத்து தாக்கியது. போருக்கான பொருட்களை எடுப்பதற்காக அவர்கள் வந்தனர். 21 சில இஸ்ரவேலர்கள் மரித்த ஒருவனை அடக்கம் செய்துகொண்டிருந்தனர். அவர்கள் வீரர்கள் வருவதைப் பார்த்தார்கள். உடனே (பயந்து) பிணத்தை எலிசாவின் கல்லறைக்குள் வீசிவிட்டு ஓடினார்கள். பிணமானது எலிசாவின் எலும்பின் மீது பட்டது, அதற்கு உயிர் வந்து எழுந்து நின்றான்!
ஆராமியர்களோடு போரிட்டு யோவாஸ் இஸ்ரவேலிய நகரங்களை மீட்டது
22 யோவாகாசின் ஆட்சிகாலம் முழுவதும், ஆராமின் ராஜாவாகிய ஆசகேல் இஸ்ரவேலர்களுக்குத் துன்பம் கொடுத்துவந்தான். 23 ஆனால் கர்த்தர் இஸ்ரவேலர்கள் மேல் கருணையோடு இருந்தார். அவர் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியவர்களோடு செய்த உடன்படிக்கையின் காரணமாக கர்த்தர் இஸ்ரவேலர்களை அழிப்பதில்லை. இன்னும் அவர்களை தூர எறியவில்லை.
24 ஆராமின் ராஜாவாகிய ஆசகேல் மரித்தான், அவனது குமாரனான பெனாதாத் புதிய ராஜா ஆனான். 25 அவன் மரிக்கும் முன்னர் ஆசகேல் யோவாசின் தந்தையான யோவகாசுடன் போரிட்டுப் போரில் பல நகரங்களைக் கைப்பற்றினான். ஆனால் இப்போது யோவாஸ் ஆசகேலின் குமாரனான பெனாதாத்தோடு போரிட்டு அந்நகரங்களை எடுத்துக் கொண்டான். மூன்றுமுறை யோவாஸ் பெனாதாத்தை வெற்றிப்பெற்று இஸ்ரவேல் நகரங்களைத் திரும்ப எடுத்துக்கொண்டான்.
யோவாஸ் ஆலயத்தை மீண்டும் கட்டுகிறான்
24 யோவாஸ் ராஜாவாகியபோது அவனுக்கு 7 வயது. அவன் எருசலேமில் 40 ஆண்டுகள் ஆண்டான். அவனது தாயின் பெயர் சிபியாள். அவள் பெயர்செபா நகரத்தவள். 2 யோய்தா ஆசாரியன் உயிரோடிருந்தவரை, யோவாஸ் கர்த்தருடைய முன்னிலையில் சரியானதைச் செய்துவந்தான். 3 யோய்தா, யோவாசுக்கு இரண்டு மனைவியரைத் தேர்ந்தெடுத்தான். அவனுக்கு குமாரர்களும் குமாரத்திகளும் இருந்தனர்.
4 பின்னர், யோவாஸ் கர்த்தருடைய ஆலயத்தை மீண்டும் கட்ட முடிவுசெய்தான். 5 யோவாஸ் ஆசாரியர்களையும், லேவியர்களையும் ஒன்றாகத் திரட்டினான். அவன் அவர்களிடம், “யூதாவின் நகரங்களுக்குச் சென்று அனைத்து இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்தும் பணத்தைச் சேகரியுங்கள். ஆண்டுதோறும் தேவனுடைய ஆலயத்தைப் பழுது பார்த்து மேலும் கட்ட வேண்டும். வேகமாகப் போய் இதனைச் செய்யுங்கள்” என்றான். ஆனால் லேவியர்கள் அவசரப்படவில்லை.
6 எனவே, ராஜா தலைமைஆசாரியனான யோய்தாவை அழைத்தான். அவனிடம் ராஜா, “யோய்தா, யூதாவிலும் எருசலேமிலும் வரியை வசூலிக்க நீங்கள் ஏன் லேவியர்களை அனுப்பவில்லை? கர்த்தருடைய ஊழியக்காரனான மோசேயும் இஸ்ரவேல் ஜனங்களும் அந்த வரிப்பணத்தை பரிசுத்தக் கூடாரத்திற்குப் பயன்படுத்தினார்களே” என்றான்.
7 முற்காலத்தில் அத்தாலியாளின் குமாரர்கள் கர்த்தருடைய ஆலயத்திற்குள் உடைத்துக் கொண்டுசென்றார்கள். அவர்கள் இங்குள்ள பரிசுத்தமானப் பொருட்களை எல்லாம் கொண்டுபோய் பாகால் ஆலயத்தில் பயன்படுத்தினார்கள். அத்தாலியாள் மிகவும் தீயப் பெண்.
8 ஒரு பெட்டியைச் செய்து வாசலுக்கு வெளியில் கர்த்தருடைய ஆலயத்தில் வைக்குமாறு யோவாஸ் ராஜா கட்டளையிட்டான். 9 பிறகு யூதாவிலும், எருசலேமிலும் லேவியர்கள் ஒரு அறிவிப்பு செய்தனர். கர்த்தருக்கு வரிப்பணத்தைக் கொண்டுவரும்படி அவர்கள் ஜனங்களை வேண்டிக் கேட்டுக்கொண்டனர். இஸ்ரவேலர்கள் பாலைவனத்தில் இருந்தபோது, தேவனின் ஊழியனான மோசே எங்களிடம் கொடுக்கும்படி கேட்டுக்கொண்ட பணத்தின் அளவு தான் இவ்வரிப் பணம் ஆகும். 10 அனைத்து தலைவர்களும் ஜனங்களும் மகிழ்ந்தனர். அவர்கள் தம் பணத்தைக் கொண்டுவந்து பெட்டியில் போட்டனர். பெட்டி நிரம்பும்வரை அவர்கள் போட்டுக்கொண்டிருந்தனர். 11 பின்னர் லேவியர்கள் அந்தப் பெட்டியை ராஜாவின் அதிகாரிகளிடம் எடுத்துச் சென்றார்கள். அப்பெட்டி முழுவதும் பணம் இருப்பதை அவர்கள் கண்டனர். ராஜாவின் செயலாளரும் தலைமை ஆசாரியனின் அதிகாரிகளும் வந்து பணத்தைப் பெட்டிக்குள்ளிருந்து வெளியே எடுத்தனர். பிறகு அவர்கள் அந்தப் பெட்டியை அதன் இடத்தில் வைத்தனர். இதை அடிக்கடி அவர்கள் செய்து நிறையப் பணம் சேர்த்தார்கள். 12 பிறகு யோவாஸ் ராஜாவும், யோய்தா ஆசாரியனும் அப்பணத்தைக் கர்த்தருடைய ஆலயத்தில் வேலைச் செய்பவர்களுக்குக் கொடுத்தனர். கர்த்தருடைய ஆலயத்தைத் திரும்பக் கட்டுவதற்காக மரம் குடைவதில் திறமை பெற்றவர்களையும், தச்சர்களையும் வேலைக்கு அமர்த்தினார்கள். மேலும் அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தைத் திரும்பக் கட்டுவதற்காக இரும்பிலும் வெண்கலத்திலும் வேலைச் செய்வதில் திறமைமிக்கவர்களையும் வேலைக்கு அமர்த்தினார்கள்.
13 வேலையை மேற்பார்வை செய்பவர்கள் உண்மையானவர்கள். கர்த்தருடைய ஆலயத்தைப் புதுப்பிக்கும் வேலை வெற்றியடைந்தது. அவர்கள் தேவனுடைய ஆலயத்தை முன்பு இருந்தது போலவே அழகாகவும், பலமாகவும் கட்டினார்கள். 14 எல்லா வேலைகளும் முடிந்த பிறகு மீதியான பணத்தை ராஜாவிடமும், யோய்தா ஆசாரியனிடமும் கொண்டு வந்தனர். கர்த்தருடைய ஆலயத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக அவர்கள் அப்பணத்தைச் செலவுசெய்தனர். அப்பொருட்கள் ஆலயத்தில் சேவைச்செய்யவும் சர்வாங்கத் தகனபலிகள் போன்றவற்றை செய்யவும் பயன்பட்டன. அவர்கள் கலசங்களையும், வேறு பொருட்களையும் பொன்னாலும், வெள்ளியாலும் செய்தனர். யோய்தா உயிரோடு இருக்கும்வரை ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்தில் தினந்தோறும் தகனபலிகளைக் கொடுத்துவந்தனர்.
15 யோய்தா முதியவனானான். நீண்ட வாழ்க்கை வாழ்ந்து பின் மரித்துப்போனான். அவன் மரிக்கும்போது அவனுக்கு 130 வயது. 16 யோய்தாவை தாவீதின் நகரத்திலே ராஜாக்களை அடக்கம் செய்யக் கூடிய இடத்தில் ஜனங்கள் அடக்கம் செய்தனர். இஸ்ரவேலில் தேவனுக்கும் தேலாயத்திற்கும் ஏராளமான அளவில் நற்சேவை செய்திருக்கிறான் என்பதாலேயே ஜனங்கள் அந்த இடத்தில் அவனை அடக்கம் செய்தனர்.
17 யோய்தா மரித்தப் பிறகு, யூதாவின் தலைவர்கள் ராஜா யோவாசிடம் வந்து பணிந்து வணங்கினார்கள். அவர்கள் கூறுவதை ராஜா கவனித்தான். 18 ராஜாவும் அந்த தலைவர்களும் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தை விட்டு விலகினார்கள். இவர்களது முற்பிதாக்கள் தேவனாகிய கர்த்தரை பின்பற்றி வந்தனர். இவர்களோ விக்கிரகங்களையும், சிலைகளையும் வழிபட்டனர். ராஜாவும் தலைவர்களும் தவறு செய்ததால் தேவன் யூதா மற்றும் எருசலேம் ஜனங்கள் மீதுக் கோபங்கொண்டார். 19 தேவன் தீர்க்கதரிசிகளை அனுப்பி ஜனங்களைத் தன்னிடம் திரும்ப அழைக்க முயன்றார். தீர்க்கதரிசிகள் ஜனங்களை எச்சரித்தனர். ஜனங்கள் கேட்க மறுத்து விட்டனர்.
20 தேவனுடைய ஆவி சகரியா மீது வந்தது. சகரியாவின் தந்தை ஆசாரியனாகிய யோய்தா ஆவான். சகரியா ஜனங்களின் முன்பு நின்று, “தேவன் சொல்வது இதுதான்: ‘நீங்கள் ஏன் கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மறுக்கின்றீர்கள்? நீங்கள் வெற்றியடையமாட்டீர்கள். நீங்கள் கர்த்தரைவிட்டு விலகிவிட்டீர்கள். எனவே கர்த்தரும் உங்களை விட்டு விலகிவிட்டார்!’” என்றான்.
21 ஆனால் ஜனங்கள் சகரியாவிற்கு எதிராகத் திட்டமிட்டனர். சகரியாவைக் கொல்லும்படி ராஜா கட்டளையிட்டான். எனவே அவன் மரிக்கும்வரை ஜனங்கள் அவன் மீது கற்களை எறிந்தார்கள். ஜனங்கள் இதனை ஆலய பிரகாரத்திலேயே செய்தனர். 22 யோய்தா தன் மீது காட்டிய கருணையை யோவாஸ் ராஜா நினைவுக்கூரவில்லை. யோய்தா சகரியாவின் தந்தை. எனினும் யோவாஸ், யோய்தாவின் குமாரனாகிய சகரியவைக் கொன்றான். மரிப்பதற்கு முன்பு சகரியா, “நீ செய்வதை கர்த்தர் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் உன்னைத் தண்டிப்பார்!” என்றான்.
23 ஆண்டு முடிவில், யோவாசுக்கு எதிராக ஆராமியப்படை வந்தது. அவர்கள் யூதாவையும் எருசலேமையும் தாக்கினார்கள். மேலும் அவர்கள் அந்த ஜனங்களின் தலைவர்கள் அனைவரையும் கொன்றார்கள். தமஸ்கு ராஜாவுக்கு விலையுயர்ந்தப் பொருட்கள் அனைத்தையும் அனுப்பிவைத்தனர். 24 மிகவும் குறைந்த எண்ணிகையுள்ள வீரர்களுடைய குழுவுடனேயே ஆராமியப்படை வந்தது. ஆயினும் அது பெரும் அளவுடைய யூதாவின் படையை வெல்லுமாறு கர்த்தர் அருளினார். யூதாவின் ஜனங்கள் தம் முற்பிதாக்கள் வழிபட்ட தேவனாகிய கர்த்தரை விட்டு விலகியதால், கர்த்தர் இவ்வாறு செய்தார். எனவே யோவாஸ் தண்டிக்கப்பட்டான். 25 ஆராமியர்கள் யோவாசைவிட்டுப் போகும்போது அவன் பெருத்த காயம் அடைந்திருந்தான். யோவாசின் சொந்த வேலைக்காரர்களும் அவனுக்கெதிராகத் திட்டமிட்டனர். அவன் யோய்தா ஆசாரியனின் குமாரனான சகரியாவைக் கொன்றான் என்பதனால் அவர்கள் இதைச் செய்தார்கள். வேலைக்காரர்கள் யோவாசை அவனுடைய படுக்கையிலேயே கொன்று போட்டனர். யோவாஸ் மரித்ததும், அவனை தாவீதின் நகரத்திலேயே அடக்கம் செய்தனர். ஆனால் ராஜாக்களை அடக்கம் செய்யும் இடத்தில் அவனை அடக்கம் செய்யவில்லை.
26 யோவாசுக்கு எதிராகத் திட்டமிட்ட வேலைக்காரர்கள் சாபாத்தும், யோசபாத்தும் ஆவார்கள். சாபாத்தின் தாயின் பெயர் சீமாத் ஆகும். இவள் அம்மோனியப் பெண் ஆவாள். யோசபாத்தின் தாயின் பெயர் சிம்ரீத் ஆகும். இவள் மோவாபிய பெண் ஆவாள். 27 யோவாசின் குமாரர்களைப்பற்றியும், அவனுக்கு எதிரான தீர்க்கதரிசனங்களைப் பற்றியும், தேவனுடைய ஆலயத்தை அவன் புதுப்பித்ததைப்பற்றியும் ராஜாக்களின் சரித்திரம் என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. யோவாசுக்குப் பிறகு அமத்சியா புதிய ராஜாவானான். அமத்சியா யோவாசின் குமாரன்.
2008 by World Bible Translation Center