Print Page Options
Previous Prev Day Next DayNext

Chronological

Read the Bible in the chronological order in which its stories and events occurred.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
2 இராஜாக்கள் 9-11

யெகூவை அபிஷேகம் செய்யும்படி எலிசா இளம் தீர்க்கதரிசிக்கு சொல்கிறான்

தீர்க்கதரிசிகளின் குழுவிலிருந்து தீர்க்கதரிசியான எலிசா ஒருவனை அழைத்தான். அவனிடம், “புறப்படத் தயாராகு. இச்சிறிய குப்பியில் உள்ள எண்ணெயை உன் கையில் எடுத்துக்கொண்டு ராமோத் கீலேயாத்துக்குப் போ! நீ அங்கு போனதும், நிம்சியின் குமாரனான யோசபாத்தின் குமாரன் யெகூவைக் கண்டுபிடி. அவன் வீட்டிற்குள் போ. அவனது சகோதரர்களிடமிருந்து அழைத்து உள் அறைக்குப் போ. இந்த சிறிய எண்ணெய்க் குப்பியை எடுத்துக்கொண்டு எண்ணெயை அவன் தலையில் ஊற்றி, ‘இது கர்த்தர் சொன்னது: உன்னை இஸ்ரவேலுக்கு ராஜா ஆக்குகிறேன்’ என்று சொல். பிறகு கதவைத் திறந்துக்கொண்டு ஓடிவந்துவிடு. அங்கே தங்காதே” என்றான்.

எனவே இந்த இளம் தீர்க்கதரிசி, ராமோத் கிலேயாத்திற்குச் சென்றான். அவன் அங்கு நுழைந்ததும், படைத்தளபதி உட்கார்ந்திருப்பதைப் பார்த்தான். இவன் அவனிடம், “தலைவரே, உங்களுக்காக என்னிடம் ஒரு செய்தி உண்டு” என்றான்.

அதற்கு யெகூ, “இங்கு இருக்கிற அனைவரிலும் உமது செய்தி யாருக்குரியது?” என்று கேட்டான்.

உடனே இளம் தீர்க்கதரிசி, “இந்த செய்தி உங்களுக்குரியதுதான் தளபதியே” என்றான்.

யெகூ எழுந்து வீட்டிற்குள் சென்றான். இளம் தீர்க்கதரிசி அவனது தலையில் எண்ணெயை ஊற்றி, “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொன்னதைக் கூறுகிறேன்: ‘நான் உன்னை இஸ்ரவேலில் கர்த்தருடைய ஜனங்களின் மேல் ராஜாவாக அபிஷேகம் செய்கிறேன். நீ உனது ராஜாவாகிய ஆகாபின் குடும்பத்தை அழிக்கவேண்டும். இதன் மூலம், எனது வேலைக்காரர்களான தீர்க்கதரிசிகளின் இரத்தப் பழியையும் கர்த்தருடைய மரித்துப்போன சகல தொண்டர்களின் இரத்தப்பழியையும் யேசபேலின் கையிலே வாங்குவேன். ஆகையால், ஆகாபின் குடும்பத்திலுள்ள அனைவரும் மரிப்பார்கள். ஆகாப் குடும்பத்திலுள்ள எந்த ஆண் குழந்தையையும் உயிரோடு விடமாட்டேன். அந்த ஆண் அடிமையாக இருந்தாலும் சரி அல்லது இஸ்ரவேலில் சுதந்திரமுள்ள ஆளாக இருந்தாலும் சரியே. நான் ஆகாபின் குடும்பத்தை நேபாத்தின் குமாரனான யெரொபெயாமின் குடும்பத்தைப் போலவும் அகியாவின் குமாரனான பாஷாவின் குடும்பத்தைப் போலவும் அழிப்பேன். 10 நாய்கள், யெஸ்ரயேல் பகுதியில் யேசபேலை தின்னும். அவள் அடக்கம் செய்யப்படமாட்டாள்’” என்றான்.

பிறகு அந்த இளம் தீர்க்கதரிசி கதவைத் திறந்துக் கொண்டு வெளியே ஓடிவிட்டான்.

யெகூவை ராஜாவாக வேலைக்காரர்கள் அறிவிக்கிறார்கள்

11 ராஜாவின் வேலைக்காரர்கள் (அதிகாரிகள்) இருந்த இடத்திற்கு யெகூ போனான். அந்த அதிகாரிகளில் ஒருவன், “எல்லாம் சரியாக உள்ளதா? ஏன் அந்தப் பைத்தியக்காரன் உன்னிடம் வந்தான்” என்று கேட்டான்.

யெகூ வேலைக்காரர்களிடம், “உங்களுக்கு அவனையும் அவனது பைத்தியகாரத்தனச் செயலையும் தெரியுமே” என்றான்.

12 அதற்கு அதிகாரிகள், “இல்லை! உண்மையைச் சொல். அவன் என்ன சொன்னான்?” என்று கேட்க, யெகூ இளந்தீர்க்கதரிசி சொன்னதைக் கூறினான்: “அவன் என்னிடம், ‘கர்த்தர் சொன்னதாவது: நான் உன்னை இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகம் செய்கிறேன்’ என்றான்” என்று சொன்னான்.

13 உடனே ஒவ்வொரு அதிகாரியும் தனது ஆடையைப் படிகளின் மேல் விரித்தனர். எக்காளத்தை ஊதி, “யெகூ ராஜா ஆனான்!” என்று அறிவித்தனர்.

யெகூ யெஸ்ரயேலுக்குச் சென்றது

14 எனவே நிம்சியின் குமாரன் யோசபாத்தின் குமாரனான யெகூ யோராமுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தான்.

அப்போது, யோராமும் இஸ்ரவேலரும் சேர்ந்து ஆராமின் ராஜாவாகிய ஆசகேலிடமிருந்து ராமோத் கீலேயாத்தை பாதுகாக்க முயன்றனர். 15 யோராம் ராஜா ஆசகேலுக்கு எதிராகப் போரிட்டான். ஆனால் ஆராமிய வீரர்கள் யோராமைக் காயப்படுத்தினார்கள். அவனும் குணப்படுத்திக்கொள்ள யெஸ்ரயேலுக்குப் போனான்.

எனவே யெகூ, அதிகாரிகளிடம, “என்னை நீங்கள் புதிய ராஜாவாக ஏற்றுக்கொள்வதானால் நகரத்திலிருந்து எவரும் தப்பித்துப் போய் இந்தச் செய்தியை யெஸ்ரயேலின் சொல்லாதபடிக்குப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்றான்.

16 யோராம் யெஸ்ரயேலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான். எனவே யெகூ இரதத்தில் ஏறி யெஸ்ரயேலுக்குப் போனான். அப்போது யூதாவின் ராஜாவாகிய அகசியாவும் யோராமைப் பார்க்க வந்திருந்தான்.

17 ஒரு காவல்காரன் யெஸ்ரயேல் நகரக் கோபுரத்தின் மீது நின்று பார்த்தான். யெகூவின் பெரிய கூட்டம் வருவதைக் கவனித்து, “ஒரு பெருங்கூட்டத்தைப் பார்க்கிறேன்” என்றான்.

யோராம், “சிலரைக் குதிரையில் அனுப்பி அவர்களை சந்தித்து, அவர்கள் சமாதானத்தோடு வருகிறார்களா என்று விசாரியுங்கள்” என்றான்.

18 எனவே, தூதுவன் யெகூவை சந்திக்க குதிரையில் சென்றான். தூதுவன், “நீங்கள் சமாதானத்தோடு வருகிறீர்களா? என்று ராஜா கேட்கச் சொன்னார்” என்று கேட்டான்.

அதற்கு யெகூ, “சமாதானத்துடன் எந்த சம்பந்தமும் உனக்கு இல்லை! என்னைப் பின்தொடர்ந்து வா” என்றான்.

காவல்காரன் யோராமிடம், “தூதுவன் அந்தக் கூட்டத்தோடு சேர்ந்துவிட்டான். அவன் திரும்பி வரவில்லை” என்றான்.

19 பிறகு யோராம் இரண்டாவது தூதுவனை குதிரையில் அனுப்பினான். அவன் யெகூவிடம் சென்று, “யோராம் ராஜா ‘சமாதானம்’ சொன்னான்” என்றான்.

அதற்கு யெகூ, “சமாதானத்திற்கும் உனக்கும் எந்த சம்பந்தமுமில்லை! என்னைப் பின்தொடர்ந்து வா” என்றான்.

20 காவல்காரனோ யோராமிடம், “இரண்டாவது தூதுவனும் கூட்டத்தோடு சேர்ந்துக் கொண்டான். அவனும் திரும்பி வரவில்லை. ஒரு பைத்தியக்காரனைப் போன்று ஒருவன் இரதத்தை ஓட்டுகிறான். நிம்சியின் குமாரனான யெகூவைப்போல அவன் தேரோட்டுகிறான்” என்றான்.

21 யோராம், “எனது இரதத்தைக் கொண்டு வா!” என்றான்.

வேலைக்காரர் ராஜாவின் இரதத்தைக் கொண்டு வந்தான். இஸ்ரவேலின் ராஜாவாகிய யோராமும் யூதாவின் ராஜாவாகிய அகசியாவும் யெகூவை சந்திக்கச் சென்றார்கள். அவர்கள் அவனை யெஸ்ரயேலியனாகிய நாபோத்தின் நிலத்திலே சந்தித்தனர்.

22 யோராம் யெகூவைப் பார்த்து, “யெகூ, நீ சமாதானமாக வந்திருக்கிறாயா” என்று கேட்டான். அதற்கு யெகூ, “உன் தாயான யேசபேல் விபச்சாரமும் சூன்யமும் செய்து கொண்டிருக்கும்வரை சமாதானமாக இருக்கமுடியாது” என்றான்.

23 யோராம் குதிரையில் வேகமாகத் திரும்பினான். அவன் அகசியாவிடம், “அகசியா, இது தந்திரம்” என்றான்.

24 ஆனால் யெகூ தன் பலத்தையெல்லாம் கூட்டி வில்லில் அம்பை எய்தான். அம்பு அவனது முதுகில் துளைத்து இதயத்தின் வழியாகச் சென்றது. அவன் இரதத்திலிருந்து விழுந்து மரித்தான்.

25 யெகூ தனது இரத ஓட்டியான பித்காரிடம், “யோராமின் உடலை எடுத்து யெஸ்ரயேலியனாகிய நாபோத்தின் வயலில் ஏறி. நானும் நீயும் யோரோமின் தந்தையான ஆகாபோடு பயணம் செய்யும்போது, இவனுக்கு இவ்வாறே நிகழும் என்று கர்த்தர் சொன்னதை எண்ணிப்பார். 26 கர்த்தர், ‘நேற்று நான் நாபோத் மற்றும் அவனது பிள்ளைகளின் இரத்தத்தைப் பார்த்தேன். நான் ஆகாபை இதே வயலில் தண்டிப்பேன்’, என்று சொன்னார்! எனவே, அவர் சொன்னபடியே, யோராமின் உடலை எடுத்து வயலுக்குள் வீசு!” என்றான்.

27 யூதாவின் ராஜாவாகிய அகசியா இதனைப் பார்த்து ஓடிப்போனான். அவன் தோட்ட வீட்டிற்குப்போக, யெகூ அவனைத் துரத்திப்போனான். யெகூ, “அகசியாவை அவன் இரதத்தில் வெட்டிப் போடுங்கள்” என்றான்.

எனவே யெகூவின் ஆட்கள் அகசியாவை இப்லேயாம், அருகிலுள்ள கூர் மலைக்கான சாலையில் எய்தனர். அவன் மெகிதோவுக்கு ஓடிப்போய் அங்கேயே மரித்துப்போனான். 28 அகசியாவின் வேலைக்காரர்கள் அவனது உடலை எடுத்துக் கொண்டு எருசலேமுக்கு வந்தனர். தாவீது நகரத்தில் முற்பிதாக்களின் கல்லறையில் அவனை அடக்கம் செய்தனர்.

29 இஸ்ரவேல் ராஜா யோராமின் 11வது ஆட்சியாண்டில் அகசியா யூதாவின் ராஜாவாகினான்.

யேசபேலின் பயங்கரமான மரணம்

30 யெகூ யெஸ்ரயேலுக்குப் போனான். இச்செய்தியை யேசபேல் அறிந்தாள். தலையைச் சிங்காரித்து அலங்காரம் செய்து கொண்டு பிறகு ஜன்னல் வழியாகப் பார்த்தாள். 31 யெகூ நகரத்து வாசலில் நுழைந்ததும் அவள், “சிம்ரி! அவனை போல நீயும் உன் எஜமானனைக் கொன்றிருக்கிறாய்” என்றாள்.

32 யெகூ மேலே ஜன்னலைப் பார்த்து, “என் பக்கத்தில் இருப்பது யார்?” என்று கேட்டான்.

மேலிருந்து இரண்டு மூன்று அலிகள் அவனைப் பார்த்தார்கள். 33 அவர்களிடம் யெகூ, “யேசபேலைக் கீழே தள்ளுங்கள்” என்றான்.

அவர்களும் அவ்வாறே கீழே அவளைத் தள்ளினார்கள். அவளது இரத்தத்தில் கொஞ்சம் சுவர் மீதும் குதிரைகள் மீதும் தெளித்தது. குதிரைகள் அவள் மேலே நடந்துச் சென்றன. 34 யெகூ, வீட்டிற்குள் போய் உண்டு குடித்தான். அவன், “இப்போது சபிக்கப்பட்ட இந்தப் பெண்ணைப் பாருங்கள். ராஜாவின் குமாரத்தியாகையால் அவளை அடக்கம் செய்யுங்கள்” என்றான்.

35 அந்த ஆட்கள் அவளை அடக்கம்பண்ணச் சென்றனர். ஆனால் அவளது உடலைக் கண்டு பிடிக்க முடியவில்லை. அவர்கள் அவளது கபாலம், கால்கள், கைகள், ஆகியவற்றையே கண்டுபிடித்தனர். 36 அவர்கள் யெகூவிடம் திரும்பிவந்தனர். பிறகு யெகூ, “இது கர்த்தர் திஸ்பியனாகிய எலியா என்னும் தமது தொண்டனைக் கொண்டு சொன்ன வார்த்தை: ‘யெஸ்ரயேலின் நிலத்தில் யேசபேலின் மாமிசத்தை நாய்கள் தின்னும், என்றும் 37 இதுதான் யேசபேல் என்று சொல்ல முடியாதபடி அவளது பிணம் வயல் வெளியில் போடப்படும் எருவைப் போன்று ஆகும்’” என்றான்.

சமாரியாவின் தலைவர்களுக்கு யெகூ எழுதியது

10 ஆகாபின் 70 குமாரர்கள் (பேரன்கள்) சமாரியாவில் இருந்தனர். யெகூ, சமாரியாவில் அவர்களை வளர்க்கிறவர்களுக்கும், ஆள்பவர்களுக்கும், தலைவர்களுக்கும் கடிதங்களை எழுதி அனுப்பினான். 2-3 அதில் “இக்கடிதம் கண்டதும், உங்கள் எஜமானனுடைய பிள்ளைகளில் மிக நல்லவனும் மிகத் தகுதியானவனுமாகிய ஒருவனைத் தேர்ந்தெடுங்கள். உங்களிடம் இரதங்களும் குதிரைகளும் இருக்கின்றன. நீங்கள் பலப்படுத்தப்பட்ட நகரத்தில் இருக்கின்றீர்கள். உங்களிடம் ஆயுதங்களும் உள்ளன. நீங்கள் தேர்ந்தெடுத்தவனை அவனுடைய தந்தையின் சிங்காசனத்தில் உட்கார வையுங்கள். பின் உங்கள் தந்தையின் குடும்பத்திற்காகப் போராட வாருங்கள்” என்று எழுதப்பட்டிருந்தது.

ஆனால் யெஸ்ரயேலில் உள்ள தலைவர்களும் அதிகாரிகளும் பயந்தனர். அவர்கள் “யெகூவை இரண்டு ராஜாக்களாலும் தடுக்க முடியவில்லை, எங்களாலும் முடியாது!” என்று சொன்னார்கள்.

ஆகாபின் வீட்டைப் பாதுகாத்தவர்களும் நகரத்தைப் பரிபாலித்தவர்களும் மூப்பர்களும் ஆகாபின் குமாரர்களைக் கவனிப்பவர்களும் யெகூவிற்குத் தூது அனுப்பி, “நாங்கள் உங்கள் சேவகர்கள். நீங்கள் என்ன சொன்னாலும் நாங்கள் செய்கிறோம். வேறு எவரையும் ராஜாவாக்கமாட்டோம். நீங்கள் நல்லதென நினைப்பதை செய்யுங்கள்” என்றனர்.

சமாரியாவின் தலைவர்கள் ஆகாபின் குமாரர்களைக் கொல்கிறார்கள்

பிறகு யெகூ அவர்களுக்கு இரண்டாவது கடிதத்தை எழுதினான். அதில், “நீங்கள் எனக்கு அடிபணிந்து உதவுவதாக இருந்தால், ஆகாப் குமாரர்களின் தலையை வெட்டிப்போடுங்கள். நாளை இந்நேரத்திற்குள் அவர்களை என் முன்னால் யெஸ்ரயேலுக்கு கொண்டு வாருங்கள்” என்றான்.

ஆகாபுக்கு 70 குமாரர்கள் இருந்தனர். அவர்கள் நகரத் தலைவர்களால் வளர்க்கப்பட்டனர். அவர்கள் யெகூவின் கடிதத்தைக் கண்டதும், அந்த 70 குமாரர்களையும் கொன்றுபோட்டனர். தலைகளைக் கூடைகளுக்குள் போட்டு யெஸ்ரயேலிலுள்ள யெகூவிடம் அனுப்பினார்கள். ஒரு தூதுவன் யெகூவிடம் வந்து, “அவர்கள் ராஜாவின் குமாரர்களின் தலைகளைக் கொண்டு வந்திருக்கிறார்கள்!” என்றான்.

யெகூ, “விடியும்வரை நகர வாசலில் இரண்டு குவியலாக அத்தலைகளை வைத்திருங்கள்” என்று கட்டளையிட்டான்.

காலையில், யெகூ வெளியே வந்து ஜனங்கள் முன்பு நின்றான். அவன் ஜனங்களிடம், “நீங்கள் ஏதும் அறியாதவர்கள். நான் என் எஜமானனுக்கு எதிராகத் திட்டங்கள் பல வைத்திருந்தேன். நான் அவனைக் கொன்றேன். ஆனால் அவனது பிள்ளைகளைக் கொன்றது யார்? அவர்களைக் கொன்றவர்கள் நீங்கள் தான்! 10 கர்த்தர் சொன்னபடி எல்லாம் நடக்கிறது என்பதை நீங்கள் அறியவேண்டும். ஆகாபின் குடும்பத்தைப் பற்றி கர்த்தர் எலியாவின் மூலம் கூறியிருக்கிறார். இப்போது கர்த்தர் தான் செய்வதாகச் சொன்னவற்றைச் செய்து முடித்துள்ளார்” என்றான்.

11 இவ்வாறு யெகூ யெஸ்ரயேலில் ஆகாபின் குடும்பத்திலுள்ள அனைவரையும் கொன்றான். அதோடு முக்கியமான மனிதர்களையும், நெருங்கிய நண்பர்களையும் ஆசாரியர்களையும் கொன்றுப் போட்டான். ஆகாபின் ஆட்கள் யாருமே உயிரோடு விடப்படவில்லை.

அகசியாவின் உறவினர்களை யெகூ கொன்றது

12 யெகூ யெஸ்ரயேலை விட்டு சமாரியாவிற்குப் போனான். வழியில் மேய்ப்பனின் முகாம் என்று அழைக்கப்படும் இடத்தில் நின்றான். பெத்ஏகத்திற்குச் செல்லும் பாதையின் அருகில் உள்ள வீட்டுக்குச் சென்றான். அங்கே மேய்ப்பர்கள் ஆட்டு மயிர் கத்தரித்துக்கொண்டிருந்தார்கள். 13 யூதாவின் ராஜாவாகிய அகசியாவின் உறவினர்களை அங்கே சந்தித்தான். யெகூ அவர்களைப் பார்த்து, “நீங்கள் யார்?” என்றான்.

அதற்கு அவர்கள் “நாங்கள் அகசியாவின் உறவினர்கள். நாங்கள் ராஜாவின் குமாரர்களையும் ராஜ மாதாவின் (யேசபேல்) குமாரர்களையும் பார்ப்பதற்கு வந்திருக்கிறோம்” என்றனர்.

14 யெகூ (தன் ஆட்களிடம்) “இவர்களை உயிரோடு பிடியுங்கள்!” என்று கூறினான்.

அவனது ஆட்கள் அவர்களை உயிரோடு பிடித்தனர். அவர்கள் மொத்தம் 42 பேர் இருந்தனர். அவர்களில் ஒருவரும் உயிரோடு இராதபடி பெத்ஏகத் கிணறுக்கு அருகில் அவர்களை கொன்றுபோட்டனர்.

யெகூ யோனதாபை சந்தித்தது

15 அவ்விடத்தை விட்டு பிறகு யெகூ, ரேகாபின் குமாரனான யோனதாபை சந்தித்தான். அவனும் யெகூவை சந்திக்க வந்துக் கொண்டிருந்தான். யெகூ அவனை வாழ்த்தி விட்டு, “நான் உனக்கு இருப்பது போல நீ எனது உண்மையான நண்பன்தானா?” என்று கேட்டான்.

யோனதாபும், “ஆமாம், நான் உனது உண்மையான நண்பன்தான்” என்றான்.

யெகூ, “அப்படியானால் உன் கையைக் கொடு” என்று கேட்டான். அவன் தன் கையைக் கொடுத்தபோது தன் இரதத்திற்குள் இழுத்தான்.

16 யெகூ, “என்னோடு வா, நான் கர்த்தரிடம் எவ்வளவு உறுதியான பக்தி வைத்திருக்கிறேன் என்று அறிந்துகொள்ளலாம்” என்றான்.

எனவே யோனதாப் யெகூவின் இரதத்தில் பயணம் செய்தான். 17 யெகூ சமாரியாவிற்கு வந்து அங்கு உயிரோடுள்ள ஆகாபின் குடும்பத்திலுள்ள அனைவரையும் கொன்றுபோட்டான். கர்த்தர் எலியாவிடம் சொன்னபடியே அவன் செய்து முடித்தான்.

பாகாலின் பக்தர்களை யெகூ அழைத்தது

18 பிறகு யெகூ அனைத்து ஜனங்களையும் சேர்த்துக் கூட்டினான். அவன் அவர்களிடம், “ஆகாப், பாகாலுக்குச் சிறிது சேவைசெய்தான். ஆனால் யெகூ அவனுக்கு மேல் இன்னும் கூடுதலாக சேவை செய்வான்! 19 இப்போது பாகாலின் பக்தர்களையும் ஆசாரியர்களையும் கூப்பிடுங்கள். இக்கூட்டத்திற்கு யாரையும் தவறவிடாதீர்கள். பாகாலுக்குக் கொடுக்க பெரும்பலி இருக்கிறது! இக்கூட்டத்திற்கு வராதவர்களைக் கொல்வேன்!” என்று ஆணையிட்டான்.

இவ்வாறு யெகூ தந்திரம் செய்தான். அவர்கள் அத்தனை பேரையும் அழிப்பதுதான் அவனது திட்டம். 20 யெகூ, அவர்களிடம், “பாகாலுக்காக ஒரு பரிசுத்த கூட்டத்தை ஏற்பாடு செய்யுங்கள்” என்றான். ஆசாரியர்களும் அறிவித்தனர். 21 பிறகு யெகூ இஸ்ரவேல் நாடுகள் அனைத்திற்கும் ஒரு செய்தியை அனுப்பினான். பாகாலின் பக்தர்கள் அனைவரும் வந்தனர். எவரும் வீட்டிலே இல்லாமல் பாகாலின் ஆலயத்திற்கு வந்தனர். ஆலயம் ஜனங்களால் நிரம்பியது.

22 யெகூ மேலாடைகளை வைத்திருந்த வேலைக்காரனிடம், “பாகாலின் பக்தர்களுக்கெல்லாம் மேலாடைகளைக் கொண்டு வா” என்று சொன்னான். எனவே அந்த வேலைக்காரனும் பாகாலின் பக்தர்களுக்கு மேலாடைகளைக் கொண்டு வந்தான்.

23 பிறகு யெகூவும் ரேகாபின் குமாரனான யோனதாபும் பாகாலின் ஆலயத்திற்குள் நுழைந்தார்கள். பாகாலின் தொண்டர்களிடம், “இங்கே பாகாலின் பக்தர்கள் மட்டுமே இருக்கவேண்டும் என்பதை சுற்றுமுற்றும் பார்த்து உறுதி செய்துக் கொள்ளுங்கள். கர்த்தருடைய ஊழியர்கள் இருக்கக் கூடாது” என்று ஆணையிட்டான். 24 அதன்படி பாகாலின் பக்தர்கள் காணிக்கைகளையும் தகனபலிகளையும் செலுத்த ஆலயத்திற்குள் சென்றனர்.

வெளியே, யெகூவின் 80 ஆட்கள் காத்துக் கொண்டிருந்தனர். அவர்களிடம், “யாரையும் தப்பித்து போகும்படி விடாதீர்கள். எவனாவது எவனையாவது தப்பிக்கவிட்டால், அவன் தனது உயிரைக் கொடுக்க வேண்டும்” என்றான். 25 பிறகு யெகூ விரைவாகத் தகனபலி கொடுத்தபின், தனது அதிகாரிகளிடமும் தளபதிகளிடமும், “உள்ளே போய் அனைவரையும் கொல்லுங்கள், உயிரோடு எவனையும் வெளியே வரவிடாதீர்கள்” என்றான்.

எனவே தளபதிகள் தம் மெலிந்த வாள்களால் பாகாலின் பக்தர்களைக் கொன்று போட்டு பிணங்களை வெளியே எறிந்தனர். பின் ஆலயத்தின் உள்ளறைக்குள் சென்றனர். 26 ஞாபகக்கற்களை (தூண்கள்) பாகாலின் வீட்டைவிட்டு வெளியே எடுத்துப்போட்டு அவற்றை எரித்தனர். 27 பிறகு பாகாலின் நினைவுக் கற்களையும் பாகாலின் வீட்டினையும் நொறுக்கினார்கள். ஆலயத்தை ஓய்வறையாக ஒதுக்கினார்கள். எப்போதும் அசுத்தமாக வைத்திருந்தனர். ஜனங்கள் அந்த இடத்தை கழிவறையாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

28 இவ்வாறு யெகூ பாகால் ஆராதனையை இஸ்ரவேல் நாட்டில் அழித்தான். 29 ஆனால் யெகூ முழுவதுமாக நேபாத்தின் குமாரன் யெரொபெயாமின் பாவங்களிலிருந்து திரும்பவில்லை. இஸ்ரவேலின் பாவத்துக்குக் காரணமான பெத்தேல், தாண் ஆகிய இடங்களில் உள்ள தங்கக் கன்றுக் குட்டிகளை அவன் அழிக்கவில்லை.

இஸ்ரவேல் மீது யெகூவின் ஆட்சி

30 கர்த்தர் யெகூவிடம், “நல்லது செய்தாய், நான் நல்லவை எனச் சொன்னதைச் செய்தாய். நீ ஆகாபின் குடும்பத்தினரை அழித்துவிட்டாய். எனவே இஸ்ரவேலை உனது சந்ததியார், நான்கு தலை முறைகளுக்கு ஆண்டு வருவார்கள்” என்றார்.

31 ஆனால் யெகூ முழுமனதோடு கர்த்தருடைய சட்டப்படி கவனமாக வாழவில்லை. அவன் யெரொபெயாமின் பாவங்களை விட்டுவிடவில்லை.

ஆசகேல் இஸ்ரவேலைத் தோற்கடித்தது

32 அப்போது கர்த்தர் இஸ்ரவேலின் பகுதிகள் குறைந்துபோகும்படி செய்தார். இஸ்ரவேலின் ஒவ்வொரு எல்லையையும் ஆராமின் ராஜாவாகிய ஆசகேல் தாக்கி தோல்வியடையச் செய்தான். 33 ஆசகேல் யோர்தான் ஆற்று கிழக்குப் பகுதிகள் அது கீலேயாத்தின் அனைத்து பகுதிகளும் காதியர், ரூபேனியர், மனாசேயர் கோத்திரங்களின் பகுதிகளையும் வென்றான். அவன் ஆரோவேர் முதல் கீலேயாத்திலும் பாசானிலுமுள்ள பகுதிகள் முழுவதையும் வென்றான்.

யெகூவின் மரணம்

34 யெகூ செய்த பிற அருஞ்செயல்களை எல்லாம் இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகம் கூறுகிறது. 35 இவன் மரித்ததும் முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். ஜனங்கள் சமாரியாவில் இவனுடைய முற்பிதாக்களோடு அடக்கம் செய்தனர். இவனுக்குப் பிறகு இவனது குமாரன் யோவாகாஸ் புதிய ராஜா ஆனான். 36 யெகூ சமாரியாவில் இருந்து இஸ்ரவேலை 28 ஆண்டுகள் ஆண்டு வந்தான்.

யூதா ராஜாவின் அனைத்து குமாரர்களையும் அத்தாலியாள் கொன்றது

11 அத்தாலியாள் என்பவள் அகசியாவின் தாயார் ஆவாள். தன் குமாரன் மரித்துப் போனதைப் பார்த்ததும், எழுந்து அரச குடும்பத்தினரையெல்லாம் கொன்றாள்.

ராஜாவாகிய யோராமின் குமாரத்தி யோசேபாள் ஆவாள். இவள் அகசியாவிற்குச் சகோதரி ஆவாள். யோவாஸ் அகசியா ராஜாவின் குமாரர்களுள் ஒருவன். மற்றவர்கள் கொல்லப்பட்டபோது அவள் அவனைக் காப்பற்றி ஒளித்து வைத்தாள். தன் படுக்கையறையிலேயே யோவாசையும் அவனது தாதியையும் மறைத்து வைத்தாள். இவ்வாறு யோவாஸ் அத்தாலியாவால் கொல்லப்படாமல் தப்பித்தான்.

பிறகு கர்த்தருடைய ஆலயத்தில் யோவாசும் யோசேபாவும் ஆறு ஆண்டுகள் மறைந்து இருந்தனர். அத்தாலியா யூதாவை ஆண்டு வந்தாள்.

ஏழாவது ஆண்டில், தலைமை ஆசாரியனான யோய்தா 100 பேருக்கு அதிகாரிகளையும் தலைவர்களையும் காவலர்களையும் ஒருங்கே அழைத்தான். கர்த்தருடைய ஆலயத்தில் கூடச்செய்து அவர்களோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டான். அவர்களை ஆலயத்தில் வாக்குறுதி கொடுக்கச் செய்து ராஜாவின் குமாரனைக் காட்டினான்.

பின் அவன் அவர்களுக்கு ஆணையிட்டு, “நீங்கள் செய்யவேண்டிய காரியம் இதுதான். உங்களில் மூன்றில் ஒரு பங்கு பேர் ஒவ்வொரு ஓய்வு நாளில் முறைப்படி வரவேண்டும். ராஜாவின் வீட்டை கவனித்து வரவேண்டும். இன்னொரு மூன்றில் ஒரு பங்கினர் சூர் வாசலில் இருக்க வேண்டும். மூன்றில் மற்றொரு பங்கினர் காவலர்களுக்குப் பின்னாலுள்ள வாசலில் இருக்க வேண்டும். இவ்வாறு நீ ராஜாவின் வீட்டைச் சுற்றி சுவர்போல இருக்க வேண்டும. ஒவ்வொரு ஓய்வுநாளும் முடியும்போது, மூன்றில் இரண்டு பங்கினர் கர்த்தருடைய ஆலயத்தையும் ராஜா யோவாசையும் பாதுகாத்து நிற்பார்கள். நீங்கள் ராஜா யோவாசோடு தங்கி அவன் எங்கு போனாலும் போகவேண்டும். அவர்கள் எப்போதும் அவனைச் சுற்றியே இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் கையில் ஆயுதம் வைத்திருக்கவேண்டும். உங்களை நெருங்குகிற எவரையும் கொன்று விடவேண்டும்” என்றான்.

ஆசாரியன் யோய்தாவின் ஆணைப்படி தளபதிகள் செயல்பட்டார்கள். ஒவ்வொரு வரும் தம் ஆட்களை அழைத்தனர். சனிக்கிழமை ஒரு குழு யோவாசை பாதுகாத்தது. மற்ற குழுக்கள் மற்ற நாட்களில் காவல் காத்துவந்தனர். எல்லோரும் ஆசாரியன் யோய்தாவிடம் வந்தனர். 10 ஆசாரியனோ தளபதிகளுக்கு ஈட்டி கேடயம் போன்றவற்றைக் கொடுத்தான். இவை அனைத்தும் ராஜா தாவீதால் ஒரு காலத்தில் கர்த்தருடைய ஆலயத்திற்குள் வைக்கப்பட்டிருந்தன. 11 இக்காவலர்கள் ஆயுதங்களோடு வலது மூலையிலிருந்து ஆலயத்தின் இடது மூலைவரை நின்றனர். பலிபீடம், ஆலயம் போன்றவற்றைச் சுற்றிலும் நின்றனர். ராஜா ஆலயத்திற்குப் போகும்போதும் அவனைச் சுற்றி நின்றனர். 12 அவன் (யோய்தா) யோவாசை வெளியே அழைத்து வந்தான். அவன் தலையில் மகுடத்தைச் சூடி ராஜாவுக்கும் தேவனுக்கும் இடையில் ஒப்பந்தத்தை கொடுத்தனர். அவனுக்கு அபிஷேகம் செய்து புதிய ராஜாவாக நியமித்தனர். அவர்கள் கைகளைத் தட்டி, ஓசையெழுப்பி “ராஜா பல்லாண்டு வாழ்க!” என்று வாழ்த்தினார்கள்.

13 இராணி அத்தாலியாள் காவலர்களிடமிருந்தும், ஜனங்களிடமிருந்தும் எழுந்த இச்சத்தத்தை கேட்டாள். அவள் கர்த்தருடைய ஆலயத்திற்குள் போனாள். 14 ராஜா வழக்கமாக நிற்கும் தூணருகில் நின்றுகொண்டிருப்பதைக் கண்டாள். ராஜாவுக்காக அதிகாரிகள் எக்காளம் வாசிப்பதையும் கண்டாள். ஜனங்கள் மகிழ்ச்சியோடு இருப்பதையும் பார்த்தாள். அத்தாலியாள் அவள் நிலை குலைந்ததைக் காட்ட தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டாள். பின் அவள் “துரோகம்! துரோகம்!” என்று கத்தினாள்.

15 படைவீரர்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தளபதிகளுக்கு ஆசாரியன் யோய்தா கட்டளையிட்டான். யோய்தா, “ஆலயத்தை விட்டு வெளியே அத்தாலியாளைக் கொண்டு வாருங்கள். அவளைச் சார்ந்தவர்களைக் கொல்லுங்கள். ஆனால் கர்த்தருடைய ஆலயத்தில் கொல்லவேண்டாம்” என்றான்.

16 எனவே அவளை ஆலயத்தைவிட்டு வெளியே “குதிரை வாசலுக்கு” இழுத்து வந்து அங்கே அவளைக் கொன்றனர்.

17 பிறகு கர்த்தருக்கும் ராஜாவுக்கும் ஜனங்களுக்கும் இடையில் யோய்தா ஒரு ஒப்பந்தம் செய்தான். இதன்படி ராஜாவும் ஜனங்களும் கர்த்தருக்கு உரியவர்கள். பின் யோய்தா ராஜாவுக்கும் ஜனங்களுக்கும் இடையில் ஓர் ஒப்பந்தம் செய்தான். அதன்படி ராஜா ஜனங்களுக்கு நன்மை செய்ய வேண்டும், ஜனங்களும் ராஜாவுக்குக் கீழ்ப்படிந்து வாழவேண்டும்.

18 பிறகு அனைவரும் பொய்த் தெய்வமான பாகாலின் ஆலயத்திற்குச் சென்றனர். பாகாலின் உருவச்சிலைகளையும் பலிபீடங்களையும் தூள் தூளாக நொறுக்கினர். பாகாலின் ஆசாரியனான மாத்தனையும் பலிபீடத்தின் முன்னர் கொன்றனர்.

கர்த்தருடைய ஆலயத்தின் பொறுப்பாளராகச் சில மனிதரை ஆசாரியன் (யோய்தா) நியமித்தான். 19 ஆசாரியன் ஜனங்களை வழிநடத்தினான். அவர்கள் கர்த்தரின் ஆலயத்திலிருந்து ராஜாவின் வீட்டிற்குச் சென்றனர். ராஜாவோடு சிறப்பு காவலர்களும் அதிகாரிகளும் சென்றனர். அவன் ராஜாவின் வீட்டின் வாசலுக்குச் சென்றான். பிறகு (ராஜா யோவாஸ்) அவன் சிங்காசனத்தில் அமர்ந்தான். 20 ஜனங்கள் அனைவரும் மகிழ்ந்தனர். நகரம் சமாதானமாயிருந்தது. வாளால் கொல்லப்பட்ட இராணி அத்தாலியாள் அரண்மனைக்கருகில் கொல்லப்பட்டாள்.

21 யோவாஸ் ராஜாவாகும்போது அவனுக்கு ஏழு வயது.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center