Chronological
தேவன் சாலொமோனிடம் மீண்டும் வருதல்
9 இவ்வாறு சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தையும் தனது அரண்மனையையும் கட்டி முடித்தான். அவன் கட்ட விரும்பியவற்றையெல்லாம் கட்டிமுடித்தான். 2 பிறகு கர்த்தர் மீண்டும் அவன் முன் கிபியோனில் தோன்றியதுபோல தோன்றினார். 3 கர்த்தர் அவனிடம்,
“நான் உன் ஜெபத்தைக் கேட்டேன். நீ கேட்டவற்றையும் அறிந்தேன். நீ இந்த ஆலயத்தைக் கட்டினாய். நான் இதனைப் பரிசுத்த இடமாக்கினேன். எனவே நான் அங்கே என்றென்றும் மகிமைப்படுத்தப்படுவேன். எப்பொழுதும் அதைக் கவனித்து அதைப்பற்றி சிந்தித்துக்கொண்டிருப்பேன். 4 உன் தந்தையைப் போலவே நீயும் எனக்கு ஊழியம் செய்யவேண்டும். அவன் நல்லவனாகவும் உண்மையானவனாகவும் இருந்தான். நீ என் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து எனது கட்டளைகளைச் செய்து முடிக்கவேண்டும். 5 நீ இவ்வாறு செய்து வந்தால், இஸ்ரவேலரின் ராஜா உன் குடும்பத்தவனாகவே இருப்பான். இந்த வாக்குறுதியைத்தான் உனது தந்தையான தாவீதிற்குக் கொடுத்திருக்கிறேன். நான் அவனிடம், ‘இஸ்ரவேல் உன் சந்ததியிலிருந்தே எப்பொழுதும் ஆளப்படும்’ என்று கூறியிருக்கிறேன்.
6-7 “ஆனால் நீயோ அல்லது உன் பிள்ளைகளோ என்னைப் பின்பற்றாமல், நான் உனக்குத் தந்த சட்டங்களுக்கும், கட்டளைகளுக்கும் கீழ்ப்படியாமல், அந்நிய தெய்வங்களை தொழுதுகொள்வீர்களேயானால், நான் உங்களுக்குத் தந்த இந்த நாட்டைவிட்டு வெளியேற்றுவேன். மற்ற எல்லா தேசங்களின் ஜனங்களும் இஸ்ரவேலர்களை எண்ணி நகைக்கக்கூடாது. நான் ஆலயத்தைப் பரிசுத்தமாக்கினேன். இந்த இடத்தில் ஜனங்கள் என்னை மகிமைப்படுத்தலாம். ஆனால் நீங்கள் எனக்குக் கீழ்ப்படியாவிட்டால் உங்களை விலக்குவேன். 8 இந்த ஆலயம் அழிக்கப்படும். இதைப் பார்க்கிறவர்கள் வியப்பார்கள். ‘இந்த நாட்டையும் ஆலயத்தையும் ஏன் கர்த்தர் இவ்வாறு செய்தார்?’ என்பார்கள். 9 மற்றவர்களோ, ‘அவர்கள் தமது தேவனாகிய கர்த்தரை விட்டு விலகினார்கள். அதனால் இவ்வாறு ஆயிற்று. அவர்களது முற்பிதாக்களை அவர் எகிப்திலிருந்து மீட்டார். ஆனால் அவர்களோ அந்நிய தெய்வங்களை நாடினார்கள். அதனால் கர்த்தர் அவர்களுக்கு இது போன்ற தீமைகளைச் செய்தார்’ என்பார்கள்” என்றார்.
10 சாலொமோனுக்கு கர்த்தருடைய ஆலயத்தையும் அரண்மனையையும் கட்டிமுடிக்க 20 ஆண்டுகள் ஆயின. 11 அதற்குப் பின் சாலொமோன் ஈராமுக்கு கலிலேயாவில் 20 நகரங்களைக் கொடுத்தான். காரணம் அவன் ஆலயத்தையும் அரண்மனையும் கட்ட உதவி செய்தான். சாலொமோனுக்குத் தேவையான கேதுரு மரங்களையும், தேவதாரு மரங்களையும், தங்கத்தையும் கொடுத்து வந்தான். 12 எனவே, தீரு என்னும் நகரில் இருந்து பயணப்பட்டு சாலொமோன் கொடுத்த நகரங்களை எல்லாம் ஈராம் பார்வையிட்டான். அப்போது அவன் திருப்தியடையவில்லை. 13 ஈராம், “என் சகோதரனே, நீ எத்தகைய நகரங்களைக் கொடுத்திருக்கிறாய்?” என்று கேட்டான். ஈராம் மன்னன் அதற்கு காபூல் என்று பேரிட்டான். இப்பொழுது அது அவ்வாறே அழைக்கப்படுகிறது. 14 ஈராம் 9,000 பவுண்டு தங்கத்தை ஆலயம் கட்ட சாலொமோனுக்கு அனுப்பியிருக்கிறான்.
15 சாலொமோன் ஆலயத்தையும் அரண்மனையையும் கட்ட அடிமைகளை கட்டாயப்படுத்தினான். மேலும் அவர்களைப் பயன்படுத்தி பலவற்றைக் கட்டினான். அவன் மில்லோவைக் கட்டினான். எருசலேம் நகரைச் சுற்றி ஒரு சுவரையும் பின்னர் ஆத்சோரையும், மெகிதோவையும், கேசேரையும் கட்டினான்.
16 முன்பு, எகிப்து மன்னன் கேசேரைச் சண்டையிட்டு எரித்துவிட்டான். அங்கு வாழ்ந்த கானானியரையும் கொன்றான். சாலொமோன் பார்வோன் மன்னனின் குமாரத்தியையும் மணந்துக்கொண்டான். எனவே திருமணப் பரிசாக இந்நகரத்தைச் சாலொமோன் பெற்றுக்கொண்டான். 17 சாலொமோன் அந்நகரை மீண்டும் கட்டினான். அவன் கீழ்ப்பெத்தோரோனையும் கட்டி முடித்தான். 18 மேலும் பாலாத், பாலைவனத்தில் உள்ள தத்மோரயும், 19 தன் தானியங்களைச் சேகரித்து வைத்த நகரங்களையும் தன் இரதங்கள் மற்றும் குதிரைகளை வைத்திருக்கும் நகரங்களையும் அவன் கட்டினான். அவன் எருசலேம், லீபனோன் மற்றும் அவனது ஆட்சிக்குட்பட்ட இடங்கள் அனைத்திலும் தான் விரும்பியவற்றையெல்லாம் கட்டினான்.
20 அந்நாட்டில் இஸ்ரவேலர் அல்லாதாரும் வாழ்ந்தனர். அவர்கள் எமோரியர், ஏத்தியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகியோராகும். 21 இஸ்ரவேலர்களால் சிலர்களை அழிக்க முடியவில்லை. ஆனால் சாலொமோன் அவர்களை அடிமைகள்போல வேலைசெய்ய கட்டாயப்படுத்தினான், அவர்கள் இன்றும் அடிமைகளாக இருக்கின்றனர். 22 சாலொமோன் இஸ்ரவேலர்களை அடிமையாக்கவில்லை. இஸ்ரவேலர்கள் வீரர்களாகவும், அரசு அதிகாரிகளாகவும், தலைவர்களாகவும் இரத ஏவலர்களாகவும் இருந்தனர். 23 சாலொமோனின் திட்டக்குழுவில் 550 மேற்பார்வையாளர்கள் இருந்தனர். இவர்கள் வேலைக்காரர்களின் எஜமானர்கள்.
24 பார்வோன் மன்னனின் குமாரத்தி தாவீது நகரத்திலிருந்து சாலொமோன் புதிதாகக் கட்டிய அரண்மனைக்கு வந்தாள். பிறகு சாலொமோன் மில்லோவைக் கட்டிமுடித்தான்.
25 ஒவ்வொரு ஆண்டும் மூன்றுமுறை சாலொமோன் பலிபீடத்தில் சர்வாங்க தகன பலிகளையும், சமாதான பலிகளையும் செலுத்தினான். இது சாலொமோனால் கர்த்தருக்காகக் கட்டப்பட்ட பலிபீடம். அவன் கர்த்தருக்கு முன் நறுமணப் பொருட்களை எரித்தான். ஆலயத்திற்குத் தேவையான பொருட்களையும் கொடுத்துவந்தான்.
26 சாலொமோன் ராஜா ஏசியோன் கேபேரிலே கப்பங்களைச் செய்வித்தான். அந்நகரம் ஏலோத்துக்கு அருகில் செங்கடலின் கரையில் ஏதோம் நாட்டில் இருந்தது. 27 ஈராம் ராஜாவின் ஆட்களில் சிலருக்குக் கடல் பற்றி அறிவு அதிகமாக இருந்தது. அவர்களை அவன் சாலொமோனிடம் அனுப்பி கப்பற்படையில் பணிபுரியச் செய்தான். 28 சாலொமோனின் கப்பல்கள் ஒப்பீருக்குப் போனது. அங்கிருந்து 31,500 பவுண்டு தங்கத்தைக் கொண்டுவந்தது.
சாலொமோன் கட்டிய நகரங்கள்
8 சாலொமோன் கர்த்தருக்கான ஆலயத்தையும் தனது அரண்மனையையும் கட்டி முடிக்க 20 ஆண்டு காலமாயிற்று. 2 ஈராம் தனக்குக் கொடுத்த நகரங்களைப் பிறகு சாலொமோன் கட்டத்தொடங்கினான். அந்நகரங்களில் சாலொமோன் இஸ்ரவேல் ஜனங்களில் சிலரை வாழ அனுமதித்தான். 3 இதற்கு பிறகு சாலொமோன் ஆமாத் சோபாவிற்குச் சென்று அதனைக் கைப்பற்றினான். 4 சாலொமோன் வனாந்தரத்திலே தத்மோர் என்ற நகரத்தையும் கட்டினான். சாலொமோன் ஆமாத் நாட்டிலே பொருட்களைச் சேமித்து வைப்பதற்கான நகரங்களைக் கட்டினான். 5 சாலொமோன் மீண்டும் மேல்பெத்தொரோனையும் கீழ்ப்பெத்தோரோனையும் கட்டினான். அந்த ஊர்களைப் பலமான கோட்டைகளாக்கினான். இந்நகரங்களுக்கு பலமான கதவுகளையும் வாசல்களையும் தாழ்ப்பாள்களையும் அமைத்தான். 6 சாலொமோன் மீண்டும் பாலாத்தையும் தனது பொருட்களைச் சேமித்துவைத்த வேறு சில ஊர்களையும் மீண்டும் கட்டினான். இரதங்களை நிறுத்திவைப்பதற்கான எல்லா நகரங்களையும், குதிரையோட்டிகள் வாழ்வதற்கான எல்லா நகரங்களையும் நிர்மாணித்தான். எருசலேம், லீபனோன் மற்றும் தான் ராஜாவாயிருந்த நாடு முழுவதும் தான் விரும்பியவற்றை எல்லாம் கட்டிமுடித்தான்.
7-8 இஸ்ரவேலர் அல்லாத வேறு இனத்தினரும் அங்கு வாழ்ந்தனர். ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என அவர்கள் பலவகையினர். சாலொமோன் இவர்களை அடிமை வேலைச் செய்யுமாறு கட்டாயப்படுத்தினான். இவர்கள் இஸ்ரவேல் அல்லாதவர்கள். அவர்கள் இஸ்ரவேலர்களால் அழிக்கப்படாத இந்நிலப்பகுதியை விட்டுப் போனவர்களின் சந்ததியினர். இது இன்றைக்கும் அங்கே தொடர்ந்திருக்கிறது. 9 சாலொமோன் இஸ்ரவேலர் எவரையும் அடிமை வேலைச்செய்யுமாறு பலவந்தப்படுத்தவில்லை. இஸ்ரவேலர்கள் சாலொமோனின் போர் வீரர்களாக பணியாற்றினார்கள். இவர்கள் சாலொமோனின் படையில் தளபதிகளாகவும் அதிகாரிகளாகவும் இருந்தனர். இவர்கள் சாலொமோனின் தேர்ப்படை அதிகாரிகளாகவும், குதிரை வீரர்களின் அதிகாரிகளாகவும் இருந்தனர். 10 இஸ்ரவேலரில் சிலர் சாலொமோனின் முக்கியமான அதிகாரிகளுக்கான தலைவர்களாக இருந்தனர். இவ்வாறு 250 பேர் ஜனங்களை மேற்பார்வை செய்யும் தலைவர்களாக இருந்தார்கள்.
11 சாலொமோன் பார்வோனின் குமாரத்தியை தாவீதின் நகரத்திலிருந்து அழைத்துவந்து, அவளுக்காகக் கட்டியிருந்த மாளிகையில் குடிவைத்தான். சாலொமோன், “என் மனைவி தாவீதின் வீட்டிலே இருக்கக் கூடாது. ஏனென்றால் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி இருந்ததால் அவ்விடங்கள் பரிசுத்தமானவை” என்றான்.
12 பிறகு சாலொமோன் கர்த்தருக்காக தகன பலிகளை கர்த்தருடைய பலிபீடத்தில் அளித்தான். இந்தப் பலிபீடத்தை சாலொமோன் ஆலய மண்டபத்திற்கு முன்பு அமைத்திருந்தான். 13 மோசே கட்டளையிட்டபடி ஒவ்வொரு நாளும் சாலொமோன் பலிகளைச் செலுத்தி வந்தான். ஓய்வுநாட்களிலும், மாதப் பிறப்பு நாட்களின் கொண்டாட்டங்களிலும், ஆண்டின் மூன்று விடுமுறை நாட்களிலும் பலிகள் செலுத்தப்பட வேண்டியிருந்தன. புளிப்பில்லாத அப்பப் பண்டிகை, வாரங்களின் பண்டிகை மற்றும் அடைக்கலக் கூடாரப் பண்டிகை ஆகியவை ஆண்டின் மூன்று விடுமுறை நாட்கள். 14 சாலொமோன் தனது தந்தை தாவீதின் அறிவுரைகளைப் பின்பற்றினான். மேலும் சாலொமோன் ஆசாரியர்கள் குழுவினரை அவர்களது சேவைகளுக்காகத் தேர்ந்தெடுத்தான். தம் பணிகளைச் செய்யுமாறு லேவியர்களையும் நியமித்தான். ஆலயப் பணிகளில் ஒவ்வொரு நாளும் லேவியர்கள் துதிப்பாடல் இசைப்பதில் முதன்மையாக இருந்தும் ஆசாரியர்ளுக்கு உதவியும் வந்தார்கள். அவன் வாசல் காவல் குழுவில் இருந்து பலரை வாயிலைக் காப்பதற்காகத் தேர்ந்தெடுத்தான். இவ்வாறுதான் தேவமனிதனான தாவீது அறிவுறுத்தியிருந்தான். 15 ஆசாரியர்களுக்கும், லேவியர்களுக்கும் சாலொமோன் இட்ட கட்டளைகளில் எதனையும் இஸ்ரவேல் ஜனங்கள் மாற்றவோ மீறவோ இல்லை. மதிப்பு வாய்ந்த பொருட்களைக் காக்கும் வழிமுறையிலும் அவர்கள் சாலொமோனின் கட்டளைகளை மீறவில்லை. கருவூலங்ளையும் இவ்வாறே காத்துவந்தனர்.
16 சாலொமோனின் அனைத்து வேலைகளும் முடிந்தன. கர்த்தருடைய ஆலயப்பணி தொடங்கிய நாள் முதல் முடியும்வரை திட்டமிட்டபடியே மிகச் சிறப்பாக நடந்தன. எனவே காத்தருடைய ஆலய வேலையும் முடிந்தது.
17 பிறகு சாலொமோன் எசியோன் கேபர், ஏலோத் ஊர்களுக்குச் சென்றான். இவ்வூர்கள் ஏதோம் நாட்டில் செங்கடல் ஓரத்தில் உள்ளன. 18 ஈராம் என்பவன் தனது கப்பல்களை சாலொமோனுக்கு அனுப்பினான். ஈராமின் ஆட்களே கப்பலை ஓட்டினார்கள். அவர்கள் கடலில் கப்பல் ஓட்டுவதில் வல்லவர்கள். இவர்களோடு சாலொமோனின் வேலையாட்களும் சேர்ந்து ஓபிர் என்னும் நகருக்குச் சென்றனர். அங்கிருந்து சாலொமோன் ராஜாவுக்கு 450 தாலந்து பொன்னைக் கொண்டு வந்தனர்.
2008 by World Bible Translation Center