Print Page Options
Previous Prev Day Next DayNext

Chronological

Read the Bible in the chronological order in which its stories and events occurred.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
2 இராஜாக்கள் 15

யூதாவில் அசரியா அரசாண்டது

15 இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமின் 27வது ஆட்சியாண்டின் போது அமத்சியாவின் குமாரனான அசரியா யூதாவின் ராஜாவானான். அசரியா அரசாள வந்தபோது அவனுக்கு 16 வயது. அவன் எருசலேமில் 52 ஆண்டுகள் அரசாண்டான். அவனது தாயார் எருசலேமின் எக்கோலியாள் ஆகும். அசரியா தன் தந்தையைப் போலவே, கர்த்தர் சொன்ன சரியான வழியில் வாழ்ந்து வந்தான். அமத்சியா செயலாற்றிய விதத்திலேயே அசரியாவும் பின்பற்றிச் செயலாற்றினான். இவன் பொய்த் தெய்வங்களின் ஆலய மேடைகளை அழிக்கவில்லை. அந்த இடங்களில் ஜனங்கள் தொடர்ந்து பலி கொடுத்தும், நறுமணப் பொருட்களை எரித்தும், தொழுதுகொண்டும் வந்தனர்.

அசரியாவிற்குத் தொழுநோய் வரும்படி கர்த்தர் செய்தார். மரிக்கும்வரை இவன் தொழுநோயாளியாகவே இருந்தான். இவன் தனி வீட்டில் வாழ்ந்தான். இவனது குமாரனான யோதாம், அரண்மனையின் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, ஜனங்களை நியாயம்தீர்த்து வந்தான்.

அசரியா செய்த மற்ற அருஞ்செயல்கள் யூத ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. அசரியா மரித்ததும் தனது முற்பிதாக்களோடு தாவீதின் நகரத்திலே அடக்கம் செய்யப்பட்டான். அசரியாவின் குமாரனான யோதாம் அவனுக்குப் பிறகு புதிய ராஜாவானான்.

இஸ்ரவேலில் சகரியாவின் குறுகிய ஆட்சி

யெரொபெயாமின் குமாரனான சகரியா சமாரியாவிலிருந்து இஸ்ரவேலரை 6 மாத காலத்திற்கு அரசாட்சி செய்தான். இது யூதாவை அசரியா 38வது ஆண்டில் ஆளும் போது நிகழ்ந்தது. கர்த்தரால் தவறானவை என்று சொல்லப்பட்ட அனைத்துக் காரியங்களையும் சகரியா செய்தான். அவன் தன் முற்பிதாக்கள் செய்த பாவங்களையே செய்தான். இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப் பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை அவன் நிறுத்தவில்லை.

10 யாபேசின் குமாரனான சல்லூம் என்பவன் சகரியாவிற்கு எதிராக திட்டம் தீட்டினான். ஜனங்களுக்கு முன்பு இப்லேயிமில் கொன்று விட்டு புதிய ராஜாவானான். 11 சகரியா செய்த மற்ற செயல்களைப்பற்றி இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. 12 இவ்வாறு கர்த்தருடைய வார்த்தைகள் உண்மையானது. கர்த்தர் யெகூவிடம் அவனது சந்ததியார் 4 தலைமுறையினர் இஸ்ரவேல் தேசத்தை ஆள்வார்கள் என்று கூறியிருந்தார்.

இஸ்ரவேலில் சல்லூமின் குறுகிய கால ஆட்சி

13 யாபேசின் குமாரனான சல்லூம் என்பவன், யூதா வின் ராஜாவாகிய உசியாவின் 39ஆம் ஆட்சியாண்டில் இஸ்ரவேலின் ராஜாவானான். சல்லூம் ஒரு மாதம் சமாரியாவிலிருந்து ஆண்டான்.

14 காதியின் குமாரனான மெனாகேம் திர்சாவிலிருந்து சமாரியாவுக்கு வந்து யாபேசின் குமாரனான சல்லூமை வெட்டிக்கொன்றான். பிறகு அவன் புதிய ராஜா ஆனான்.

15 சகரியாவுக்கு எதிராக, சல்லூம் செய்த சதிகள் உட்பட, அவனுடைய எல்லா மீதியான செயல்களைப் பற்றியும் இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன.

இஸ்ரவேலை மெனாகேம் ஆண்டது

16 சல்லூம் மரித்தபிறகு, மெனாகேம் திப்சாவையும் அதன் சுற்றுப் பகுதிகளையும் தோற்கடித்தான். ஜனங்கள் அவனுக்கு நகர வாசலைத் திறக்க மறுத்தனர். எனவே அவன் அவர்களைத் தோற்கடித்ததும் நகரத்திலுள்ள கர்ப்பவதிகளையெல்லாம் கீறிப்போட்டான்.

17 மெனாகேம் எனும் காதியின் குமாரன் இஸ்ரவேலின் புதிய ராஜா ஆனபோது, யூதாவில் அசரியாவின் 39வது ஆட்சியாண்டு நடைபெற்றது. மெனாகேம் பத்து ஆண்டுகள் சமாரியாவிலிருந்து அரசாண்டான். 18 கர்த்தரால் தவறு என்று குறிப்பிடப்பட்ட செயல்களையெல்லாம் மெனாகேம் செய்து வந்தான். இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப் பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை அவன் நிறுத்தவில்லை.

19 அசீரியாவின் ராஜாவாகிய பூல், இஸ்ரவேலுக்கு எதிராகப் போரிடவந்தான். மெனாகேம் அவனுக்கு 75,000 பவுண்டு வெள்ளியைக் கொடுத்தான். இவ்வாறு கொடுத்ததன் மூலம் பூலின் உதவியைப் பெற்று தனது அரசை வலுப்படுத்திக்கொண்டான். 20 அனைத்து செல்வர்களிடமும் வல்லமை உள்ளவர்களிடமும் வரி வசூல் செய்து மெனாகேம் செல்வத்தைப் பெருக்கினான். அவன் ஒவ்வொருவருக்கும் 50 வெள்ளி சேக்கல் வரி விதித்தான். பிறகு அதனை இவன் அசீரியாவின் ராஜாவுக்குக் கொடுத்து வந்தான். எனவே, அசீரியாவின் ராஜா இஸ்ரவேலில் தங்காமல் விலகிப்போனான்.

21 மெனாகேம் செய்த மற்ற அருஞ்செயல்கள் எல்லாம் இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. 22 மெனாகேம் மரித்ததும் இவனது முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். இவனுக்குப் பிறகு இவனது குமாரனான பெக்காகியா புதிய ராஜா ஆனான்.

இஸ்ரவேலை பெக்காகியா அரசாண்டது

23 மெனாகேமின் குமாரனான பெக்காகியா இஸ்ரவேலை சமாரியாவிலிருந்து ஆளத் தொடங்கினான். அப்போது யூதாவில் அசரியாவின் 50வது ஆட்சியாண்டு நடந்துக் கொண்டிருந்தது. பெக்காகியா இரண்டு ஆண்டுகள் அரசாண்டான். 24 கர்த்தரால் தவறு என்று சொல்லப்பட்ட செயல்களையெல்லாம் பெக்காகியா செய்து வந்தான். இவனும் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப் பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை நிறுத்தவில்லை.

25 பெக்காகியாவின் படை அதிகாரியாக ரெமலியாவின் குமாரனான பெக்கா இருந்தான். பெக்கா பெக்காகியாவை, சமாரியா ராஜாவின் அரண்மனையிலேயே கொன்றுபோட்டான். பெக்காகியாவைக் கொன்றபொழுது பெக்காவிடம் கீலேயாத்தின் 50 ஆட்கள் இருந்தனர். பிறகு அவன் புதிய ராஜா ஆனான்.

26 பெக்காகியா செய்த மற்ற அருஞ்செயல்கள் எல்லாம் இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன.

இஸ்ரவேலைப் பெக்கா அரசாண்டது

27 ரெமலியாவின் குமாரனான பெக்கா சமாரியாவிலிருந்து இஸ்ரவேலை அரசாண்டான். அப்போது யூதாவில் அசரியாவின் 52வது ஆட்சியாண்டு நடந்துக்கொண்டிருந்தது, பெக்கா 20 ஆண்டுகள் அரசாண்டான். 28 கர்த்தரால் தவறென்று சொல்லப்பட்ட செயல்களையே பெக்கா செய்துவந்தான். இவன், இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை நிறுத்தவில்லை.

29 அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசர், வந்து இஸ்ரவேலுக்கு எதிராகப் போரிட்டான். அப்போது இஸ்ரவேலில் பெக்காவின் ஆட்சி நடந்துக்கொண்டிருந்தது. திகிலாத்பிலேசர், ஈயோன், பெத்மாக்கா எனும் ஆபேல், யனோவாக், கேதேஸ், ஆத்சோர், கீலேயாத், கலிலேயா, நப்தலியின் அனைத்து பகுதிகளையும் கைப்பற்றி இப்பகுதியிலுள்ள ஜனங்களைச் சிறைபிடித்து அசீரியாவிற்குக் கொண்டுபோனான்.

30 ஏலாவின் குமாரனான ஒசெயா என்பவன் ரெமலியாவின் குமாரனான பெக்காவிற்கு எதிராகச் சதிசெய்தான். அவனை உசியாவின் குமாரனாகிய யோதாமின் 20ஆம் ஆட்சியாண்டில் வெட்டிக்கொன்றான். புதிய ராஜாவானான்.

31 பெக்காவின் மற்ற அருஞ்செயல்கள் அனைத்தும் இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன.

யூதாவை யோதாம் அரசாண்டது

32 உசியாவின் குமாரனான யோதாம் யூதாவின் ராஜாவானான். அப்போது இஸ்ரவேலில் ரெமலியாவின் குமாரனான பெக்காவின் இரண்டாவது ஆட்சியாண்டு நடந்தது. 33 யோதாம் ஆட்சிக்கு வந்தபோது அவனுக்கு 25 வயது. இவன் எருசலேமிலிருந்து 16 ஆண்டுகள் அரசாண்டான். இவனது தாயின் பெயர் எருசாள், இவள் சாதோக்கின் குமாரத்தி ஆவாள். 34 யோதாம் தன் தந்தை உசியாவைப் போன்று, கர்த்தர் சரி என்று சொன்னதை செய்துவந்தான். 35 ஆனால் இவன் பொய்த் தெய்வங்களின் ஆலய மேடைகளை அழிக்கவில்லை. ஜனங்கள் தொடர்ந்து அந்த இடங்களில் பலியிட்டும் நறு மணப் பொருட்களை எரித்தும் தொழுதுகொண்டும் வந்தனர். கர்த்தருடைய ஆலயத்திலுள்ள மேல் கதவைக் கட்டினான். 36 யோதாமின் மற்ற அருஞ்செயல்களெல்லாம் யூத ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன.

37 அப்போது, கர்த்தர் ஆராமின் ராஜாவாகிய ரேத்சீனையும், ரெமலியாவின் குமாரனான பெக்காவையும் யூதாவிற்கு எதிராகப் போரிட அனுப்பத் தொடங்கினார்.

38 யோதாம் மரித்ததும் தனது முற்பிதாக்களோடு தாவீது நகரத்திலே அடக்கம் செய்யப்பட்டான். இவனுக்குப் பிறகு இவனது குமாரனான ஆகாஸ் என்பவன் புதிய ராஜா ஆனான்.

2 நாளாகமம் 26

யூதாவின் ராஜாவாகிய உசியா

26 யூதா ஜனங்கள் அமத்சியாவின் இடத்தில் உசியா என்பவனைப் புதிய ராஜாவாகத் தேர்ந்தெடுத்தனர். அமத்சியா, உசியாவின் தந்தை ஆவான். இது இவ்வாறு நிகழும்போது உசியாவின் வயது 16. உசியா மீண்டும் ஏலோத் நகரத்தை கட்டி யூதாவிற்குத் திருப்பிக் கொடுத்தான். அமத்சியா மரித்த பிறகு உசியா இதனைச் செய்தான். அம்த்சியாவை அவனது முற்பிதாக்களோடு அடக்கம் செய்தனர்.

உசியா ராஜாவாகும்போது அவனுக்கு 16 வயது. அவன் எருசலேமில் 52 ஆண்டுகள் அரசாண்டான். அவனது தாயின் பெயர் எக்கோலியாள். இவள் எருசலேம் நகரத்தவள். கர்த்ததருடைய விருப்பம் போலவே உசியா காரியங்களைச் செய்தான். அவனது தந்தை அமத்சியாவைப் போலவே தேவனுக்கு அடிபணிந்து வாழ்ந்து வந்தான். சகரியாவின் வாழ்நாளிலே உசியா தேவனைப் பின்பற்றினான். சகரியா அவனுக்கு எவ்வாறு தேவனுக்கு மரியாதை செலுத்துவது என்பதைப்பற்றியும் தேவனுக்கு கீழ்ப்படிவது பற்றியும் சொல்லித்தந்தான். உசியா கர்த்தரிடம் கீழ்ப்படிந்து இருந்தவரை தேவனும் அவனுக்கு வெற்றியைத் தந்தார்.

உசியா பெலிஸ்தர்களுக்கு எதிராகப் போரிட்டான். காத், யப்னே, அஸ்தோத் ஆகிய நகர சுவர்களை இடித்து வீழ்த்தினான். அஸ்தோத் நகரத்தின் அருகிலே இவன் புதிய நகரங்களைக் கட்டினான். பெலிஸ்திய ஜனங்களுக்கிடையில் வேறு இடங்களிலும் ஊர்களை கட்டினான். பெலிஸ்தர்களுடனான போரிலும், கூர்பாகாலில் இருந்த அரபியரோடான போரிலும், மெகுனியரோடான போரிலும் வெற்றிபெற உசியாவுக்கப் பெருமளவில் தேவன் உதவினார். அம்மோனியர்கள் உசியாவிற்கு காணிக்கைகளைக் கொடுத்தனர். எகிப்தின் எல்லைவரை உசியாவின் புகழ் பரவி இருந்தது. இவன் பலமிக்கவன் ஆதலால் பெரும் புகழையும் பெற்றான்.

உசியா எருசலேமில் மூலைவாசலிலும் பள்ளத்தாக்கு வாசலிலும் சுவர்களின் முடிவிலும் கோபுரங்களைக் கட்டினான். அவற்றைப் பலப்படுத்தினான். 10 உசியா வனாந்தரத்திலே கோபுரங்களைக் கட்டினான். பல கிணறுகளைத் தோண்டினான். இவனுக்கு மலைநாடுகளிலும் சமவெளிகளிலும் ஏராளமான ஆடுகள் இருந்தன. உசியா மலை நாடுகளில் விவசாயிகளைப் பெற்றிருந்தான். பயிர்கள் நன்றாக விளைந்தன. திராட்சைத் தோட்டத்தைக் கவனிப்பவர்களும் இருந்தனர். உசியா விவசாயத்தைப் பெரிதும் விரும்பினான்.

11 பயிற்சி பெற்ற வீரர்கள் நிறைந்த படை உசியாவிடம் இருந்தது. அவ்வீரர்கள் பல குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். செயலாளனான ஏயெலியும் அதிகாரியான மாசேயாவும் இப்பிரிவுகளைச் செய்தனர். அனனியாவும் ராஜாவின் அதிகாரிகளுள் ஒருவன். இவன் மற்ற அதிகாரிகளுக்குத் தலைவன். 12 இந்த வீரர்களுக்கு 2,600 தலைவர்கள் இருந்தனர். 13 இக்குடும்பத் தலைவர்களே மிகுந்த ஆற்றலுடன் போரிடவல்ல 3,07,500 வீரர்களுக்கும் பொறுப்பாளர்களாக இருந்தனர். வில்வீரர்கள் அனைவரும் பகைவர்களுக்கு எதிராக வெல்ல ராஜாவுக்கு உதவினார்கள். 14 உசியா படைக்குக் கேடயங்கள், ஈட்டிகள், தலைகவசங்கள், மார்க்கவசங்கள், வில்கள், கவண்களுக்குக் கற்கள் ஆகியவற்றைக் கொடுத்தான். 15 எருசலேமில் உசியா, புத்திசாலிகளால் அமைக்கப்பட்ட எந்திரங்களை கோபுரங்களின் மேலும், சுவர்களின் மேலும் வைத்தான். இந்த எந்திரங்கள் அம்புகளையும், கற்களையும் எறிந்தன. இதனால் உசியா பெரும் புகழ்பெற்றான். வெகு தொலை நாடுகளிலுள்ள ஜனங்களும் இவனைப்பற்றி அறிந்துகொண்டனர். அதிகமான உதவியைப் பெற்று அவன் வலிமைமிக்க ஒரு ராஜாவானான்.

16 ஆனால் உசியா பலமுள்ளவனாக ஆனதும் அவனது தற்பெருமை அவனுக்கு அழிவை விளைவித்தது. அவன் தனது தேவனாகிய கர்த்தருக்கு உண்மையுள்ளவனாக இல்லை. அவன் நறுமணப் பொருட்களை எரிக்கும் பலிபீடத்தின் மீது நறுமணப் பொருட்களை எரிப்பதற்காக கர்த்தருடைய ஆலயத்திற்குள் சென்றான். 17 அசரியா என்ற ஆசாரியனும் கர்த்தருடைய ஆசாரியர்களுள் தைரியமிக்க 80 ஆசாரியர்களும் உசியாவைப் பின்தொடர்ந்து ஆலயத்திற்குள் சென்றனர். 18 அவர்கள் உசியாவின் தவறுகளை எடுத்துச் சொன்னார்கள். அவர்கள் அவனிடம், “உசியாவே, கர்த்தருக்குத் தூபம் காட்டுவது உனது வேலையல்ல. இவ்வாறு செய்வது உனக்கு நல்லதன்று. இந்த ஆசாரியர்கள் பரிசுத்தமான நறுமணப்பொருட்களை எரிப்பதற்குப் பயிற்சிப் பெற்றவர்கள். ஆசாரியர்களும் ஆரோனின் சந்ததியார் மட்டுமே இதனைச் செய்யவேண்டும். மகா பரிசுத்தமான இடத்தை விட்டு வெளியே போ, நீ உண்மையுள்ளவனாக இல்லை. இதற்காக தேவனாகிய கர்த்தர் உம்மை கனம் பண்ணமாட்டார்” என்றனர். 19 இதனால் உசியா கோபம் கொண்டான். அவன் தன் கையில் நறுமணப் பொருட்களை எரிப்பதற்காக ஒரு கலசத்தை வைத்திருந்தான். அத்தோடு அவன் ஆசாரியர்களோடு கோபமாகப் பேசியபோது அவன் நெற்றியில் தொழுநோய் தோன்றியது. இது ஆசாரியர்களுக்கு முன்பாக கர்த்தருடைய ஆலயத்தின் பலிபீடத்தின் அருகில் நறுமணப் பொருட்களை எரிக்கும்போது நடந்தது. 20 தலைமை ஆசாரியனாகிய அசரியாவும் மற்ற ஆசாரியர்களும் இதனைக் கண்டனர். அவர்கள் அவனது நெற்றியில் ஏற்பட்ட தொழுநோயையும் கண்டனர். உடனே உசியாவை ஆலயத்தைவிட்டு வெளியேறும்படி அவர்கள் கூறினார்கள். கர்த்தர் அவனைத் தண்டித்து விட்டதால் அவனும் வேகமாக ஆலயத்தைவிட்டு வெளியேறினான். 21 உசியா எனும் ராஜா தொழுநோயாளியானான். அவனால் கர்த்தருடைய ஆலயத்திற்குள் நுழைய முடியவில்லை. ஒரு தனி வீட்டில் அவன் வசிக்க வேண்டியதாயிற்று. அவனது குமாரனான யோதாம் அரண்மனையைக் கட்டுப்படுத்தினான். அவனே ஜனங்களின் ஆளுநர் ஆனான்.

22 தொடக்ககாலம் முதல் இறுதிவரை உசியா செய்த வேறு செயல்கள், ஆமோத்சின் குமாரனான ஏசாயா எனும் தீர்க்கதரிசியால் எழுதப்பட்டுள்ளன. 23 உசியா மரித்ததும் அவனது முற்பிதாக்களோடு அவனும் அடக்கம் செய்யப்பட்டான். ராஜாக்களின் கல்லறைகளுக்கு அருகில் உள்ள வயல் வெளிகளில் உசியாவை அடக்கம் செய்தனர். ஜனங்கள், “உசியாவிற்குத் தொழு நோய் இருந்தது” என்றனர் என்பதே இதன் காரணம் யோதாம் புதிய ராஜாவாக உசியாவின் இடத்தில் அரசேற்றான். யோதாம் உசியாவின் குமாரன் ஆவான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center