Print Page Options
Previous Prev Day Next DayNext

Chronological

Read the Bible in the chronological order in which its stories and events occurred.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
1 இராஜாக்கள் 12-14

ஜனங்களின் போராட்டம்

12 1-2 சாலொமோனிடமிருந்து ஓடிப் போன நேபாத்தின் குமாரனான யெரோபெயாம் எகிப்திலேயே இருந்தான். சாலொமோன் மரித்ததை அறிந்ததும் (சேரதாவுக்குத்) திரும்பினான். இது எப்பிராயிம் மலைப்பகுதியில் இருந்தது.

சாலொமோன் ராஜா மரித்து தனது முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். அதன் பிறகு அவனது குமாரனான ரெகொபெயாம் ராஜா ஆனான். இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் சீகேமுக்குப் போனார்கள். அவர்கள், ரெகொபெயாமை ராஜாவாக்க விரும்பினார்கள். ரெகொபெயாமும் சீகேமுக்குச் சென்றான். ஜனங்கள் அவனிடம், “உங்கள் தந்தை நாங்கள் கடுமையாக உழைக்கும்படி கட்டாயப்படுத்தினார். இப்போது, அவற்றை எளிதாக்க வேண்டும். உங்கள் தந்தையைப் போல் கடுமையான வேலைகளைக் கொடுக்கவேண்டாம். அவ்வாறானால் நாங்கள் உங்களுக்கு சேவை செய்வோம்” என்றனர்.

அதற்கு ரெகொபேயாம், “மூன்று நாட்களில் திரும்பி வாருங்கள், நான் உங்களுக்குப் பதில் சொல்வேன்” என்றான். பிறகு ஜனங்கள் திரும்பிச் சென்றார்கள்.

சாலொமோன் உயிரோடு இருந்தபோது அவனுக்கு யோசனை சொல்வதற்காகச் சில முதியவர்கள் இருந்தனர். அவர்களிடம் ரெகொபெயாம் என்ன செய்வது என்று கேட்டான். ரெகொபெயாம், “இந்த ஜனங்களுக்கு நான் என்னபதில் சொல்ல வேண்டும்?” என்று கலந்து ஆலோசித்தான்.

அதற்கு மூப்பர்கள், “இன்று நீ அவர்களுக்குச் சேவகனானால், பிறகு அவர்களும் உண்மையான சேவகர்களாக உனக்கு இருப்பார்கள். அவர்களுடன் இரக்கத்தோடு பேசினால், பின் அவர்கள் உனக்காக எப்பொழுதும் வேலை செய்வார்கள்” என்றனர்.

ஆனால் அந்தப் புத்திமதியை அவன் கேட்கவில்லை. அவன் தன் இளைய நண்பர்களைக் கேட்டான். அவன் அவர்களிடம், “ஜனங்கள் என்னிடம் வந்து, ‘உங்கள் தந்தையைப்போன்று கடினமான வேலையைக் கொடுக்கவேண்டாம். எளிதான வேலையைக் கொடுங்கள்’ என்கின்றனர். நான் என்ன பதில் சொல்லவேண்டும் என நினைக்கிறீர்கள்? நான் என்ன சொல்லவேண்டும்?” என்ற கலந்து ஆலோசித்தான்.

10 ராஜாவிடம் இளைய நண்பர்களோ, “சிலர் உன்னிடம் வந்து, ‘உங்கள் தந்தை கடினமான வேலையைக் கொடுத்தார். நீங்கள் எளிதான வேலையைக் கொடுங்கள்’ என்கின்றனர். நீ அவர்களிடம், ‘என் சிறிய விரல் தந்தையின் முழு சரீரத்தைவிட பல மிக்கது என்று சொல்லவேண்டும். 11 என் தந்தை கடினமான வேலையைச் செய்யும்படி கட்டாயப்படுத்தினார். நான் அதைவிட கடினமான வேலையைத் தருவேன்! அவர் சாட்டை மூலம் கட்டாயப்படுத்தினார். ஆனால் நான் அடித்து கட்டாயப்படுத்துவேன். எனது அடிகள் தேளின் கொடுக்கைப் போலிருக்கும்’ என்றுசொல்!” என்றனர்.

12 ரெகொபெயாம் மூன்று நாட்களில் திரும்பி வரும்படி ஜனங்களிடம் கூறியிருந்தான். எனவே மூன்று நாட்களுக்குப் பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் ரெகொபெயாமிடம் வந்தனர். 13 அப்போது அவர்களிடம், ராஜா கடுமையாகப் பேசினான். அவன் மூப்பர்களின் ஆலோசனையைக் கேட்டுக் கொள்ளவில்லை. 14 அவன் தன் இளைய நண்பர்கள் சொல்லச் சொன்னதையே சொன்னான். அவன் அவர்களிடம், “என் தந்தை கடின வேலை செய்யும்படி கட்டாயப்படுத்தினார். நான் அதைவிடவும் கடின வேலைகளைத் தருவேன். என் தந்தை உங்களைச் சவுக்கால் அடித்தார். நானோ தேள் கடியைப்போல வேதனையடையுமாறு அடிப்பேன்!” என்றான். 15 எனவே ஜனங்கள் விரும்பியது போன்று ராஜா செய்யவில்லை. கர்த்தர்தாமே இவ்வாறு நிகழும்படி செய்தார். நேபாத்தின் குமாரனான யெரொபெயாமுக்குச் செய்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக கர்த்தர் இவ்வாறு செய்தார். கர்த்தர் அகியாவின் மூலமாக இந்த வாக்குறுதியைச் செய்தார். அகியா சீலோ நாட்டைச் சேர்ந்தவர்.

16 இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் புதிய ராஜா தங்கள் வேண்டுகோளைக் கேட்டுக் கொள்ளவில்லை என்று எண்ணினார்கள். எனவே அவர்கள் ராஜாவிடம்,

“நாங்கள் தாவீதின் குடும்பத்தினர்கள்தானா?
    இல்லை. ஈசாயின் நிலத்தில் எங்களுக்குப் பங்கிருக்கிறதா?
இல்லை! எனவே இஸ்ரவேல் ஜனங்கள் தம்தம் சொந்த நிலத்திற்கு திரும்பிப் போகட்டும்.
    தாவீதின் குமாரன் தமது ஜனங்களை மட்டும் ஆளட்டும்!”

என்று கூறினர். எனவே அவர்கள் தங்கள் வீட்டிற்குப் போனார்கள். 17 ஆனால் ரெகொ பெயாம் யூதா நகரங்களில் வாழும் இஸ்ரவேலர்கள் முழுவதையும் ஆண்டு வந்தான்.

18 அதோனிராம் என்பவன் வேலைக்காரர்களின் பொறுப்பாளனாக இருந்தான். ராஜா அவனை ஜனங்களிடம் பேசிப்பார்க்குமாறு அனுப்பினான். ஆனால் ஜனங்கள் அவனைக் கல்லெறிந்து கொன்றனர். பின் ராஜா தனது இரதத்தில் ஏறி எருசலேமிற்குத் தப்பித்து ஓடினான். 19 இவ்வாறு இஸ்ரவேல் ஜனங்கள் தாவீதின் குடும்பத்திற்கு எதிராகப் போரிட்டனர். அவர்கள் இன்றும் தாவீதின் குடும்பத்திற்கு எதிராக உள்ளனர்.

20 யெரொபெயாம் திரும்பி வருவதை இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் அறிந்தனர். எனவே ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து அவனை இஸ்ரவேல் முழுமைக்கும் ராஜாவாக்கினார்கள். யூதாவின் கோத்திரத்தினர் மட்டும் தாவீதின் குடும்பத்தைப் பின்பற்றுகிறவர்களாக இருந்தனர்.

21 ரெகொபெயாம் எருசலேமுக்குப் போய் யூதா மற்றும் பென்யமீன் கோத்திரத்தாரை ஒன்று சேர்த்தான். இது 1,80,000 பேர் கொண்ட படையாயிற்று. ராஜா இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிராகச் சண்டை போட விரும்பினான். தனது ஆட்சி பீடத்தைத் திரும்பப்பெற விரும்பினான். 22 ஆனால் கர்த்தர் சேமாயா என்ற தீர்க்கதரிசியோடு பேசினார். கர்த்தர், 23 “நீ யூதாவின் ராஜாவாகிய, சாலொமோனின் குமாரன், ரெகொ பெயாமிடம் கூறு. அத்துடன் யூதா மற்றும் பென்யமீன் ஜனங்களிடமும் கூறு. 24 நீ அவர்களிடம், ‘உனது சகோதரர்களோடு சண்டை போடவேண்டாம் என்று கர்த்தர் சொல்கிறார். ஒவ்வொருவரும் வீட்டிற்குப் போங்கள், நான் இவ்வாறு நிகழும்படி செய்தேன்!’ என்று சொல்” என்றார். எனவே ராஜாவின் படையிலுள்ள அனைவரும் கர்த்தருடைய கட்டளைக்கு அடிப்பணிந்து வீட்டிற்குத் திரும்பினார்கள்.

25 சீகேம் என்பது எப்பிராயீம் நாட்டின் மலை நகரம். அதனை ராஜா யெரொபெயாமும் பலம் பொருந்தியதாக ஆக்கி அங்கே வாழ்ந்தான். பின்னர் பெனூவேலைப் பலமாக்கி அங்கே வாழ்ந்தான்.

26-27 யெரொபெயாம் தனக்குள்ளேயே, “ஜனங்கள் எருசலேமில் தொடர்ந்து கர்த்தருடைய ஆலயத்திற்கு காணிக்கைகளை அளிக்கச் செல்வார்களேயானால், பின் அவர்கள் தாவீதின் குடும்பத்தால் ஆளப்படவேண்டும் என விரும்புவார்கள். அவர்கள் ரெகொபெயாமைப் பின்பற்றி, அவனை மீண்டும் ராஜாவாக்குவார்கள். என்னைக் கொன்றுவிடுவார்கள்” என எண்ணினான். 28 எனவே அவன் தன்னைச் சார்ந்தவர்களோடு கலந்து யோசித்தான். அவன் இரண்டு தங்க கன்றுக்குட்டிகளைச் செய்தான். ஜனங்களிடம், “இனிமேல் நீங்கள் எருசலேம் போய் தொழுதுகொள்ள வேண்டாம். உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த தெய்வங்கள் இவைகள் தான்” என்றான். 29 பின்னர் பெத்தேலில் ஒரு கன்றுகுட்டியும், தாண் நகரில் ஒரு கன்றுக் குட்டியும் வைத்தான். 30 ஜனங்கள் பெத்லேலுக்கும் தாணுக்கும் போய் கன்றுக்குட்டிகளின் உருவங்களை வழிபட்டனர். இது பெரிய பாவமானது.

31 யெரொபெயாமும் உயர்ந்த மலையிடங்களில் ஆலயங்களைக் கட்டினான். அதற்கு ஆசாரியர்களாக இஸ்ரவேலின் வெவ்வேறு கோத்திரங்களிலிருந்து தேர்ந்தெடுத்தான். (அவன் லேவியர் கோத்திரத்திலிருந்து மட்டும் ஆசாரியர்களைத் தேர்ந்தெடுக்கவில்லை). 32 ராஜா புதிய விடுமுறைநாளையும் உருவாக்கினான். இது பஸ்கா பண்டிகையைப்போன்று யூதாவில் விழாவாயிற்று. ஆனால் இது எட்டாவது மாதத்தில் 15வது நாள், முதல் மாதத்தின் 15வது நாள் இல்லை. அந்த காலத்தில் பெத்தேலில் பலிபீடத்தில் பலவித பலிகளைச் செய்தான். அப்பலிகள் அவனால் செய்யப்பட்ட காளைகளுக்கு உரியதாயிற்று. அங்கே பெத்தேல் நகரிலேயே ராஜா ஆசாரியர்களை தேர்ந்தெடுத்து தொழுகைக்கு ஏற்பாடு செய்தான். 33 இவ்வாறு ராஜா, இஸ்ரவேலுக்கு உரிய விடுமுறைக்கு தன் சொந்த நாளை தேர்ந்தெடுத்துக் கொண்டான். இது எட்டாவது மாதத்தின் 15வது நாள். அப்போது அவன் பலிபீடத்தில் பலியிட்டு நறுமணப் பொருட்களை எரித்தான். இவை பெத்தேல் நகரில் நடந்தது.

பெத்தேலுக்கு எதிராக தேவன் பேசுதல்

13 கர்த்தர், யூதாவிலுள்ள தேவமனிதனைப் பெத்தேலுக்கு போகும்படி கட்டளையிட்டார். அவன் அங்கே போனபோது யெரொபெயாம் பலிபீடத்தின் முன்னால் நறுமண வாசனைப் பொருட்களைச் செலுத்திக்கொண்டிருந்தான். பலிபீடத்திற்கு எதிராகப் பேசுமாறு கர்த்தர் அந்த தேவமனிதனுக்குக் கட்டளையிட்டார். அவனும்,

“பலிபீடமே, கர்த்தர் உன்னிடம் கூறுகிறார், ‘தாவீதின் குடும்பத்தில் யோசியா என்பவன் இருக்கிறான். இந்த ஆசாரியர்களெல்லாம் இப்போது பொய்த் தெய்வங்களை தொழுது வருகின்றனர். எனவே பலிபீடமே, யோசியா என்பவன் உன்மேல் தூபம் காட்டுகிற மேடையின் ஆசாரியர்களை உன்மேல் பலியிடுவான். அந்த ஆசாரியர்கள் நறுமணப் பொருட்களைப் போட்டு எரிக்கின்றனர். ஆனால் யோசியாவோ மனித எலும்புகளைப் போட்டு எரிப்பான். பிறகு மீண்டும் உன்னைப் பயன்படுத்த முடியாது!’” என்றான்.

இவையெல்லாம் நிகழும் என்பதற்கான சான்றையும் அந்த தேவமனிதன் காட்டினான். அவன், “இதுதான் கர்த்தர் என்னிடம் சொன்ன அத்தாட்சியாகும். கர்த்தர், ‘இந்த பலிபீடம் வெடித்து இதிலுள்ள சாம்பல் தரையிலேவிழும்’ என்று சொன்னார்” என்றான்.

ராஜாவாகிய யெரொபெயாம் பெத்தேலின் பலிபீடத்தைப்பற்றி தேவமனிதனிடமிருந்து செய்தியைக் கேட்டான். அவன் தன் கையைப் பலிபீடத்திலிருந்து நீட்டி, “அவனை பிடியுங்கள்!” என்றான். ஆனால் நீட்டிய அந்தக் கை, மடக்க முடியாத அளவிற்கு முடங்கிப்போனது. பலிபீடமும், தூள் தூளாகச் சிதறி உடைந்துபோனது. அதன் சாம்பல் தரையில் சிந்தியது. தேவமனிதன் சொன்னது தேவனிடமிருந்து வந்தது என்பதற்கு இதுவே சாட்சியாயிற்று. அப்போது ராஜா அந்தத் தேவமனிதனிடம், “எனக்காக உன் தேவனாகிய கர்த்தரிடம் ஜெபம் செய். எனது கையை குணமாக்கும்படி கர்த்தரைக் கேள்” என்றான்.

தேவமனிதனும் அவ்வாறே ஜெபிக்க அவனது கை முன்பு போலாயிற்று. ராஜாவும் தேவமனிதனிடம், “என்னோடு என் வீட்டிற்கு வா. என்னோடு உணவருந்து. உனக்குப் பரிசளிப்பேன்” என்றான்.

ஆனால் தேவமனிதனோ ராஜாவிடம், “உனது ஆட்சியில் பாதியைக் கொடுத்தாலும், என்னால் உன்னோடு வரமுடியாது, இந்த இடத்தில் என்னால் எதையும் உண்ணவோ குடிக்கவோ கூடாது. எதையும் உண்ணவோ அல்லது குடிக்கவோ கூடாது என எனக்கு கர்த்தர் கட்டளையிட்டார். நான் இங்கு வந்த பாதைவழியே பயணம் செய்யக்கூடாது என்றும் கர்த்தர் கட்டளையிட்டிருக்கிறார்” என்றான். 10 எனவே அவன் வேறு பாதை வழியாகத் தன் பயணத்தைத் தொடர்ந்தான்.

11 பெத்தேலில் ஒரு முதிய தீர்க்கதரிசி இருந்தான். அவனது குமாரர்கள் அவனிடம் வந்து தேவமனிதன் பெத்தேலில் செய்ததைச் சொன்னார்கள், ராஜாவிடம் சொன்னதையும் சொன்னார்கள். 12 அதற்கு அந்த முதிய தீர்க்கதரிசி, “அவன் எந்தச் சாலை வழியாகத் திரும்பிப் போனான்?” என்று கேட்டான். அவர்களும் அந்தச் சாலையைச் சுட்டிக்காட்டினார்கள். 13 அவன் தனது கோவேறு கழுதைக்குச் சேணத்தை கட்டுமாறு வேண்டினான். அவனது பிள்ளைகளும் அவ்வாறே செய்தனர். அவனும் அக்கழுதையின் மீது ஏறிப்போனான்.

14 முதிய தீர்க்கதரிசி அந்தத் தேவமனிதனைப் பின் தொடர்ந்து போனான். தேவமனிதன் கர்வாலி மரத்தின் கீழ் இருப்பதை அவன் கண்டான், “யூதாவிலிருந்து வந்தத் தேவமனிதன் நீதானா?” என்று கேட்டான்.

அந்த தேவமனிதன், “ஆமாம், நான்தான்” என்றான்

15 முதிய தீர்க்கதரிசி “என்னோடு வீட்டிற்கு வந்து உணவருந்துங்கள்” என்று வேண்டினான்.

16 ஆனால் அந்தத் தேவமனிதன், “என்னால் உங்களோடு வீட்டிற்கு வரமுடியாது. இந்த இடத்தில் உங்களோடு உண்ணவோ குடிக்கவோ கூடாது. 17 கர்த்தர் எனக்கு, ‘இந்த இடத்தில் எதையும் உண்ணவோ குடிக்கவோ கூடாது. நீ சென்ற சாலையின் வழியே மீண்டும் செல்லக்கூடாது’ என்று கட்டளையிட்டுள்ளார்” என்றான்.

18 பிறகு முதிய தீர்க்கதரிசி, “நானும் உங்களைப் போன்று தீர்க்கதரிசிதான்” என்றான். மேலும் அவன் ஒரு பொய்ச் சொன்னான். அவன், “தேவதூதன் ஒருவன் கர்த்தரிடத்திலிருந்து வந்தான். அவன் உங்களை எனது வீட்டிற்கு அழைத்துப்போய் உண்ணவும் குடிக்கவும் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டான்” என்றான்.

19 எனவே தேவமனிதன் முதியவனோடு அவனது வீட்டிற்குப்போய் உண்டான். அவனோடு குடித்தான். 20 அவர்கள் மேஜையின் முன்னால் உட்கார்ந்திருக்கும்போது, கர்த்தர் முதிய தீர்க்கதரிசியிடம் பேசினார். 21 முதியவனும், அந்த தேவமனிதனிடம், “கர்த்தர் உனக்கிட்ட கட்டளையை மீறினாய்! அவருக்குக் கீழ்ப்படியவில்லை. 22 இந்த இடத்தில் எதையும் உண்ணவோ அல்லது குடிக்கவோ கூடாது என்று கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டார். ஆனால் நீ திரும்பி வந்து உண்டு குடித்தாய். எனவே உனது பிணம் உன் குடும்பக் கல்லறையில் அடக்கம் செய்யப்படாமல் போகும்” என்றான்.

23 தேவமனிதன் உணவருந்தி முடித்தான். முதிய தீர்க்கதரிசி பிறகு கழுதையில் அவனுக்காக சேணத்தை கட்டி அவன் போனான். 24 அவன் பாதையில் பயணம் செய்யும்போது, ஒரு சிங்கம் வந்து அவனைக் கொன்றுபோட்டது. அவனது உடல் பாதையில் கிடக்க அருகில் சிங்கமும் கழுதையும் நின்றுகொண்டிருந்தன. 25 சிலர் அவ்வழியாக வந்தனர். அவர்கள் பிணத்தையும் சிங்கத்தையும் கண்டு முதிய தீர்க்கதரிசியிடம் வந்து தாங்கள் கண்டதைக் கூறினார்கள்.

26 அவன்தான் தந்திரம் செய்து தீர்க்கதரிசியைத் திருப்பி அழைத்தவன். அவன் அனைத்தையும் கேட்டபின், “அந்தத் தேவமனிதன் கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை. எனவே சிங்கத்தை அனுப்பி கொன்றுவிட்டார். இவ்வாறு செய்வேன் என்று கர்த்தர் ஏற்கெனவே கூறியிருக்கிறார்” என்றான். 27 பிறகு அவன் தன் குமாரர்களிடம், “என் கழுதைக்கு சேணத்தைக் கட்டுங்கள்” என்றான். அவனது குமாரர்களும் அவ்வாறே செய்தனர். 28 அவன் சாலைக்குப் போய் தீர்க்கதரிசியின் பிணத்தைப் பார்த்தான். கழுதையும் சிங்கமும் அப்பொழுதும் அங்கே நின்றுகொண்டிருந்தன. சிங்கம் அந்த உடலைத் தின்னவில்லை. கழுதையையும் எதுவும் செய்யவில்லை.

29 முதிய தீர்க்கதரிசி அந்த பிணத்தை எடுத்து தனது கழுதையின் மீது வைத்தான். அதனை நகரத்திற்குக் கொண்டுவந்து அவனுக்காக அழுதான். 30 அவனைத் தனது குடும்பக் கல்லறையிலேயே அடக்கம் செய்தான். பின் அவனுக்காக அழுது, “என் சகோதரரே, உங்களுக்காக நான் வருந்துகிறேன்” என்று புலம்பினான். 31 எனவே அந்த முதிய தீர்க்கதரிசி சவ அடக்கத்தை முடித்த பின், தன் குமாரர்களிடம், “நான் மரித்த பின்னும், என்னை இதே கல்லறையில் அடக்கம் செய்யுங்கள். எனது எலும்புகளை இவனது எலும்புகளுக்கு அருகில் வையுங்கள். 32 இவன் மூலமாக கர்த்தர் சொன்னதெல்லாம் உறுதியாக நிறைவேறும். கர்த்தர் இவன் மூலமாக பெத்தேலின் பலிபீடத்திற்கு எதிராகவும் சமாரியாவின் நகரங்களிலுள்ள பொய்த் தெய்வங்களுக்கு எதிராகவும் பேசினார்” என்றான்.

33 யெரொபெயாம் ராஜா மாறவில்லை. தொடர்ந்து தீமைகளைச் செய்துவந்தான். ஆசாரியர்களாக வெவ்வேறு கோத்திரங்களிலிருந்து தேர்ந்தெடுத்தான். அவர்கள் பொய்த் தெய்வங்களுக்கு ஆராதனை செய்தனர். ஆசாரியராக யார் விரும்பினாலும் விரும்பியபடி அனுமதிக்கப்பட்டனர். 34 இச்செயல்களே பெரும்பாவமாகி அவனது ஆட்சி அழிய காரணமாயிற்று.

யெரொபெயாம் குமாரனின் மரணம்

14 அப்போது, யெரொபெயாமின் குமாரன் அபியா என்பவன் நோய்வாய்ப்பட்டான். ராஜா தன் மனைவியிடம், “சீலோவிற்குப் போ. அகியா தீர்க்கதரிசியைப் பார். அவர்தான் நான் இஸ்ரவேலின் ராஜா ஆவேன் என்று கூறினார். ஜனங்கள் அடையாளம் காணமுடியாதவாறு ஆடை அணிந்துக்கொள். தீர்க்கதரிசிக்கு 10 துண்டு அப்பங்களையும், பணியாரங்களையும், ஒரு ஜாடி தேனையும் கொடு. நம் குமாரனுக்கு என்ன ஏற்படும் என்றும் கேள். அகியா தீர்க்கதரிசி உனக்கு சரியாகச்சொல்லுவார்” என்றான்.

ராஜா சொன்னதுபோலவே அவனது மனைவியும் செய்தாள். அவள் தீர்க்கதரிசியான அகியாவின் வீட்டிற்குப் போனாள். அவன் முதுமையடைந்து பார்வையற்றுப் போய் இருந்தான். ஆனால் கர்த்தர் அவனிடம், “யெரொபெயாமின் மனைவி தன் குமாரனைப்பற்றி உன்னிடம் கேட்கவருகிறாள். ஏனென்றால் அவன் நோய்வாய்ப்பட்டிருக்கிறான்” என்றார். அவன் என்ன சொல்லவேண்டும் என்பதையும் கர்த்தர் அவனுக்கு சொல்லியிருந்தார்.

ராஜாவின் மனைவி அகியாவின் வீட்டிற்கு வந்தாள். தன்னை யாரென்று ஜனங்கள் அறிந்துக்கொள்ளாதபடி நடந்துக்கொண்டாள். அவள் கதவருகே வந்ததை அறிந்ததும் அவன், “யெரொபெயாமின் மனைவியே வருக, உன்னைப்பற்றி மற்றவர்கள் வேறுயாராகவோ நினைக்கும்படி ஏன் நீ நடந்துக்கொள்கிறாய்? உனக்கு ஒரு கெட்டச்செய்தியை வைத்திருக்கிறேன். யெரொபெயாமிடம் போய் இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர் என்ன சொன்னார் என்பதைப் போய் சொல். கர்த்தர், ‘யெரொபெயாம், நான் உன்னை அனைத்து இஸ்ரவேலர்களிடமிருந்தும் தேர்ந்தெடுத்தேன். எனது ஜனங்களை ஆளும்படிச் செய்தேன். தாவீதின் குடும்பம் இஸ்ரவேலை ஆண்டுக்கொண்டு இருந்தது. ஆனால் நான் அதனை அவர்களிடமிருந்து எடுத்து உன்னிடம் கொடுத்தேன். ஆனால் நீ எனது ஊழியனான தாவீதைப்போல் நடந்துக்கொள்ளவில்லை. அவன் எப்போதும் எனக்குக் கீழ்ப்படிந்தான். முழுமனதோடு அவன் என்னைப் பின் தொடர்ந்தான். எனக்கு ஏற்றதையே அவன் செய்துவந்தான். ஆனால் நீ பெரும் பாவங்களை செய்துவிட்டாய். உனது பாவங்கள் உனக்கு முன்னால் ஆண்டவர்களின் (ஆட்சி செய்தவர்களின்) பாவங்களைவிட மிக மோசமானது. என்னைப் பின்பற்றுவதைவிட்டு, நீயே விக்கிரகங்களையும் அந்நிய தெய்வங்களையும் செய்தாய். இது எனக்கு கோபமூட்டியது. 10 எனவே உனது குடும்பத்திற்குத் துன்பங்களைத் தருவேன். உன் குடும்பத்திலுள்ள அனைத்து ஆண்களையும் கொல்வேன். நெருப்பு, சாணத்தை அழிப்பது போன்று நான் உன் குடும்பம் முழுவதையும் அழித்துப்போடுவேன். 11 இந்நகரில் மரித்துப்போகும் உன் குடும்பத்தானின் பிணத்தை நாய்கள் உண்ணும். வயலில் மரிப்பவர்களை பறவைகள் உண்ணும். இவற்றைக் கர்த்தர் சொன்னார்’” என்றான்.

12 பின் அகியா தீர்க்கதரிசி மேலும் யெரொபெயாமின் மனைவிடம் பேசினான், “இப்போது வீட்டிற்குப் போ. நீ எப்பொழுது நகரத்திற்குள் நுழைகிறாயோ அப்போது உன் குமாரன் மரிப்பான். 13 இஸ்ரவேலர்கள் அனைவரும் அவனுக்காக அழுது அடக்கம் செய்வார்கள். உன் குடும்பத்தில் அவன் மட்டுமே அடக்கம் செய்யப்படுவான். இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தருக்கு அவன் ஒருவன் மட்டுமே யெரொபெயாமின் குடும்பத்தில் பிடித்தமானவன் என்பதுதான் காரணம். 14 இஸ்ரவேலருக்குப் புதிய ராஜாவை கர்த்தர் ஏற்படுத்துவார். அவன் யெரொபெயாமின் குடும்பத்தை அழிப்பான். இது விரைவில் நடைபெறும். 15 பிறகு கர்த்தர் இஸ்ரவேலர்களைத் தாக்குவார். அவர்கள் ஆற்றங்கரையிலுள்ள நாணலைப்போன்று அசைவார்கள். அவர்களை இந்த நல்ல நாட்டினின்றும் கர்த்தர் துரத்துவார். இந்த நாடு கர்த்தரால் அவர்களின் முற்பிதாக்களுக்கு கொடுக்கப்பட்டது. அவர் அவர்களை ஐபிராத்து ஆற்றுக்கு அப்பால் சிதறடிப்பார். இஸ்ரவேல் ஜனங்கள் மீது கர்த்தர் கோபத்தோடு இருப்பதால் இவ்வாறு செய்வார். காரணம் அவர்கள் பொய்த் தெய்வங்களுக்கு கம்பங்கள் அமைத்து தொழுதுகொண்டனர். 16 ரொபெயாம் தானும் பாவம் செய்து இஸ்ரவேல் ஜனங்களையும் பாவத்துக்குட்படுத்தினான். எனவே கர்த்தர் அவர்களைத் தோற்கடிப்பார்” என்றான்.

17 ராஜாவின் மனைவி திர்சாவிலுள்ள தன் வீட்டிற்குத் திரும்பினாள். அவள் வீட்டிற்குள் நுழைந்ததும், அவளது குமாரன் மரித்தான். 18 இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் அவனுக்காக அழுது அவனை அடக்கம் செய்தனர். இது கர்த்தர் சொன்னது போலவே நடந்தது, கர்த்தர் தன் ஊழியனான, தீர்க்கதரிசி அகாயாவின் மூலம் இதைச் சொன்னார்.

19 ராஜா வேறுபல செயல்களைச் செய்தான். பல போர்களைச் செய்து தொடர்ந்து ஜனங்களை ஆண்டான். இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் அவன் செய்தது எல்லாம் எழுதப்பட்டிருக்கிறது 20 அவன் 22 ஆண்டுகள் அரசாண்டான். அவன் மரித்ததும் அவனது முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். அவனக்குப் பின் அவனது குமாரன் நாதாப் ராஜா ஆனான்.

யூதாவின் ராஜா ரெகொபெயாம்

21 சாலொமோனின் குமாரனான ரெகொபெயாம் யூதாவின் ராஜாவாகிய போது, அவனுக்கு 41 வயது. அவன் எருசலேமில் 17 ஆண்டுகள் அரசாண்டான். கர்த்தரை பெருமைப்படுத்துவதற்காக தேர்ந்தெடுத்த நகரம் இதுதான். அவர், இந்த நகரத்தை பிற அனைத்து இஸ்ரவேல் நகரங்களில் இருந்து தேர்ந்தெடுக்கிறார். அவனது தாயான நாமாள் அம்மோனியளாக இருந்தாள்.

22 யூதாவிலுள்ள ஜனங்களும் பாவம் செய்தனர். அவர்களின் பாவம் அவர்களின் முற்பிதாக்களின் பாவத்தைவிட மிகுதியாயிற்று. இதனால் கர்த்தருக்கு அவர்கள் மீது கோபமும் மிகுதியானது. 23 அவர்கள் பொய்த் தெய்வங்களுக்கு உருவங்களும், நினைவு சின்னங்களும், தூண்களும் கட்டினார்கள். அவர்கள் இவற்றை ஒவ்வொரு மலை மீதும் ஒவ்வொரு பசுமையான மரத்தடியிலும் அமைத்தனர். 24 பாலின உறவுக்காக தங்கள் உடலைவிற்று அந்நியதெய்வங்களுக்கு பணி செய்த ஆண்கள் இருந்தார்கள். இதனால் யூதா நாட்டினர் பல தவறுகளைச் செய்தனர். இந்நாட்டில் இதற்கு முன்னால் இருந்தவர்களும் இது போல் தீயசெயல்களைச் செய்ததால் அவர்களின் நாட்டை தேவன் இஸ்ரவேலர்களிடம் கொடுத்துவிட்டார்.

25 ரெகொபெயாம் ராஜாவாகிய ஐந்தாம் ஆண்டில், எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் எருசலேம் மீது படையெடுத்தான். 26 அவன் கர்த்தருடைய ஆலயத்திலிருந்த பொக்கிஷங்களையும் அரண்மனையிலுள்ள செல்வங்களையும் சூறையிட்டான். ஆராம் நாட்டு ராஜாவிடம் தாவீது அபகரித்து வந்த தங்கக் கேடயங்களையும் எடுத்துக்கொண்டான். 27 அதனால் ராஜா அவற்றுக்குப் பதிலாக வெண்கல கேடயங்களைச் செய்து அவற்றை வாயில் காப்போர்களின் தலைவரின் பொறுப்பில் வைத்தான். 28 ஒவ்வொரு தடவையும் ராஜா வரும்போது, இவர்கள் கேடயங்களை கர்த்தருடைய ஆலயத்திற்குள் எடுத்து வருவார்கள். பின் பழையபடி பாதுகாப்பாக வைத்துக்கொள்வார்கள்.

29 ரெகொபெயாம் ராஜா செய்தவற்றையெல்லாம் யூத ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. 30 ரெகொபெயாமும் யெரொபெயாமும் அடிக்கடி தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டனர்.

31 ரெகொபெயாம் மரித்து தமது முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். அவன் தாவீது நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான். (அவனது தாயின் பெயர் நாமாள், அவள் அம்மோனியள்.) அவனது குமாரனான அபியா அடுத்து ராஜாவானான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center