Chronological
ஞான மொழிகளின் ஒரு தொகுப்பு
7 நல்ல மணமிக்கப் பொருட்களைவிட நல்ல பெயரைப் பெறுவது நல்லது.
ஒருவனது பிறந்த நாளைவிட மரித்தநாளும் சிறந்ததுதான்.
2 விருந்துகளுக்குச் செல்வதைவிட கல்லறைக்குச் செல்வது சிறந்தது.
ஏனென்றால் எல்லோரும் மரிக்க வேண்டியவர்களே.
வாழ்கின்ற அனைவரும் இதனை ஒப்புக்கொள்ளவேண்டும்.
3 சிரிப்பைவிடச் சோகம் சிறந்தது.
ஏனென்றால் நமது முகம் சோகமடையும்போது நமது இதயம் நல்லதாகிறது.
4 ஞானமுள்ளவன் மரணத்தைப்பற்றிச் சிந்திக்கிறான்.
ஆனால் அறிவற்றவனோ எப்பொழுதும் நல்ல நேரத்தைப்பற்றியே நினைத்துக்கொண்டிருக்கிறான்.
5 ஞானமுள்ளவனால் விமர்சிக்கப்படுவது
அறிவற்றவர்களால் புகழப்படுவதைவிட நல்லது.
6 அறிவற்றவர்களின் சிரிப்பு பயனற்றது.
அது பானையின் கீழே எரியும் முட்களைப் போன்றது.
முட்கள் வேகமாக எரியும்,
எனவே பானை சூடாகாது.
7 எவராவது போதுமான பணம் கொடுப்பதானால் ஞானமுள்ளவர்கள் தம் ஞானத்தை மறக்கத் தயார்.
அப்பணம் அவனது புரிந்துகொள்ளுதலை அழித்துவிடும்.
8 ஒன்றைத் துவங்குவதைவிட முடிப்பது நல்லது.
ஒருவன் வீண் பெருமையும், பொறுமையின்மையும் கொள்வதைவிட கனிவும், பொறுமையும் சிறந்தது.
9 விரைவாகக் கோபம் அடையாதே.
ஏனென்றால் கோபம் முட்டாளாக்கும்.
10 “இந்நாட்களைவிட ‘அக்கால நாட்கள்’ நன்றாக இருந்தன என்று சொல்லாதே.
என்ன நடந்தது?” என்று கேட்காதே.
அந்தக் கேள்வியைக் கேட்கும்படி ஞானம் நம்மை வழிநடத்தாது.
11 உன்னிடம் செல்வம் இருக்குமானால் ஞானம் அதைவிடச் சிறந்தது. உண்மையில் ஞானமுள்ளவர்கள் தேவைக்கு மிகுதியாகவே செல்வத்தைப் பெறுகிறார்கள். 12 ஞானமுள்ளவனால் செல்வந்தனாக முடியும். ஞானம் அதன் சொந்தக்காரனைப் பாதுகாக்கும்.
13 தேவனால் படைக்கப்பட்ட பொருட்களைப் பாருங்கள். ஒருவேளை அது தவறு என்று நினைத்தாலும் உன்னால் எதையும் மாற்ற முடியாது. 14 வாழ்க்கை நல்லதாக இருந்தால், அனுபவி. வாழ்க்கை கடினமாக இருக்கும்போது தேவன் நமக்கு நல்ல காலத்தையும் கஷ்டகாலத்தையும் கொடுக்கிறார் என்று நினைத்துக்கொள். எதிர்காலத்தில் என்ன நிகழும் என்பது எவருக்கும் தெரியாது.
ஜனங்களால் உண்மையில் நல்லவர்களாக முடியாது
15 எனது குறுகிய வாழ்வில் நான் எல்லாவற்றையும் பார்த்திருக்கிறேன். நல்லவர்கள் இளமையிலேயே மரித்துப்போகிறார்கள். தீயவர்கள் நீண்ட காலம் வாழ்வதையும் பார்த்திருக்கிறேன். 16-17 ஏன் நீ உன்னையே கொன்றுகொள்கிறாய். அதிக நல்லவனாகவும் அதிக கெட்டவனாகவும் இராதே. நீ அதிக ஞானமுள்ளவனாகவும் அதிக முட்டாளாகவும் இராதே. உனக்குரிய காலத்திற்கு முன் நீ ஏன் மரிக்கவேண்டும்?
18 இதில் கொஞ்சம் அதில் கொஞ்சமுமாய் இருக்க முயற்சிசெய். தேவனுடைய பக்தர்களும் கூட கொஞ்சம் நல்லவர்களாகவும் கொஞ்சம் தீயவர்களாகவும் இருக்கின்றனர். 19-20 பாவமே செய்யாமல் எப்பொழுதும் நல்லதையே செய்துகொண்டிருக்கிற மனிதன் பூமியில் ஒருவனும் இல்லை. ஞானம் ஒருவனுக்குப் பலத்தைக்கொடுக்கிறது. பட்டணத்திலுள்ள பத்து முட்டாள் தலைவர்களைவிட ஒரு ஞானவான் பலமுள்ளவன்.
21 ஜனங்கள் சொல்லுகின்ற அனைத்தையும் நீ கேட்காதே. உனது சொந்த வேலைக்காரனே உனக்கு எதிராகப் பேசுவதை நீ கேட்கலாம். 22 மற்றவர்களைப்பற்றி நீயே பல தடவை அவதூறு சொல்லியிருப்பதை நீ அறியலாம்.
23 நான் எனது ஞானத்தைப் பயன்படுத்தி இவற்றைப்பற்றிச் சிந்தித்தேன். நான் உண்மையில் ஞானமுள்ளவனாக இருக்க விரும்பினேன். ஆனால் அது முடியாமற்போனது. 24 ஏன் பல விஷயங்கள் இவ்வாறு இருக்கின்றன என்று எனக்குத் தெரியவில்லை. இதனைப் புரிந்துக்கொள்வது எவருக்கும் கடினம்தான். 25 நான சற்றுக் கடினப்பட்டு முயன்று ஞானத்தைப் பெற்றேன். நான், எல்லாவற்றுக்கும் காரணம் கண்டுகொள்ள விரும்பினேன்.
நான் என்ன கற்றுக்கொண்டேன்? கெட்டவனாக இருப்பது முட்டாள்தனம் என்பதைக் கற்றேன். ஒரு அறிவற்றவனைப்போன்று நடிப்பதும் பைத்தியகாரத்தனமானதுதான். 26 சில பெண்கள் கண்ணிகளைப்போன்று ஆபத்தானவர்கள் என்பதை அறிந்துக்கொண்டேன். அவர்களின் இதயம் வலைகளைப் போன்றது, அவர்களது கைகள்
சங்கிலிகளைப் போன்றவை. இத்தகைய பெண்களிடம் அகப்பட்டுக்கொள்வது மரணத்தைவிட பயங்கரமானது. தேவனைப் பின்பற்றுகிற ஒருவன் இத்தகைய பெண்களிடம் இருந்து விலகி ஓடுவான். பாவியோ இவர்களிடம் அகப்பட்டுக்கொள்வான்.
27-28 பிரசங்கி, “என்னால் எத்தகைய பதிலைக் கண்டுபிடிக்கமுடியும் என்பதற்காகவே நான் இவற்றையெல்லாம் சேர்க்கிறேன். நான் இன்னும் பதில்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். நான் ஆயிரத்தில் ஒருவனை நல்லவனாகக் கண்டுபிடித்தேன். ஆனாலும் ஒரு நல்ல பெண்ணைக் கூடக் கண்டுபிடிக்க முடியவில்லை.”
29 “தேவன் மனிதனை நல்லவனாகவே படைத்தார். ஆனால் ஜனங்கள் கெட்டுப்போக பல வழிகளைக் கண்டுபிடித்தனர். இதுவும் நான் கற்றுக்கொண்ட இன்னொரு பாடமாகும்” என்று கூறுகிறான்.
ஞானமும் வல்லமையும்
8 ஒரு ஞானமுள்ளவனைப்போன்று எவராலும் ஒன்றைப் புரிந்துக்கொள்ளவும், விளக்கவும் முடியாது. அவனது ஞானம் அவனை மகிழ்ச்சிப்படுத்துகிறது. இது ஒருவனது சோகமுள்ள முகத்தை மகிழ்ச்சியுள்ளதாக மாற்றும்.
2 நீங்கள் அரசனின் கட்டளைகளுக்கு எப்பொழுதும் கீழ்ப்படிய வேண்டும் என்று நான் உங்களுக்குக் கூறுகிறேன். நீ இதனைச் செய்யவேண்டும். ஏனென்றால் ஏற்கெனவே தேவனுக்கு வாக்களித்து இருக்கிறாய். 3 அரசனுக்கு ஆலோசனை சொல்ல அஞ்சவேண்டாம். தவறான ஒன்றுக்கு ஆதரவு செலுத்தவேண்டாம் அரசன் தனக்குப் பிடித்தமான ஆணைகளையே தருகிறான். 4 அரசனுக்கு ஆணைகளைத் தரும் அதிகாரம் உள்ளது. எதைச் செய்ய வேண்டும் என்று எவரும் அவனுக்குச் சொல்வதில்லை. 5 அரசனது ஆணைகளுக்குக் கீழ்படிந்தால் ஒருவன் பாதுகாப்பாக இருப்பான். இதைச் செய்ய வேண்டிய சரியான கால்த்தை ஞானமுள்ளவன் அறிவான். சரியானவற்றை எப்போது செய்யவேண்டும் என்பதையும் அவன் அறிவான்.
6 எல்லாவற்றையும் செய்ய ஒருவனுக்குச் சரியான காலமும், சரியான வழியும் உள்ளன. எனவே ஒவ்வொருவனும் ஒரு வாய்ப்பை எடுத்துக்கொண்டு எதைச் செய்யவேண்டும் என்பதை முடிவெடுக்க வேண்டும். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதில் குழப்பம் இருந்தாலும், பல துன்பங்களில் உழன்றாலும் ஒருவன் அதனைச் செய்யவேண்டும். 7 ஏனென்றால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று எவரும் அவனிடம் சொல்வதில்லை.
8 எவருக்கும் தன் ஆவியை விடாமல் தங்கவைக்கும் வலிமை இல்லை. எவருக்கும் தன் சாவைத் தடுக்கும் அதிகாரமில்லை. போர்க் காலத்தில் தன் விருப்பப்படி போய்வர ஒரு போர் வீரனுக்கு சுதந்திரம் இல்லை. இதுபோலவே, ஒருவன் பாவம் செய்தால் அது அவனை சுதந்திரம் உள்ளவனாக இருக்கும்படி செய்யாது.
9 நான் அனைத்தையும் பார்த்தேன். உலகில் நடைபெறுகிற அத்தனையையும் பற்றி நான் கடுமையாகச் சிந்தித்தேன். ஜனங்கள் எப்பொழுதும் மற்றவர்களை ஆள்வதற்கான வல்லமையைப் பெறுவதற்காகப் போராடுகிறார்கள் என்பதை நான் பார்த்தேன். இது அவர்களுக்குக் கெட்டது.
10 தீய ஜனங்களுக்கு அழகான சிறந்த சவ அடக்கங்கள் நடைபெறுவதை நான் பார்த்தேன். அடக்கச் சடங்கு முடிந்து ஜனங்கள் வீட்டிற்குப் போனதும் மரித்துப்போன தீயவர்களைப்பற்றி நல்லவற்றைக் கூறினார்கள். இத்தகைய காரியங்கள் தீயவன் வாழ்ந்த அதே நகரத்திலேயே நடந்து வருகின்றன. இது அர்த்தமற்றது.
நியாயம், வெகுமதிகள், தண்டனை
11 சில நேரங்களில் ஜனங்கள் தாம் செய்கிற தீமைக்கு உடனே தண்டிக்கப்படமாட்டார்கள். அவர்களுக்கான தண்டனை மெதுவாக வரும். இது மற்றவர்களையும் தீமை செய்யும்படி தூண்டும்.
12 ஒரு பாவி நூற்றுக்கணக்கான தீமைகளைச் செய்யலாம். அவனுக்கு நீண்ட வாழ்க்கையும் இருக்கலாம். ஆனால், தேவனுக்குக் கீழ்ப்படிவதும் மரியாதை செலுத்துவதும் இன்னும் சிறந்ததாக நான் கருதுகிறேன். 13 தீயவர்கள் தேவனுக்கு மரியாதை செலுத்துவதில்லை. எனவே அவர்கள் நல்லவற்றைப் பெறுவதில்லை. அவர்கள் நீண்ட வாழ்க்கையைப் பெறுவதில்லை. சூரியன் அஸ்தமிக்கும்போது நிழல் நீண்டு தோன்றுவதுபோன்று, அவர்களின் வாழ்க்கை வளருவதில்லை.
14 நியாயமாகத் தோன்றாத சில காரியமும் உலகில் நடக்கிறது. கெட்டவைகள் கெட்டவர்களுக்கும், நல்லவைகள் நல்லவர்களுக்கும் நிகழவேண்டும். ஆனால் சில நேரங்களில் நல்லவர்களுக்கு தீயவைகளும் தீயவர்களுக்கு நல்லவைகளும் ஏற்படலாம். எனினும் அவை நல்லதன்று. 15 எனவே நான் வாழ்க்கையை அனுபவிப்பதுதான் நல்லது என்று முடிவு செய்தேன். ஏனென்றால், ஜனங்கள் தம் வாழ்வில் செய்யவேண்டிய நல்ல காரியங்களாவன: உண்பது, குடிப்பது, வாழ்க்கையை அனுபவிப்பதுமேயாகும். தேவன் இவ்வுலகில் தங்களுக்குக்கொடுத்த கடினமான வேலையில் இன்பம் காண்பதற்காகவாவது இவை உதவும்.
தேவன் செய்வதையெல்லாம் நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை
16 இந்த வாழ்வில் ஜனங்கள் செய்வதை எல்லாம் நான் கவனமாகப் படித்திருக்கிறேன். ஜனங்கள் எவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறார்கள் என்பதைப் பார்த்தேன். அவர்கள் இரவும் பகலும் உழைக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் தூங்குவதே இல்லை. 17 நானும் தேவன் செய்கிறவற்றைப் பார்த்தேன். உலகில் தேவன் செய்கிறவற்றை ஜனங்களால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. ஒருவன் அதனைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யலாம், ஆனால் அவனால் முடியாது. ஞானமுள்ள ஒருவன் தேவனுடைய செயல்களைப் புரிந்துகொண்டதாகக் கூறலாம். ஆனால் அதுவும் உண்மையில்லை. இவற்றையெல்லாம் ஒருவராலும் புரிந்துகொள்ள முடியாது.
மரணம் நியாயமானதா?
9 நான் இவை அனைத்தையும்பற்றி வெகு கவனமாகச் சிந்தித்தேன். தேவன், நல்லவர்களும் ஞானவான்களும் செய்வதையும் அவர்களுக்கு ஏற்படுவதையும் கட்டுப்படுத்துவதை நான் பார்த்தேன். அவர்கள் அன்பு செலுத்தப்படுவார்களா அல்லது வெறுக்கப்படுவார்களா என்று அவர்களுக்குத் தெரியாது. எதிர்காலத்தில் என்ன நடைபெறும் என்பதும் அவர்களுக்குத் தெரியாது.
2 ஆனால், நாம் அனைவரும் மரிக்கிறோம். இது அனைவருக்கும் நிகழ்கிற ஒன்று. மரணம் நல்லவர்கள் தீயவர்கள் என அனைவருக்கும் ஏற்படுகின்றது. சுத்தமானவர்கள் சுத்தமில்லாதவர்கள் என அனைத்து ஜனங்களுக்கும் மரணம் ஏற்படுகின்றது. பலி கொடுப்பவர்கள் பலிகொடுக்காதவர்கள் என அனைவருக்கும் மரணம் ஏற்படுகின்றது. பாவியைப் போன்றே நல்லவனும் மரித்துப்போகிறான். தேவனுக்குச் சிறப்பான பொருத்தனைகள் செய்கிறவனைப் போன்றே தேவனுக்குப் பொருத்தனை செய்யப் பயப்படுகிறவனும் மரித்துப்போகிறான்.
3 நமது வாழ்வில் நடைபெறும் அனைத்து காரியங்களிலும் மிக மோசமான காரியம் அனைத்து ஜனங்களும் ஒரே வழியில் முடிந்து போவதுதான். ஜனங்கள் எப்பொழுதும் பாவங்களையும் முட்டாள்தனங்களையும் சிந்தித்துக்கொண்டிருப்பதும் கெட்டதுதான். அவ்வகை எண்ணங்கள் மரணத்திற்கே அழைத்துச் செல்லுகின்றன. 4 வாழ்ந்துகொண்டிருக்கிற எவருக்கும் நம்பிக்கையுண்டு. அவன் யார் என்பது அக்கறையில்லை.
ஆனால் “மரித்துப்போன சிங்கத்தைவிட உயிரோடு உள்ள நாய் சிறந்தது”
என்னும் கூற்று உண்மையானது.
5 உயிரோடுள்ளவர்கள் தாம் மரித்துப்போவோம் என்பதை அறிந்தவர்கள். ஆனால் மரித்துப்போனவர்கள் எதையும் அறியமாட்டார்கள். மரித்துப் போனவர்களுக்கு எந்த விருதும் இல்லை. ஜனங்கள் அவர்களை விரைவில் மறந்துவிடுவார்கள். 6 ஒருவன் மரித்த பிறகு, அவனது அன்பு, வெறுப்பு, பொறாமை அனைத்தும் போய்விடுகின்றது. மரித்துப்போனவர்களுக்குப் பூமியில் நிகழ்ந்த இத்தனையிலும் பங்கில்லை.
முடியும்போது வாழ்க்கையை அனுபவி
7 இப்போது போய் உனது உணவை உண்டு மகிழ்ச்சியைப் பெறு. உனது திராட்சைரசத்தைக் குடித்து மகிழ்ச்சி அடைவாய். நீ இவற்றைச் செய்வது தேவனுக்கு உடன்பாடானதுதான். 8 சிறந்த ஆடைகளை அணிந்து அழகாகக் காட்சியளி. 9 நீ விரும்புகிற மனைவியோடு வாழ்க்கையை அனுபவி. குறுகிய உனது வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் அனுபவி. பூமியில் குறுகிய இந்த வாழ்வை தேவன் உனக்குக்கொடுத்திருக்கிறார். உனக்குரியது எல்லாம் இதுதான். எனவே இவ்வாழ்வில் நீ செய்யவேண்டிய வேலைகளுக்கு மகிழ்ச்சி அடைவாய். 10 எப்பொழுதெல்லாம் வேலை செய்ய வாய்ப்பு கிடைக்கிறதோ, அதை எவ்வளவு சிறப்பாகச் செய்யமுடியுமோ, அதனைச் செய். கல்லறையில் உனக்கு வேலையில்லை. அங்கு சிந்தனையும் அறிவும் ஞானமும் இல்லை. நாம் அனைவரும் மரணம் என்ற இடத்துக்கே போய்க்கொண்டிருக்கிறோம்.
அதிர்ஷ்டமா? துரதிர்ஷ்டமா? நாம் என்ன செய்யலாம்?
11 நான் வாழ்க்கையில் நியாயமற்ற சிலவற்றைப் பார்த்தேன். வேகமாக ஓடுகிறவன் பந்தயத்தில் எப்பொழுதும் வெற்றி பெறுவதில்லை. வலுமிக்க படை போரில் எப்பொழுதும் வெற்றிபெறுவதில்லை. ஞானத்தில் சிறந்தவன் எப்பொழுதும் அதிகமாகச் சம்பாதிப்பதில்லை. அறிவுக் கூர்மைமிக்கவன் எப்பொழுதும் செல்வத்தைப் பெறுவதில்லை. கல்வி அறிவுமிக்கவன் எப்பொழுதும் தனக்குரிய பாராட்டுகளைப் பெறுவதில்லை; நேரம் வரும்போது ஒவ்வொருவருக்கும் தீமையே ஏற்படுகின்றன.
12 அடுத்து என்ன நடக்கும் என்று ஒருவனால் என்றைக்கும் அறிய முடியாது. அவன் வலைக்குள் அகப்பட்ட மீனைப்போன்று இருக்கிறான். அம்மீனுக்கு என்ன நடக்கும் என்பது தெரியாது. அவன் கண்ணியில் அகப்பட்ட பறவையைப் போன்றவன். அப்பறவை அடுத்து நடக்கப்போவதை அறியாது. இதுபோலவே, ஒருவன் தீயவற்றால் கண்ணியில் அகப்படுகிறான். அது திடீரென்று அவனுக்கு ஏற்படுகின்றது.
ஞானத்தின் வல்லமை
13 இந்த வாழ்வில் ஒருவன் ஞானமுள்ளவற்றைச் செய்வதை நான் பார்த்தேன். எனக்கு அது மிக முக்கியமாகப்பட்டது. 14 மிகக் குறைந்த எண்ணிக்கைக்கொண்ட ஜனங்களையுடைய நகரம் இருந்தது. ஒரு அரசன் அதனைச் சுற்றி தன் படை வீரர்களை நிறுத்தி அதற்கு எதிராகப் போரிட்டான். 15 ஆனால் அந்நகரில் ஒரு ஞானி இருந்தான். அவன் ஏழை. ஆனால் அந்நகரைக் காப்பாற்ற தனது ஞானத்தைப் பயன்படுத்தினான். எல்லாம் நடந்து முடிந்தபிறகு, அந்த ஏழையை ஜனங்கள் மறந்துவிட்டார்கள். 16 எனினும் நான் இப்பொழுதும் ஞானம் பலத்தைவிட சிறந்தது என்பேன். அந்த ஜனங்கள் ஏழையின் ஞானத்தை மறந்துவிட்டார்கள். அவன் சொன்னதைக் கவனிப்பதை நிறுத்திவிட்டார்கள். ஞானமே சிறந்தது என்று நான் இன்னமும் நம்புகிறேன்.
17 ஒரு முட்டாள் அரசனால் மிகச் சத்தமாகச் சொல்லப்படுகிற வார்த்தைகளைவிட
ஒரு ஞானியின் மென்மையான வார்த்தைகள் சிறந்தவை.
18 போரில் ஞானமானது வாள்களையும் ஈட்டிகளையும்விடச் சிறந்தவை.
ஆனால் ஒரு முட்டாளால் பல நல்லவற்றை அழிக்க முடியும்.
10 மிகச்சிறந்த நறுமணப் பொருட்களைக் கூட சில மரித்துப்போன ஈக்கள் கெடுத்து நாற்றமடையச் செய்துவிடும். இதைப்போலவே, மிகுதியான ஞானத்தையும், மரியாதையையும் முட்டாள்தனம் கெடுத்துவிடும்.
2 ஞானமுள்ளவனின் எண்ணங்கள் அவனைச் சரியான வழியில் நடத்திச்செல்லும். முட்டாளின் எண்ணங்கள் அவனைத் தவறான வழியில் நடத்திச் செல்லும். 3 ஒரு முட்டாள் சாலையில் நடந்து போகும்போதுகூடத் தனது முட்டாள்தனத்தைக் காட்டிக்கொண்டிருப்பான். எனவே ஒவ்வொருவனும் அவனை முட்டாள் என்று கண்டுகொள்வான்.
4 எஜமான் உன்மீது கோபத்தோடு இருக்கிறான் என்பதற்காக உனது வேலையை விட்டுவிடாதே. நீ அமைதியாகவும் உதவியாகவும் இருந்தால் பெரிய தவறுகளைக்கூட நீ திருத்திக்கொள்ளலாம்.
5 இந்த வாழ்வில் நான் சிலவற்றைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அவை சரியன்று. இது ஆள்பவர்கள் செய்கின்ற தவறுகள். 6 முக்கியமான பொறுப்புகள் முட்டாள்களுக்குக்கொடுக்கப்படுகின்றன. செல்வம் உள்ளவர்களோ முக்கியம் இல்லாத பொறுப்புகளைப் பெறுகின்றனர். 7 பிரபுக்கள் வேலைக்காரர்களைப்போன்று பின்னால் நடந்துபோகும்போது, வேலைக்காரர்கள் குதிரையின்மீது சவாரி செய்வதைப் பார்த்தேன்.
ஒவ்வொரு வேலையும் அதற்குரிய ஆபத்துகளைக்கொண்டவை
8 குழிதோண்டுகிற ஒருவன் அந்தக் குழிக்குள்ளேயே விழுவான். சுவரை இடித்துத் தள்ளுகிற ஒருவன் பாம்பு கடித்து மரிப்பான். 9 பெருங்கற்களை நகர்த்திக்கொண்டிருக்கிறவன் அதனாலேயே காயப்படுவான். ஒருவன் மரங்களை வெட்டுவதும் ஆபத்தானது. அம்மரம் அவன்மேலேயே விழுந்துவிடலாம்.
10 ஆனால் ஞானம் அந்த வேலையையும் எளிமைப்படுத்தும். மழுங்கலான கத்தியால் வெட்டுவது கடினம். ஒருவன் அந்தக் கத்தியைக் கூர்மைப்படுத்தினால் வேலை எளிதாகும். ஞானமும் இதைப் போன்றதுதான்.
11 ஒருவனுக்குப் பாம்புகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது தெரிந்திருக்கலாம். ஆனால் அவன் அருகில் இல்லாதபோது அந்தப் பாம்பு வேறு எவரையாவது கடித்துவிடுவதால் அவனது திறமை பயனற்றது. ஞானமும் இதைப் போன்றதுதான்.
12 ஞானமுள்ளவனின் வார்த்தைகள் பாராட்டைப் பெற்றுத்தரும்.
ஆனால் முட்டாளின் வார்த்தைகள் அழிவைக்கொண்டுவரும்.
13 முட்டாள் முட்டாள்தனமானவற்றைக் கூறத் தொடங்குவான். முடிவில் அவன் பைத்தியக்காரத்தனமாகக் கூறுவான். 14 ஒரு முட்டாள் எப்பொழுதும் அவன் செய்யப் போவதைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பான். ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது எவருக்கும் தெரியாது. ஒருவனும் பின்னால் என்ன நடக்கும் என்பதைக் கூறவில்லை.
15 முட்டாள் தன் வீட்டுக்குரிய வழியை அவ்வளவு சுறுசுறுப்பாக அறிந்துகொள்ளமாட்டான்.
எனவே வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டு வேலைச் செய்வான்.
உழைப்பின் மதிப்பு
16 ஒரு அரசன் குழந்தையைப்போன்று இருந்தால், அது நாட்டிற்குப் பெருங்கேடாகும். அரசன் தன் காலத்தை உண்பதில் கழித்தாலும் ஒரு நாட்டிற்குக் கேடுதான். 17 அரசன் நல்ல குடும்பத்திலிருந்து வந்தவனாக இருந்தால் நாட்டுக்கு அது மிகவும் நல்லது. ஆட்சியாளர்கள் குடிப்பதையும் உண்பதையும் கட்டுப்படுத்திக்கொண்டால், நாட்டுக்கு நல்லதுதான். இத்தகையவர்கள் உண்பதும் குடிப்பதும் பலம் பெறுவதற்காகத் தானே ஒழிய குடித்து வெறிப்பதற்காக அல்ல.
18 ஒருவன் வேலை செய்வதற்குச் சோம்பேறியாக இருந்தால் அவனது வீடு ஒழுக ஆரம்பித்துவிடும்.
வீட்டுக்கூரை விழுந்துவிடும்.
19 ஜனங்கள் உண்பதில் மகிழ்ச்சியடைகிறார்கள். திராட்சைரசம் வாழ்வை மகிழ்ச்சிகுள்ளாக்குகிறது. ஆனால் பணம் பல சிக்கல்களைத் தீர்க்கிறது.
வீண் பேச்சு
20 அரசனைப்பற்றிக் கெட்ட செய்திகளைக் கூறாதே. அவனைப்பற்றிக் கெட்டதாகவும் நினைக்காதே. செல்வந்தர்ளைப்பற்றியும் கெட்ட செய்திகளைக் கூறாதே. நீ உன் வீட்டில் தனியாக இருந்தாலும் இவ்வாறு கூறாதே. ஏனென்றால், சிறு பறவைக்கூட பறந்துபோய் அந்தச் செய்தியை அவர்களிடம் கூறிவிடும்.
எதிர்காலத்தைத் தைரியமாக எதிர்கொள்
11 நீ எங்கு சென்றாலும் நல்லவற்றையே செய். அப்போது நீ செய்த நன்மைகள் உனக்கே திரும்பவரும்.
2 உனக்குரிய பொருட்களைப் பல்வேறு நற்காரியங்களுக்காகப் பங்கிட்டுக்கொடு. பூமியில் என்னென்ன கேடுகள் நடைபெறும் என்று உனக்குத் தெரியாது.
3 நீ சிலவற்றை உறுதிப்படுத்திக்கொள்ளலாம். மேகம் மழையால் நிறைந்திருந்தால், அது பூமியில் தண்ணீரை ஊற்றும். மரமானது வடக்கே விழுந்தாலும் தெற்கே விழுந்தாலும் விழுந்த இடத்திலேயே கிடக்கும்.
4 ஆனால் சிலவற்றைப்பற்றி உன்னால் உறுதியாகக் கூறமுடியாது. நீ ஒரு வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். ஒருவன் சரியான பருவம் வரட்டுமென்று காத்திருந்தால் அவனால் விதைக்க முடியாது. ஒவ்வொரு மேகத்தையும் பார்த்து மழை வருமோ என்று அஞ்சுகிறவன் ஒருபோதும் அறுவடை செய்யமாட்டான்.
5 காற்றின்வழி யாதென்று உனக்குத் தெரியாது. தாயின் கருவிலே ஒரு குழந்தை எவ்வாறு வளர்கின்றது என்பதும் உனக்குத் தெரியாது. இதைப்போலவே, தேவன் என்ன செய்வார் என்பதும் உனக்குத் தெரியாது. அவர் எல்லாவற்றையும் நிறைவேற்றுவார்.
6 எனவே அதிகாலையிலே நடுவை செய். மாலைவரை உன் வேலையை நிறுத்தாமல் செய். ஏனென்றால், எது உன்னை செல்வந்தனாக்கும் என்பதும் உனக்குத் தெரியாது. நீ செய்கிற அனைத்துமே உனக்கு வெற்றியைத் தரலாம்.
7 உயிரோடு இருப்பது நல்லது. சூரிய வெளிச்சத்தைப் பார்த்துக்கொண்டிருப்பது நல்லது. 8 உன் வாழ்நாளில் உள்ள ஒவ்வொரு நாளையும் நீ அனுபவிக்கவேண்டும். எவ்வளவுகாலம் வாழ்வாய் என்பதுபற்றிக் கவலையில்லை. ஆனால் நீ மரித்துப் போவாய் என்பதை நினைத்துக்கொள். நீ உயிரோடிருக்கும் நாட்களைவிட மரித்த பின் உள்ள நாட்களே மிக அதிகம். நீ மரித்த பிறகு எதையும் செய்யமுடியாது.
இளமையாக இருக்கும்போது தேவனுக்குச் சேவை செய்
9 இளைஞர்களே! இளமையாய் இருக்கும்போதே மகிழ்ச்சியாக இருங்கள். அனுபவியுங்கள். உங்கள் மனம் போனபடி இருங்கள். நீங்கள் விரும்புகிறவற்றைச் செய்யுங்கள். ஆனால் உங்கள் செயல்களையெல்லாம் தேவன் நியாயந்தீர்ப்பார் என்பதை மறந்துவிடாதீர்கள். 10 உங்கள் கோபம் உங்களைக் கட்டுப்படுத்தும்படி விடாதீர்கள். உங்கள் உடல் உங்களைப் பாவம் செய்யத் தூண்டும்படி விடாதீர்கள். ஜனங்கள், இளமையாய் இருக்கும்போது முட்டாள்தனமானவற்றையே செய்வார்கள்.
முதுமையின் பிரச்சனைகள்
12 நீ இளமையாக இருக்கும்போது உன்னைப் படைத்தவரை நினைவுகூரு. முதுமையின் தீய நாட்கள் வருவதற்குமுன் நினைத்துக்கொள். “நான் என் வாழ்வைப் பயனற்றதாகக் கழித்துவிட்டேன்” என்று நீ சொல்லப்போகும் ஆண்டுகளுக்கு முன் நினைவுவை.
2 நீ இளமையாக இருக்கும்போதே, சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும் உன் கண்களுக்கு இருண்டுபோகும் காலம் வருவதற்கு முன்னரே உன்னைப் படைத்தவரை நினைத்துக்கொள் ஒரு புயலுக்குப் பின் மீண்டும் மீண்டும் புயல் வருவதுபோன்று உனக்குத் துன்பங்கள் வந்துகொண்டிருக்கும்.
3 அப்போது உனது கைகள் தம் பலத்தை இழக்கும். உனது கால்கள் பலவீனமாகி வளைந்துபோகும். உனது பற்கள் எல்லாம் விழுந்துபோய் உணவை நீ தின்னமுடியாத நிலைமை ஏற்படும். உன் கண்கள் தெளிவாகப் பார்க்காது. 4 உன் காதுகள் கேட்க கஷ்டப்படும். வீதியில் உள்ள சப்தங்களை உன் காதுகள் கேட்காது. தானியங்களை அரைக்கிற கல் எந்திரம் கூட உனக்கு அமைதியுடன் இருப்பதாகத் தோன்றும். பெண்களின் பாடலை உன்னால் கேட்கமுடியாது. பறவைகளின் பாடல் ஒலிகூட உன்னை அதிகாலையில் எழுப்பிவிடும். ஏனென்றால் உன்னால் தூங்கமுடியாது.
5 நீ மேடான இடங்களைக் கண்டு பயப்படுவாய். உன் வழியில் எதிர்ப்படும் சிறியவற்றுக்குக்கூடப் பயப்படுவாய். வாதுமை மரத்தின் பூக்களைப்போன்று உனது தலைமயிர் வெளுத்துப்போகும். வெட்டுக் கிளியைப் போன்று நீ உன்னையே இழுத்துக்கொண்டு திரிவாய். வாழ்வதற்கான ஆசையை நீ இழந்துவிடுவாய். பிறகு நீ நிரந்தரமான கல்லறை வீட்டிற்குச் செல்வாய். துக்கம் கொண்டாடுகிறவர்கள் தெருவில் கூடி உனது உடலை கல்லறைக்கு எடுத்துச் செல்வார்கள்.
மரணம்
6 நீ இளமையாக இருக்கும்போதே வெள்ளிக் கயிறுகள் கட்டுவிட்டு, பொன் கிண்ணங்கள் நொறுங்கும் முன்னால் கிணற்றிலே சால் உடைவது போல் உன் வாழ்வு பயனற்றதாக போகும் முன்னால்,
கிணற்றிலே மூடப்பட்டிருக்கும் கல் உடைந்து நொறுங்கி விழுவது போல், உன் வாழ்வு பயனற்றுப் போகும் முன்னால், உன்னைப் படைத்தவரை நினைத்துக்கொள்.
7 உன் உடல் பூமியிலிருந்து வந்தது.
நீ மரித்துப்போகும்போது, உன் உடல் திரும்பவும் மண்ணுக்குப் போகும்.
ஆனால் உனது ஆவி தேவனிடமிருந்து வந்தது.
நீ மரித்துப்போகும்போது உனது ஆவி திரும்பவும் தேவனிடமே போகும்.
8 இவ்வாறு அனைத்தும் பொருளற்றுப் போகும். இவை அனைத்தும் காலம் வீணானதிற்குச் சமம் என்று பிரசங்கி கூறுகிறார்.
முடிவுரை
9 பிரசங்கி ஞானமுடையவர். அவர் தனது ஞானத்தைப் பயன்படுத்தி ஜனங்களுக்குக் கற்றுக்கொடுத்தார். பிரசங்கி மிக கவனமாகப் படித்து தன் பாடங்களைக் கற்றுத்தர ஒழுங்குபடுத்தினார். 10 சரியான வார்த்தைகளைத் தேர்ந்தெடுக்க பிரசங்கி மிகக் கடுமையாக முயற்சி செய்தார். அவர் உண்மையானதும் செம்மையானதுமான போதனைகளை எழுதி வைத்தார்.
11 ஞானிகளின் வார்த்தைகள் மிருகங்களை வழி நடத்தப் பயன்படும் கூர்மையான கோல்களைப்போல இருக்கும். அவர்களின் போதனைகள் என்றும் உடைந்துபோகாத உறுதியான ஆப்புகளைப் போன்றிருக்கும். வாழ்க்கைக்கு வழிகாட்டும் இப்போதனைகள் நம்பிக்கைக்கு உரியவை. இந்த ஞானப் போதனைகள் எல்லாம், அதே மேய்ப்பனிடமிருந்து (தேவன்) வந்தவை. 12 என் மகனே! அப்போதனைகளைக் கற்றுக்கொள். ஆனால் மற்ற புத்தகங்களைப்பற்றி ஜாக்கிரதையாக இரு. ஜனங்கள் எப்பொழுதும் புத்தகங்களை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அதிகமாக வாசிப்பதும் உன்னைச் சோர்வுக்குள்ளாக்கிவிடும்.
13-14 இப்போது, இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளவற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய முக்கிய காரியம் என்ன? ஒரு மனிதனால் செய்யக் கூடிய மிக முக்கியமான செயல் என்னவென்றால், தேவனுக்கு மரியாதை செய்து, அவரது கட்டளைகளுக்கு அடிபணியவேண்டும். ஏனென்றால், தேவன் நாம் செய்யும் அனைத்தையும், இரகசியமான செயல்கள் உட்பட அறிந்திருக்கிறார். அவருக்கு அனைத்து நற்செயல்களைப் பற்றியும், அனைத்து தீய செயல்களைப்பற்றியும் தெரியும். ஜனங்கள் செய்யும் அனைத்தையும் அவர் நியாயம்தீர்ப்பார்.
2008 by World Bible Translation Center