Print Page Options
Previous Prev Day Next DayNext

Chronological

Read the Bible in the chronological order in which its stories and events occurred.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 134

ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்

134 கர்த்தருடைய எல்லா ஊழியர்களும் கர்த்தரைத் துதியுங்கள்!
    இரவு முழுவதும் ஊழியர்களாகிய நீங்கள் ஆலயத்தில் சேவைசெய்தீர்கள்.
ஊழியர்களே, உங்கள் கரங்களை உயர்த்தி
    கர்த்தரைப் போற்றுங்கள்.
கர்த்தர் உங்களை சீயோனிலிருந்து ஆசீர்வதிப்பாராக.
    கர்த்தர் பரலோகத்தையும் பூமியையும் உண்டாக்கினார்.

சங்கீதம் 146-150

146 கர்த்தரை துதி!
    என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி!
என் வாழ்க்கை முழுவதும் நான் கர்த்தரைத் துதிப்பேன்.
    என் வாழ்க்கை முழுவதும் நான் அவருக்குத் துதிகளைப் பாடுவேன்.
உதவிக்காக உங்கள் தலைவர்களை சார்ந்திராதீர்கள்.
    ஜனங்களை நம்பாதீர்கள். ஏனெனில் ஜனங்கள் உங்களைக் காப்பாற்றமுடியாது.
ஜனங்கள் மரித்தபின் புதைக்கப்படுவார்கள்.
    அப்போது உதவி செய்வதற்கான அவர்கள் திட்டங்கள் எல்லாம் மறைந்துபோகும்.
ஆனால் தேவனிடம் உதவி வேண்டுகிற ஜனங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
    அந்த ஜனங்கள் அவர்களின் தேவனாகிய கர்த்தரை சார்ந்திருக்கிறார்கள்.
கர்த்தர் பரலோகத்தையும், பூமியையும் உண்டாக்கினார்.
    கர்த்தர் கடலையும் அதிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினார்.
    கர்த்தர் அவற்றை என்றென்றும் பாதுகாப்பார்.
ஒடுக்கப்பட்ட ஜனங்களுக்கு ஆண்டவர் நீதி வழங்குகிறார்.
    தேவன் ஏழைகளுக்கு உணவளிக்கிறார்.
சிறைகளில் பூட்டி வைக்கப்பட்ட ஜனங்களை கர்த்தர் விடுவிக்கிறார்.
    குருடர் மீண்டும் காண்பதற்கு கர்த்தர் உதவுகிறார்.
தொல்லையில் சிக்குண்ட ஜனங்களுக்கு கர்த்தர் உதவுகிறார்.
    கர்த்தர் நல்லோரை நேசிக்கிறார்.
நம் நாட்டிலுள்ள அந்நியர்களை கர்த்தர் காப்பாற்றுகிறார்.
    விதவைகளையும் அநாதைகளையும் கர்த்தர் கவனித்துக் காக்கிறார்.
    ஆனால் கர்த்தர் தீயோரை அழிக்கிறார்.
10 கர்த்தர் என்றென்றும் அரசாளுவார்!
    சீயோனே, உன் தேவன் என்றென்றும் எப்போதும் அரசாளுவார்!

கர்த்தரைத் துதியுங்கள்!

147 கர்த்தர் நல்லவர், எனவே அவரைத் துதியுங்கள்.
    எங்கள் தேவனுக்கு துதிகளைப் பாடுங்கள்.
    அவரைத் துதிப்பது நல்லதும் களிப்புமானது.
கர்த்தர் எருசலேமைக் கட்டினார்.
    சிறைப் பிடித்துச் செல்லப்பட்ட இஸ்ரவேலரை தேவன் மீண்டும் அழைத்து வந்தார்.
தேவன் அவர்களின் உடைந்த இருதயங்களைக் குணமாக்கி,
    அவர்கள் காயங்களைக் கட்டுகிறார்.
தேவன் நட்சத்திரங்களின் எண்ணிக்கையை அறிகிறார்.
    ஒவ்வொன்றின் பெயரையும் தெரிந்திருக்கிறார்.
நம் ஆண்டவர் மிகவும் மேன்மையானவர்.
    அவர் மிகவும் வல்லமையுள்ளவர்.
    அவர் அறிகிற காரியங்களுக்கு எல்லையில்லை.
கர்த்தர் எளியோரைத் தாங்கி உதவுகிறார்.
    ஆனால் அவர் தீயோரை அவமானப்படுத்துகிறார்.
கர்த்தருக்கு நன்றி சொல்லுங்கள்.
    கின்னரங்களால் நமது தேவனைத் துதியுங்கள்.
தேவன் வானத்தை மேகங்களால் நிரப்புகிறார்.
    தேவன் பூமிக்காக மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.
    தேவன் மலைகளின் மேல் புல் வளரும்படி செய்கிறார்.
தேவன் மிருகங்களுக்கு உணவளிக்கிறார்.
    தேவன் பறவைக் குஞ்சுகளுக்கு உணவூட்டுகிறார்.
10 போர்க் குதிரைகளும்
    வல்லமையுள்ள வீரர்களும் அவரை மகிழ்ச்சிப்படுத்தமாட்டார்கள்.
11 கர்த்தரைத் தொழுதுகொள்கிற ஜனங்கள் அவரை மகிழ்ச்சியாக்குகிறார்கள்.
    அவரது உண்மை அன்பை நம்புகிற ஜனங்களைக் கண்டு அவர் சந்தோஷமடைகிறார்.
12 எருசலேமே, கர்த்தரைத் துதி!
    சீயோனே, உன் தேவனைத் துதி!
13 எருசலேமே, தேவன் உன் கதவுகளை உறுதியாக்குகிறார்.
    தேவன் உன் நகரத்தின் ஜனங்களை ஆசீர்வதிக்கிறார்.
14 உன் நாட்டிற்கு தேவன் சமாதானத்தைக் கொண்டுவந்தார்.
    எனவே பகைவர்கள் போரில் உன் நாட்டுத் தானியத்தைக் கவர்ந்து செல்லவில்லை.
    உனக்கு உணவிற்குத் தேவையான தானியம் மிகுதியாக இருக்கிறது.
15 பூமிக்கு தேவன் கட்டளையிடுகிறார்.
    அது உடனே கீழ்ப்படிகிறது.
16 நிலம் கம்பளியைப்போன்று வெண்மையாகும்வரை தேவன் பனியை விழப்பண்ணுகிறார்.
    உறைந்த பனி காற்றினூடே தூசியைப்போல வீசும்படி தேவன் செய்கிறார்.
17 தேவன் வானத்திலிருந்து கற்களைப்போல கல்மழையை பெய்யப் பண்ணுகிறார்.
    அவர் அனுப்பும் குளிரைத் தாங்கிக்கொள்ள ஒருவனாலும் ஆகாது.
18 அப்போது, தேவன் மற்றொரு கட்டளையைத் தருகிறார், உடனே வெப்பமான காற்று மீண்டும் வீசுகிறது.
    பனி உருகுகிறது, தண்ணீர் பாய்ந்தோடத் தொடங்குகிறது.

19 தேவன் யாக்கோபிற்குத் தமது கட்டளைகளைக் கொடுத்தார்.
    தேவன் இஸ்ரவேலுக்கு அவரது சட்டங்களைக் கொடுத்தார்.
20 தேவன் வேறெந்த தேசத்திற்கும் இதைச் செய்யவில்லை.
    தேவன் வேறெந்த ஜனங்களுக்கும் தனது சட்டங்களைப் போதிக்கவில்லை.

கர்த்தரைத் துதியுங்கள்!

148 கர்த்தரைத் துதியுங்கள்!
மேலேயுள்ள தேவ தூதர்களே,
    பரலோகத்திலிருந்து கர்த்தரைத் துதியுங்கள்!
தேவதூதர்கள் எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்!
    அவரது சேனைகள் [a] எல்லோரும் அவரைத் துதியுங்கள்!
சூரியனும் சந்திரனும் கர்த்தரைத் துதியுங்கள்!
    நட்சத்திரங்களும் வானின் விளக்குகளும் அவரைத் துதியுங்கள்!
மிக உயரத்திலுள்ள பரலோகமே கர்த்தரைத் துதியுங்கள்!
    வானின் மேலுள்ள வெள்ளங்களே, அவரைத் துதியுங்கள்!
கர்த்தருடைய நாமத்தைத் துதி.
    ஏனெனில் தேவன் கட்டளையிட்டபோது, நாமெல்லோரும் படைக்கப்பட்டோம்!
இவையனைத்தும் என்றென்றும் தொடருமாறு தேவன் செய்தார்.
    என்றும் முடிவடையாத சட்டங்களை தேவன் உண்டாக்கினார்.
பூமியிலுள்ள அனைத்தும் கர்த்தரைத் துதியுங்கள்!
    சமுத்திரத்தின் பெரிய விலங்குகளே, கர்த்தரைத் துதியுங்கள்!
தேவன் நெருப்பையும் கல்மழையையும் பனியையும்
    புகையையும் எல்லாவிதமான புயற்காற்றையும் உண்டாக்கினார்.
மலைகளையும் குன்றுகளையும் கனிதரும் மரங்களையும்
    கேதுருமரங்களையும் தேவன் உண்டாக்கினார்.
10 எல்லாக் காட்டு மிருகங்களையும் நாட்டு மிருகங்களையும்
    ஊர்வனவற்றையும் பறவைகளையும் தேவன் உண்டாக்கினார்.
11 பூமியின் தேசங்களையும் அரசர்களையும் தேவன் உண்டாக்கினார்.
    தலைவர்களையும் நீதிபதிகளையும் தேவன் உண்டாக்கினார்.
12 இளைஞர்களையும் இளம்பெண்களையும் தேவன் உண்டாக்கினார்.
    முதியோரையும் இளையோரையும் தேவன் உண்டாக்கினார்.
13 கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்!
    அவர் நாமத்தை என்றென்றும்
    மகிமைப்படுத்துங்கள்!
    பரலோகத்திலும், பூமியிலுமுள்ள அனைத்தும் அவரைத் துதிக்கட்டும்!
14 தேவன் அவரது ஜனங்களைப் பலப்படுத்துகிறார்.
    தேவனைப் பின்பற்றுவோரை ஜனங்கள் வாழ்த்துவார்கள்.
    ஜனங்கள் இஸ்ரவேலை வாழ்த்துவார்கள்.
    தேவன் அவர்களுக்காகப் போராடுகிறார்.
    கர்த்தரைத் துதியுங்கள்.

149 கர்த்தரைத் துதியுங்கள்.
கர்த்தர் செய்த புதிய காரியங்களுக்காக ஒரு புதுப்பாடலைப் பாடுங்கள்!
    அவரைப் பின்பற்றுவோர் ஒருமித்துக் கூடும் சபையில் அவரைத் துதித்துப்பாடுங்கள்.
தங்களைப் படைத்தவரோடு இஸ்ரவேல் களிப்படைவார்களாக.
    சீயோனின் ஜனங்கள் அவர்களின் அரசரோடு மகிழ்ந்து களிப்பார்களாக.
தம்புருக்களையும் வீணைகளையும் மீட்டுவதோடு ஆடிப்பாடி
    அந்த ஜனங்கள் தேவனைத் துதிக்கட்டும்.
கர்த்தர் அவரது ஜனங்களோடு மகிழ்ச்சியாயிருக்கிறார்.
    அவரது எளிய ஜனங்களுக்கு தேவன் ஒரு அற்புதமான காரியத்தைச் செய்தார்.
    அவர் அவர்களை மீட்டார்!
தேவனைப் பின்பற்றுவோரே, உங்களது வெற்றியால் மகிழ்ந்து களிப்படையுங்கள்!
    படுக்கைக்குப் போன பின்னரும் மகிழ்ச்சியாயிருங்கள்.

ஜனங்கள் தேவனைத் துதித்துக் குரலெழுப்பட்டும்.
    அவர்களது கைகளில் வாள்களை ஏந்தட்டும்.
அவர்கள் போய் பகைவர்களைத் தண்டிக்கட்டும்.
    அந்த ஜனங்களிடம் சென்று அவர்களைத் தண்டிக்கட்டும்.
தேவனுடைய ஜனங்கள் அந்த அரசர்களுக்கும் அங்குள்ள முக்கியமான
    ஜனங்களுக்கும் விலங்குகளைப் பூட்டுவார்கள்.
தேவன் கட்டளையிட்டபடி தேவனுடைய ஜனங்கள் அவர்களைத் தண்டிப்பார்கள்.
    தேவனைப் பின்பற்றுவோர் எல்லோரும் அவரை மகிமைப்படுத்துவார்கள்.

கர்த்தரைத் துதியுங்கள்!

150 கர்த்தரைத் துதியுங்கள்!
தேவனை அவரது ஆலயத்தில் துதியுங்கள்!
    பரலோகத்தில் அவரது வல்லமையைத் துதியுங்கள்!
அவர் செய்கிற பெரிய காரியங்களுக்காக தேவனைத் துதியுங்கள்!
    அவரது எல்லா மேன்மைகளுக்காகவும் அவரைத் துதியுங்கள்!
எக்காளத் தொனியோடு தேவனைத் துதியுங்கள்!
    வீணைகளோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள்!
தேவனைத் தம்புருக்களோடும் நடனத்தோடும் துதியுங்கள்!
    நரம்புக் கருவிகளோடும் புல்லாங் குழலோடும் அவரைத் துதியுங்கள்!
ஓசையெழுப்பும் தாளங்களோடும் தேவனைத் துதியுங்கள்!
    பேரோசையெழுப்பும் தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்!

எல்லா உயிரினங்களும் கர்த்தரைத் துதிக்கட்டும்!

கர்த்தரைத் துதிப்போம்!

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center