Print Page Options
Previous Prev Day Next DayNext

Chronological

Read the Bible in the chronological order in which its stories and events occurred.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
2 சாமுவேல் 5:1-10

இஸ்ரவேலர் தாவீதை அரசனாக்குகிறார்கள்

இஸ்ரவேல் கோத்திரங்கள் எல்லோரும் எப்ரோனில் தாவீதிடம் கூடிவந்தார்கள். அவர்கள் தாவீதை நோக்கி, “நாம் எல்லோரும் ஒரே குடும்பத்தார்! [a] சவுல் நமது அரசனாக இருந்தபோதும் யுத்தத்தில் நீர் எங்களை வழி நடத்தினீர். யுத்தத்திலிருந்து இஸ்ரவேலரை அவர்கள் இருப்பிடத்திற்கு நீரே அழைத்து வந்தீர். கர்த்தர் உம்மிடம், ‘எனது ஜனங்களாகிய இஸ்ரவேலருக்கு மேய்ப்பனாயிருப்பாய். இஸ்ரவேலுக்கு அரசனாக இருப்பாய்!’ என்று சொன்னார்” என்றார்கள்.

எனவே இஸ்ரவேலின் அனைத்து தலைவர்களும் தாவீதைச் சந்திப்பதற்காக எப்ரோன் என்னும் நகருக்கு வந்தார்கள். தாவீது அரசன் இத்தலைவர்களோடு கர்த்தருடைய முன்னிலையில் ஒரு ஒப்பந்தம் செய்துக்கொண்டான். இஸ்ரவேலின் அரசனாக தலைவர்கள் அனைவரும் தாவீதை அபிஷேகம் பண்ணினார்கள்.

தாவீது அரசாள ஆரம்பித்தபோது அவனுக்கு 30 வயது. அவன் 40 ஆண்டுகள் அரசாண்டான். எப்ரோனில் 7 ஆண்டு 6 மாதங்கள் அவன் யூதர்களுக்கு அரசனாக இருந்தான். எருசலேமில் இஸ்ரவேலுக்கும், யூதாவுக்கும் 33 ஆண்டுகள் அரசனாக இருந்தான்.

எருசலேமில் தாவீதின் வெற்றி

அரசனும் அவனது வீரர்களும் எருசலேமில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற எபூசியரை எதிர்த்துப் போரிடுவதற்குச் சென்றனர். எபூசியர்கள் தாவீதிடம், “எங்கள் நகரத்திற்குள் உங்களால் வரமுடியாது. [b] எங்களில் குருடர்களும் முடவர்களுங்கூட உங்களைத் தடுத்து நிறுத்தமுடியும்” என்றனர். (தாவீது, அவர்கள் நகரத்திற்குள் நுழையமாட்டான் என்று அவர்கள் நினைத்ததால் இவ்வாறு கூறினார்கள். ஆனால் தாவீது சீயோன் கோட்டையைப் பிடித்தான். இக்கோட்டை பின்பு தாவீதின் நகரமாயிற்று.)

அந்த நாளில் தாவீது தனது ஆட்களை நோக்கி, “நீங்கள் எபூசியரை வெல்ல விரும்பினால், தண்ணீர் குகை [c] வழியே சென்று ‘முடவரும், குருடரும்’ ஆகிய பகைவரை நெருங்குங்கள்” என்றான். இதனால்தான் மக்கள், “குருடரும் முடவரும் வீட்டினுள் வரமுடியாது” என்பார்கள்.

கோட்டையினுள் தாவீது வாழ்ந்தான். அதை “தாவீதின் நகரம்” என்று அழைத்தான், மில்லோ என்னும் கோபுர பகுதியையும் தாவீது கட்டினான். நகரத்திற்குள்ளும் பல கட்டிடங்களை கட்டினான். 10 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் தாவீதோடிருந்ததால் அவன் பலம் மிகுந்தவனானான்.

1 நாளாகமம் 11-12

இஸ்ரவேலர்களுக்கு தாவீது அரசன் ஆகிறான்

11 இஸ்ரவேலர் அனைவரும் எப்ரோன் நகரத்தில் தாவீதிடம் வந்தனர். அவர்கள் தாவீதிடம், “நாங்கள் உம்முடைய சொந்த சதையும் இரத்தமுமாய் இருக்கிறோம்.” முன்பு, போரில் வழிநடத்தினீர். சவுல் அரசனாக இருந்தபோதிலும் நீர் வழி நடத்தினீர். கர்த்தர் உம்மிடம், “தாவீது, நீதான் என் இஸ்ரவேல் ஜனங்களின் மேய்ப்பனாக இருப்பாய், என் ஜனங்களின் தலைவன் ஆவாய் என்று சொன்னார்” என்றார்கள்.

இஸ்ரவேலரின் தலைவர்கள் அனைவரும் எப்ரோன் நகரில் தாவீதிடம் வந்தனர். தாவீது அவர்களிடம் கர்த்தருக்கு முன்பாக எப்ரோனில் ஒரு ஒப்பந்தம் செய்துக்கொண்டான். தலைவர்கள் தாவீதுக்கு அபிஷேகம் செய்தனர். அதனால் அவன் இஸ்ரவேலருக்கு அரசன் ஆனான். கர்த்தர் சொன்னபடியே நடந்தது. கர்த்தர் அந்த வாக்குறுதியைக் கூற சாமுவேலைப் பயன்படுத்தினார்.

தாவீது எருசலேமை கைப்பற்றுகிறான்

தாவீதும், இஸ்ரவேல் ஜனங்களும் எருசலேம் நகரத்திற்குச் சென்றனர். அப்போது அந்நகரம் எபூசு என்று அழைக்கப்பட்டது. அங்கு வாழ்ந்த ஜனங்கள் எபூசியர் என அழைக்கப்பட்டனர். நகரத்தில் வாழ்ந்த ஜனங்கள் தாவீதிடம், “எங்கள் நகருக்குள் நீ நுழைய முடியாது” என்றனர். ஆனால் தாவீது அவர்களைத் தோற்கடித்தான். தாவீது சீயோன் கோட்டையைக் கைப்பற்றினான். அது தாவீதின் நகரமாயிற்று.

தாவீது, “எவனொருவன் எபூசியரோடு போரிட வழிநடத்திச் சென்றானோ அவன் என் படை முழுவதற்கும் தளபதியாவான்” என்றான். எனவே, யோவாப் போருக்கு வழிநடத்தினான். யோவாப், செருயாவின் மகன். யோவாப் படைத் தளபதியானான்.

தாவீது கோட்டைக்குள் தனது வீட்டை அமைத்துக்கொண்டான். அதனால் அது தாவீதின் நகரம் என்ற பெயரைப்பெற்றது. கோட்டையைச் சுற்றிலும் மில்லோவிலிருந்து சுற்றுச்சுவர்வரைக்கும் தாவீது நகரத்தை நிர்மாணித்தான். நகரத்தின் மற்ற பகுதிகளை யோவாப் பழுதுபார்த்தான். தாவீது தொடர்ந்து பெரியவன் ஆனான். சர்வவல்லமையுள்ள கர்த்தர் அவனோடு இருந்தார்.

மூன்று வீரர்கள்

10 தாவீதினுடைய படைவீரர்களின் சிறப்பான தலைவர்கள் பட்டியல் இது. தாவீதின் அரசாங்கத்தில் இவ்வீரர்கள் வல்லமை உடையவர்களாக விளங்கினார்கள். இவர்களும் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் அவனுக்கு முழுமையாக உதவி அவனை அரசன் ஆக்கினார்கள். இதுவும் தேவன் சொன்னபடியே ஆயிற்று.

11 இதுதான் தாவீதின் விசேஷ வீரர்களின் விபரம்: அக்மோனியின் மகன் யாஷோபியாம். யாஷோபியாம், இரதப் படைத் தலைவன். இவன் தனது ஈட்டியால் ஒரே நேரத்தில் 300 பேர்களைக் கொன்றுப்போட்டான்.

12 அடுத்து அகோயைச் சேர்ந்த தோதாயின் மகன் எலெயாசார். இவன் மூன்று மாபெரும் வீரர்களில் ஒருவன். 13 எலெயாசார் தாவீதோடு பாஸ்தம்மீமில் இருந்தான். அங்கு பெலிஸ்தர்கள் போரிடுவதற்காக வந்தனர். அங்கு ஒரு வயல் முழுவதும் பார்லி பயிரிடப்பட்டிருந்தது. இஸ்ரவேலர்கள் பெலிஸ்தர்களுக்குத் தப்பி ஓடினார்கள். 14 ஆனால் மூன்று வீரர்கள் அங்கே வயலில் நின்று தோற்கடித்தனர். இஸ்ரவேலர்களுக்கு, கர்த்தர் மாபெரும் வெற்றியைக் கொடுத்தார்.

15 ஒருமுறை, தாவீது அதுல்லாம் குகையில் இருந்தான். அப்போது பெலிஸ்தியர் படை ரெப்பாயீம் பள்ளத்தாக்கில் முகாமிட்டது. முப்பது வீரர்களில் மூன்று பேர் தரையில் ஊர்ந்துப்போய் குகையில் இருந்த தாவீதை அடைந்தார்கள்.

16 இன்னொருமுறை, தாவீது கோட்டையில் இருந்தான். அப்போது பெலிஸ்தர் படைக்குழு ஒன்று பெத்லெகேமில் இருந்தது. 17 அவனது சொந்த ஊரில் உள்ள தண்ணீர் மீது அவனுக்குத் தாகம் ஏற்பட்டது. எனவே, அவன் “பெத்லேகேம் வாசல் அருகேயுள்ள கிணற்று தண்ணீர் மீது எனக்குத் தாகமாய் உள்ளது. யாராவது ஒருவர் கொண்டுவந்து தரவேண்டும் என விரும்புகிறேன்” என்றான். அவன் உண்மையில் அந்த தண்ணீரின் மீது தாகம் கொள்ளவில்லை. எனினும் அவன் அவ்வாறு பேசிக்கொண்டான். 18 ஆனால் மூன்று பேரும் பெலிஸ்தரோடு வழியில் போரிட்ட பிறகே உள்ளே நுழைய முடிந்தது. அவர்கள் பெத்லேகேம் வாசல் அருகில் உள்ள கிணற்று தண்ணீரைக் கொண்டுவந்து தாவீதிடம் கொடுத்தனர். தாவீது அதனைக் குடிக்க மறுத்துவிட்டான். அதனை கர்த்தருக்கு காணிக்கையாகத் தரையில் ஊற்றினான். 19 பிறகு தாவீது, “தேவனே! என்னால் இத்தண்ணீரைக் குடிக்கமுடியாது. தங்கள் உயிரைப் பணயம் வைத்து இவர்கள் இத்தண்ணீரைக் கொண்டுவந்தனர். இதனைக் குடிப்பது இவர்களின் இரத்தத்தைக் குடிப்பது போன்றதாகும்” என்றான். இதற்காகத்தான் தாவீது அந்த தண்ணீரைக் குடிக்க மறுத்தான். இதுபோல பல்வேறு சாகசங்களை மூன்று வீரர்களும் செய்தனர்.

தாவீதின் மற்ற வீரர்கள்

20 மூன்று வீரர்களுக்கும் தலைவனாக அபிசாய் இருந்தான். இவன் யோவாப்பின் சகோதரன். அவன் 300 வீரர்களோடு சண்டையிட்டு தன் ஈட்டியால் அவர்களைக் கொன்றான். மூன்று வீரர்களைப் போன்றே அபிசாயும் பிரபலமாக இருந்தான். 21 இவன் அவர்களைவிட இரண்டு மடங்கு பிரபலமாக இருந்தான். இவன் அவர்களில் ஒருவனாக இல்லாவிட்டாலும் இவன் அவர்களின் தலைவன் ஆனான்.

22 பெனாயா, யோய்தானின் மகன், யோய்தா ஒரு வல்லமை மிக்கவன். இவன் கப்சேயேல் ஊரான். பெனாயாவும் வல்லமைகொண்டவன். இவன் மோவாபில் உள்ள இருபலம் பொருந்திய மனிதர்களைப் போரிட்டுக் கொன்றான். ஒருமுறை பனி பெய்துகொண்டிருக்கும் சமயத்தில், அவன் ஒரு குகைக்குள்ளே சென்று ஒரு சிங்கத்தைக் கொன்றான். 23 மேலும் அவன் ஒரு எகிப்திய வீரனையும் கொன்றான். அவன் 7 1/2 அடி உயரம் உள்ளவன். எகிப்திய வீரனிடம் இருந்த ஈட்டி மிக நீளமாகவும் கனமுள்ளதாகவும் இருந்தது. அது நெய்கிறவனின் படை மரக்கனதிபோல் பெரிதாய் இருந்தது. பெனாயாவிடம் ஒரு தடிமட்டுமே இருந்தது. பெனாயா அவனிடமுள்ள ஈட்டியைப் பிடுங்கி அதனாலேயே அவனைக் கொன்றான். 24 யோய்தாவின் மகனாகிய பெனாயா இதுபோல் பல வேலைகளைச் செய்தான். பெனாயாவும் மூன்று வீரர்களைப் போன்று பிரபலமாக இருந்தான். 25 இவன், முப்பது வீரர்களைவிடவும் பிரபலமானவன். ஆனாலும் அவன் அம்மூன்று வீரர்களுள் ஒருவன் அல்ல. தாவீது, இவனை மெய்க்காப்பாளர்களின் தலைவனாக ஆக்கினான்.

முப்பது வீரர்கள்

26 முப்பது நாயகர்களானவர்கள்:

ஆசகேல், யோவாபின் சகோதரன்; பெத்லகேமைச் சேர்ந்த தோதோவின் மகனான எல்க்கானான்.

27 ஆரோதியனான சம்மோத், பெலோனியனாகிய ஏலெஸ்,

28 தெக்கோவியனான இக்கேசின் மகன் ஈரா, ஆனதோத்தியனான அபியேசர்,

29 ஊசாத்தியனான சிபெக்காய், ஆகோகியனான ஈலாய்,

30 நெத்தோபாத்தியனான மகராயி, நெத்தோபாத்தியனான பானாவின் மகன் ஏலேத்,

31 பென்யமீன் வம்சத்தானான இபேயா ஊரைச் சேர்ந்த ரிபாயின் மகனான இத்தாயி, பிரத்தோனியனான பெனாய,

32 காகாஸ் நீரோடை நாட்டானான ஊராயி, அர்பாத்தியனான அபியேல்,

33 பகரூமியனான அஸ்மாவேத், சால்போனியனான எலியாபா,

34 கீசோனியனான ஆசேமின் மகன்கள்,

35 ஆராரியனாகிய சாகியின் மகனான யோனத்தான், ஆராரியனாகிய சாக்காரின் மகன் அகியாம், ஊரின் மகன் எலிபால்,

36 மெகராத்தியனான எப்பேர், பெலோனியனான அகியா,

37 கர்மேலியனான எஸ்ரோ, எஸ்பாயின் மகன் நாராயி,

38 நாத்தானின் சகோதரனான யோவேல், அகரியின் மகனான மிப்கார்,

39 அம்மோனியனான சேலேக், செருயாவின் மகனான யோவாபின் ஆயுததாரியான பெரோத்தியனான நாராயி,

40 இத்தரியனான ஈரா, இத்தாரியனான காரெப்,

41 ஏத்தியனான உரியா, அக்லாயின் மகன் சாபாத்,

42 ரூபனியரின் கோத்திரத்திலிருந்து சீசாவின் மகன் அதினா, அவனோடு சேர்ந்த 30 பேர்,

43 மாகாவின் மகன் ஆனான், மிதினியனான யோசபாத்,

44 அஸ்தரேத்தியனான உசியா, ஆரோவேரியனாகிய ஓத்தாமின் மகன் சமா, யேகியேல்,

45 சிம்ரியின் மகன் எதியாயேல், தித்சியனான அவன் சகோதரன் யோகா,

46 மாகாவியரின் மகன் எலியேல், எல்நாமின் மகன் எலிபாய், யொசவியா, மோவாபியனான இத்மா,

47 மெசோபாயா ஊராராகிய எலியேல், ஓபேது, யாசீயேல் ஆகியோர்.

தாவீதோடு சேர்ந்த துணிச்சல்காரர்கள்

12 தாவீது சிக்லாகில் இருக்கும்போது அவனிடம் வந்தவர்களின் பட்டியல்: கீசின் மகனாகிய சவுலுக்குப் பயந்து மறைந்துகொள்ளும் காலமது. இவர்கள் போரில் தாவீதிற்கு உதவினார்கள். இவர்கள் தம் வில்களிலிருந்து அம்புகளை வலது அல்லது இடது கைகளால் எய்தனர். இவர்கள் தம் வலது அல்லது இடது கைகளால் கற்களை கவண்களிலிருந்தும் எய்தனர். இவர்கள் சவுலின் உறவினர்கள், பென்யமீன் கோத்திரத்தில் இருந்து வந்தவர்கள். அவர்களின் பெயர்களாவன:

அகியேசர் எனும் தலைவன், கிபியேத்தியனான சேமாவின் மகன் யோவாசு, அஸ்மாவேத்தின் மகனான எசியேல், அஸ்மாவேத்தின் மகனான பேலேத்து, பெராக்கா, மற்றும் ஆனதோத்தியனான ஏகூ, ஆகியோர். கிபியோனியனான இஸ்மாயா 30 வீரர்களில் வல்லவன்; அந்த 30 வீரர்களுக்கும் அவன் தலைவன். எரேமியா, யகாசியேல், யோகனான், கெதேரூரானான யோசபாத், எலுசாயி, எரிமோத், பிகலியா, செமரியா, அருப்பியனான செப்பத்தியா, எல்க்கானா, எஷியா, அசாரியேல், யொவேசேர், யாசொபெயாம் என்னும் கோரேகியனும், கோராவின் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். யொவேலா, செபதியா என்னும் கேதோர் ஊரானான எரோகாமின் மகன்கள்.

காத்தியர்கள்

அந்த வனாந்தரத்திலே, காத்தியரின் கோத்திரத்தில் ஒரு பகுதியினர் தாவீதின் பக்கம் அவனது கோட்டைக் காவலர்களாகச் சேர்ந்துக்கொண்டனர். அவர்கள் போர் பயிற்சிகொண்டவர்கள், வலிமையுள்ளவர்கள். அவர்கள் போரில் ஈட்டியும் கேடயமும் கையாளுவதில் வல்லவர்கள். அவர்கள் சிங்கத்தைப்போன்று காட்சியளித்தார்கள். மலையிலிருந்த கசேலியர்களைப்போன்று வேகமானவர்கள்.

எத்சேர் படைத்தலைவன். இவன் காத்தியர் கோத்திரத்தைச் சேர்ந்தவன். இரண்டாம் தலைமை நிலையில் ஒபதியா இருந்தான். எலியாப் மூன்றாவது தலைமை நிலையில் இருந்தான். 10 மிஸ்மன்னா நாலாவதாகவும், எரேமியா ஐந்தாவதாகவும், 11 அத்தாயி் ஆறாவதாகவும், எலியேல் ஏழாவதாகவும், 12 யோகனான் எட்டாவதாகவும், எல்சபாத் ஒன்பதாகவும், 13 எரேமியா பத்தாவதாகவும், மக்பன்னாயி பதினோராவதாகவும் இருந்தனர்.

14 இவர்கள் காத்தியப் படைவீரர்களின் தலைவர்கள். இவர்களில் பலவீனமானவர்கள் 100 பேருக்கும் பலமுள்ளவன் 1,000 பேருக்கும் எதிராகப் போரிட வல்லவர்கள். 15 காத்தியர்களின் கோத்திரத்தைச் சேர்ந்த இவர்கள் யோர்தான் கரைபுரண்டு ஓடிய ஆண்டின் முதல் மாதத்தில் ஆற்றைக் கடந்தனர். அப்பள்ளத்தாக்கில் உள்ளவர்களை விரட்டி அடித்தனர். இவர்கள் அவர்களைக் கிழக்கிலிருந்து மேற்காகத் துரத்தினார்கள்.

தாவீதோடு சேர்ந்த மற்ற வீரர்கள்

16 பென்யமீன் மற்றும் யூதா கோத்திரங்களில் உள்ளவர்களும் கோட்டைக்கு வந்து தாவீதோடு சேர்ந்துகொண்டனர். 17 தாவீது அவர்களைச் சந்திக்க வெளியே வந்தான். தாவீது அவர்களிடம், “எனக்கு உதவும் எண்ணத்தோடு சமாதானமாய் வந்தால், உங்களை வரவேற்கிறேன். என்னோடு சேர்ந்துக்கொள்ளுங்கள். அவ்வாறில்லாமல் நான் ஒரு தவறும் செய்யாமல் இருக்கும்போது, என்னைக் கவனித்து எதிரிகளிடம் காட்டிக்கொடுக்க நீங்கள் வந்திருந்தால், நம் முற்பிதாக்களின் தேவன் உங்கள் தீய காரியங்களைக் கவனித்து அதற்குரிய தண்டனையைக் கொடுப்பார்” என்றான்.

18 முப்பது வீரர்களின் தலைவன் அமாசாயி, அவன் மேல் ஆவி வந்து இறங்கியது. அதனால் அவன்,

“தாவீது! நாங்கள் உம்முடையவர்கள், ஈசாயின் மகனே!
    நாங்கள் உம்மோடு இருப்போம், சமாதானம், உனக்குச் சமாதானம்! ஏனென்றால் உன் தேவன் உனக்கு உதவுகிறார்!” என்றான்.

எனவே தாவீது அவர்களை வரவேற்றான். அவர்களைப் படைக்குத் தலைவர்களாக்கினான்.

19 மனாசேயின் கோத்திரத்தில் உள்ள சிலர் தாவீதோடு சேர்ந்துகொண்டனர். அவன் பெலிஸ்தர்களோடு சேர்ந்துகொண்டு சவுலுக்கு எதிராகச் சண்டை செய்யப் போனபோது மனாசே கோத்திரத்தினர் அவனோடு சேர்ந்தனர். ஆனால், தாவீதும் அவனது ஆட்களும் உண்மையில் பெலிஸ்தர்களுக்கு உதவி செய்யவில்லை. பெலிஸ்திய தலைவர்கள் தாவீது தமக்கு உதவுவதாகப் பேசிக்கொண்டனர். ஆனால், பிறகு அவனை அனுப்பிவிட முடிவு செய்தனர். இராஜாக்கள், “தாவீது தனது எஜமான் சவுலோடு போய் சேர்ந்துகொண்டால் பிறகு நமது தலைகள் அறுபடும்” என்றனர். 20 தாவீது சிக்லாகுக்குத் திரும்பிப் போகும்போது கீழ்க்கண்ட மனாசேயர்கள் அவனோடு சேர்ந்துகொண்டனர். அத்னாக், யோசபாத், எதியாவேல், மிகாயேல், யோசபாத், எலிகூ, சில்த்தாயி ஆகியோர். இவர்கள் மனாசே கோத்திரத்தினர். தாவீதின் படைக் குழு தலைவர்களானார்கள். 21 இவர்கள், தாவீதின் தீயவர்களுக்கு எதிராகப் போரிட உதவினார்கள். அத்தீயவர்கள் நாடு முழுவதும் சுற்றி ஜனங்களிடம் கொள்ளையடித்தனர். மனாசேயின் வீரர்கள் அனைவரும் பலசாலிகள். இவர்கள் தாவீதின் படையில் தலைவர்களானார்கள்.

22 ஒவ்வொரு நாளும் மேலும் மேலும் வீரர்கள் தாவீதிற்கு உதவ வந்தனர். எனவே தாவீதிடம் ஒரு பெரியப் பலமிக்க படை இருந்தது.

எப்ரோனில் தாவீதோடு சேர்ந்த மற்ற வீரர்கள்

23 எப்ரோன் நகரத்தில் கீழ்க்கண்ட ஆட்கள் தாவீதோடு சேர்ந்துகொண்டனர். அவர்கள் போர் செய்ய தயாராக இருந்தனர். சவுலின் அரசைத் தாவீதிற்கு அளிப்பதற்காக அவர்கள் வந்தனர். அது கர்த்தர் சொன்னபடி நிகழ்ந்தது. இது அவர்களின் எண்ணிக்கையாகும்.

24 யூதா கோத்திரத்தில் இருந்து 6,800 பேர் போர் செய்ய தயாராயிருந்தனர். அவர்கள் ஈட்டிகளையும் கேடயங்களையும் கொண்டுவந்தனர்.

25 சிமியோனின் கோத்திரத்தில் இருந்து 7,100 பேர் வந்தனர். அவர்கள் தைரியமுள்ளவர்களாக போர் செய்யத் தயாராக இருந்தனர்.

26 லேவியின் கோத்திரத்தில் இருந்து 4,600 பேர் வந்தனர். 27 யோய்தாவும் அந்த குழுவில் உள்ளவன். இவன் ஆரோனின் கோத்திரத்தில் உள்ளவன். இவனும் தலைவன். யோய்தாவுடன் 3,700 பேர் இருந்தனர். 28 சாதோக்கும் அந்த குழுவில் இருந்தான். இவன் வீரமிக்க இளைஞன். இவன் தன் குடும்பத்தில் உள்ள 22 வீரர்களோடு வந்தான்.

29 பென்யமீனின் கோத்திரத்திலிருந்து 3,000 பேர் வந்தனர். இவர்கள் சவுலின் உறவினர்கள். இதுவரை இவர்கள் சவுலின் குடும்பத்துக்கு உண்மையுள்ளவர்களாக இருந்தனர்.

30 எப்பிராயீம் கோத்திரத்திலிருந்து 20,800 பேர் வந்தனர். இவர்கள் பலமிக்க வீரர்கள். இவர்கள் தம்தம் குடும்பங்களில் பிரபலமானவர்கள்.

31 மனாசே கோத்திரத்தின் பாதிப்பிரிவில் இருந்து 18,000 பேர் வந்தனர். தாவீதை அரசனாக்குவதற்காக அவர்கள் ஒவ்வொருவராகப் பேர் சொல்லி அழைக்கப்பட்டனர்.

32 இசக்காரின் கோத்திரத்திலிருந்து 200 அறிஞர்கள் வந்தனர். இவர்கள் சரியான காலத்தில் சரியானவற்றை இஸ்ரவேலர்களுக்குச் செய்யத் தெரிந்தவர்கள். இவர்களின் உறவினர்கள் இவர்களுக்குக் கீழாக இவர்களின் கட்டளைப்படி இருந்தனர்.

33 செபுலோனின் கோத்திரத்திலிருந்து 50,000 பயிற்சிப் பெற்ற வீரர்கள் வந்தனர். இவர்கள் எல்லாவிதமான ஆயுதங்களையும் பயன்படுத்த பயிற்சிப் பெற்றிருந்தனர். இவர்கள் தாவீதிற்கு உண்மையுள்ளவர்களாக இருந்தனர்.

34 நப்தலி கோத்திரத்திலிருந்து 1,000 அதிகாரிகள் வந்தனர். இவர்களோடு 37,000 வீரர்கள் இருந்தனர். இவர்கள் ஈட்டியையும் கேடயத்தையும் கொண்டு வந்தனர்.

35 தாணின் கோத்திரத்திலிருந்து 28,600 பேர் போர் செய்ய தயாராக இருந்தனர்.

36 ஆசேரின் கோத்திரத்திலிருந்து 40,000 பயிற்சிப் பெற்ற போர் வீரர்கள் போர் செய்ய தயாராய் இருந்தார்கள்.

37 யோர்தான் ஆற்றுக்குக் கீழ்ப்பகுயில் இருந்து 1,20,000 பேர் வந்தனர். இவர்கள் ரூபன், காத் மற்றும் பாதி மனாசே கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களிடம் எல்லா வகையான ஆயுதங்களும் இருந்தன.

38 இவர்கள் அனைவரும் பலமிக்க போர் வீரர்கள். இவர்கள் தாவீதை அரசனாக்குவதற்கு சம்மதம் தெரிவித்தே எப்ரோன் நகருக்கு வந்தனர். இஸ்ரவேலில் உள்ள மற்ற ஜனங்களும் தாவீது அரசனாக வேண்டும் என எண்ணினார்கள். 39 இவர்கள் எப்ரோனில் தாவீதோடு 3 நாட்களைக் கழித்தனர். இவர்களின் உறவினர்கள் உணவு தயாரித்துக் கொடுத்ததால் இவர்கள் உண்ணுவதும், குடிப்பதுமாய் இருந்தனர். 40 இசக்கார், செபுலோன், நப்தலி ஆகிய கோத்திரங்கள் வசிக்கிற இடத்தின் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் கழுதைகள், ஒட்டகம், கோவேறு கழுதை, மாடுகள் மீது உணவைக் கொண்டு வந்தனர். இவர்கள் மாவு, அத்திப்பழ அடைகள், காய்ந்த திராட்சைப் பழங்கள், திராட்சைரசம், எண்ணெய், ஆடுமாடுகள் ஆகியவற்றைக் கொண்டுவந்தனர். இஸ்ரவேல் ஜனங்கள் பெரிதும் மகிழ்ந்தனர்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center