Chronological
சாலொமோன் ஞானத்தைக் கேட்டல்
3 சாலொமோன், பார்வோன்எனும் எகிப்திய மன்னனோடு, ஒப்பந்தம் செய்து அவனது குமாரத்தியை திருமணம் செய்துகொண்டான். சாலொமோன் அவளை தாவீது நகரத்திற்கு அழைத்து வந்தான். அப்போது, சாலொமோன் தனது அரண்மனையையும் கர்த்தருடைய ஆலயத்தையும் கட்டிக்கொண்டிருந்தான். அவன் எருசலேமைச் சுற்றிலும் ஒரு சுவரையும் கட்டிக்கொண்டிருந்தான். 2 ஆலயம் முடிக்கப்படாமல் இருந்தது. எனவே ஜனங்கள் பொய் தெய்வங்களின் பலிபீடங்களில் மிருகங்களைப் பலிகொடுத்து வந்தனர். 3 சாலொமோன் கர்த்தரை நேசிப்பதாகக் காட்டிக்கொண்டான். அவனது தந்தையான தாவீது சொன்னதற்கெல்லாம் கீழ்ப்படியும்பொருட்டு அவன் இவ்வாறு செய்து வந்தான். அதனால் அதோடு தாவீது சொல்லாத சிலவற்றையும் அவன் செய்துவந்தான். அவன் மேடைகளுக்குப் பலி கொடுப்பதையும் நறுமணப்பொருட்களை எரிப்பதையும் இன்னும் கடைப்பிடித்தான்.
4 ராஜாவாகிய சாலொமோன் கிபியோனுக்குச் சென்று பலிகொடுத்தான். அது மிகவும் முக்கியமான தெய்வீகஇடம் என்பதால் அவன் அங்கே சென்றான். அவன் பலிபீடத்தில் 1,000 பலிகளைச் செய்தான். 5 சாலொமோன் கிபியோனில் இருந்தபோது. அன்று இரவு கனவில் கர்த்தர் வந்தார். தேவன், “உனக்கு என்ன வேண்டுமோ கேள் அதனை நான் உனக்கு தருவேன்” என்றார்.
6 சாலொமோனும், “உங்கள் ஊழியனான என் தந்தை தாவீதிடம் நீர் மிகுந்த கருணையுடன் இருந்தீர். அவரும் உம்மை பின்பற்றினார். அவர் நல்லவராகவும் சரியானவராகவும் வாழ்ந்தார். அவரது குமாரனை அவருக்குப் பின் சிங்காசனத்தில் அமர வைத்ததன் மூலம் கருணையைக் காட்டிவிட்டீர். 7 என் தேவனாகிய கர்த்தாவே, என் தந்தையின் இடத்தில் என்னை ராஜாவாக்கினீர். ஆனால் நான் ஒரு குழந்தையைப்போன்று இருக்கிறேன். நான் செய்யவேண்டியதைச் செய்வதற்குரிய ஞானம் இல்லாமல் இருக்கிறேன். 8 உங்கள் ஊழியனான நான் உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுள் ஒருவனாக இருக்கிறேன். அங்கே ஏராளமான ஜனங்கள் இருக்கின்றனர். அவர்கள் கணக்கிட மிகுதியாக இருந்தனர். ஒரு ராஜா அவர்கள் மத்தியில் பல முடிவுகளை எடுக்க வேண்டியவனாக இருக்கிறான். 9 எனவே எனக்கு ஞானத்தைத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன். அதனால் நான் ஜனங்களைச் சிறப்பாக ஆளவும் சரியான வழியில் நியாயந்தீர்க்கவும் இயலும். இது நான் நல்லதுக்கும் தீமைக்குமான வேறுபாட்டை அறிந்துக்கொள்ளச் செய்யும். மிகப் பெரிய இந்த ஞானம் இல்லாமல் அதிக எண்ணிக்கையில் உள்ள மனிதர்களை ஆள்வது முடியாத செயல்” என்று வேண்டினான்.
10 இவ்வாறு சாலொமோன் வேண்டியதைக் கேட்டு கர்த்தர் மிகவும் மகிழ்ந்தார். 11 தேவன் அவனிடம், “நீ உனக்காக நீண்ட ஆயுளைக் கேட்டுக் கொள்ளவில்லை. நீ உனக்காக பெரிய செல்வத்தையும் கேட்டுக் கொள்ளவில்லை. நீ உன் எதிரிகளின் மரணத்தையும் கேட்டுக்கொள்ளவில்லை. நீயோ வழக்குகளைக் கவனிக்கவும் சரியான முடிவை எடுக்கவும் ஞானத்தைக் கேட்கிறாய். 12 எனவே நீ கேட்டதை நான் உனக்குத் தருவேன். ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தருவேன். இதற்கு முன் இதுபோல யாரும் இருந்ததில்லை என்று சொல்லும்படி உனது ஞானத்தை மகத்தான தாக்குவேன். அதோடு எதிர்காலத்திலும் உன்னைப் போல் யாரும் இருக்கமாட்டார்கள். 13 அதோடு, நீ கேட்காத சிலவற்றையும் உனக்குப் பரிசுகளாகத் தருவேன். உனது வாழ்க்கை முழுவதும் நீ செல்வமும் சிறப்பும் பெற்று விளங்குவாய். இந்த உலகில் உன்னைப்போல் எந்த அரசரும் இல்லை என்று செய்வேன். 14 என்னைப் பின்பற்றுமாறும் எனது சட்டங்களுக்கும் கட்டளைகளுக்கும் கீழ்ப்படியுமாறும் கேட்டுக்கொள்கிறேன். உன் தந்தை தாவீது செய்ததுபோல் செய். அவ்வாறு செய்தால், உனக்கு நீண்ட ஆயுளையும் தருவேன்” என்றார்.
15 சாலொமோன் விழித்தபொழுது, கனவிலே தேவன் பேசினார் என்று அவனுக்குத் தெரிந்தது. பின் அவன் எருசலேம் போய் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியின் முன்பு நின்று கர்த்தருக்குத் தகனபலியைச் செலுத்தினான். கர்த்தருக்குத் சமாதான பலியையும் தந்தான். பின், அவன் தன் ஆட்சிக்கு உதவும் தலைவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் விருந்துகொடுத்தான்.
16 ஒரு நாள் இரு வேசிகள் சாலொமோனிடம் வந்தனர். அவர்கள் ராஜா முன்பு நின்றனர். 17 அதில் ஒருத்தி, “ஐயா, இவளும் நானும் ஒரே வீட்டில் வாழ்கிறோம். நாங்கள் இருவரும் ஒரே சமயத்தில் கர்ப்பமாகி குழந்தைப் பேற்றுக்குத் தயாராக இருந்தோம். நான் குழந்தை பெறும்போது இவளும் கூட இருந்தாள். 18 மூன்று நாட்களுக்குப் பின் இவளும் குழந்தைப் பெற்றாள். அந்த வீட்டில் எங்களைத் தவிர எவரும் இல்லை. நாங்கள் இருவர் மட்டும்தான் இருந்தோம். 19 ஒரு இரவில் இவள் தன் குழந்தையோடு தூங்கும்போது, குழந்தை மரித்துப்போனது. 20 அப்பொழுது நான் தூங்கிக்கொண்டிருந்ததால், இவள் என் குழந்தையை எடுத்துக்கொண்டாள். அவளது மரித்த குழந்தையை என் கையருகில் போட்டுவிட்டாள். 21 மறுநாள் காலையில் எழுந்து என் குழந்தைக்குப் பால் கொடுக்க முயன்றேன். ஆனால் குழந்தை மரித்திருப்பதை அறிந்தேன். பிறகு உற்றுப்பார்த்தபோது அது என் குழந்தையல்ல என்பதை அறிந்துகொண்டேன்” என்றாள்.
22 ஆனால் அடுத்தவள், “இல்லை உயிரோடுள்ள குழந்தை என்னுடையது. மரித்துப்போன குழந்தை உன்னுடையது” என்றாள்.
ஆனால் முதல் பெண், “இல்லை நீ தவறாக சொல்கிறாய்! மரித்த குழந்தை உன்னுடையது. உயிருள்ள குழந்தை என்னுடையது” என்றாள். இவ்வாறு இருவரும் ராஜாவுக்கு முன்பு வாக்குவாதம் செய்து கொண்டனர்.
23 பிறகு சாலொமோன் ராஜா, “இருவருமே உயிரோடுள்ள குழந்தை உங்களுடையது என்று கூறுகிறீர்கள். ஒவ்வொருத்தியும் மரித்துப்போன குழந்தை மற்றவளுடையது என்று கூறுகிறீர்கள்” என்றான். 24 பிறகு சாலொமோன் வேலைக்காரனை அனுப்பி ஒரு வாளைக் கொண்டுவரச் செய்தான். 25 பின்னர் அவன், “நம்மால் செய்யமுடிந்தது இதுதான். உயிரோடுள்ள குழந்தையை இரு துண்டுகளாக வெட்டுவோம். ஆளுக்குப் பாதியைக் கொடுப்போம்” என்றான்.
26 இரண்டாவது பெண், “அதுதான் நல்லது. குழந்தையை இரண்டாக வெட்டுங்கள். பிறகு இருவருக்குமே கிடைக்காமல் போகும்” என்றாள்.
ஆனால் முதல் பெண், அக்குழந்தை மேல் மிகுந்த அன்பு கொண்டவள். அவளே உண்மையான தாய், அவள் ராஜாவிடம், “ஐயா அந்தக் குழந்தையைக் கொல்லவேண்டாம்! அதனை அவளிடமே கொடுத்துவிடுங்கள்” என்றாள்.
27 பிறகு சாலொமோன், “அக்குழந்தையைக் கொல்லவேண்டாம். அதனை முதல் பெண்ணிடமே கொடுத்துவிடுங்கள். அவளே உண்மையான தாய்” என்றான்.
28 இஸ்ரவேல் ஜனங்கள் சாலொமோனின் முடி வைப்பற்றி கேள்விப்பட்டனர். அவனது அறிவுத் திறனைப் பாராட்டி அவனைப் பெரிதும் மதித்தனர். அவன் தேவனிடமிருந்து ஞானத்தைப் பெற்று சரியான முடிவுகளை எடுத்துள்ளான் என்று அறிந்தனர்.
சாலொமோனின் இராஜ்யம்
4 சாலொமோன் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரையும் ஆண்டான். 2 கீழ்க்கண்ட முக்கிய அதிகாரிகள் அனைவரும் அவனது ஆட்சிக்கு உதவினார்கள்.
சாதோக்கின் குமாரனான அசரியா ஆசாரியனாக இருந்தான்.
3 சீசாவின் குமாரனான ஏலிகோரேப்பும், அகியாவும் எழுத்தாளர்கள்.
அகிலூதின் குமாரன் யோசபாத் பதிவாளர்.
4 யோய்தாவின் குமாரன் பெனாயா படைத் தலைவன்.
சாதோக்கும் அபியத்தாரும் ஆசாரியர்கள்.
5 நாத்தானின் குமாரன் அசரியா மணியக்காரர்களின் தலைவன்.
நாத்தானின் குமாரன் சாபூத் ராஜாவின் அன்புக்குரிய பிரதானியும், ஆசாரியனுமாயிருந்தான்.
6 அகீஷார் அரண்மனை விசாரிப்புக்காரன்.
அப்தாவின் குமாரன் அதோனிராம் அடிமைகளுக்கு பொறுப்பு அதிகாரி.
7 இஸ்ரவேல் பன்னிரெண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. சாலொமோன் ஒவ்வொரு மாவட்டத்தையும் ஆள ஆளுநர்களை தேர்ந்தெடுத்தான். இவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் உணவுப் பொருட்களைச் சேகரித்து ராஜாவுக்கும் அவனது குடும்பத்திற்கும் அளித்தனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதத்திற்குப் பொறுப்பேற்றுக் கொண்டனர். 8 கீழ்க்கண்டவர்களே அந்தப் பன்னிரண்டு ஆளுநர்களாவார்கள்:
எப்பிராயீம் மலைநாட்டின் ஆளுநர் ஊரின் குமாரன்.
9 தேக்கேரின் குமாரன், மாக்காத்சிலும், சால்பீமிலும் பெத்ஷிமேசிலும், ஏலோன் பெத்தானானிலும் ஆளுநராக இருந்தான்.
10 ஏசேதின் குமாரன் அறுபோத்திலும், சோகோப்பிலும், எப்பேர் சீமையிலும் ஆளுநராக இருந்தான்.
11 அபினதாபின் குமாரன் இரதத்தின் ஆளுநர்.
இவன் சாலொமோனின் குமாரத்தியான தாபாத்தை மணந்திருந்தான்.
12 அகிலூதின் குமாரனான பானா, தானாகு, மெகிதோ, சர்த்தனாவுக்கு அருகிலும் ஆளுநர்.
இது யெஸ்ரயேலுக்கு கீழாகவும் பெத்செயான் முதல் ஆபேல்மெகொல்லா வரையிலும் யக்மெயாமுக்கு அப்புறம் மட்டும் இருந்தது.
13 ராமோத் கீலேயாத்தின் ஆளுநராக கேபேரின் குமாரன் இருந்தான்.
கீலேயாத் மனாசேயின் குமாரனான யாவீரின் எல்லா ஊர்களுக்கும் கிராமங்களுக்கும் அவன் ஆளுநராக இருந்தான்.
மேலும் பாசானில் அர்கோப் மாவட்டத்திற்கும் அவன் ஆளுநராக இருந்தான்.
இப்பகுதியில் பெரிய மதில்களைக்கொண்ட 60 நகரங்கள் இருந்தன.
இந்த நகரங்களின் வாயில்களில் வெண்கலக்கம்பிகளும் இருந்தன.
14 இத்தோவின் குமாரனான அகினதாப் மக்னாயீமில் ஆளுநர்.
15 அகிமாஸ் நப்தலியில் ஆளுநர்.
இவன் சாலொமோனின் குமாரத்தியான பஸ்மாத்தை மணந்திருந்தான்.
16 ஊசாயின் குமாரனான பானா ஆசேரிலும் ஆலோத்திலும் ஆளுநர்.
17 பருவாவின் குமாரன் யோசபாத் இசக்காரின் ஆளுநர்.
18 ஏலாவின் குமாரன் சீமேயி பென்யமீனில் ஆளுநர்.
19 ஊரியின் குமாரன் கேபேர் கீலேயாத் நாட்டில் ஆளுநர்.
இங்கு எமோரியரின் ராஜாவாகிய சீகோனும் பாசானின் ராஜாவாகிய ஓகு ஜனங்களும் வாழ்ந்தனர்.
எனினும் இவன் மட்டுமே இங்கு ஆளுநராக இருந்தான்.
20 யூதாவிலும், இஸ்ரவேலிலும் ஏராளமான ஜனங்கள் வாழ்ந்தனர். அவர்களின் எண்ணிக்கை கடற்கரை மணலைப் போன்றிருந்தது. அவர்கள் உண்டும், குடித்தும் மகிழ்ச்சியோடு இருந்தனர்.
21 சாலொமோன், ஐபிராத்து ஆறு முதல் பெலிஸ்தர் நாடுவரையுள்ள நாடுகளை ஆண்டு வந்தான். அவனது எல்லை எகிப்து வரை விரிந்திருந்தது. இந்நாடுகள் சாலொமோனுக்குப் பரிசுகளை அனுப்பி அவனது வாழ்வு முழுவதும் கட்டுபட்டு வாழ்ந்தது.
22-23 சாலொமோனுக்கும் அவனோடு மேஜையில் உணவைச் சேர்ந்து உண்ணும் மற்றவர்களுக்கும் ஒரு நாளுக்கு கீழ்க்கண்ட பொருட்கள் தேவைப்பட்டன:
30 மரக்கால் மெல்லியமாவு, 60 மரக்கால் மாவு, 10 கொழுத்த பசுமாடுகள், 2 நன்றாக மேய்ந்த பசுமாடுகள், 100 ஆடுகள், கலைமான்கள், வெளிமான்கள், பறவைகள்.
24 சாலொமோன் ஐபிராத்து ஆற்றின் மேற்கிலுள்ள நாடுகளையும் அரசாண்டான். இது திப்சா முதல் ஆசா மட்டும் இருந்தது. சாலொமோன் தனது இராஜ்யத்தின் எல்லாப் பக்கங்களிலும் சமாதானமாயிருந்தான். 25 சாலொமோனின் வாழ்நாளில் யூதா மற்றும் இஸ்ரவேலில் உள்ள ஜனங்கள், தாண் முதல் பெயெர்செபா வரை சமாதானத்தோடும் பாதுகாப்போடும் இருந்தனர். இவர்கள் தமது அத்திமரத்தின் நிழலிலும், திராட்சைகொடியின் நிழலிலும் சமாதானத்தோடு குடியிருந்தனர்.
26 சாலொமோனிடம் 4,000 இரதக் குதிரை லாயங்களும் 12,000 குதிரை வீரர்களும் இருந்தனர். 27 ஒவ்வொரு மாதமும் பன்னிரெண்டு மாவட்டங்களிலும் உள்ள ஆளுநர்களும் ராஜாவாகிய சாலொமோனுக்கு வேண்டியவற்றையெல்லாம் கொடுத்து வந்தனர். ராஜாவோடு உணவு அருந்துகின்றவர்களுக்கு இது போதுமானதாக இருந்தது. 28 இரதக் குதிரைகளுக்கும் சவாரிக்குதிரைகளுக்கும் தேவையான வைக்கோல், பார்லி போன்றவற்றையும் அவர்கள் கொடுத்துவந்தனர். ஒவ்வொரு வரும் தங்கள் பொறுப்பின்படி தேவையான தானியங்களை உரிய இடத்திற்குக் கொண்டுவந்தனர்.
சாலொமோனின் ஞானம்
29 தேவன் சாலொமோனைச் சிறந்த ஞானியாக்கினார். அவனால் பலவற்றைப் புரிந்துகொள்ளமுடிந்தது. அவனது ஞானம் கற்பனைக்குள் அடங்காததாக இருந்தது. 30 கிழக்கே உள்ள அறிஞர்களின் ஞானத்தைவிட சாலொமோனின் ஞானம் மிகச்சிறந்ததாக இருந்தது. எகிப்திலுள்ள அனைவரின் ஞானத்தை விடவும் சிறந்த ஞானமாக இருந்தது. 31 பூமியிலுள்ள அனைவரையும்விட புத்திசாலியாக இருந்தான். எஸ்ராகியனாகிய ஏத்தானிலும், ஏமான், கல்கோல், தர்தா என்னும் மாகோலின் ஜனங்களைவிடவும் ஞானவானாயிருந்தான். இஸ்ரவேல் மற்றும் யூதாவைச் சுற்றியுள்ள நாடுகள் அனைத்திலும் அவன் புகழ் பெற்றவனாக விளங்கினான். 32 அவனது வாழ்வில் 3,000 நீதிமொழிகளையும் 1,005 பாடல்களையும் எழுதினான்.
33 சாலொமோனுக்கு இயற்கையைப்பற்றி தெரியும். வீபனோனில் உள்ள கேதுரு மரங்கள் முதற் கொண்டு சுவரில் முளைக்கிற ஈசோப்பு பூண்டுவரை பலவிதமான தாவரங்கள்பற்றி கற்பித்தான். மேலும் அவன் மிருகங்கள் பறவைகள் ஊர்வன மற்றும் மீன்கள் ஆகியவற்றைப் பற்றியும் கற்பித்தான். 34 அவனது ஞானத்தைப்பற்றி தெரிந்துக்கொள்ள பல நாடுகளில் உள்ளவர்களும் வந்தனர். பலநாட்டு ராஜாக்களும் தம் நாட்டிலுள்ள அறிஞர்களை அனுப்பி சாலொமோனைக் கவனிக்க வைத்தனர்.
சாலொமோன் ஞானத்தை கேட்கிறான்
1 சாலொமோன் பலமுள்ள ராஜாவாக விளங்கினான். ஏனென்றால் தேவனாகிய கர்த்தர் அவனோடு இருந்தார். கர்த்தர் அவனை மிகப் பெரியவனாக்கினார். 2 இஸ்ரவேல் ஜனங்களோடு சாலொமோன் பேசினான். அத்துடன் எல்லா தலைவர்களோடும், பொது அதிகாரிகளோடும், நீதிபதிகளோடும், இஸ்ரவேலில் உள்ள ஒவ்வொரு வழிகாட்டிகளோடும், ஒவ்வொரு குடும்பத் தலைவர்களோடும் பேசினான். 3 பிறகு சாலொமோனும் மற்றும் அனைவரும் கூடி கிபியோனில் இருக்கிற மேடைக்குப் போனார்கள். அங்கு தேவனுடைய ஆசரிப்புக் கூடாரம் இருந்தது. இதனைக் கர்த்தருடைய ஊழியக்காரனான மோசே வனாந்தரத்தில் இருக்கும்போது அமைத்தான். 4 தாவீது தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியைக் கீரியாத்யாரீமிலிருந்து எருசலேமிற்குக் கொண்டு வந்தான். அவன் எருசலேமில் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியை வைக்கும்படி ஒரு கூடாரத்தை அமைத்திருந்தான். 5 ஊரியின் குமாரனான பெசலெயேல் வெண்கலப் பலிபீடத்தைச் செய்தான். அது பரிசுத்தக் கூடாரத்தின் முன்பாக கிபியோனில் இருந்தது. எனவே சாலொமோனும் ஜனங்களும் கிபியோனுக்கு கர்த்தருடைய ஆலோசனை பெற சென்றனர். 6 சாலொமோன் மேலே ஆசரிப்புக் கூடாரத்தில் கர்த்தருக்கு முன்பிருந்த வெண்கல பலிபீடத்தின் அருகிலே சென்றான். அப்பலிபீடத்தில் சாலொமோன் 1,000 தகனபலிகளைக் கொடுத்தான்.
7 அன்று இரவு தேவன் சாலொமோனிடம், “நான் உனக்கு என்ன தரவேண்டும் என விரும்புகிறாய் என்பதை கேள்” என்றார்.
8 சாலொமோன் தேவனிடம், “என் தந்தையான தாவீதிடம் நீர் மிகவும் கருணையோடு இருந்தீர். என் தந்தையின் இடத்திற்கு என்னைப் புதிய ராஜாவாகத் தேர்ந்தெடுத்திருக்கிறீர். 9 இப்போது தேவனாகிய கர்த்தாவே! என் தந்தை தாவீதிற்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும். இப்பெரிய நாட்டிற்கு என்னை ராஜாவாகத் தேர்ந்தெடுத்திருக்கிறீர். பூமியில் உள்ள புழுதியைப் போன்று ஏராளமான அளவில் ஜனங்கள் வசிக்கின்றனர். 10 இப்போது எனக்கு அறிவையும் ஞானத்தையும் நீர் தரவேண்டும். அதனால் இந்த ஜனங்களை சரியான வழியில் நடத்திச் செல்வேன். உம்முடைய உதவி இல்லாமல் எவராலும் இந்த ஜனங்களை ஆள இயலாது!” என்றான்.
11 தேவன் சாலொமோனிடம், “உனக்கு நீதியான மனப்பான்மை உள்ளது. நீ செல்வத்தையோ, பொருட்களையோ, பெருமையையோ கேட்கவில்லை. உன் பகைவர்களை அழிக்க வேண்டும் என்றும் கேட்கவில்லை. நீ நீண்ட வாழ்நாளையும் கேட்கவில்லை. நீ இத்தகையவற்றைக் கேட்கவில்லை. நீ என்னிடம் அறிவையும் ஞானத்தையும் வேண்டுகிறாய். எனவே என்னால் தேர்ந்தெடுக்கப்படும் உன்னால் என் ஜனங்களுக்காக சரியான முடிவுகளை எடுக்க இயலும். 12 ஆகையால் நான் உனக்கு அறிவும் ஞானமும் தருகிறேன். ஆனால் அதோடு உனக்குச் செல்வத்தையும் பொருட்களையும் பெருமையையும் தருவேன். இதற்கு முன்னால் இருந்த எந்த ராஜாவுக்கும் கிடைக்காத அளவிற்கு உனக்குச் செல்வமும் சிறப்பும் தருவேன். எதிர்காலத்திலும் இதுபோல் எந்த ராஜாவும் செல்வமும் சிறப்பும் பெறப்போவதில்லை” என்றார்.
13 எனவே, சாலொமோன் கிபியோனில் தொழுதுகொள்ளும் இடத்திற்குச் சென்றான். பிறகு சாலொமோன் ஆசரிப்புக் கூடாரத்தைவிட்டு எருசலேமிற்கு இஸ்ரவேலின் ராஜாவாக அரசாளத் திரும்பிச் சென்றான்.
சாலொமோன் தனது படையையும் செல்வத்தையும் சேர்க்கிறான்
14 சாலொமோன் தனது படைக்காகக் குதிரைகளையும் இரதங்களையும் சேகரிக்க ஆரம்பித்தான். சாலொமோனிடம் 1,400 இரதங்களும் 12,000 குதிரை வீரர்களும் இருந்தார்கள். அவற்றை அவன் இரதத்துக்குரிய நகரங்களில் இருக்கச்செய்தான். அவர்களில் சிலரை அரண்மனையிருந்த எருசலேமிலும் இருக்கச் செய்தான். 15 எருசலேமில் சாலொமோன் ஏராளமாகத் தங்கத்தையும் வெள்ளியையும் சேகரித்தான். அங்கே பொன்னும் வெள்ளியும் கற்களைப் போன்று ஏராளமாகக் குவிக்கப்பட்டிருந்தன. சாலொமோன் கேதுருமரங்களையும் ஏராளமாகச் சேகரித்தான். அவை மேற்கு மலை பள்ளத்தாக்கில் உள்ள காட்டத்தி மரங்களைப் போன்று ஏராளமாக இருந்தன. 16 சாலொமோன் எகிப்திலிருந்தும் கியூவிலிருந்தும் குதிரைகளை வாங்கி வந்தான். ராஜாவின் வியாபாரிகள் கியூவிலிருந்து குதிரைகளை வாங்கி வந்தனர். 17 சாலொமோனின் வியாபாரிகள் 600 சேக்கல் வெள்ளிக்கு ஒரு இரதத்தையும் 150 சேக்கல் வெள்ளிக்கு ஒரு குதிரையையும் வாங்கி வந்தனர். பிறகு இதே விதத்தில் அந்த வியாபாரிகள் குதிரைகளையும் இரதங்களையும் ஏத்தியரின் ராஜாக்களுக்கும் ஆராம் ராஜாக்களுக்கும் கொண்டுபோய் விற்றார்கள்.
சாலொமோனுக்கு.
72 தேவனே, ராஜாவும் உம்மைப்போன்று ஞானமுள்ள முடிவுகளை எடுக்க அவருக்கு உதவும்.
உமது நல்லியல்பை ராஜாவின் குமாரனும் அறிந்துகொள்ள உதவும்.
2 ராஜா உமது ஜனங்களுக்குத் தகுதியான நீதி வழங்க உதவும்.
உமது ஏழை ஜனங்களுக்காக ஞானமுள்ள முடிவுகளை எடுக்க அவனுக்கு உதவும்.
3 தேசம் முழுவதும் சமாதானமும் நீதியும் நிலவட்டும்.
4 ஏழைகளுக்கு ராஜா நல்லவனாக இருக்கட்டும்.
திக்கற்றோருக்கு அவன் உதவட்டும்.
அவர்களைத் தாக்குவோரை அவன் தண்டிக்கட்டும்.
5 சூரியன் ஒளிவிடும் மட்டும், சந்திரன் வானிலுள்ள மட்டும் ஜனங்கள் ராஜாவுக்குப் பயந்து அவனை மதிப்பார்கள் என நான் நம்புகிறேன்.
என்றென்றும் ஜனங்கள் அவனுக்குப் பயந்து அவனை மதிப்பார்கள் என நான் நம்புகிறேன்.
6 வயலில் விழும் மழையைப்போன்றிருக்க ராஜாவுக்கு உதவும்.
பூமியில் விழும் தூறலைப் போன்றிருக்க அவனுக்கு உதவும்.
7 அவன் ராஜாவாக இருக்கும்போது நன்மை மலரட்டும்.
சந்திரன் இருக்கும்மட்டும் சமாதானம் நிலவட்டும்.
8 ஐபிராத்து நதியிலிருந்து பூமியின் தூரத்து எல்லை வரைக்கும்,
கடலிலிருந்து கடல் வரைக்கும் அவன் அரசு பெருகட்டும்.
9 பாலைவனத்தில் வாழும் எல்லா ஜனங்களும் அவனுக்குத் தலை வணங்குவார்கள்.
புழுதியில் முகத்தைப் புதைத்து அவன் பகைவர்கள் அவனுக்கு முன்பாக விழுந்து வணங்கட்டும்.
10 தர்ஷீசின் ராஜாக்களும் தூரத்துத் தேசங்களின் ராஜாக்களும் அவனுக்குப் பரிசுகளைக் கொண்டுவரட்டும்.
ஷேபாவிலும், சேபாவிலுமுள்ள ராஜாக்கள் தங்கள் கப்பத்தை அவனுக்குக் கொண்டுவரட்டும்.
11 எல்லா ராஜாக்களும் நமது ராஜாவை விழுந்து வணங்கட்டும்.
எல்லா தேசங்களும் அவனுக்குச் சேவை செய்யட்டும்.
12 நமது ராஜா திக்கற்றோருக்கு உதவுகிறார்.
ஏழையான திக்கற்ற ஜனங்களுக்கு நம் ராஜா உதவுகிறார்.
13 ஏழையான திக்கற்ற ஜனங்கள் நம் ராஜாவைச் சார்ந்திருப்பார்கள்.
ராஜா அவர்களை உயிரோடு வாழச் செய்கிறார்.
14 அவர்களைத் துன்புறுத்த முயலும் கொடியோரிடமிருந்து ராஜா அவர்களைக் காப்பாற்றுகிறார்.
அந்த ஏழை ஜனங்களின் உயிர்கள் ராஜாவுக்கு மிக முக்கியமானவை.
15 ராஜா நீடூழி வாழ்க!
அவர் சேபாவின் பொன்னைப் பெறட்டும்.
எப்போதும் ராஜாவுக்காக ஜெபம் செய்யுங்கள்.
ஒவ்வொரு நாளும் அவரை ஆசீர்வதியுங்கள்.
16 வயல் நிலங்கள் மிகுதியான தானியத்தை விளைவிக்கட்டும்.
மலைகளும் பயிர்களால் நிரம்பட்டும்.
நிலங்களில் புல் வளர்வது போன்று
நகரங்கள் ஜனங்களால் நிரம்பட்டும்.
17 ராஜா என்றென்றும் புகழ்பெறட்டும்.
சூரியன் ஒளிவிடும்மட்டும் ஜனங்கள் அவர் நாமத்தை நினைவுகூரட்டும்.
ஜனங்கள் அவரால் ஆசீர்வதிக்கப்படட்டும்.
அவர்கள் எல்லோரும் அவரை வாழ்த்தட்டும்.
18 இஸ்ரவேலரின் தேவனாகிய, கர்த்தராகிய தேவனைத் துதியுங்கள்.
தேவன் ஒருவரே அத்தகைய அற்புதமான காரியங்களைச் செய்யமுடியும்.
19 அவரது மகிமைபொருந்திய நாமத்தை என்றென்றும் துதியுங்கள்!
அவரது மகிமை முழு உலகத்தையும் நிரப்பட்டும்! ஆமென், ஆமென்!
20 ஈசாயின் குமாரனாகிய தாவீதின் ஜெபங்கள் இங்கு முடிகின்றன.
2008 by World Bible Translation Center