Chronological
சிறைக்கைதிகள் திரும்பிச்செல்ல கோரேசு உதவுகிறான்
1 பெர்சியாவின் ராஜாவாக கோரேசு வீற்றிருந்த முதல் ஆண்டில்,[a] கர்த்தர் அவனை உற்சாகப்படுத்தி ஓர் அறிவிப்பு கொடுக்கச் சொன்னார். அவன் அந்த அறிவிப்பை எழுத்து மூலமாகவே எழுதி, தனது இராஜ்யத்தில் உள்ள எல்லா இடங்களிலும் வாசிக்கும்படி செய்தான். எரேமியாவின் மூலமாகக் கர்த்தர் சொன்னது உண்மையாகும்படி இவ்வாறு நிகழ்ந்தது. இதுதான் அந்த அறிவிப்பு:
2 பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசிடமிருந்து:
பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர், எனக்கு பூமியிலுள்ள அரசுகளையெல்லாம் கொடுத்தார். யூதா நாட்டிலுள்ள எருசலேமில், அவருக்கு ஒரு ஆலயத்தைக் கட்டும்படி கர்த்தர் என்னைத் தேர்ந்தெடுத்துள்ளார். 3 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர், அவர் எருசலேமில் இருக்கிற தேவன். உங்களோடு தேவனுடைய மனிதர்கள் யாராவது இருப்பின், தேவன் அவர்களை ஆசீர்வதிக்கும் பொருட்டு நான் ஜெபிக்கிறேன். அவர்களை நீங்கள் யூதா நாட்டிலுள்ள எருசலேமிற்கு அனுப்பவேண்டும். அவர்கள் சென்று கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டவும் நீங்கள் அனுப்பவேண்டும். 4 பிழைத்திருக்கிற இஸ்ரவேலர்கள் எங்கெங்கு இருக்கிறார்களோ, அங்குள்ளவர்கள் அவர்களுக்கு ஆதரவு தரவேண்டும். அந்த ஜனங்களுக்கு வெள்ளி, பொன், பசுக்கள் மற்றும் மற்ற பொருட்களைக் கொடுக்கவேண்டும். எருசலேமில் உள்ள தேவனுடைய ஆலயத்திற்காக அன்பளிப்புகளை அவர்களுக்குக் கொடுங்கள் என்பதாகும்.
5 எனவே, யூதா மற்றும் பென்யமீனின் கோத்திரங்களின் தலைவர்களும் ஆசாரியர்களும், லேவியர்களும் எருசலேமிற்குச் செல்லத் தயாரானார்கள். எருசலேமில் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவதற்காக அவர்கள் போனார்கள். தேவன் உற்சாகமூட்டின ஒவ்வொருவரும் எருசலேமிற்குப் போகத் தயாரானார்கள். 6 அவர்களின் அண்டை வீட்டுக்காரர்கள் ஏராளமான பரிசுகளைக் கொடுத்தனர். அவர்கள் வெள்ளி, பொன், பசுக்கள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களைக் கொடுத்தார்கள். இவற்றையெல்லாம் அவர்கள் இலவசமாகக் கொடுத்தார்கள். 7 கோரேசு ராஜா கர்த்தருடைய ஆலயத்தில் உள்ள பொருட்களையெல்லாம் வெளியே கொண்டு வந்தான். நேபுகாத்நேச்சார் அப்பொருட்களை எருசலேமிலிருந்து வெளியே எடுத்திருந்தான். அவன் அவற்றை அவனது பொய்த் தெய்வங்கள் இருக்கும் ஆலயத்தில் வைத்திருந்தான். 8 பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசு அப்பொருட்களை வெளியே கொண்டு வரும்படி கருவூலக்காரனிடம் சொன்னான். அவனது பெயர் மித்திரேதாத். அவன் அதனை எடுத்து வந்து யூதாவின் தலைவனான சேஸ்பாத்சாரிடத்தில் கொடுத்தான்.
9 கர்த்தருடைய ஆலயத்தில் இருந்து மித்திரேதாத் எடுத்து வந்த பொருட்களின் விபரம்: தங்கத் தட்டுகள் 30, வெள்ளித் தட்டுகள் 1,000, கத்திகளும், சட்டிகளும் 29, 10 பொற்கிண்ணங்கள் 30 தங்கக் கிண்ணங்களைப் போன்ற வெள்ளிக் கிண்ணங்கள் 410 மற்ற தட்டுகள் 1,000
11 ஆக மொத்தம், பொன்னாலும் வெள்ளியாலும் செய்யப்பட்டப் பொருட்கள் 5,400. கைதிகள் பாபிலோனில் இருந்து எருசலேமிற்குத் திரும்பிப் போனபோது சேஸ்பாத்சார் இப்பொருட்களைக் கொண்டு வந்தான்.
திரும்பிச் சென்ற கைதிகளின் பட்டியல்
2 அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வந்த அப்பகுதி ஜனங்கள் இவர்கள். முன்பு, பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் இவர்களைப் பாபிலோனுக்குக் கைதிகளாகக் கொண்டுபோயிருந்தான். இவர்கள் இப்போது எருசலேம் மற்றும் யூதாவிற்குத் திரும்பி வந்தார்கள். ஒவ்வொருவரும் தமது சொந்த ஊருக்குத் திரும்பிச் சென்றார்கள். 2 செருபாபேலோடு திரும்பிய ஜனங்களின் விபரம்: யெசுவா, நெகேமியா, செராயா, ரெலாயா, மொர்தெகாய், பில்சான், மிஸ்பார், பிக்வாய், ரேகூம், பானா. இஸ்ரவேலில் இருந்துதிரும்பிய ஜனங்களின் பெயர்களும் எண்ணிக்கையும் கீழ்வருமாறு:
3 பாரோஷின் சந்ததியினர் | 2,172 |
4 செபத்தியாவின் சந்ததியினர் | 372 |
5 ஆராகின் சந்ததியினர் | 775 |
6 யெசுவா மற்றும் யோவாபின் குடும்பத்திலிருந்து பாகாத் மோவாபின் சந்ததியினர் | 2,812 |
7 ஏலாமின் சந்ததியினர் | 1,254 |
8 சத்தூவின் சந்ததியினர் | 945 |
9 சக்காயின் சந்ததியினர் | 760 |
10 பானியின் சந்ததியினர் | 642 |
11 பெபாயின் சந்ததியினர் | 623 |
12 அஸ்காதின் சந்ததியினர் | 1,222 |
13 அதொனிகாமின் சந்ததியினர் | 666 |
14 பிக்வாயின் சந்ததியினர் | 2,056 |
15 ஆதீனின் சந்ததியினர் | 454 |
16 எசேக்கியாவின் குடும்பம் வரைக்கும் அதேரின் சந்ததியினர் | 98 |
17 பேசாயின் சந்ததியினர் | 323 |
18 யோராகின் சந்ததியினர் | 112 |
19 ஆசூமின் சந்ததியினர் | 223 |
20 கிபாரின் சந்ததியினர் | 95 |
21 பெத்லகேமின் ஊரிலிருந்து | 123 |
22 நெத்தோபாவின் ஊரிலிருந்து | 56 |
23 ஆனதோத்தின் ஊரிலிருந்து | 128 |
24 அஸ்மாவேத்தின் ஊரிலிருந்து | 42 |
25 கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் ஆகியோர் ஊரிலிருந்து | 743 |
26 ராமா, காபா ஆகியோரின் ஊரிலிருந்து | 621 |
27 மிக்மாசின் ஊரிலிருந்து | 122 |
28 பெத்தேல், ஆயி ஊரிலிருந்து | 223 |
29 நேபோவின் ஊரிலிருந்து | 52 |
30 மக்பீஷின் ஊரிலிருந்து | 156 |
31 ஏலாமின் ஊரிலிருந்து | 1,254 |
32 ஆரீமின் ஊரிலிருந்து | 320 |
33 லோத், ஆதீத், ஓனோ ஊரிலிருந்து | 725 |
34 எரிகோவின் ஊரிலிருந்து | 345 |
35 சேனாகின் ஊரிலிருந்து | 3,630 |
36 பின்வரும் பட்டியல் ஆசாரியர்களுடையவை:
யெசுவாவின் குடும்பம் வழியாய் யெதாயாவின் சந்ததியினர் | 973 |
37 இம்மேரின் சந்ததியினர் | 1,052 |
38 பஸ்கூரின் சந்ததியினர் | 1,247 |
39 ஆரீமின் சந்ததியினர் | 1,017 |
40 கீழே குறிப்பிடப்பட்டிருப்பவர்கள் லேவியின் கோத்திரத்தைச் சார்ந்தவர்கள்:
ஒதாயாவின் குடும்பம் முடிய யெசுவா மற்றும் கத்மியேல் சந்ததியினர் | 74 |
41 பாடகர்கள்:
ஆசாபின் சந்ததியினர் | 128 |
42 கீழ்வருபவர்கள் ஆலய வாசல் காவலாளர்களின் சந்ததியினர்:
சல்லூம், அதேர், தல்மோன், அக்கூப், அதிதா, சோபா சந்ததியினர் | 139 |
43 ஆலயச் சிறப்பு பணியாளர்களின் சந்ததியினர்:
சீகா, அசுபா, தபாகோத்,
44 கேரோஸ், சீயாகா, பாதோன்,
45 லெபானாக், அகாபா, அக்கூப்,
46 ஆகாப், சல்மாய், ஆனான்,
47 கித்தேல், காகார், ராயாக்,
48 ரேத்சீன், நெகோதா, காசாம்,
49 ஊசா, பாசெயா, பேசாய்,
50 அஸ்னா, மெயூனீம், நெபுசீம்,
51 பக்பூக், அகுபா, அர்கூர்,
52 பஸ்லூத், மெகிதா, அர்ஷா,
53 பர்கோஸ், சிசெரா, தாமா,
54 நெத்சியா, அதிபா.
55 சாலொமோனின் வேலைக்காரர்களது சந்ததியினர்:
சோதாய், சொபெரேத், பெருதா,
56 யாலாக், தர்கோன், கித்தேல்,
57 செபத்தியா, அத்தீல், செபாயீமிலுள்ள பொகெரேத் எசாபயிம், ஆமி.
58 ஆலயப் பணியாட்களும் சாலொமோனின் வேலைக்காரர்களும் மொத்தம் | 392 |
59 எருசலேமிற்குச் சில ஜனங்கள் தெல்மெலாக், தெல்அர்சாவி, கேரூப், ஆதோன், இம்மேர் ஆகிய இடங்களில் இருந்து வந்தனர். ஆனால் இந்த ஜனங்களால் தங்களுடைய குடும்பங்கள் இஸ்ரவேல் குடும்பத்திலிருந்து வந்தவை என நிரூபிக்க முடியவில்லை.
60 தெலாயா, தொபியா, நெகோதா சந்ததியினர் | 652 |
61 ஆசாரியர்களின் குடும்பங்களில் இருந்து வரும் சந்ததியினரின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
அபாயா, கோஸ், பர்சிலாய் (ஒருவன் பர்சிலாயின் குமாரத்திகளில் ஒருத்தியைத் திருமணம் செய்துகொண்டான். அவனும் பர்சிலாயின் சந்ததியினரோடு சேர்த்து எண்ணப்பட்டான்.)
62 இந்த ஜனங்கள் தங்கள் குடும்ப வரலாற்றைத் தேடினார்கள், ஆனால் கண்டுப்பிடிக்க முடியவில்லை. தங்கள் முற்பிதாக்கள் ஆசாரியர்கள், என்பதை நிரூபிக்க முடியவில்லை. எனவே, ஆசாரியர்களாகச் சேவைசெய்ய முடியவில்லை. ஆசாரியர்களின் ஜனங்கள் பட்டியலில், இவர்கள் இடம்பெற முடியவில்லை. 63 இவர்கள் பரிசுத்தமான உணவுப் பொருட்கள் எதையும் உண்ணக்கூடாது என்று ஆளுநர் கட்டளையிட்டார். ஓர் ஆசாரியன் ஊரீமையும் தும்மீமையும் பயன்படுத்தி, தேவனிடம் என்ன செய்யவேண்டும் என்பதைக் கேட்கும் வரைக்கும் அவர்களால் அந்த உணவு எதையும் உண்ண முடியவில்லை.
64-65 ஆக மொத்தம், 42,360 பேர் திரும்பி வந்த குழுவில் இருந்தார்கள். அவர்களின் வேலைக்காரர்களான 7,337 ஆண்கள் மற்றும் பெண்களையும் சேர்க்கவில்லை. அவர்களோடு 200 பாடகர்கள், ஆண்களும் பெண்களுமாய் இருந்தனர். 66-67 அவர்களிடம் 736 குதிரைகள், 245 கோவேறு கழுதைகள், 435 ஒட்டகங்கள், 6,720 கழுதைகள் இருந்தன.
68 இக்கூட்டம் எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்திற்குப் போய்ச் சேர்ந்தது. பிறகு குடும்பத் தலைவர்கள் கர்த்தருடைய ஆலயத்திற்காக அன்பளிப்புகளைக் கொடுத்தனர். ஆலயம் அழிக்கப்பட்ட இடத்திலேயே புதிய ஆலயத்தைக் கட்ட எண்ணினார்கள். 69 ஜனங்கள் தங்களால் முடிந்தவரை கொடுத்தனர். அவர்கள் ஆலயத்தைக் கட்டுவதற்காகக் கொடுத்த பொருட்கள் வருமாறு: 61,000 தங்கக் காசுகள், 5,000 இராத்தல் வெள்ளி, 100 ஆசாரியர்களுக்கான ஆடைகள்.
70 எனவே ஆசாரியர்களும், வேலையாட்களும், மற்றும் பலரும் எருசலேமிலும் அதைச் சுற்றிய இடங்களுக்கும் போனார்கள். இவர்களோடு ஆலயப் பாடகர்களும், வாயில் காவலர்களும், ஆலயப் பணியாளர்களும் இருந்தனர். இஸ்ரவேலின் மற்ற ஜனங்கள் தங்கள் சொந்த நகரங்களில் தங்கினார்கள்.
பலிபீடத்தைத் திரும்பவும் கட்டுதல்
3 எனவே ஏழாவது மாதத்திலே, இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் சொந்த நகரங்களுக்குப் போய் சேர்ந்திருந்தார்கள். அப்போது, எருசலேமில் அனைத்து ஜனங்களும் கூடினர். அவர்கள் அனைவரும் ஒரே இனமாகக் கூடினர். 2 பிறகு யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவும், அவனுடனிருந்த ஆசாரியர்களும், செயல்தியேலின் குமாரனான செருபாபேலும், அவனது ஆட்களும் இஸ்ரவேலின் தேவனுடைய பலிபீடம் கட்டினார்கள். அதன் மீது அவர்கள் பலிகளை செலுத்தமுடியும் என்பதால், இஸ்ரவேலின் தேவனுடைய பலிபீடத்தைக் கட்டினார்கள். மோசேயின் சட்டத்தில் உள்ளபடி அவர்கள் கட்டினார்கள். மோசே தேவனின் சிறப்புக்குரிய ஊழியன் ஆவான்.
3 அந்த ஜனங்கள் தமக்கு அருகில் வாழும் மற்றவர்களைக் கண்டு பயந்தார்கள். ஆனால் அது அவர்களை நிறுத்தவில்லை. அவர்கள் பழைய பலிபீடத்தின் அஸ்திபாரத்தின் மேலேயே கட்டி, அதில் கர்த்தருக்குத் தகனபலிகளைக் கொடுத்தனர். அவர்கள் இப்பலிகளைக் காலையிலும் மாலையிலும் கொடுத்தனர். 4 பிறகு, மோசேயின் சட்டத்தில் சொல்லப்பட்டபடியே அடைக்கலக் கூடாரப் பண்டிகையைக் கொண்டாடினர். பண்டிகையின் ஒவ்வொரு நாளிலும் அவர்கள் குறிப்பிட்ட கணக்கின்படி தகனபலிகளைக் கொடுத்துவந்தனர். 5 அதற்குப் பிறகு, கர்த்தர் கட்டளையிட்டபடியே ஒவ்வொரு நாளும், பிறைச்சந்திர நாளிற்காகவும், அனைத்து பரிசுத்த பண்டிகைகளுக்கும், விடுமுறைகளுக்கும் தகனபலிகளைக் கொடுக்கத் தொடங்கினார்கள். மேலும் இவற்றைத் தவிர கர்த்தருக்காக கொடுக்க விரும்பிய மற்ற பரிசுகளையும் ஜனங்கள் கொடுக்க துவங்கினார்கள். 6 எனவே, ஏழாவது மாதத்தின் முதல் நாளில் இஸ்ரவேல் ஜனங்கள் மீண்டும் கர்த்தருக்குப் பலிகளைக் கொடுக்க ஆரம்பித்தனர். ஆலயம் இன்னும் கட்டப்படாவிட்டாலுங்கூட இது நிகழ்ந்தது.
ஆலயத்தைத் திரும்பக் கட்டுதல்
7 பிறகு அடிமைகளாக இருந்து திரும்பி வந்த அந்த ஜனங்கள், கல்தச்சர்களுக்கும், மரத்தச்சர்களுக்கும் பணம் கொடுத்தார்கள். அதோடு அந்த ஜனங்கள் உணவு, திராட்சைரசம், ஒலிவ எண்ணெய் போன்றவற்றையும் கொடுத்தனர். இவற்றை லீபனோனில் இருந்து கேதுரு மரங்களைக் கொண்டு வருவதற்குத் தீரியர் மற்றும் சீதோன் ஜனங்களுக்குப் பணம் கொடுக்கப் பயன்படுத்தினார்கள். அவர்கள் மரத் தடிகளைக் கப்பல் மூலமாக, சாலொமோன் முதலில் ஆலயம் கட்டும்போது கொண்டுவந்தது போல, யோபா துறைமுகப்பட்டணம்வரை கொண்டுவர விரும்பினார்கள். இவற்றையெல்லாம் செய்ய பெர்சிய ராஜா கோரேசு அனுமதிகொடுத்தான்.
8 எனவே எருசலேமில் உள்ள ஆலயத்திற்கு வந்த இரண்டாவது ஆண்டின், இரண்டாவது மாதத்திற்கு பிறகு செயல்தியேலின் குமாரனாகிய செருபாபேலும், யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவும் ஆலய வேலையைத் தொடங்கினார்கள். அவர்களின் சகோதரர்களும், ஆசாரியர்களும், லேவியர்களும் அடிமைத்தனத்திலிருந்து திரும்ப எருசலேமுக்கு வந்த ஒவ்வொருவரும் அவர்களோடு வேலைச் செய்தனர். கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவதற்கு லேவியர்களில் இருபது வயதுடையவர்களையும், அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களையும் தலைவர்கள் ஆக்கினார்கள். 9 கர்த்தருடைய ஆலய வேலைகளை மேற்பார்வையிட்டவர்கள் பெயர்கள் வருமாறு: யெசுவாவும், அவனது குமாரர்களும், கத்மியேலும் அவனது குமாரர்களும், (இவர்கள் யூதாவின் சந்ததியினர்) லேவியர்களாகிய எனாதாத்தின் குமாரர்களும், சகோதரர்களும். 10 கர்த்தருடைய ஆலயத்திற்கான அஸ்திபாரத்தை கட்டிடக்காரர்கள் கட்டிமுடித்தனர். அஸ்திபார வேலை முடிந்ததும், ஆசாரியர்கள் தங்கள் ஆடைகளை அணிந்து கொண்டார்கள். பிறகு தமது எக்காளங்களைப் பெற்றுக்கொண்டார்கள். ஆசாபின் பிள்ளைகள் தாளங்களைப் பெற்றார்கள். அவர்கள் கர்த்தரைத் துதிப்பதற்காக தங்கள் இடங்களில் நின்றுக்கொண்டார்கள். முன்பு தாவீது செய்தபடியேயும், கட்டளையிட்டபடியேயும் இது நடந்தது. 11 அவர்கள் மாறி, மாறி துதிப்பாடல்களைப் பாடினார்கள்.
“கர்த்தர் நல்லவர் எனவே அவரைத் துதியுங்கள்,
எல்லாக் காலத்துக்கும் அவரது உண்மையான அன்பு தொடர்ந்திருக்கும்.”
என்ற பாடல்களைப் பாடினார்கள். பிறகு அவர்கள் பலமாகச் சத்தமிட்டு ஆர்ப்பரித்து கர்த்தரைத் துதித்தார்கள். இதற்குக் காரணம் கர்த்தருடைய ஆலயத்திற்கான அஸ்திபாரம் போடப்பட்டதுதான்.
12 ஆனால் பல முதிய ஆசாரியர்களும், லேவியர்களும், குடும்பத் தலைவர்களும், அழுதார்கள். ஏனென்றால் முதியவர்கள் பழைய ஆலயத்தை ஏற்கெனவே பார்த்திருந்தார்கள். அதன் அழகை அவர்கள் நினைத்து பார்த்தனர். அவர்கள் புதிய ஆலயத்தை பார்த்ததும் சத்தமிட்டு அழுதனர். மற்றவர்கள் மகிழ்ச்சியோடு சத்தமாக ஆரவாரம் செய்யும்போது இவர்கள் அழுதனர். 13 அவர்களின் ஆரவாரம் வெகுதூரம் கேட்டது. அவர்கள் மிகுந்த ஆரவாரம் செய்ததால் எவராலும் அழுகைக்குரல் எது, ஆனந்தக்குரல் எதுவென பிரித்துக் கூறமுடியவில்லை.
2008 by World Bible Translation Center