Print Page Options
Previous Prev Day Next DayNext

Chronological

Read the Bible in the chronological order in which its stories and events occurred.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 43-45

43 தேவனே, உம்மைப் பின்பற்றாதவன் ஒருவன் இருக்கிறான்.
    அவன் வஞ்சகன், பொய்யன்.
தேவனே, நான் நீதிமான் என்பதை நிரூபியும், என்னைப் பாதுகாத்தருளும்.
    அம்மனிதனிடமிருந்து என்னைத் தப்புவியும்.
தேவனே, நீர் என் பாதுகாப்பிடம்.
    ஏன் என்னைக் கைவிட்டீர்?
    பகைவரிடமிருந்து தப்பும் வழியை நீர் ஏன் எனக்குக் காட்டவில்லை?
தேவனே, உமது ஒளியும் உண்மையும் என் மேல் பிகாசிப்பதாக.
    உமது பரிசுத்த மலைக்கு அவை வழிகாட்டும்.
    உமது வீட்டிற்கு அவை என்னை வழிநடத்தும்.
நான் தேவனுடைய பலிபீடத்திற்கு வருவேன்.
    என்னை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்கிற தேவனிடம் நான் வருவேன்.
    தேவனே, என் தேவனே, உம்மைச் சுரமண்டலத்தால் வாழ்த்துவேன்.

ஏன் நான் துக்கமாயிருக்க வேண்டும்?
    ஏன் நான் கலக்கம் கொள்ளவேண்டும்?
நான் தேவனுடைய உதவிக்காகக் காத்திருப்பேன்.
    அவரைத் துதிக்கும் வாய்ப்பு இன்னும் எனக்கு கிடைக்கும்.
    அவர் என்னை மீட்பார்.

கோராகின் குடும்பத்தைச் சேர்ந்த இராகத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட மஸ்கீல் என்னும் பாடல்.

44 தேவனே, நாங்கள் உம்மைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறோம்.
    எங்கள் முற்பிதாக்கள் அவர்களுடைய வாழ்நாளில் நீர் செய்தவற்றை எங்களுக்குக் கூறியிருக்கிறார்கள்.
    கடந்தகாலத்தில் நீர் செய்தவற்றை அவர்கள் எங்களுக்குக் கூறியிருக்கிறார்கள்.
தேவனே, உமது மிகுந்த வல்லமையினால்
    பிறரிடமிருந்து இந்த தேசத்தை எடுத்து எங்களுக்கு நீர் கொடுத்தீர்.
அந்நியர்களை அழித்தீர்.
    இத்தேசத்தினின்று அவர்களைத் துரத்தி விலக்கினீர்.
எங்கள் முற்பிதாக்களின் வாள்கள் தேசத்தைக் கைப்பற்றவில்லை.
    அவர்களின் பலமான கரங்கள் அவர்களை வெற்றி வீரர்களாக்கவில்லை.
நீர் எங்கள் முன்னோரோடிருந்ததால் அவ்வாறு நிகழ்ந்தது.
    தேவனே, உமது பெரிய வல்லமை எங்கள் முற்பிதாக்களைக் காத்தது. ஏனெனில் நீர் அவர்களை நேசித்தீர்.

என் தேவனே, நீர் என் ராஜா.
    நீர் கட்டளையிடும், யாக்கோபின் ஜனங்களை வெற்றிக்கு நேராக வழிநடத்தும்.
என் தேவனே, உமது உதவியால் பகைவர்களைத் துரத்துவோம்.
    உமது பெயரின் உதவியோடு பகைவர்கள்மீது நடப்போம்.
நான் என் வில்லுகளையும், அம்புகளையும் நம்பமாட்டேன்.
    என் வாள் என்னைக் காப்பாற்றாது.
தேவனே, நீர் எங்களை எகிப்திலிருந்து மீட்டீர்.
    எங்கள் பகைவர்களை வெட்கமடையச் செய்தீர்.
தேவனை நாங்கள் எப்பொழுதும் துதிப்போம்.
    உமது நாமத்தை எந்நாளும் துதிப்போம்!

ஆனால், தேவனே, நீர் எங்களை விட்டு விலகினீர்.
    நீர் எங்களை வெட்கமடையச் செய்கிறீர்.
    யுத்தத்திற்கு நீர் எங்களோடு வரவில்லை.
10 எங்கள் பகைவர்கள் எங்களைத் துரத்தச் செய்தீர்.
    எங்கள் பகைவர்கள் எங்கள் செல்வத்தை எடுத்துக்கொண்டனர்.
11 உணவாகும் ஆடுகளைப்போல் எங்களைக் கொடுத்துவிட்டீர்.
    தேசங்களில் எல்லாம் எங்களைச் சிதறடித்தீர்.
12 தேவனே, உமது ஜனங்களை எந்தப் பயனுமின்றி விற்றுப்போட்டீர்.
    நீர் எங்களை விலை பேசவுமில்லை.

13 எங்கள் அயலாரிடம் எங்களை நிந்தையாக்கினீர்.
    அயலார்கள் எங்களைப் பார்த்து நகைத்து எங்களைக் கேலி செய்கிறார்கள்.
14 ஜனங்கள் கூறும் வேடிக்கைக் கதைகளில் ஒன்றானோம்.
    தங்களுக்கென நாடற்ற ஜனங்கள் கூட எங்களைப் பார்த்து நகைத்துத் தலையைக் குலுக்குகிறார்கள்.
15 நான் நாணத்தால் மூடப்பட்டேன்.
    நான் முழுவதும் வெட்கத்தால் நாணுகிறேன்.
16 என் பகைவர்கள் என்னை அவமானப்படச் செய்தனர்.
    என் பகைவர்கள் என்னைக் கேலி செய்வதின் மூலம் பழிவாங்க முயற்சி செய்கிறார்கள்.

17 தேவனே, நாங்கள் உம்மை மறக்கவில்லை.
    ஆயினும் நீர் இவற்றையெல்லாம் எங்களுக்குச் செய்கிறீர்.
    உம்மோடு உடன்படிக்கை செய்து கொண்டபோது நாங்கள் பொய்யுரைக்கவில்லை.
18 தேவனே, நாங்கள் உம்மை விட்டு விலகிச் செல்லவில்லை.
    உம்மைப் பின்பற்றுவதை நிறுத்தவில்லை.
19 ஆனால் தேவனே, ஓநாய்கள் வாழும் இடத்தில் எங்களைத் தள்ளினீர்.
    மரண இருளைப் போன்ற இடத்தில் எங்களை வைத்தீர்.

20 தேவனுடைய நாமத்தை நாங்கள் மறந்தோமா?
    பிற தெய்வங்களிடம் ஜெபித்தோமா? இல்லை!
21 உண்மையாகவே, தேவன் இவற்றை அறிகிறார்.
    எங்கள் ஆழ்ந்த இரகசியங்களையும் அவர் அறிந்திருக்கிறார்.
22 தேவனே, உமக்காக ஒவ்வொரு நாளும் நாங்கள் கொல்லப்படுகிறோம்.
    கொல்லப்படுவதற்கு அழைத்துச்செல்லப்படும் ஆடுகளைப் போலானோம்.

23 என் ஆண்டவரே, எழுந்திரும்!
    ஏன் நித்திரை செய்கிறீர்? எழுந்திரும்!
    எப்பொழுதும் எங்களைக் கைவிட்டு விடாதேயும்.
24 தேவனே, எங்களிடமிருந்து ஏன் ஒளிந்து கொண்டிருக்கிறீர்?
    எங்கள் வேதனைகளையும், தொல்லைகளையும் நீர் மறந்து விட்டீரா?

25 நாங்கள் புழுதியில் தள்ளப்பட்டோம்,
    தரையின்மேல் தலைகுப்புறப் படுத்துக்கொண்டிருக்கிறோம்.
26 தேவனே, எழுந்திருந்து எங்களுக்கு உதவும்.
    உமது உண்மையான அன்பினால் எங்களைப் பாதுகாத்தருளும்.

“சோஷனீம்” என்னும் இசைக்கருவியில் வாசிக்க கோரா குடும்பத்தினரின் இராகத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட, ஒரு நேசத்தின் பாடல்.

45 ராஜாவுக்கு இவற்றை எழுதுகையில் அழகு சொற்கள் என் இதயத்தை நிரப்பும்.
    தேர்ந்த எழுத்தாளனின் எழுதுகோல் வெளிப்படுத்தும் சொற்களாய் என் நாவிலிருந்து சொற்கள் வெளிப்படுகின்றன.

நீரே யாவரினும் அழகானவர்!
    நீர் பேச்சில் வல்லவர், எனவே தேவன் உம்மை என்றென்றும் ஆசீர்வதிப்பார்.
வாளை எடும்.
    மேன்மையான ஆடைகளை அணியும்.
நீர் அற்புதமாகக் காட்சியளிக்கிறீர்!
    நன்மைக்காகவும், நீதிக்காகவும் சென்று போரில் வெல்லும்.
    அதிசயங்களைச் செய்வதற்கு வல்லமைமிக்க உமது வலக்கரத்தைப் பயன்படுத்தும்.
உமது அம்புகள் ஆயத்தமாயுள்ளன.
    நீர் பலரைத் தோற்கடிப்பீர். உமது பகைவர்கள் மீது ராஜாவாயிரும்.
தேவனே, உமது ஆட்சி என்றென்றும் தொடரும்.
    நன்மையே உமது செங்கோலாகும்.
நீர் நன்மையை விரும்பித் தீமையைப் பகைக்கிறீர்.
    எனவே உமது தேவன் உம் நண்பர்களுக்கு மேலாக உம்மை ராஜாவாக்கினார்.
வெள்ளைப்போளம், இலவங்கம், சந்தனம் ஆகியவற்றின் நறுமணம் உம் ஆடைகளில் வீசும்.
    தந்தத்தால் மூடப்பட்ட அரண்மனைகளிலிருந்து உம்மை மகிழ்வூட்டும் இசை பரவும்.
மணத்தோழியரே ராஜாவின் குமாரத்திகள் ஆவர்.
    உமது வலப் பக்கத்தில் மணப்பெண் பொன்கிரீடம் சூடி நிற்கிறாள்.

10 மகளே, கேள்,
    கவனமாகக் கேள், நீ புரிந்துகொள்வாய்.
உன் ஜனங்களையும், உன் தந்தையின் குடும்பத்தையும் மறந்துவிடு.
11     ராஜா உன் அழகை விரும்புகிறார்.
அவர் உன் புது மணமகன்.
    நீ அவரைப் பெருமைப்படுத்துவாய்.
12 தீருவின் செல்வந்தர்கள் ஜனங்கள் உனக்குப் பரிசுகள் தருவார்கள்.
    அவர்கள் உன்னைக் காண விரும்புவார்கள்.

13 அரச குமாரத்தி
    பொன்னில் பதிக்கப் பெற்ற விலையுயர்ந்த அழகிய மணியைப் போன்றவள்.
14 மணமகள் அழகிய ஆடையணிந்து ராஜாவிடம் அழைத்துவரப்பட்டாள்.
    மணத் தோழியர் அவளைத் தொடர்ந்தனர்.
15 அவர்கள் மகிழ்ச்சி பொங்க வந்தனர்.
    மனமகிழ்வோடு அரண்மனைக்குள் நுழைந்தனர்.

16 ராஜாவே, உம் குமாரர்கள் உமக்குப் பின் ஆட்சி செய்வார்கள்.
    தேசம் முழுவதும் அவர்களை ஆளச் செய்வீர்.
17 உமது நாமத்தை என்றென்றும் புகழ் பெறச் செய்வேன்.
    என்றென்றும் ஜனங்கள் உம்மைத் துதிப்பார்கள்.

சங்கீதம் 49

கோராகின் புத்திரரின், இராகத் தலைவனுக்கு அளிக்கப்பட்ட ஒரு பாடல்.

49 எல்லா தேசங்களே, இதைக் கேளுங்கள்.
    பூமியில் வாழும் ஜனங்களே, எல்லோரும் இதைக் கேளுங்கள்.
    ஏழையும் பணக்காரருமான ஒவ்வொரு வரும் கேட்கவேண்டும்.
ஞானமும் புத்திசாலித்தனமுமான சில செய்திகளை நான் உங்களுக்குக் கூறுவேன்.
நான் உவமையான கதைகளைக் கேட்டேன்.
    இப்போது என் சுரமண்டலத்தை இசைத்து அக்கதைகளின் பாடல்களை உங்களுக்குப் பாடுவேன்.

தொல்லைகள் வரும்போது நான் ஏன் அஞ்ச வேண்டும்?
    தீயோர் என்னைச் சூழ்ந்து அகப்படுத்த முயலும்போது நான் ஏன் அஞ்சவேண்டும்?
பலமும் செல்வமும் தங்களைப் பாதுகாக்கு மென்று சிலர் நினைக்கிறார்கள்.
    ஆனால் அந்த ஜனங்கள் மூடர்களே.
மனிதனான எந்த நண்பனும் உன்னை மீட்க இயலாது.
    நீ தேவனுக்கு லஞ்சம் தர முடியாது.
ஒருவன் தனது ஜீவனை மீட்டுக்கொள்வதற்குரிய பணத்தை
    ஒருபோதும் சம்பாதித்து விட முடியாது.
என்றென்றும் வாழும் உரிமையைப் பெறவும்,
    கல்லறையில் தன் உடல் அழியாமல் காக்கவும், தேவையான பணத்தை ஒருவன் ஒருபோதும் அடைய முடியாது.

10 பாருங்கள், மூடரும் அறிவீனரும் மடிவதைப் போலவே, ஞானிகளும் இறக்கிறார்கள்.
    பிறர் அவர்களின் செல்வத்தைப் பெறுகிறார்கள்.
11 கல்லறையே என்றென்றும் ஒருவனது புது வீடாகும்.
    அவர்களுக்குச் சொந்தமான பல நிலங்கள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை.
12 சிலர் செல்வந்தராயிருந்தாலும் இங்கே நிரந்தரமாக வாழ்ந்துவிட முடியாது.
    எல்லோரும் மிருகங்களைப்போலவே மடிவார்கள்.

13 மூடரான மனிதருக்கும்,
    தங்கள் செல்வங்களினால் திருப்தியடைந்திருக்கிற அனைவருக்கும் இதுவே சம்பவிக்கிறது.

14 எல்லா ஜனங்களும் ஆட்டு மந்தையைப் போன்றே இருக்கின்றனர்.
    கல்லறையே அவர்கள் வாசஸ்தலம், மரணமே அவர்கள் மேய்ப்பன்.
    அவர்கள் சரீரங்கள் அழிந்து கல்லறைக்குள் நாறும்.
15 ஆனால் தேவன் எனக்காக விலையைக் கொடுத்து என் உயிரை மீட்பார்.
    கல்லறையின் வலிமையிலிருந்து என்னை அவர் மீட்பார்!

16 சிலர் செல்வந்தராயிருப்பதினால் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்.
    சிலர் பெரிய அழகிய மாளிகைகளில் வசிப்பதால் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்.
17 அவர்கள் இறக்கும்போது தங்களோடு எந்தப் பொருளையும் எடுத்துச் செல்லமாட்டார்கள்.
    அந்த அழகிய பொருட்களில் எதையும் அவர்கள் எடுத்துச் செல்லமுடியாது.
18 மனிதர்கள் வாழ்நாளின்போது தேவனை வாழ்த்தவேண்டும்.
    தேவன் மனிதருக்கு நல்லவற்றைச் செய்கையில் அவர்கள் தேவனை வாழ்த்தவேண்டும்.
19 அந்த ஜனங்கள் தங்கள் முற்பிதாக்களோடு சென்று அடையுங்காலம் வரும்.
    அவர்கள் மீண்டும் பகலின் ஒளியைக் காண்பதில்லை.
20 ஜனங்கள் செல்வத்தைத் தங்களுக்கென வைத்துக்கொள்ள முடியாது.
    மிருகங்களைப் போலவே ஒவ்வொருவனும் மரிப்பான்.

சங்கீதம் 84-85

கீத்தித் என்னும் வாத்தியத்தில் இசைக்கும் இராகத் தலைவனுக்குக் கோராகின் குடும்பம் அளித்த ஒரு துதிப் பாடல்.

84 சர்வ வல்லமையுள்ள தேவனே, உமது ஆலயம் உண்மையிலேயே இனிமையானது.
கர்த்தாவே, உமது ஆலயத்திற்குள் நுழைவதற்கு என்னால் காத்திருக்க முடியாது.
    ஏனெனில் நான் மிகுந்த ஆவலாய் இருக்கிறேன்.
என் அவயவங்கள் ஒவ்வொன்றும் ஜீவனுள்ள தேவனோடு இருப்பதையே விரும்புகிறது.
என் ராஜாவே, என் தேவனே, சர்வ வல்லமையுள்ள கர்த்தாவே, குருவிகளுக்கும், அடைக்கலான் குருவிகளுக்கும் உம்முடைய ஆலயத்தில் வீடுகள் உண்டு.
    உமது பலிபீடத்தருகே அப்பறவைகள் தங்கள் கூடுகளை அமைக்கும், அங்கு அவற்றின் குஞ்சுகளைப் பெறும்.
உமது ஆலயத்தில் வாழும் ஜனங்கள் மிகுந்த பாக்கியமுள்ளவர்களாக இருக்கிறார்கள்.
    அவர்கள் எப்போதும் உம்மைத் துதித்துக்கொண்டிருக்கிறார்கள்.

தங்கள் இருதயத்தில் கீதங்களைப் பாடிக் கொண்டு
    ஆலயத்திற்கு வருகிற ஜனங்கள் மிகுந்த சந்தோஷமாயிருக்கிறார்கள்.
அவர்கள் அழுகையின் பள்ளத்தாக்கின் வழியாகப் பயணம் செய்கிறார்கள்.
    தேவன் அதை ஒரு நீரூற்றாகச் செய்கிறார்.
    இலையுதிர்கால மழையின் தண்ணீரால் குளங்கள் தோன்றும்.
தேவனைச் சந்திப்பதற்காக சீயோனுக்குச் செல்லும் வழியில்
    ஜனங்கள் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு பயணமாகிறார்கள்.

சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, என் ஜெபத்தைக்கேளும்.
    யாக்கோபின் தேவனே, எனக்குச் செவிகொடும்.

தேவனே, எங்கள் பாதுகாவலரைப் (கேடகத்தைப்) பாதுகாத்துக்கொள்ளும்.
    நீர் தேர்ந்தெடுத்த ராஜா மீது இரக்கமாயிரும்.

10 வேறிடங்களில் செலவிடும் ஆயிரம் நாட்களைக் காட்டிலும் உமது ஆலயத்தில் இருக்கும் ஒரே நாள் நல்லது.
    எனது தேவனுடைய வீட்டின் வாசலில் நிற்பதோ தீயவனின் வீட்டில் வாழ்வதைக் காட்டிலும் நல்லது.
11 கர்த்தர் நமது கேடகமும் மகிமை வாய்ந்த அரசருமானவர்.[a]
    தயவினாலும் மகிமையாலும் தேவன் நம்மை ஆசீர்வதிக்கிறார்.
அவரைப் பின்பற்றிக் கீழ்ப்படிகிற ஜனங்களுக்கு
    தேவன் எல்லா நல்ல பொருள்களையும் தருகிறார்.
12 சர்வ வல்லமையுள்ள தேவனே,
    உம்மை நம்புகிற ஜனங்கள் உண்மையாகவே சந்தோஷமானவர்கள்.

கோராகின் குடும்பம் இராகத் தலைவனுக்கு அளித்த ஒரு துதிப் பாடல்.

85 கர்த்தாவே, உமது தேசத்தின்மேல் தயவாயிரும்.
யாக்கோபின் ஜனங்கள் ஒரு அந்நிய தேசத்தில் அடிமைகளாக இருக்கிறார்கள்.
    அடிமைப்பட்டவர்களை மீண்டும் அவர்கள் தேசத்திற்கு அழைத்து வாரும்.
கர்த்தாவே, உமது ஜனங்களை மன்னியும்!
    அவர்கள் பாவங்களை போக்கிவிடும்!

கர்த்தாவே, சினமாயிருப்பதை நீர் நிறுத்தும்.
    கடுங்கோபமாக இராதேயும்.

எங்கள் தேவனும் இரட்சகருமானவரே,
    எங்களிடம் கோபமாயிருப்பதை விட்டு, விட்டு எங்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளும்.
நீர் என்றென்றும் கோபங்கொள்வீரோ?
தயவுகூரும், எங்களை மீண்டும் வாழச் செய்யும்.
    உமது ஜனங்களை சந்தோஷப்படுத்தும்.
கர்த்தாவே, எங்களைக் காப்பாற்றும்.
    நீர் எங்களை நேசிப்பதை எங்களுக்குக் காட்டும்.

தேவனாகிய கர்த்தர் கூறியதை நான் கேட்டேன்.
    அவரது ஜனங்களுக்கும், உண்மையான சீடர்களுக்கும் சமாதானம் உண்டாகுமென்று கர்த்தர் கூறினார்.
    எனவே மூடத்தனமான வாழ்க்கை முறைக்கு அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்லக் கூடாது.
தேவன் தம்மைப் பின்பற்றுவோரை விரைவில் மீட்பார்.
    நமது தேசத்தில் நாம் பெருமையோடு விரைவில் வாழுவோம்.
10 தேவனுடைய உண்மையான அன்பு அவரை பின்பற்றுவோரை வந்தைடையும்.
    நன்மையும் சமாதானமும் முத்தமிட்டு அவர்களை வாழ்த்தும்.
11 பூமியின் ஜனங்கள் தேவனிடம் நேர்மையானவர்களாயிருப்பார்கள்.
    பரலோகத்தின் தேவனும் அவர்களுக்கு நல்லவராக இருப்பார்.
12 கர்த்தர் நமக்குப் பல நல்ல பொருள்களைத் தருவார்.
    நிலம் பல நல்ல பயிர்களை விளைவிக்கும்.
13 நன்மை தேவனுக்கு முன்பாகச் செல்லும்.
    அது அவருக்கு வழியை ஆயத்தப்படுத்தும்.

சங்கீதம் 87

கோராகின் குடும்பம் அளித்த ஒரு துதிப் பாடல்.

87 எருசலேமின் பரிசுத்த மலைகளில் தேவன் தமது ஆலயத்தைக் கட்டினார்.
    இஸ்ரவேலின் வேறெந்த இடத்தைக் காட்டிலும் சீயோனின் வாசற்கதவுகளை கர்த்தர் நேசிக்கிறார்.
தேவனுடைய நகரமே, ஜனங்கள் உன்னைக் குறித்து ஆச்சரியமான காரியங்களைக் கூறுகிறார்கள்.
தேவன் தமது எல்லா ஜனங்களின் பட்டியலையும் வைத்திருக்கிறார்.
    அவர்களுள் சிலர் எகிப்திலும் பாபிலோனிலும் வசிக்கிறார்கள்.
    அவர்களுள் சிலர் பெலிஸ்தியாவிலும், தீருவிலும், எத்தியோப்பியாவிலும் பிறந்தார்கள்.
சீயோனில் பிறந்த ஒவ்வொருவரையும் தேவன் அறிகிறார்.
    மிக உன்னதமான தேவன் அந்நகரத்தைக் கட்டினார்.
தேவன் தமது எல்லா ஜனங்களின் பட்டியலையும் வைத்திருக்கிறார்.
    ஒவ்வொருவனும் எங்கே பிறந்தான் என்பதையும் தேவன் அறிகிறார்.

விசேஷ ஓய்வு நாட்களைக் கொண்டாடுவதற்கு தேவனுடைய ஜனங்கள் எருசலேமுக்குப் போகிறார்கள்.
    அவர்கள் மிக மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
அவர்கள் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டுமிருக்கிறார்கள்.
    அவர்கள், “எல்லா நல்லவையும் எருசலேமிலிருந்து வருகின்றன” என்றார்கள்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center