Chronological
ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யூதாவிற்கு வருகிறான்
24 அவனது காலத்தில், பாபிலோனை நேபுகாத் நேச்சார் என்பவன் அரசாண்டான். அவன் யூத நாட்டிற்கு வந்தான். மூன்றாண்டு காலத்திற்கு யோயாக்கீம் நேபுகாத்நேச்சார்க்கு பணிவிடைச் செய்தான். பிறகு நேபுகாத்நேச்சருக்கு எதிராகக் கலகம் செய்தான். 2 யோயாக்கீமிற்கு எதிராகப் போரிடும் பொருட்டு பாபிலோனியர்களையும் ஆராமியர்களையும் மோவாபியர்களையும் அம்மோனியர்களையும் கர்த்தர் கூட்டம் கூட்டமாக அனுப்பிவைத்தார். யூதாவை அழிப்பதற்காக கர்த்தர் இவ்வாறு அனுப்பினார். இது கர்த்தர் சொன்னபடியே நடந்தது. கர்த்தர் இவற்றைத் தம் ஊழியக்காரர்களாகிய தீர்க்கதரிசிகள் மூலம் சொல்லியிருக்கிறார்.
3 யூதாவில் இவையெல்லாம் நடக்கும்படி கர்த்தர் கட்டளையிட்டார். இவ்வாறு, அவன் யூதர்களை அவனது பார்வையிலிருந்து அப்புறப்படுத்தினான். மனாசே செய்த அனைத்து பாவங்களுக்காகவும் அவர் இதனைச் செய்தார். 4 மனாசே பல அப்பாவி ஜனங்களைக் கொன்றான். அவர்களின் இரத்தத்தால் எருசலேமை நிரப்பினான். இத்தகைய பாவங்களை கர்த்தர் மன்னிக்காமலிருந்தார்.
5 யோயாக்கீம் செய்த மற்ற அனைத்து செயல்களும் யூத ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. 6 யோயாக்கீம் மரித்தான். பிறகு அவன் தனது முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். இவனுக்குப் பின் இவனது குமாரனான யோயாக்கீன் என்பவன் புதிய ராஜா ஆனான்.
7 அதற்குப்பின் எகிப்தின் ராஜா தன் நாட்டிலிருந்து வரவில்லை. ஏனென்றால் எகிப்து ஆறுமுதல் ஐபிராத்து ஆறுவரையுள்ள எகிப்து ராஜாவுக்குரிய பகுதியைப் பாபிலோனிய ராஜா பிடித்துக் கொண்டான்.
நேபுகாத்நேச்சார் எருசலேமைக் கைப்பற்றுகிறான்
8 யோயாக்கீன் அரசானானபோது அவனுக்கு 18 வயது ஆகும். இவன் எருசலேமில் 3 மாதங்கள் ஆண்டான். இவனது தாயின் பெயர் நெகுஸ்தாள் ஆகும். இவள் எருசலேமிலுள்ள எல்நாத்தானின் குமாரத்தி ஆவாள். 9 தவறென்று கர்த்தர் சொன்னவற்றையே அவன் செய்தான். அவனுடைய தந்தை செய்த அனைத்து காரியங்களையும் அவனும் செய்தான்.
10 அக்காலத்தில், பாபிலோனிய ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் அதிகாரிகள் எருசலேமிற்கு வந்து அதனை முற்றுகையிட்டனர். 11 பிறகு பாபிலோனிய ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரே அவனது வேலைக்காரர்கள் முற்றுகையிட்ட நகரத்திற்கு வந்தான். 12 யூத ராஜாவாகிய யோயாக்கீன் பாபிலோனிய ராஜாவை சந்திக்கச் சென்றான். அவனோடு அவனது தாய், அதிகாரிகள், தலைவர்கள் அலுவலர்கள் அனைவரும் சென்றனர். பின் பாபிலோனிய ராஜா யோயாக்கீனைச் சிறைபிடித்தான். இது நேபுகாத்நேச்சாரின் 8வது ஆட்சியாண்டில் நடந்தது.
13 நேபுகாத்நேச்சார், கர்த்தருடைய ஆலயத்திலும் அரண்மனையிலும் உள்ள கருவூலங்களில் உள்ளப் பொருட்களையெல்லாம் எடுத்துக்கொண்டுப் போனான். சாலொமோன் ராஜா கர்த்தருடைய ஆலயத்தில் அமைத்திருந்த தங்கத் தட்டுகளையும் வெட்டி எடுத்துக்கொண்டான். இதுவும் கர்த்தர் சொன்னபடியே நடந்தது.
14 நேபுகாத்நேச்சார் எருசலேமிலுள்ள அனைவரையும் கைதுசெய்தான். தலைவர்களையும் செல்வர்களையும் கைது செய்தான். அவன் 10,000 ஜனங்களைக் கைதிகளாக்கி அழைத்துக்கொண்டு வந்தான். அவன் திறமைமிக்க வேலைக்காரர்களையும் கைவினைக்காரர்களையும் அழைத்துக்கொண்டுச் சென்றான். ஏழ்மையான சாதாரண பொது ஜனங்களைத் தவிர வேறுயாரையும் இவன் விட்டு வைக்கவில்லை. 15 நேபுகாத்நேச்சார் யோயாக்கீனைச் சிறைபிடித்து பாபிலோனுக்குக் கொண்டு சென்றான். அதோடு ராஜாவின் தாய், மனைவிமார்கள், அதிகாரிகள் மற்றும் தலைவர்களையும் கொண்டு சென்றான். இவர்களை அவன் எருசலேமிலிருந்து பாபிலோனுக்குச் கைதிகளாகவே அழைத்துக்கொண்டு போனான். 16 அதில் 7,000 வீரர்கள் இருந்தனர். இவ்வெல்லா வீரர்களையும் தகுதிமிக்க 1,000 திறமையுள்ள வேலைக்காரர்களையும் கைவினைக் கலைஞர்களையும் அழைத்துக் கொண்டு போனான். வீரர்கள் நன்கு பயிற்சி பெற்று போருக்குத் தயாராக இருந்தனர். பாபிலோன் ராஜா இவர்களைப் பாபிலோனுக்குக் கைதிகளாகவே கொண்டுசென்றான்.
சிதேக்கியா ராஜா
17 பாபிலோன் ராஜா மத்தனியா என்பவனை புதிய ராஜாவாக்கினான். அவன் யோயாக்கீனின் சிறிய தகப்பன் ஆவான். அவனது பெயரை சிதேக்கியா என மாற்றிவிட்டான். 18 சிதேக்கியா ராஜாவாகியபோது அவனுக்கு 21 வயது. அவன் 11 ஆண்டுகள் எருசலேமில் ஆண்டான். அவனது தாயின் பெயர் அமுத்தாள் ஆகும். இவள் லிப்னாவிலுள்ள எரேமியாவின் குமாரத்தி. 19 தவறானதென்று கர்த்தர் சொன்னவற்றையே அவனும் செய்துவந்தான். யோயாக்கீன் செய்த அனைத்து செயல்களையும் அவன் செய்தான். 20 எருசலேம் மற்றும் யூதா மீது கர்த்தர் மிகுந்த கோபங்கொண்டு அங்குள்ள ஜனங்களை அப்புறப்படுத்தினார்.
நேபுகாத்நேச்சார் சிதேக்கியாவின் ஆட்சியை முடித்தது
சிதேக்கியா பாபிலோன் ராஜாவுக்கு அடிபணிய மறுத்து அவனுக்கு எதிராகக் கலகம் செய்தான்.
25 எனவே, பாபிலோன் ராஜாவும், அவனது படைகளும், எருசலேமிற்கு எதிராகப் போரிட வந்தனர். இது சிதேக்கியாவின் 9வது ஆட்சியாண்டின் பத்தாம் மாதத்தின் பத்தாம் நாளில் நடந்தது. நேபுகாத்நேச்சார் தன் படையை நிறுத்தி நகரத்திற்குள் யாரும் போகாமலும் வெளியேறாமலும் தடுத்துவிட்டான். பின் நகரத்தைச்சுற்றி கொத்தளச்சுவரைக் கட்டினான். 2 யூத நாட்டின் ராஜாவாகிய சிதேக்கியாவின் 11ஆம் ஆட்சியாண்டுவரை நேபுகாத்நேச்சாரின் படை எருசலேமைச் சுற்றிலும் தங்கியிருந்தது. 3 நகரத்தின் நிலையைப் பஞ்சம் மேலும் மோசமாக்கிற்று. நாலாவது மாதத்தின் ஒன்பதாம் நாளில் பொது ஜனங்களுக்கு உண்ண உணவே இல்லை என்ற நிலை வந்தது.
4 நேபுகாத்நேச்சாரின் படை இறுதியில் நகரச் சுவரை உடைத்தது. அன்று இரவு சிதேக்கியாவும் அவனது ஆட்களும் வெளியே ஓடிப்போனார்கள். அவர்கள் இரகசிய கதவைப் பயன்படுத்தி ராஜாவின் தோட்டத்தின் வழியே இரு மதில்களுக்கு நடுவே ஓடிப்போயினர். பகைவரின் படை நகரைச் சுற்றிலும் இருக்க பாலைவனத்திற்குச் செல்லும் வழியே தப்பிச் சென்றார்கள். 5 பாபிலோன் படை அவர்களைத் துரத்திப் போய் எரிகோ சமவெளியில் பிடித்துக்கொண்டது. சிதேக்கியாவை விட்டுவிட்டு அவனது வீரர்கள் தப்பித்துக்கொண்டனர்.
6 பாபிலோனியர்கள் சிதேக்கியாவைப் பிடித்து ரிப்லாவிலிருந்த பாபிலோனிய ராஜாவிடம் கொண்டு சென்றார்கள். அவர்கள் அவனைத் தண்டிக்க விரும்பினார்கள். 7 சிதேக்கியாவின் குமாரர்களை அவன் கண் முன்னாலேயே கொன்றனர். பின் இவனது கண்களைப் பிடுங்கினார்கள். பிறகு சங்கிலியால் பாபிலோனுக்குக் கொண்டு சென்றனர்.
எருசலேம் அழிக்கப்படுகிறது
8 நேபுகாத்நேச்சாரின் 19வது ஆட்சியாண்டின் ஐந்தாம் மாதத்தின் ஏழாவது நாளில் நேபுகாத்நேச்சார் எருசலேமிற்கு வந்தான். நெபுசராதான் பாபிலோனிய ராஜாவின் பெரிய படையின் ஆணை அதிகாரியாக இருந்தான். 9 இவன் கர்த்தருடைய ஆலயத்தையும் அரண்மணையையும் பெரிய வீடுகளையும் கட்டிடங்களையும் எரித்தான். 10 எருசலேமை சுற்றியிருந்த சுவரையும் நெபுசராதானின் பாபிலோனிய படை உடைத்து தள்ளியது. 11 பாபிலோனிய படையின் ஆணை அதிகாரியான நெபுசராதான் நகரத்தில் மேலும் மீதியாக இருந்த ஜனங்களையும் பாபிலோனிய ராஜாவுக்கு வெளியே விழுந்து அழிந்தவர்களையும்கூட (ஆள முயன்றவர்களையும்) இவன் கைது செய்து நாடு கடத்திவிட்டான். 12 அவன் மிக எளிய ஜனங்களையே அங்கே தங்கும்படிவிட்டான். இவர்கள் இங்குள்ள திராட்சைத் தோட்டங்களையும் பயிர்களையும் பார்த்துக்கொண்டனர்.
13 பாபிலேனிய வீரர்கள் கர்த்தருடைய ஆலயத்திலுள்ள வெண்கல தூண்களை எல்லாம் உடைத்துப்போட்டனர். அதோடு வெண்கல அடிப்பகுதிகளையும், வண்டிகள், தொட்டிகள் போன்றவற்றையும் உடைத்தனர். பின் அவற்றைப் பாபிலோனுக்கு எடுத்துச்சென்றனர். 14 பாபிலோனியர்கள் கர்த்தருடைய ஆலயத்தில் இருந்த செப்புச் சட்டிகள், சாம்பல் பாத்திரங்கள், கத்திகள், தூபகலசங்கள், ஆராதனைக்கு பயன்படும் சகலக் கருவிகள் போன்றவற்றை எடுத்துச் சென்றனர். 15 நெபுசராதானும் படைத்தலைவனும் சுத்தப் பொன்னிலும் வெள்ளியிலுமான தூபகலசங்களை எடுத்துக்கொண்டனர். 16-17 எனவே இவர்கள் எடுத்துக்கொண்டவை: இரண்டு தூண்கள் ஒவ்வொன்றும் 27 அடி உயரமும் 4 1/2 அடி உயரமுள்ள வெண்கலத்தலைப்பும் உடையவை. இவை வெண்கலத்தால் பின்னலும் மாதுளம் பழங்களுமான மாதிரியில் செய்யப்பட்டிருந்தன. இரண்டும் ஒரே மாதிரியாய் இருந்தன. ஒரு பெரிய வெண்கலத்தொட்டி கர்த்தருடைய ஆலயத்தில் சாலொமோனால் செய்துவைக்கப்பட்ட வண்டிகள். இவ்வெண்கலத்தின் எடையானது அளந்து காணமுடியாத அளவிற்கு இருந்தது.
யூத ஜனங்கள் கைதிகளாதல்
18 நெபுசராதான், தலைமை ஆசாரியனாகிய செராயாவையும், இரண்டாம் ஆசாரியனாகிய செப்பனியாவையும், வாயில் காப்பாளர் மூவரையும் ஆலயத்திலிருந்து கைப்பற்றினான்.
19 நகரத்திலிருந்து நெபுசராதான் படைக்குப் பொறுப்பான 1 அதிகாரியையும், நகரத்திலேயிருந்த 5 அரச ஆலோசகர்களையும், 1 படைத்தளபதியினுடைய செயலாளர். அவன்தான் பொது ஜனங்களின் ஜனத்தொகையை கணக்கெடுத்து அவர்களில் சிலரைப் படைவீரர்களாகத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பில் இருந்த 1 படைத்தளபதியினுடைய செயலாளரையும், நகரத்தில் அகப்பட்ட 60 பேர்களையும் எடுத்துக்கொண்டான்.
20-21 பிறகு நெபுசராதான் அவர்கள் அனைவரையும் பாபிலோனுக்கு அழைத்துச் சென்று ரிப்லாவில் இருந்த பாபிலோனிய ராஜாவிடம் கொண்டு போனான். அவர்களைப் பாபிலோன் ராஜா ஆமாத் தேசத்தின் பட்டணமான ரிப்லா என்னும் இடத்தில் வெட்டிக் கொன்றுபோட்டான். இவ்வாறே யூத ஜனங்களும் தங்கள் தேசத்திலிருந்து சிறைக்கு கொண்டுப்போகப்பட்டனர்.
யூத நாட்டின் ஆளுநரான கெதலியா
22 யூத நாட்டிலே சிலரை மட்டுமே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் விட்டு வைத்தான், அங்கு சாப்பானின் குமாரனாகிய அகீக்காமின் குமாரனாகிய கெதலியா இருந்தான். யூத ஜனங்களுக்கு ஆளுநராக நெபுசராதான் கெதலியாவை ஆக்கினான்.
23 நெத்தானியாவின் குமாரனான இஸ்மவேலும், கரேயாவின் குமாரனான யோகனானும் நெத்தோப் பாத்தியனாகிய தன்கூமேத்தின் குமாரன் செராயாவும் மாகாத்தியன் ஒருவனது குமாரன் யசனியாவும் படை அதிகாரிகளாவார்கள். இவர்களும் அவர்களைச் சேர்ந்தவர்களும் கெதலியாவை யூத ஆளுநராக ஆக்கியதுபற்றி கேள்விப்பட்டனர். எனவே, அவர்கள் மிஸ்பாவிற்குப் போய் கெதலியாவை சந்தித்தனர். 24 கெதலியா அவர்களுக்கு ஒரு வாக்குறுதி அளித்தான். அவன், “பாபிலோனிய அதிகாரிகளுக்குப் பயப்படவேண்டாம். இங்கிருந்து அரசருக்கு சேவைச் செய்க. பிறகு உங்களுக்கு எல்லாம் சரியாக இருக்கும்” என்றான்.
25 எலிசாமாவின் குமாரனாகிய நெத்தானியாவின் குமாரன் இஸ்மவேல் அரச குடும்பத்திலிருந்து வந்தவன். ஏழாவது மாதத்தில் அவன் பத்து பேரோடு மிஸ்பாவுக்கு வந்து கெதலியாவையும் அவனோடு இருந்த யூதர்களையும் பாபிலேனியர்களையும் கொன்றுபோட்டான். 26 பிறகு படை அதிகாரிகளும் ஜனங்களும் எகிப்துக்கு ஓடிப்போனார்கள். அப்போது முக்கியமுள்ளவர்கள், இல்லாதவர்கள் என்று அனைவரும் ஓடிப்போனார்கள். ஏனென்றால் அவர்களுக்கு பாபிலோனியர்களிடம் பயம் அதிகம்.
27 பிறகு பாபிலோனின் ராஜாவாக ஏவில் மெரொதாக் ஆனான். இவன் யூத ராஜாவாகிய யோயாக்கீனை விடுதலை செய்தான். இது இவன் சிறைப்பட்ட 37வது ஆண்டு. தான் ஆட்சிக்கு வந்த 12வது மாதத்தின் 27வது நாளில் செய்தான். 28 ஏவில் மெரொதாக் யோயாக்கீனுடன் கருணையோடு இருந்தான். அவன், பாபிலோனில் (கைது செய்யப்பட்டு) இருந்த மற்ற ராஜாக்களைவிட யோயாக்கீனுக்கு நல்ல இருக்கை அளித்தான். 29 யோயாக்கீன் கைதியின் ஆடை அணிவதை ராஜா தடுத்துவிட்டான். அவன் ராஜாவோடு சமமாக ஒரே மேஜையில் அமர்ந்து தனது மீதியான காலம் முழுவதும் உணவு உண்டான். 30 ஏவில்மெரொதாக், யோயாக்கீனுக்கு அவனது வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு நாளும் உணவளித்து வந்தான்.
யூதாவின் ராஜாவாகிய யோவாகாஸ்
36 எருசலேமில் யூதாவின் புதிய ராஜாவாக யோவாகாசை ஜனங்கள் தேர்ந்தெடுத்தனர். யோவாகாஸ் யோசியாவின் குமாரன். 2 யோவாகாஸ் தனது 23வது வயதில் யூதாவின் ராஜா ஆனான். அவன் எருசலேமில் மூன்று மாதங்களே ராஜாவாக இருந்தான். 3 பிறகு எகிப்து ராஜாவாகிய நேகோயோ வாகாசைக் கைதியாக்கினான். 3 1/4 டன் எடையுள்ள வெள்ளியும், 75 பவுண்டு எடையுள்ள தங்கமும் அபராதமாகச் செலுத்த வேண்டுமென யூதா ஜனங்களிடம் எகிப்து ராஜாவாகிய நேகோ சொன்னான். 4 யோவாகாசின் சகோதரனை யூதா மற்றும் எருசலேமின் புதிய ராஜாவாக நேகோ தேர்ந்தெடுத்தான். யோவாகாசின் சகோதரனின் பெயர் எலியாக்கீம் ஆகும். அவனது பெயரை யோயாக்கீம் என்று நேகோ மாற்றினான். ஆனால் நேகோ யோவாகாசை எகிப்திற்கு அழைத்துச்சென்றான்.
யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம்
5 யோயாக்கீம் யூதாவின் புதிய ராஜாவாகிய போது அவனது வயது 25. அவன் எருசலேமில் 11 ஆண்டுகள் ஆண்டான். கர்த்தர் செய்ய வேண்டும் என்று விரும்பியவற்றை யோயாக்கீம் செய்யவில்லை. அவன் தேவனாகிய கர்த்தருக்கு எதிராக பாவம் செய்தான்.
6 யூதாவை பாபிலோனில் இருந்த நேபுகாத்நேச்சார் தாக்கினான். அவன் யோயாக்கீமை கைது செய்து வெண்கலச் சங்கிலியால் கட்டினான். பிறகு அவனை பாபிலோனுக்கு இழுத்துச்சென்றான். 7 நேபுகாத்நேச்சார் கர்த்தருடைய ஆலயத்தில் இருந்து பொருட்களை எடுத்துச்சென்றான். அவற்றை பாபிலோனுக்கு எடுத்துச்சென்று தனது அரண்மனையில் வைத்துக்கொண்டான். 8 யோயாக்கீம் செய்த மற்ற செயல்களும் பாவங்களும் அவனது பயங்கரமான தவறுகளும், இஸ்ரவேல் மற்றும் யூதா ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. யோயாக்கீன் புதிய ராஜாவாக யோயாக்கீம் இடத்தில் ஆனான். இவன் யோயாக்கீமின் குமாரன்.
யூதாவின் மன்னனான யோயாக்கீன்
9 யோயாக்கீன் யூதாவின் ராஜாவாக ஆனபோது அவனது வயது 18 ஆகும். அவன் எருசலேமின் ராஜாவாக 3 மாதங்களும் 10 நாட்களும் இருந்தான். கர்த்தர் செய்யவிரும்பியதை அவன் செய்யவில்லை. அவன் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தான். 10 வசந்தகாலத்தின் தொடக்கத்தில் நேபுகாத்நேச்சார் வேலைக்காரர்களை அனுப்பி யோயாக்கீனை வரவழைத்தான். அவர்கள் அவனோடு கர்த்தருடைய ஆலயத்தில் உள்ள விலைமதிப்பற்ற பொருட்களையும் பாபிலோனுக்கு எடுத்துச்சென்றனர். நேபுகாத் நேச்சார் சிதேக்கியாவைத் தேர்ந்தெடுத்து யூதா மற்றும் எருசலேமின் ராஜாவாக்கினான். சிதேக்கியா யோயாக்கீனின் உறவினன் ஆவான்.
சிதேக்கியா, யூதாவின் ராஜா
11 சிதேக்கியா யூதாவின் ராஜாவாகியபோது அவனது வயது 21 ஆகும். அவன் எருசலேமில் 11 ஆண்டுகள் ராஜாவாக இருந்தான். 12 சிதேக்கியா கர்த்தருடைய விருப்பப்படி செயல்களைச் செய்யவில்லை. சிதேக்கியா கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தான். எரேமியா என்ற தீர்க்கதரிசி கர்த்தரிடமிருந்து செய்தியைச் சொன்னான். ஆனால் சிதேக்கியா பணிவடையாமல் எரேமியாவின் பேச்சைக் கேட்கவில்லை.
எருசலேம் அழிக்கப்பட்டது
13 சிதேக்கியா நேபுகாத்நேச்சார் ராஜாவுக்கு எதிராக ஆனான். முன்பு நேபுகாத்நேச்சார் சிதேக்கியாவிடம் தனக்கு உண்மையாக நடந்துகொள்ள வேண்டும் என்று வாக்குறுதி வாங்கியிருந்தான். சிதேக்கியா தேவன் மேல் ஆணைச் செய்திருந்தான். ஆனால் அவன் கடின மனதுள்ளவனாக இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய பக்கம் திரும்பாமல் இருந்தான். 14 ஆசாரியர்களின் தலைவர்களும், யூதா ஜனங்களின் தலைவர்களும் கொடிய பாவங்களைச் செய்து கர்த்தருக்கு எதிராகிப்போனார்கள். அவர்கள் பிற நாடுகளின் தீயச்செயல்களைப் பின்பற்றினார்கள். அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தை அழித்தார்கள். கர்த்தர் எருசலேமில் தன் ஆலயத்தைப் பரிசுத்தமாக வைத்திருந்தார். 15 அவர்களது முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் அவர்களை எச்சரிக்கப் பல்வேறு தீர்க்கதரிசிகளை மீண்டும், மீண்டும் அனுப்பினார். கர்த்தர் அவர்களுக்காகவும், தமது ஆலயத்துக்காகவும் வருத்தப்பட்டார். அதனால் அவர் இவ்வாறுச் செய்தார். கர்த்தர் அவர்களையும், ஆலயத்தையும் அழித்துவிட விரும்பவில்லை. 16 ஆனால் தேவனுடைய ஜனங்கள் தேவனுடைய தீர்க்கதரிசிகளைக் கேலிச் செய்தனர். தேவனுடைய தீர்க்கதரிசனங்களைக் கேட்க அவர்கள் மறுத்தனர். அவர்கள் தேவனுடைய செய்திகளை வெறுத்தார்கள். இறுதியில் தேவனால் அவரது கோபத்தை அதற்கு மேல் அடக்க முடியவில்லை. 17 எனவே தேவன் பாபிலோனின் ராஜாவை யூதா மற்றும் எருசலேம் ஜனங்களைத் தாக்கிட அழைத்து வந்தார். பாபிலோன் ராஜா இளைஞர்களை அவர்கள் ஆலயத்தில் இருந்தபோதுங்கூட கொன்றான். அவன் யூதா மற்றும் எருசலேம் ஜனங்களிடம் இரக்கம் காட்டவில்லை. பாபிலோனிய ராஜா இளைஞர்கள், முதியவர்கள், ஆண்கள், பெண்கள், நோயாளிகள், ஆரோக்கியமுடையவர்கள் என அனைவரையும் கொன்றான். யூதா மற்றும் எருசலேம் ஜனங்களைத் தண்டிக்கும்படி தேவன் நேபுகாத்நேச்சரை விட்டுவிட்டார். 18 நேபுகாத்நேச்சார் தேவனுடைய ஆலயத்தில் உள்ள அனைத்து பொருட்களையும் பாபிலேனுக்கு எடுத்துச்சென்றான். ஆலயம், ராஜாவின் அரண்மனை, அதிகாரிகளின் வீடு என எல்லா இடங்களிலும் இருந்த விலைமதிக்கமுடியாத பொருள்களையும் அவன் எடுத்துச் சென்றான். 19 நேபுகாத்நேச்சாரும் அவனது படையும் ஆலயத்தை எரித்தனர். எருசலேம் சுவர்களை இடித்தனர். ராஜா மற்றும் அதிகாரிகளின் வீடுகளை அடித்துச் சிதைத்து எரித்தனர். அவர்கள் விலையுயர்ந்த பொருட்களை அழிப்பதும், எடுத்து செல்வதுமாய் இருந்தனர். 20 நேபுகாத்நேச்சார் உயிரோடு மீதியாக உள்ள ஜனங்களை பாபிலோனுக்குக் கொண்டுபோய் அவர்களைக் கட்டாயப்படுத்தி அடிமையாக்கினான். பெர்சிய அரசு பாபிலோனிய அரசை அழிக்கும்வரை அவர்கள் அங்கு அடிமைகளாகவே இருந்தனர். 21 எரேமியா தீர்க்கதரிசி மூலம் இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கர்த்தர் சொன்னது யாவும் நடந்தது. கர்த்தர் ஏரேமியா மூலம் சொன்னது: இந்த இடம் இன்னும் 70 ஆண்டுகளுக்கு பாழாய் கிடக்கும். நிலங்களுக்கு ஜனங்களால் வழங்கப்படாமல் போன ஓய்வு ஆண்டுகளுக்காக சரி செய்வது போல் இது இருக்கும்.
22 பெர்சியா ராஜாவாகிய கோரேசின் முதலாம் ஆண்டில் கர்த்தர் கோரேசின் மூலமாக ஒரு அறிக்கையை வெளியிட்டார். அவன் இதனைச் செய்ததால் கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசியின் மூலம் வாக்களித்ததும் நிறைவேறும். கோரேசு தன் அரசின் அனைத்து பகுதிகளுக்கும் தூதுவர்களை அனுப்பினான். அவர்கள் இந்தச் செய்தியை எடுத்துச் சென்றனர்.
23 பெர்சியா ராஜாவாகிய கோரேசு கூறுவது:
பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் என்னை பூமி முழுவதற்கும் ராஜா ஆக்கினார். எருசலேமில் அவர் தனக்கொரு ஆலயத்தைக் கட்டும்படி பொறுப்பளித்துள்ளார். இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாகிய நீங்கள் எருசலேமிற்குப் போகும்படி விடுவிக்கிறேன். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடு இருப்பாராக.
2008 by World Bible Translation Center