Chronological
யூதாவில் யோசியா ஆளத்தொடங்கியது
22 யோசியா ஆட்சிக்கு வந்தபோது அவனுக்கு 8 வயது. அவன் எருசலேமில் 31 ஆண்டுகள் அரசாண்டான். இவனது தாயின் பெயர் எதிதாள் ஆகும். இவள் போஸ்காத்திலுள்ள அதாயாவின் குமாரத்தி ஆவாள். 2 கர்த்தர் நல்லதென்று சொன்னதன்படியே இவன் வாழ்ந்து வந்தான். தன் முற்பிதாவான தாவீது போலவே தேவனை பின்பற்றினான். யோசியா தேவனுடைய போதனைகளுக்குக் கீழ்ப்படிந்தான். தேவன் விரும்பியவற்றைக் கொஞ்சம் கூட மாற்றவில்லை.
யோசியா ஆலயத்தைப் பழுது பார்க்க கட்டளையிட்டது
3 தனது 18வது ஆட்சியாண்டில் யோசியா, மெசுல்லாமின் குமாரனாகிய அத்சலியாவின் குமாரனாகிய சாப்பான் என்னும் செயலாளனை கர்த்தருடைய ஆலயத்திற்கு அனுப்பினான். 4 அவனிடம், “நீ தலைமை ஆசாரியனாகிய இல்க்கியாவினிடம் போ. கர்த்தருடைய ஆலயத்திற்கு ஜனங்கள் கொண்டு வந்த பணம் அவனிடம் இருக்கும். அது வாயில் காவலர்கள் ஜனங்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு சேகரித்துக் கொடுத்த பணம். அதனை கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டு வரவேண்டும். 5 பிறகு அப்பணத்தை கர்த்தருடைய ஆலயத்தைப் பழுது பார்க்கும் வேலை செய்கிறவர்களைக் கண்காணிப்பவர்களுக்குக் கொடுக்கவேண்டும். அக்கண்காணிப்பாளர்கள் அப்பணத்தை ஆலயத்தில் வேலை செய்பவர்களுக்குக் கொடுக்க வேண்டும். 6 அங்கு தச்சுவேலை செய்பவர்களும், கட்டுபவர்களும், கல் உடைப்பவர்களும் உள்ளனர். அப்பணத்தால் ஆலயத்தைச் செப்பனிட மரமும் கல்லும் வாங்க வேண்டும். 7 வேலைக்காரர்களுக்குக் கொடுக்கும் பணத்துக்குக் கணக்கு கேட்க வேண்டாம். ஏனென்றால் அவர்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள் என்று சொல்” என்றான்.
சட்டங்களின் புத்தகம் ஆலயத்தில் கண்டெடுக்கப்படல்
8 செயலாளராகிய சாப்பானிடம் தலைமை ஆசாரியர் இல்க்கியா, “கர்த்தருடைய ஆலயத்தில் சட்டங்களின் புத்தகத்தை கண்டெடுத்தேன்!” என்று கூறினான். அவன் சாப்பானிடம் அதனைக் கொடுத்தான். சாப்பான் அதனை வாசித்தான்.
9 செயலாளராகிய சாப்பான் ராஜாவாகிய யோசியாவிடம் வந்து, “உங்கள் வேலைக்காரர்கள் ஆலயத்திலுள்ள பணத்தையெல்லாம் சேகரித்துவிட்டார்கள். அதனை அவர்கள் வேலையைக் கண்காணிப்பவர்களிடம் கொடுத்துவிட்டார்கள்” என்றான். 10 பிறகு சாப்பான் ராஜாவிடம், “ஆசாரியனான இல்க்கியா என்னிடம் இந்த புத்தகத்தைக் கொடுத்தான்” என்று கூறி ராஜாவுக்கு அதனை வாசித்துக்காட்டினான்.
11 அச் சட்ட புத்தகத்திலுள்ள வார்த்தைகளைக் கேட்டதும் (துக்கத்தின் மிகுதியால்) ராஜா தனது ஆடைகளைக் கிழித்துக்கொண்டான். 12 பிறகு ஆசாரியனாகிய இல்க்கியாவுக்கும், சாப்பானின் குமாரனான அகீக்காமுக்கும், மிகாயாவின் குமாரனான அக்போருக்கும் செயலாளரான சாப்பானுக்கும் ராஜாவின் வேலைக்காரனான அசாயாவுக்கும் ராஜா ஆணைகள் இட்டான். 13 ராஜா இவர்களிடம், “சென்று நாம் என்ன செய்ய வேண்டுமென்று கர்த்தரிடம் கேளுங்கள். எனக்காகக், கர்த்தரிடம் இந்த ஜனங்களுக்காகவும் யூத நாட்டிற்காகவும் கேளுங்கள். இப்புத்தகத்தில் காணப்படும் வார்த்தைகளைப்பற்றி கேளுங்கள். கர்த்தர் நம்மீது கோபமாக இருக்கிறார். ஏனென்றால் நமது முற்பிதாக்கள் இப்புத்தகத்தில் கூறியுள்ளவற்றை கவனிக்காமல் போனார்கள். நமக்காக எழுதப்பட்ட இதன்படி அவர்கள் செய்யவில்லை!” என்றான்.
யோசியாவும் உல்தாள் எனும் பெண் தீர்க்கதரிசியும்
14 எனவே இல்க்கியா எனும் ஆசாரியனும், அகீக்காமும், அக்போரும், சாப்பானும் அசாயாவும், பெண் தீர்க்கதரிசி உல்தாவிடம் சென்றனர். அவள் அர்காசின் குமாரனான திக்வாவின் குமாரனான சல்லூம் என்பவனின் மனைவி. அவன் ஆசாரியர்களின் துணிகளுக்குப் பொறுப்பானவன். அவள் எருசலேமின் இரண்டாம் பகுதியில் குடியிருந்தாள். அவர்கள் போய் அவளோடு பேசினார்கள்.
15 பிறகு உல்தாள் அவர்களிடம், “என்னிடம் உங்களை அனுப்பியவனிடம் போய், இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர் சொல்கிறதாவது: 16 ‘இந்த இடத்திற்குத் துன்பத்தைக் கொண்டு வருவேன். இங்குள்ள ஜனங்களுக்கும் துன்பத்தைக் கொண்டு வருவேன். யூத ராஜாவால் வாசிக்கப்பட்ட புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள துன்பங்கள் இவையே. 17 யூத ஜனங்கள் என்னை விட்டுவிட்டு அந்நியத் தெய்வங்களுக்கு நறுமணப்பொருட்களை எரிக்கின்றனர். அவர்கள் எனக்கு மிகுதியான கோபத்தை உண்டாக்குகிறார்கள். அவர்கள் ஏராளமான விக்கிரகங்களை ஏற்படுத்தியுள்ளனர். அதனால்தான் நான் இவர்களுக்கு எதிராக என் கோபத்தைக் காட்டுகிறேன். என் கோபம் தடுக்க முடியாத நெருப்பைப் போன்று விளங்கும்!’
18-19 “யூதாவின் ராஜாவாகிய யோசியா, உங்களை அனுப்பி கர்த்தருடைய ஆலோசனைகளைக் கேட்கிறான். அவனிடம் இவற்றைக் கூறுங்கள்: ‘இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நீங்கள் கேள்விப்பட்ட செய்திகளைக் கூறுகிறார். இந்த நாட்டைப் பற்றியும், இங்கு வசிப்பவர்களைப்பற்றியும் நான் சொன்னதை நீங்கள் கேட்டீர்கள். உங்கள் இதயம் மென்மையாக ஆயிற்று. எனவே, அதைக் கேட்டதும் நீங்கள் மிகவும் வருத்தம் கொண்டீர்கள். இந்த இடத்தில் (எருசலேமில்) பயங்கரமான சம்பவங்கள் நடக்கப்போகின்றன என்று சொல்லி இருக்கிறேன். உன் துக்கத்தைப் புலப்படுத்த உன் ஆடையைக் கிழித்துக்கொண்டு அழத்தொடங்கினாய். அதற்காகத் தான் நீ சொன்னதைக் கேட்டேன்.’ கர்த்தர் இதைச் சொன்னார். 20 ‘எனவே, இப்போது உன்னை உனது முற்பிதாக்களிடம் சேர்ப்பேன். நீ சமாதானத்தோடு உன் கல்லறையில் சேர்வாய், நான் எருசலேமிற்குத் தரப்போகும் துன்பங்கள் எல்லாவற்றையும் உன் கண்கள் பார்க்காது’ என்று சொல்லுங்கள்” என்றாள்.
பிறகு இதனை ராஜாவிடம் போய் ஆசாரியனாகிய இல்க்கியா, அகீக்கா, அக்போர், சாப்பான், அசாயா ஆகியோர் சொன்னார்கள்.
சட்டங்களை ஜனங்கள் கேட்கிறார்கள்
23 தன்னை சந்திக்கும்படி யூதர் தலைவர்களையும் எருசலேம் தலைவர்களையும் ராஜா யோசியா அழைத்தான். 2 பிறகு ராஜா கர்த்தருடைய ஆலயத்திற்குச் சென்றான். யூத ஜனங்களும் எருசலேமிலுள்ள ஜனங்களும் அவனோடு சென்றனர். ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும் ஜனங்களுள் முக்கியமானவர்களும் முக்கியம் இல்லாதவர்களும் அவனோடு சென்றனர். பிறகு ராஜா உடன்படிக்கைப் புத்தகத்தை வாசித்துக்காட்டினான். இந்த சட்டப்புத்தகம் கர்த்தருடைய ஆலயத்தில் கண்டெடுக்கப்பட்டது. ராஜா அதனை வாசித்தபோது ஜனங்களால் அதனைக் கேட்க முடிந்தது.
3 ராஜா (மேடை மேல்) தூண் அருகே நின்றுக் கொண்டு கர்த்தரோடு ஒரு உடன்படிக்கைச் செய்துக்கொண்டான். கர்த்தரைப் பின்பற்றவும், அவரது கட்டளைகளுக்கும் உடன்படிக்கைக்கும் கீழ்ப்படியவும் ஒப்புக்கொண்டான். அவன் அதனை முழு மனதோடும் ஆத்துமாவோடும் செய்வதாக ஒப்புக்கொண்டான். இப்புத்தகத்தில் எழுதப்பட்ட உடன்படிக்கைக்குக் கீழ்ப்படியவும் ஒப்புக்கொண்டான். சுற்றி நின்ற ஜனங்களும் உடன்படிக்கைக்கு ஒப்புக்கொள்வதாக உறுதி கூறினார்கள்.
4 பிறகு ராஜா தலைமை ஆசாரியனான இல்க்கியாவுக்கும் மற்ற ஆசாரியர்களுக்கும் வாயில் காவலர்களுக்கும் பாகாலுக்கும் அசெரியாவிற்கும் வானுலக நட்சத்திரங்களுக்கும் கர்த்தருடைய ஆலயத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த சகல வழிபாட்டுப் பொருட்களையும் நீக்கி வெளியே போடச் சொன்னான். பிறகு யோசியா அவற்றை எருசலேமிற்கு வெளியே கீதரோன் வெளிகளில் எரித்துப்போட்டான். பின் அவற்றின் சாம்பலை பெத்தேலுக்கு கொண்டுவந்தனர்.
5 யூத ராஜா ஆசாரியர்களாகப் பணி செய்ய மிகச் சாதாரண ஆட்களைத் தேர்ந்தெடுத்திருந்தான். இவர்கள் ஆரோன் வம்சத்தில் உள்ளவர்கள் அல்ல. அப்பொய் ஆசாரியர்கள் மேடையில் எருசலேமிலும் அதைச் சுற்றியுள்ள யூத நகரங்களிலும் நறுமணப் பொருட்களை எரித்து வந்தனர். அவர்கள் பாகால், சூரியன், சந்திரன், கிரகங்கள், வானுலக நட்சத்திரங்கள் போன்றவற்றுக்கு நறுமணப் பொருட்களை எரித்தனர். ஆனால் இல்க்கியா அப்போலி ஆசாரியர்களைத் தடுத்து நிறுத்திவிட்டார்.
6 யோசியா கர்த்தருடைய ஆலயத்திலிருந்து அசேரா என்னும் தேவதையின் விக்கிரகத்தை அகற்றினான். அதனை நகரத்திற்கு வெளியே கொண்டு போய் கீதரோன் வெளியில் எரித்துப்போட்டான். பின் அவன் எரிந்தவற்றை அடித்து சாம்பலாக்கி சாதாரண ஜனங்களின் கல்லறையில் தூவிவிட்டான்.
7 பின் ராஜாவாகிய யோசியா கர்த்தருடைய ஆலயத்திற்குள் விபசாரம் செய்து கொண்டிருந்த ஆண்களின் வீடுகளை நொறுக்கினான். பெண்களும் அவ்வீடுகளைப் பயன்படுத்தி வந்தனர். அசேராவுக்காக என்றும் (பொய்த் தேவதைக்காக) அங்கே சிறு கூடாரங்களை அமைத்திருந்தனர். 8-9 அப்போது, ஆசாரியர்கள் எருசலேமிற்கு பலிகளைக் கொண்டு வந்து ஆலயத்திற்குள் பலியிடவில்லை. ஆசாரியர்கள் யூத நாடு முழுவதிலும் வாழ்ந்தனர். ஆனால் பொய்த் தெய்வங்களுக்கு நறு மணப் பொருட்களை எரித்து பலியிட்டு வழிபாடு செய்துவந்தனர். இப்பொய் தெய்வங்களுக்கான மேடைகள் கேபா முதல் பெயெர்செபா மட்டும் நிறைந்திருந்தன. ஆசாரியர்கள் சாதாரண ஜனங்களோடு புளிப்பில்லாத அப்பங்களை உண்டு வந்தனர். எருசலேமின் ஆலயத்தில் ஆசாரியர்களுக்கென இருந்த சிறப்பு இடத்தில் அவர்கள் உண்ணவில்லை. ஆனால் ராஜா (யோசியா) அப்பொய்த் தெய்வங்களின் மேடைகளை அழித்து, அந்த ஆசாரியர்களை எருசலேமிற்கு அழைத்து வந்தான். இல்க்கியாவும் பட்டணத்து வாசலுக்குப் போகும் வழியின் இடது புறமிருந்த யோசுவாவினால் கட்டப்பட்ட மேடையை அழித்தான். (யோசுவா அந்நகரை ஆட்சி செய்தவன்).
10 தோப்பேத் இன்னோமின் மகனது பள்ளத்தாக்கிலுள்ள ஒரு இடம். அங்கே ஜனங்கள் தம் பிள்ளைகளைக் கொன்று பலிபீடத்தில் எரித்து மோளேகு என்ற பொய்த்தெய்வத்தை மகிமைப்படுத்தி வந்தனர். ராஜா இந்த இடத்தையும் ஜனங்கள் மீண்டும் பயன்படுத்த முடியாதபடி அழித்துப்போட்டான். 11 முன்பு, யூத ராஜா கர்த்தரின் ஆலய வாசல் அருகில் குதிரைகளையும் இரதங்களையும் வைத்திருந்தான். இது நாத்தான்மெலெக் எனும் அதிகாரியின் அறையின் அருகில் இருந்தது. இவை சூரியத் தெய்வத்தை சிறப்பிப்பதற்காக வைக்கப்பட்டிருந்தது. ராஜா குதிரைகளை அப்புறப்படுத்திவிட்டு சூரியனின் இரதங்களை எரித்துவிட்டான்.
12 முன்பு, யூத ராஜாக்கள் ஆகாப் கட்டிடத்தின் கூரைமீது பலிபீடங்களைக் கட்டியிருந்தார்கள். மனாசேயும் கர்த்தருடைய இரு ஆலய முற்றத்திலும் பலிபீடங்களைக் கட்டியிருந்தான். யோசியா இப்பலிபீடங்கள் அனைத்தையும் அழித்து அவற்றின் துண்டுகளையும் தூளையும் கீதரோன் பள்ளத்தாக்கில் எறிந்தான்.
13 முன்பு, சாலொமோன் ராஜா எருசலேம் அருகிலுள்ள நாசமலையின் அருகில் பொய்த் தெய்வங்களுக்கான மேடைகளை அமைத்தான். அவை மலையின் தென்புறத்தில் இருந்தன. சீதோனியர்களால் தொழுதுகொள்ளப்பட்ட அருவருப்புமிக்க அஸ்தரோத்திற்கும், மோவாபியரின் அருவெருப்பு தெய்வமான காமோசிற்கும், அம்மோனியரின் அருவெருப்பு தெய்வமான மில்கோமுக்கும் மேடைகளை சாலொமோன் ராஜா அமைத்திருந்தான். ஆனால் யோசியா அவையனைத்தையும் அழித்துப் போட்டான். 14 அதோடு யோசியா ராஜா ஞாபகக் கற்களையும் அசெரா என்னும் பெண் தேவதையின் விக்கிரகங்களையும் உடைத்து நொறுக்கினான். பின் மரித்துப்போனவர்களின் எலும்புகளை அவற்றின் மீது தூவினான்.
15 இவன் பெத்தேலில் உள்ள பலிபீடத்தையும் மேடையையும் உடைத்தெறிந்தான். இப்பலிபீடத்தை நேபாத்தின் குமாரனான யெரொபெயாம் என்பவன் ஏற்படுத்தியிருந்தான். இவனே இஸ்ரவேலர்களின் பாவத்திற்கு காரணமாக இருந்தான். இவன் அமைத்த பலிபீடம், மேடை ஆகிய இரண்டையும் யோசியா அழித்தான். அவன் பலிபீடக் கல்லை துண்டுத் துண்டாக உடைத்தெறிந்தான். பின் அவற்றைத் தூளாக்கினான். அசேரா விக்கிரகத் தூணையும் எரித்தான். 16 யோசிய திரும்பிபார்த்தபோது மலையின் மீது கல்லறைகளை கண்டான். அவன் ஆட்களை அனுப்பி அவற்றிலுள்ள எலும்புகளை எடுத்துவரச் செய்தான். இப்படி நடக்கும் என்று தீர்க்கதரிசி சொன்னபடியே அவைகளை அந்தப் பலிபீடத்தின் மேல் எரித்தான்.
பின் யோசியா சுற்றிப்பார்த்து தேவமனிதனின் கல்லறையைக் கண்டான்.
17 யோசியா, “நான் பார்க்கும் அந்த நினைவு சின்னம் என்ன?” என்று கேட்டான்.
நகர ஜனங்கள் அவனிடம், “இது யூதாவிலிருந்து வந்த ஒரு தேவமனிதரின் (தீர்க்கதரிசியின்) கல்லறை. பெத்தேல் என்னும் பலிபீடத்தில் நீ செய்தவற்றைப் பற்றி இவர் முன்னரே கூறியுள்ளார்” என்றனர்.
18 யோசியா, “அவரது கல்லறையை விட்டுவிடுங்கள். அவரது எலும்புகளை எடுக்கவேண்டாம்” என்று கூறினான். எனவே அவனது எலும்புகளை சமாரியாவிலிருந்து வெளியே வந்த தீர்க்கதரிசியின் எலும்புகளோடு அவர்கள் விட்டுவிட்டனர்.
19 யோசியா சமாரியாவிலுள்ள பொய்த் தெய்வங்களின் மேடைகளையும் அழித்துப்போட்டான். இஸ்ரவேல் ராஜாக்கள் அவற்றைக் கட்டியிருந்தனர். இதனால் கர்த்தருக்குப் பெருங்கோபம் உண்டாகி இருந்தது. பெத்தேலில் உள்ளவற்றை அழித்தது போலவே, யோசியா இவற்றையும் அழித்துவிட்டான்.
20 சமாரியாவின் பொய்த் தெய்வங்களுக்குத் தொழுகைச்செய்த ஆசாரியர்கள் அனைவரையும் யோசியா கொன்றான். பலிபீடங்களைக் கவனித்த ஆசாரியர்களையும் கொன்றான். மனித எலும்புகளை பலி பீடத்தின் மேல் எரித்தான். இவ்வாறு தொழுகைக்குரிய இடங்கள் எல்லாவற்றையும் கறைப்படுத்தினான். பின் எருசலேமிற்குத் திரும்பிச் சென்றான்.
யூத மக்கள் பஸ்காவைக் கொண்டாடியது
21 யோசியா ராஜா ஜனங்களுக்கு ஒரு கட்டளையிட்டான். அவன், “உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவைக் கொண்டாடுங்கள். உடன்படிக்கைப் புத்தகத்தில் எழுதியிருக்கிறபடியே செய்யுங்கள்” என்றான்.
22 நியாயாதிபதிகள் இஸ்ரவேலை ஆளத் தொடங்கிய நாள் முதல் ஜனங்கள் பஸ்கா பண்டிகையை இந்த விதத்தில் கொண்டாடியதில்லை. இஸ்ரவேல் ராஜாக்களோ யூத ராஜாக்களோ இதுபோல் சிறப்பாகப் பஸ்காவை கொண்டாடவில்லை. 23 யோசியாவின் 18வது ஆட்சியாண்டில் அவர்கள் எருசலேமில் கர்த்தருக்காக பஸ்கா பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடினார்கள்.
24 யோசியா, இஸ்ரவேலிலும் யூதாவிலும் ஜனங்களால் தொழுதுகொண்டு வந்த சிறு தெய்வங்களையும் மற்ற மந்திரவாதிகளையும் குறிச்சொல்லுகிறவர்களையும் விக்கிரகங்களையும் அழித்துவிட்டான். இவன், அதனை இல்க்கியாவால் கர்த்தருடைய ஆலயத்தில் கண்டெடுக்கப்பட்ட புத்தகத்தில் உள்ள சட்டத்திற்குக் கீழ்ப்படியவே இவ்வாறு நடந்துக்கொண்டான்.
25 யோசியாவைப்போன்ற ஒரு ராஜா இதற்கு முன்னால் எப்போதும் இருந்ததில்லை. இவனுக்குப் பின்னும் இருந்ததில்லை. யோசியா தன் முழு மனதோடும் தன் முழு ஆத்துமாவோடும் தன் முழு பலத்தோடும் கர்த்தருடைய பக்கம் திரும்பினான். வேறு எந்த ராஜாவும் யோசியாவைப் போன்று மோசேயின் சட்டத்தைப் பின்பற்றவில்லை.
26 ஆனாலும் கர்த்தர் யூத ஜனங்கள் மீது தான் கொண்டக் கோபத்தை நிறுத்திக் கொள்ளவில்லை. மனாசே செய்த அனைத்து செயல்களுக்காக கர்த்தர் அவர்கள் மீது இன்னமும் கோபங்கொண்டிருந்தார். 27 கர்த்தர், “நான் இந்த நாட்டிலிருந்து இஸ்ரவேலர்களை அகற்றிவிட்டேன். இதையே யூதர்களுக்கும் செய்வேன். அவர்களை என் பார்வையிலிருந்து அப்புறப்படுத்துவேன். என்னால் எருசலேமை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆம் நான் எருசலேமைத் தேர்ந்தெடுத்தேன். ஆனால் அங்குள்ள ஆலயத்தை நான் அழிப்பேன். ‘என் பெயர் அங்கு இருக்கவேண்டும்’ என்று நான் சொன்ன போது குறிபிட்டது இந்த இடத்தை தான்” என்றார்.
28 யோசியா செய்த மற்ற அனைத்து செயல்களும் யூத ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன.
யோசியாவின் மரணம்
29 யோசியாவின் காலத்தில், எகிப்திய ராஜாவாகிய பார்வோன்நேகோ ஐபிராத்து ஆற்றுக்கு அசீரியாவின் ராஜாவுக்கு எதிராக போரிடச்சென்றான். யோசியா பார்வோனுக்கு எதிராகப் போரிடப்போனான். ஆனால் மெகிதோ என்ற இடத்தில் யோசியாவை பார்வோன்நேகோ கண்டதும் கொன்றுவிட்டான். 30 மரித்துப்போன யோசியாவின் உடலை அவனது வேலைக்காரர்கள் மெகிதோவிலிருந்து எருசலேமிற்குத் இரதத்தில் எடுத்துச் சென்றனர். அவனது சொந்தக் கல்லறையில் அவனை அடக்கம் செய்தனர்.
பிறகு பொது ஜனங்கள் யோசியாவின் குமாரனான யோவாகாசை ராஜாவாக அபிஷேகம் செய்து அவனைப் புதிய ராஜாவாக்கினர்.
யோவாகாஸ் யூதாவின் ராஜாவாகிறான்
31 யோவாகாஸ் ராஜாவாகியபோது, அவனுக்கு 23 வயது. இவன் எருசலேமை மூன்று மாதங்கள் அரசாண்டான். இவனது தாயின் பெயர் அமுத்தாள் ஆகும். இவள் லிப்னாவைச் சேர்ந்த எரேமியாவின் குமாரத்தி ஆவாள். 32 தவறானவை என்று கர்த்தரால் சொல்லப்பட்டக் காரியங்களையே யோவாகாஸ் செய்துவந்தான். தன் முற்பிதாக்கள் செய்த அதேப் பாவங்களையே அவனும் செய்து வந்தான்.
33 பார்வோன் நேகோ, ஆமாத் நாட்டிலுள்ள ரிப்லாவில் யோவாகாசைப் பிடித்துக்கட்டினான். இதனால் அவனால் எருசலேமை ஆள முடியவில்லை. பார்வோன் நேகோ யூதாவை வற்புறுத்தி 100 தாலந்து வெள்ளியையும் ஒரு தாலந்து பொன்னையும் அபராதமாக பெற்றான்.
34 பார்வோன் நேகோ யோவாகாசின் குமாரனான எலியாக்கீமை புதிய ராஜாவாக்கினான். எலியாக்கீம் தன் தந்தையின் இடத்தை எடுத்துக்கொண்டான். பார்வோன் நேகோ எலியாக்கீமின் பெயரை யோயாக்கீம் என்று மாற்றினான். பார்வோன் யோவாகாசை எகிப்துக்கு கொண்டுபோனான். அங்கேயே அவன் மரணமடைந்தான். 35 யோயாக்கீம் பார்வோன் நேகோவிற்கு வெள்ளியும் பொன்னும் அபராதமாக செலுத்தி வந்தான். இவன் இந்த அபராதத்தை ஜனங்கள் மீது வரியாகச் சுமத்தினான். எனவே நாட்டிலுள்ள ஒவ்வொருவனும் பொன்னும் வெள்ளியும் கொடுக்க வேண்டிவந்தது. இவற்றைத் தொகுத்து அதை அவன் பார்வோன் நேகோவிற்கு செலுத்தினான்.
36 யோயாக்கீம் ராஜாவாகியபோது அவனுக்கு 25 வயது. அவன் எருசலேமில் 11 ஆண்டுகள் அரசாண்டான். அவனது தாயின் பெயர் செபுதாள் ஆகும். அவள் ரூமாவைச் சேர்ந்த பெதாயாமின் குமாரத்தி ஆவாள். 37 தவறானவையென்று கர்த்தரால் குறிக்கப்பட்ட காரியங்களையே அவனும் செய்து வந்தான். தன் முற்பிதாக்களைப் போலவே அதே செயல்களைச் செய்தான்.
யூதாவின் ராஜாவாகிய யோசியா
34 யோசியா ராஜாவாகும்போது அவனுக்கு 8 வயது. அவன் எருசலேமில் 31 ஆண்டுகள் ராஜாவாக இருந்தான். 2 யோசியா சரியான செயல்களையே செய்தான். கர்த்தருடைய விருப்பப்படியே நல்ல காரியங்களையே அவன் செய்தான். அவன் தனது முற்பிதாவான தாவீதைப் போன்று நல்ல செயல்களைச் செய்துவந்தான். யோசியா நல்ல காரியங்களைச் செய்வதில் இருந்து திரும்பவே இல்லை. 3 யோசியா ஆட்சிப் பொறுப்பேற்ற எட்டாவது ஆண்டில் அவன் தனது முற்பிதாவான தாவீது தேவனைப் பின்பற்றியது போலவே பின்பற்ற ஆரம்பித்துவிட்டான். யோசியா தேவனைப் பின்பற்றும்போது மிகவும் இளையவனாக இருந்தான். யோசியா ராஜாவாகியப் பன்னிரண்டாம் ஆண்டில் அவன் மேடைகளையும், விக்கிரகங்களையும் அழித்தான். யூதா மற்றும் எருசலேமில் உள்ள அந்நிய விக்கிரகங்களையும் அகற்றினான். 4 பாகால் தெய்வங்களான எல்லா பலி பீடங்களையும் ஜனங்கள் உடைத்தனர். அவர்கள் யோசியாவின் முன்னிலையிலேயே இதனைச் செய்தனர். பிறகு ஜனங்களின் முன்னே உயரமாய் நின்றிருந்த நறுமணப் பொருட்களை எரிக்கும் பீடங்களை யோசியா இடித்தான். செதுக்கப்பட்ட விக்கிரகங்களையும், வார்க்கப்பட்ட விக்கிரகங்களையும் அவன் உடைத்தான். அவன் அவற்றைத் தூளாக்கி, பாகால் தெய்வங்களை தொழுதுகொண்டு மரித்துப்போனவர்களின் கல்லறைகள் மீது தூவினான். 5 யோசியா பாகால் தெய்வத்துக்கு சேவைசெய்த ஆசாரியர்களின் எலும்புகளை அவர்கள் பலிபீடங்களிலேயே எரித்தான். இவ்வாறு யோசியா யூதா மற்றும் எருசலேமின் விக்கிரகங்களையும், விக்கிரக ஆராதனைகளையும் அழித்தான். 6 மனாசே, எப்பிராயீம், சிமியோன் மற்றும் நப்தலி செல்லும் வழி முழுவதுமான பகுதிகளில் இருந்த ஊர்களுக்கும் யோசியா அதையேச் செய்தான். அந்த ஊர்களுக்கு அருகாமையிலிருந்த பாழடைந்த பகுதிகளுக்கும் அவன் அதையே செய்தான். 7 யோசியா பலிபீடங்களையும், விக்கிரக தோப்புகளையும் அழித்தான். அவன் விக்கிரகங்களைத் தூளாக்குமாறு உடைத்தான். இஸ்ரவேல் நாட்டில் பாகாலை தொழுது கொள்ள வைத்திருந்த அனைத்து பலிபீடங்களையும் நொறுக்கினான். பிறகே அவன் எருசலேமிற்குத் திரும்பினான்.
8 யோசியா ஆட்சிப்பொறுப்பேற்ற 18வது ஆண்டில், சாப்பான், மாசெயா மற்றும் யோவா ஆகியோரை தனது தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தை மீண்டும் கட்டி அமைக்க அனுப்பினான். சாப்பானின் தந்தை பெயர் அத்சலியா. மாசெயா என்பவன் நகரத் தலைவன் ஆவான். யோவாவின் தந்தை பெயர் யோவாகாஸ் ஆகும். நடக்கும் நிகழ்ச்சிகளையெல்லாம் எழுதுபவன் யோவா ஆவான். (அவன் பதிவு செய்பவன்).
எனவே யோசியா ஆலயம் பழுது பார்க்கப்படவேண்டும் என்று கட்டளையிட்டான். அதன் மூலம் யூதாவையும், ஆலயத்தையும் சுத்தப்படுத்தலாம் என்று நம்பினான். 9 அவர்கள் தலைமை ஆசாரியனான இல்க்கியாவிடம் வந்தனர். தேவனுடைய ஆலயத்திற்காக ஜனங்கள் கொடுத்த பணத்தை அவர்கள் இலக்கியாவிடம் கொடுத்தனர். வாயிற்காவலர்களான லேவியர்கள் இப்பணத்தை மனாசே, எப்பிராயீம் மற்றும் வெளியேறிய இஸ்ரவேலர் அனைவரிடமிருந்தும் வசூலித்திருந்தனர். அவர்கள் யூதா, பென்யமீன் மற்றும் எருசலேமில் உள்ள அனைத்து ஜனங்களிடமிருந்தும் பணத்தை வசூலித்திருந்தனர். 10 பிறகு லேவியர்கள் கர்த்தருடைய ஆலயத்தில் வேலையை மேற்பார்வை செய்பவர்களிடம் பணத்தைக் கொடுத்தனர். மேற்பார்வையாளர்களோ அப்பணத்தைக் கர்த்தருடைய ஆலயத்தில் வேலைச் செய்பவர்களுக்குக் கொடுத்தனர். 11 அவர்கள் அப்பணத்தை மரத்தச்சர்களிடமும், கொத்தனார்களிடமும் கொடுத்தனர். சதுரக் கற்களும், மரப்பலகைகளும் வாங்குவதற்காக அப்பணத்தை அவர்களிடம் கொடுத்தனர். மீண்டும் கட்டிடங்களைக் கட்டவும் உத்திரங்களை அமைக்கவும் பயன்பட்டன. முற்காலத்தில் யூதாவின் ராஜாக்கள் எவரும் ஆலயக் கட்டிடத்தைப்பற்றி அக்கறை கொள்ளவில்லை. அக்கட்டிடங்கள் பழையதாகி அழிந்துக்கொண்டிருந்தன. 12-13 எல்லா ஆட்களும் உண்மையாக உழைத்தார்கள். யாகாத்தும், ஒபதியாவும் அவர்களின் மேற்பார்வையாளர்கள். இவர்கள் லேவியர்கள். இவர்கள் மெராரியின் சந்ததியினர். சகரியாவும் மெசுல்லாமும் மேற்பார்வையாளர்கள்தான். இவர்கள் கோகாத்தின் சந்ததியினர். இசைக்கருவிகளை இயக்குவதில் திறமை பெற்ற லேவியர்கள் வேலைச்செய்பவர்களை மேற்பார்வை பார்ப்பதும் மற்ற வேலைகளைச் செய்வதுமாய் இருந்தனர். சில லேவியர்கள் செயலாளர்களாகவும், அதிகாரிகளாகவும் வாயிற் காவலர்களாகவும் இருந்தனர்.
சட்டப் புத்தகம் கண்டுபிடிக்கப்படுகிறது
14 கர்த்தருடைய ஆலயத்தில் இருக்கிற பணத்தை லேவியர்கள் வெளியே கொண்டு வந்தனர். அதே நேரத்தில் இல்க்கியா எனும் ஆசாரியன் கர்த்தருடைய சட்ட புத்தகத்தைக் கண்டுபிடித்தான். அது மோசேயால் கொடுக்கப்பட்டிருந்தது. 15 இல்க்கியா காரியக்காரனான சாப்பானிடம், சட்டப் புத்தகத்தை கர்த்தருடைய ஆலயத்தில் கண்டு எடுத்திருக்கிறேன் என்றான். இல்க்கியா அந்தப் புத்தகத்தைச் சாப்பானிடம் கொடுத்தான். 16 சாப்பான் அந்தப் புத்தகத்தை யோசியா ராஜாவிடம் எடுத்துவந்தான். அவன் ராஜாவிடம், “உங்கள் வேலைக்காரர்கள் நீங்கள் சொன்னது போலவே அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறார்கள். 17 அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தில் இருந்த பணத்தை சேகரித்து அதனை மேற்பார்வையாளர்களுக்கும், வேலைக்காரர்களுக்கும் கொடுக்கின்றனர்” என்றான். 18 மேலும் சாப்பான் ராஜாவிடம், “ஆசாரியனான இல்க்கியா ஒரு புத்தகத்தை என்னிடம் கொடுத்திருக்கிறான்” என்றான். பிறகு சாப்பான் அந்தப் புத்தகத்தை வாசித்துக் காட்டினான். அவன் வாசிக்கும்போது ராஜாவுக்கு முன்பு இருந்தான். 19 யோசியா ராஜா சட்டத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது அவன் தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டான். 20 பிறகு அவன் இல்க்கியாவுக்கும், சாப்பானின் குமாரனான அகிக்காமுக்கும், மீகாவின் குமாரனான அப்தோனுக்கும், சம்பிரதியாகிய சாப்பானுக்கும், ராஜாவின் ஊழியக்காரனாகிய அசாயாவுக்கும் கட்டளையிட்டான். 21 ராஜா, “செல்லுங்கள் எனக்காக கர்த்தரிடம் கேளுங்கள். இஸ்ரவேலிலும், யூதாவிலும் மிச்சமுள்ள ஜனங்களுக்காகக் கேளுங்கள். கண்டுபிடிக்கப்பட்ட புத்தகத்தில் உள்ள சொற்களைப்பற்றி கேளுங்கள். நமது முற்பிதாக்கள் அவரது வார்த்தைகளுக்கு அடிபணியவில்லை என்பதால் கர்த்தர் நம் மீது கோபமாக இருக்கிறார். இந்தப் புத்தகம் செய்ய சொன்னவற்றையெல்லாம் அவர்கள் செய்யவில்லை!” என்றான்.
22 இல்க்கியாவும், ராஜாவின் வேலைக்காரர்களும் உல்தாள் எனும் தீர்க்கதரிசி பெண்ணிடம் சென்றனர். உல்தாள் சல்லூமின் மனைவி. சல்லூம் திக்வாதின் குமாரன். திக்வாத் அஸ்ராவின் குமாரன். அஸ்ரா ராஜாவின் ஆடைகளுக்குப் பொறுப்பாளன். உல்தாள் எருசலேமின் புதிய பகுதியில் வாழ்ந்து வருகிறாள். இல்க்கியாவும், ராஜாவின் வேலைக்காரர்களும் அவளிடம் நடந்ததை எல்லாம் சொன்னார்கள். 23 உல்தாள் அவர்களிடம், “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கூறுவது இதுதான்: ராஜாவாகிய யோசியாவிடம் கூறுங்கள்: 24 ‘நான் இந்த இடத்திற்கும், இங்கு வாழும் ஜனங்களுக்கும் தொந்தரவுகளைத் தருவேன். யூதா ராஜாவின் முன்னிலையில் வாசிக்கப்பட்ட புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள எல்லா கொடூரமானவற்றையும் கொண்டு வருவேன். 25 ஜனங்கள் என்னைவிட்டு விலகி அந்நிய தெய்வங்களுக்கு நறுமணப் பொருட்களை எரிக்க போய்விட்ட காரணத்தால் நான் இவற்றைச் செய்வேன். தம்முடைய தீயச்செயல்களால் அவர்கள் எனக்கு மிகுதியான கோபத்தை மூட்டிவிட்டார்கள். எனவே நான் இந்த இடத்தில் எனது கோபத்தைக் கொட்டுவேன். நெருப்பைப்போன்று கோபம் அவியாது.’
26 “ஆனால் யூதாவின் ராஜாவாகிய யோசியாவிடம் கூறு. அவன் உங்களைக் கர்த்தரைக் கேட்குமாறு அனுப்பியிருக்கிறான். சற்று நேரத்திற்கு முன்னர் நீ கேட்டவற்றைப்பற்றி இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கூறுவது இதுதான்: 27 ‘யோசியா நீ மனம் இளகி பணிந்துகொண்டாய், உனது ஆடைகளைக் கிழித்துக்கொண்டாய், எனக்கு முன்பு நீ அழுதாய். இவ்வாறு உன் மனம் இளகியதால், 28 உன் முற்பிதாக்களுடன் இருப்பதற்கு நான் உன்னை அழைத்துச் செல்வேன். நீ உனது கல்லறைக்கு சமாதானத்தோடு போவாய். அதனால் நான் இந்த இடத்துக்கும், இங்குள்ள ஜனங்களுக்கும் கொடுக்கப்போகும் பயங்கரமான துன்பங்களை நீ காணமாட்டாய்’” என்றார். இல்க்கியாவும், ராஜாவின் வேலைக்காரர்களும் இந்த செய்தியை யோசியா ராஜாவிடம் கொண்டுவந்தனர்.
29 பிறகு யோசியா யூதா மற்றும் எருசலேமில் உள்ள மூப்பர்களை அழைத்து அவர்களைச் சந்தித்தான். 30 ராஜா கர்த்தருடைய ஆலயத்திற்குள் சென்றான். யூதாவிலுள்ள ஜனங்களும், எருசலேமில் உள்ள ஜனங்களும் ஆசாரியர்களும், லேவியர்களும், முக்கியமானவர்களும் முக்கியமற்றவர்களும் ராஜாவோடு சென்றனர். உடன்படிக்கைப் புத்தகத்தில் உள்ள அனைத்தையும் ராஜா அவர்களுக்கு வாசித்துக் காட்டினான். அப்புத்தகம் கர்த்தருடைய ஆலயத்தில் கண்டெடுத்த புத்தகம் ஆகும். 31 பிறகு ராஜா தனது இடத்தில் எழுந்து நின்றான். பிறகு அவன் கர்த்தரோடு ஒரு உடன்படிக்கைச் செய்தான். கர்த்தரைப் பின்பற்றுவதாகவும் அவரது கட்டளைகளுக்கும், சட்டங்களுக்கும் அடிபணிவதாகவும் சொன்னான். முழு இருதயத்தோடும் ஆத்துமாவோடும் அவன் கீழ்ப்படிவதற்கு ஒப்புக்கொண்டான். உடன்படிக்கைப் புத்தகத்தில் எழுதப்பட்ட அனைத்துக்கும் அடிபணிவதாக ஒப்புக்கொண்டான். 32 பிறகு யோசியா எருசலேம் மற்றும் பென்யமீன் நாட்டிலுள்ள அனைத்து ஜனங்களையும் உடன்படிக்கையை ஒப்புக்கொள்கிற வகையில் வாக்குறுதி தரச் செய்தான். தமது முற்பிதாக்கள் கீழ்ப்படிந்த தேவனுடைய உடன்படிக்கையை எருசலேம் ஜனங்களும் கீழ்ப்படிந்தார்கள். 33 இஸ்ரவேல் ஜனங்கள் பல் வேறு நாடுகளிலிருந்து விக்கிரகங்களைக் கொண்டு வந்து வைத்திருந்தனர். ஆனால் யோசியா அந்த கொடூரமான விக்கிரகங்களை எல்லாம் அழித்துவிட்டான். ராஜா இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரையும் தேவனாகிய கர்த்தருக்குச் சேவைசெய்யுமாறுச் செய்தான். யோசியா உயிரோடு இருந்தவரை ஜனங்கள் தமது முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்குச் சேவை செய்தனர்.
யோசியா பஸ்காவைக் கொண்டாடுகிறான்
35 எருசலேமில் கர்த்தருக்கு யோசியா ராஜா பஸ்காவைக் கொண்டாடினான். பஸ்கா ஆட்டுக்குட்டி முதல் மாதத்தில் 14வது நாளன்று கொல்லப்பட்டது. 2 யோசியா ஆசாரியர்களை அவர் தம் கடமைகளைச் செய்யத் தேர்ந்தெடுத்தான். அவன் ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்தில் சேவை செய்யும்போது உற்சாகப்படுத்தினான். 3 யோசியா லேவியர்களோடு பேசினார். அந்த லேவியர்கள் இஸ்ரவேலர்களுக்குக் கற்பிக்கிறவர்கள். கர்த்தருக்குச் செய்யும் சேவைகளால் பரிசத்தமானவர்களாக ஆக்கப்பட்டவர்கள். அவன் அவர்களிடம், “சாலொமோன் கட்டிய ஆலயத்தில் பரிசுத்தப் பெட்டியை வையுங்கள். சாலொமோன் தாவீதின் குமாரன். தாவீது இஸ்ரவேலின் ராஜாவாக இருந்தான். மீண்டும் நீங்கள் பரிசுத்தப் பெட்டியை உங்கள் தோளில் சுமந்து இடம்விட்டு இடம் அலையாதீர்கள். இப்போது உங்கள் தேவனாகிய கர்த்தருக்குச் சேவை செய்யுங்கள். தேவனுடைய ஜனங்களான இஸ்ரவேலர்களுக்குச் சேவை செய்யுங்கள். 4 ஆலயத்தில் உங்கள் கோத்திரத்தின் சார்பாகச் சேவைசெய்ய தயாராகுங்கள். தாவீது ராஜாவும், சாலொமோன் ராஜாவும் உங்களுக்கு ஒதுக்கிய வேலைகளைச் செய்யுங்கள். 5 லேவியர்கள் குழுவுடன் பரிசுத்தமான இடத்தில் நில்லுங்கள். நீங்கள் இதனை வெவ்வேறு கோத்திரங்களினால் செய்யுங்கள். இது அவர்களுக்கு உதவியாக இருக்கும். 6 பஸ்கா ஆட்டுக்குட்டியைக் கொல்லுங்கள். கர்த்தருக்கு முன்பு பரிசத்தமாக இருங்கள். இஸ்ரவேல் ஜனங்களாகிய உங்கள் சகோதரர்களுக்கு ஆட்டுக் குட்டிகளைத் தயார் செய்யுங்கள். கர்த்தர் நமக்கு கட்டளையிட்டவற்றை எல்லாம் செய்யுங்கள். கர்த்தர் நமக்கு மோசே மூலம் பல கட்டளைகளை கொடுத்திருக்கிறார்” என்றான்.
7 யோசியா 30,000 செம்மறியாடுகளையும், ஆட்டுக் கடாக்களையும் இஸ்ரவேல் ஜனங்களுக்கு பஸ்காவில் பலியாகக் கொல்வதற்குக் கொடுத்தான். அவன் ஜனங்களுக்கு 3,000 கால்நடைகளையும் கொடுத்தான். இந்த விலங்குகள் அனைத்தும் யோசியா ராஜாவின் சொந்த விலங்குகள். 8 யோசியாவின் அதிகாரிகளும் இலவசமாக ஆடுகளையும் பொருட்களையும் ஜனங்களுக்கும், ஆசாரியர்களுக்கும், லேவியர்களுக்கும் பஸ்கா காணிக்கைக்காக கொடுத்தனர். தலைமை ஆசாரியனான இல்க்கியா, சகரியா மற்றும் யெசியேல் ஆகியோர் ஆலயத்தின் பொறுப்பான அதிகாரிகள். அவர்கள் ஆசாரியர்களுக்கு 2,600 ஆட்டுக்குட்டிகளையும், 300 காளைகளையும் பஸ்கா பலியாகக் கொடுத்தார்கள். 9 மேலும், தனது சகோதரர்களான செமாயா மற்றும் நத்தானியேல் ஆகியவர்களுடனும் அசாபியா, ஏயேல் மற்றும் நத்தானியேல் ஆகியவர்களுடனும் இனணந்து கொனானியா, 500 செம்மறி ஆடுகளையும், காளைகளையும் பஸ்கா பலியாக லேவியர்களுக்குக் கொடுத்தான். அவர்கள் லேவியர்களின் தலைவர்கள்.
10 பஸ்கா சேவைத் தொடங்குவதற்கு அனைத்தும் தயாராக இருந்தபொழுது ஆசாரியர்களும், லேவியர்களும் அவர்களின் இடத்திற்குச் சென்றனர். இதுவே ராஜாவின் கட்டளையாகும். 11 பஸ்கா ஆடுகள் கொல்லப்பட்டன. பிறகு லேவியர்கள் தோலை உரித்தனர். இரத்தத்தை ஆசாரியர்களிடம் கொடுத்தனர். ஆசாரியர்கள் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் தெளித்தனர். 12 பிறகு அவர்கள் தகன பலிகளுக்காக வெவ்வேறு கோத்திரங்களுக்கு மிருகங்களைக் கொடுத்தனர். மோசேயின் சட்டம் தகனபலிகள் எவ்வாறு அளிக்கப்பட வேண்டும் என்று போதித்ததோ அவ்வாறே இது செய்யப்பட்டது. 13 லேவியர்கள் தங்களுக்குக் கட்டளையிட்டபடியே பஸ்கா பலிகளை தீயில் வறுத்தார்கள். அவர்கள் பரிசுத்தமான பலிகளைப் பானைகளிலும், கொப்பரைகளிலும் சட்டிகளிலும் சமைத்தனர். உடனடியாக அவர்கள் அவற்றை ஜனங்களுக்குக் கொடுத்தனர். 14 இவை முடிந்த பிறகு, லேவியர்கள் தங்களுக்கென்று இறைச்சியைப் பெற்றுக்கொண்டனர். ஆரோனின் சந்ததிகளான ஆசாரியர்களும் பெற்றுக்கொண்டனர். ஆசாரியர்கள் இருட்டுகிறவரை கடினமான வேலையை செய்தார்கள். அவர்கள் தகனபலிகளை எரிப்பதும், கொழுப்பை எரிப்பதுமாக இருந்தார்கள். 15 ஆசாப் குடும்பத்தைச் சேர்ந்த லேவியப் பாடகர்கள் ராஜா தாவீது தங்களுக்கு ஒதுக்கிய இடத்தை அடைந்தார்கள். அவர்கள் ஆசாப், ஏமான், ராஜாவின் தீர்க்கதரிசியான எதுத்தானும் சொன்னபடியே தங்கள் இடங்களில் நின்றுக்கொண்டிருந்தார்கள். வாசல் காவலர்கள் ஒவ்வொரு வாசலிலும் நின்றார்கள். அவர்கள் தங்கள் வேலையைவிட்டு விலகாமல் இருந்தார்கள். ஏனென்றால் அவர்களுக்காக அவர்களின் சகோதரரான லேவியர்கள் பஸ்காவில் அனைத்தையும் தயார் செய்துவிட்டனர்.
16 எனவே, யோசியா ராஜாவின் கட்டளைப்படி அன்று நடைபெற வேண்டிய வேலைகள் அனைத்தும் நடந்தேறின. கர்த்தருடைய பலிபீடத்தில் தகனபலிகள் கொடுக்கப்பட்டு பஸ்கா பண்டிகை கொண்டாடப்பட்டது. 17 அங்கிருந்த இஸ்ரவேல் ஜனங்கள் பஸ்காவையும், புளிப்பில்லா அப்பப் பண்டிகையையும் ஏழு நாட்களாகக் கொண்டாடினார்கள். 18 தீர்க்கதரிசி சாமுவேல் காலத்திலிருந்து இன்றுவரை பஸ்கா பண்டிகை இதுபோல் எப்போதும் கொண்டாடப்படவில்லை. எந்தவொரு ராஜாவும் இஸ்ரவேலில் இதுபோல் பஸ்காவைக் கொண்டாடவில்லை. யோசியா ராஜா, ஆசாரியர்கள் லேவியர்கள், யூதா ஜனங்கள். எருசலேமில் இருந்த இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் பஸ்காவைச் சிறப்பான முறையில் கொண்டாடினார்கள். 19 அவர்கள் யோசியா ஆட்சிப் பொறுப்பேற்ற 18வது ஆண்டில் இந்தப் பஸ்காவைக் கொண்டாடினார்கள்.
யோசியாவின் மரணம்
20 யோசியா ஆலயத்திற்கு அனைத்து நல்ல செயல்களையும் செய்து முடித்தான். பிறகு எகிப்து ராஜாவாகிய நேகோ தன் படைகளோடு ஐபிராத்து ஆற்றின் கரையிலுள்ள கர்கேமிஸ் நகரத்தின் மீது போர் செய்ய சென்றான். உடனே யோசியா ராஜாவும் அவனோடு போரிடச் சென்றான். 21 ஆனால் நேகோ யோசியாவுக்குத் தூதுவர்களை அனுப்பினான். அவர்கள்,
“யோசியா ராஜாவே! இந்தப் போர் உங்களுக்கு எதிரானது அல்ல. நான் உனக்கு எதிராகச் சண்டை செய்ய வரவில்லை. நான் என் பகைவர்களுக்கு எதிராகச் சண்டை செய்ய வந்திருக்கிறேன். தேவன் என்னை விரைவாகச் செல்லுமாறு சொன்னார். தேவன் என் பக்கத்தில் உள்ளார். எனவே எனக்கு எதிராகப் போரிடவேண்டாம். நீ எனக்கு எதிராகப் போரிட்டால் தேவன் உன்னை அழிப்பார்!” என்றனர்.
22 ஆனால் யோசியா அங்கிருந்து விலகவில்லை. அவன் நேகோவோடு போரிட முடிவுசெய்தான். எனவே அவன் உருவத்தை மாற்றிக்கொண்டு போரிட களத்துக்குச் சென்றான். தேவனுடைய கட்டளையைப் பற்றி நேகோ சொன்னதை யோசியா ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டான். யோசியா போரிட மெகிதோ பள்ளத்தாக்குக்குச் சென்றான். 23 போர்க்களத்தில் ராஜா யோசியாவின்மேல் அம்புகள் பாய்ந்தன. அவன் தன் வேலைக்காரர்களிடம், “நான் பலமாகக் காயப்பட்டிருக்கிறேன். நீங்கள் என்னைத் தூக்கிச் செல்லுங்கள்!” என்றான்.
24 எனவே, வேலைக்காரர்கள் யோசியாவை அவனது இரதத்திலிருந்து இறக்கி, வேறொரு இரதத்தில் ஏற்றினார்கள். இரண்டாவது இரதமும் அவனால் போர்க்களத்துக்குக் கொண்டுவரப்பட்டதுதான். பின் யோசியாவை எருசலேமிற்கு அழைத்துச் சென்றனர். அங்கே அவன் மரித்தான். அவன் முற்பிதாக்களின் கல்லறைகளுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டான். யூதா மற்றும் எருசலேமில் உள்ள ஜனங்கள் அனைவரும் யோசியாவின் மரணத்திற்காகப் பெரிதும் துக்கப்பட்டார்கள். 25 யோசியாவிற்காக எரேமியா புலம்பல் பாடல்களை எழுதிப் பாடினான். இன்றும் ஆண் பெண் பாடகர்கள் அப்பாடல்களைப் பாடி வருகிறார்கள். அவை இன்றுவரை இஸ்ரவேலில் வழங்கிவருகிறது. புலம்பல் பாடல்கள் என்ற புத்தகத்தில் அவை எழுதப்பட்டுள்ளன.
26-27 யோசியாவின் தொடக்க காலமுதல் முடிவுவரை அவன் செய்த அனைத்து செயல்களும் யூதா மற்றும் இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. கர்த்தரிடம் அவன் எவ்வளவு உண்மையானவனாக இருந்தான் என்பதையும், கர்த்தருடைய சட்டங்களுக்கு எவ்வாறு அடிபணிந்தான் என்பதையும் அப்புத்தகம் விளக்குகிறது.
2008 by World Bible Translation Center