Bible in 90 Days
38 ஈராம் பத்து கிண்ணங்களையும் செய்தான். ஒவ்வொரு வண்டியிலும் ஒவ்வொரு கிண்ணங்கள் வைக்கப்பட்டது. ஒவ்வொரு கிண்ணமும் 6 அடி குறுக்களவு உள்ளது. ஒவ்வொன்றும் 230 காலன் கொள்ளளவு கொண்டது. 39 ஆலயத்தின் தென்புறத்தில் ஐந்து வண்டிகளையும், வடபுறத்தில் ஐந்து வண்டிகளையும் நிறுத்திவைத்தான். ஆலயத்தின் தென்கிழக்கு முனையில் பெரிய தண்ணீர்த்தொட்டியை வைத்தான். 40-45 இதோடு கொப்பரை, சாம்பல் எடுக்கும் கரண்டி, கலங்கள் போன்றவற்றையும் ஈராம் செய்தான். சாலொமோன் ராஜா விரும்பியவற்றையெல்லாம் ஈராம் செய்துகொடுத்தான். அவன் கர்த்தருடைய ஆலயத்திற்காகச் செய்தப் பொருட்களின் பட்டியல் கீழேத் தரப்பட்டுள்ளது.
2 தூண்கள்,
2 தூண்களுக்கு மேல் வைக்கத்தக்க கிண்ணவடிவ கும்பங்கள்,
2 கும்பங்களை மூடும் வலைப்பின்னல்கள்,
400 மாதுளம்பழங்கள். இவை கும்பங்களை மூடும் ஒவ்வொரு வலைபின்னலோடும் இரண்டு வரிசையாக தொங்கவிடப்பட்டன.
10 வண்டிகள் அதன் மேல் 10 கொப்பரைகள், 1 கடல் தொட்டி, அதன் கீழ் 12 காளைகள், செப்புச் சட்டிகள், சாம்பல் கரண்டிகள், கலங்கள்.
இவை அனைத்தும் சுத்தமான வெண்கலத்தால் ஆனவை.
ராஜா சாலொமோன் விரும்பிய விதத்திலேயே இவை அனைத்தையும ஈராம் செய்தான். இவை அனைத்துமே பரிசுத்த வெண்கலத்தால் ஆனவை. 46-47 சாலொமோன் இவ்வெண்கலத்தை எடை போடவில்லை. இவை எடைக்கு அதிகமாகவே இருந்தன. எனவே வெண்கலத்தின் மொத்த எடையை யாரும் அறிந்திருக்கவில்லை. யோர்தான் நதிக்கரையில் சுக்கோத்துக்கும் சர்தானுக்கும் நடுவில் களிமண் தரையில் இவற்றைச் செய்யுமாறு ராஜா கட்டளையிட்டான். தரையில் அச்சுகளைப் பதித்து, அவற்றில் வெண்கலத்தை உருக்கி ஊற்றி இவற்றை அவர்கள் செய்தார்கள்.
48-50 சாலொமோன் ஆலயத்திற்குத் தங்கத்தால் பல பொருட்களைச் செய்ய கட்டளையிட்டான். அவை கீழ்வருவன:
பொன்னாலான பலிபீடம்,
பொன்னாலான மேஜை,
(தேவனுக்குச் செலுத்தும் விசேஷ அப்பங்களை வைக்க உதவும்,) விளக்குத்தண்டுகள்,
(மகா பரிசுத்தமான இடத்தில் தென்பக்கம் ஐந்தும் வடபக்கம் ஐந்தும் வைத்தனர்.)
பொன் பூக்கள், விளக்குகள், கத்தரிகள், கிண்ணங்கள், வெட்டுக்கத்திகள், கலங்கள், கலயங்கள், தூபகலசங்கள், ஆலய வாசல் கதவுகள்.
51 இவ்வாறு கர்த்தருடைய ஆலயத்திற்குத் தேவையான பொருட்களை சாலொமோன் செய்து முடித்தான். பிறகு தனது தந்தை தாவீது சேர்த்து வைத்திருந்தப் பொருட்களையெல்லாம் ஆலயத்துக்காக ஒன்றாகச் சேர்த்தான். இவை அனைத்தையும் ஆலயத்திற்குள் கொண்டுவந்தான். வெள்ளி, பொன் முதலியவற்றையெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் இருந்து பொக்கிஷத்தில் சேர்த்துவைத்தான்.
ஆலயத்தில் வைக்கப்பட்ட உடன்படிக்கைப் பெட்டி
8 பின் சாலொமோன் இஸ்ரவேலரின் முதியவர்களையும் கோத்திரத் தலைவர்களையும் கூட்டினான். அவர்களை எருசலேமுக்கு வரச்செய்தான். அவர்களை தாவீது நகரத்திலிருந்து உடன்படிக்கைப் பெட்டியை ஆலயத்திற்கு கொண்டு வரும்படி கேட்டான். 2 எனவே இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் சாலொமோனிடம் வந்தனர். இது, ஏழாம் மாதமாகிய ஏத்தானீம் மாதத்து அடைக்கல கூடார பண்டிகைக்குரியதாக இருந்தது. 3 இஸ்ரவேலின் முதியவர்கள் அனைவரும் அங்கு வந்துசேர்ந்ததும் பரிசுத்தப் பெட்டியை ஆசாரியர்கள் எடுத்தனர். 4 அவர்கள் கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியோடு ஆசரிப்புக் கூடாரத்தையும் கூடாரத்திலிருந்து பரிசுத்த பணிமுட்டுகள் அனைத்தையும் சுமந்துகொண்டு ஆசாரியரும் லேவியர்களும் வந்தனர். 5 சாலொமோன் ராஜாவும் இஸ்ரவேலின் அனைத்து ஜனங்களும் உடன்படிக்கைப் பெட்டியின் முன் கூடினார்கள். அவர்கள் பல பலிகளைக் கொடுத்தனர். எவராலும் எண்ணிப்பார்க்க முடியாதபடி ஆடுகளையும் மாடுகளையும் பலியிட்டனர். 6 பின்னர் ஆசாரியர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை அதற்கு உரிய சரியான இடத்தில் வைத்தனர். அது ஆலயத்தின் உள்ளே மகா பரிசுத்தமான இடத்தில் இருந்தது. உடன்படிக்கைப் பெட்டியானது கேருபீன்களின் சிறகுகளுக்கு அடியில் இருந்தது. 7 கேருபீன்கள் தங்கள் சிறகுகளை விரித்து பரிசுத்தப் பெட்டியையும் அதன் தண்டுகளையும் மூடின. 8 தூக்கிச் செல்லத்தக்க தண்டுகள் மிகவும் நீளமானவை. அவை பரிசுத்த இடத்திற்கு முன்னால் மகா பரிசுத்த இடத்தில் நிற்கும் எவராலும் காணத்தக்கதாக இருந்தன. என்றாலும் அவை வெளியே காணப்படவில்லை. அவை இன்றும் அங்கே தான் உள்ளன. 9 அப்பரிசுத்தப் பெட்டிக்குள்ளே இரண்டு கற்பல கைகளைத் தவிர வேறு எதுவும் இல்லை. அவற்றை மோசே ஓரேப் என்ற இடத்தில் பரிசுத்தப் பெட்டிக்குள்ளே வைத்தான். அந்த இடத்தில்தான் இஸ்ரவேலர்கள் எகிப்தை விட்டு வெளியே வந்ததும் கர்த்தர் அவர்களோடு உடன்படிக்கைச் செய்துக்கொண்டார்.
10 ஆசாரியர்கள் பரிசுத்தப் பெட்டியை மகா பரிசுத்த இடத்தில் வைத்தனர். ஆசாரியர்கள் பரிசுத்த இடத்தைவிட்டு வெளியேறியதும் மேகமானது கர்த்தருடைய ஆலயத்தை மூடிக்கொண்டது. 11 ஆசாரியர்களால் தொடர்ந்து வேலை செய்ய முடியாமல் போனது. ஏனென்றால் கர்த்தருடைய மகிமை ஆலயத்தை நிரப்பிவிட்டது. 12 பிறகு சாலொமோன்:
“கர்த்தர், கனமான மேகத்தில் வாழ்வதாகச் சொன்னார்,[a]
13 நான் உங்களுக்காக ஒரு பிரமாதமான ஆலயத்தைக் கட்டினேன்,
என்றென்றும் நீங்கள் வாழத்தக்க இடத்தை உருவாக்கினேன்” என்றான்.
14 இஸ்ரவேலின் அனைத்து ஜனங்களும் அங்கே நின்றுக்கொண்டு இருந்தனர். எனவே சாலொமோன் அவர்களை நோக்கி திரும்பி ஆசீர்வதிக்கும்படி தேவனை வேண்டினான். 15 பிறகு சாலொமோன் ராஜா கர்த்தருக்கு முன் மிக நீண்ட நேரம் ஜெபித்தான். அவன்:
“இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் மிகப் பெரியவர். கர்த்தர் தாமாகவே என் தந்தையான தாவீதிற்குச் செய்த வாக்குறுதியைச் செய்து முடித்தார், அவர் என் தந்தையிடம், 16 ‘நான் என் இஸ்ரவேல் ஜனங்களை, எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தேன். ஆனால் நான் இன்னும் என்னை மகிமைப்படுத்தும் ஆலயத்தைக் கட்டுவதற்குரிய இடத்தை இஸ்ரவேல் கோத்திரங்களில் இருந்து தேர்ந்தெடுக்கவில்லை. அதோடு இஸ்ரவேல் ஜனங்களை வழி நடத்திச் செல்லும் தலைவனையும் தேர்ந்தெடுக்கவில்லை. ஆனால், இப்போது நான் மகிமைப்படுவதற்குரிய இடமாக எருசலேமை தேர்ந்தெடுத்துள்ளேன். அதோடு, இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்திச் செல்ல தாவீதைத் தேர்ந்தெடுத்துவிட்டேன்.’
17 “என் தந்தையான தாவீது, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை மகிமைப்படுத்திட, ஒரு ஆலயத்தை கட்ட விரும்பினார். 18 ஆனால் அவரிடம் கர்த்தரோ, ‘என்னை மகிமைப்படுத்திட நீ ஆலயம் கட்ட வேண்டுமென்று விரும்புகிறாய். நீ என் ஆலயத்தைக் கட்ட விரும்புவது நல்லதுதான். 19 ஆனால் நான் என் ஆலயத்துக்காக உன்னைத் தேர்ந்தெடுக்கவில்லை. உன் குமாரன் என் ஆலயத்தைக்கட்டுவான்!’ என்று கூறினார்.
20 “எனவே கர்த்தர் தனது வாக்குறுதியை நிறைவேற்றிக்கொண்டார். நான் என் தந்தையான தாவீதின் இடத்தில் ராஜாவாக இருக்கிறேன். கர்த்தருடைய வாக்குறுதியின்படி இப்போது நான் இஸ்ரவேலை ஆண்டு வருகிறேன். நான் இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தருக்கு ஆலயம் கட்டிவிட்டேன். 21 ஆலயத்திற்குள் பரிசுத்தப் பெட்டியை வைக்கவும் இடம் அமைத்துவிட்டேன். அப்பரிசுத்தப் பெட்டிக்குள் கர்த்தர் நமது முற்பிதாக்களோடு செய்த உடன்படிக்கை இருக்கிறது. இந்த உடன்படிக்கையை அவர் நமது முற்பிதாக்களோடு எகிப்தை விட்டு வெளியே வந்ததும் செய்தார்” என்றான்.
22 பிறகு சாலொமோன் கர்த்தருடைய பலிபீடத்தின் முன்பு நின்றான். அனைவரும் அவனுக்கு முன்பு நின்றனர். 23 அவன் தன் கைகளை விரித்து வானத்தை நோக்கி,
“இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தாவே, வானத்திலும் பூமியிலும் உம்மைப் போன்று வேறு ஒரு தேவன் இல்லை. நீர் உம்முடைய ஜனங்களிடம் அன்பாயிருந்ததால் அவர்களோடு உடன்படிக்கை செய்துக்கொண்டீர். அதனைக் காப்பாற்றினீர். உம்மைப் பின்பற்றுபவர்களிடம் கருணையோடும் உண்மையோடும் இருந்தீர். 24 உமது சேவகனான என் தந்தை தாவீதிடம், ஒரு வாக்குறுதி தந்தீர். அதையும் காப்பாற்றினீர். உம்முடைய வாயாலேயே அந்த வாக்குறுதியைச் செய்தீர். அதை உண்மையாக்கிட உம்முடைய சொந்த பலத்தைப் பயன்படுத்தினீர். 25 இப்போது, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, தாவீதிற்குத் தந்த மற்ற வாக்குறுதிகளையும் நிறைவேற்றும். நீர், ‘உன் குமாரர்கள் உன்னைப்போலவே எனக்குக் கவனமாகக் கீழ்ப்படியவேண்டும். அவர்கள் அவ்வாறு செய்தால் பிறகு எப்பொழுதும் உன் குடும்பத்தில் உள்ளவர்களே இஸ்ரவேல் ஜனங்களை ஆள்வார்கள்’ என்று சொன்னீர். 26 இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தாவே, நீர் என் தந்தைக்களித்த வாக்குறுதியைக் காப்பாற்றும்படி மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.
27 “ஆனால், தேவனே உண்மையில் நீர் இந்தப் பூமியில் எங்களோடு வாழ்கின்றீரா? வானங்களும், வானாதி வானங்களும் உமக்குப் போதாதே. என்னால் கட்டப்பட்ட இந்த ஆலயம் எம்மாத்திரம்? 28 ஆனால் என் ஜெபங்களையும் வேண்டுகோள்களையும் தயவுசெய்து கேளும். நான் உமது ஊழியன், நீர் எனது தேவனாகிய கர்த்தர், இன்று என் ஜெபத்தைக் கேட்டருளும். 29 முன்பு நீர், ‘அங்கே நான் மகிமைப்படுத்தப்படுவேன்’ என்றீர். இவ்வாலயத்தை இரவும் பகலும் கவனித்துக்கொள்ளும். இந்த ஆலயத்தில் நான் செய்யும் ஜெபங்களைக் கேட்டருளும் 30 கர்த்தாவே, நானும் இஸ்ரவேல் ஜனங்களும் இங்கே உம்மிடம் திரும்பி ஜெபிக்கிறோம். தயவு செய்து அந்த ஜெபங்களைக் கேளும்! நீர் பரலோகத்தில் இருப்பதை அறிவோம். அங்கிருந்து எங்கள் ஜெபங்களைக் கேட்டு எங்களை மன்னியும்.
31 “எவனாவது ஒருவன் இன்னொருவனுக்குத் தப்பு செய்தால், அவன் இங்கே பலிபீடத்திற்குக் கொண்டு வரப்படுவான். அவன் குற்றவாளியாக இல்லாமல் இருந்தால், ஒரு சத்தியம் செய்துக்கொள்வான். தான் ஒன்றும் அறியாதவன் என்று அவன் வாக்குறுதி செய்யவேண்டும். 32 பரலேகத்திலிருந்து கவனித்து நியாயம் வழங்கவேண்டும். அவன் குற்றவாளியானால், தயவு செய்து அதை எங்களுக்கு உணர்த்தும். அவன் ஒன்றும் அறியாத அப்பாவியாக இருந்தால், அவன் குற்றமற்றவன் என்பதை உணர்த்தியருளும்.
33 “சில நேரங்களில் உமது இஸ்ரவேல் ஜனங்கள் உமக்கு எதிராகப் பாவம் செய்யலாம், அவர்களின் பகைவர்கள் அவர்களைத் தோற்கடிக்கலாம். பிறகு அவர்கள் உம்மைத் துதிப்பார்கள், இந்த ஆலயத்தில் வந்து ஜெபம் செய்வார்கள். 34 தயவு செய்து பரலோகத்திலிருந்து அவற்றைக் கேளும். அவர்களை மன்னித்து நமது நாட்டைப் பெற்றுக்கொள்ளும்படி உதவும், நீர் இந்த நாட்டை அவர்களின் முற்பிதாக்களுக்கு தந்துள்ளீர்.
35 “சில வேளைகளில் இவர்கள் உமக்கு எதிராகப் பாவம் செய்வதினால், நீர் மழையை நிறுத்திவிடுகிறீர். பிறகு அவர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து ஜெபித்து உம்மைத் துதித்து உமது பேரையும் புகழையும் பாடுவார்கள். நீர் துன்புறுத்த, அவர்கள் தமது பாவங்களுக்காக வருந்துவார்கள். 36 தயவு செய்து பரலோகத்திலிருந்து அவர்களின் ஜெபத்தைக் கேளும். பிறகு எங்களது பாவங்களை மன்னியும். ஜனங்களுக்கு சரியான வழிகளை கற்பியும். கர்த்தாவே, உமது ஜனங்களுக்கு வாரிசுரிமையாகக் கொடுத்த மண்ணுக்கு மழையை அனுப்பிவையும்.
37 “இந்த பூமி வறண்டு போகலாம், உணவுப் பொருட்கள் விளையாமல் போகலாம், அல்லது ஜனங்களிடம் பெருநோய் பரவலாம் அல்லது பயிர்கள் புழுப் பூச்சிகளால் அழிக்கப்படலாம் அல்லது பகைவர்களால் ஜனங்கள் தம் நகரங்களில் தாக்கப்படலாம் அல்லது ஜனங்களுக்கு நோய் வரலாம். 38 இவற்றில் ஏதாவது ஒன்று ஏற்பட்டு, ஜனங்களில் ஒவ்வொருவனும் மனம்மாற விரும்பி, ஆலயத்தை நோக்கித் தன் கைகளை ஏறெடுத்து ஜெபம் செய்தால், 39 தயவு செய்து கவனியும். நீர் உமக்குரிய இடமாகிய பரலோகத்தில் இருந்தாலும் கவனியும். அவர்களை மன்னித்து உதவிசெய்யும். உமக்கு மட்டுமே மனிதர்கள் உண்மையாக நினைப்பது தெரியும். எனவே, ஒவ்வொருவரையும் அவரவர் செய்கிறபடி நடத்தும். 40 எங்கள் முற்பிதாக்களுக்காக நீர் கொடுத்த இந்நாட்டில் நாங்கள் வாழும்வரை உமக்கு பயந்துநடப்போம்.
41-42 “வெளி இடங்களில் உள்ள ஜனங்களும் உமது உயர்வையும் பலத்தையும் அறிவார்கள். இந்த ஆலயத்தில் ஜெபிப்பதற்காக அவர்கள் வெகு தூரத்திலிருந்து வருவார்கள். 43 பரலோகத்திலிருந்து அவர்களது ஜெபங்களுக்குச் செவிசாயும். அவர்கள் கேட்பவற்றை தந்து உதவும். பிறகு அவர்களும் இஸ்ரவேல் ஜனங்களைப் போலவே உம்மிடம் பயமும் மரியாதையும் வைத்திருப்பார்கள். பின் எல்லா இடங்களிலும் உள்ள ஜனங்களும் உமது நாமத்தைத் தாங்கிய நான் கட்டியிருக்கிற இந்த ஆலயத்தை அறிவார்கள்.
44 “சில நேரங்களில் உமது ஜனங்களுக்கு அவர்களது எதிரிகளோடு சண்டையிடுமாறு நீர் ஆணையிடுவீர். பிறகு உமது ஜனங்கள் உம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த நகரத்திற்கும் நான் உம்மை மகிமைப்படுத்துவதற்குக் கட்டியிருக்கிற ஆலயத்திற்கும் திரும்பிவந்து அவர்கள் உம்மிடம் ஜெபம் செய்வார்கள். 45 அப்போது, உம்முடைய பரலோகத்திலிருந்து அந்த ஜெபங்களுக்கு செவிசாய்த்து அவர்களுக்கு உதவும்.
46 “உமது ஜனங்கள் உமக்கு எதிராகப் பாவம் செய்வார்கள். நான் இதனை அறிவேன். ஏனென்றால் ஒவ்வொருவரும் பாவம் செய்கின்றனர். உமது ஜனங்களின்மேல் கோபமாக இருப்பீர். பகைவர்களால் தோற்கடிக்கப்படச் செய்வீர். பகைவர்கள் அவர்களைக் கைது செய்து தூரநாடுகளுக்குக் கொண்டுப் போவார்கள். 47 அங்கே உமது ஜனங்கள் நடந்தவற்றை நினைத்துப் பார்ப்பார்கள். தம் பாவங்களுக்காக வருந்தி உம்மிடம் ஜெபிப்பார்கள், ‘பாவம் செய்து உமக்கு தவறிழைத்துவிட்டோம்’ என்பார்கள். 48 அவர்கள் தொலைவிலுள்ள அந்த நிலப்பகுதியில் இருப்பார்கள். அவர்களை அடிமைப்படுத்திய எதிரிகளின் நிலத்திலிருந்து முழு இருதயத்தோடும் ஆத்துமாவோடும் உம்மை நோக்கித் திரும்பினாலும் அவர்களது முற்பிதாக்களுக்கு நீர் கொடுத்த நிலத்தை நோக்கி உம்மிடம் ஜெபித்தாலும், நீர் தேர்ந்தெடுத்த நகரத்தை நோக்கித் திரும்பினாலும் நான் உமது நாமத்தால் கட்டியுள்ள ஆலயத்தை நோக்கித் திரும்பினாலும், 49 நீர் அவர்களது ஜெபங்களுக்கு பரலோகத்திலிருந்து செவிசாய்த்து உதவும். 50 உமது ஜனங்களின் பாவங்களை மன்னியும். அவர்கள் உமக்கு எதிராக திரும்பியதற்கு மன்னித்துவிடும். பகைவர்கள் அவர்களிடம் இரக்கத்துடன் இருக்கச் செய்யும். 51 அவர்கள் உம்முடைய ஜனங்கள் என்பதை மறவாதீர். அவர்களை எகிப்திலிருந்து மீட்டு வந்ததை நினைவுகூரும். சூடான அடுப்பிலிருந்து அவர்களைக் காப்பாற்றியதைப் போன்ற செயல் அது!
52 “தேவனாகிய கர்த்தாவே, என் ஜெபத்தையும் இஸ்ரவேல் ஜனங்களின் ஜெபங்களையும் கேளும். உதவி கேட்கும்போதெல்லாம் உதவும். 53 நீர் அவர்களை உலகிலுள்ள அனைத்து ஜனங்களிடமிருந்தும் தேர்ந்தெடுத்தீர். உமது வேலையாள் மோசே மூலம் எங்கள் முற்பிதாக்களை எகிப்திற்கு வெளியே கொண்டுவந்தபோது நீர் அதை வெளிப்படுத்தினீர்” என்றான்.
54 சாலொமோன் இவ்வாறு தேவனிடம் ஜெபம் செய்தான். அவன் பலிபீடத்திற்கு முன்னால் முழங்காலிட்டு தன் கைகளை உயர்த்தி பரலோகத்தை நோக்கி வேண்டினான். அவன் தன் வேண்டுதல்களை முடித்தபிறகு எழுந்து நின்றான். 55 பின் உரத்த குரலில் தேவன் இஸ்ரவேல் ஜனங்களை ஆசீர்வதிக்கும்படி வேண்டினான்.
56 சாலொமோன், “கர்த்தரை துதியுங்கள்! அவரது ஜனங்களுக்கு அவர் வாக்களித்தது போன்று இளைப்பாறுதல் அளிக்கிற கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுங்கள்! கர்த்தர் தமது ஊழியன் மோசே மூலம் கொடுத்த வாக்குறுதிகளில் ஒரு வார்த்தை கூட தவறுவதில்லை. கர்த்தர் அத்தனையையும் காப்பாற்றுவார்! 57 தேவனாகிய கர்த்தர் நமது முற்பிதாக்களோடு இருந்ததுப்போலவே நம்மோடும் இருப்பார், கர்த்தர் நம்மை விட்டு விலகக்கூடாது என்று ஜெபிக்கிறேன். 58 நாம் அவர் பக்கம் திரும்பி அவரைப் பின்பற்றுவோம். நமது முற்பிதாக்களுக்கு அவர் கொடுத்த சட்டங்களுக்கும், முடிவுகளுக்கும், கட்டளைகளுக்கும் கீழ்ப்படிவோம், 59 நமது தேவனாகிய கர்த்தர், எனது இந்த ஜெபங்களையும் வேண்டுகோள்களையும் மறவாமல் இருப்பார். அவர் இதனை அவரது ஊழியனுக்கும் ராஜாவுக்கும் இஸ்ரவேல் ஜனங்களுக்கும் செய்வார். ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். 60 இவ்வாறு கர்த்தர் செய்துவந்தால், உலகில் உள்ள ஜனங்கள் அனைவரும் அவரை உலகின் ஒரே தேவனாகக் கருதுவார்கள். 61 நீங்கள் நமது தேவனாகிய கர்த்தருக்கு உண்மையோடும் நம்பிக்கையோடும் இருக்க வேண்டும். எப்பொழுதும் அவரைப் பின்பற்றி அவரது கட்டளைகளுக்கும், சட்டங்களுக்கும் கீழ்ப்படிய வேண்டும். இப்பொழுது போலவே எதிர்காலத்திலும் அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும்” என்றான்.
62 பிறகு சாலொமோன் ராஜாவும், இஸ்ரவேல் ஜனங்களும் கர்த்தருக்கு பலிகளைச் செலுத்தினார்கள். 63 22,000 மாடுகளையும், 1,20,000 ஆடுகளையும் கொன்றனர். இவை சமாதானப் பலியாகக் கொடுக்கப்பட்டன. இவ்வழியில்தான், ராஜாவும் இஸ்ரவேலர்களும் ஆலயத்தை கர்த்தருக்கு உரியதாக ஆக்கினார்கள்.
64 அன்று சாலொமோன் ஆலயத்தின் முற்றத்தை அர்ப்பணித்தான். அவன் தகனபலி, தானியக் காணிக்கை, விலங்குகளின் கொழுப்பைக் கொண்டு சமாதான பலி ஆகியவற்றைக் கொடுத்தான். சாலொமோன் இவற்றை ஆலயத்தின் முற்றத்தில் கொடுத்தான். ஏனென்றால் கர்த்தருக்கு முன்பாக இருந்த வெண்கல பலிபீடம் அவை அனைத்தையும் கொள்ளமுடியாத அளவு சிறியதாக இருந்தது.
65 ஆலயத்தில் சாலொமோனும் இஸ்ரவேல் ஜனங்களும் விடுமுறையைக்[b] கொண்டாடினார்கள். அனைத்து இஸ்ரவேலர்களும் ஆமாத்தின் எல்லை தொடங்கி எகிப்தின் நதி மட்டுமுள்ள ஜனங்களும் அங்கே இருந்தனர். அவர்கள் ஏழு நாட்கள் உண்பதும் குடிப்பதும் கர்த்தருடன் சேர்ந்து மகிழ்வதுமாக இருந்தனர். அவர்கள் மேலும் 7 நாட்கள் இருந்தனர். மொத்தம் 14 நாட்கள் கொண்டாடினர். 66 மறுநாள், சாலொமோன் ஜனங்களை வீட்டிற்குத் திரும்பச் சொன்னான். அனைவரும் அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு வீட்டிற்குத் திரும்பினார்கள். கர்த்தர் தனது ஊழியனான தாவீதிற்கும் இஸ்ரவேல் ஜனங்களுக்கும் நன்மை செய்ததால் அனைவரும் மகிழ்ச்சியோடு இருந்தனர்.
தேவன் சாலொமோனிடம் மீண்டும் வருதல்
9 இவ்வாறு சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தையும் தனது அரண்மனையையும் கட்டி முடித்தான். அவன் கட்ட விரும்பியவற்றையெல்லாம் கட்டிமுடித்தான். 2 பிறகு கர்த்தர் மீண்டும் அவன் முன் கிபியோனில் தோன்றியதுபோல தோன்றினார். 3 கர்த்தர் அவனிடம்,
“நான் உன் ஜெபத்தைக் கேட்டேன். நீ கேட்டவற்றையும் அறிந்தேன். நீ இந்த ஆலயத்தைக் கட்டினாய். நான் இதனைப் பரிசுத்த இடமாக்கினேன். எனவே நான் அங்கே என்றென்றும் மகிமைப்படுத்தப்படுவேன். எப்பொழுதும் அதைக் கவனித்து அதைப்பற்றி சிந்தித்துக்கொண்டிருப்பேன். 4 உன் தந்தையைப் போலவே நீயும் எனக்கு ஊழியம் செய்யவேண்டும். அவன் நல்லவனாகவும் உண்மையானவனாகவும் இருந்தான். நீ என் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து எனது கட்டளைகளைச் செய்து முடிக்கவேண்டும். 5 நீ இவ்வாறு செய்து வந்தால், இஸ்ரவேலரின் ராஜா உன் குடும்பத்தவனாகவே இருப்பான். இந்த வாக்குறுதியைத்தான் உனது தந்தையான தாவீதிற்குக் கொடுத்திருக்கிறேன். நான் அவனிடம், ‘இஸ்ரவேல் உன் சந்ததியிலிருந்தே எப்பொழுதும் ஆளப்படும்’ என்று கூறியிருக்கிறேன்.
6-7 “ஆனால் நீயோ அல்லது உன் பிள்ளைகளோ என்னைப் பின்பற்றாமல், நான் உனக்குத் தந்த சட்டங்களுக்கும், கட்டளைகளுக்கும் கீழ்ப்படியாமல், அந்நிய தெய்வங்களை தொழுதுகொள்வீர்களேயானால், நான் உங்களுக்குத் தந்த இந்த நாட்டைவிட்டு வெளியேற்றுவேன். மற்ற எல்லா தேசங்களின் ஜனங்களும் இஸ்ரவேலர்களை எண்ணி நகைக்கக்கூடாது. நான் ஆலயத்தைப் பரிசுத்தமாக்கினேன். இந்த இடத்தில் ஜனங்கள் என்னை மகிமைப்படுத்தலாம். ஆனால் நீங்கள் எனக்குக் கீழ்ப்படியாவிட்டால் உங்களை விலக்குவேன். 8 இந்த ஆலயம் அழிக்கப்படும். இதைப் பார்க்கிறவர்கள் வியப்பார்கள். ‘இந்த நாட்டையும் ஆலயத்தையும் ஏன் கர்த்தர் இவ்வாறு செய்தார்?’ என்பார்கள். 9 மற்றவர்களோ, ‘அவர்கள் தமது தேவனாகிய கர்த்தரை விட்டு விலகினார்கள். அதனால் இவ்வாறு ஆயிற்று. அவர்களது முற்பிதாக்களை அவர் எகிப்திலிருந்து மீட்டார். ஆனால் அவர்களோ அந்நிய தெய்வங்களை நாடினார்கள். அதனால் கர்த்தர் அவர்களுக்கு இது போன்ற தீமைகளைச் செய்தார்’ என்பார்கள்” என்றார்.
10 சாலொமோனுக்கு கர்த்தருடைய ஆலயத்தையும் அரண்மனையையும் கட்டிமுடிக்க 20 ஆண்டுகள் ஆயின. 11 அதற்குப் பின் சாலொமோன் ஈராமுக்கு கலிலேயாவில் 20 நகரங்களைக் கொடுத்தான். காரணம் அவன் ஆலயத்தையும் அரண்மனையும் கட்ட உதவி செய்தான். சாலொமோனுக்குத் தேவையான கேதுரு மரங்களையும், தேவதாரு மரங்களையும், தங்கத்தையும் கொடுத்து வந்தான். 12 எனவே, தீரு என்னும் நகரில் இருந்து பயணப்பட்டு சாலொமோன் கொடுத்த நகரங்களை எல்லாம் ஈராம் பார்வையிட்டான். அப்போது அவன் திருப்தியடையவில்லை. 13 ஈராம், “என் சகோதரனே, நீ எத்தகைய நகரங்களைக் கொடுத்திருக்கிறாய்?” என்று கேட்டான். ஈராம் மன்னன் அதற்கு காபூல் என்று பேரிட்டான். இப்பொழுது அது அவ்வாறே அழைக்கப்படுகிறது. 14 ஈராம் 9,000 பவுண்டு தங்கத்தை ஆலயம் கட்ட சாலொமோனுக்கு அனுப்பியிருக்கிறான்.
15 சாலொமோன் ஆலயத்தையும் அரண்மனையையும் கட்ட அடிமைகளை கட்டாயப்படுத்தினான். மேலும் அவர்களைப் பயன்படுத்தி பலவற்றைக் கட்டினான். அவன் மில்லோவைக் கட்டினான். எருசலேம் நகரைச் சுற்றி ஒரு சுவரையும் பின்னர் ஆத்சோரையும், மெகிதோவையும், கேசேரையும் கட்டினான்.
16 முன்பு, எகிப்து மன்னன் கேசேரைச் சண்டையிட்டு எரித்துவிட்டான். அங்கு வாழ்ந்த கானானியரையும் கொன்றான். சாலொமோன் பார்வோன் மன்னனின் குமாரத்தியையும் மணந்துக்கொண்டான். எனவே திருமணப் பரிசாக இந்நகரத்தைச் சாலொமோன் பெற்றுக்கொண்டான். 17 சாலொமோன் அந்நகரை மீண்டும் கட்டினான். அவன் கீழ்ப்பெத்தோரோனையும் கட்டி முடித்தான். 18 மேலும் பாலாத், பாலைவனத்தில் உள்ள தத்மோரயும், 19 தன் தானியங்களைச் சேகரித்து வைத்த நகரங்களையும் தன் இரதங்கள் மற்றும் குதிரைகளை வைத்திருக்கும் நகரங்களையும் அவன் கட்டினான். அவன் எருசலேம், லீபனோன் மற்றும் அவனது ஆட்சிக்குட்பட்ட இடங்கள் அனைத்திலும் தான் விரும்பியவற்றையெல்லாம் கட்டினான்.
20 அந்நாட்டில் இஸ்ரவேலர் அல்லாதாரும் வாழ்ந்தனர். அவர்கள் எமோரியர், ஏத்தியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகியோராகும். 21 இஸ்ரவேலர்களால் சிலர்களை அழிக்க முடியவில்லை. ஆனால் சாலொமோன் அவர்களை அடிமைகள்போல வேலைசெய்ய கட்டாயப்படுத்தினான், அவர்கள் இன்றும் அடிமைகளாக இருக்கின்றனர். 22 சாலொமோன் இஸ்ரவேலர்களை அடிமையாக்கவில்லை. இஸ்ரவேலர்கள் வீரர்களாகவும், அரசு அதிகாரிகளாகவும், தலைவர்களாகவும் இரத ஏவலர்களாகவும் இருந்தனர். 23 சாலொமோனின் திட்டக்குழுவில் 550 மேற்பார்வையாளர்கள் இருந்தனர். இவர்கள் வேலைக்காரர்களின் எஜமானர்கள்.
24 பார்வோன் மன்னனின் குமாரத்தி தாவீது நகரத்திலிருந்து சாலொமோன் புதிதாகக் கட்டிய அரண்மனைக்கு வந்தாள். பிறகு சாலொமோன் மில்லோவைக் கட்டிமுடித்தான்.
25 ஒவ்வொரு ஆண்டும் மூன்றுமுறை சாலொமோன் பலிபீடத்தில் சர்வாங்க தகன பலிகளையும், சமாதான பலிகளையும் செலுத்தினான். இது சாலொமோனால் கர்த்தருக்காகக் கட்டப்பட்ட பலிபீடம். அவன் கர்த்தருக்கு முன் நறுமணப் பொருட்களை எரித்தான். ஆலயத்திற்குத் தேவையான பொருட்களையும் கொடுத்துவந்தான்.
26 சாலொமோன் ராஜா ஏசியோன் கேபேரிலே கப்பங்களைச் செய்வித்தான். அந்நகரம் ஏலோத்துக்கு அருகில் செங்கடலின் கரையில் ஏதோம் நாட்டில் இருந்தது. 27 ஈராம் ராஜாவின் ஆட்களில் சிலருக்குக் கடல் பற்றி அறிவு அதிகமாக இருந்தது. அவர்களை அவன் சாலொமோனிடம் அனுப்பி கப்பற்படையில் பணிபுரியச் செய்தான். 28 சாலொமோனின் கப்பல்கள் ஒப்பீருக்குப் போனது. அங்கிருந்து 31,500 பவுண்டு தங்கத்தைக் கொண்டுவந்தது.
சேபாவின் இராணி சாலொமோனைப் பார்க்க வருதல்
10 சேபாவின் இராணி சாலொமோனின் புகழைப்பற்றி கேள்விப்பட்டாள். எனவே கடினமான கேள்விகள் மூலம் அவனைச் சோதிக்கவந்தாள். 2 ஏராளமான வேலைக்காரர்களோடு அவள் எருசலேமுக்குப் பயணம் செய்தாள். ஏராளமான இரத்தினங்களை சுமக்கிற ஒட்டகங்களையும், மணப் பொருட்களையும், நகைகளையும் பொன்னையும் சுமந்து வந்தாள். அவள் சாலொமோனை சந்தித்து தனக்குத் தெரிந்த பல வினாக்களைக் கேட்டாள். 3 சாலொமோன் அனைத்துக்கும் விடை சொன்னான். எந்தக் கேள்வியும் அவனுக்குப் பதிலளிக்க கஷ்டமாக இல்லை. 4 அவள் சாலொமோனிடம் அறிவுத் திறனைக் கண்டுகொண்டாள். அவன் கட்டிய அரண்மனையின் அழகையும் பார்த்தாள். 5 ராஜாவின் மேஜையில் இருந்த உணவுப்பொருட்களையும் பார்த்தாள். அவள் அதிகாரிகளின் கூட்டத்தையும் பார்வையிட்டாள். அரண்மனையில் வேலைக்காரர்களும் நன்றாக உடை அணிந்திருப்பதைக் கவனித்தாள். அவள் ஆலயத்தில் அவன் அளித்த விருந்துகளையும் பலிகளையும் பார்த்தாள். இவையெல்லாம் உண்மையில் அவளுக்கு வியப்பை உண்டாக்கி அவளது பெருமூச்சை வரவழைத்தது.
6 எனவே இராணி சாலொமோனிடம், “நான் எனது நாட்டிலே உங்கள் அறிவைப்பற்றியும் உங்கள் செயல்களைப்பற்றியும் பலவாறு கேள்விப்பட்டேன். அத்தனையும் உண்மை. 7 நான் இங்கே வந்து என் சொந்தக்கண்களால் காணும்வரை இவற்றை நம்பாமல் இருந்தேன். இப்போது கேள்விப்பட்டதை எல்லாம் கண்ணால் பார்த்துவிட்டேன். ஜனங்கள் சொன்னதைவிட உங்கள் அறிவும் செல்வமும் மிகுதியாகும். 8 உங்கள் மனைவிகளும் வேலைக்காரர்களும் கொடுத்து வைத்தவர்கள்! அவர்கள் உங்களுக்கு பணிவிடை செய்து உங்கள் அறிவை ஒவ்வொரு நாளும் கேட்டு வருகிறார்கள்! 9 உங்கள் தேவனாகிய கர்த்தரைத் துதிக்கிறேன்! உங்களை இஸ்ரவேலின் ராஜாவாக்கியதில் அவர் திருப்தியடைவார். தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை பெரிதும் நேசிக்கிறார். அதனால்தான் உங்களை அவர்களின் ராஜா ஆக்கினார். நீங்கள் சட்டங்களைப் பின்பற்றி ஜனங்களிடம் அன்பாய் இருக்கிறீர்கள்” என்றாள்.
10 பிறகு இராணி சாலொமோனுக்கு 9,000 பவுண்டு பொன்னைக் கொடுத்தாள். அவள் மேலும் மணப் பொருட்களையும் நகைகளையும் கொடுத்தாள். அதுவரை இஸ்ரவேலில் யாரும் பெற்றிராத அளவிற்கு சாலொமோனுக்கு மணப்பொருட்களைக் கொடுத்தாள்.
11 ஈராமின் கப்பல்கள் ஓப்பீரிலிருந்து பொன்னைக் கொண்டுவந்தன. அவை சிறப்புமிக்க மரத் துண்டுகளையும் நகைகளையும் கொண்டு வந்தன. 12 சாலொமோன் இம்மரத்தடிகளை ஆலயத்திலும் அரண்மனையிலும் உதவிக்காகப் பொருத்தினான். அவற்றை இசைக்கருவிகள் செய்யவும் பயன்படுத்தினான். இஸ்ரவேலருக்கு இதுவரை எவரும் இது போன்ற மரத்தைக் கொண்டுவந்ததில்லை, இதுவரைப் பர்ர்த்ததுமில்லை.
13 பிறகு சாலொமோன் ஒரு ராஜா இன்னொரு நாட்டு ராஜாவுக்கு கொடுப்பது போன்று சேபா நாட்டு இராணிக்கு பரிசுகளைக் கொடுத்தான். மேலும் அவள் விருப்பப்படி கேட்டதையெல்லாம் கொடுத்தான். அதன்பின், இராணியும் வேலைக்காரர்களும் தம் நாட்டுக்குத் திரும்பிப் போனார்கள்.
14 ஒவ்வொரு ஆண்டும் சாலொமோன் ராஜா 79,920 பவுண்டு தங்கத்தைப் பெற்றான். 15 அவன் தர்ஷீசிலிருந்து பெற்ற தங்கத்திற்கு மேலாக அவன் வியாபாரிகளிடம் இருந்தும், வர்த்தகர்களிடமிருந்தும், அரேபிய ராஜாக்களிடமிருந்தும், நாட்டு ஆளுநர்களிடமிருந்தும் பொன்னைப் பெற்றான்.
16 சாலொமோன் ராஜா அடித்தப் பொன் தகட்டால் 200 கேடயங்களைச் செய்தான். ஒவ்வொன்றும் 15 பவுண்டு தங்கமுடையதாக இருந்தது. 17 அதோடு 300 சின்ன கேடயங்களையும் செய்தான். அது ஒவ்வொன்றும் 4 பவுண்டு எடையுள்ளது. ராஜா அவற்றை, “லீபனோனின் காடு” என்ற கட்டிடத்தில் வைத்தான்.
18 சாலொமோன் ராஜா தந்தத்தினால் ஒரு சிங்காசனத்தைச் செய்தான். அதனைப் பொன் தகட்டால் மூடினான். 19 அதில் ஏறிச்செல்ல 6 படிகள் இருந்தன. அதன் பின் பகுதியின் உச்சியில் வட்டமாக இருந்தது. இரு பக்கங்களிலும் கை வைப்பதற்கான பிடிமானங்கள் இருந்தன. 20 அதன் அருகில் இரண்டு சிங்கங்கள் இருந்தன. ஆறு படிகளின் மேலும் இரண்டு பக்கத்திலும் 12 சிங்கங்கள் நின்றன. எந்த அரசாங்கத்திலும் இதுபோல் அமைக்கப்படவில்லை. 21 ராஜாவின் பானபாத்திரங்கள் பொன்னால் செய்யப்பட்டிருந்தது. “லீபனோனின் காடு” எனும் மாளிகை பொருட்கள் எல்லாம் பசும்பொன்னால் செய்யப்பட்டிருந்தன. எதுவும் வெள்ளியால் செய்யப்படவில்லை. காரணம் அவனது காலத்தில் வெள்ளி ஒரு பொருட்டாக மதிக்கப்படவில்லை!
22 ராஜாவுக்கு வியாபாரத்தின்பொருட்டு வேறு தேசங்களுக்கு அனுப்பப்பட்ட பல தர்ஷீசின் கப்பல்களும் இருந்தன. இவையனைத்தும் ஈராமின் கப்பல்கள், மூன்று ஆண்டுக்கு ஒருமுறை அவை பொன், வெள்ளி, யானைத்தந்தம், விலங்குகள் போன்றவற்றை பல்வேறு நாடுகளில் இருந்து கொண்டுவரும்.
23 பூமியிலே சாலொமோன் மிகப் பெரிய ராஜாவாக விளங்கினான். அவன் மற்றவர்களைவிட செல்வத்திலும், அறிவிலும் சிறந்து விளங்கினான். 24 எல்லா இடங்களிலுமுள்ள ஜனங்கள் சாலொமோனைப் பார்க்க விரும்பினார்கள். தேவன் கொடுத்த ஞானத்தை அவன் மூலம் கேட்க விரும்பினார்கள். 25 ஒவ்வொரு ஆண்டும் ஜனங்கள் ராஜாவைப் பார்க்கவந்தனர். ஒவ்வொருவரும் அவனுக்குப் பரிசுகளையும் கொண்டு வந்தனர். அவர்கள் தங்கம், வெள்ளி, துணி, ஆயுதம், மணப் பொருள், குதிரை, கோவேறு கழுதை எனக் கொண்டு வந்தனர்.
26 எனவே சாலொமோனுக்கு ஏராளமான இரதங்களும் குதிரைகளும் இருந்தன. அவனிடம் 1,400 இரதங்களும், 12,000 குதிரைகளும் இருந்தன. இதற்கென்று ஒரு தனி நகரத்தையே உருவாக்கினான். அவன் சில இரதங்களை எருசலேமில் வைத்திருந்தான். 27 அவன் இஸ்ரவேலைச் செல்வம் செழிக்கச் செய்தான். அவன் நாட்டில் வெள்ளியானது பாறைகளைப்போல பொதுவாகக் கிடந்தது, கேதுரு மரங்கள் மலைப்பகுதியில் உள்ள காட்டத்தி மரங்களைப் போல மிகுதியாக வளர்ந்திருந்தன. 28 எகிப்திலிருந்தும் குவையிலிருந்தும் ராஜா சாலொமோன் குதிரைகளை வரவழைத்தான். வியாபாரிகள் அவற்றைக் கொண்டுவந்தனர். 29 எகிப்திலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு இரதம் 15 பவுண்டு வெள்ளியும், ஒரு குதிரை 3 3/4 பவுண்டு வெள்ளியும், மதிப்புடையதாக இருந்தது. சாலொமோன் இரதங்களையும், குதிரைகளையும் ஏத்தியர் மற்றும் சீரியர்களுக்கு விற்பனை செய்தான்.
சாலொமோனும் அவனது பல மனைவியரும்
11 சாலொமோன் ராஜா பெண்களை நேசித்தான்! அவன் இஸ்ரவேலில் உள்ள பெண்களை மட்டுமல்லாமல் பார்வோனின் குமாரத்தி, ஏத்தியர், மோவாப், அம்மோன், ஏதோம், சீதோன் எனப் பல நாட்டுப் பெண்களை விரும்பினான். 2 முன்பு, கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களிடம், “அடுத்த நாட்டு பெண்களை மணந்துக்கொள்ளாதீர்கள். அவ்வாறு செய்தால், அவர்களின் தெய்வங்களை நீங்கள் வணங்க வேண்டியது வரும்” என்றார். ஆனால், சாலொமோன் இதுபோன்ற பெண்களை நேசித்தான். 3 சாலொமோனுக்கு 700 மனைவியர் இருந்தனர். (அவர்கள் அனைவரும் பிற நாட்டுத் தலைவர்களின் குமாரத்திகள் ஆவார்கள்.) இதுமட்டுமன்றி அவனுக்கு 300 அடிமைப் பெண்களும் மனைவியரைப் போன்று இருந்தனர். அவர்கள் அவனை தேவனுடைய வழியிலிருந்து திருப்பினார்கள். 4 அவன் முதியவன் ஆனதும், அவர்கள் அவனை அந்நியதெய்வங்களை பின் பற்றும்படிச் செய்தனர். அவனது தந்தை தாவீதைப்போன்று சாலொமோன் முழுமையாக கர்த்தரைப் பின்பற்றவில்லை. 5 சாலொமோன் அஸ்தரோத்தை தொழுதுகொண்டான். இது சீதோனியரின் தெய்வமாகும். அவன் மில்கோமையும் தொழுதுகொண்டான். இது அம்மோனியரின் அருவருப்பான விக்கிரகமாகும். 6 எனவே சாலொமோன் கர்த்தருக்கு முன் தவறு செய்தான். அவன் தன் தந்தை தாவீதைப்போன்று கர்த்தரை முழுமையாகப் பின்பற்றவில்லை.
7 சாலொமோன் காமோஸ் என்னும் பொய்த்தெய்வத்தை தொழுதுகொள்ள ஒரு இடத்தைக் கட்டினான். இது மோவாபியரின் அருவருப்பான விக்கிரகம் ஆகும். இவ்விடத்தை எருசலேமுக்கு எதிரில் உள்ள மலைமீது கட்டினான். அதே மலையில், மோளோகுக்கும் ஆலயம் கட்டினான். இது அம்மோன் ஜனங்களின் அருவருப்பான தோற்றமுடைய விக்கிரகமாகும். 8 சாலொமோன் இதுபோலவே மற்ற மனைவியரின் நாட்டுத் தெய்வங்களுக்கும் செய்தான். அவனது மனைவியர் அத்தெய்வங்களுக்கு நறு மணப் பொருட்களை எரித்து, பலியிட்டு வந்தனர்.
9 இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தரை பின்பற்றுவதிலிருந்து அவன் விலகிப்போனான். எனவே, கர்த்தர் சாலொமோன் மீது கோபங்கொண்டார். கர்த்தர் அதற்கு முன்பு அவனிடம் இருமுறை தோன்றினார். 10 அவர் அவனிடம் அந்நியதெய்வங்களை பின்பற்றக் கூடாது என்று கூறினார். ஆனால் அவன் கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை 11 எனவே கர்த்தர் சாலொமோனிடம், “என்னோடு செய்த உடன்படிக்கையை மீற முடிவெடுத்துவிட்டாய். நீ எனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவில்லை. எனவே உனது அரசை உன்னிடமிருந்து விலக்குவேன் என்று வாக்குறுதிக்கொடுக்கிறேன். அதனை உன் வேலைக்காரர்களில் ஒருவருக்குக் கொடுப்பேன். 12 ஆனால் நான் உன் தந்தையான தாவீதை நேசித்தேன். எனவே நீ உயிரோடு இருக்கும்வரை இவ்வரசை உன்னிடமிருந்து பறித்துக்கொள்ளமாட்டேன் உன் குமாரன் ராஜாவாகும்வரை உனக்காகக் காத்திருப்பேன். பிறகு இதனை அவனிடமிருந்து எடுத்துக்கொள்வேன். 13 இதுவரை, நான் உனது மகனிடமிருந்து ராஜ்யத்தை விலக்கியதில்லை. அவன் ஆள்வதற்கு நான் அவனுக்கு ஒரு கோத்திரத்தை விட்டுவிடுகிறேன். இதனை நான் தாவீதிற்காகச் செய்கிறேன். அவன் ஒரு நல்ல ஊழியன். அதோடு எருசலேமுக்காகவும் இதனைச் செய்கிறேன். இது என்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரம்!” என்றார்.
சாலொமோனின் பகைவர்கள்
14 அதே காலத்தில், ஏதோமியனாகிய ஆதாத்தை சாலொமோனின் பகைவனாக கர்த்தர் உருவாக்கினார். அவன் ஏதோம் ராஜாவின் குடும்பத்தைச் சார்ந்தவன். 15 இப்பகைமை இவ்வாறுதான் வளர்ந்தது. முன்பு தாவீது ஏதோமைத் தோற்கடித்தான். தாவீதின் படையில் யோவாப் தளபதியாக இருந்தான். அவன் மரித்தவர்களைப் புதைப்பதற்காக ஏதோமுக்குச் சென்றான். யோவாப் அப்போது அங்கே உயிரோடு இருந்தவர்களையும் கொன்றுபோட்டான். 16 யோவாபும் மற்ற இஸ்ரவேலர்களும் ஏதோமில் 6 மாதங்கள் இருந்தனர். அப்போது அங்கிருந்த அனைத்து ஆண்களையும் கொன்றுவந்தனர். 17 ஆனால் அப்போது ஆதாத் சிறுவனாக இருந்தான். அவன் எகிப்துக்கு ஓடிப் போனான். அவனுடைய தந்தையின் வேலைக்காரர்களும் அவனோடு போனார்கள். 18 அவர்கள் மீதியானை விட்டு பாரானுக்குச் சென்றனர். பாரானில் மேலும் சிலர் சேர்ந்துகொண்டார்கள். பின் அனைவரும் எகிப்துக்குப் போய் பார்வோன் மன்னனிடம் உதவி கேட்டனர். மன்னன் அவனுக்கு ஒரு வீடும், கொஞ்ச நிலமும் கொடுத்தான். இன்னும் பல உதவிகளையும் உணவும் கொடுத்து வந்தான்.
19 பார்வோன் ஆதாத்தை மிகவும் விரும்பி, திருமணமும் செய்துவைத்தான். அவள் பார்வோனின் மனைவியின் தங்கைஆவாள். அவன் மனைவியோ தாப்பெனேஸ் என்னும் அரசகுமாரி. 20 ஆதாத்துக்கு கேனுபாத் என்னும் குமாரன் பிறந்தான். தாப்பெனேஸ் அவனைத் தன் குழந்தைகளோடு அரண்மனையில் வளரவிட்டாள்.
21 தாவீது, மரித்துப்போனதை ஆதாத் எகிப்தில் அறிந்தான். யோவாப் தளபதியும், மரித்துப்போனதை அறிந்துக்கொண்டான். எனவே அவன் பார்வோனிடம், “நான் என் சொந்த நாட்டுக்குப் போக அனுமதியுங்கள்” என்றான்.
22 ஆனால் பார்வேன், “உனக்குத் தேவையான அனைத்தையும் இங்கே உனக்குத் கொடுத்திருக்கிறேன்! அவ்வாறிருக்க ஏன் உன் நாட்டிற்குப் போக விரும்புகிறாய்?” என்று கேட்டான்.
ஆனால் ஆதாத்தோ, “தயவுசெய்து, என்னைப் போக அனுமதியுங்கள்” என்றான்.
23 சாலொமோனுக்கு எதிராக இன்னொரு பகைவனை உருவாக்கவும் தேவன் தாமே காரணமானார்.
அவன் பெயர் ரேசோன், இவன் எலியாதாவின் குமாரன். இவன் தன் எஜமானனிடமிருந்து ஓடிப் போனான். இவனது எஜமானன் சோபாவின் ராஜாவாகிய, ஆதாதேசர். 24 தாவீது சோபாவைத் தோற்கடித்த பிறகு, ரேசோன் சில வீரர்களைச் சேர்ந்து அவர்களுக்கு தலைவன் ஆனான். அவன் தமஸ்குவுக்கு போய் அங்கே தங்கி இருந்தான். பின் அதன் ராஜா ஆனான். 25 அதோடு ஆராமையும் ஆண்டான். அவன் இஸ்ரவேலர்களை வெறுத்து, தொடர்ந்து அவர்களுக்குப் பகைவனாக சாலொமோன் காலம்வரை இருந்தான். ஆதாத்தும் ரேசானும் இஸ்ரவேலுக்கு தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தனர்.
26 நேபாத்தின் குமாரனான யெரோபெயாம் சாலொமோனின் ஊழியக்காரன். இவன் எப்பிராயீம் கோத்திரத்தைச் சேர்ந்தவன். இவன் சேரேதா ஊரினன். இவன் தாயின் பெயர் செரூகாள். இவனது தந்தை மரித்துப்போனான். இவனும் சாலொமோனுக்கு எதிராக எழும்பினான்.
27 யெரோபெயாம் சாலொமோனுக்கு எதிராக எழும்பிய கதை இதுதான். சாலொமோன் தாவீது நகரத்தில் மில்லோவும் சுவரும் கட்டினான். 28 யெரோபெயாம் உறுதிமிக்கவன். இவன் நல்ல வேலைக்காரன் என்பதைச் சாலொமோன் அறிந்துக்கொண்டான். யோசேப்பின் கோத்திரத்திலிருந்த வேலைக்காரர்கள் அனைவருக்கும் இவனைத் தலைவனாக்கினான். 29 ஒருநாள் யெரோபெயாம் எருசலேமிற்கு வெளியே பயணம் போனான். சாலையில் அகியா எனும் சீலோனியனான தீர்க்கதரிசியை சந்தித்தான். அகியா புதிய அங்கியை அணிந்திருந்தான். இருவரும் தனியாக இருந்தார்கள்.
30 அகியா தனது புதிய அங்கியை எடுத்து 12 துண்டுகளாகக் கிழித்தான். 31 பின் அவன் யெரோபெயாமை நோக்கி, “உனக்காக இதில் 10 துண்டுகளை எடுத்துக்கொள். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர், ‘நான் சாலொமோனிடமிருந்து அரசை விலக்குவேன்’ என்று கூறியிருக்கிறார். ‘நான் உனக்குப் பத்து கோத்திரங்களைத் தருவேன். 32 தாவீதின் குடும்பம் ஒரே ஒரு கோத்திரத்தைமட்டும் ஆளும்படி செய்வேன். நான் இதனை தாவீதிற்காகவும் எருசலேமிற்காகவும் செய்கிறேன். நான் எருசலேமை அனைத்து இஸ்ரவேல் கோத்திரங்களிலிருந்து தேர்ந்தெடுத்தேன், 33 சாலொமோன் என்னைப் பின்பற்றுவதை விட்டுவிட்டதால் அவனிடமிருந்து ராஜ்ஜியத்தை எடுக்கப்போகிறேன். அவன் சீதோனின் பொய் தெய்வமான அஸ்தரோத்தையும், மோவாபியரின் பொய்த் தெய்வமான காமோசையும், அம்மோன் ஜனங்களின் பொய்த் தெய்வமான மில்கோமையும் தொழுதுகொண்டு வருகிறான். அவன் தன் தந்தை தாவீதைப்போன்று வாழவில்லை. அவன் எனது சட்டங்களுக்கும் கட்டளைகளுக்கும் கீழ்படியவில்லை. அவன் நல்ல வழிகளில் இருந்து விலகிவிட்டான். 34 எனவே நான் சாலொமோனின் குடும்பத்திலிருந்து அரசை விலக்குவேன். ஆனால் நான் சாலொமோனை அவனது கடைசி காலம் மட்டும் ராஜாவாக இருக்க அனுமதிப்பேன். நான் இதனை தாவீதிற்காகச் செய்கிறேன். தாவீது என் எல்லா கட்டளைகளுக்கும் சட்டங்களுக்கும் கீழ்ப்படிந்ததால் அவனைத் தேர்ந்தெடுத்தேன். 35 ஆனால் நான் சாலொமோனின் மகனிடமிருந்து அரசை விலக்குவேன். நான் உன்னை, பத்து கோத்திரங்களை ஆட்சி செய்ய வைப்பேன். நீ இஸ்ரவேல் முழுவதையும் ஆள்வாய். 36 நான் சாலொமோனின் குமாரனை ஒரு கோத்திரத்தை மட்டும் ஆளவிடுவேன். இதன் மூலம் தாவீதின் சந்ததியார் தொடர்ந்து எருசலேமில் ஆள்வதாக இருக்கும். நான் எருசலேமை எனக்காகத் தேர்ந்தெடுத்தேன். 37 ஆனால் உன்னை, உனக்கு விருப்பமான அனைத்தையும் ஆளும்படி வைப்பேன். இஸ்ரவேல் முழுவதையும் நீ ஆளுவாய். 38 நீ என்னைப் பின்பற்றி என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால் உன்னை இவ்வாறு ஆக்குவேன். நீ தாவீதைப்போன்று சட்டங்களையும், கட்டளைகளையும் மீறாமல் நடந்துக்கொண்டால், நான் உன்னோடு இருப்பேன். நான் உனது குடும்பத்தையும் தாவீதின் குடும்பத்தைப்போன்று அரச குடும்பமாகச் செய்வேன். நான் உனக்கு இஸ்ரவேலைத் தருவேன். 39 நான் சாலொமோனின் தவறுகளுக்காக தாவீதின் ஜனங்களைத் தண்டிக்கப்போகிறேன். ஆனால் அவர்களை என்றென்றைக்கும் தண்டிக்கமாட்டேன்’” என்றான்.
சாலொமோனின் மரணம்
40 சாலொமோன் யெரொபெயாமைக் கொல்ல முயன்றான். ஆனால் அவன் எகிப்துக்கு ஓடிப் போனான். அவன் சீஷாக் ராஜாவை சந்தித்தான். அவன் சாலொமோன் மரிக்கும்வரை அங்கேயே இருந்தான்.
41 சாலொமோன் தனது ஆட்சிக்காலத்தில் மிக உயர்ந்த அறிவுள்ள செயல்களைச் செய்தான். அவை அனைத்தும் சாலொமோனின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. 42 இவன் எருசலேமிலிருந்துகொண்டு இஸ்ரவேல் முழுவதையும் 40 ஆண்டுகாலம் ஆட்சி செய்தான். 43 பின் சாலொமோன் மரித்ததும், தமது முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். அவன் அடக்கம் செய்யப்பட்ட இடம் தாவீதின் நகரமாகும். பிறகு சாலொமோனின் குமாரன் ரெகொபெயாம் ராஜாவானான்.
ஜனங்களின் போராட்டம்
12 1-2 சாலொமோனிடமிருந்து ஓடிப் போன நேபாத்தின் குமாரனான யெரோபெயாம் எகிப்திலேயே இருந்தான். சாலொமோன் மரித்ததை அறிந்ததும் (சேரதாவுக்குத்) திரும்பினான். இது எப்பிராயிம் மலைப்பகுதியில் இருந்தது.
சாலொமோன் ராஜா மரித்து தனது முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். அதன் பிறகு அவனது குமாரனான ரெகொபெயாம் ராஜா ஆனான். 3 இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் சீகேமுக்குப் போனார்கள். அவர்கள், ரெகொபெயாமை ராஜாவாக்க விரும்பினார்கள். ரெகொபெயாமும் சீகேமுக்குச் சென்றான். 4 ஜனங்கள் அவனிடம், “உங்கள் தந்தை நாங்கள் கடுமையாக உழைக்கும்படி கட்டாயப்படுத்தினார். இப்போது, அவற்றை எளிதாக்க வேண்டும். உங்கள் தந்தையைப் போல் கடுமையான வேலைகளைக் கொடுக்கவேண்டாம். அவ்வாறானால் நாங்கள் உங்களுக்கு சேவை செய்வோம்” என்றனர்.
5 அதற்கு ரெகொபேயாம், “மூன்று நாட்களில் திரும்பி வாருங்கள், நான் உங்களுக்குப் பதில் சொல்வேன்” என்றான். பிறகு ஜனங்கள் திரும்பிச் சென்றார்கள்.
6 சாலொமோன் உயிரோடு இருந்தபோது அவனுக்கு யோசனை சொல்வதற்காகச் சில முதியவர்கள் இருந்தனர். அவர்களிடம் ரெகொபெயாம் என்ன செய்வது என்று கேட்டான். ரெகொபெயாம், “இந்த ஜனங்களுக்கு நான் என்னபதில் சொல்ல வேண்டும்?” என்று கலந்து ஆலோசித்தான்.
7 அதற்கு மூப்பர்கள், “இன்று நீ அவர்களுக்குச் சேவகனானால், பிறகு அவர்களும் உண்மையான சேவகர்களாக உனக்கு இருப்பார்கள். அவர்களுடன் இரக்கத்தோடு பேசினால், பின் அவர்கள் உனக்காக எப்பொழுதும் வேலை செய்வார்கள்” என்றனர்.
8 ஆனால் அந்தப் புத்திமதியை அவன் கேட்கவில்லை. அவன் தன் இளைய நண்பர்களைக் கேட்டான். 9 அவன் அவர்களிடம், “ஜனங்கள் என்னிடம் வந்து, ‘உங்கள் தந்தையைப்போன்று கடினமான வேலையைக் கொடுக்கவேண்டாம். எளிதான வேலையைக் கொடுங்கள்’ என்கின்றனர். நான் என்ன பதில் சொல்லவேண்டும் என நினைக்கிறீர்கள்? நான் என்ன சொல்லவேண்டும்?” என்ற கலந்து ஆலோசித்தான்.
10 ராஜாவிடம் இளைய நண்பர்களோ, “சிலர் உன்னிடம் வந்து, ‘உங்கள் தந்தை கடினமான வேலையைக் கொடுத்தார். நீங்கள் எளிதான வேலையைக் கொடுங்கள்’ என்கின்றனர். நீ அவர்களிடம், ‘என் சிறிய விரல் தந்தையின் முழு சரீரத்தைவிட பல மிக்கது என்று சொல்லவேண்டும். 11 என் தந்தை கடினமான வேலையைச் செய்யும்படி கட்டாயப்படுத்தினார். நான் அதைவிட கடினமான வேலையைத் தருவேன்! அவர் சாட்டை மூலம் கட்டாயப்படுத்தினார். ஆனால் நான் அடித்து கட்டாயப்படுத்துவேன். எனது அடிகள் தேளின் கொடுக்கைப் போலிருக்கும்’ என்றுசொல்!” என்றனர்.
12 ரெகொபெயாம் மூன்று நாட்களில் திரும்பி வரும்படி ஜனங்களிடம் கூறியிருந்தான். எனவே மூன்று நாட்களுக்குப் பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் ரெகொபெயாமிடம் வந்தனர். 13 அப்போது அவர்களிடம், ராஜா கடுமையாகப் பேசினான். அவன் மூப்பர்களின் ஆலோசனையைக் கேட்டுக் கொள்ளவில்லை. 14 அவன் தன் இளைய நண்பர்கள் சொல்லச் சொன்னதையே சொன்னான். அவன் அவர்களிடம், “என் தந்தை கடின வேலை செய்யும்படி கட்டாயப்படுத்தினார். நான் அதைவிடவும் கடின வேலைகளைத் தருவேன். என் தந்தை உங்களைச் சவுக்கால் அடித்தார். நானோ தேள் கடியைப்போல வேதனையடையுமாறு அடிப்பேன்!” என்றான். 15 எனவே ஜனங்கள் விரும்பியது போன்று ராஜா செய்யவில்லை. கர்த்தர்தாமே இவ்வாறு நிகழும்படி செய்தார். நேபாத்தின் குமாரனான யெரொபெயாமுக்குச் செய்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக கர்த்தர் இவ்வாறு செய்தார். கர்த்தர் அகியாவின் மூலமாக இந்த வாக்குறுதியைச் செய்தார். அகியா சீலோ நாட்டைச் சேர்ந்தவர்.
16 இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் புதிய ராஜா தங்கள் வேண்டுகோளைக் கேட்டுக் கொள்ளவில்லை என்று எண்ணினார்கள். எனவே அவர்கள் ராஜாவிடம்,
“நாங்கள் தாவீதின் குடும்பத்தினர்கள்தானா?
இல்லை. ஈசாயின் நிலத்தில் எங்களுக்குப் பங்கிருக்கிறதா?
இல்லை! எனவே இஸ்ரவேல் ஜனங்கள் தம்தம் சொந்த நிலத்திற்கு திரும்பிப் போகட்டும்.
தாவீதின் குமாரன் தமது ஜனங்களை மட்டும் ஆளட்டும்!”
என்று கூறினர். எனவே அவர்கள் தங்கள் வீட்டிற்குப் போனார்கள். 17 ஆனால் ரெகொ பெயாம் யூதா நகரங்களில் வாழும் இஸ்ரவேலர்கள் முழுவதையும் ஆண்டு வந்தான்.
18 அதோனிராம் என்பவன் வேலைக்காரர்களின் பொறுப்பாளனாக இருந்தான். ராஜா அவனை ஜனங்களிடம் பேசிப்பார்க்குமாறு அனுப்பினான். ஆனால் ஜனங்கள் அவனைக் கல்லெறிந்து கொன்றனர். பின் ராஜா தனது இரதத்தில் ஏறி எருசலேமிற்குத் தப்பித்து ஓடினான். 19 இவ்வாறு இஸ்ரவேல் ஜனங்கள் தாவீதின் குடும்பத்திற்கு எதிராகப் போரிட்டனர். அவர்கள் இன்றும் தாவீதின் குடும்பத்திற்கு எதிராக உள்ளனர்.
20 யெரொபெயாம் திரும்பி வருவதை இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் அறிந்தனர். எனவே ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து அவனை இஸ்ரவேல் முழுமைக்கும் ராஜாவாக்கினார்கள். யூதாவின் கோத்திரத்தினர் மட்டும் தாவீதின் குடும்பத்தைப் பின்பற்றுகிறவர்களாக இருந்தனர்.
21 ரெகொபெயாம் எருசலேமுக்குப் போய் யூதா மற்றும் பென்யமீன் கோத்திரத்தாரை ஒன்று சேர்த்தான். இது 1,80,000 பேர் கொண்ட படையாயிற்று. ராஜா இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிராகச் சண்டை போட விரும்பினான். தனது ஆட்சி பீடத்தைத் திரும்பப்பெற விரும்பினான். 22 ஆனால் கர்த்தர் சேமாயா என்ற தீர்க்கதரிசியோடு பேசினார். கர்த்தர், 23 “நீ யூதாவின் ராஜாவாகிய, சாலொமோனின் குமாரன், ரெகொ பெயாமிடம் கூறு. அத்துடன் யூதா மற்றும் பென்யமீன் ஜனங்களிடமும் கூறு. 24 நீ அவர்களிடம், ‘உனது சகோதரர்களோடு சண்டை போடவேண்டாம் என்று கர்த்தர் சொல்கிறார். ஒவ்வொருவரும் வீட்டிற்குப் போங்கள், நான் இவ்வாறு நிகழும்படி செய்தேன்!’ என்று சொல்” என்றார். எனவே ராஜாவின் படையிலுள்ள அனைவரும் கர்த்தருடைய கட்டளைக்கு அடிப்பணிந்து வீட்டிற்குத் திரும்பினார்கள்.
25 சீகேம் என்பது எப்பிராயீம் நாட்டின் மலை நகரம். அதனை ராஜா யெரொபெயாமும் பலம் பொருந்தியதாக ஆக்கி அங்கே வாழ்ந்தான். பின்னர் பெனூவேலைப் பலமாக்கி அங்கே வாழ்ந்தான்.
26-27 யெரொபெயாம் தனக்குள்ளேயே, “ஜனங்கள் எருசலேமில் தொடர்ந்து கர்த்தருடைய ஆலயத்திற்கு காணிக்கைகளை அளிக்கச் செல்வார்களேயானால், பின் அவர்கள் தாவீதின் குடும்பத்தால் ஆளப்படவேண்டும் என விரும்புவார்கள். அவர்கள் ரெகொபெயாமைப் பின்பற்றி, அவனை மீண்டும் ராஜாவாக்குவார்கள். என்னைக் கொன்றுவிடுவார்கள்” என எண்ணினான். 28 எனவே அவன் தன்னைச் சார்ந்தவர்களோடு கலந்து யோசித்தான். அவன் இரண்டு தங்க கன்றுக்குட்டிகளைச் செய்தான். ஜனங்களிடம், “இனிமேல் நீங்கள் எருசலேம் போய் தொழுதுகொள்ள வேண்டாம். உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த தெய்வங்கள் இவைகள் தான்” என்றான். 29 பின்னர் பெத்தேலில் ஒரு கன்றுகுட்டியும், தாண் நகரில் ஒரு கன்றுக் குட்டியும் வைத்தான். 30 ஜனங்கள் பெத்லேலுக்கும் தாணுக்கும் போய் கன்றுக்குட்டிகளின் உருவங்களை வழிபட்டனர். இது பெரிய பாவமானது.
31 யெரொபெயாமும் உயர்ந்த மலையிடங்களில் ஆலயங்களைக் கட்டினான். அதற்கு ஆசாரியர்களாக இஸ்ரவேலின் வெவ்வேறு கோத்திரங்களிலிருந்து தேர்ந்தெடுத்தான். (அவன் லேவியர் கோத்திரத்திலிருந்து மட்டும் ஆசாரியர்களைத் தேர்ந்தெடுக்கவில்லை). 32 ராஜா புதிய விடுமுறைநாளையும் உருவாக்கினான். இது பஸ்கா பண்டிகையைப்போன்று யூதாவில் விழாவாயிற்று. ஆனால் இது எட்டாவது மாதத்தில் 15வது நாள், முதல் மாதத்தின் 15வது நாள் இல்லை. அந்த காலத்தில் பெத்தேலில் பலிபீடத்தில் பலவித பலிகளைச் செய்தான். அப்பலிகள் அவனால் செய்யப்பட்ட காளைகளுக்கு உரியதாயிற்று. அங்கே பெத்தேல் நகரிலேயே ராஜா ஆசாரியர்களை தேர்ந்தெடுத்து தொழுகைக்கு ஏற்பாடு செய்தான். 33 இவ்வாறு ராஜா, இஸ்ரவேலுக்கு உரிய விடுமுறைக்கு தன் சொந்த நாளை தேர்ந்தெடுத்துக் கொண்டான். இது எட்டாவது மாதத்தின் 15வது நாள். அப்போது அவன் பலிபீடத்தில் பலியிட்டு நறுமணப் பொருட்களை எரித்தான். இவை பெத்தேல் நகரில் நடந்தது.
பெத்தேலுக்கு எதிராக தேவன் பேசுதல்
13 கர்த்தர், யூதாவிலுள்ள தேவமனிதனைப் பெத்தேலுக்கு போகும்படி கட்டளையிட்டார். அவன் அங்கே போனபோது யெரொபெயாம் பலிபீடத்தின் முன்னால் நறுமண வாசனைப் பொருட்களைச் செலுத்திக்கொண்டிருந்தான். 2 பலிபீடத்திற்கு எதிராகப் பேசுமாறு கர்த்தர் அந்த தேவமனிதனுக்குக் கட்டளையிட்டார். அவனும்,
“பலிபீடமே, கர்த்தர் உன்னிடம் கூறுகிறார், ‘தாவீதின் குடும்பத்தில் யோசியா என்பவன் இருக்கிறான். இந்த ஆசாரியர்களெல்லாம் இப்போது பொய்த் தெய்வங்களை தொழுது வருகின்றனர். எனவே பலிபீடமே, யோசியா என்பவன் உன்மேல் தூபம் காட்டுகிற மேடையின் ஆசாரியர்களை உன்மேல் பலியிடுவான். அந்த ஆசாரியர்கள் நறுமணப் பொருட்களைப் போட்டு எரிக்கின்றனர். ஆனால் யோசியாவோ மனித எலும்புகளைப் போட்டு எரிப்பான். பிறகு மீண்டும் உன்னைப் பயன்படுத்த முடியாது!’” என்றான்.
3 இவையெல்லாம் நிகழும் என்பதற்கான சான்றையும் அந்த தேவமனிதன் காட்டினான். அவன், “இதுதான் கர்த்தர் என்னிடம் சொன்ன அத்தாட்சியாகும். கர்த்தர், ‘இந்த பலிபீடம் வெடித்து இதிலுள்ள சாம்பல் தரையிலேவிழும்’ என்று சொன்னார்” என்றான்.
4 ராஜாவாகிய யெரொபெயாம் பெத்தேலின் பலிபீடத்தைப்பற்றி தேவமனிதனிடமிருந்து செய்தியைக் கேட்டான். அவன் தன் கையைப் பலிபீடத்திலிருந்து நீட்டி, “அவனை பிடியுங்கள்!” என்றான். ஆனால் நீட்டிய அந்தக் கை, மடக்க முடியாத அளவிற்கு முடங்கிப்போனது. 5 பலிபீடமும், தூள் தூளாகச் சிதறி உடைந்துபோனது. அதன் சாம்பல் தரையில் சிந்தியது. தேவமனிதன் சொன்னது தேவனிடமிருந்து வந்தது என்பதற்கு இதுவே சாட்சியாயிற்று. 6 அப்போது ராஜா அந்தத் தேவமனிதனிடம், “எனக்காக உன் தேவனாகிய கர்த்தரிடம் ஜெபம் செய். எனது கையை குணமாக்கும்படி கர்த்தரைக் கேள்” என்றான்.
தேவமனிதனும் அவ்வாறே ஜெபிக்க அவனது கை முன்பு போலாயிற்று. 7 ராஜாவும் தேவமனிதனிடம், “என்னோடு என் வீட்டிற்கு வா. என்னோடு உணவருந்து. உனக்குப் பரிசளிப்பேன்” என்றான்.
8 ஆனால் தேவமனிதனோ ராஜாவிடம், “உனது ஆட்சியில் பாதியைக் கொடுத்தாலும், என்னால் உன்னோடு வரமுடியாது, இந்த இடத்தில் என்னால் எதையும் உண்ணவோ குடிக்கவோ கூடாது. 9 எதையும் உண்ணவோ அல்லது குடிக்கவோ கூடாது என எனக்கு கர்த்தர் கட்டளையிட்டார். நான் இங்கு வந்த பாதைவழியே பயணம் செய்யக்கூடாது என்றும் கர்த்தர் கட்டளையிட்டிருக்கிறார்” என்றான். 10 எனவே அவன் வேறு பாதை வழியாகத் தன் பயணத்தைத் தொடர்ந்தான்.
11 பெத்தேலில் ஒரு முதிய தீர்க்கதரிசி இருந்தான். அவனது குமாரர்கள் அவனிடம் வந்து தேவமனிதன் பெத்தேலில் செய்ததைச் சொன்னார்கள், ராஜாவிடம் சொன்னதையும் சொன்னார்கள். 12 அதற்கு அந்த முதிய தீர்க்கதரிசி, “அவன் எந்தச் சாலை வழியாகத் திரும்பிப் போனான்?” என்று கேட்டான். அவர்களும் அந்தச் சாலையைச் சுட்டிக்காட்டினார்கள். 13 அவன் தனது கோவேறு கழுதைக்குச் சேணத்தை கட்டுமாறு வேண்டினான். அவனது பிள்ளைகளும் அவ்வாறே செய்தனர். அவனும் அக்கழுதையின் மீது ஏறிப்போனான்.
14 முதிய தீர்க்கதரிசி அந்தத் தேவமனிதனைப் பின் தொடர்ந்து போனான். தேவமனிதன் கர்வாலி மரத்தின் கீழ் இருப்பதை அவன் கண்டான், “யூதாவிலிருந்து வந்தத் தேவமனிதன் நீதானா?” என்று கேட்டான்.
அந்த தேவமனிதன், “ஆமாம், நான்தான்” என்றான்
15 முதிய தீர்க்கதரிசி “என்னோடு வீட்டிற்கு வந்து உணவருந்துங்கள்” என்று வேண்டினான்.
16 ஆனால் அந்தத் தேவமனிதன், “என்னால் உங்களோடு வீட்டிற்கு வரமுடியாது. இந்த இடத்தில் உங்களோடு உண்ணவோ குடிக்கவோ கூடாது. 17 கர்த்தர் எனக்கு, ‘இந்த இடத்தில் எதையும் உண்ணவோ குடிக்கவோ கூடாது. நீ சென்ற சாலையின் வழியே மீண்டும் செல்லக்கூடாது’ என்று கட்டளையிட்டுள்ளார்” என்றான்.
18 பிறகு முதிய தீர்க்கதரிசி, “நானும் உங்களைப் போன்று தீர்க்கதரிசிதான்” என்றான். மேலும் அவன் ஒரு பொய்ச் சொன்னான். அவன், “தேவதூதன் ஒருவன் கர்த்தரிடத்திலிருந்து வந்தான். அவன் உங்களை எனது வீட்டிற்கு அழைத்துப்போய் உண்ணவும் குடிக்கவும் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டான்” என்றான்.
19 எனவே தேவமனிதன் முதியவனோடு அவனது வீட்டிற்குப்போய் உண்டான். அவனோடு குடித்தான். 20 அவர்கள் மேஜையின் முன்னால் உட்கார்ந்திருக்கும்போது, கர்த்தர் முதிய தீர்க்கதரிசியிடம் பேசினார். 21 முதியவனும், அந்த தேவமனிதனிடம், “கர்த்தர் உனக்கிட்ட கட்டளையை மீறினாய்! அவருக்குக் கீழ்ப்படியவில்லை. 22 இந்த இடத்தில் எதையும் உண்ணவோ அல்லது குடிக்கவோ கூடாது என்று கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டார். ஆனால் நீ திரும்பி வந்து உண்டு குடித்தாய். எனவே உனது பிணம் உன் குடும்பக் கல்லறையில் அடக்கம் செய்யப்படாமல் போகும்” என்றான்.
23 தேவமனிதன் உணவருந்தி முடித்தான். முதிய தீர்க்கதரிசி பிறகு கழுதையில் அவனுக்காக சேணத்தை கட்டி அவன் போனான். 24 அவன் பாதையில் பயணம் செய்யும்போது, ஒரு சிங்கம் வந்து அவனைக் கொன்றுபோட்டது. அவனது உடல் பாதையில் கிடக்க அருகில் சிங்கமும் கழுதையும் நின்றுகொண்டிருந்தன. 25 சிலர் அவ்வழியாக வந்தனர். அவர்கள் பிணத்தையும் சிங்கத்தையும் கண்டு முதிய தீர்க்கதரிசியிடம் வந்து தாங்கள் கண்டதைக் கூறினார்கள்.
26 அவன்தான் தந்திரம் செய்து தீர்க்கதரிசியைத் திருப்பி அழைத்தவன். அவன் அனைத்தையும் கேட்டபின், “அந்தத் தேவமனிதன் கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை. எனவே சிங்கத்தை அனுப்பி கொன்றுவிட்டார். இவ்வாறு செய்வேன் என்று கர்த்தர் ஏற்கெனவே கூறியிருக்கிறார்” என்றான். 27 பிறகு அவன் தன் குமாரர்களிடம், “என் கழுதைக்கு சேணத்தைக் கட்டுங்கள்” என்றான். அவனது குமாரர்களும் அவ்வாறே செய்தனர். 28 அவன் சாலைக்குப் போய் தீர்க்கதரிசியின் பிணத்தைப் பார்த்தான். கழுதையும் சிங்கமும் அப்பொழுதும் அங்கே நின்றுகொண்டிருந்தன. சிங்கம் அந்த உடலைத் தின்னவில்லை. கழுதையையும் எதுவும் செய்யவில்லை.
29 முதிய தீர்க்கதரிசி அந்த பிணத்தை எடுத்து தனது கழுதையின் மீது வைத்தான். அதனை நகரத்திற்குக் கொண்டுவந்து அவனுக்காக அழுதான். 30 அவனைத் தனது குடும்பக் கல்லறையிலேயே அடக்கம் செய்தான். பின் அவனுக்காக அழுது, “என் சகோதரரே, உங்களுக்காக நான் வருந்துகிறேன்” என்று புலம்பினான். 31 எனவே அந்த முதிய தீர்க்கதரிசி சவ அடக்கத்தை முடித்த பின், தன் குமாரர்களிடம், “நான் மரித்த பின்னும், என்னை இதே கல்லறையில் அடக்கம் செய்யுங்கள். எனது எலும்புகளை இவனது எலும்புகளுக்கு அருகில் வையுங்கள். 32 இவன் மூலமாக கர்த்தர் சொன்னதெல்லாம் உறுதியாக நிறைவேறும். கர்த்தர் இவன் மூலமாக பெத்தேலின் பலிபீடத்திற்கு எதிராகவும் சமாரியாவின் நகரங்களிலுள்ள பொய்த் தெய்வங்களுக்கு எதிராகவும் பேசினார்” என்றான்.
33 யெரொபெயாம் ராஜா மாறவில்லை. தொடர்ந்து தீமைகளைச் செய்துவந்தான். ஆசாரியர்களாக வெவ்வேறு கோத்திரங்களிலிருந்து தேர்ந்தெடுத்தான். அவர்கள் பொய்த் தெய்வங்களுக்கு ஆராதனை செய்தனர். ஆசாரியராக யார் விரும்பினாலும் விரும்பியபடி அனுமதிக்கப்பட்டனர். 34 இச்செயல்களே பெரும்பாவமாகி அவனது ஆட்சி அழிய காரணமாயிற்று.
யெரொபெயாம் குமாரனின் மரணம்
14 அப்போது, யெரொபெயாமின் குமாரன் அபியா என்பவன் நோய்வாய்ப்பட்டான். 2 ராஜா தன் மனைவியிடம், “சீலோவிற்குப் போ. அகியா தீர்க்கதரிசியைப் பார். அவர்தான் நான் இஸ்ரவேலின் ராஜா ஆவேன் என்று கூறினார். ஜனங்கள் அடையாளம் காணமுடியாதவாறு ஆடை அணிந்துக்கொள். 3 தீர்க்கதரிசிக்கு 10 துண்டு அப்பங்களையும், பணியாரங்களையும், ஒரு ஜாடி தேனையும் கொடு. நம் குமாரனுக்கு என்ன ஏற்படும் என்றும் கேள். அகியா தீர்க்கதரிசி உனக்கு சரியாகச்சொல்லுவார்” என்றான்.
4 ராஜா சொன்னதுபோலவே அவனது மனைவியும் செய்தாள். அவள் தீர்க்கதரிசியான அகியாவின் வீட்டிற்குப் போனாள். அவன் முதுமையடைந்து பார்வையற்றுப் போய் இருந்தான். 5 ஆனால் கர்த்தர் அவனிடம், “யெரொபெயாமின் மனைவி தன் குமாரனைப்பற்றி உன்னிடம் கேட்கவருகிறாள். ஏனென்றால் அவன் நோய்வாய்ப்பட்டிருக்கிறான்” என்றார். அவன் என்ன சொல்லவேண்டும் என்பதையும் கர்த்தர் அவனுக்கு சொல்லியிருந்தார்.
ராஜாவின் மனைவி அகியாவின் வீட்டிற்கு வந்தாள். தன்னை யாரென்று ஜனங்கள் அறிந்துக்கொள்ளாதபடி நடந்துக்கொண்டாள். 6 அவள் கதவருகே வந்ததை அறிந்ததும் அவன், “யெரொபெயாமின் மனைவியே வருக, உன்னைப்பற்றி மற்றவர்கள் வேறுயாராகவோ நினைக்கும்படி ஏன் நீ நடந்துக்கொள்கிறாய்? உனக்கு ஒரு கெட்டச்செய்தியை வைத்திருக்கிறேன். 7 யெரொபெயாமிடம் போய் இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர் என்ன சொன்னார் என்பதைப் போய் சொல். கர்த்தர், ‘யெரொபெயாம், நான் உன்னை அனைத்து இஸ்ரவேலர்களிடமிருந்தும் தேர்ந்தெடுத்தேன். எனது ஜனங்களை ஆளும்படிச் செய்தேன். 8 தாவீதின் குடும்பம் இஸ்ரவேலை ஆண்டுக்கொண்டு இருந்தது. ஆனால் நான் அதனை அவர்களிடமிருந்து எடுத்து உன்னிடம் கொடுத்தேன். ஆனால் நீ எனது ஊழியனான தாவீதைப்போல் நடந்துக்கொள்ளவில்லை. அவன் எப்போதும் எனக்குக் கீழ்ப்படிந்தான். முழுமனதோடு அவன் என்னைப் பின் தொடர்ந்தான். எனக்கு ஏற்றதையே அவன் செய்துவந்தான். 9 ஆனால் நீ பெரும் பாவங்களை செய்துவிட்டாய். உனது பாவங்கள் உனக்கு முன்னால் ஆண்டவர்களின் (ஆட்சி செய்தவர்களின்) பாவங்களைவிட மிக மோசமானது. என்னைப் பின்பற்றுவதைவிட்டு, நீயே விக்கிரகங்களையும் அந்நிய தெய்வங்களையும் செய்தாய். இது எனக்கு கோபமூட்டியது. 10 எனவே உனது குடும்பத்திற்குத் துன்பங்களைத் தருவேன். உன் குடும்பத்திலுள்ள அனைத்து ஆண்களையும் கொல்வேன். நெருப்பு, சாணத்தை அழிப்பது போன்று நான் உன் குடும்பம் முழுவதையும் அழித்துப்போடுவேன். 11 இந்நகரில் மரித்துப்போகும் உன் குடும்பத்தானின் பிணத்தை நாய்கள் உண்ணும். வயலில் மரிப்பவர்களை பறவைகள் உண்ணும். இவற்றைக் கர்த்தர் சொன்னார்’” என்றான்.
12 பின் அகியா தீர்க்கதரிசி மேலும் யெரொபெயாமின் மனைவிடம் பேசினான், “இப்போது வீட்டிற்குப் போ. நீ எப்பொழுது நகரத்திற்குள் நுழைகிறாயோ அப்போது உன் குமாரன் மரிப்பான். 13 இஸ்ரவேலர்கள் அனைவரும் அவனுக்காக அழுது அடக்கம் செய்வார்கள். உன் குடும்பத்தில் அவன் மட்டுமே அடக்கம் செய்யப்படுவான். இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தருக்கு அவன் ஒருவன் மட்டுமே யெரொபெயாமின் குடும்பத்தில் பிடித்தமானவன் என்பதுதான் காரணம். 14 இஸ்ரவேலருக்குப் புதிய ராஜாவை கர்த்தர் ஏற்படுத்துவார். அவன் யெரொபெயாமின் குடும்பத்தை அழிப்பான். இது விரைவில் நடைபெறும். 15 பிறகு கர்த்தர் இஸ்ரவேலர்களைத் தாக்குவார். அவர்கள் ஆற்றங்கரையிலுள்ள நாணலைப்போன்று அசைவார்கள். அவர்களை இந்த நல்ல நாட்டினின்றும் கர்த்தர் துரத்துவார். இந்த நாடு கர்த்தரால் அவர்களின் முற்பிதாக்களுக்கு கொடுக்கப்பட்டது. அவர் அவர்களை ஐபிராத்து ஆற்றுக்கு அப்பால் சிதறடிப்பார். இஸ்ரவேல் ஜனங்கள் மீது கர்த்தர் கோபத்தோடு இருப்பதால் இவ்வாறு செய்வார். காரணம் அவர்கள் பொய்த் தெய்வங்களுக்கு கம்பங்கள் அமைத்து தொழுதுகொண்டனர். 16 ரொபெயாம் தானும் பாவம் செய்து இஸ்ரவேல் ஜனங்களையும் பாவத்துக்குட்படுத்தினான். எனவே கர்த்தர் அவர்களைத் தோற்கடிப்பார்” என்றான்.
17 ராஜாவின் மனைவி திர்சாவிலுள்ள தன் வீட்டிற்குத் திரும்பினாள். அவள் வீட்டிற்குள் நுழைந்ததும், அவளது குமாரன் மரித்தான். 18 இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் அவனுக்காக அழுது அவனை அடக்கம் செய்தனர். இது கர்த்தர் சொன்னது போலவே நடந்தது, கர்த்தர் தன் ஊழியனான, தீர்க்கதரிசி அகாயாவின் மூலம் இதைச் சொன்னார்.
19 ராஜா வேறுபல செயல்களைச் செய்தான். பல போர்களைச் செய்து தொடர்ந்து ஜனங்களை ஆண்டான். இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் அவன் செய்தது எல்லாம் எழுதப்பட்டிருக்கிறது 20 அவன் 22 ஆண்டுகள் அரசாண்டான். அவன் மரித்ததும் அவனது முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். அவனக்குப் பின் அவனது குமாரன் நாதாப் ராஜா ஆனான்.
யூதாவின் ராஜா ரெகொபெயாம்
21 சாலொமோனின் குமாரனான ரெகொபெயாம் யூதாவின் ராஜாவாகிய போது, அவனுக்கு 41 வயது. அவன் எருசலேமில் 17 ஆண்டுகள் அரசாண்டான். கர்த்தரை பெருமைப்படுத்துவதற்காக தேர்ந்தெடுத்த நகரம் இதுதான். அவர், இந்த நகரத்தை பிற அனைத்து இஸ்ரவேல் நகரங்களில் இருந்து தேர்ந்தெடுக்கிறார். அவனது தாயான நாமாள் அம்மோனியளாக இருந்தாள்.
22 யூதாவிலுள்ள ஜனங்களும் பாவம் செய்தனர். அவர்களின் பாவம் அவர்களின் முற்பிதாக்களின் பாவத்தைவிட மிகுதியாயிற்று. இதனால் கர்த்தருக்கு அவர்கள் மீது கோபமும் மிகுதியானது. 23 அவர்கள் பொய்த் தெய்வங்களுக்கு உருவங்களும், நினைவு சின்னங்களும், தூண்களும் கட்டினார்கள். அவர்கள் இவற்றை ஒவ்வொரு மலை மீதும் ஒவ்வொரு பசுமையான மரத்தடியிலும் அமைத்தனர். 24 பாலின உறவுக்காக தங்கள் உடலைவிற்று அந்நியதெய்வங்களுக்கு பணி செய்த ஆண்கள் இருந்தார்கள். இதனால் யூதா நாட்டினர் பல தவறுகளைச் செய்தனர். இந்நாட்டில் இதற்கு முன்னால் இருந்தவர்களும் இது போல் தீயசெயல்களைச் செய்ததால் அவர்களின் நாட்டை தேவன் இஸ்ரவேலர்களிடம் கொடுத்துவிட்டார்.
25 ரெகொபெயாம் ராஜாவாகிய ஐந்தாம் ஆண்டில், எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் எருசலேம் மீது படையெடுத்தான். 26 அவன் கர்த்தருடைய ஆலயத்திலிருந்த பொக்கிஷங்களையும் அரண்மனையிலுள்ள செல்வங்களையும் சூறையிட்டான். ஆராம் நாட்டு ராஜாவிடம் தாவீது அபகரித்து வந்த தங்கக் கேடயங்களையும் எடுத்துக்கொண்டான். 27 அதனால் ராஜா அவற்றுக்குப் பதிலாக வெண்கல கேடயங்களைச் செய்து அவற்றை வாயில் காப்போர்களின் தலைவரின் பொறுப்பில் வைத்தான். 28 ஒவ்வொரு தடவையும் ராஜா வரும்போது, இவர்கள் கேடயங்களை கர்த்தருடைய ஆலயத்திற்குள் எடுத்து வருவார்கள். பின் பழையபடி பாதுகாப்பாக வைத்துக்கொள்வார்கள்.
29 ரெகொபெயாம் ராஜா செய்தவற்றையெல்லாம் யூத ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. 30 ரெகொபெயாமும் யெரொபெயாமும் அடிக்கடி தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டனர்.
31 ரெகொபெயாம் மரித்து தமது முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். அவன் தாவீது நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான். (அவனது தாயின் பெயர் நாமாள், அவள் அம்மோனியள்.) அவனது குமாரனான அபியா அடுத்து ராஜாவானான்.
யூதாவின் ராஜாவாகிய அபியா
15 நேபாத் என்பவனின் குமாரனான யெரொபெயாம் என்பவன் இஸ்ரவேலின் ராஜாவாக ஆண்டான். அவனது 18வது ஆட்சியாண்டில், அவனது குமாரன் அபியா யூதாவின் ராஜா ஆனான். 2 அபியா எருசலேமிலிருந்து மூன்று ஆண்டுகள் அரசாண்டான். அவனது தாய் அப்சலோமின் குமாரத்தியான மாகாள்.
3 அவன் தன் தந்தையைப்போலவே அனைத்து பாவங்களையும் செய்தான். அபியா தன் தாத்தாவாகிய தாவீதைப்போன்று தேவனாகிய கர்த்தருக்கு உண்மையானவனாக இல்லை. 4 கர்த்தர் தாவீதை நேசித்தார். அதனால், கர்த்தர் அபியாவிற்கு எருசலேமின் ஆட்சியைக் கொடுத்தார். அவனுக்கு ஒரு குமாரனையும் எருசலேமிற்குப் பாதுகாப்பையும் தாவீதிற்காக கர்த்தர் கொடுத்தார். 5 கர்த்தருக்குப் பிடித்த சரியான காரியங்களை மட்டுமே எப்பொழுதும் தாவீது செய்துவந்தான். அவன் எப்பொழுதும் கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்தான். அவன் ஒரே ஒருமுறைமட்டும் கர்த்தருக்கு கீழ்ப்படியவில்லை. அது ஏத்தியனான உரியாவிற்கு செய்ததாகும்.
6 ரெகொபெயாமும் யெரொபெயாமும் எப்பொழுதும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். 7 அபியா செய்த பிற செயல்களெல்லாம் யூதாவின் ராஜாக்கள் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
அபியா ராஜாவாக இருந்த காலம்வரை அவன் யெரொபெயாமோடு சண்டையிட்டுக் கொண்டிருந்தான். 8 அவன் மரித்ததும் தனது முற்பிதாக்களோடு தாவீது நகரதத்தில் அடக்கம்பண்ணப்பட்டான். அபியாவிற்குப் பின் அவனது குமாரனான ஆசா ராஜாவானான்.
யூதாவின் ராஜாவாகிய ஆசா
9 யெரொபெயாமின் 20வது ஆட்சி ஆண்டின் போது, ஆசா யூதாவின் ராஜாவானான். 10 ஆசா 41 ஆண்டுகள் யூதாவை எருசலேமிலிருந்து ஆண்டு வந்தான். அவனது பாட்டியின் பெயர் மாகாள். இவள் அப்சலோமின் குமாரத்தி.
11 ஆசா அவனது முற்பிதாவான தாவீதைப் போன்றே கர்த்தருக்குச் சரியான செயல்களை மட்டுமே செய்துவந்தான். 12 அப்போது ஆண்கள் பாலின உறவுக்காக தம் உடலைவிற்று அந்நியதெய்வங்களுக்குச் சேவைசெய்து வந்தனர். இத்தகையவர்களை ஆசா நாட்டை விட்டுத் துரத்தினான். அவன் முற்பிதாக்களால் செய்யப்பட்ட பொய்த் தெய்வங்களின் விக்கிரகங்களையும் எடுத்தெறிந்தான். 13 அவன் தனது பாட்டியான மாகாவையும், இராணி என்ற பதவியிலிருந்து விலக்கினான். ஏனென்றால் அவள் அஷரா பொய்த் தெய்வத்தின் உருவத்தை செய்தாள். ஆசா இந்தப் பயங்கரமான உருவத்தை உடைத்துப்போட்டான். கீதரோன் பள்ளத்தாக்கில் அதனை எரித்துவிட்டான். 14 அவன் பொய்த் தெய்வங்களை தொழுவதற்கான மேடைப் பகுதிகளை அழிக்கவில்லை. ஆனால், தன் வாழ்நாள் முழுவதும் கர்த்தருக்கு நம்பிக்கையாளனாக இருந்தான். 15 ஆசாவும் அவனது தந்தையும் தேவனுக்கு பொன், வெள்ளி போன்ற பொருட்களை அன்பளிப்பாக ஆலயத்தில் கொடுத்திருந்தனர்.
16 அப்போது, இஸ்ரவேலின் ராஜாவாக இருந்த பாஷாவோடு, ஆசா அடிக்கடி சண்டையிட்டான். 17 பாஷா யூதாவிற்கு எதிராக, இஸ்ரவேல் ஜனங்களை அங்கே போகவோ வரவோ அனுமதிக்காமல் சண்டையிட்டான். அவன் ராமா நகரத்தைப் பலம் பொருந்தியதாக ஆக்கினான். 18 எனவே ஆசா, கர்த்தருடைய ஆலயம் மற்றும் அரண்மனை பொக்கிஷங்களிலிருந்து பொன்னையும், வெள்ளியையும் எடுத்து வேலைக்காரர்களுக்குக் கொடுத்து பெனாதாத்திடம் அனுப்பினான். அவன் ஆராமின் ராஜா பெனாதாத் தப்ரிமோனின் குமாரன். தப்ரிமோன் எசியோனின் குமாரன். தமஸ்கு பெனாதாத்தின் தலைநகரம். 19 ஆசா அவனுக்கு, “என் தந்தையும் உங்கள் தந்தையும் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டனர். நான் இப்போது உங்களோடு ஒரு சமாதான ஒப்பந்தம் செய்துக்கொள்ள விரும்புகிறேன். இப்பொன்னையும் வெள்ளியையும் உமக்கு அன்பளிப்பாக அனுப்புகிறேன். நீங்கள் இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷாவிடம் கொண்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்யுங்கள். அப்போதுதான் அவன் எங்கள் நாட்டை விட்டு விலகுவான்” என்று தூது அனுப்பினான்.
20 ராஜாவாகிய பெனாதாத் ஒப்பந்தத்தின்படி ஆசாவோடு ஒரு படையை அனுப்பி இஸ்ரவேல் நகரங்களான ஈயோன், தாண், பெத்மாக்கா எனும் ஆபேல், கின்னரோத், நப்தலி ஆகியவற்றில் போர் செய்து வென்றான். 21 பாஷா இத்தாக்குதலை அறிந்தான். எனவே ராமாவைப் பலப்படுத்துவதைவிட்டு, திர்சாவை நோக்கிச்சென்றான். 22 பிறகு ஆசா தம் ஜனங்கள் அனைவருக்கும் ஒரு கட்டளையிட்டான். அதன்படி ஒவ்வொருவரும் உதவவேண்டும் என்றும் அவர்கள் ராமாவிற்குப் போய் கல்லையும் மரத்தையும் எடுத்து வரவேண்டும் என்றும் ஆணையிட்டான். அதனால் கேபாவில் உள்ள பென்யமீன் மற்றும் மிஸ்பா ஆகிய நகரங்களை பலமுள்ளதாகக் கட்டினான்.
23 ஆசாவைப் பற்றிய, அவன் செய்த மற்ற பெரும் செயல்களையெல்லாம் யூதா ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதில் நகரங்கள் கட்டப்பட்டதும் உள்ளன. அவன் முதுமையடைந்ததும் பாதத்தில் ஒரு நோய் வந்தது. 24 அவன் மரித்ததும் தனது முற்பிதாவான தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான். பின் இவனது குமாரனான யோசபாத் ராஜாவானான்.
இஸ்ரவேல் ராஜாவாகிய நாதாப்
25 ஆசாவின் இரண்டாம் ஆட்சி ஆண்டில் யெரொபெயாமின் குமாரனான நாதாப் இஸ்ரவேலின் ராஜாவானான். அவன் 2 ஆண்டுகள் ஆண்டான். 26 இவன் கர்த்தருக்கு எதிராகக் கெட்ட காரியங்களை தந்தையைப்போலவே செய்தான். ஜனங்களையும் பாவம் செய்யவைத்தான்.
27 அகியா என்பவனின் குமாரன் பாஷா ஆவான். இவன் இசக்கார் கோத்திரத்தில் உள்ளவன். இவன் நாதாப்பைக் கொல்லதிட்டமிட்டான். இது நாதாப்பும் இஸ்ரவேலர்களும் கிப்பெத்தோனுக்கு எதிராகச் சண்டையிடும்போது நிகழ்ந்தது. இது பெலிஸ்தியரின் நகரம். இங்கே பாஷா நாதாப்பைக் கொன்றான். 28 இது யூதாவின் ராஜாவாகிய ஆசா ஆண்ட மூன்றாவது ஆண்டில் நடந்தது. பின் பாஷா இஸ்ரவேலின் ராஜா ஆனான்.
பாஷா இஸ்ரவேலின் ராஜா
29 இவன் ராஜா ஆனதும், யெரொபெயாமின் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொன்றான். எவரையும் உயிரோடு விடவில்லை. கர்த்தர் சொன்னபடியே நடந்தது. இதனைக் கர்த்தர் சீலோவில் அகியா மூலம் சொன்னார். 30 இவ்வாறு நிகழ யெரொ பெயாம் செய்த பாவங்களும் ஜனங்களைப் பாவம் செய்ய வைத்ததும் காரணமாயிற்று, இவையே இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தருக்கு கோபத்தைத் தந்தது.
31 நாதாப் செய்த மற்ற செயல்கள் இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. 32 பாஷாவின் ஆட்சிகாலம் முழுவதும் யூதாவின் ராஜாவாகிய ஆசாவோடு போரிட்டான்.
33 ஆசாவின் மூன்றாவது ஆட்சி ஆண்டில்தான் இஸ்ரவேலின் ராஜாவாக அகியாவின் குமாரனான பாஷா ராஜா ஆனான். திர்சாவில் அவன் 24 ஆண்டுகள் ஆட்சிசெய்தான். 34 பாஷா கர்த்தருக்கு விரோதமான செயல்களைச் செய்தான். யெரொபெயாமைப்போல் தானும் பாவம்செய்து ஜனங்களையும் பாவம்செய்யத் தூண்டினான்.
16 பிறகு கர்த்தர் ஆனானியின் குமாரனான யெகூவோடு பாஷாவிற்கு எதிராக கீழ்க்கண்டவாறு பேசினார்: 2 “நான் உன்னை ஒரு முக்கியமான மனிதனாகச் செய்தேன். உன்னை இஸ்ரவேலின் ராஜாவாக்கினேன். ஆனால் நீ யெரொபெயாமின் வழியில் என் ஜனங்களை பாவத்துக்குள்ளாக்குகிறாய். இது எனக்குப் பெரும்கோபத்தை உண்டாக்கிற்று. 3 எனவே நான் பாஷாவையும் அவனது குடும்பத்தையும் அழிப்பேன். நான் நாபாத்தின் குமாரனான யெரொபெயாமின் குடும்பத்திற்குச் செய்ததுபோலவே செய்வேன். 4 இந்நகரத் தெருக்களில் நாய்கள் உண்ணும்படி உன் குடும்பத்தினர் சிலர் மரிப்பார்கள். இன்னும் சிலர் வயல்வெளிகளில் மரிப்பார்கள். அவர்கள் பிணங்களைப் பறவைகள் தின்னும்.”
5 பாஷாவைப்பற்றிய அவன் செய்த பெருஞ் செயல்களைப்பற்றி இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. 6 பாஷா மரித்ததும் திர்சா நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான். அவனது குமாரனான ஏலா அடுத்த ராஜாவானான்.
7 எனவே கர்த்தர், பாஷாவிற்கும் அவனது குடும்பத்திற்கும் எதிரான செய்திகளை ஆனானியின் குமாரனான யெகூ தீர்க்கதரிசி மூலம் சொன்னார். பாஷா கர்த்தருக்கு எதிராக மிகுந்தபாவம் செய்ததால் அவன் மீது கர்த்தருடைய கோபம் அதிகரித்தது. அவனுக்கு முன் யெரொபெயாம் குடும்பத்தினர் செய்தது போலவே பாஷா பாவங்களைச் செய்தான். பாஷா யெரொபெயாம் குடும்பத்தை அழித்ததாலும் கர்த்தருக்குக் கோபம் ஏற்பட்டது.
இஸ்ரவேலின் ராஜாவாகிய ஏலா
8 யூதாவின் ராஜாவாகிய ஆசா 26ஆம் ஆண்டில் இருக்கும்போது ஏலா இஸ்ரவேலின் ராஜாவானான். பாஷாவின் குமாரனான இவன் திர்சாவில் 2 ஆண்டுகள் ஆண்டான்.
9 சிம்ரி ஏலாவின் அதிகாரிகளுள் ஒருவன். இரதப் படையின் பாதிக்குத் தளபதி. இவன் ஏலாவிற்கு எதிராகக் திட்டமிட்டான். ராஜா திர்சாவில் அர்சாவின் வீட்டில் குடித்தும் குடிக்க வைத்துக்கொண்டும் இருந்தான். அர்சா அரண்மனை பொறுப்பாளி. 10 சிம்ரி அந்த வீட்டிற்குப்போய் ராஜாவைக் கொன்றுவிட்டான். இது யூதாவின் ராஜாவாக ஆசா 27ஆம் ஆண்டில் இருந்தபோது நடந்தது. பின்னர் சிம்ரி அடுத்து ராஜாவானான்.
இஸ்ரவேலின் ராஜாவாகிய சிம்ரி
11 சிம்ரி ராஜாவாகியதும், பாஷாவின் குடும்பத்திலுள்ள அனைவரையும் கொன்றான். எவரையும் உயிரோடு விடவில்லை. பாஷாவின் நண்பர்களையும் கொன்றான். 12 இது பாஷாவிக்கு எதிராக யெகூ தீர்க்கதரிசியிடம் கர்த்தர் சொன்னதுபோலவே ஆயிற்று. 13 இது, பாஷாவும் அவனது குமாரன் ஏலாவும் செய்த பாவத்தால் ஆயிற்று. அவர்கள் தாம் பாவம் செய்ததோடு இஸ்ரவேல் ஜனங்களும் பாவம் செய்ய காரணமானார்கள். அவர்கள் பல விக்கிரகங்களைச் செய்து தொழுதுகொண்டதால் கர்த்தரால் கோபம்கொள்ளக் காரணமானார்கள்.
14 ஏலா செய்த பிறசெயல்கள் இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன.
15 யூதாவின் ராஜாவாக ஆசா 27வது ஆண்டில் இருக்கும்போது சிம்ரி ராஜாவானான். அவன் திர்சாவிலிருந்து 7 நாட்கள்தான் ஆண்டான். இஸ்ரவேல் படைகள் பெலிஸ்தியரின் கிபெத்தோனுக்கு அருகில் முகாமிட்டுத் தங்கினார்கள். அவர்கள் போருக்குத் தயாராயிருந்தார்கள். 16 சிம்ரி ராஜாவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதாக படையிலிருந்தவர்கள் அறிந்தார்கள். அவன் ராஜாவைக் கொன்றதாகவும் கேள்விப்பட்டார்கள். எனவே எல்லா இஸ்ரவேலர்களும் அன்று முகாமில் உம்ரியை இஸ்ரவேல் முழுவதற்கும் ராஜாவாக்கினார்கள். உம்ரி படைத்தலைவனாக இருந்தான். 17 ஆகவே உம்ரியும் இஸ்ரவேலர்கள் அனைவரும் கிபெத்தோனிலிருந்து சென்று திர்சாவைத் தாக்கினார்கள். 18 சிம்ரி தன் நகரம் கைப்பற்றப்படுவதை அறிந்து அரண்மனைக்குப் போய் தனக்கும் அரண்மனைக்கும் தீவைத்து அதில் செத்தான். 19 தனது பாவத்தால் சிம்ரி மரித்துப்போனான். இவன் கர்த்தருக்கு எதிராக பாவம் செய்தான். யெரொபெயாம் பாவம் செய்தது போலவே இவனும் பாவம் செய்து இஸ்ரவேல் ஜனங்கள் பாவம் செய்வதற்கும் காரணம் ஆனான்.
20 இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் சிம்ரி செய்தசதிகளும் பிறசெயல்களும் எழுதப்பட்டுள்ளன. அதில் அவன் ஏலாவிற்கு எதிராகக் கிளம்பியதும் சொல்லப்பட்டுள்ளது.
2008 by World Bible Translation Center