Beginning
ஆயிரம் ஆண்டுகள்
20 பரலோகத்தில் இருந்து ஒரு தூதன் கீழே இறங்கி வருவதைக் கண்டேன். அவனிடம் பாதாள உலகத்தின் திறவு கோல் இருந்தது. அவன் தன் கையில் ஒரு நீண்ட சங்கிலியையும் வைத்திருந்தான். 2 சாத்தான் எனப்படும் பழைய பாம்பாகிய ராட்சசப் பாம்பை அவன் பிடித்தான். அவன் அப்பாம்பை ஆயிரம் ஆண்டு காலத்துக்குச் சங்கிலியால் கட்டிப்போட்டான். 3 அவன் அப்பாம்பைப் பாதாளத்திற்குள் எறிந்து மூடினான். ஆயிரம் ஆண்டுகள் முடியும் வரை பூமியின் மக்களை அது வஞ்சிக்காதபடிக்குப் பூட்டி முத்திரையிட்டான். அதன் பிறகு கொஞ்சக் காலத்துக்குப் பாம்பினை விடுதலை செய்யவேண்டும்.
சாத்தானின் தோல்வி
4 பிறகு நான் சில சிம்மாசனங்களைப் பார்த்தேன். அவற்றின்மேல் சிலர் அமர்ந்திருந்தனர். நியாயந்தீர்க்கிற அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்த மக்கள் இவர்களே ஆவார்கள். அப்போது இயேசுவைப் பற்றிய சாட்சிக்காகவும் தேவனுடைய செய்திக்காகவும் தலைவெட்டப்பட்டவர்களின் ஆன்மாக்களைக் கண்டேன். அவர்கள் அம்மிருகத்தையோ அல்லது அதனுடைய உருவத்தையோ வழிபடவில்லை. அவர்கள் அம்மிருகத்தின் அடையாளக் குறியை தம் முன் நெற்றியிலோ கைகளிலோ பெற்றிருக்கவில்லை. அவர்கள் மீண்டும் உயிர்த்தெழுந்து கிறிஸ்துவோடு ஆயிரம் வருஷங்கள் அரசாண்டார்கள். 5 (மற்ற இறந்த மக்கள் 1,000 ஆண்டுகள் முடியும் மட்டும் உயிரடையவில்லை.)
இதுவே முதலாம் உயிர்த்தெழுதல் ஆகும். 6 இந்த முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கு பெற்றவர்களே ஆசீர்வதிக்கப்பட்டவர்களும், பரிசுத்தமானவர்களும் ஆவார்கள். அவர்கள் மீது இரண்டாம் மரணத்துக்கு அதிகாரம் இல்லை. அவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் ஆசாரியராய் இருப்பார்கள். அவர்கள் இயேசுவோடு கூட ஆயிரம் ஆண்டுக் காலம் ஆட்சி செய்வார்கள்.
சாத்தான் முறியடிக்கப்படுதல்
7 ஆயிரம் ஆண்டுக் காலம் முடிந்த பிறகு, சிறையிலிருந்து சாத்தான் விடுதலை செய்யப்படுவான். 8 உலகின் அனைத்து பாகங்களிலும் உள்ள தேசங்களில் இருக்கிற கோகையும் மகோகையும் வஞ்சிக்கச் செல்வான். போர் செய்வதற்காக மக்களை ஒன்று திரட்டுவான். ஏராளமான மக்கள் கடற்கரையில் உள்ள மணலைப் போன்று எண்ணிக்கையில் கூடுவர்.
9 சாத்தானின் படை எங்கும் பரந்தது. பூமியெங்கும் பரந்து தேவனுடைய மக்களுடைய முகாமையும் தேவன் நேசிக்கிற நகரையும் வளைந்துகொண்டது. ஆனால் பரலோகத்தில் இருந்து நெருப்பு கீழே வந்து சாத்தானின் படையை அழித்துவிட்டது. 10 மக்களைத் தந்திரத்தால் ஏமாற்றி வந்த சாத்தான், கந்தகம் எரியும் நெருப்புக் கடலுக்குள் வீசப்பட்டான். அவனோடு, அந்த மிருகமும், போலித் தீர்க்கதரிசியும் வீசப்பட்டனர். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வதைக்கப்படுவார்கள்.
வெள்ளை சிம்மாசனம்
11 பிறகு, ஒரு பெரிய வெள்ளை சிம்மாசனத்தையும் அதன் மேல் வீற்றிருக்கிறவரையும் நான் கண்டேன். அவர் பார்வையிலிருந்து வானமும், பூமியும் விலகி மறைந்தன. 12 மேலும் இறந்துபோன பெரியவர்களும், சிறியவர்களும் சிம்மாசனத்தின் முன்னே நிற்பதைக் கண்டேன். ஜீவப்புத்தகம் திறக்கப்பட்டது. வேறு சில புத்தகங்களும் திறக்கப்பட்டன. இறந்து போனவர்கள் அவர்களது செயல்களால் நியாயம் தீர்க்கப்பட்டனர். இவை எல்லாம் அந்தப் புத்தகங்களில் எழுதப்பட்டிருக்கின்றன.
13 கடல் தன்னுள் இறந்து போனவர்களை ஒப்படைத்தது. மரணமும், பாதாளமும் தங்களிடமிருந்த இறந்தவர்களை ஒப்படைத்தன. ஒவ்வொரு மனிதனும் தான் செய்த நற்செயல்களைப் பொறுத்து நியாயம் தீர்க்கப்பட்டான். 14 அப்போது மரணமும் பாதாளமும் நெருப்புக் கடலில் தள்ளப்பட்டன. இந்த நெருப்புக் கடலே இரண்டாம் மரணமாகும். 15 ஜீவப் புத்தகத்தில் எழுதப்பட்டவனாகக் காணப்படாதவன் எவனோ, அவன் நெருப்புக் கடலிலே தள்ளப்பட்டான்.
புதிய எருசலேம்
21 பிறகு நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன். முதலாவது வானமும், பூமியும் மறைந்து போயிற்று. இப்போது கடல் இல்லை. 2 தேவனிடமிருந்து பரலோகத்தை விட்டுக் கீழே இறங்கிவரும் பரிசுத்த நகரைக் கண்டேன். தேவன் அனுப்பிய அந்நகரமே புதிய எருசலேம். [a] அது, தன் கணவனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணமகளைப்போல தயார்படுத்தப்பட்டது.
3 சிம்மாசனத்திலிருந்து ஓர் உரத்தகுரல் கேட்டது: “இப்போது தேவனுடைய வீடு அவரது மக்களோடு உள்ளது. அவர் அவர்களோடு வாழ்வார். அவர்களே அவரது மக்களாக இருப்பார்கள். தேவன் தாமே அவர்களோடிருந்து அவர்களுடைய தேவனாய் இருப்பார். 4 அவர்களின் கண்களில் வடியும் கண்ணீரை தேவன் துடைப்பார். இனிமேல் அங்கே மரணம் இருக்காது. துக்கமும், அழுகையும், வேதனையும் இல்லாமல் போகும். பழைய முறைகள் எல்லாம் போய்விட்டன” என்றது.
5 சிம்மாசனத்தில் இருந்தவர், “பார்! நான் எல்லாவற்றையும் புதிதாகப் படைத்துக் கொண்டிருக்கிறேன்” என்றார். “பிறகு இதனையும் எழுதிக்கொள். ஏனென்றால் இந்த வார்த்தைகள் உண்மையானவை. நம்பிக்கைக்குரியவை” என்றார்.
6 சிம்மாசனத்தில் இருந்தவர் என்னிடம், “இது முடிந்து விட்டது. நானே அல்பாவும் ஒமேகாவுமாய் இருக்கிறேன். அதாவது நானே துவக்கமும் முடிவுமாக இருக்கிறேன். நான் தாகமாய் இருக்கிறவனுக்கு ஜீவ நீரூற்றிலிருந்து நீரைக் கொடுப்பேன். 7 எவன் ஒருவன் வெற்றி பெறுகிறானோ அவனுக்கு இவை எல்லாம் கொடுக்கப்படும். அவனுக்கு நான் தேவனாகவும் அவன் எனக்கு மகனாகவும் இருப்பான். 8 ஆனால் கோழைகளாக இருப்பவர்களும், நம்ப மறுப்பவர்களும், பயங்கரமான காரியங்களைச் செய்பவர்களும், கொலைகாரர்களும், பாலியல் குற்றங்கள் செய்பவர்களும், மந்திர சூன்ய வேலை செய்பவர்களும், உருவ வழிபாடு செய்பவர்களும், பொய்யர்களும் கந்தகம் எரியும் நெருப்புக் கடலுள் தள்ளப்படுவார்கள். இதுவே இரண்டாம் மரணம்” என்றார்.
9 ஏழு தேவதூதர்களுள் ஒருவன் என்னிடம் வந்தான். இவன் ஏழு இறுதி வாதைகள் நிறைந்த ஏழு கிண்ணங்களைக் கொண்டிருந்த தூதர்களில் ஒருவன். அத்தூதன் என்னிடம், “என்னுடன் வா. நான் ஆட்டுக்குட்டியானவரின் மனைவியாகப்போகும் மணமகளைக் காட்டுவேன்” என்றான். 10 அவன் ஆவியானவரால் என்னை மிகப் பெரிய உயர்ந்த மலை ஒன்றுக்கு தூக்கிச் சென்றான். அவன் எனக்கு எருசலேம் என்ற பரிசுத்தமான நகரத்தைக் காட்டினான். அது தேவனிடமிருந்து வானினின்று வெளிப்பட்டு கீழே இறங்கிக்கொண்டிருந்தது.
11 அது தேவனுடைய மகிமையால் ஒளி வீசிக்கொண்டிருந்தது. அது விலையுயர்ந்த இரத்தினக் கல்லைப் போன்றும், பளிங்குபோல சுத்தமான வைரக் கல்லைப் போன்றும் மின்னியது. 12 அது தன்னைச் சுற்றிலும் மிகவும் உயர்ந்த பன்னிரண்டு வாசல்களையுடைய மாபெரும் மதிலைக் கொண்டிருந்தது. அந்தப் பன்னிரண்டு வாசல்களிலும், பன்னிரண்டு தேவ தூதர்கள் இருந்தார்கள். ஒவ்வொரு வாசலிலும் இஸ்ரவேலில் உள்ள பன்னிரண்டு குடும்பங்களில் ஒரு குடும்பத்தின் பெயர் எழுதப்பட்டிருந்தது. 13 கிழக்கே மூன்று வாசல்களும், வடக்கே மூன்று வாசல்களும், தெற்கே மூன்று வாசல்களும், மேற்கே மூன்று வாசல்களும் இருந்தன. 14 நகரத்தின் சுவர்கள் பன்னிரண்டு அஸ்திபாரக் கற்களால் கட்டப்பட்டிருந்தன. அக்கற்களில் ஆட்டுக்குட்டியானவரின் பன்னிரண்டு அப்போஸ்தலர்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன.
15 என்னோடு பேசிக்கொண்டிருந்த தேவதூதனின் கைகளில் நகரையும் அதன் வாசல்களையும் அதன் மதிலையும் அளப்பதற்காகப் பொன்னாலான ஒரு அளவு கோல் இருந்தது. 16 அந்நகரம் சதுர வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. அதனுடைய நீளம் அகலத்துக்குச் சமமாக இருந்தது. அத்தூதன் நகரத்தைத் தன் கோலால் அளந்தான். அது 12,000 ஸ்தாதி [b] நீளமும் 12,000 ஸ்தாதி அகலமும் கொண்ட அளவுடையதாய் இருந்தது. அதன் உயரமும் அவ்வாறே 12,000 ஸ்தாதி அளவுடையதாயிருந்தது. 17 அத்தூதன் மதிலையும் அளந்தான். அது மனித அளவின்படி அதாவது தூதனுடைய முன்னங்கையால் 144 முழ உயரம் இருந்தது. 18 அச்சுவர் வைரக்கல்லால் ஆனது. நகரம் தூய பளிங்கு போன்ற தங்கத்தால் அமைக்கப்பட்டிருந்தது.
19 நகரத்தின் சுவர்களுக்கான அஸ்திபாரக் கற்கள் விலை உயர்ந்த நகைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அதன் முதல் அஸ்திபாரக்கல் வைரக்கல். இரண்டாவது கல் இந்திரநீலம். மூன்றாவது சந்திர காந்தம். நான்காவது மரகதம். 20 ஐந்தாவது கோமேதகம், ஆறாவது பதுமராகம். ஏழாவது சுவர்ணரத்தினம். எட்டாவது படிகப்பச்சை. ஒன்பதாவது புஷ்பராகம். பத்தாவது வைடூரியம். பதினோராவது கல் சுநீரம். பன்னிரண்டாவது சுகந்தி. 21 பன்னிரண்டு வாசல்களும் பன்னிரண்டு முத்துக்களாய் இருந்தன. ஒவ்வொரு வாசலும் ஒவ்வொரு முத்தாய் இருந்தது. அந்த நகரத் தெரு தூய பொன்னால் ஆக்கப்பட்டது. கண்ணாடியைப்போல அந்தப் பொன் சுத்தமாயிருந்தது.
22 அந்நகரத்தில் ஆலயம் எதையும் நான் காணவில்லை. சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அதன் ஆலயமாக இருக்கின்றனர். 23 அந்நகரத்துக்கு ஒளி தர சூரியனோ சந்திரனோ தேவையில்லை. தேவனுடைய மகிமை அங்கு ஒளி வீசுகிறது. ஆட்டுக்குட்டியானவரே அங்கு ஒளியாக இருக்கிறார்.
24 இரட்சிக்கப்படுகிற மக்கள் அனைவரும் அதின் ஒளியில் நடப்பார்கள். உலகில் உள்ள அரசர்கள் தம் மகிமையை அந்நகருக்குள் கொண்டு வருவார்கள். 25 எந்நாளிலும் நகரத்தின் வாசல் கதவுகள் அடைக்கப்படாமல் இருக்கும். ஏனென்றால் அந்நகரில் இரவு என்பதே இல்லை. 26 அவர்கள் தேசங்களின் மகிமையும் கௌரவமும் அதற்குள் கொண்டு வரப்படும். 27 சுத்தமற்ற எதுவும் அந்நகருக்குள் நுழைவதில்லை. வெட்கப்படத்தக்க செயல்களைச் செய்பவர்களும் பொய் சொல்பவர்களும் அந்நகருக்குள் பிரவேசிப்பதில்லை. ஆட்டுக்குட்டியானவரின் ஜீவப்புத்தகத்தில் எவருடைய பெயர்கள் எழுதப்பட்டுள்ளனவோ அவர்கள் மட்டுமே அங்கு போகமுடியும்.
22 பின்னர் அந்தத் தூதன் ஜீவதண்ணீர் ஓடுகின்ற ஆற்றினை எனக்குக் காட்டினான். அது பளிங்குபோன்று பிரகாசமாக இருந்தது. அது தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருந்த சிம்மாசனத்தில் இருந்து பாய்ந்தது. 2 அது நகரத் தெருவின் நடுவில் பாய்ந்தது. அந்த ஆற்றின் ஒவ்வொரு கரையிலும் வாழ்வின் மரம் இருந்தது. அது ஆண்டுக்குப் பன்னிரண்டு முறை கனிகளைத் தருகிறது. ஒவ்வொரு மாதமும் அது கனிதருகிறது. அம்மரத்தின் இலைகள் மக்களின் நோயைக் குணமாக்கும் தன்மையுடையவை.
3 தேவனால் குற்றம் என நியாயந்தீர்க்கப்படுகிற எதுவும் அந்நகருக்குள் இருக்காது. தேவனுடைய சிம்மாசனமும் ஆட்டுக்குட்டியானவரும் அங்கே இருப்பார்கள். 4 தேவனுடைய ஊழியக்காரர்கள் அவரை வழிபடுவர். அவர்கள் அவரது முகத்தைப் பார்ப்பார்கள். அவர்களின் நெற்றியில் தேவனுடைய பெயர் எழுதப்பட்டிருக்கும். 5 அங்கு மீண்டும் இரவு வராது. அங்குள்ள மக்களுக்கு விளக்கின் ஒளியோ சூரியனின் ஒளியோ தேவைப்படாது. தேவனாகிய கர்த்தரே அவர்களுக்கு வெளிச்சம் தருவார். அவர்கள் அரசர்களைப் போன்று எல்லாக் காலங்களிலும் அரசாளுவர்.
6 அந்தத் தூதன் என்னிடம், “இந்த வார்த்தைகள் உண்மையானவை, நம்பத் தகுந்தவை. பரிசுத்த தீர்க்கதரிசிகளின் ஆவிகளின் தேவனாக இருக்கிற கர்த்தர் உடனடியாக என்ன நடக்க வேண்டுமென தம் ஊழியர்களுக்குக் காட்டத் தன் தூதனை அனுப்பினார். 7 இதோ, சீக்கிரமாய் வருகிறேன். இந்த நூலில் உள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கடைப்பிடிக்கிறவன் ஆசீர்வதிக்கப்படுவான்” என்றான்.
8 நான் யோவான், நானே இவற்றைக் காணவும் கேட்கவும் செய்தேன். இவற்றை நான் பார்த்தும் கேட்டும் முடிந்த பின்னால், இவற்றை எனக்குக் காட்டிய அத்தூதனின் கால்களில் விழுந்து வணங்கக் குனிந்தேன். 9 ஆனால் அத்தூதன் என்னிடம், “என்னை வணங்க வேண்டாம். நானும் உன்னைப் போல ஒரு ஊழியன் மட்டுமே. தீர்க்கதரிசிகளாகிய உன் சகோதரர்களைப் போன்றவன் நான். இந்நூலிலுள்ள வசனங்களுக்குக் கீழ்ப்படிகிற மற்றவர்களைப்போல நானும் ஒருவனே. நீ தேவனை வணங்கு” என்றான்.
10 மேலும் அத்தூதன் என்னிடம், “இந்நூலில் உள்ள தீர்க்கதரிசனமான வசனங்களை இரகசியம் போல் மூடிவைக்க வேண்டாம். இவை நிகழ்வதற்குரிய காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. 11 அநியாயம் செய்கிறவன் தொடர்ந்து அநியாயம் செய்யட்டும். அசுத்தமாய் இருக்கிறவன் மேலும் அசுத்தமாய் இருக்கட்டும். பரிசுத்தவான் மேலும் பரிசுத்தவானாய் இருக்கட்டும்.
12 “கவனி! நான் விரைவில் வருவேன். என்னோடு பலன்களைக் கொண்டு வருவேன். ஒவ்வொருவனுக்கும் அவனவனுடைய செயல்களுக்கு பலன் அளிப்பேன். 13 நானே அல்பாவும் ஒமேகாவுமாக இருக்கிறேன்; நானே முந்தினவரும், பிந்தினவருமாய் இருக்கிறேன். நானே துவக்கமும் முடிவுமாய் இருக்கிறேன்.
14 “தேவனுடைய கட்டளைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள். அவர்களுக்கு வாழ்வின் மரத்தில் உள்ள கனிகளைப் புசிப்பதற்கு உரிமை இருக்கும். அவர்கள் வாசல் வழியாக நகரத்துக்குள் நுழைய முடியும். 15 நகரத்துக்கு வெளியே, நாய் போன்றவர்களும், சூனியக்காரர்களும், விபசாரகர்களும், கொலைகாரர்களும், உருவ வழிபாடு செய்கிறவர்களும் பொய்யை விரும்பி, அதின்படி செய்பவர்களும் இருப்பார்கள்.
16 “இயேசுவாகிய நான் சபைகளில் இவற்றை உங்களுக்குச் சொல்லும் பொருட்டு என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் குடும்ப வாரிசு. நான் பிரகாசமான விடிவெள்ளியாக இருக்கிறேன்” என்றார்.
17 ஆவியானவரும் மணமகளும் “வாருங்கள்” என்கிறார்கள். இதைக் கேட்பவர்களும் “வாருங்கள்” என்று சொல்லவேண்டும். தாகமாய் இருக்கிறவன் வருவானாக. விருப்பம் உள்ளவன் ஜீவத் தண்ணீரைப் பெறுவானாக.
18 இந்நூலில் உள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறேன். “எவனாவது ஒருவன் இவைகளோடு எதையாவது கூட்டினால் இந்நூலில் எழுதப்பட்டிருக்கிற துன்பங்களை தேவன் அவன் மேல் கூட்டுவார்.” 19 எவனாவது ஒருவன் தீர்க்கதரிசனப் புத்தக வசனங்களிலிருந்து எதையேனும் நீக்கினால் இந்நூலில் எழுதப்பட்டிருக்கிற வாழ்வின் மரத்திலிருந்தும் பரிசுத்த நகரிலிருந்தும் அவனுடைய பங்கை தேவன் நீக்கிவிடுவார்.
20 இவ்வார்த்தைகள் உண்மையென சாட்சியாய் அறிவிக்கிறவர் இயேசுவே. இப்போது அவர், “ஆம், நான் விரைவில் வருகிறேன்” என்று சொல்கிறார்.
ஆமென். கர்த்தராகிய இயேசுவே, வாரும்!
21 கர்த்தராகிய இயேசுவின் கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக!
2008 by World Bible Translation Center