Beginning
மிருகத்தின்மேல் பெண்மணி
17 ஏழு தூதர்களில் ஒரு தூதன் வந்து என்னிடம் பேசினான். ஏழு கிண்ணம் வைத்திருந்த ஏழு தூதர்களில் இத்தூதனும் ஒருவன். அவன், “வா. ஒரு பிரசித்தி பெற்ற வேசிக்கு வரப்போகும் தண்டனையை உனக்குக் காட்டுவேன். அவள் திரளான தண்ணீர்களின்மேல் உட்கார்ந்திருக்கிறவள். 2 பூமியில் உள்ள அரசர்கள் அந்த வேசியோடு பாவம் செய்தார்கள். அவளது வேசித்தனமாகிய மதுவால் உலகில் உள்ள மக்கள் நிலைதடுமாறியவர்கள் ஆனார்கள்” என்றான்.
3 ஆவியானவரால் என்னைப் பாலைவனத்துக்கு அத்தூதன் கொண்டுபோனான். அங்கே ஒரு பெண் ஒரு சிவப்பு நிறமுள்ள மிருகத்தின் மேல் உட்கார்ந்துகொண்டிருப்பதைப் பார்த்தேன். அந்த மிருகத்தின்மேல் தீய பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. அதற்கு ஏழு தலைகளும் பத்து கொம்புகளும் இருந்தன. 4 இரத்த வண்ணத்தில் சிவப்பும் இரத்தாம்பரமுமான ஆடை அந்தப் பெண்ணுக்கு அணிவிக்கப்பட்டது. அவள் பொன்னாலும் நகைகளாலும், முத்துக்களாலும் தன்னை அலங்கரித்திருந்தாள். அவள் கையில் ஒரு பொன் கோப்பையை வைத்திருந்தாள். இக்கோப்பை அருவருப்பாலும், வேசித்தனமாகிய அசிங்கத்தாலும் நிறைந்திருந்தது. 5 அவளது நெற்றியில் அவளுக்குரிய பட்டப்பெயர் எழுதப்பட்டிருந்தது. அப்பட்டப் பெயருக்கு ஒரு மறைபொருளும் உண்டு. எழுதப்பட்டிருந்த வாசகம் இதுதான்:
மகா பாபிலோன் வேசிகளுக்கும்
பூமியில் உள்ள
அருவருப்புகளுக்கும் தாய்!
6 அப்பெண் குடித்திருந்ததை நான் பார்த்தேன். அவள் தேவனின் பரிசுத்தமான மக்களின் இரத்தத்தாலும், இயேசுவின் சாட்சிகளின் இரத்தத்தாலும் நிலைதடுமாறி இருந்தாள்.
அவளைப் பார்த்தபோது எனக்கு மிகவும் அதிசயமாக இருந்தது. 7 அப்போது தூதன் என்னைப் பார்த்து, “ஏன் அதிசயப்படுகிறாய்? நான் இவளுடைய இரகசியத்தையும், இவளைச் சுமக்கிற ஏழு தலைகளையும், பத்துக் கொம்புகளையும் கொண்ட அம்மிருகத்தின் இரகசியத்தையும் உனக்குக் கூறுகிறேன். 8 நீ கண்ட மிருகம் முன்பொரு காலத்தில் உயிருடன் இருந்தது. ஆனால் இப்போது அது உயிருடன் இல்லை. அது உயிரடைந்து அடித்தளமற்ற பாதாளத்தில் இருந்து ஏறி வந்து அழிவை நோக்கிப் போகிறது. இந்த உலகத்தில் வாழும் மக்கள் இம்மிருகத்தைக் காணும்போது ஆச்சரியப்படுவார்கள். காரணம் இது ஒரு காலத்தில் உயிரோடு இருந்தது பின் இராமல் போனது. ஆனால், மீண்டும் வரப்போகிறது. இம்மக்களின் பெயர்கள் ஜீவ புத்தகத்தில் உலகம் தொடங்கின நாள் முதல் எழுதப்படாமல் இருக்கிறது.
9 “இதைப் புரிந்துகொள்ள உனக்கு ஞானமுள்ள மனம் வேண்டும். அந்த ஏழு தலைகளும் அந்தப் பெண் உட்கார்ந்துகொண்டிருக்கிற ஏழு மலைகள் ஆகும். அவை ஏழு அரசர்களுமாகும். 10 இவர்களில் ஐந்து பேர் விழுந்தார்கள். ஒருவன் இருக்கிறான். இன்னொருவன் இன்னும் வரவில்லை. அவன் வந்த பிறகு கொஞ்ச காலம் தான் உயிரோடு இருப்பான். 11 இருந்ததும் இராததுமாகிய மிருகமே எட்டாம் அரசனாவான். அவன் அந்த ஏழில் ஒருவனாக இருந்து அழிவை நோக்கிச் செல்வான்.
12 “நீ பார்த்த பத்துக் கொம்புகளும் பத்து அரசர்களாகும். இந்தப் பத்து பேரும் இன்னும் தம் இராஜ்யங்களைப் பெற்றுக்கொள்ளவில்லை. எனினும் இந்த மிருகத்துடன் சேர்ந்து ஒரு மணி நேரம் ஆள்வதற்கு உரிய அதிகாரத்தைப் பெற்றுள்ளார்கள். 13 இவர்கள் ஒரே நோக்கம் உடையவர்கள். அவர்கள் தம் சக்தியையும் அதிகாரத்தையும் அந்த மிருகத்துக்குக் கொடுப்பார்கள். 14 இவர்கள் ஆட்டுக்குட்டியானவருடன் போர் செய்வார்கள். ஆனால் இவர்களை ஆட்டுக்குட்டியானவர் தோற்கடிப்பார். ஏனென்றால் அவர் கர்த்தர்களின் கர்த்தர், அரசர்களின் அரசர். அவர் தாம் அழைத்தவர்களாகிய தம்முடைய தேர்ந்தெடுத்தவர்களோடும், நம்பிக்கைக்குரியவர்களோடும் கூட அவர்களைத் தோற்கடிப்பார்” என்று சொன்னான்.
15 பிறகு அந்தத் தூதன் என்னிடம், “அந்த வேசி உட்கார்ந்திருக்கிற நீர்நிலைகளைப் பார்த்தாய் அல்லவா. அந்த நீர்நிலைகள் தான் உலகத்தில் உள்ள மக்கள், குடிகள், தேசங்கள், மொழிகளாக இருக்கின்றன. 16 நீ பார்த்த அந்த மிருகமும் அதன் பத்துக் கொம்புகளும் அந்த வேசியை வெறுப்பர். அவளிடம் உள்ள அனைத்தையும் அவர்கள் பறித்துக்கொண்டு அவளை நிர்வாணமாக விட்டுவிடுவர். அவர்கள் அவளது உடலைத் தின்பார்கள். அவர்கள் அவளை நெருப்பால் சுட்டெரிப்பார்கள். 17 தன் குறிக்கோளை நிறைவேற்ற, அந்த பத்துக் கொம்புகளும் விருப்பம் கொள்ள தேவன் காரணமானார். ஆளுவதற்குரிய அவர்கள் அதிகாரத்தை அம்மிருகத்துக்குக் கொடுக்க ஒப்புக்கொண்டனர். தேவன் சொன்னவை நிறைவேறும் காலம்வரை அவர்கள் ஆளுவார்கள். 18 பூமியின் அரசர்கள் மீது அரசாள்கிற மகா நகரமானது நீ பார்த்த பெண்ணாகும்” என்று சொன்னான்.
பாபிலோன் அழிக்கப்படுதல்
18 பிறகு வேறொரு தூதன் பரலோகத்தில் இருந்து இறங்கி வருவதைக் கண்டேன். அவனுக்கு மிகுதியான அதிகாரம் இருந்தது. அவனுடைய மகிமையால் பூமி ஒளி பெற்றது. 2 அத்தூதன் உரத்த குரலில் கூவினான்:
“அவள் அழிக்கப்பட்டாள்!
மாநகரமான பாபிலோன் அழிக்கப்பட்டது!
அவள் பிசாசுகளின் குடியிருப்பானாள்.
அந்நகரம் ஒவ்வொரு அசுத்தமான ஆவியும் வசிக்கிற இடமாயிற்று.
எல்லாவிதமான அசுத்தமான பறவைகளுக்கும் அது ஒரு கூடானது.
அசுத்தமானதும் வெறுக்கத்தக்கதுமான ஒவ்வொரு மிருகத்திற்கும் அது ஒரு நகரமாயிற்று.
3 அவளுடைய வேசித்தனத்தினுடையதும் தேவனுடைய கோபமானதுமான மதுவை எல்லாத் தேசங்களும் குடித்தன.
உலகிலுள்ள அரசர்கள் அவளோடு வேசித்தனம் செய்தார்கள்.
உலகிலுள்ள வியாபாரிகள் அவளது மாபெரும் செல்வச் செழிப்பில் இருந்து செல்வர்கள் ஆனார்கள்.”
4 பிறகு நான் பரலோகத்திலிருந்து இன்னொரு குரலையும் கேட்டேன்.
“ஓ! என் மக்களே, அவளுடைய பாவத்தில்
உங்களுக்குப் பங்கில்லாதபடிக்கு வெளியே வாருங்கள்.
பிறகு அவளுக்கிருக்கும் வாதைகள் எதுவும் உங்களுக்கிருக்காது.
5 அந்நகரத்தின் பாவங்கள் பரலோகம் வரை எட்டிவிட்டன.
தேவன் அவளது குற்றங்களை மறக்கவில்லை.
6 அவள் கொடுத்ததைப்போலவே நீங்களும் அந்நகருக்கு கொடுங்கள்.
அவள் கொடுத்ததைப்போல இருமடங்கு திருப்பிச் செலுத்துங்கள்.
மற்றவர்களுக்கு அவள் தயாரித்த அடர்த்தியான மதுவைப்போல இருமடங்கு அடர்த்தியான மதுவை அவளுக்காகத் தயார் செய்யுங்கள்.
7 அவள் தனக்கு செல்வ வாழ்வையும் அதிக மகிமையையும் அளித்துக்கொண்டாள்.
அதே அளவு துன்பத்தையும் துக்கத்தையும் அவளுக்குக் கொடுங்கள்.
அவள் தனக்குத் தானே, ‘என் சிம்மாசனத்தில் உட்கார்ந்துக்கொண்டிருக்கிற நான் ஒரு ராணி.
நான் விதவை அல்ல.
நான் எக்காலத்திலும் துக்கப்படமாட்டேன்’ என்று சொல்லிக்கொள்கிறாள்.
8 எனவே ஒருநாளில் இக்கேடுகள் அவளுக்கு வரும்.
அவை மரணம், அழுகை, பெரும் பசியாய் இருக்கும்.
அவள் நெருப்பால் அழிக்கப்படுவாள்.
ஏனென்றால் அவளை நியாயந்தீர்க்கிற தேவனாகிய கர்த்தர் வல்லமையுள்ளவர்.”
9 “அவளோடு வேசித்தனம் புரிந்து அவளுடைய செல்வத்தைப் பகிர்ந்துகொண்ட பூமியின் எல்லா அரசர்களும் அவள் எரியும்போது வரும் புகையைக் காண்பார்கள். அவளது மரணத்துக்காக அவர்கள் அழுது துக்கப்படுவார்கள். 10 அவளது துன்பத்தைக் கண்டு அரசர்கள் அஞ்சி விலகி நிற்பார்கள். அவர்கள் சொல்வார்கள்:
“பயங்கரம்! எவ்வளவு பயங்கரம்,
மாநகரமே,
சக்திமிக்க பாபிலோன் நகரமே!
உனது தண்டனை ஒரு மணி நேரத்தில் வந்துவிட்டது.”
11 “அவளுக்காக உலகிலுள்ள வியாபாரிகள் அழுது துக்கப்படுவார்கள். இப்பொழுது அவர்களின் பொருள்களை வாங்குவதற்கு யாரும் இல்லை என்பது தான் அவர்களின் துயரத்துக்குக் காரணம். 12 அவர்கள் தங்கம், வெள்ளி, நகைகள், முத்துக்கள், மெல்லிய ஆடை, இரத்தாம்பர ஆடை, பட்டு ஆடை, சிவப்பு ஆடை, எல்லாவிதமான வாசனைக் கட்டைகள், தந்தத்தால், தங்கத்தால் செய்யப்பட்ட அனைத்து விதமான பொருள்கள், விலையுயர்ந்த மரப் பொருட்கள், வெண்கலப் பொருட்கள், இரும்புப் பொருட்கள், வெள்ளைக்கல் பொருட்கள், ஆகியவற்றை விற்கின்றனர். 13 இலவங்கப்பட்டை, தூபவர்க்கம், தைலங்கள், சாம்பிராணி, திராட்சை இரசம், ஒலிவ எண்ணெய், மெல்லிய மாவு, கோதுமை, மாடு, ஆடு, குதிரைகள், இரதங்கள், மனிதர்களின் சரீரங்கள் மற்றும் ஆன்மாக்கள் போன்றவற்றையும் அவர்கள் விற்கின்றனர்.
14 “ஓ பாபிலோனே, நீ விரும்பிய பொருட்களெல்லாம் உன்னை விட்டுப் போய்விட்டன.
உன் செல்வமும் நாகரீகமும் மறைந்து விட்டன.
உன்னால் அவற்றை மீண்டும் பெற இயலாது.”
15 “உலகிலுள்ள வியாபாரிகள் அவளது துயரங்களுக்கு அஞ்சி அவளை விட்டு விலகுவார்கள். இவர்களே பலவற்றை அவளிடம் விற்று செல்வம் குவித்தார்கள். அவர்கள் அழுது துக்கப்படுவார்கள். 16 அவர்கள் சொல்வார்கள்:
“பயங்கரம்! எப்படிப்பட்ட பயங்கரம் அந்த மாநகரத்துக்கு ஏற்பட்டுள்ளது!
அவள் மெல்லிய துணி,
பீதாம்பரம், சிவப்பாடைகளை அணிந்திருந்தாள்.
அவள் தங்கம், நகைகள், முத்துக்கள் ஆகியவற்றால் சிங்காரிக்கப்பட்டாள்.
17 அத்தனை செல்வமும் ஒரு மணி நேரத்துக்குள் அழிக்கப்பட்டது.”
“எல்லா கடல் தலைவர்களும், மாலுமிகளும், கப்பற் பயணிகளும், கடலில் சம்பாதித்தவர்களும் பாபிலோனை விட்டு விலகி நின்றனர். 18 அவள் எரியும் புகையைக் கண்டனர். அவர்கள் உரத்த குரலில், ‘இது போன்ற ஒரு மகா நகரம் எங்கேனும் உண்டா?’ என்று கேட்டனர். 19 தங்கள் தலைமேல் புழுதியைப் போட்டுக்கொண்டார்கள். அவர்கள் அழுது துக்கப்பட்டார்கள். அவர்கள் சத்தமாய்க் கூறினார்கள்:
“பயங்கரம்! எப்படிப்பட்ட பயங்கரம் அந்த மாநகரத்துக்கு ஏற்பட்டுள்ளது!
கடலில் சொந்தக் கப்பல்களுள்ள அனைவரும் அவளது செல்வத்தால் பணக்காரர்கள் ஆனார்கள்!
ஆனால் அவளோ ஒரு மணிநேரத்தில் அழிந்து போனாள்!
20 பரலோகமே! இதற்காக மகிழ்ச்சியோடிரு.
தேவனுடைய பரிசுத்தமான மக்களே!
அப்போஸ்தலர்களே, தீர்க்கதரிசிகளே மகிழ்ச்சி அடையுங்கள்!
அவள் உங்களுக்குச் செய்த கேடுகளுக்காக தேவன் அவளைத் தண்டித்துவிட்டார்.”
21 அப்போது சக்திமிக்க தூதன் ஒருவன் ஒரு பெரும் பாறையைத் தூக்கி வந்தான். அது ஒரு பெரிய எந்திரக்கல்லைப்போல இருந்தது. கடலில் அப்பாறையைப் போட்டு விட்டு தூதன் சொன்னான்:
“இவ்வாறுதான் பாபிலோன் நகரமும் தூக்கி எறியப்படும்.
அந்நகரம் மீண்டும் ஒருக்காலும் காணப்படாமல் போகும்.
22 சுரமண்டலங்களையும் மற்ற இசைக் கருவிகளையும் நாதசுரங்களையும் எக்காளங்களையும் மக்கள் வாசித்து எழுப்பும் இசை ஒருபோதும் இனி உன்னிடத்தில் கேட்காது.
எந்தத் துறையின் தொழிலாளியும் இனி உன்னிடத்தில் காணப்படமாட்டான்.
எந்திரங்களின் ஓசை இனி உன்னிடம் கேட்கப்படுவதில்லை.
23 இனி விளக்குகளின் ஒளி உன்னிடம் பிரகாசிக்காது.
மணமகன் மணமகள் ஆகியோரின் சத்தங்கள் இனி உன்னிடம் கேட்காது.
உன் வியாபாரிகள் உலகில் சிறந்தவர்களாக இருந்தார்கள்.
உலக நாடுகள் எல்லாம் உன் மாயத்தால் மோசம் செய்யப்பட்டன.
24 தீர்க்கதரிசிகள், தேவனுடைய பரிசுத்த மக்கள் மற்றும் பூமியின்மேல் கொல்லப்பட்டிருக்கிற மக்கள் அனைவருடையதுமான இரத்தத்தால்
அவள் குற்ற உணர்வோடு இருக்கிறாள்.”
பரலோகத்தில் தேவனைப் புகழ்தல்
19 இதற்குப்பிறகு பரலோகத்தில் உள்ள ஏராளமான மக்களின் ஓசையைப்போல ஒலித்ததைக் கேட்டேன், அவர்கள்,
“அல்லேலூயா!
தேவனைத் துதியுங்கள், வெற்றியும், மகிமையும், வல்லமையும் நம் தேவனுக்கு உரியது.
2 அவரது நியாயத்தீர்ப்புகள் உண்மையும் நேர்மையுமானவை.
நமது தேவன் மாபெரும் வேசியைத் தண்டித்துவிட்டார்.
இந்த உலகத்தை தன் வேசித்தனத்தால் கெடுத்தவள் அவளே.
அவள் கொன்ற தமது ஊழியர்களின் இரத்தத்துக்கு தேவன் பழிவாங்கினார்”
என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
3 பரலோகத்திலுள்ள மக்கள்,
“அல்லேலூயா!
அவள் எரிவதால் வரும் புகை என்றென்றைக்கும் எழும்பிக்கொண்டிருக்கும்” என்றும் சொன்னார்கள்.
4 பிறகு இருபத்துநான்கு மூப்பர்களும், நான்கு ஜீவன்களும் பணிந்து வணங்கி, சிம்மாசனத்தில் வீற்றிருந்த தேவனை வழிபட்டனர்.
“ஆமென் அல்லேலூயா”
என அவர்கள் சொன்னார்கள்.
5 பின்னர் சிம்மாசனத்தில் இருந்து ஒரு குரல் வந்தது. அது,
“நமது தேவனுக்கு சேவை செய்யும் அனைத்து மக்களே, அவரைத் துதியுங்கள்.
நமது தேவனுக்கு மகிமையளிக்கும் பெரியோரும் சிறியோருமான மக்களே, நமது தேவனைத் துதியுங்கள்!”
என்று கூறியது.
6 அதற்குப் பிறகு ஏராளமான மக்களின் ஓசையைப்போல ஒலித்ததைக் கேட்டேன். அது பெரு வெள்ளத்தின் இரைச்சலைப்போலவும் இடியோசை போலவும் கேட்டது. அவர்கள் சொன்னார்கள்:
“அல்லேலூயா!
நமது தேவனாகிய கர்த்தர் ஆளுகிறார்.
அவரே சர்வ வல்லமையுள்ளவர்.
7 நாம் ஆனந்தமும் மகிழ்ச்சியும் அடைவோம்.
தேவனுக்கு மகிமையைக் கொடுப்போம்! ஏனெனில் ஆட்டுக்குட்டியானவரின் திருமணம் வந்தது.
ஆட்டுக்குட்டியானவரின் மணமகள் தன்னைத் தயாராக்கிக்கொண்டாள்.
8 மெல்லிய ஆடைகள் அவள் அணியும்படியாகத் தரப்பட்டன.
அந்த ஆடைகள் பளபளப்பானவை, சுத்தமானவை.”
(மெல்லிய ஆடை என்பது தேவனுடைய பரிசுத்தமான மக்களின் நற்செயலைக் குறிக்கும்.)
9 பிறகு அத்தூதன், “ஆட்டுக்குட்டியானவரின் திருமணநாளில் விருந்துண்ண அழைக்கப்பட்டவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். இதனை எழுதி வைத்துக்கொள்” என்றான். “இவை தேவனுடைய உண்மையான வார்த்தைகள்” என்றும் சொன்னான்.
10 பிறகு நான் அந்தத் தூதனை வணங்குவதற்காகக் குனிந்தேன். ஆனால் அந்தத் தூதன் என்னிடம், “என்னை வணங்கவேண்டாம். இயேசுவின் உண்மையைக் கைக்கொண்டுள்ள உன்னைப்போலவும் உன் சகோதரர்களைப் போலவும் நான் ஒரு ஊழியக்காரன். தேவனை வணங்கு. ஏனென்றால் இயேசுவின் உண்மை தீர்க்கதரிசனத்தின் ஆவியாய் இருக்கிறது” என்றான்.
வெள்ளைக் குதிரையின்மேல் சவாரி செய்பவர்
11 பிறகு, நான் பரலோகம் திறப்பதைக் கண்டேன். எனக்கு முன்னால் ஒரு வெள்ளைக் குதிரை நின்றது. அதன்மீது இருந்தவர் நம்பிக்கை என்றும் உண்மையென்றும் அழைக்கப்படுகிறார். அவர் நியாயம் தீர்ப்பதிலும் போர் செய்வதிலும் மிகச் சரியாக இருக்கிறார். 12 அவரது கண்கள் எரிகிற நெருப்புபோல ஜொலித்தது. அவரது தலையில் பல கிரீடங்கள் இருந்தன. அவரது பெயர் அவருக்கு மேல் எழுதப்பட்டிருந்தது. அப்பெயர் அவருக்கு மட்டுமே தெரிந்திருந்தது. வேறு எவருக்கும் அப்பெயர் தெரியாது. 13 அவர் இரத்தத்தால் நனைக்கப்பட்டிருந்த அங்கியை அணிந்திருந்தார். அவர் பெயரே தேவனுடைய வார்த்தை ஆகும். 14 பரலோகத்தின் படைகள் அவரைப் பின்தொடர்ந்தன. அவர்கள் வெள்ளைக் குதிரைகளின் மேல் வந்தனர். அவர்கள் வெள்ளையும் சுத்தமுமான மெல்லிய ஆடையை அணிந்திருந்தனர். 15 அவரது வாயிலிருந்து கூர்மையான வாள் வெளியே வருகிறது. அவர் பிற நாடுகளை வெல்ல அதனைப் பயன்படுத்துவார். அவர் இரும்புக் கோலால் அத்தேசங்களை ஆள்வார். அவர் சர்வ வல்லமையுள்ள தேவனுடைய கோபமாகிய ஆலையிலுள்ள திராட்சையை மிதிப்பார். 16 அவரது ஆடையின் மேலும் தொடையின் மேலும்
“இராஜாதி இராஜா, கர்த்தாதி கர்த்தர்”
என்னும் பெயர் எழுதப்பட்டிருந்தது.
17 பின்பு ஒரு தேவதூதன் சூரியனில் நிற்கக் கண்டேன். வானத்தில் பறந்துகொண்டிருந்த அனைத்துப் பறவைகளிடமும் அவன் உரத்த குரலில் சொல்லிக்கொண்டிருந்தான். “தேவனுடைய சிறந்த விருந்துக்கு அனைவரும் சேர்ந்து வாருங்கள். 18 அரசர்கள், சேனைத் தலைவர்கள், புகழ்பெற்ற மனிதர்கள் ஆகியோரின் சரீரங்களை உண்ணமுடியும் வண்ணம் ஒருங்கிணைந்து வாருங்கள். குதிரைகள் மற்றும், குதிரைகளின் மேல் சவாரி செய்தவர்களின் உடல்களைத் தின்னவும், சுதந்தரமானவர்கள், அடிமைகள், சிறியவர்கள், பெரியவர்கள் ஆகிய மக்கள் அனைவரின் சரீரங்களைத் தின்னவும் வாருங்கள்” என்றான்.
19 பிறகு நான் அந்தக் குதிரையின் மேல் ஏறி இருக்கிறவரையும் அவரது படையையும் எதிர்த்துப் போரிட அந்த மிருகமும் தன் படைகளுடன் பூமியின் அரசர்களும் ஒருங்கிணைந்ததைக் கண்டேன். 20 ஆனால், அந்த மிருகம் பிடிபட்டது. போலித் தீர்க்கதரிசியும் பிடிபட்டான். இவனே அந்த மிருகத்திற்காக அற்புதங்களை செய்தவன். மிருகத்தின் அடையாளத்தைக் கொண்டிருந்தவர்களையும் மிருக விக்கிரகத்தை வழிபட்டவர்களையும் இவ்வற்புதங்களால் அவன் வஞ்சித்தான். போலித் தீர்க்கதரிசியும் மிருகமும் கந்தகம் எரிகிற நெருப்புக் கடலில் உயிரோடு போடப்பட்டார்கள். 21 குதிரையின் மேல் வந்தவரின் வாயிலிருந்து வெளிவந்த வாளால் அவர்களுடைய படைகள் கொல்லப்பட்டன. அவர்களின் சரீரங்களைப் பறவைகள் திருப்தியுறும்வரை தின்றன.
2008 by World Bible Translation Center