Beginning
இரண்டு மிருகங்கள்
13 பின்பு கடலுக்குள் இருந்து ஒரு மிருகம் வெளிவருவதைக் கண்டேன். அதற்குப் பத்துக் கொம்புகளும் ஏழு தலைகளும் இருந்தன. அதன் ஒவ்வொரு கொம்பின் மேலும் ஒரு கிரீடம் இருந்தது. அதன் ஒவ்வொரு தலைமீதும் ஒரு கெட்ட பெயர் எழுதப்பட்டிருந்தது. 2 அந்த மிருகம் பார்ப்பதற்கு ஒரு சிறுத்தையைப் போன்று இருந்தது. அதன் கால்கள் கரடியின் கால்களைப்போலவும் அதன் வாய் சிங்கத்தின் வாயைப்போலவும் இருந்தன. இராட்சசப் பாம்பானது அம்மிருகத்துக்குத் தன் முழு பலத்தையும், சிம்மாசனத்தையும், அதிகாரத்தையும் கொடுத்தது. 3 அம்மிருகத்தின் தலைகளில் ஒன்று சாவுக்கேதுவாகக் காயம்பட்டதுபோல காணப்பட்டது. சாவுக்கேதுவான அக்காயம் குணப்படுத்தப்பட்டது. உலகில் உள்ள அத்தனை பேரும் அதனைக் கண்டு ஆச்சரியப்பட்டு அம்மிருகத்தைப் பின்பற்றினர். 4 இராட்சசப் பாம்பு அந்த மிருகத்துக்கு அனைத்து பலத்தையும் கொடுத்ததால் மக்கள் அப்பாம்பை வழிபடத் தொடங்கினர். மக்கள் அம்மிருகத்தையும் வழிபட்டனர். அவர்கள், “இம்மிருகத்தைப்போன்று பலமிக்கது வேறு என்ன இருக்கிறது? அதனை எதிர்த்து யாரால் போரிடமுடியும்?” என்று பேசிக்கொண்டனர்.
5 அம்மிருகம் பெருமையானவற்றையும், தீய வார்த்தைகளையும் பேச அனுமதிக்கப்பட்டது. நாற்பத்திரண்டு மாதங்கள் தன் அதிகாரத்தைச் செலுத்த அம்மிருகம் அனுமதிக்கப்பட்டது. 6 அம்மிருகம் தன் வாயைத் திறந்து தேவனுக்கு எதிரானவற்றைப் பேசியது. அது தேவனுடைய பெயருக்கு எதிராகவும், தேவன் வாழும் இடத்துக்கு எதிராகவும், பரலோகத்தில் வாழ்பவர்களுக்கு எதிராகவும் பேசியது. 7 தேவனுடைய பரிசுத்த மக்களுக்கு எதிராகப் போரிட்டு வெற்றி பெறும் அதிகாரமும் அந்த மிருகத்துக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. உலகில் உள்ள ஒவ்வொரு குல, இன, மொழி, நாட்டின் மீதும் அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. 8 உலகில் வாழும் அத்தனை மக்களும் அந்த மிருகத்தை வழிபடுவார்கள். இவர்கள், உலகத்தின் துவக்கக்காலம் முதல் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புத்தகத்தில் பெயர்கள் எழுதப்படாத மக்கள் ஆவார்கள்.
9 கேட்கிற சக்தி உள்ளவன் எவனும் இதனைக் கேட்பானாக.
10 எவனொருவன் சிறைப்படுத்திக்கொண்டு போகிறானோ
அவன் சிறைபட்டுப் போவான்.
எவனொருவன் வாளால் கொல்பவனாக இருக்கிறானோ
அவன் வாளால் கொல்லப்பட்டுப் போவான்.
இதன் பொருள், “தேவனுடைய பரிசுத்தவான்கள் பொறுமையும் விசுவாசமும் கொண்டிருக்க வேண்டும்” என்பதாகும்.
பூமியிலிருந்து வெளிவரும் மிருகம்
11 பிறகு வேறொரு மிருகம் பூமிக்குள் இருந்து வெளிவருவதைப் பார்த்தேன். அதற்கு ஆட்டுக்குட்டியைப்போன்று இரண்டு கொம்புகள் இருந்தன. ஆனால் அது இராட்சச பாம்பினைப் போன்று பேசியது. 12 இது முதல் மிருகத்தின் முன்னே நிற்கிறது. முதல் மிருகம் பயன்படுத்திய அதே சக்தியை இதுவும் பயன்படுத்துகிறது. அது பூமியில் வாழ்கிற மக்கள் அனைவரையும் அந்த முதல் மிருகத்தை வழிபடுமாறு தன் ஆற்றலைப் பயன்படுத்துகிறது. அந்த முதல் மிருகமே குணப்படுத்தப்பட்ட மரணக் காயத்தைக் கொண்டிருந்தது. 13 இந்த இரண்டாம் மிருகம் மாபெரும் அற்புதங்களைச் செய்கிறது. மக்கள் கவனித்துக்கொண்டிருக்கும்போதே வானத்திலிருந்து பூமிக்கு நெருப்பை வரச் செய்கிறது.
14 அந்த முதல் மிருகத்தின் முன்னிலையில் தனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற ஆற்றலினால் அற்புதங்களை நிகழ்த்தி, பூமியில் வசிக்கிற மக்களை இம்மிருகம் வஞ்சிக்கிறது. முதல் மிருகத்தை கௌரவிக்க ஒரு விக்கிரகத்தைச் செய்யுமாறு இரண்டாவது மிருகம் மக்களுக்கு ஆணையிட்டது. வாளால் காயம் அடைந்தாலும் கூட இறக்காத மிருகம் இதுவாகும். 15 முதல் மிருகத்தின் உருவச் சிலைக்கு உயிர் கொடுக்கிற வல்லமை இரண்டாவது மிருகத்துக்குக் கொடுக்கப்பட்டது. பிறகு அந்த உருவச் சிலையால் பேசவும், அதை வணங்காதவரைக் கொல்லும்படி மக்கள் அனைவருக்கும் ஆணையிடவும் முடிந்தது. 16 இரண்டாவது மிருகமும் மக்கள் அனைவரையும் அவர்கள் பெரியவர்களாக இருந்தாலும் சரி, சிறியவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் சரி, ஏழைகளாக இருந்தாலும் சரி, அவர்கள் சுதந்தரமானவர்களாக இருந்தாலும் சரி, அடிமைகளாக இருந்தாலும் சரி அவர்களின் வலக்கையிலாவது நெற்றியிலாவது முத்திரை பெறும்படியும் வலியுறுத்தியது. 17 எந்த ஒரு மனிதனுக்கும் அந்த அடையாளக்குறி இல்லாமல் விற்கவோ, வாங்கவோ முடியவில்லை. அந்த அடையாளம் என்பது மிருகத்தின் பெயர் அல்லது பெயரின் எண்ணாகும்.
18 புரிந்துகொள்ளக் கூடிய அறிவுள்ளவன் எவனும் அம்மிருகத்தின் எண்ணைப் புரிந்துகொள்ள முடியும். அந்த எண் ஒரு மனிதனின் எண்ணாகும். அவனது எண் 666 ஆகும்.
மீட்கப்பட்டவர்களின் பாடல்
14 பிறகு நான் பார்த்தபோது என் முன்னால் ஆட்டுக்குட்டியானவரைக் கண்டேன். அவர் சீயோன் மலைமீது நின்றுகொண்டிருந்தார். அவரோடு ஒரு லட்சத்து நாற்பத்து நாலாயிரம் மக்கள் இருந்தனர். அவர்களது நெற்றியில் ஆட்டுக்குட்டியானவரின் பெயரும் அவரது பிதாவின் பெயரும் எழுதப்பட்டு இருந்தது.
2 பெரு வெள்ளத்தின் இரைச்சலைப்போலவும் இடியின் பெரு முழக்கத்தைப்போலவும் ஒரு சத்தம் பரலோகத்தில் ஏற்பட்டதைக் கேட்டேன். அச்சத்தம் சுரமண்டலக்காரர்களால் தம் சுரமண்டலங்களை வாசிக்கிற ஓசையைப்போல இருந்தது. 3 மக்கள் ஒரு புதிய பாடலைச் சிம்மாசனத்துக்கு முன்பாகவும் நான்கு உயிருள்ள ஜீவன்களின் முன்பாகவும் மூப்பர்களின் முன்பாகவும் பாடினர். அப்புதிய பாடலை ஒரு லட்சத்து நாற்பத்து நாலாயிரம் மக்கள் மட்டுமே கற்றுக்கொள்ள முடிந்தது. அவர்களே பூமியில் இருந்து மீட்கப்பட்டவர்கள். வேறு எவராலும் அப்பாடலைக் கற்றுக்கொள்ளமுடிய வில்லை.
4 அந்த ஒரு லட்சத்து நாற்பத்து நாலாயிரம் மக்களும் பெண்களால் தம்மை மாசுபடுத்திக்கொள்ளாதவர்கள். அவர்கள் தம்மைச் சுத்தமாய் வைத்திருந்தனர். ஆட்டுக்குட்டியானவர் எங்கெல்லாம் போகிறாரோ அங்கெல்லாம் அவர்கள் பின்தொடர்ந்து செல்கிறவர்கள். இந்த ஒரு லட்சத்து நாற்பத்து நாலாயிரம் மக்கள் மட்டும் பூமியில் இருந்து மீட்கப்பட்டவர்கள். இவர்களே ஆட்டுக்குட்டியானவருக்கும் தேவனுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட முதல் மனிதர்கள். 5 இவர்கள் பொய் சொல்லும் குற்றத்துக்கு ஆளாகாதவர்கள். இவர்கள் குற்றம் அற்றவர்களாக இருக்கிறார்கள்.
மூன்று தேவதூதர்கள்
6 பிறகு, இன்னொரு தேவதூதன் உயரே காற்றில் பறந்து வருவதை நான் பார்த்தேன். பூமியிலே வாழ்கிற ஒவ்வொரு குல, தேச, மொழி, இனத்தவருக்கும் அறிவிக்கும்படியான நித்திய நற்செய்தியை அத்தூதன் வைத்திருந்தான். 7 அவன் உரத்த குரலில், “தேவனுக்கு பயப்படுங்கள். அவருக்கு புகழ் செலுத்துங்கள். அவர் எல்லா மக்களுக்கும் நீயாயத்தீர்ப்பு கொடுக்கும் வேளை வந்திருக்கிறது. தேவனை வழிபடுங்கள். அவர் பரலோகத்தைப் படைத்தார். பூமியையும், கடலையும் நீரூற்றுக்களையும் படைத்தார்” என்றான்.
8 பிறகு இரண்டாம் தேவதூதன் முதல் தூதனைப் பின்தொடர்ந்து வந்தான். அவன், “அவள் அழிக்கப்பட்டாள். பாபிலோன் என்னும் மாநகரம் அழிக்கப்பட்டது. அவள் தன் வேசித்தனமானதும் தேவனுடைய கோபமானதுமான மதுவை எல்லா தேசங்களுக்கும் குடிக்கக் கொடுத்தாள்” என்றான்.
9 மூன்றாவது தேவதூதன் மற்ற இரு தூதர்களையும் பின் தொடர்ந்து வந்தான். அவன் உரத்த குரலில், “எவனொருவன் மிருகத்தையும், மிருகத்தின் உருவத்தையும் வழிபடுகிறானோ, எவனொருவன் மிருகத்தின் அடையாளத்தைத் தன் முன்நெற்றியிலோ, கையிலோ பதித்துக்கொள்கிறானோ அவனுக்குக் கேடு உருவாகும். 10 அவன் தேவனுடைய கோபமாகிய மதுவைக் குடிப்பான். அவன் ஆட்டுக்குட்டியானவருக்கும், பரிசுத்த தேவதூதர்களுக்கும் முன்பாக அக்கினியாலும் கந்தகத்தாலும் துன்புறுத்தப்படுவான். 11 அவர்களது வாதையின் புகை சதா காலங்களிலும் எழும்பிக்கொண்டிருக்கும். மிருகத்தையும் அதன் உருவத்தையும் வழிபடுகிறவர்களுக்கும் அதன் பெயரின் அடையாளக் குறியை உடைய மக்களுக்கும் இரவும் பகலும் எக்காலமும் ஓய்வு இருக்காது” என்றான். 12 இதன் பொருள் யாதெனில் தேவனுடைய பரிசுத்தவான்கள் பொறுமையுடன் இருக்கவேண்டும். அவர்கள் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறவர்களாகவும், இயேசுவில் தம் விசுவாசத்தைப் பற்றிக்கொள்கிறவர்களாகவும் இருக்கவேண்டும்.
13 பிறகு, பரலோகத்தில் இருந்து ஒரு சத்தம் உண்டானதைக் கேட்டேன். அது “இதை எழுது: கிறிஸ்துவுக்குள் மரிக்கிறவர்கள் இப்பொழுதிலிருந்து ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” என்றது.
“ஆமாம் அவர்கள் தங்கள் கடினமான வேலைகளை விட்டுவிட்டு ஓய்வுபெறுவார்கள். அவர்களது செயல்கள் அவர்களோடு தங்கும், இது முற்றிலும் உண்மை” என்று ஆவியானவரும் கூறுகிறார்.
பூமி அறுவடையாகுதல்
14 நான் பார்த்தபோது எனக்கு முன்னால் ஒரு வெண்ணிற மேகத்தைக் கண்டேன். அம்மேகத்தின் மீது மனித குமாரனைப் போன்ற ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவரது தலையில் பொன் கிரீடம் இருந்தது. அவரது கையிலோ கூர்மையான அரிவாள் இருந்தது. 15 பிறகு இன்னொரு தேவதூதன் ஆலயத்திலிருந்து வெளியே வந்தான். அவன் மேகத்தின்மேல் இருப்பவரைப் பார்த்து, “அறுவடைக்கு உரிய காலம் வந்துவிட்டது. பூமியின் பயிரும் முதிர்ந்து விட்டது. எனவே உங்கள் அறிவாளை எடுத்து அறுவடை செய்யுங்கள்” என்றான். 16 அப்போது மேகத்தின்மேல் உட்கார்ந்திருந்தவர் தனது அரிவாளைப் பூமியின்மேல் நீட்டினார். பூமியின் விளைச்சல் அறுவடை ஆயிற்று.
17 பிறகு இன்னொரு தேவதூதன் பரலோகத்திலுள்ள ஆலயத்தை விட்டு வெளியே வந்தான். அவனும் ஒரு கூர்மையான அரிவாளை வைத்திருந்தான். 18 பின்பு இன்னொரு தேவதூதன் பலிபீடத்தில் இருந்து வெளியே வந்தான். நெருப்பின் மீது இவனுக்கு வல்லமை இருந்தது. கூர்மையான அரிவாளை வைத்திருந்த தேவதூதனை அழைத்து, அவன், “பூமியின் திராட்சைகள் பழுத்திருக்கின்றன. கூர்மையான உன் அரிவாளை எடு. பூமியின் திராட்சைக் குலைகளை கூரிய உன் அரிவாளால் அறுத்துச் சேகரி” என்று உரத்த குரலில் கூறினான். 19 அதனால் அத்தூதன் அரிவாளைப் பூமியின் மீது நீட்டி பூமியின் திராட்சைப் பழங்களை அறுத்து, தேவனுடைய கோபமாகிய பெரிய ஆலையிலே போட்டான். 20 நகரத்துக்கு வெளியிலிருந்த அந்த ஆலையிலே திராட்சைப் பழங்கள் நசுக்கப்பட்டன. அதிலிருந்து இரத்தம் வெளிப்பட்டது. அது குதிரைகளின் தலை உயரத்திற்கு 200 மைல் தூரத்துக்குப் பொங்கி எழுந்தது.
இறுதி வாதைகள்
15 பரலோகத்தில் நான் இன்னொரு அற்புதத்தைப் பார்த்தேன். அது பெரிதும் ஆச்சரியமுமானது. ஏழு தேவ தூதர்கள் ஏழு துன்பங்களைக் கொண்டு வந்தார்கள். இவை தான் இறுதியான துன்பங்கள். ஏனென்றால் இதற்குப் பிறகு தேவனுடைய கோபம் முடிந்துவிடுகிறது.
2 நெருப்பு கலந்த கண்ணாடிக் கடல் போன்ற ஒன்றைக் கண்டேன். மிருகத்தையும், அதன் உருவத்தையும் அதன் எண்ணையும் வென்ற மக்கள் அனைவரும் கடலருகே நின்றுகொண்டிருந்தனர். அவர்களிடம் தேவன் கொடுத்த இசைக் கருவிகள் இருந்தன. 3 அவர்கள் தேவனுடைய ஊழியராகிய மோசேயின் பாடலையும், ஆட்டுக்குட்டியானவரின் பாடலையும் பாடினர்:
“சர்வ வல்லமையுள்ள தேவனே!
நீர் செய்தவை எல்லாம் பெரியவை,
அற்புதமானவை. நாடுகளின் அரசரே!
உமது வழிகளெல்லாம் நீதியும் உண்மையுமானவை.
4 கர்த்தாவே! மக்கள் அனைவரும் உமக்கு அஞ்சுவார்கள்.
எல்லாரும் உம் பெயரைப் போற்றுவார்கள்.
நீர் ஒருவரே பரிசுத்தமானவர்
எல்லா மக்களும் உம் முன் வந்து உம்மை வழிபடுவார்கள்.
ஏனெனில் நீர் நீதியானவற்றையே செய்கிறீர் என்பது தெளிவு.”
5 இதற்குப் பிறகு பரலோகத்தில் நான் ஆலயத்தைப் பார்த்தேன். (இது தேவன் இருக்கிற பரிசுத்தமான இடம்) அந்த ஆலயம் திறக்கப்பட்டது. 6 ஏழு துன்பங்களையுடைய ஏழு தேவதூதர்களும் ஆலயத்திலிருந்து வெளியே வந்தனர். அவர்கள் பளபளக்கிற சுத்தமான மெல்லிய ஆடையை அணிந்திருந்தனர். அவர்கள் தம் மார்பைச் சுற்றி பொன்னால் ஆன கச்சைகளைக் கட்டியிருந்தார்கள். 7 நான்கு ஜீவன்களுள் ஒன்று ஏழு தேவ தூதர்களுக்கும் ஏழு பொற்கிண்ணங்களைக் கொடுத்தது. அக்கிண்ணங்கள் சதாகாலங்களிலும் ஜீவிக்கிற தேவனுடைய கோபத்தால் நிறைந்திருந்தன. 8 தேவனுடைய மகிமையிலிருந்தும் வல்லமையிலிருந்தும் வருகிற புகையால் ஆலயம் நிறைந்துவிட்டது. ஏழு தேவதூதர்களின் ஏழு துன்பங்களும் முடிகிறவரையில் எவராலும் ஆலயத்துக்குள் நுழைய முடியவில்லை.
தேவ கோபத்தின் கிண்ணங்கள்
16 பிறகு, நான் ஆலயத்தில் இருந்து ஒரு பெரிய சத்தத்தைக் கேட்டேன். அக்குரல் ஏழு தேவ தூதர்களிடம் “தேவனுடைய கோபத்தை பூமியின் மீது சென்று ஊற்றுங்கள்” என்றது.
2 முதல் தேவதூதன் போனான். அவன் தன் கிண்ணத்தில் இருந்ததை பூமியில் ஊற்றினான். பிறகு மிருகத்தின் அடையாளத்தை உடையவர்களும் அதன் உருவச்சிலையை வணங்கியவர்களுமாகிய மக்கள் அனைவருக்கும் அசிங்கமானதும் வேதனைமிக்கதுமான கொப்புளங்கள் உண்டாயின.
3 இரண்டாவது தேவதூதன் தன் கிண்ணத்தில் இருந்ததைக் கடலில் வீசினான். உடனே கடல் இறந்து போனவனின் இரத்தத்தைப் போலானது. கடலில் இருந்த ஒவ்வொரு உயிரினமும் இறந்தது.
4 மூன்றாவது தேவதூதன் தன் கிண்ணத்தில் இருந்ததை நதிகளிலும், நீர் ஊற்றுக்களிலும் வீசி எறிந்தான். அதனால் நதிகளும், நீர் ஊற்றுகளும் இரத்தமாயிற்று. 5 நீரின் தூதன் தேவனிடம் கூறுவதைக் கேட்டேன்: அவன்,
“எப்பொழுதும் இருக்கிறவரும் இருந்தவரும் நீர் ஒருவரே.
பரிசுத்தமான ஒருவரும் நீரே.
நீர் செய்த இந்நியாயத்தீர்ப்புகளில் நீர் நீதிமானாக இருக்கிறீர்.
6 உம்முடைய பரிசுத்தவான்களின் இரத்தத்தையும் உம்முடைய தீர்க்கதரிசிகளின் இரத்தத்தையும் மக்கள் சிந்தினர்.
அதனால் இப்பொழுது அவர்கள் குடிக்க இரத்தத்தையே கொடுத்தீர்கள்.
அவர்களுக்குத் தகுதியானது இதுவே”
என்று கூறினான்.
7 அதற்கு பலிபீடமானது,
“ஆம், சர்வவல்லமைமிக்க தேவனாகிய கர்த்தாவே,
உம் நியாயத்தீர்ப்புகள் உண்மையும் நீதியுமானவை”
என்று சொல்வதைக் கேட்டேன்.
8 நான்காவது தேவதூதன் தன் கிண்ணத்தில் இருந்ததைச் சூரியன் மீது போட்டான். அதனால் சூரியன் மக்களை நெருப்பாய் எரிக்கும் சக்தியைப் பெற்றது. 9 மக்கள் பெரு வெப்பத்தால் எரிக்கப்பட்டனர். அவர்கள் தேவனுடைய பெயரை சபித்தார்கள். இது போன்ற துன்பங்களை எல்லாம் கட்டுப்படுத்தக் கூடியவர் தேவன் ஒருவரே ஆவார். ஆனால் மக்களோ தங்கள் இதயத்தையும் வாழ்வையும் மாற்றி தேவனுக்கு மகிமை செலுத்த மறுத்தனர்.
10 ஐந்தாவது தேவதூதன் தன் கிண்ணத்தில் இருந்தவற்றை மிருகத்தின் சிம்மாசனத்தின்மீது எறிந்தான். அதனால் மிருகத்தின் இராஜ்யம் இருண்டுபோனது. மக்கள் வேதனையால் தங்கள் நாவுகளைக் கடித்துக்கொண்டனர். 11 மக்கள் தம் வலியின் நிமித்தமாகவும் தம் கொப்புளங்களின் நிமித்தமாகவும் பரலோகத்தின் தேவனை சபித்தார்கள். ஆனால் அவர்கள் தங்கள் மனதை மாற்றிக்கொள்ளவோ, தங்கள் தீய செயல்களில் இருந்து விலகவோ விரும்பவில்லை.
12 ஆறாம் தேவதூதன் தன் கிண்ணத்தில் இருந்ததை ஐபிராத்து என்னும் பெரிய ஆற்றில் எறிந்தான். அதிலுள்ள நீர் வற்றிப்போனது. அதனால் கீழ்நாட்டில் உள்ள அரசர்கள் வர வழி தயார் ஆயிற்று. 13 பின்பு நான், தவளைபோல தோற்றம் அளித்த மூன்று அசிங்கமான கெட்ட ஆவிகளைக் கண்டேன். இராட்சச பாம்பின் வாயிலிருந்தும், மிருகத்தின் வாயிலிருந்தும், போலித் தீர்க்கதரிசியின் வாயில் இருந்தும் அவை வெளி வந்தன. 14 இந்தக் கெட்ட ஆவிகளே பிசாசுகளின் ஆவிகள். அவை அற்புதங்களைச் செய்யும் ஆற்றல் பெற்றிருக்கின்றன. அவை உலகிலுள்ள அத்தனை அரசர்களிடமும் செல்கின்றன. சர்வவல்லமையுள்ள தேவனின் மாபெரும் நாளின் யுத்தத்திற்கு அரசர்களை ஒன்று திரட்ட அவை வெளியே செல்கின்றன.
15 “கவனியுங்கள். ஒரு திருடனைப்போல நான் வருவேன். எவன் விழித்துக்கொண்டும், தன்னுடன் தன் ஆடைகளை வைத்துக்கொண்டும் இருக்கிறானோ அவன் மகிழ்ச்சியாய் இருப்பான். பிறகு அவன் நிர்வாணமாக அலையமாட்டான். மற்றவர்கள் பார்வையில் வெட்கப்படாமல் இருப்பான்.”
16 கெட்ட ஆவிகள் அரசர்களை ஓரிடத்தில் ஒன்று சேர்த்தன. அந்த இடத்தின் பெயர் எபிரேய மொழியில் அர்மெகதோன் என்று அழைக்கப்படுகிறது.
17 ஏழாவது தேவதூதன் தன் கிண்ணத்தில் இருந்தவற்றைக் காற்றில் தூவினான். அதனால் ஆலயத்திலுள்ள சிம்மாசனத்தில் இருந்து ஒரு பெரும் குரல் ஒலித்தது. அது, “அது முடிந்தது” என்று சொன்னது. 18 பிறகு மின்னல்கள் மின்னின, ஓசைகள் எழுந்தன, இடி முழங்கியது. பூமி அதிர்ந்தது. பூமியில் மனிதர்கள் படைக்கப்பட்ட பிறகு உருவான நில அதிர்ச்சியிலேயே இதுதான் மிக மோசமான நில அதிர்ச்சி. 19 மிகப் பெரிய அந்த நகரம் மூன்றாகப் பிளந்துபோயிற்று. நாடுகளில் உள்ள நகரங்கள் அழிந்துபோயின. தேவன் மகா நகரமாகிய பாபிலோனைத் தண்டிக்க மறக்கவில்லை. அந்த நகரத்துக்கு அவர் தனது கடுமையான கோபமாகிய மது நிறைந்த கோப்பையைக் கொடுத்தார். 20 எல்லா தீவுகளும் மறைந்தன. மலைகள் எல்லாம் இல்லாமல் போயின. 21 இராட்சசத்தனமான கல்மழை வானில் இருந்து மக்கள் மீது பெய்தது. ஒவ்வொரு மழைக்கல்லும் ஒரு உப்பு மூட்டையினைப் போன்று கனத்திருந்தது. இந்தப் பெருந்துன்பத்தால் மக்கள் தேவனை மேலும் சபித்தார்கள். இத்துன்பம் மகா துன்பமாய் இருந்தது.
2008 by World Bible Translation Center