Beginning
1 இது இயேசு கிறிஸ்து வெளிப்படுத்தின விசேஷம். [a] விரைவில் நடைபெறப் போகிறவை எவையென்று தன் ஊழியர்களுக்குத் தெரிவிக்கும்பொருட்டு இயேசுவுக்கு தேவன் இதை வழங்கினார். கிறிஸ்து தன் தேவதூதனை அனுப்பி தன் ஊழியனாகிய யோவான் இதனைத் தெரிந்துகொள்ளுமாறு செய்தார். 2 தான் பார்த்த எல்லாவற்றையும் யோவான் சொல்லி இருக்கிறான். தேவனிடமிருந்து வருகிற செய்தியாகிய இவ்வுண்மையையே இயேசு அவனிடம் சொன்னார். 3 தேவனிடமிருந்து வந்த இச்செய்திகளை வாசிக்கிற எவனும் ஆசீர்வதிக்கப்பட்டவன். இச்செய்தியைக் கேள்விப்படுகிறவர்களும் இதில் எழுதியுள்ளபடி நடக்கின்றவர்களும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். காலம் குறுகினதாயிருக்கிறது.
இயேசுவின் செய்திகளை சபைகளுக்கு யோவான் எழுதுகிறார்
4 ஆசியாவில் உள்ள ஏழு சபைகளுக்கும் யோவான் எழுதுவது:
எப்பொழுதும் இருக்கிறவரும் இருந்தவரும் இனிமேல் வரப்போகிறவருமான ஒருவராலும், அவரது சிம்மாசனத்துக்கு முன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும், இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்கு இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக. 5 இயேசுவே உண்மையுள்ள சாட்சியாக இருக்கிறார். மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்தவர்களுள் முதலானவர் அவரே ஆவார்.
பூமியில் உள்ள அரசர்களுக்கு எல்லாம் அதிபதி இயேசு. 6 இயேசுவே நம்மை நேசிக்கிறவர். அவரே தமது இரத்தத்தால் நமது பாவங்களில் இருந்து நம்மை விடுதலை செய்தவர். தமது பிதாவாகிய தேவனின் முன்னிலையில் நம்மை ஆசாரியர்களாக்கி, அரசு ஒன்றை உருவாக்கியிருக்கிறார். அவருக்கு மகிமையும், வல்லமையும் எப்போதும் உண்டாவதாக! ஆமென்.
7 பாருங்கள், இயேசு மேகங்களுடனே வருகிறார். ஒவ்வொருவரும் அவரைக் காண்பார்கள். அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள். பூமியில் உள்ள அனைத்து மக்களும் அவரைப் பார்த்து, அவருக்காகப் புலம்புவார்கள். ஆமாம், அது அப்படியே நடக்கும். ஆமென்.
8 கர்த்தர் கூறுகிறார்: “நான் அல்பாவும் ஒமேகாவுமாய் [b] இருக்கிறேன். நான் இருக்கிறவராகவும், இருந்தவராகவும், இனி வருகிறவருமாய் இருக்கிற சர்வவல்லமை உள்ளவராயிருக்கிறேன்.”
9 நான் யோவான், கிறிஸ்துவில் நான் உங்கள் சகோதரன். இயேசுவின் நிமித்தம் வரும் துன்பங்களுக்கும், இராஜ்யத்துக்கும், பொறுமைக்கும் நாம் பங்காளிகள். தேவனின் செய்தியைப் போதித்துக்கொண்டிருந்ததற்காகவும், இயேசுவைப் பற்றிய சாட்சியின் நிமித்தமாகவும் பத்மு [c] என்னும் தீவிற்கு நான் நாடுகடத்தப்பட்டேன். 10 கர்த்தருடைய நாளில் பரிசுத்த ஆவியானவர் என்னை ஆட்கொண்டார். அப்பொழுது ஒரு பெரிய சத்தத்தை எனக்குப் பின்பாகக் கேட்டேன். அது எக்காள சத்தம்போல் இருந்தது. 11 அந்த சத்தம், “நீ பார்க்கின்ற எல்லாவற்றையும் ஒரு புத்தகத்தில் எழுது. அதனை ஏழு சபைகளுக்கும் அனுப்பு. அவை ஆசியாவில் உள்ள எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் நகரங்களில் உள்ளன” என்று கூறியது.
12 என்னோடு பேசிக்கொண்டிருந்தவர் யார் என அறிய நான் திரும்பிப் பார்த்தேன். நான் ஏழு பொன்னாலான குத்துவிளக்குகளைப் பார்த்தேன். 13 அவற்றுக்கு மத்தியில் “மனித குமாரனைப் போன்ற” ஒருவரைக் கண்டேன். அவர் நீண்ட மேல் அங்கியை அணிந்திருந்தார். அவர் மார்பில் பொன்னால் ஆன கச்சை கட்டப்பட்டிருந்தது. 14 அவரது தலையும், முடியும் வெண்பஞ்சைப்போலவும், பனியைப்போலவும் வெளுப்பாய் இருந்தது. அவரது கண்கள் அக்கினி சுவாலையைப் போன்றிருந்தன. 15 அவரது பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்துகொண்டிருக்கிற ஒளிமிக்க வெண்கலம்போல் இருந்தன. அவரது சத்தம் பெருவெள்ளத்தின் இரைச்சலைப்போல் இருந்தது. 16 அவர் தனது வலதுகையில் ஏழு நட்சத்திரங்களைப் பிடித்துக்கொண்டிருந்தார். அவர் வாயில் இருந்து இருபக்கமும் கூர்மையுள்ள வாள் வெளிப்பட்டது. அவர் முகம் உச்சி நேரத்தில் ஒளிவீசும் சூரியனைப்போல ஒளி வீசியது.
17 நான் அவரைக் கண்டதும் இறந்தவனைப்போல அவரது பாதங்களில் விழுந்தேன். அவர் தனது வலது கையை என்மீது வைத்து, பயப்படாதே, நானே முந்தினவரும், பிந்தினவரும் ஆக இருக்கிறேன். 18 நான் வாழ்கிற ஒருவராக இருக்கிறேன். நான் இறந்தேன். ஆனால் இப்போது சதாகாலங்களிலும் உயிரோடு இருக்கிறேன். என்னிடம் மரணத்துக்கும், பாதாளத்துக்கும் உரிய திறவுகோல்கள் உள்ளன. 19 எனவே, நீ பார்த்தவற்றையெல்லாம் எழுது. இப்பொழுது நடப்பதையும், இனிமேல் நடக்கப்போவதையும் எழுது. 20 எனது வலது கையில் உள்ள ஏழு நட்சத்திரங்களின் இரகசியத்தையும் ஏழு பொன் குத்துவிளக்குகளின் இரகசியத்தையும் எழுது. நீ கண்ட ஏழு குத்து விளக்குகளும் ஏழு சபைகளாகும். ஏழு நட்சத்திரங்களும் அந்தச் சபைகளில் உள்ள தூதர்களாகும்.
எபேசு சபைக்கு இயேசுவின் நிருபம்
2 “எபேசு சபையின் தூதனுக்கு எழுத வேண்டியது:
“தனது வலதுகையில் ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டு ஏழு பொன் குத்துவிளக்குகளின் மத்தியிலே உலாவுகிறவர் உனக்கு இதனைக் கூறுகின்றார்.
2 “நீ என்ன செய்கிறாய் என்று எனக்குத் தெரியும். நீ கடினமாக வேலை செய்கிறாய். உன் செயல்களை நீ விட்டுவிடுவதில்லை. கெட்ட மக்களை நீ ஏற்றுக்கொள்வதில்லை என்று எனக்குத் தெரியும். உண்மையில் அப்போஸ்தலர்கள் இல்லாமல் வெளியே தங்களை அப்போஸ்தலர் என்று சொல்லித் திரிபவர்களை நீ சோதனை செய்திருக்கிறாய். அவர்கள் பொய்யர்கள் என்பதைக் கண்டு பிடித்திருக்கிறாய். 3 நீ விலகிப் போகாமல், தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருக்கிறாய். நீ என் நிமித்தம் துன்பங்களைத் தாங்கிக்கொள்கிறாய். நீ இவற்றைச் செய்வதில் சோர்வு இல்லாமலும் இருக்கிறாய்.
4 “ஆனால் சில காரியங்களில் உன்மேல் எனக்குக் குறை உண்டு. நீ துவக்க காலத்தில் கொண்டிருந்த அன்பை இப்போது விட்டு விட்டாய். 5 எனவே விழுவதற்கு முன்பு எங்கிருந்தாய் என்பதை நினைத்துப்பார். உன் மனதை மாற்றிக்கொள். துவக்க காலத்தில் செய்தவைகளை தொடர்ந்து செய். நீ மாறாவிட்டால் நான் உன்னிடம் வந்து உனது விளக்குத்தண்டை அதனிடத்தில் இருந்து நீக்கிவிடுவேன். 6 ஆனால் நீ செய்கிறதில் சரியானவையும் உண்டு. நான் வெறுப்பதைப்போலவே நீ நிக்கொலாய்கள் [d] செய்வதை வெறுக்கிறாய்.
7 “ஆவியானவர் சபைகளுக்குச் சொல்வதைக் கேட்கிற யாவரும் கவனிக்க வேண்டும். வெற்றி பெறுகிறவனுக்கு தேவனுடைய தோட்டத்திலுள்ள ஜீவவிருட்சத்தின் கனியைச் சாப்பிடும் உரிமையை நான் கொடுப்பேன்.”
சிமிர்னா சபைக்கு இயேசுவின் நிருபம்
8 “சிமிர்னா சபையின் தூதனுக்கு எழுத வேண்டியது:
“துவக்கமும், முடிவுமாயிருப்பவர் இவைகளை உனக்குக் கூறுகின்றார். அவர்தான் இறந்து, மரணத்தில் இருந்து மீண்டும் உயிருடன் எழுந்தவர்.
9 “உங்கள் துன்பங்களை நான் அறிவேன். நீங்கள் ஏழைகள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் உண்மையில் நீங்கள் செல்வந்தர்கள். தம்மைத் தாமே யூதர்கள் என்று அழைத்துக்கொள்கிறவர்களால் உங்களைப் பற்றிச் சொல்லப்பட்ட கெட்ட செய்திகளை நான் அறிவேன். ஆனால் உண்மையில் அவர்கள் யூதர்கள் அல்ல. அவர்கள் சாத்தானின் கூட்டத்தினர். 10 உங்களுக்கு நிகழ்வதைக் குறித்து அச்சப்படவேண்டாம். பிசாசு உங்களில் சிலரைச் சிறையில் போடுவான். அவன் உங்களைச் சோதிப்பதற்காகவே அவ்வாறு செய்கிறான். நீங்கள் பத்து நாட்கள் துன்பப்படுவீர்கள். ஆனால் இறக்க வேண்டியதாக இருந்தாலும் உண்மையானவர்களாக இருங்கள். நீ இறுதிவரை உண்மையாயிருந்தால் ஜீவ கிரீடத்தை உனக்குத் தருவேன்.
11 “சபைகளுக்கு ஆவியானவர் கூறுவதைக் கேட்கிற யாவரும் கவனிக்க வேண்டும். ஜெயம் பெறுகிறவன் எவனோ, அவன் இரண்டாவது மரணத்தினால் பாதிக்கப்படமாட்டான்.”
பெர்கமு சபைக்கு இயேசுவின் நிருபம்
12 “பெர்கமு சபையின் தூதனுக்கு எழுத வேண்டியது:
“இருபக்கமும் கூர்மையான வாளைக்கொண்டிருக்கிறவர் இதனை உங்களுக்குக் கூறுகிறார்.
13 “நீ எங்கே வாழ்கிறாய் என்று எனக்குத் தெரியும். சாத்தானுடைய சிம்மாசனம் இருக்கிற இடத்தில் நீ இருக்கிறாய். ஆனால் நீ எனக்கு உண்மையானவனாக இருக்கிறாய். அந்திப்பாசின் காலத்திலும் என்மீதுள்ள உன்Ԕ விசுவாசத்தை நீ மறுத்ததில்லை. அந்திப்பா எனது உண்மையுள்ள சாட்சி. அவன் உங்கள் நகரத்தில் கொல்லப்பட்டான். உங்கள் நகரம் சாத்தான் வாழுமிடம்.
14 “ஆனாலும் உனக்கு எதிரான சில காரியங்கள் என்னிடம் உண்டு. உங்கள் கூட்டத்தில் உள்ள சிலர் பிலேயாமின் உபதேசத்தைப் பின்பற்றிக்கொண்டிருக்கிறார்கள். பிலேயாம் இஸ்ரவேலைப் பாவத்துக்கு வழி நடத்த பாலாக் என்பவனால் பலவந்தப்படுத்தப்பட்டவனாவான். இதனால் அவர்கள் விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதை உண்டு, பாலியல் பாவங்களும் செய்தனர். 15 இதுபோலவே உங்கள் கூட்டத்தில் நிக்கொலாய் மதத்தவர்களின் போதகத்தைப் பின்பற்றுகிறவர்களும் இருக்கிறார்கள். 16 எனவே உங்கள் மனதை மாற்றிக்கொள்ளுங்கள். மாறாவிட்டால் நான் விரைவில் உங்களிடம் வருவேன். என் வாயின் வாளால் அவர்களோடு போரிடுவேன்.
17 “சபைகளுக்கு ஆவியானவர் கூறுவதைக் கேட்கிற யாவரும் கவனிக்கவேண்டும்!
“ஜெயம் பெறுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைக் கொடுப்பேன். [e] அதோடு அவனுக்கு வெள்ளைக் கல்லையும் கொடுப்பேன். அக்கல்லில் புதிய பெயர் எழுதப்பட்டிருக்கும். ஒருவருக்கும் அந்தப் பெயர் தெரியாது. அக்கல்லை எவன் பெறுகிறானோ அவன் ஒருவனே அந்தப் புதிய பெயரை அறிந்துகொள்வான்.”
தியத்தீரா சபைக்கு இயேசுவின் நிருபம்
“தியத்தீரா சபையின் தூதனுக்கு எழுத வேண்டியது:
18 “தேவனின் குமாரன் இவற்றைக் கூறுகிறார். அவர் ஒருவரே அக்கினிபோல ஒளிவிடும் கண்களையும், பிரகாசமான வெண்கலம் போன்ற ஒளி தரும் பாதங்களையும் கொண்டவர். அவர் உனக்குச் சொல்வது இது தான்.
19 “நீ செய்கின்றவற்றை நான் அறிவேன். நான் உன் அன்பையும், விசுவாசத்தையும், சேவையையும், பொறுமையையும் அறிவேன். துவக்கக்காலத்தை விட இப்போது நீ அதிகமாகச் செய்வதையும் நான் அறிவேன். 20 எனினும் உனக்கு எதிரான சில காரியங்கள் என்னிடம் உள்ளன. ஏசபேல் என்னும் பெண்ணுக்குத் தனது விருப்பம்போல வாழ நீ இடம் கொடுக்கிறாய். அவள் தன்னைத் தீர்க்கதரிசி என்கிறாள். அவள் தன் உபதேசத்தால் என் மக்களை என்னைவிட்டுத் தூரமாக்குகின்றாள். அவளால் அவர்கள் பாலியல் பாவங்களைச் செய்கிறார்கள். மற்றும் விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதை உண்கிறார்கள். 21 அவள் தன் மனதை மாற்றிக்கொள்ளவும், தன் பாவங்களில் இருந்து விலகவும் நான் அவகாசம் கொடுத்தேன். ஆனால் அவள் மாற விரும்பவில்லை.
22 “எனவே அவளையும், அவளோடு பாவம் செய்தவர்களையும் நான் அவளுடைய படுக்கையில் எறிந்து அவர்களை மிகவும் வருந்தச் செய்வேன். அவளுடைய செய்கைகளிலிருந்து அவர்கள் மாறாவிட்டால். 23 நான் இப்பொழுதே இதனை நிகழ்த்துவேன். அவளைப் பின்பற்றுகிறவர்களையும் நான் கொல்லுவேன். அப்பொழுது எல்லாச் சபைகளும், ‘நான் மக்களின் எண்ணங்களையும், உணர்வுகளையும் அறிந்துள்ளவர்’ என்பதை அறிவார்கள். உங்களில் ஒவ்வொருவருக்கும் உங்கள் செயல்களுக்கு ஏற்றபலன் தருவேன்.
24 “ஆனால் தியத்தீராவில் உள்ள மற்றவர்கள் சிலர் அவளது போதகத்தைப் பின்பற்றவில்லை. அவர்கள் சொல்லும் சாத்தானின் ஆழமான ரகசியங்களையும் நீ அறிந்திருக்கவில்லை. எனவே உங்கள் மீது இதைத்தவிர வேறு சுமைகளை சுமத்தமாட்டேன். 25 நான் வருகிறவரை இதனையே தொடர்ந்து செய்துவாருங்கள்.
26 “இதில் இறுதிவரை இதுபோல் இருந்து வெற்றி பெறுகிறவர்களுக்கு மற்ற தேசங்களின் மேல் நான் அதிகாரத்தைக் கொடுப்பேன்.”
27 “‘அவன் அவர்களை இரும்புக் கோலால் ஆள்வான்.
மண்பாண்டங்களைப்போல் தூள்தூளாக அவர்களை நொறுக்குவான்.’ (A)
28 “என் பிதாவிடமிருந்து இந்த வல்லமையை நான் பெற்றுக்கொண்டேன். மேலும் நான் அவனுக்கு விடிவெள்ளி நட்சத்திரத்தைக் கொடுப்பேன்.” 29 சபைகளுக்கு ஆவியானவர் கூறுவதைக் கேட்கின்ற யாவரும் கவனிக்க வேண்டும்.
சர்தை சபைக்கு இயேசுவின் நிருபம்
3 “சர்தை சபையின் தூதனுக்கு எழுத வேண்டியது:
“ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் கொண்டிருக்கிறவர் இவைகளை உனக்கு கூறுகிறார்.
“நீங்கள் செய்பவற்றை நான் அறிவேன். நீங்கள் உயிர் வாழ்வதாக மக்கள் கூறுகிறார்கள். ஆனால் உண்மையில் நீங்கள் செத்துப் போனவர்களே. 2 எழும்புங்கள். செத்துப்போகிற நிலையில் உள்ளவற்றை வலிமையுள்ளதாய் ஆக்குங்கள். முழுமையாய் சாகும் முன் பலப்படுத்திக்கொள்ளுங்கள். தேவனுக்கு நீ செய்ததெல்லாம் போதுமானதாக இல்லை என நான் காண்கின்றேன். 3 எனவே நீங்கள் பெற்றவற்றையும், கேள்விப்பட்டவற்றையும் மறவாதீர்கள். அவற்றுக்கு அடிபணியுங்கள். உங்கள் மனதையும், வாழ்வையும் மாற்றுங்கள். நீங்கள் விழித்தெழுங்கள். அல்லது நான் திருடனைப்போல வந்து உங்களை ஆச்சரியப்படுத்துவேன். எப்பொழுது நான் வருவேன் என உங்களுக்குத் தெரியாது.
4 “ஆனால் உங்கள் குழுவில் சிலர் பரிசுத்தமானவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் என்னோடு நடப்பார்கள். அவர்கள் வெள்ளை ஆடைகளை அணிவார்கள். ஏனென்றால் அதற்கு அவர்கள் தகுதியானவர்கள். 5 வெற்றிபெறுகிற ஒவ்வொருவரும் இவர்களைப்போல் வெண்ணிற ஆடைகளை அணிந்துகொள்வார்கள். நான் அவர்களது பெயர்களை ஜீவப் புத்தகத்திலிருந்து எடுத்துப்போட மாட்டேன். அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள். இதனை நான் என் பிதாவின் முன்பும், தூதர்களுக்கு முன்பும் சொல்வேன்.” 6 சபைகளுக்கு ஆவியானவர் சொல்வதை கேட்கிற யாவரும் கவனிக்க வேண்டும்.
பிலதெல்பியா சபைக்கு இயேசுவின் நிருபம்
7 “பிலதெல்பியா சபையின் தூதனுக்கு எழுத வேண்டியது:
“உண்மையுள்ளவரும் பரிசுத்தமுள்ளவரும் இவைகளை உனக்குக் கூறுகிறார். அவர் தாவீதின் திறவுகோலை உடையவராக இருக்கின்றார். அவர் ஒரு கதவைத் திறந்தால், அதை யாராலும் மூட முடியாது. மேலும் அவர் கதவை மூடினால் யாராலும் அதைத் திறக்க முடியாது.
8 “நீ செய்பவற்றை நான் அறிவேன். நான் உங்களுக்கு முன்னால் திறந்த வாசலை வைக்கிறேன். அதனை எவராலும் அடைக்க முடியாது. நீங்கள் பலவீனமானவர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் என் உபதேசத்தை நீங்கள் பின்பற்றினீர்கள். என் பெயரைச் சொல்ல நீங்கள் பயப்படவில்லை. 9 கவனியுங்கள். சாத்தானைச் சேர்ந்த கூட்டம் ஒன்று உள்ளது. அவர்கள் தம்மை யூதர்கள் எனக் கூறுகிறார்கள். உண்மையில் அவர்கள் பொய்யர்களே! அவர்கள் உண்மையான யூதர்கள் அல்லர். அவர்களை உங்கள் முன் அடிபணிந்து வணங்கச்செய்வேன். என்னால் நேசிக்கப்படுகிற மக்கள் நீங்கள் என்பதை அவர்கள் அறிவர். 10 எனது கட்டளைகளை நீங்கள் பின்பற்றிப் பொறுமையாக இருந்தீர்கள். அதனால் துன்ப காலத்தில் உங்களைப் பாதுகாப்பேன். முழு உலகமும் துன்பப்படும்போது நீங்கள் தப்பித்துக்கொள்வீர்கள். அத்துன்பம் உலகில் வாழும் மக்களைச் சோதிக்கும்.
11 “நான் விரைவில் வருகிறேன். இப்பொழுது உள்ள வழியில் தொடர்ந்து செல்லுங்கள். அப்பொழுது எவராலும் உங்கள் கிரீடத்தை எடுத்துக்கொள்ள முடியாது. 12 இதில் வெற்றி பெறுகிறவன் என் தேவனின் ஆலயத்தில், சிறந்த தூணாக விளங்குவான். இதில் வெற்றி பெறுகிறவனுக்காக நான் இதனைச் செய்வேன். அவன் எப்போதும் தேவனின் ஆலயத்தை விட்டு விலகமாட்டான். அவன் மேல் எனது தேவனின் பெயரை எழுதுவேன். அவன் மேல் எனது தேவனுடயை நகரத்தின் பெயரையும் எழுதுவேன். அந்த நகரத்தின் பெயர் புதிய எருசலேம். பரலோகத்திலிருக்கின்ற என் தேவனிடமிருந்து இந்நகரம் இறங்கி வந்துகொண்டிருக்கின்றது. நான் எனது புதிய பெயரையும் அவன் மீது எழுதுவேன்.” 13 சபைகளுக்கு ஆவியானவர் கூறுவதைக் கேட்கின்ற யாவரும் கவனிக்க வேண்டும்.
லவோதிக்கேயா சபைக்கு இயேசுவின் நிருபம்
14 “லவோதிக்கேயா சபைக்கு எழுத வேண்டியது:
“ஆமென் [f] என்பவர் உங்களுக்கு இவற்றைக் கூறுகிறார். அவரே உண்மையும் சத்தியமும் உள்ள சாட்சி. தேவனால் படைக்கப்பட்டவற்றையெல்லாம் ஆள்பவர் அவர்.
15 “அவர் கூறுவது: நீ செய்பவற்றை நான் அறிவேன். நீ அனலானவனும் அல்ல, குளிர்ந்தவனும் அல்ல. ஆனால் நீ குளிராகவோ அனலாகவோ இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். 16 நீ வெப்பமாக மட்டுமே உள்ளாய். நீ அனலாகவோ குளிராகவோ இல்லை. எனவே உன்னைத் துப்பி விடத் தயாராக உள்ளேன். 17 உன்னைச் செல்வன் என்று நீ சொல்லிக்கொள்கிறாய். உன்னிடம் எல்லாம் உள்ளது. உனக்கு எதுவும் தேவை இல்லை என்று நீ நினைக்கிறாய். ஆனால் உண்மையில் நீ பரிதாபத்திற்குரியவன், ஏழை, குருடன், நிர்வாணி. 18 நெருப்பால் தூய்மையாக்கப்பட்ட தங்கத்தை என்னிடமிருந்து வாங்குமாறு உனக்கு நான் அறிவுறுத்துகிறேன். பின்னரே நீ உண்மையான செல்வந்தன் ஆவாய். வெண்ணிற ஆடையை வாங்கிக்கொள்ளுங்கள். பிறகு நீங்கள் நிர்வாணத்தை மூடிக்கொள்ளலாம். உங்கள் கண்களுக்கான மருந்தை வாங்கிக்கொள்ளுங்கள். பிறகு உங்களால் உண்மையாகப் பார்க்க முடியும்.
19 “நான் நேசிக்கிற மக்களைத் திருத்துவேன், தண்டிப்பேன். எனவே கடினமாய் முயற்சி செய்யுங்கள். உங்கள் மனதையும் வாழ்வையும் மாற்றிக்கொள்ளுங்கள். 20 இதோ நான் கதவருகில் நின்று தட்டுகிறேன். எனது குரலைக் கேட்டு ஒருவன் கதவைத் திறந்தால், நான் உள்ளே வந்து அவனோடு உணவு உண்பேன். அவனும் என்னோடு உணவு உண்பான்.
21 “வெற்றி பெறுகிற ஒவ்வொருவனையும் என் சிம்மாசனத்தில் என்னோடு அமரச் செய்வேன். அதுபோலவே நான் வெற்றிகொண்டு என் பிதாவோடு சிம்மாசனத்தில் உட்கார்ந்தேன். 22 கேட்கிற சக்திகொண்ட ஒவ்வொருவனும் ஆவியானவர் சபைகளுக்குக் கூறுவதைக் கேட்பானாக.”
2008 by World Bible Translation Center