Print Page Options
Previous Prev Day Next DayNext

Beginning

Read the Bible from start to finish, from Genesis to Revelation.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
2 யோவான்

மூப்பனாகிய நான், தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்ணிற்கும் [a] அவளது குழந்தைகளுக்கும் எழுதுவது. நான் உங்கள் அனைவரையும் உண்மையான நற்செய்தியின்படி நேசிக்கிறேன். உண்மையை அறிந்த அனைவரும் உங்களை நேசிக்கிறார்கள். நம் அனைவருக்குள்ளும் இருக்கிற உண்மையால் நாங்கள் உங்களை நேசிக்கிறோம். என்றென்றைக்கும் இந்த உண்மை நம்மோடு கூட இருக்கும்.

பிதாவாகிய தேவனிடமிருந்தும், அவரது மகனாகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் கிருபையும், இரக்கமும், சமாதானமும், அமைதியும் நம்மோடு இருப்பதாக. உண்மை, அன்பு, ஆகியவற்றின் மூலமாக நாம் இந்த ஆசீர்வாதங்களைப் பெறுகிறோம்.

உங்கள் குழந்தைகளில் சிலரைக் குறித்து அறிவதில் நான் சந்தோஷமடைகிறேன். பிதா நமக்குக் கட்டளையிட்டபடியே, அவர்கள் உண்மையின் வழியைப் பின்பற்றுகிறார்கள் என்பதை அறிந்து நான் சந்தோஷப்படுகிறேன். இப்போதும், அன்பான பெண்மணியே, நான் உனக்குக் கூறுகிறேன், நாம் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும். இது புதுக் கட்டளையல்ல, தொடக்கத்திலிருந்தே, நாம் பெற்ற அதே கட்டளையாகும். நாம் வாழும்படியாக அவர் கட்டளையிட்ட வழியில் வாழ்வதே அன்புகாட்டுவதாகும். தேவனின் கட்டளையும் இதுவே. நீங்கள் அன்பின் வாழ்க்கையை வாழுங்கள். தொடக்கத்தில் இருந்தே நீங்கள் கேள்விப்பட்ட கட்டளையும் இது தான்.

இப்போது உலகில் அநேக தவறான போதகர்கள் இருக்கிறார்கள். இயேசு கிறிஸ்து பூமிக்கு வந்து ஒரு மனிதனானார் என்பதை இந்தத் தவறான போதகர்கள் சொல்ல மறுக்கிறார்கள். இந்த உண்மையை சொல்ல மறுக்கிற மனிதன் தவறான போதகனும் போலிக் கிறிஸ்துவுமாயிருக்கிறான். எச்சரிக்கையாயிருங்கள்! உங்கள் செயல்களுக்குரிய நற்பலனை இழந்துவிடாதிருங்கள். உங்களுக்குரிய எல்லாப் பலன்களையும் பெறுவதில் எச்சரிக்கையாக இருங்கள்.

கிறிஸ்துவின் போதனைகளை மட்டுமே பின்பற்றுவதை ஒருவன் தொடரவேண்டும். கிறிஸ்துவின் போதனைகளை ஒருவன் மாற்றினால், அம்மனிதனிடம் தேவன் இல்லை. ஆனால் தேவனின் போதனைகளைத் தொடர்ந்து ஒரு மனிதன் பின்பற்றினால், அம்மனிதன் பிதா, குமாரன் ஆகிய இருவரையும் ஏற்றுக்கொள்கிறான். 10 ஒருவன் இப்போதனையைக் கொண்டுவராமல் உங்களிடம் வந்தால் அவனை உங்கள் வீட்டில் ஏற்காதீர்கள். அவனை வரவேற்காதீர்கள். 11 நீங்கள் அவனை ஏற்றுக்கொண்டால் அவனது தீயசெயல்களுக்கும் நீங்களும் உதவியவராவீர்கள்.

12 நான் உங்களிடம் கூற வேண்டியது மிகுதி. ஆனால் தாளையும், மையையும் பயன்படுத்த விரும்பவில்லை. பதிலாக, உங்களிடம் வர எண்ணுகிறேன். அப்போது நாம் ஒருமித்துப் பேச இயலும். அது நம்மை மகிழ்ச்சிக்குள்ளாக்கும். 13 தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட உங்கள் சகோதரியின் குழந்தைகள் தங்கள் அன்பை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறார்கள்.

3 யோவான்

மூப்பனாகிய நான், உண்மையினால் நான் நேசிக்கும் எனது அன்பான நண்பன் காயுவுக்கு எழுதுவது,

எனது அன்பான நண்பனே, உனது ஆன்மா நலமாயிருக்கும் வண்ணம் ஒவ்வொரு வகையிலும் நீ நலமாயிருக்க வேண்டுமென நான் பிரார்த்திக்கிறேன். உனது வாழ்க்கையில் உள்ள உண்மையைக் குறித்துச் சில சகோதரர்கள் என்னிடம் வந்து கூறினர். உண்மையின் வழியை நீ தொடர்ந்து பின்பற்றுவதை அவர்கள் எனக்குக் கூறினர். இது எனக்கு சந்தோஷம் கொடுத்தது. உண்மையின் வழியை எனது பிள்ளைகள் பின்பற்றுகிறார்கள் என்பதைக் கேட்கும்போது எனக்கு அளவு கடந்த சந்தோஷம் உண்டாகிறது.

எனது அன்பான நண்பனே, கிறிஸ்துவில் சகோதரருக்கு உதவுவதில் நீ தொடர்ந்து ஈடுபடுவது நல்லது. உனக்குத் தெரியாத சகோதரருக்கும் நீ உதவிக்கொண்டிருக்கிறாய்! இச்சகோதரர்கள் உனது அன்பைக் குறித்து சபைக்கு கூறினர். அவர்கள் பயணத்தைத் தொடருவதற்குத் தயவு செய்து நீ உதவு, தேவனை மகிழ்ச்சிப்படுத்தும் வழியில் அவர்களுக்கு உதவு. கிறிஸ்துவின் சேவைக்காக இச்சகோதரர்கள் பயணம் மேற்கொண்டனர். தேவனில் விசுவாசமற்றோரிடமிருந்து அவர்கள் எந்தவித உதவியையும் ஏற்கவில்லை. எனவே இச்சகோதரருக்கு நாம் உதவ வேண்டும். நாம் அவர்களுக்கு உதவும்போது, உண்மைக்கான அவர்கள் வேலையில் நாமும் பங்கு கொள்வோம்.

நான் சபைக்கு ஒரு நிருபம் எழுதினேன். ஆனால் நாங்கள் சொல்வதைத் தியோத்திரேப்பு கேட்கவில்லை. எப்போதும் அவர்களுக்குத் தலைவனாக இருப்பதற்கு அவன் விரும்புகிறான். 10 தியோத்திரேப்பு செய்வது தவறு என்பதை நான் வரும்போது பேசுவேன். அவன் எங்களைக் குறித்துப் பொய் கூறி, தீயன பேசுகிறான். அவன் செய்வது இது மட்டுமல்ல. கிறிஸ்துவின் சேவையில் ஈடுபட்டுள்ள சகோதரருக்கு உதவவும் மறுக்கிறான். சகோதரருக்கு உதவ விரும்பும் மக்களையும் தியோத்திரேப்பு தடுக்கிறான். அவர்கள் சபையினின்று விலகும்படியாகச் செய்கிறான்.

11 எனது அன்பான நண்பனே, தீயவற்றைப் பின்பற்றாதே. நல்லவற்றைப் பின்பற்று. நல்லவற்றைச் செய்கிற மனிதன் தேவனிடமிருந்து வந்தவன். தீயவை செய்யும் மனிதனோ, தேவனை அறியாதவன்.

12 தெமெத்திரியுவைப் பற்றி எல்லா மக்களும் நல்லபடியாகப் பேசுகிறார்கள். அவர்கள் கூறுவதோடு உண்மையும் ஒத்துப்போகிறது. அவனைக் குறித்து நாங்களும் நல்லவற்றையே சொல்கிறோம். நாங்கள் கூறுவது உண்மையென்பதும் உனக்குத் தெரியும்.

13 உனக்கு நான் கூற வேண்டிய பல செய்திகள் உள்ளன. ஆனால் எழுதுகோலையும் மையையும் பயன்படுத்த விரும்பவில்லை. 14 நான் உன்னை விரைவில் சந்திக்க விரும்புகிறேன். அப்போது நாம் ஒருமித்துக் கூடிப் பேசலாம். 15 உனக்கு சமாதானம் உண்டாகட்டும். என்னோடிருக்கும் நண்பர்கள் உனக்குத் தங்கள் அன்பைத் தெரிவிக்கிறார்கள். அங்குள்ள நம் நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் எங்கள் அன்பைத் தெரியப்படுத்து.

யூதா

யாக்கோபின் சகோதரனும், இயேசு கிறிஸ்துவின் பணியாளுமாகிய யூதாவிடமிருந்து,

தேவனால் அழைக்கப்பட்டிருக்கிற எல்லா மக்களுக்கும் எழுதப்படுவது: பிதாவாகிய தேவன் உங்களை நேசிக்கிறார். நீங்கள் இயேசு கிறிஸ்துவுக்குள் தேவனால் பாதுகாக்கப்பட்டிருக்கிறீர்கள்.

எல்லா இரக்கமும், சமாதானமும், அன்பும் உங்களுக்குரியதாகுக.

தவறு செய்கிற மக்களை தேவன் தண்டிப்பார்

அன்பான நண்பர்களே, நாம் எல்லோரும் ஒருமித்துப் பங்குகொள்கிற மீட்பைக் குறித்து உங்களுக்கு எழுத வேண்டுமென நான் மிகவும் விரும்பினேன். ஆனால் வேறு சிலவற்றைக் குறித்து உங்களுக்கு எழுதவேண்டியதன் தேவையை நான் உணர்ந்தேன். தேவன் தம் பரிசுத்தமான மக்களுக்கு எல்லா காலத்திற்குமாகக் கொடுத்த விசுவாசத்திற்காகப் போராடுமாறு உங்களை உற்சாகப்படுத்த விரும்புகிறேன். சிலர் உங்கள் கூட்டத்தில் இரகசியமாகப் புகுந்திருக்கிறார்கள். அவர்களுக்கான தண்டனையை வெகு காலத்திற்கு முன்பே வேதவாக்கியங்கள் கூறியுள்ளன. வெகு காலத்திற்கு முன் தீர்க்கதரிசிகள் இம்மக்களைக் குறித்து எழுதினார்கள். இம்மக்கள் தேவனுக்கு எதிரானவர்கள். அவர்கள் தேவனுடைய கருணையை பாலியல் அநீதிகளுக்கு ஒரு அனுமதியாக மாற்றிவிட்டிருக்கிறார்கள். நமது ஒரே ஆண்டவரும் கர்த்தருமாகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற இம்மக்கள் மறுக்கிறார்கள்.

நீங்கள் ஏற்கெனவே அறிந்துள்ளவற்றை நினைவுகூருவதற்கு உங்களுக்கு உதவ நான் விரும்புகிறேன். ஒரு காலத்தில் எகிப்து நாட்டுக்கு வெளியே தம் மக்களை அழைத்து வந்ததன் மூலம் கர்த்தர் அவர்களைக் காப்பாற்றியதை நினைவுகூருங்கள். பிற்காலத்தில் விசுவாசமற்ற எல்லா மக்களையும் கர்த்தர் அழித்தார். தம் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளாது தம் சொந்த இடத்திலிருந்து வெளியேறிய தேவதூதர்களைப் பற்றி உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். மேலும், இதனால் அவர்களையெல்லாம் கர்த்தர் இருளில் வைத்திருக்கிறார். அவர்கள் அறுக்கமுடியாத நிரந்தரமான சங்கிலிகளால் கட்டப்பட்டிருக்கிறார்கள். மிகப் பெரும் நாளில் நியாயந்தீர்க்கப்படுவதற்காக அவர் அவர்களை வைத்திருக்கிறார். சோதோம், கொமோரா, நகரங்களையும் அவற்றைச் சுற்றியிருந்த நகரங்களையும்கூட நினைவுகூருங்கள். அந்த தேவதூதர்களைப் போன்றே அவையும் பாலியல் நீதிகளை இழந்து இயற்கைக்கு மாறான பாலியல் உறவுகளில் மூழ்கின. நித்திய அக்கினியாகிய தண்டனையில் இப்பொழுது அவை துன்புறுகின்றன. நாம் பார்த்தறிவதற்கு தேவனுடைய தண்டனைக்கு ஓர் எடுத்துக்காட்டாக அவை இருக்கின்றன.

உங்கள் கூட்டத்தில் நுழைந்திருக்கிற மக்களின் வழியும் இதுவே. அவர்கள் கனவுகளால் வழிகாட்டப்படுகிறார்கள். அவர்கள் தம் பாலியல் பாவங்களால் தம்மை அசுத்தப்படுத்திக்கொள்கிறார்கள். அவர்கள் கர்த்தரின் அதிகாரத்தைத் தள்ளி விட்டு, மகிமைபொருந்திய தேவதூதர்களுக்கு எதிராகப் பேசுகிறார்கள். ஆனால் பிரதான தேவதூதனாகிய மிகாவேல் மோசேயின் உடலுக்காகப் பிசாசோடு விவாதித்தபொழுது, பழியுரைத்ததற்காக பிசாசைத் தண்டிக்க வேண்டுமென மிகாவேல் முடிவு கட்டவில்லை. (கர்த்தரின் தீர்ப்புக்காக மிகாவேல் கோரிக்கை விடுத்தான்.) “கர்த்தர் உன்னைத் தண்டிக்கட்டும்” என்று மட்டும் அவன் சொன்னான்.

10 ஆனால் புரிந்துகொள்ளாத காரியங்களை இம்மக்கள் விமர்சிக்கிறார்கள். பகுத்தறிவற்ற சில மிருகங்களைப்போல, தாமாகவே சிலவற்றைப் பற்றி அவர்கள் அறிந்துகொள்கிறார்கள். ஆனால் இவற்றாலேயே அவர்கள் அழிக்கப்படுகிறார்கள். 11 அது அவர்களுக்கு மிக மோசமானதாக இருக்கும். காயீன் சென்ற பாதையை இந்த மக்களும் பின்பற்றுகிறார்கள். பணம் பெறுவதற்காக பிலேயாமின் தவறான வழியைப் பின்பற்ற இவர்கள் தம்மைத்தாமே ஒப்படைத்திருக்கிறார்கள். கோரா செய்ததைப்போல இந்த மக்களும் தேவனுக்கு எதிராக மோதுகிறார்கள். அவர்களும் கோராவைப்போல அழிக்கபடுவார்கள்.

12 உங்கள் அன்பின் விருந்துகளில் உங்களோடு அச்சமின்றி விருந்துண்ணும் இவர்கள் தண்ணீருக்குள் மூழ்கியிருக்கும் பாறைகள்போல இருக்கிறார்கள். அவர்கள் தம்மைப் பற்றி மட்டுமே அக்கறை கொள்ளும் மேய்ப்பர்களாவார்கள். அவர்கள் காற்றால் அடித்துச்செல்லப்படுகிற மழை பொழியாத மேகங்களைப் போன்றவர்கள். அவர்கள் அறுவடைக் காலத்தில் கனி கொடுக்காத மரங்களைப் போன்றவர்கள். எனவே பூமியில் இருந்து அவர்கள் அப்புறப்படுத்தப்படுகிறார்கள். அவர்கள் இருமுறை மரணம் அடைகிறார்கள். 13 அவர்கள் கடலின் பெரும் அலைகளைப் போன்றவர்கள். கடலலைகள் தம் நுரைக்கழிவுகளை வீசியடித்து கரையில் ஒதுக்குவதுபோல அவர்கள் தம் வெட்கத்துக்குரிய காரியங்களைச் செய்கிறார்கள். எங்கெங்கும் அம்மக்கள் வானில் திரியும் விண்மீன்களைப் போன்றவர்கள். மிகுந்த கரிய இருளில் ஓர் இடம் அம்மக்களுக்காக நிரந்தரமாக ஒதுக்கப்பட்டிருக்கிறது.

14 ஆதாமின் ஏழாம் தலைமுறையினனான ஏனோக்கு இம்மக்களைக் குறித்து தீர்க்கதரிசனம் கூறினான். “பாருங்கள், பல்லாயிரக்கணக்கான தம் தூய தேவதூதர்களோடு கர்த்தர் வந்துகொண்டிருக்கிறார். 15 எல்லா மக்களையும் நியாயந்தீர்ப்பதற்காகவும், தம் தீய செயல்களாலும், பாவம் நிறைந்த இம்மக்கள் தேவனுக்கு எதிராகச் சொன்ன முரட்டுத்தனமான வார்த்தைகளாலும் தேவனை எதிர்த்தவர்களை தண்டிக்கவும் கர்த்தர் வந்துகொண்டிருக்கிறார்” என்று கூறினான்.

16 இம்மக்கள் எப்போதும் குறை கூறிக் குற்றம் கண்டுபிடிக்கிறார்கள். அவர்கள் செய்யவிரும்பும் தீய காரியங்களை அவர்கள் எப்போதும் செய்கிறார்கள். அவர்கள் தங்களைப் பற்றிப் பெருமையாய் பேசுகிறார்கள். தாங்கள் விரும்புவதைப் பெறுவதற்காக மட்டுமே அவர்கள் பிறரைக் குறித்து நல்லவை கூறுவர்.

ஓர் எச்சரிக்கையும் செய்யவேண்டிய காரியங்களும்

17 அன்பான நண்பர்களே, முன்னர் கர்த்தர் இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள் கூறியவற்றை நினைவுகூருங்கள். 18 சீஷர்கள் உங்களிடம், “கடைசி நாட்களில் தேவனைக் குறித்து நகைக்கிறவர்களும், தேவனுக்கு எதிரான தம் தீய ஆசைகளைப் பின்பற்றுகிறவர்களும் இருப்பார்கள்” என்றனர். 19 அவர்களே உங்களைப் பிரிக்கிறவர்கள். பாவம் மிகுந்த, சுயம் விரும்புகின்ற காரியங்களை மட்டுமே அவர்கள் செய்கிறார்கள். அவர்களிடம் ஆவியானவர் இல்லை.

20 ஆனால் அன்பான நண்பர்களே, மிகவும் பரிசுத்தமான விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டு உங்களை நீங்களே பலமுள்ளவர்களாக வளர்த்துக்கொள்ளவேண்டும். பரிசுத்த ஆவியானவரின் உதவியோடு கூட பிரார்த்தனை செய்யுங்கள். 21 தேவனுடைய அன்பில் உங்களை வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கருணைக்காகக் காத்திருங்கள்.

22 பெலவீனமுள்ள மக்களிடம் இரக்கம் கொள்ளுங்கள். 23 நெருப்பிலிருந்து விடுவிப்பதன் மூலம் மற்றவர்களைக் காப்பாற்றுங்கள். சிறு எச்சரிக்கையுணர்வோடு இரக்கம் காட்டவேண்டிய சிலர் இருக்கிறார்கள். பாவத்தினால் அழுக்கேறிய அவர்களது ஆடைகளையும் கூட வெறுத்துவிடுங்கள்.

தேவனை வாழ்த்துங்கள்

24 நீங்கள் தடுக்கி விழுந்துவிடாதபடி செய்யவும், தம் மகிமையின் முன் எந்தப் பிழையுமின்றி உங்களை அழைக்கவும், அளவற்ற மகிழ்ச்சியை உங்களுக்கு அளிக்கவும், அவரால் முடியும். 25 அவர் ஒருவரே தேவன். அவரே நம் மீட்பர். அவருக்கே மகிமை, வல்லமை, அதிகாரம் அனைத்தும் நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாகக் கடந்தகாலம் முழுக்கவும், நிகழ்காலத்துக்கும், என்றென்றைக்குமாக உண்டாவதாக ஆமென்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center